BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~Tamil Story ~~ பாட்டி(க்கு) சொன்ன கதை Button10

 

 ~~Tamil Story ~~ பாட்டி(க்கு) சொன்ன கதை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~Tamil Story ~~ பாட்டி(க்கு) சொன்ன கதை Empty
PostSubject: ~~Tamil Story ~~ பாட்டி(க்கு) சொன்ன கதை   ~~Tamil Story ~~ பாட்டி(க்கு) சொன்ன கதை Icon_minitimeThu Apr 28, 2011 12:06 am

~~Tamil Story ~~ பாட்டி(க்கு) சொன்ன கதை


உன்னீ.....

பாட்டி கூப்பிட்டாள்.

ஒரு கதை சொல்லுப்பா......

இரவுக்கஞ்சி சாப்பிட்ட திருப்தியில் பாட்டி வெற்றிலைப் பாக்கை மென்று கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது உன்னி வேண்டும். பேரன் கதை சொன்னால்தான் அவளுக்குத் தூக்கம் வரும். திறந்திருந்த கதவு வழியாக எட்டிப் பார்த்துக் கூப்பிட்டாள்.

உன்னி.....வாய்யா...

அவளுக்கு பேரன் சொல்லும் கதையைக் கேட்டே ஆகவேண்டும்.

உன்னி வீட்டுப்பாடம் எழுதிக்கிட்டிருக்கிறான் - அம்மா சொன்னாள்.

உன்னிக்கு பள்ளிக்கூடத்தில் பாடங்களெல்லாம் நடத்த ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். இரண்டாம் வகுப்பில் அவன்.

ஒரு சின்னக் கதையாவது சொல்லுப்பா..... பாட்டி கெஞ்சினாள். ஏதாவதொரு சின்னக்கதை.....

பாட்டி அவளுடைய கட்டிலில் காலை நீட்டிப்போட்டுக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். மங்கலான குமிழ்விளக்கின் வெளிச்சம் அவளுடைய அறையெங்கும் பரவியிருந்தது.

ஏம்மா....உன்னி உங்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தால் வீட்டுப் பாடமெல்லாம் எப்போ செய்யறது?

இன்னிக்கு மட்டுந் தாம்மா.....

ஆமா...நேத்தும் இதையேதான் சொன்னீங்க...

பாட்டி குற்ற உணர்வோடு பார்வையைத் திருப்பிக்கொண்டாள். நன்றாக முற்றிப்போய் தளர்ந்த உடம்பு. சுருங்கிப்போய் குழந்தையைப்போல் இருந்தாள். அம்மாவுக்கு பாட்டியைப்பார்க்க பாவமாக இருந்தது.

உன்னீ......நீ போய் பாட்டிக்கு ஒரு கதைசொல்லு....பாட்டி தூங்குனதுக்கப்பபுறம் நீ வீட்டுப்பாடம் செய்யலாம்.

பாட்டி சீக்கிரம் தூங்கிவிட்டால் தேவலை என்றிருந்தது உன்னிக்கு. மணி இப்போதே ஒன்பதரை. உன்னி பாட்டியை அணைத்தபடி பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி. பேரன் கதை சொல்லாமல் பாட்டிக்கு தூக்கம் வராது. அது பழக்கமாகிப் போய்விட்டது. கெட்ட பழக்கம். அதற்கு பாட்டி என்ன செய்யமுடியும்?

என்ன கதை வேணும் பாட்டி?

நல்ல கதையா சொல்லுப்பா...கேட்டஒடனே தூங்கிடணும்.

கண்ணாடி மரம் கதை சொல்லட்டா பாட்டி?

பாட்டியை இன்னும் நெருக்கி அணைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிரே இருந்த சுவற்றைப் பார்த்தவாறு உன்னி உட்கார்ந்தான்.

அது வெறும் சுவர். வெள்ளைச்சுவர். போட்டோக்களோ அலங்காரங்களோ ஏதும் இல்லாத சுவர். அவனுக்கு மட்டுமே அதில் படங்கள் தெரியும். பாட்டிக்கும் காட்டத் தெரியும். முதல் படம் இதோ வந்துவிட்டது.

குட்டை மனிதன்.
தடித்த உருவம்.
காதில் தங்கக் குண்டலங்கள்.
கைவிரல்களில் தங்க மோதிரங்கள்.
குருமான் பணிக்கன் வந்துட்டான் பாட்டி......

வெள்ளைச் சுவற்றில் ஒரு பல்லக்கு தெரிந்தது. கையில் ஒரு விசிறியுடன் குருமான் பல்லக்கில் படுத்திருக்கிறான். சுற்றிலும் வேலையாட்கள். தீவட்டி பிடித்துவரக்கூட ஒரு ஆள் உண்டு. விளக்குவெளிச்சம் பல்லக்கின்மேல் விழுகிறது. தக தகன்னு தங்கத்தாளிலே வரைஞ்ச படம் மாதிரி தெரியுது.

குருமான் பணிக்கன் எங்க போறான் உன்னி.....

சாமி கும்பிடப்போறான்...பாட்டி....செண்பகக்காவு அம்மன் கோவிலுக்கு.

வெற்றுச் சுவரில் ஒரு செண்பக மரம் தெரிந்தது.

அதன் முறுக்கேறிய கிளைகளை அடர்த்தியான இலைகள் மறைத்திருந்தன. மரத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களின் மணம் சுற்றுப்புறத்தை நிறைத்திருந்தது. குருமானோட ஆட்கள் பல்லக்கை மரத்திற்கு எதிரே மெதுவாக வைத்தார்கள். குருமான் பணிக்கன் வலதுகாலை எடுத்துவைத்து பல்லக்கிலிருந்து இறங்கினான். ஒரு வேலையாள் ஓடிவந்து விசிறியை வாங்கி பல்லக்கில் மீண்டும் வைத்தான். விடியற்காலை காற்றில் இலைகள் மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. குருமானுடைய கையில் எப்போதும் விசிறி இருக்கும். மழைபெய்து கொண்டிருந்தால்கூட அவனுக்கு விசிறி வேணும்.

செண்பக மரத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கேறிய சாமிசிலைகள் உட்கார்ந்திருந்தன. பணிக்கன் கும்பிட்டு நின்றான். வயதேறிய மரத்தினடியில் அந்த சாமி சிலைகள் இருந்தன. பழங்கால எண்ணெய் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு வெளிச்சத்தில் பின்னிப் பிணைந்த மரத்தின் வேர்கள் மங்கலாகத் தெரிந்தன.

அதோ.....அங்கே வருவது யார், உன்னி..........?

சுவற்றின் வெள்ளையிலிருந்து நன்றாக உடையணிந்த ஒரு மனிதன் வந்தான். அவன் சட்டை போட்டிருந்தான். நீளமான கூந்தலைக் குடுமியாகக் கட்டுவதுதான் அந்த ஊர்பழக்கம். அவனுடைய தலையலங்காரம் வேறுவிதமாக இருந்தது.

அவன்தான் மேல்காரன்... உன்னி சொன்னான்.

கோவில்கள் கட்டுறவன்........

மேல்காரன் குருமான் பணிக்கனிடம் நடந்து வந்து மரியாதையாக கும்பிட்டு நின்றான். கிழக்குவானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது.

யார் நீ?

நான் மேற்கே இருந்து வருகிறேன். என்னுடைய பெயர் மேல்காரன்.

உனக்கு என்ன வேண்டும்?

வேலை வேண்டும்.

பணிக்கன் அவனுடைய பாதுகாவலனைப் பார்த்தான் பாதுகாவலன் வேண்டாமென்று தலையசைத்தது தீவட்டி வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. செண்பகமரத்தின் இலைகளில் ஒரு சலசலப்பு.

பாட்டி.....அது தான் காராடன் சாத்தான்... தெரியுமில்லே.....

இறக்கையிலே எல்லா நிறமும் இருக்குமே....

காய்ஞ்ச புல்லெச்சேத்து கூடுகட்டுமில்லையா?.....

பாட்டி தலையாட்டினாள்.

காராடன் காட்டிய சலசலப்பு காற்றில் பரவியது

மேல்காரா, உனக்கு இங்கே வேலை ஏதும் இல்லை. பக்கத்தில் எங்காவது போய்க் கேள் - பணிக்கன் சொன்னான். மேல்காரன் மறுபடியும் கும்பிட்டுச் சொன்னான்.

எனக்கு இங்கே வேலை இருக்கிறது.

பணிக்கன் குழப்பத்தோடு பாதுகாவலனைப் பார்த்தான்.

இந்த மரத்தைப் பாருங்கள் வயதாகி காய்ந்து போய்விட்டது.

செண்பகக்கோவில் அம்மனுக்கு இனிமேல் இது நிழல் கொடுக்காது.இதை வெட்டிவிட்டு புதியதாக ஒரு மரம் வைத்துவிடலாம்.

அது எப்படி முடியும்?

எப்போதுமே இளமையாகவிருக்கிற இலையையே உதிர்க்காத மரத்தை எனக்கு செய்யத் தெரியும்.

அப்படி ஒரு மரம் இருக்கிறதா மேல்காரா?

மேல்நாட்டில் இருக்கிறது.

அப்படியா.... சரி..... நமக்கும் அதுமாதிரி ஒரு மரம் தேவைதான்..... நீ உடனே வேலையை ஆரம்பிக்கலாம்.

மேல்காரன் முன்பைவிட குனிந்து வணங்கினான். இந்த முறை அவனுடைய தலை தரையைத் தொடுமளவிற்கு குனிந்தான். மேல்காரன் பின்னால் நடந்து இருளில் மறைந்தான். குருமான் பல்லக்கில் ஏறிக்கொண்டான். ஒரு வேலையாள் அவனிடம் விசிறியை எடுத்துக் கொடுத்தான்.

தீவட்டி முன்னே செல்ல, வேலையாட்கள் பின்னால் வர, அவனுடைய பல்லக்கு அரண்மனைக்குள் சென்றது. பொழுது விடிந்தது. மரஉச்சிகளில் வெளிச்சம் படரத் தொடங்கியிருந்தது. விளக்குக் கம்பத்தில் எண்ணெய் தீர்ந்து கொண்டிருந்தது

செண்பகமரத்தை வெட்டிவிடுவார்களா உன்னி?

பாட்டி கவலையுடன் கேட்டாள்

ஒரு மரம் முறிந்துவிழும் சப்தம் அவர்களுக்குக் கேட்டது.

பூமியைப் போல வயதான அந்த செண்பகமரத்தை வெட்டிச் சாய்த்தபின் மேல்காரன் கோடாலியை வைத்துவிட்டு பாறைமீது உட்கார்ந்து ஓய்வெடுத்தான். இரைதேடிப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்த பறவைகள் மரம் வீழ்ந்த ஓசைகேட்டு மீண்டும் வேகமாகத் திரும்பி வந்தன. குஞ்சுகளையும் முட்டைகளையும் காணாமல் பரிதாபமாக அங்குமிங்கும் வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன.

மேல்காரன் அவைகளை ச்சூ........ச்சூ........ என்று விரட்டினான். கற்களை எடுத்து எறிந்தான். வீழ்ந்த மரத்தைச் சுற்றிச் சுற்றியே அவை கொஞ்சநேரம் பறந்து கொண்டிருந்தன.

ஐயோ..... பாவம்...... பாட்டி முணுமுணுத்தாள்.

உன்னி கதையைத் தொடர்ந்தான். சுவற்றில் பழையபடி மேல்காரன் தெரிந்தான். புதிதாக ஒரு மரம் கட்டுவதில் மும்முரமாக இருப்பது இப்போது தெரிந்தது. அவன் குடித்துவிட்டு வீசியெறிந்த குளிர்ந்த இனிப்பான இளநீர்க்குடுவைகள் அவனைச் சுற்றி இறைந்து கிடந்தன. அவ்வப்போது குருமான பல்லக்கில் வருவான். கையில் விசிறி இருக்கும்.குருமான் கண்ணாடிப்பாளங்களை தென்னம்பாளைகளைச் சீவுவதுபோல் நுணுக்கமாகச் சீவுவதைப்பார்த்து மலைத்து நிற்பான்.

செண்பகக் கோவில் அம்மனுக்கு எதிரே சீவியெறிந்த கண்ணாடிச் சில்லுகள் குவியல் குவியலாகக் கிடந்தன. துரு துரு என்று இருந்த கறுப்பான சிறுவர்கள் அந்தக் கண்ணாடிச்சில்லுகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உடைகள் கி¢ழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. கண்ணாடித்துண்டுகள் வெட்டியதால் அவர்களின் கைவிரல்களில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

ஐயோ உன்னி அவர்களுடைய விரலில் ரத்தம் வருகிறதே பாட்டி அலறினாள்.

மரங்களின் வேர்களையும் அடிமரத்தையும் மேல்காரன் முதலில் செதுக்கிக் கொண்டான். அதற்கப்புறம் கிளைகளை செதுக்கிக் கொண்டான். இன்னும் இலைகளும் பூக்களும் மட்டும்தான் செதுக்க வேண்டியிருந்தது. இலைகளுக்காக பச்சைக் கண்ணாடிகளும் பூக்களுக்காக வெள்ளைக் கண்ணாடியும் அவனுக்குத் தேவைப்பட்டது. இலைகளும் பூக்களுமற்ற அந்த வெற்று மரத்தை பாட்டி வெறித்துப் பார்த்தாள்.

உன்னி, நீ இன்னும் வீட்டுப்பாடத்தை முடிக்கலையா? அம்மா குரல் கொடுத்தாள்.

மணி இப்பவே பத்தரை.

இதோ முடிக்கப்போறேம்மா.... இன்னும் கொஞ்சம்தான்.

சீக்கிரம் முடிப்பா....

கதை முடியப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டவுடன் பாட்டியின் முகம் வாடிப் போயிற்று. அவளுக்கு இன்னும் தூங்குவதற்கான நேரம் வரவில்லை.

உன்னி கதையை முடித்துவிடாதே பாட்டி பேரனின் காதில் கிசுகிசுத்தாள்.

இலைகளையும் பூக்களையும் செதுக்குவதற்கு மேல்காரனுக்கு ரொம்ப நேரமாயிற்று. ஒவ்வொரு இலையையும் ஒவ்வொரு பூவையும் அவன் நுணுக்கமாகச் செதுக்கினான். குருமான் பணிக்கன், மேல்காரன் வேலை செய்வதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதும் விசிறி அவனுடைய கையில் இருந்தது. மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணாடிச்சில்லுகளை பொறுக்கிக் கொண்டிருந்தனர். கண்ணாடிச்சில்லுகள் குத்தியதால் அவர்களின் விரல்களில் இன்னும் ரத்தம் வந்துகொண்டிருந்தது.

ஒண்ணரை வருஷம் கழித்து குருமான் பணிக்கன் கண்ணாடிமரத்தைச் செய்து முடித்தான் உன்னி சொன்னான். கண்ணாடிமரத்தின் அழகை பார்த்துப் பார்த்து குருமான் பணிக்கன் அதிசயப்பட்டான். காலைச் சூரியனின் ஒளி கண்ணாடிக்குள் நுழைந்து வருவது அழகாக இருந்தது. மாலை நேரத்தில் அந்த கண்ணாடிமரம் வெட்கத்தால் சிவந்தது.

பச்சைக் கண்ணாடி இலைகளும் வெள்ளை கண்ணாடிப் பூக்களும் சூரிய ஒளியில் தகதக வென்று ஜொலித்தன. அந்த அதிசய மரத்தைப் பார்க்க எல்லா ஊர்களில் இருந்தும் ஆளுகள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். அந்த அதிசயமரத்திற்கு சொந்தக்காரன் என்பதில் குருமானுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. விலைமதிப்பில்லாத பரிசுகளை மேல்காரனுக்கு குருமான் கொடுத்தான்.

அந்தக் கண்ணாடி மரத்தின் அழகு ஈடு இணையற்றதாக இருந்தது. ஆனால் அதன் பூக்களில் வாசனை இல்லை. அந்தக் கண்ணாடி மரத்தின் கிளைகளில் கூடுகள் தகதகவென்று ஜொலித்தன. ஆனால் அவற்றில் வண்ணப்பறவைகள் ஏதும் இல்லை.

உன்னி கதையை முடித்துவிட்டான். பாட்டியை அண்ணாந்து பார்த்தான். சுவரில் சாய்ந்தவாறே பாட்டி தூங்கிவிட்டிருந்தாள்.










Back to top Go down
 
~~Tamil Story ~~ பாட்டி(க்கு) சொன்ன கதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு
» == Tamil Story ~~ பு ற ப் பா டு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: