BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 1 Button10

 

 ~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 1

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 1 Empty
PostSubject: ~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 1   ~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 1 Icon_minitimeFri Apr 29, 2011 12:08 pm

~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 1



இது “ஷோலே” படக் கதையல்ல. அமெரிக்காவின் மேற்குப் பக்கம் ஒரு காலத்தில் வாழ்ந்த நிஜம். அதன் எச்சங்களும், மிச்சங்களும் உலகெங்கினும் பரவிக் கிடப்பதை நாம் காணலாம். சில காட்சிகள் இன்னும் தற்காலத்திலும் இந்தியாவின் சில மாநிலங்களிலோ, தமிழகத்திலோ பார்க்கக் கூடும். காட்சிகளை 10-40 வருடங்கள் பின்னால், முன்னால் என்று சற்று அப்படி இப்படி கால வெள்ளத்தில் மிதந்து நோக்க வேண்டும். ஷோலே படம் எப்படி மேற்கத்திய கெளபாய் படங்களை வைத்து இந்தியக் கண்ணோட்டத்தில் பார்த்ததோ, அப்படியே இக்கட்டுரையும் குதிரை போன்று ஒரு அடி முன்னே வைத்து பிறகு இரண்டு அடி பக்கவாட்டில் வைத்து நகரும். கடிவாளத்தைப் பிடித்து கூர்ந்து பாதையை நோக்குங்கள்.

அதோ குளம்படிச் சத்தம் கேட்கின்றது . . .

மலையைச் சார்ந்த சிறு நகரம். வெயில் 98 டிகிரி இருக்கும். குடிக்கத் தண்ணீரைக் கழுதைகள் மூலம் கோண்டு வந்து ஊர்த் தொட்டியில் நிரப்ப வேண்டும். குதிரைகளும், மனிதர்களும் அதிலேயிருந்து குடிக்கக் கூடும். வியர்வை வழியும் தொப்பியில் தண்ணீரை உள் வாங்கிக் குடிக்கும் ஆத்மாக்களும் உண்டு.

அது சிறு நகரம். வெயில் 100 இருக்கு,. வீட்டிற்கு குடங்களில் தண்ணீர் கொண்டு வர கழுதைகளோ அல்லது அதற்கும் மலிவாக மனிதர்களே கிடைக்கக் கூடும். தொப்பி காசு அதிகமில்லையா ? ஆதனால் கையில் பிடித்துக் குடிக்க வேண்டியது தான். அதுவும் சில இடத்தில் தான் கை வைக்க முடியும். இல்லையென்றால் கையை வெட்டிடுவாய்ங்க !

அதில் மரத்தாலான சில வீடுகளும், குடிக்க ஒரு இடமும், குதிரைகள் கட்ட கொட்டில்களும், ஆடிப் பாடி மகிழ வேசியர் மாளிகை ஒன்றும், கடவுளைக் கும்பிட மாதாக் கோவில் ஒன்றும் இருந்தது. பயம் வந்தால் கடவுளையும் படைத்து வணங்க வேண்டியது தானே ?. ஒரு கடவுள் மட்டும் ஊருக்குள்ளே இருந்தார். வெளியே செவ்விந்தியர்கள் சில பல கடவுள்களை, காற்றை, பூமியை, நெருப்பைக் கும்பிட்டு வாழ்ந்து வந்தனர். பணத்தைப் பெட்டகத்தில் பூட்டிய வங்கி ஒன்றும் இருந்தது. காப்பதற்கு ஆயுதம் தரித்த காவலாளிகள் இருந்தனர்.

மண் குடிசைகளும், பனை ஓலையில், வேய்ந்த குடிசைகள், சில செங்கற்களாலான வீடுகள், சில மரத்தாலான வீடுகள் மற்றூம் ஓட்டு வீடுகள் போன்றவை இருந்தன. இவற்றில் வேசி, கடவுள், வங்கி, போஸ்ட் ஆபிஸ் எல்லாம் இருந்தன. ஊர் எல்லையில் ஐயனார் தெய்வமும், மற்ற சில காவல் தெய்வங்களும் இருந்தன. ஊருக்குள்ளே சில கோவில்களும், கோவில் குருமார்களும், ஊருக்கு வெளியே வெறு சில தெய்வங்களும், அதற்கேற்றாப் போலப் பூசாரிகளும் இருந்தனர்.

ஓயாமல் குதிரைகளில் வந்து போய் வந்தவாறு மக்கள் இருந்தனர். குதிரைகள் போட்ட சாணங்கள் வீதியில் நிறைந்திருக்க, மண் புழுதியில் உடம்பின் உடைகள் மறைத்தாலும், மாட்டுத் தோலான கால் சராய்க்களுக்கும், இடுப்பில் தொங்கும் துப்பாக்கிக்களுக்கும் குறைவில்லை. அனைவரிடமும் துப்பாக்கித் தோட்டாக்கள் இடுப்பை “பெல்ட்” டாக நிறைந்திருந்தன.

மக்கள் கால் தேய நடந்தனர். வெயிலின் உக்கிரம் காலை வாட்டி, தோல் வெடித்து காலின் பாளங்கள் தெரிய அதனுள்ளே மண் நிறைந்து மண்ணின் மைந்தர்கள் மாடுகளுடன், ஆடுகளுடன் உலா வந்தனர். மணு புழுதிற்க்குக் குறைவில்லை. போட உடை தான் இல்லை. போட்டாலும் வியர்வையில் தூக்கிக் கடாசாத் தோன்றுகின்றது. துப்பாக்கி இல்லை. ஆனால் கோபம் வந்தால் சரக்கென்று உருவ வீட்டுப் பனை ஓலைக் குடிசையின் ஓரத்தில் அரிவாள்கள் தொங்கியிருக்கின்றன. கத்ரிரை, மனிதரை அறூக்கும் அரிவாள்கள் இருந்தன.

கோபம் சற்று வந்தால் போதும் வாயிலிருந்து பேச்சு இல்லை, துப்பாக்கியிலிருந்து மூச்சுக் கிளம்பி “டுமீல்” தான். குண்டு கைகளைப் பதம் பார்க்கும், கால்களைத் துண்டாடும் என்ற கவலை இல்லை. தற்காப்பிற்கு எதுவும் செய்யலாம். கொலை பண்ணிவிட்டு ஊர் எல்லையை விட்டுக் குதிரையில் கிளம்பினால் போச்சு !

பீர் குடிக்கும் போது தகறாரா ? டுமீல் !
சீட்டு ஆடும் போது தகறாரா ? டுமீல் !
தன்னுடன் இருக்கும் பெண்ணிடம் வம்பு செய்பவனா ? டுமீல் !
சாப்பிடுவதற்கு டாலரைத் திருடினானா ? டுமீல் !
சாப்பிட்டு, லாட்ஜில் தங்கிவிட்டு காலையில் ஏமாற்றி போகும் ஏமாற்றுக்காரனா டுமீல் !

கள் குடித்துவிட்டுத் தகறாரா ? தூக்குடா அரிவாளை !
சீட் ஆடும்போது தகறாரா ? இதோடா ! அரிவாள் !

நம்ம சாதிப் பெண்ணைத் தொட்டானா, தூக்குடா அரிவாளை !
தூக்குங்கடா அரிவாளை ! டீ குடிக்கும் போது தலைவரையாச் சொன்னான் ?.

தனியா வைத்த டீ டம்ளரில் குடிக்காமல் நாம குடிக்கும் டீ டம்ளரைக் குடிக்க வந்திட்டானே ? தூக்குடா அரிவாளை ?.

நாம அழுக்குத் தண்ணீர் குடிக்கும் குளத்தில் அவனும் அதே அழுக்குத் தண்ணீரைக் குடிப்பதா தூக்குடா அரிவாளை ?

சிலம்பம், பஸ்கி, குஸ்தி, களரி, பலவேறு புடமிட்ட கத்திகள், வேல்கள் போன்ற சகலமும் பகைவர்களை அழிக்கப் பயன்படுத்தப்பட்டன. எடுடா கம்பை ! வேல் வேல் வெற்றி வேல் ! தலையைக் கொய்யடா என்ற கொக்கரிப்பு !

கொலை ! கொள்ளை ! அட்டூழியம் ! புகையிலைச் சாறினை சரேலென்று துப்புதல் !
பெண்களை வம்பு செய்தல் !

சிறுவர்களை ஷூவிற்குப் பாலீஷ் போட வைத்தல் ! சிறுவர்களைக் குதிரைக்குப் புல் போட வைத்தல் !

மக்களே, தங்களுக்குள் தைரியமானவனுக்குத் துப்பாக்கிகள் பல கொடுத்து ஐயனாராக மாற்றி இருந்தனர். காவல் தெய்வமாக ஷெரீஃப் சிறு நகரத்தையேக் கட்டிக் காத்து வந்தான். அவன் வைத்ததே சட்டம். யாரை ஊருக்குள் விடுவது, யாரை வெளியேத் துரத்துவது என்பதில் அவன் வைத்ததே சட்டம். தனக்குப் பிடிக்காதவர்களை உயிரோடு கொழுத்திய ஷெரீஃப்களும் உண்டு.

துப்புவதற்கு யாரும் தயங்குவதில்லை. பெண்களைத் தைரியமாக ஏறெடுத்துப் பார்த்துக் கிண்டல் செய்தனர். சிறுவர்களை சைக்கிள் கடைகளிலும், சிறுமிகளைப் பட்டாசுக் கடைகளிலும் வீட்டு வேலைகளிலும் தைரியமாக வேலை வாங்கினர். இரு தட்டுப் பழைய சோறு, கொஞ்சம் டீ, காப்பி கொடுத்து ஏமாற்றினர். அரசாங்கம் இலவசப் போலீஸ் அமைத்துக் கொடுத்தது. போலீஸ்காரர் ஏழைகளை மட்டும் துன்புறுத்தினார்.

அடங்காத ஷெரீஃப்களை மட்டுப் படுத்த நியாமான கனவான் அல்லது பெரியவரை மக்கள் நீதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அவருக்குத் தெரிந்த நியாயத்தை அவர் சொல்ல அதற்கேற்ப ஒருவனைத் தூக்கில் தொங்க விட்டனர். ஊர் முழுவதும் கொண்டாடிக் குழுமிட ஊர் மையத்தில் பாதிரியார் கடவுளை வேண்ட நீதிபதி தண்டனையைப் படிக்க, “சரக்” கென்று லீவர் இழுத்து ஒரு ஓட்டையின் மூலம் மனித உடல் கீழே தொங்க, கழுத்து முறிவுபட்டு மனிதன் செத்தான். பெண்களும், குழந்தைகளும் ஆர்பரிக்க ஊரே “கெட்டவன் செத்தான் ! நல்லவன் வாழ்வான் !” என்ற நம்பிக்கையுடன் அடுத்த தப்பைத் தெரிந்தும் தெரியாமலும் பண்ண ஆரம்பித்தனர்.

மக்கள் பழி பாவத்திற்கு அஞ்சினர். உமாச்சி கண் குத்தும் என்று சொல்லி வந்தனர். அரசர்கள் பஞ்ச மகா பாவங்களைத் தண்டிக்க கழுவேற்றினர். பிற சம்யத்தினரைக் கூடக் கழுவேறினர். கழுகிற்குக் கண்கள் இரையாக்கப் பட்டன. யானை வைத்து தலையினை இடறச் செய்தனர். கழுவேற்றினர். மூங்கில் துணை கொண்டு உடல்கள் பிய்க்கப்பட்டுத் தண்டனைகள் நிறைவேற்றப் பட்டன. அரசன் பக்கம் துணை போவான் மந்திரி. உங்கள் ராசியில், இவனை உயிரோடு விட்டு வைப்பது ராஜப் பரம்பரைக்கு நல்லதல்ல என்ற பீடிகையுடன் ஆரம்பிப்பர்.

சிறு கிராமங்களில் நம்ம பெரிசு தான் நீதிபதி “எட்டுப் பட்டி ஊருக்கும் . . . “ என்று தமிழ் சினிமா மாதிரி ஆரம்பித்தால் இவர்கள் வைத்ததே சட்டம். உயிரோடு செங்கற் சூளையில் வைத்து தீயிடும்படி சொன்ன “பெரிசு” களும் உண்டு. ஒரு சொம்பு தண்ணீரை வைத்து வாழ்க்கையில் விளையாடித் தீர்ப்பளிக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெறும்.

குதிரைகள் சற்று விலகி இருக்க ஆரம்பித்தன. தப்பு செய்தால் விரைவாகவும், இருந்த இடம் தெரியாமல் அமெரிக்கையாகவும் நடக்க ஆரம்பித்தன. மேலும் கடிவாளங்கள் போடப்பட்டன.

தேவாலயத்தில் கடவுள் முன் அனைவரும் மண்டியிட்டு தம் தப்பினை மன்னித்து பாவங்களிலிருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். நீதிபதி, மக்கள் தலைவன், காவல்காரன் அனைவரும் சேர்ந்து நல்லவர்களாகவும் அமையலாம். தீயவர்களாகவும் அமையலாம். ஊரையேக் கொள்ளையடிக்கலாம். இவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு உளவாளிய அனுப்பிய செல்வந்தன் அதேயே வரைந்து, படம் பிடித்து, எழுதி விற்றால் என்ன ?. குடிக்கும் போது வம்பிற்கு வம்பாச்சு ! வம்பிற்குப் பயந்து கொஞ்சம் ஆட்டங்களையும் கட்டுபடுத்துவார்கள். நியூஸ் பேப்பர் போட ஆரம்பித்தான். வம்பர்களுக்குக் கொண்டாட்டம். காரசாரமாகக் குடிக்கும் போதும், சாப்பிடும் போதும் விமர்சித்தனர்.

ஊர்க் கோவில்களில் பிரார்த்தனை செய்து விட்டு, சனி பகவானுக்கு எண்ணை ஊற்றி விட்டு மீண்டும் பாபம் செய்ய ஆரம்பித்தார்கள். கோவிலில் பிரார்த்தனை பண்ண வீட்டுப் பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் தாங்கள் மட்டும் உல்லாசமாக இருந்தார்கள். டீ கடையில் தான் சகல வம்புகளும், பேப்பர் அலசல்களும். தினத்தந்தி, 1 ரூ தினகரன் போன்றவைத் தோன்ற ஆரம்பித்தன.

ஒரு சாரார் ஆளும்போது மற்றவர்கள் குறை கூறுவது சகஜம் தானே ?

ரொம்பக் குறை கூறாதடா ! நீ வந்து ஆண்டு பாரு ! தெரியும் ! இந்த மடையர்களைக் கட்டி மேய்ப்பதற்கு, ஊருக்கு வெளியே குதிரைகளைப் புல் மேய அழைத்துக் கொண்டு போவது மேலென்று தெரியும் ! மறு சாராருக்கு ஆதிக்கம் கொடுக்கப்பட்டது. அவன் இவனைக் கழுதை எனக் கூற, இவன் அவனை யானை என்று கூற அடித்துக் கொண்டனர். ஆனால் சேர்ந்து கொண்டு இளிச்சவாயர்களை, நிறம் மங்கியிருந்தவர்களை கொள்ளையடித்தனர். வெள்ளை நிறக் குதிரைகளும், சாம்பல் புரவிகளும், கறுப்பு மின்னல் குதிரைகளும் தனியேப் பிரிந்து கிடந்தன.

அதெல்லாம், இங்கு கிடையாது. பெரியவரின் மகன் சிறியவனாக இருந்தாலும் பெரியவன் தான். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். பெரியவர் கடுமையான உழைப்பாளி. அவர் ஊருக்கு அழைத்தவர். அப்படியென்றால் அவர் மகன் அப்படி தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் வெகுளியாக நம்பி வாழ்ந்து வந்தார்கள். அதனல் பெரியவர் போனால் பெரிய இடத்துப் பிள்ளைகள் காலியிடங்களை இட்டு நிரப்பி வந்தார்கள். அரசன் குதிரை லாயத்திலிருக்கும் குதிரைகளுக்கு (ஆண்டலூசியன் வகம்) தனி மவுசு தான். போர்க்குதிரைகளாக போராட்டம் தாங்கும் குதிரைகள். அரண்மனை வளர்ப்பாக இருந்தாலும் வாலைச் சுழற்றி கம்பீரமாக அரசனிச் சுமந்து செல்லும். போர்க்களத்தில் அரசனைக் காப்பாற்றிக் கூடாரத்திற்கு இட்டுச் செல்லும்.

குதிரைகள் வருவதும் போவதுமாக இருந்தன. ஊரில் மெதுவாக தாடி வைத்தவர்கள் அதிகமாகிப் போனதால் முடி வெட்ட ஒரு சலூன் கடை வைத்தாயிற்று. நூறு மைல்களுக்கு அருகே ஊர்களே இல்லாத நிலையில் ஒரு நாள் ரயில் பாதை போட்டு மேலும் மேற்கே கடற்கரை நோக்கிச் செல்ல பாதை போட ஆரம்பித்தனர். ஆயிரக்கணக்கான ஐரிஷ் காரர்களும், சைனாக்காரர்களும் கற்களையும், மலைகளையும் டைனமைட் வைத்து வெடித்து, பாறைகளைத் துளைத்து, மலையினைக் குடைந்து, குகைகளைக் உருவாக்கி, மைல், மைலாக அடி மேல் அடி வைத்து, ஜல்லி, மரத் துண்டுகள், இரும்புப் பாளங்கள் கொண்டு ரயில் பாதயச் செவ்வனே உருவாக்கினர். ஆளில்லாத தரிசு நிலத்தை பத்து டாலருக்கு வாங்கியவனிடமிருந்து ரயில் கம்பெனி, ஆயிரம் டாலர் கொடுத்து வாங்கி ரயில் பாதை போட்டது. இனிமேல் அந்த நிலத்தில் போகும் ஒவ்வொரு வண்டியும் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு மைலுக்கு ஒரு டாலர் கட்டணம் வாங்கி காசு பார்க்க ஆரம்பித்தது. ரயில் கம்பெனி பெரிதாக குதிரைகளுக்கு மவுசு குறைந்தது. ஒரு நீராவி எஞ்சினுக்கு நானூறு குதிரைச் சக்தியாமே ?

மாடுகள் மெதுவாகவே போயிற்று. தாடி எடுப்பவன் சலூன் கடை வைத்தாலும் ஊர் எல்லையில் தான் வைத்தான். வீட்டிற்குப் புறம் வழியில் வந்து பழகினான். கற்களைத் துழைத்துப் பாதகள் போட வேண்டிய நேரத்தில், மற்றவனுக்குச் சோறு பொங்க, உழைக்கத் தழைக்கப்பட்டான். கடினமாக உழைத்து வியர்வையை நெல்லில் நனைத்து ஒரு மூட்டை அரிசி உருவாக்கினால், அவனுக்கு கம்மியாகக் கொடுத்து, தங்களுக்கு அதிகமாகச் சேர்த்து சுரண்டுபவர்கள் அரசாங்கம் வரை நீண்டு கொண்டே போனார்கள். யானை கட்டுப் போரடித்தவன் குதிரை வைத்துக் கொள்ள கூட முடியாமல் போயிற்று. பணக்காரன் மட்டும் குதிரை வைத்துக் கொண்டான். திருமணம் போது குதிரையில் மாப்பிள்ளையை ஊர்வலம் கொண்டு வரலாமே ! ஐயனாருக்கு மட்டும் குதிரைகள் களிமண்ணால் படைக்கப் பெற்றன. பெருமாளுக்கு தங்கக் குதிரை வாகனங்களும், அம்மைஅப்பன் குதிரையில் பரிவாரங்களுடன் வர, அழகர் குதிரையில் ஆற்றில் இறங்கி வர ஊரே அல்லோகப் பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இருக்குமிடத்தில் குதிரைகளை கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்க வேண்டியிருந்தது. ஒரு மாடு வளர்த்தால் புண்ணியம். பால் தயிர், நெய், கோமியம், சாணம், கறி என்று நன்கு உபயோகப்படுத்தலாம். குதிரையை வளர்த்து அதிலேறி பயணம் செய்து இடுப்பொடிவது தான் மிச்சம்.

ஆயிரம் டாலர் வாங்கிய நிலச்சொந்தக்காரர் பணக்காரராகி ஊரில் தான் சம்பாத்தித்தக் காசினைக் கொட்டி தன் வாழ்வினைச் சுகமாக வாழ்ந்திட ஆரம்பித்தார். சுருட்டுக்கள் என்ன ? தோலாலான உடைகள் எத்தனை ? உடம்பை அமுக்கி விட்டு வெந்நீரில் குளிப்பாட்டி விட மாதர்கள் எவ்வளவு பேர் ? குடிக்க விஸ்கி, பீர், வைன் வகையறாக்கள் கொட்டிக் கொடுக்க ஆட்கள், கடைகள் என்று அச்சிறு நகரம் பெரு நகரமாக வளர ஆரம்பித்தது. காட்டுக் குதிரைகள் மட்டுப் பட்டன. நகரத்தில் வளைய ஆரம்பித்தக் குதிரைகள் மெதுவாக மட்டுப்பட ஆரம்பித்தன.

வீட்டில் காலை ஆட்டிக் கொண்டே அனைவரையும் வேலை வாங்கினான். செல்வங்கள் பெருகிற்று. வீட்டில் அனைத்து வசதிகளும் வந்த வண்ணம் இருந்தது. வீட்டின் வெளியே அப்படியே இரண்டு நூற்றாண்டுகள் முன்னால் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. நூறு வேலி நிலமிருந்தவர், மற்றவர்களை முன்னேற்றாமல் தன் முன்னேற்றமே அக்கறையாக இருந்ததால், நூறு இளைத்து ஒன்றாகப் போனது. ஒரு ஏக்கர் வேலியும் போய்க் கையில் மண்பாண்டம் வைத்துக் கொண்டு திரிய ஆரம்பித்தார். குதிரைகளும் இளைத்துப் போயிற்று. குதிரைகள் கடைசியாக குதிரைவண்டிக்காரனுக்கு விற்கப்பட்டு, வண்டிக்காரன் ரயில் பாஸஞ்சருக்காக ரயில் நிலையத்தின் வெளியே காத்துக் கொண்டிருந்தான். அது வரைக்கும் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன சோம்பேறிக் குதிரைகள்.

4 சக்கர வண்டிகள், ஆறு குதிரைகள் கட்டப்பட்ட வண்டி என்று பெருக ஆரம்பித்தன.

மேற்கே தங்கம் கிடைக்கின்றது என்றூ கேள்விப்பட்டு, மக்கள் திரள் திரளாக துப்பாக்கிகள் சகிதம் பிள்ளை, பெண்டுகளோடு கூடார வண்டிகளில் சாமங்அளை அள்ளிக் கொண்டு மலைகளைத் தாண்டி பயணம் செய்ய ஆரம்பித்தனர். வழியே செவ்விந்தியர்கள் தாக்கக்க் கூடும் என்று பயப்பட்டதில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் செவ்விந்தியர்கள் இயற்கைய வழிபடும் காட்டுமிராண்டிகள். அவர்களை “பூச்சாண்டி” என்று காண்பித்து பிள்ளைகளை வளர்த்தனர்.

காலம் காலமாக நிலக்கரியும், கடலில் மீனும், காட்டில் தேனும் மட்டுமே கிடைத்து வந்தது. தங்கம் கடலிலும், காட்டிலும், வயலிலும் தான் தேட வேண்டியிருந்தது. கடுமையாக உழைத்தார்கள். ஆனால் அனைத்தும் சீக்கிரமே பிடுங்கப்பட்டு எங்கோ ஒருக்கும் டாக்ஸ் கலெக்டருக்கு போனது. டாக்ஸ் போய் வெறும் “கலெக்டர்” ஆகிப் போனார்கள். தங்களைத் தாங்களே காட்டுமிராண்டிகள் என வர்ணித்துக் கொண்டனர். இச்சமயத்தில் குதிரைகளை யார் கவனிக்க ?. பிரிட்டிஷ் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் குதிரைகளில் ராஜ உடையணிந்து கொண்டு தங்கள் மிடுக்கையும் கம்பீரத்தையும் காண்பித்து வந்தார்கள். மெரினா கடற்கரையில் மணலிலோடும் கம்பீரமான அக்குதிரைகள் எங்கே ?, பார்த்த சாரதி கோவிலுக்கருகே, “டிரம்கள்” சுமக்கப்பட்டு, அந்தணர்கள் தமிழ் மறையான திவ்யப் பிரபந்தம் ஓதியபடி பின்னால் வர, பாவமாக மெதுவாக வரும் சோனிக் குதிரைகள் எங்கே ?.

செவ்விந்தியர்களுக்கோ புதிய ரயில் பாதை, ஓடும் ரயில் ஆகியவை புதுமையாகவும் அவர்களது உலகத்தைப் பாதிப்பதாகவும் இருந்தது. இந்த வெள்ளைத் தோல்கள் எங்கிருந்து வந்து நம் முன்னோர்களின் ஆவிகள் வாழும் இடத்தில் பரவிக் கொண்டிருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. விளைவு ? கிடைத்த இடத்தில் கோடரி கொண்டு தாக்க ஆரம்பித்தனர். ஆனால் திரள், திரளாக மக்கள் தங்கத்தை நோக்கிப் படையெடுத்தால் எப்படி தடுத்து நிறுத்த முடியும் ?

காந்தி வந்தார். உடைகளைக் கழைந்தார். மக்களோடு இணைந்தார். கோடரி இல்லாமல் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியனரைத் தாக்கினர். அன்பு கொண்டு அஹிம்சா வழியில் தாக்கியதைத் தாங்கவும் முடியாமல், மெள்ள முடியாமல், சரி போது என்று மற்றவர் நிறுத்திக் கொண்டனர். போகும் போது அனுபவித்ததை, கட்டியதை, காப்பாற்றியதை ஆண்டவரிடம் ஒப்படைத்துச் சென்றனர். குதிரைகள் சந்தோஷத்தில் கனைத்தன.

நீராவியால் ஓடும் ரயில் கார் , ரயில் வண்டிகள் பார்த்து சிலபேர் அதே நீராவி கொண்டு நாங்உ சக்கர வண்டிகள் தயாரிக்க ஆரம்பித்தன. குதிரையில்லாமல், “புக் புக்” கென்றூ புகை விட்டுக் கொண்டு “சடக் புடக்” கென்றூ தயங்கித் தயங்கி ஓடும் வண்டிகள் மீது மக்களுக்குக் கண்கள் விழுந்தன. புல் போட வேண்டாம். சாணம் அள்ள வேண்டாம். கண்ணாடிக் கதவுகளை வைத்தால் குதிரை வண்டி மாதிரி இருக்கும் வண்டிகளுக்குக் கிராக்கி அதிகமாகிப் போனது.

கட்டை வண்டி போதும். கல்யாணம் முடிந்து பெண்ணை அழைத்துக் கொண்டு வர அதான் லாயக்கு. மெதுவாகப் போய்ச் சேர்ந்தால் போதும் என்ன அவசரம். தக்காளி அழுகினால் என்ன ? முட்டைகள் அழுகினால் என்ன ? இயற்கையின் கை வண்ணம் ? நாம் என்ன பண்ண முடியும் ?. ஆனாலும் சிலர் அப்படியே வெளியே இருந்து கார்கள், லாரிக்கள், பஸ்கள் என்று கொண்டு வந்தனர். வந்தவுடன் பெரு நகரம் மாநகரமாச்சு ! ஆனால் கிராமம், கிராமமாகவே இருந்தது. குதிரைகள் கிராமத்தில் வளரவும் இல்லை. நகரத்தில் துரும்பாகி இளைத்தது. நகரத்தின் வெப்பத்திலிருந்து தப்பித்து கொடைக்கானல், ஊட்டி வரும்போது மட்டும் குதிரைகள் சற்று போஷாக்குடன் காணப்பட்டது.

ஆனால் மலைகளின் மீது ஓட்ட குதிரைகள் தான் லாயக்கு. நகரத்திற்குள்ளே சலூனிற்குப் போவதோ அல்லது காய் கறி வாங்கப் போவதற்குச் செளகரியமாக கார் வண்டிகள் பயன்பட்டன. ஊரில் புகையை விட்டுக் கொண்டு ரயில் வரும். அதிலிருந்து அரசையல்வாதி அல்லது அவரைச் சேர்ந்த பரிவாரங்கள் ரயிலில் வந்து குதிக்கும். அவர்களை காரில் ஓட்டி நகரத்தில் பவனி வர அனைத்து வீடுகளிலிருந்தும் கொடிகள் ஆட்டி, வாழ்த்துரைத்து ஆரவாரம் செய்தனர்.

கார் வண்டிகள் ரயில் நிலையத்தில் காத்திருந்தன. தலைவர் வந்தவுடன் தலைவர் வாழ்க என்று பல்லாயிரக்கணக்கான கோஷங்கள் விண்ணை முட்ட, கூட வந்த கோஷ்டிகள் சுமார் நாற்பது கார்களில் பந்தாவாகப் பவனி போய் தேர்தல் அலுவுலகத்தில் விண்ணப்பம் கொடுத்து விட்டு வந்தன. தன் மீது ஏறா அரசர்களான அரசியல்வாதிகள் மீது குதிரைகளுக்கு கோவம் வந்தது. வந்து என்ன பிரயோசனம்? அடுத்து வரும் சாதாரண மக்களின் சவாரி கிடைத்தால் தான் உண்டு.

குதிரைகள் ஓரத்தில் நின்று வேடிக்கைகள் பார்த்தன. யூனிஃபார்ம் அணிந்தவர் மட்டும் இப்போதெல்லாம் குதிரைகளில் ஏறுகின்றனர். மாடுகளை மேய்ப்பவன் மட்டும் குதிரைகளிடம் இன்னும் பாசமாகப் பழகினான். அனைவரையும் மேய்க்கணுமே ?. ஒரு குதிரைய ஓட்டி, மூன்று வேட்டை நாயகள் தொடர சுமார் ஐம்பது முரட்டு மாடுகளை வயல் வெளிகளில், காடு மேடுகளில் ஓட்டிக் கண்காணித்து வந்தான். நகரங்களில் சுமார் இருபது குதிரைகளில் காவல்வீரர்கள் பவனி வந்து சுமார் 2000 மக்கள் தொகையைக் காப்பாற்றி வந்தனர்.

ஒரு மாட்டை ஓட்டி மூன்று நாட்டு நாய்களை வைத்துக் கொண்டு பத்து வாத்துக்கள் மற்றும் இருபது ஆடுகளை மேய்த்து, மாங்காய் மரத்தில் மாங்காய் பறித்து, தேங்காய் மரத்தில் தேங்காய் பறித்து, பனை மரத்தில் கள் குடித்து வளர்ந்து வந்தான். காவல்வீரர்கள் அவ்வப்போது வந்து “பிடிச்சு முட்டிக்கு முட்டி தட்டி லாடம் கட்டி” வந்தனர். குதிரைகள் சிலைகள் ரூபத்தில் கல்லிலே கலைவண்ணங்களாய் கோவில்களில் காட்சியளித்தன. எங்கள் மதுரைவீரன் சாமி ! தொட்டுக்கடா ! என்றதும் அவன் பவனி வரும் குதிரையத் தொட்டுக் கும்பிட்டேன் ! அம்பிட்டு தான் !

செவ்விந்தியர்கள் குதிரைகளை இயற்கையாக வளர்த்து, கொஞ்சிக் குலாவி தம் குழந்தையென வளர்த்தனர். பாய்ந்தோடும் காட்டாற்றில் குதிரைகளை சரேலென்று இறக்க, அவை தட்டுத் தடுமாறி வெள்ளத்தில் எஜமானைக் காப்பாற்ற, கூடார வண்டிகளைக் காப்பாற்ற போராடி, சாட்டை அடி வாங்கிக் கொண்டு பகல் முழுவதும் காட்டில், மேட்டில், நடந்து, ஓடி, போரிட்டு, காவலாளிகளிடமிருந்து தப்பி ஓடி வாயில் நுரை வாங்கி, மாலை வேலையில் கிடைக்கும் ஒரு புல்லுக் கட்டுக்காக வாழ்ந்து வந்தது. இந்த வாழ்க்கைக்கு ஒவ்வொரு குதிரையும் சுமார் 12-13 மாதங்கள் சுமந்து ஒவ்வொரு கன்றையும் ஈன்று வந்தது. அவை வளர்ந்து வரும் புற்களை மேய்ந்து கொண்டு, குழு குழுவாக அருகருகே ஒருவருக்கொருவர் உராசிக் கொண்டு அமைதியாக நிற்குப் சமயம் எங்கிருந்தோ ஒரு மனிதன் வந்து சரக்கென்று காலை போட்டு ஏறி, அடி விலாவில் ஒரு உதை கொடுப்பான். சரி ! எஜமான் ! என்று பாய்ந்து போகும் குதிரைகள்.

அரண்மனைக் குதிரை வீரர்கள் சரேலென்று பாய்ந்து புழுதியைக் கிளப்பி அரசன் புகழ்பாடி, ஒருவருக்கொருவர் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று பெயரிட்டுக் கொண்டு சண்டை போட்டு வந்தனர். சண்டை போடும்போது சனியன்கள் வேல்களும், ஈட்டிக்களும் நெற்றியைப் பதம் பார்க்க, ரத்தம் வழியோட உதிரம் சொட்டும் குதிரைகளைப் பிரியமான வீரர்கள் தடவிக் கொடுத்து, புல் கட்டு போடுவார்கள். அவர்கள் தடவலுக்குக் கனிந்துக் குதிரைகள் தொண்டையைக் கமறலுடன் கனைத்தன.

(மேலும் குதிரைகள் ஓடும் . . . )








Back to top Go down
 
~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 4
» ~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 3
» ~~ Tamil Story ~~ வளர்ந்த குதிரை - 2
» ~~ Tamil Story ~~ என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி
» ~~ Tamil Story ~~ குதிரை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: