BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ பிள்ளையார் பிள்ளை  Button10

 

 ~~ Tamil Story ~~ பிள்ளையார் பிள்ளை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ பிள்ளையார் பிள்ளை  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ பிள்ளையார் பிள்ளை    ~~ Tamil Story ~~ பிள்ளையார் பிள்ளை  Icon_minitimeMon May 02, 2011 3:46 am

~~ Tamil Story ~~ பிள்ளையார் பிள்ளை




பிள்ளையார் வீதி உலா வர்ர கதை தெரியுமோ ? கோயில் திருவிழாக் காலங்களில் நாலு பேர் தூக்க உலா வர்ர கதை இல்லை. இவரே நடந்து உலா வர்ர கதை. காலில் சலங்கை கட்டி ஜல் ஜல்லென்று நடந்து வர்ர கதை. அம்மா சொல்லியிருக்கிற கதை. ரொம்ப்பத்தான் குழப்படி செய்து இராத்திரி தூங்காம லூட்டி அடிக்கிறபோது சொல்லுகிற கதை. எங்க வீட்டுக்குப் பக்கத்தில தெருவில் இருந்து ஒரு குச்சொழுங்கை கிளை பிரிந்து போகும். பின்னால இருக்கிற நாலைந்து வீட்டு மனுஷங்க பெருந் தெருவுக்கு வாரதுக்கும் போறதுக்கும் அதைதான் பயன்படுத்துவாங்க. எங்க வீட்டைச் சுத்தி மேற்கால போய் இன்னொரு குச்சொழுங்கையுடன் சேந்துக்கும். அங்கே ஒரு சின்ன கோயில் இருக்கும். யாரோ ஆசைப்பட்டு ரெண்டு சூலம் நட்டு படம் வைத்து கோயிலாக்கியிருக்கிறார்கள். பெரீய்ய பூவரசு மரத்தின் அடியில் இந்த கோயில் இருக்கும். ஊரைச் சுத்தி நாலைந்து கோயில் இருக்கும். பெரியது பிள்ளையார் கோயில்.

பிள்ளையார் இரவில மட்டும் இந்த கோயிலில் இருந்து வெளிக்கிட்டு ஒவ்வொரு கோயில் சாமியா சுகம் விசாரித்துக் கொண்டு வந்து எங்க வீட்டைச் சுத்தி அடுத்த ஊரில இருக்கிற இன்னொரு பிள்ளையார் கோவிலுக்குப் போவார் என்று அம்மா சொல்லியிருக்காங்க. இது அவங்களாச் சொன்னதில்லை. நாங்க கேட்ட புத்திசாலித்தனமான கேள்விங்களுக்கெல்லாம் அம்மாவும் புத்திசாலித்தனமா பதில் சொல்லப்போவ இப்படி ஒரு வடிவத்தில் கதை வந்து நின்றது. தூங்க வைப்பதற்கு இதுவொரு கடைசி ஆயுதம். "அந்தா சலங்கை சத்தம் கேட்கிது " என்று சொல்லிட்டாங்கன்னா அதன் பிறகு யாரும் வாயே தொறக்க மாட்டோம். சலங்கைச் சத்தம் கேட்கிரதா கேட்கிரதா என்று காதைத் தீட்டி வைத்துக் கொண்டிருப்போம். கண்ணை இறுக்க மூடி பிள்ளையார் வருவதற்குள் தூங்கி விட முயற்சி செய்வோம்.

எங்கள் அதிர்ஷடமோ பிள்ளையார் லேட்டோ தெரியாது. பிள்ளையார் வரு முன்னே தூங்கிப் போய்விடுவோம்.

இப்படியாக பிள்ளையாருக்கும் எனக்கும் தொடங்கியது உறவு. பிள்ளையார் மீது எனக்கொரு இரக்கமும் உண்டு. குடும்பம் குட்டி இல்லாமல் தனியாகவே இருக்கிறாரே என்றும் கவலை. ஆனாலும் என் பேவரைட் என்னமோ அவர் தம்பி முருகன் தான். முதல் கடவுளா முருகனை வைத்து மற்ற எல்லாக் கடவுளையும் கும்பிட்டுக் கொள்வேன். முருகனைக் கும்பிடறதாலே பிள்ளையாரும் நமக்கு ரொம்ப நெருக்கம். அண்ணன் தம்பி இல்லியா ? அத்தோட பிள்ளையாரின் புத்திசாலித் தனமும் ரொம்ப்ப பிடிக்கும். பிள்ளையார் கதை காலத்தில எல்லாம் கோயிலில ஆஜராகி விடுவேன். கதை கேட்க என்பதற்கும் மேலால் அங்கே ஒரு தளிகை தருவார்கள். ரொம்ப்ப நல்லாயிருக்கும். அப்போ அம்மாவுடன் காலையிலேயே குளித்து அங்கு சென்றுவிடுவேன். அப்போ நிறைய கூட்டமாயிருக்கும். காலையிலேயே பனியில உடம்பெல்லாம் கூதல் எடுத்து நடுங்கிக் கொண்டிருக்கும். கோவிலுக்குள் போய் விட்டால் கத கதப்பாய் இருக்கும். தீபங்களின் வெப்பமும் மக்களின் நெருக்கமும் இதமாய் இருக்கும். அப்போதும் வெளி மண்டபத்துக்கும் வெளியிலும் கொஞ்ச ஜனங்க நிப்பாங்க. அவங்க உள்ளே வரவே அனுமதிக்க மாட்டாங்க. பனியிலேயே நின்று கும்பிட்டுக் கொள்வாங்க. ஆடைங்களும் நல்லா இருக்காது. அழுக்கும் கந்தலுமாய் இருக்கும். குளிரில நடுங்கிக் கொண்டிருப்பாங்க. அது ஏன் அப்பிடின்னு அம்மாகிட்ட கேட்டால் அப்பிடித் தான் என்பாங்க. பிள்ளையாரைப் பற்றி சொல்லும் போது அவர் வயிறு ஏன் இவ்வளவோ பெரிசாயிருக்கு என்றும் சொல்லித்தருவார்கள்.

உலகத்தில உள்ள நல்லதும் கெட்டதையும் அப்படியே எடுத்து செரிக்கப் பண்ணியிடணும் என்பதைத் தான் அந்த பெரீய வயிறு சொல்லுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதில ஒண்ணுதான் இதுவும் அப்பிடீன்னு வெளங்கப் படுத்தினாங்க. நல்லது கெட்டது சேர்ந்தது தான் வாழ்க்கை. அதை அதை அப்பிடி அப்பிடியே எடுத்துக்கணும்னாங்க. ஏதோ வெளங்கிய மாதிரியும் வெளங்காத மாதிரியும் இருந்துது. பிள்ளையாரே சொல்லிட்டார். அப்புறம் சாமிக்குத்தமாயிடும்னு நானும் விட்டிட்டேன்.

ஒரு மாதிரி படிச்சு வெளிநாட்டில ஒரு வேலையும் கெடைச்சு வந்திட்டேன். வரும் போது மனசே சரியில்லை. அம்மாவையும் குடும்பத்தையும் விட்டிட்டு வரணுமே என்று ஒன்று. மற்றது என் கீத்துக் குட்டியை விட்டிட்டு வரணுமே என்பது இரண்டாவது. கீத்துக் குட்டி யாரென்னு கேட்கல்லியே. நம்ம ஊருதான் . நம்ம சாதி சனம் தான். என்னமோ அவகிட்ட மனசு ஒட்டிக்கிட்டது. அவளுக்கும் நம் மேல ஒரு இதுதான். ஆனா அவளுக்கு ஒரு அவநம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும். இது சரி வருமா வராதா என்று. ஏன்னா அவங்க என்ன தான் நம்ம சாதி சனமாய் இருந்தாலும் மச்சம் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். அதனாலேயே நம்மை விட தாங்க உசத்தின்னு அவ ஆளுகளுக்கு ஒரு நெனப்பு. யாரோ ஒருவர் மாமிசம் சாப்பிட பிடிக்காம விடப்போக அவங்க ஆளுகளும் அப்பிடியே வந்திட்டாங்க என்று நான் கேலி பண்ணுவேன். ஆனா அவ அதையே திருப்பித் திருப்பிச் சொல்ல எனக்கும் அந்த சந்தேகம் அடிகடி வந்து தொலைக்கும். வெளிநாடு போய் காசு பணம் சம்பாதித்தால் இது சரியாய்ப் போகும் என்று அவ சொன்னதால தான் வெளிநாட்டிற்கே கிளம்பி இருந்தேன். பிள்ளையாரப்பா துணை இருக்க என்ன கவலைன்னு மனசை தேத்திக்கிட்டேன்.

வெளி நாட்டில இவங்களுக்கு என்னென்னா நம்ம கலர்ல உள்ளவங்க எல்லாமே பாக்கி தான். ஐயா நான் பாக்கி இல்லை வேற நாடு வேற மதம்னு சொன்னாலும் புரியாது. அது மேல புரிஞ்சு கொள்ளனும்னு ஆவலும் கெடையாது. சரி அவங்க புரிதல் அவ்வளவு தான்னு நானும் விட்டிட்டேன். முன்னெல்லாம் அது பெரிய வெஷயமாயே இல்லை. 911 இற்குப் பிறகு இதெல்லாம் பெரிய பாதிப்பாய் தான் இருக்கு. இங்க உள்ளவங்க மனநிலையே ரொம்பத்தான் மாறீட்டுது. ஒரு பயத்தோடதான் பாக்கத்தொடங்கீட்டாங்கள். வெளியில யாரும் சொல்லாட்டாலும் அது தான் உண்மை. செக்கூரிட்டீல்லாம் பலப் படுத்திட்டாங்க. எவ்வளவு தூரம் நம்ம நாடுகளுக்கும் நம்மாளுகளுக்கும் வெளக்கம் இல்லாம இவங்க இருக்கிறாங்கன்னா 911 இற்குப் பின்னாடி பஞ்சாப் சிங்குகளுக்கே செமத்தியான அடி விழுந்துது. அமேரிக்காவில அவங்க கோயிலயும் கொழுத்திட்டாங்க. தொப்பி போட்டவன் எல்லாம் ஒரே மாதிரி தெரிஞ்சிருக்கிறாங்க. அதும் பின்னாடி பயந்து பயந்து தான் வாழ்க்கை போகுது. டாலரில வருமானம் வந்தாலும் நிம்மதி இல்லாம போச்சுது. இதுக்கிடையில நம்ம பிள்ளையாருக்கும் ஒரு சோதனை வந்திச்சு.

அவர் வயித்தைப் பாத்து நாங்க தத்துவம் எலாம் சொல்லிக் கொண்டிருக்க ஒரு பீர் போத்தலில அவர் படத்தை வரைஞ்சு விட்டிட்டாங்க. பீர் குடிச்சா இப்பிடிவயிறு வரும்னு சிம்பாலிக்கா சொல்லுராங்க போல. அப்புறம் இந்து சங்கங்களெல்லாம் கொடி பிடிச்சு அதை வாபஸ் வாங்கிட்டாங்க. இங்கே இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் ஒரு வெளையாட்டுப் போல. வைனே குடிச்சாரு யேசு. வைன் போத்தலில யேசு படம் இவங்க போட்ட மாதிரி நான் பார்க்கவே இல்லை. அரசியல் வாதிங்க படமெல்லாம் கண்டபடி போட்டுத் தள்ளுவாங்க. ஆனானப் பட்ட புஸ்ஸே தப்ப முடியாது. அவ்வளவுக்கு கருத்துச் சுதந்திரம் இங்க இருக்கு. நம்ம சாமிப் படங்களெல்லாம் இவங்களுக்கு ஒரு வேடிக்கை போல. சாமிங்களிலேயே அல்லாதான் அதிர்ஸ்டக் கார சாமின்னு நெனைச்சுக் கொள்வேன். அவருக்குத்தானே உருவமே இல்லை. மத்தச் சாமில்லாம் ஏதோ ஒரு விதத்தில் கஸ்ரப்படப் போறாங்கன்னு பிள்ளையார் படத்தோடயே நெனச்சுக் கொண்டேன். ஆப்கானிஸ்தானில புத்தருக்கு வந்த கஸ்ரத்தைப் பாத்தீங்களா? அன்பைப் பத்திப் பேசியவரை குண்டு வைச்சே அடிச்சாங்க.

அமேரிக்காவும் உடனே சண்டைக்கு கெளம்பிப் போயிட்டாங்க. அமேரிக்கா சரியான சண்டைக் கோழிதாங்க. அதுவும் காலில கத்தி கட்டின சண்டைக் கோழி. எங்கேயும் முன்னாடிப் போய் நாட்டாமை காட்டுராங்க. இவங்களை நெனைக்கும் போது எனக்கு சின்ன வயசு ஸ்கூல் ஞாபகம் தான் வரும். பாலு என்னு ஒரு பையன் எங்ககூட படிச்சுக் கொண்டிருந்தான். எங்களை விட பெரிய தோற்றத்தோட முரடனாய் இருப்பான். வயசும் அதிகம் என்று ஞாபகம். என்ன பிரச்சனை என்றாலும் அவனிடம் தான் தீர்ப்புக்கு வரும். பிரசனை கேட்கு முன்னாடியே பிரச்சனை பட்ட ரெண்டு பேர் பொடரியிலயும் ஒரு அறை விழும். அது பின்னாடிதான் பிரச்சைனை பத்தியே கேட்பான். பாதிச்சவனுக்கும் அறை. பாதிக்கப் பட்டவனுக்கும் அறை. இது ஞாயமில்லேன்னு பல காலம் யோசித்தேன். அப்புறம் தான் வெளங்கிச்சு அவனுக்கு ஞாயம் சொல்லுரதில்ல முக்கியம் . தன்னைப் பற்றி ஒரு பயத்தை பசங்க மத்தியில வைச்சுக்கணும்றது தான் முக்கியம்னு பட்டுது. அது தான் அமேரிக்கா. பாலுவுக்கும் அமேரிக்காவுக்கும் அதிக வித்தியாசம் தெரியல்ல. அவங்களுக்கு அவங்களை விட ஆக்களில்ல என்ற எண்ணம். எண்ணம் தானே பிழைப்பைக் கெடுக்குது. ரஷ்யாவை ஒதுக்கின பின்னாடி எங்கே எங்கேன்னு பாஞ்சு கொண்டிருக்காங்க.

அல்லா தப்பிட்டார் என்று பார்த்தா ப்ரொப்பெற் மொகமட்டைப் பிடித்து விட்டாங்க. கார்ட்டூன் கீறப் போக மீண்டும் கலவரம். மன்னிப்பு கேட்டு என்ன. மக்கள் மனசு இன்னும் இன்னும் விலகிப் போய்க்கொண்டே இருக்கு. இங்கே உள்ள மொகமட்டின் ஆளுங்களும் கொடி பிடித்து கோஷம் போடுறாங்க. கார்ட்டூன் போட்டவனை கொலை செய் என்னதுதான் ரூமச். அவங்க கண்ணுக்கு நாம எல்லோரும் பாக்கிதான்.

உலக நெலமை இப்பிடின்னா ந்ம்ம நெலமை ரொம்ப மோசம். நம்ம கலியாணத்துக்கு அவங்க சம்மதிக்கவே மாட்டாங்களாம். என்ன இருந்தாலும் அவங்க அவங்க தானாம் . நாங்க நாங்கதானாம். தன்னை மறக்கிரதுதான் நல்லதுன்னு கீத்துக் குட்டியே எழுதியிருக்கு. தொண்ணூத்தெட்டாவது முறை அவ லெட்டெரைப் படிச்சுட்டேன். மனசே சரீல்லீங்க. என்ன செய்து மனசை ஆறுதல் பன்ணலாம்னு யோசிச்சுக் கிட்டே வந்தேன். நவ் ஓப்பென்னு நேயொன்னில் பளிச்சிட்டது அந்த கடை போர்ட். பீர்க் கடை தாங்க. உள்ளே போய் ஓடர் பண்ணி முதல் கிளாஸை அப்பிடியே கவுத்து விட்டேன். உடம்பில சூடு பரவிச்சுது. என் வயித்தை தடவிப் பாத்தேன். பிள்ளையாரை விட சிறிசாத்தான் இருந்தது. கீத்துக் குட்டியில்லேன்னா நானும் பிள்ளையாரும் ஒண்ணுதானேன்னு எண்ணம் வந்தது. பிள்ளையாருக்கு இப்பிடி பிரச்சனை வந்ததா படிக்கேல்ல. ஆனா அவர் தம்பி முருகனுக்கு வந்திருக்கு. பிள்ளையாரே உதவி செய்திருக்கிறார். யானை வேசம் போட்டு. ஆமா முகம் யானை முகம் தானே. உடம்பை மட்டும் மாத்தியிருப்பார். அதனாலென்ன. இப்போ என் நெலமயில முருகனை விட பிள்ளையார் தான் என்க்கு ரொம்ப நெருக்கமாயிட்டார். அவரு தனி நானும் தனி. தத்துவம் எல்லாம் பிறக்கத் தொடங்கீட்டுது. கீத்துக் குட்டின்னு பொலம்பத் தொடங்கினேன். அவங்க அப்பா அவங்களைச் சேந்தவங்க எல்லாரையும் திட்டித் தீத்தேன். சத்தம் போட்டு திட்டினேன்.

பாரில் அதிக கூட்டம் இல்லை. எல்லோரும் எதேதோ துக்கத்தில் இருந்தார்கள். அல்லது அளவுக்கதிகமான உற்சாகத்தில் இருந்தார்கள். இதுவா முக்கியம். என் கீத்துக் குட்டியே இல்லாத உலகத்தில எது நடந்தால் தான் என்ன? தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். ஒரு அளவுக்கு மேல் முடியாமல் இருந்தது. வீட்டிற்குப் போகலாம் என்று திரும்பி நடந்தேன். எதிலோ தடக்குப் பட்டு விழுந்தேன். எதிலோ அல்ல யாரோ வேணுமென்று விழுத்தியிருந்தார்கள். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. என் கீத்துக் குட்டீ... சட சடவென்று அடி விழுந்தது. பாக்கி என்று சத்தம் கேட்டது. நான் பாக்கி இல்லையென்று சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. அதுவா முக்கியம் . என் கீத்துக் குட்டி. நினைவு தப்புவது போல இருந்தது. வாசலில் 'சொத்'தென்று தூக்கி எறிந்தார்கள். மண்டபத்தின் வெளியிலிருந்து சிலர் வா வாவென்று கூப்பிடுவது கேட்டது. இந்த நாட்டில் இவ்வளவு வறுமையுடன் கிழிசல் உடுத்தியபடி. நல்லதையும் கெட்டதையும் சரி சமனாக எடுத்து செரிக்கப் பழகுன்னு அம்மா சொல்வது தெரிகின்றது. என் கீத்துக்... அப்படியே மயங்கிப் போனேன்.










Back to top Go down
 
~~ Tamil Story ~~ பிள்ளையார் பிள்ளை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ ஆற்றங்கரைப் பிள்ளையார் - புதுமைப்பித்தன்
» ~~ Tamil Story ~~ குறுக்குப் புத்தி பிள்ளையார் ஒழிக
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: