BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in== Tamil Story ~~ என்றும் காதல்!   Button10

 

 == Tamil Story ~~ என்றும் காதல்!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

== Tamil Story ~~ என்றும் காதல்!   Empty
PostSubject: == Tamil Story ~~ என்றும் காதல்!    == Tamil Story ~~ என்றும் காதல்!   Icon_minitimeThu May 05, 2011 4:07 am

== Tamil Story ~~ என்றும் காதல்!




“சுமதி. இப்படி கொஞ்சம் வாம்மா.” முத்துராமன் தன் பேத்தியைப் பக்கத்தில் அழைத்தார். “என்ன தாத்தா? நான் அவசரமா சின் மிங் கூட விளையாட கிளம்பிட்டு இருக்கேன்.”

“இல்லை, விடிந்ததிலிருந்து உன் பாட்டியைக் காணோமே. அதான் பாட்டியை எங்கேயாவது பார்த்தியான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.”

“போங்க தாத்தா. நான் எவ்வளவு அவசரமா ‘பார்பி’ டால் மீட்டிங்க்குப் போய்க்கொண்டிருக்கேன். நான் பாட்டியை எங்கும் பார்க்கவில்லை. பை தாத்தா.” பட்டுன்னு கூறி பக்கத்து வீடு சீனத் தோழியைச் சந்திக்கச் சென்றுவிட்டாள் 6 வயது சுமதி.

முத்துராமன் ஒரு தொழில் அதிபர். பெரிய அளவில் இல்லாமல் போனாலும் ஏதோ வசதியில் எந்த வித குறைபாடும் இன்றி வாழும் அளவிற்கு உயர்ந்துள்ளார். தன் ஒரே மகன் சுந்தரத்திடம் தன் தொழில் பொறுப்புகள் அனைத்தும் ஒப்படைத்துவிட்டு தன் மனைவி சீதாவுடன் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார்.

“என்ன மாமா? காலையிலே அத்தையைத் தேடுறீங்க. அத்தையைக் கொஞ்ச நேரம் பார்க்கவில்லை என்றால் உங்களுக்குக் காலும் ஓடாது கையும் ஓடாது. அப்படித்தானே மாமா?” அங்கு வந்த அவரின் மருமகள் வளர்மதி தன் மாமனாரைப் பார்த்துப் புன்முறுவலுடன் கேட்டாள். சிறிது நாணத்துடன் “இல்லைம்மா, கல்யாணம் ஆனதிலிருந்து தினமும் அவள் முகத்தைப் பார்த்த பிறகு தான் என் நாளைத் துவங்குவேன். ஆனால் இன்று உன் அத்தையைக் காலையிலிருந்து காணோம். அது தான் மனசு கலக்கம் அடைகிறது.”

வளர்மதி சிரித்துவிட்டாள். “அத்தை அதிகாலையிலேயே எழுந்து கோயிலுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டார்.”

“கோயிலுக்கா? ஏம்மா இன்றைக்கு ஏதாவது விசேஷம்மா?”

“அப்படி ஏதும் எனக்குத் தெரியலே. சாப்பாடு தயார் ஆகிவிட்டது. நீங்கள் சாப்பிடுகிறீர்களா மாமா? அவரும் ரெடியாகி வந்திடுவார். சேர்ந்தே சாப்பிடலாம்.”

“இல்லை வளர்மதி. பரவாயில்லை. நீ முதலில் சாப்பிடு. சுந்தரம் வந்து அப்புறம் கத்துவான். உன் அத்தை முருகன் கோயிலுக்குத் தான் போயிருப்பா. நானும் அங்கு போகிறேன்.” என்று கூறி அவரும் கோயிலுக்குக் கிளம்பினார். முத்துராமன் மனைவியைத் தேடி பரப்பரப்பாகக் கோயிலுக்குச் செல்வதைக் கவனித்துக்கொண்டிருந்தாள் வளர்மதி. திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குள் இன்றும் அந்த அன்பும் பற்றும் சற்றும் குறையாமல் இருப்பது அவளுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவள் இந்த வீட்டிற்கு மருமகளாக கால் வைத்த நாளில் இருந்து அவர்களுக்குள் வாக்குவாதம் சண்டை என்று சிறிதும் காணவில்லை. அப்படியே வாக்குவாதம் வந்தாலும் முத்துராமன் தானே வலிய வந்து மன்னிப்பு கேட்பார். மன்னிப்புக் கேட்ட மறுவினாடி அவர் மனைவியின் முகத்தில் மலரும் புன்னகையைக் கண்டு அவர் மனம் குளிரும்.

வளர்மதி பெருமூச்சு விட்டாள். ‘எனக்கும் கல்யாணம் ஆகி முழுதாக 10 ஆண்டுகள் கூட முடியலே. அதற்குள் எத்தனை சண்டை. இவர் என்னிடம் எப்போதாவது மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா? இல்லவே இல்லை. அது ஒரு கௌரவ குறைச்சலா எண்ணுகிறார். அவர் அப்பாவுக்கு இல்லாத கௌரவம் இவருக்கு மட்டும் எங்ககிருந்து வந்ததோ.’

“வளர்மதி!” உறுமினான் சுந்தரம். “வந்துட்டேங்க” என்றபடி கணவனை நோக்கினாள். “என்ன வளர்மதி. எனக்கு மீட்டிங்க்கு மணி ஆச்சு. பசிக்குது வேறு.”

“மன்னிச்சிருங்க. உட்காருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” எனக் கூறிக்கொண்டே சமையல் அறையினுள் நுழைந்தாள்.

“ஆமாம் அப்பா எங்கே? அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டாங்களா? சுமதி எங்கே?”

“மாமா அத்தையைத் தேடிக்கிட்டு கோயிலுக்குக் இப்போ தான் கிளம்பினாங்க. இரண்டு பேருமே சாப்பிடலே. சுமதி சாப்பிட்டு பக்கத்து வீட்டுக்கு விளையாட போயிருக்கா. சரி நீங்கள் முதலில் சாப்பிடுங்க,” என்று சொல்லிக்கொண்டு உணவு பரிமாறத் தொடங்கினாள்.

“அப்பா எப்போதும் இப்படித்தான். அம்மா இல்லை என்றால் எதுவுமே ஓடாது. இந்தக் காலத்திலும் அப்படி என்ன தான் லவ்வோ! பார்க்கவும் கேட்கவும் எனக்கே சங்கோஜமாக இருக்கிறது.” சலித்துக் கொண்டான் சுந்தரம். இலேசாகச் சிரித்துக்கொண்டே வளர்மதி தன் கணவனின் தோளையை தடவினாள்.

“அப்படி எல்லாம் நீங்கள் உங்க அப்பா அம்மாவைப் பார்த்துச் சொல்லலாமா? காதல், பாசம், அன்பு என்றும் கூடுமே தவிர வயதானால் குறையவே குறையாதுங்க. முக அழகு கரைந்தாலும் அக அழகு என்றும் கரையைமல் இருக்கும். இதை நம் பாரதிதாசன் குடும்ப விளக்கில்

‘மதியல்ல முகம்அ வட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
“இருக்கின்றாள்” என்பதொன்றே’

வயதானப் பருவத்தில் மணவழகர் தன் மனைவியைப் பார்த்துக் கூறுகிறார்.”

“அது சரி. தமிழ் இலக்கிய மாணவிக்கிட்டே நான் வாதாட முடியுமா. சரி சரி. நான் கிளம்பறேன். அப்பா அம்மா கிட்டேயும் குழந்தைகிட்டேயும் சொல்லிரு. சரியா? பை...” என்று விடைபெற்றுக் கொண்டான் சுந்தரம்.

கணவனை வழியனுப்பிவிட்ட பிறகு தானும் சாப்பிட உட்கார்ந்தாள். அந்த கணம் தன் மாமாவின் குரல் கேட்டது. வாசலுக்குச் சென்றாள். முத்துராமனும் சீதாவும் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தார்கள்.

“என்ன அத்தை. விடிந்ததும் நீங்கள் கிளம்பிட்டிங்க. பாவம் மாமாவும் சாப்பிடாமல் உங்களைத் தேடி போனாங்க. முதலில் வாங்க சாப்பிடலாம்.” அன்பாகக் கடிந்துகொண்டாள் வளர்மதி.

எல்லோரும் காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். “சுந்தரம் கிளம்பிட்டானாம்மா?”

“ஆம் மாமா. ஏதோ மீட்டிங்காம். சீக்கிரம் கிளம்பிட்டார். சுமதியும் சாப்பிட்டா.”

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வளர்மதி கேட்டாள். “இன்றைக்கு என்ன விஷயம் அத்தை? காலையிலையே முருகன் கோயிலுக்குக் கிளம்பிட்டிங்க. மாமா நீங்கள் காணாமல் ரொம்ப துடிச்சு போய்ட்டாங்க.” முத்துராமனின் திசையை நோக்கி புன்முறுவலுடன் கேட்டாள். சீதாவின் கண்களில் இலேசாக நீர் பெருகியது.

“அது ஒன்றும் இல்லைமா. உங்க மாமாவுக்கு போன மாதம் மாரடைப்பு வந்து சிகிச்சைக்குப் போனார் அல்லவா. அவர் நல்லபடியா வந்து சேர்ந்தால் அந்த முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்வேன்னு வேண்டிக்கிட்டேன். அதைப் பற்றி ஐயரிடம் பேசத்தான் காலையிலையே கிளம்பிவிட்டேன்.” முத்துராமன் தன் மனைவியின் கையைப் பற்றிக்கொண்டார். அங்கு சில நிமிடங்களுக்கு மௌனம் நிலவியது.

அன்றிரவு வளர்மதி தன் கணவரிடம் அன்று காலையில் நடந்ததைக் கூறினாள். “உங்களுக்குத் தெரியுமாங்க. இந்த வயதிலும் மிகவும் அன்யோன்யமாகப் பழகும் தம்பதிகளைப் பார்க்கவே ரொம்ப அரிது. குடும்ப விளக்கு தங்கம்-மணவழகர் தம்பதியனரே நேரில் காட்சியளிக்கிற மாதிரி இருந்தது. எனக்கு அப்படியே மெய் சிலிர்த்தது, என்னையும் தான் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. பண்ணின இரண்டாவது வருஷமே நமக்குள் எத்தனை சண்டைகள் வாக்குவாதங்கள். ஏன் என் அம்மா வீட்டிற்குத்தான் எத்தனை முறை கோவிச்சுக்கிட்டுக் கிளம்பியிருப்பேன். உண்மையில் ரொம்ப பெருமையாகவும் பொறாமையாகவும் இருக்குங்க. என்னங்க...உங்களைத்தான். நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கேன். காதில் விழாத மாதிரி படுத்துக் கிடக்குறீங்களே.”

“அம்மா வளர்மதி. எனக்கு நல்லா களைப்பாக இருக்கு. உன் மாமா-அத்தை புராணத்தை நீ நாளைக்குச் சொல்லு. இப்போ என்னைக் கொஞ்சம் தூங்க விடுறீயா?” கோபத்துடன் சீறீக்கொண்டு படுக்கையில் புரண்டு படுத்தான். வளர்மதிக்கு எரிச்சல் வந்தது.

“சே...இவர் அவர்களுக்குப் பிறந்தவர் தானா. மாமாவிடம் உள்ள எந்த குணநலங்களும் இவரிடம் சிறிதும் இல்லை. ஹ்ம்ம்...இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்ததற்கு பதிலா ஒரு கல்லைக் காதலிச்சிருக்கலாம்.” முணுமுணுத்தாள்.

“என்ன டீ...தூங்காமல் முணுமுணுக்கிறே?”

“ம்ம்ம்...நாளைக்கு நம்ம சுமதியாவது அவங்க தாத்தா மாதிரி உள்ள ஒருவனைக் காதலிச்சா நான் சந்தோஷம் படுவேன்னு சொன்னேன்.”

“அதை அவள் காதலிக்கும் வயது அடையும் போது பார்த்துக்கலாம். இப்போ தூங்கு. நாளைக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு.”

“நீங்களும் உங்கள் மீட்டிங்கும்” முனகியபடி கண்களை மூடினாள்.

அன்றிலிருந்து வளர்மதி தன் மாமனாரையும் மாமியாரையும் இன்னும் நன்கு கூர்ந்து கவனித்து வந்தாள். அவர்களைப் பார்க்கையில் அவளுக்குச் சில சமயம் வேடிக்கையாகவும் இருக்கும். குழந்தைகள் போல உலகத்தை மறந்து நடப்பார்கள். அவளின் கணவன் தான் இதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. எப்போதும் எரிந்து விழுந்தே கொண்டிருப்பான். வளர்மதிக்கே சில சமயம் சுந்தரம் அவனின் பெற்றோரிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் கோபம் வரும்.

சீதாதான் அவளிடம், “அவனைப் பற்றி நீ ஏன்மா கவலைப்படுறே. அவனைப் பொருத்தவரையில் காதல் என்பது ஒரு குறிப்பட்ட வயது வரை தான். குறுகிய மனப்பான்மை கொண்டுள்ளவன். அவனுக்கும் வயதாகும் அல்லவா. அப்போது புரிந்து கொள்வான் காதலுக்கும் அன்பிற்கும் வயது கிடையாது என்று. அதுவரை நீதான்மா பொறுமையா போகனும்.”

இப்படி இருக்கையில் ஒருநாள் மதிய வேளையில் தொலைபேசி மணி ஒலித்தது. வளர்மதி தொலைபேசியை எடுத்தாள்.

“ஹலோ”

“’ஹலோ! இது முத்துராமனின் வீடுதானே?”

“ஆமாம். நான் அவர் மருமகள் தான் பேசுகிறேன்.”

“முத்துராமனுக்குத் திடீர் மாரடைப்பு வந்து தான் தோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். நான் அவருடைய நண்பர் திலிப் பேசுகிறேன். நீங்கள் உடனடியாக கிளம்பிவாங்க. வார்ட் நம்பர் 52.”

வளர்மதிக்குப் பதற்றமாக இருந்தது. உடனே சுந்தரத்திற்குப் போன் பண்ணித் தகவல் சொன்னாள். சீதாவை அழைத்துக் கொண்டு அவளும் மருத்துவமனைக்குப் புறப்பட்டாள். போகும் வழியில் அத்தையை அப்பப்போ பார்த்தாள். செய்தி கேட்டதிலிருந்து கல் மாதிரி இருந்தவர்தான். கண்ணில் ஒரு சொட்டு நீர் கூடத் தெரியவில்லை. இடிந்து போன சிலையாக மாறிவிட்டார். வளர்மதிக்கு மனதில் கலவரமாக இருந்தது. ‘மாமா எப்படி இருக்கிறாரோ. அத்தையால் தாங்க முடியுமா.’ அவள் கண்ணில் நீர் பெருகியது.

மருத்துவமனையை அடைந்ததும் வார்டுக்குச் சென்றார்கள். அங்கு சுந்தரமும் திலிப்பும் பேசிக்கொண்டிருந்தனர். திலிப் ரொம்ப சீரியஸாக இருந்தது என்றும் அவரைத் தீவிர சிகிச்சை அளிக்கும் பிரிவிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள் என்றும் கூறினார். எல்லோரும் அங்கு விரைந்து சென்று பார்த்தார்கள். அங்கே பல கருவிகளுக்கு இடையில் இலேசாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார் முத்துராமன். சீதா அந்த சன்னல் வழியாகவே தன் கணவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். வளர்மதி தன் அத்தைக்குத் துணையாகப் பக்கத்தில் நின்றாள்.

சுந்தரம் மருத்துவரிடம் விலாவரியா தன் தந்தையின் உடல் நலத்தைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு தன் மனைவியைப் பார்த்து வருத்தத்துடன் தலை அசைத்தான். வளர்மதிக்குத் துக்கம் தாங்கவில்லை. இவளுக்கே இப்படி என்றால் அத்தைக்கு? அத்தை இன்னும் அந்தச் சன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவிடம் சொல்லச் சென்றான் சுந்தரம். வேண்டாம் என அடையாளமாக அவனின் கையைப் பிடித்துக்கொண்டாள் வளர்மதி.

அன்று சாயங்காலமே முத்துராமன் மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. சுயநினைவு எப்போது வரும் என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. வளர்மதி வீட்டிற்குக் கிளம்ப தயாரானாள். சுமதியை வேறு பக்கத்து வீட்டாரிடம் ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறாள். இனி அவர்களால் ஏதும் செய்ய முடியாது. அவள் தனது அத்தையையும் அழைத்தாள். சீதா “இல்லை வளர்மதி. நான் இங்கேயே அவருடன் இருக்கப் போகிறேன். அவர் விழித்துக்கொண்டால் என் முகத்தைத் தான் பார்க்க விரும்புவார். நீங்கள் கிளம்புங்க. சுமதி தனியா இருப்பா.”

மனது கேளாமல் அவர்கள் விடைபெற்றுக் கொண்டனர். இருந்தாலும் வளர்மதியின் நெஞ்சம் ஏனோ கனத்தது. ‘அவர்களுக்கு இப்படியா நடக்க வேண்டும். மாமா கண்டிப்பா நல்லபடியா குணமடைய வேண்டும்.’ அன்றிரவு தூங்கும் முன் அவள் தன் அத்தைக்குத் தொலைபேசி மூலம் அழைத்தாள்.

“அத்தை, மாமாவுக்கு இப்போ எப்படி இருக்கு? நீங்கள் சாப்பிட்டிங்களா?”

“அவர் அப்படியே தான்மா இருக்கிறார். நான் இன்னும் சாப்பிடலே. பசிக்கலே. நீ சாப்பிட்டியாம்மா? சுமதியிம் சுந்தரமும் தூங்கிட்டாங்களா?”

“ஆமாம் அத்தை. நான் வேணும்னா ஏதாவது சாப்பிட கொண்டு வரவா அத்தை?”

“வேண்டாம்மா. மணி ஆச்சு. நீ தூங்கு. பாவம் சுந்தரத்திற்குத் தான் இது அனாவசிய அலைச்சல்.”

“ஏன் அத்தை அப்படி பேசுறீங்க. மாமா சீக்கிரம் நல்லபடியா வீடு திரும்பவேண்டும். திரும்புவாங்க. நீங்க கவலை படாதீங்க அத்தை.”

“ரொம்ப நன்றிம்மா. வீட்டிற்கு வந்த மருமகளாக இருந்தாலும் பெற்ற மகனைவிட எங்களிடம் அதிக அன்பும் பாசமும் காட்டுறே. இதுக்கு ஈடா நான் என்ன செய்ய போறேனோ. தீர்க்காயிசா இருக்கணும்மா நீ உன் கணவருடன்.”

“என்ன அத்தை இப்படி பேசுறீங்க. நீங்களும் தான் எங்களுடன் இன்னும் பல வருடங்கள் இருக்கப் போறீங்க. சரி அத்தை. நீங்கள் போய் தூங்குங்க. ஏதாச்சும் ஒண்ணுனா உடனே அழையுங்கள்.”

தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. வளர்மதி மனதில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு எச்சரித்தது. அதிகாலை 4 மணிக்குத் தொலைபேசி மணி அழைத்தது. வளர்மதி தூக்கக் கலக்கத்தில் பேசினாள்.

“ஹலோ. நான் டாக்டர் விவேக் பேசுறேன். உங்கள் அப்பா தானே திரு முத்துராமன். இருதய நோயாளி?”

“ஆமாம் டாக்டர். அவர் என் மாமனார் தான். என்ன டாக்டர் ஆச்சு என் மாமாவுக்கு?” பதற்றத்துடன் கேட்டாள்.

“ஐ அம் சாரி டு சே அவர் இறந்து விட்டார்.”

வளர்மதிக்கு அழுகை வந்தது. டாக்டர் தொடர்ந்தார்

“இன்னொரு செய்தி, உங்கள் அத்தையும் இறந்துவிட்டார். அவர் கணவன் பிரிந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இறந்துவிட்டார். ஐ அம் வெரி சாரி. நாளைக்கே நீங்கள் பிணங்களை எடுத்துக் கொள்ளலாம்.”

துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீருடன் “நன்றி டாக்டர்” என்றாள். .உடனே சுந்தரத்தை எழுப்பி மருத்துவமனைக்கு விரைந்தனர். வழியில் வளர்மதி அத்தை அவளிடம் கூறிய கடைசி வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன. ‘சிலருக்கு மரணம் வருவது அவர்களின் உள்ளுணர்வுக்குத் தெரியும் என்பார்கள். அது போலவே அத்தைக்கும் தெரிந்ததோ. அதனால் தான் என்றும் இல்லாமல் திடீரென்று என்னை அப்படி வாழ்த்தினாரா? ஏன் அத்தை கணவன் இல்லாத உலகத்தில் எனக்கென்ன வேலைன்னு நீங்களும் சென்றுவிட்டீர்களா?’ கன்னங்களில் நீர்த் துளிகள் அருவியாகக் கொட்டின.

வார்டுக்குச் சென்று பார்த்தனர். வளர்மதிக்குத் தன் கண்களை நம்பமுடியவில்லை. அவள் மனதில் உடனே தோன்றியவை இவை தான்

“பெரியாளும் பெரியான் அண்டைத்
தலையணை மீது சாய்ந்தாள்.
அருகரு கிருவர்; மிக்க
அன்புண்டு; செயலே இல்லை!”








Back to top Go down
 
== Tamil Story ~~ என்றும் காதல்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்
» ~~ Tamil Story ~~ காதல்
» ~~ Tamil Story ~~ ஒரு காதல் கடிதம்
»  ~~ Tamil Story ~~ இது காதல் கதை அல்ல!
» ~~Tamil Story ~~ காலத்தே காதல் செய்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: