BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in== Tamil Story ~~ அகல்யை   Button10

 

 == Tamil Story ~~ அகல்யை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

== Tamil Story ~~ அகல்யை   Empty
PostSubject: == Tamil Story ~~ அகல்யை    == Tamil Story ~~ அகல்யை   Icon_minitimeThu May 05, 2011 12:16 pm

== Tamil Story ~~ அகல்யை




வேதகாலம்

சிந்து நதி தீரத்திலே...

இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் - அதில் அரசன் இருப்பான் - அதனால் அது தலைநகர்.

இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் - நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது.

அங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் குடிசைக்கும் கூப்பிடு தூரம்.

குடிசைக்குப் பக்கத்தில் சிறிது தள்ளி வடக்குப் புறமாகச் செழித்த புல்வெளி. தூரத்திலே ஹிமவானின் பனிச் சிகரம், இவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு வராமல் கவனிப்பதுபோல் இருந்தது.

கௌதமர் அந்தணர், அதாவது வித்தைக்கும் கலைக்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிட்டவர். அது ஒரு காலம். வாலிபர்களுக்கு - சிறுவர்களுக்கு - வித்தையைப் போதிப்பதில் ஒரு பிரேமை. அதெல்லாம் பழைய கதை.

அப்பொழுது, இந்த அகண்ட உலகத்தில் உள்ள சராசரங்களின் அழகு, அதன் காரணம், அதன் மூலம் இவையெல்லாவற்றையும் அறிய ஓர் ஆர்வம். அதனால்தான் இந்தத் தனியிடத்தில் வந்து நிம்மதியாகத் தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தனித்திருக்கிறார். சமூகத்தைவிட்டு விலகித் தமது பத்தினியுடன் இங்கு வசித்து வருகிறார்.

அவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி, அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு, பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு, எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று - ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி - தேஜஸ் - உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று.

அவர் மனைவி - அவள் தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.

கௌதமரும் இவளைக் காதலிக்கிறார். ஆனால் அவர் காதல் காட்டாறு போன்றதன்று - சாந்தியிலே பிறந்தது. அவர் மனம் இடியச் செய்ய ஒரு லேசான வழி, அவள் மேல் ஒரு துரும்பை எடுத்து வீசினாலும் போதும். அவருடைய காதலின் உயர்வை அவள் அறிந்திருந்தாள். அவள் கற்புள்ளவளாக இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர் அவளுடைய இலட்சியம். அதனால், அவள் கற்புடன் இருந்ததில் என்ன அதிசயம்.

2.ஒரு நாள் சாயங்காலம். சூரியன் இன்னும் அஸ்தமிக்கவில்லை. தூரத்திலிருக்கும் பனி மலைகள் செந்தழலாகக் கனிந்தன. அகல்யை குடிசைக்குள்ளிருந்து குடத்தை இடுப்பில் ஏந்தியவண்ணம் வெளிமுற்றத்திற்கு வருகிறாள். அந்த வெளிமுற்றத்தில் கௌதமர் ஒரு கிரந்தத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் வந்து நிற்கிறாள்.

கௌதமருக்குச் சற்று நேரம் அவள் இருப்பது தெரியாது. கிரந்தத்தில் இருந்த லயிப்பு அப்படி. பிறகு வந்திருக்கிறது தெரிந்தது. அன்பு கனிந்த பார்வையுடன் சிரித்துக்கொண்டு, "என்ன அகல்யா, நேரமாகிவிட்டதா? குளிக்கவா? நான் கொஞ்சங் கழித்து வருகிறேன். கிரந்தத்தில் கொஞ்சந்தான் பாக்கியிருக்கிறது!" என்றார்.

குடத்தைக் கீழே வைத்துவிட்டு அவர் தலையை மார்புடன் சேர்த்தணைக்கிறாள். நெற்றியில் அவள் அதரங்கள் படிந்து அப்படியே சற்று நேரம் இருக்கின்றன.

"நான் வருகிறேன்!" என்று குடத்தை எடுத்துக் கொண்டு நதிக்குச் செல்லுகிறாள். அவள் மனத்தில் ஓர் ஏமாற்றம் - இத்தனை நேரம் எதிர்பார்த்திருந்தது நடக்காததினால் - கணவருடன் சிரித்தும் குதூகலமாக விளையாடிக் கொண்டும் நதிக்குச் செல்ல முடியாமையினால். அவர்மீது கோபமும் இல்லை.

அவள் வெகு வேகமாக நதியை அடைகிறாள். உடைகளைத் துவைப்பது, குடத்தைத் தேய்ப்பது - எல்லாம் வெகு துரிதமாக நடக்கின்றன.

உடைகளையெல்லாம் களைந்து பாறையின் மீது வைத்துவிட்டு நீரில் குதிக்கிறாள். அந்தக் குளிர்ந்த நீரில் நீந்தி விளையாடுவதில் என்ன இன்பமோ! ஆழமான சிந்துவில் முக்குளிப்பதும், மறுபடியும் பாறையில் ஏறிக் குதித்து நீந்துவதுமாக அதிலேயே லயித்துப் போய் விட்டாள்.

அப்பொழுது எங்கிருந்தோ இந்திரன் எதிர்க் கரையில் வந்தான். அகல்யையின் கட்டழகு அவனைக் கல்லாகச் சமைத்தது; வைத்த கண் மாறாமல் பார்க்கும்படி செய்தது. அவளை எப்படியேனும் அடைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, அவளை நெருங்க ஒரு பாறையில் இறங்கினான்.

இந்தச் சப்தம் அகல்யையின் காதில் விழுகிறது.

திரும்பிப் பார்க்கிறாள். ஓர் ஆடவன்! நேர்மையற்ற மிருக உணர்ச்சி பொருந்திய முகம்! அழகுதான்! நெருங்குவதின் அர்த்தம் அவளுக்குப் பட்டது. அப்படியே வெறித்து ஒரு கோபப் பார்வை பார்க்கிறாள்.

இந்திரன் நடுநடுங்கி அப்படியே நின்றுவிட்டான். இப்படி எதிர்பார்க்கவில்லை அவன்.

அகல்யா ஒரு பாறையின் பக்கத்தில் மறைந்து உடைகளைச் சீக்கிரம் அணிந்துகொண்டு, குடத்தில் தண்ணீருடன் வெகு வேகமாகக் கரையேறிச் சென்றுவிடுகிறாள்.

இந்திரன் மனத்தில் அவளை அடையவேண்டும், அடையவேண்டும் என்ற ஒரே எண்ணந்தான். அவள் யார், தான் செய்யப் புகுந்தது என்ன என்று எண்ண மனத்தில் இடமில்லை.

பைத்தியம் பிடித்தவள் போல் ஒரே வெறித்த பார்வையுடன் சென்று கொண்டிருக்கும் அவள் எதிரே கௌதமர் வருகிறார். குடம் கையிலிருந்து நழுவுகிறது. ஒரே ஓட்டமாக ஓடி அவர் மார்பில் விழுந்து கோவென்று கதறுகிறாள்.

கௌதமர் அவளையணைத்தவண்ணம், "என்ன? என்ன?" என்றார்.

தேம்பிக்கொண்டே நடந்ததைத் தெரிவிக்கிறாள். அவளைத் தேற்றிக் குடிசைக்குக் கொண்டுவிட வேண்டியிருந்தது. அவளது உயர்ந்த காதல், அதன் முடிவாக, அதன் சிகரமாக இருக்கும் அவள் கற்பு, அவருக்கு ஒரு புதிய உண்மையைத் தெரிவிக்கிறது; அதுதான் மற்ற ஆண்களிடம் மனத்திலே ஏற்படும் அருவருப்பு.

3

இந்திரன் ஒரே தடவையில் தனது எண்ணம் ஈடேறச் சமயம் எதிர்ப்பார்த்திருந்தான்.

இதெல்லாம் அகல்யைக்குத் தெரியாது. ஏதோ ஒரு பெருங்குற்றத்தை, மனத்திற்கு ஒவ்வாத குற்றத்தைச் செய்ததுபோல் அவள் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

கௌதமருடைய அன்பும் காதலும் அவளைத் தேற்றின. அன்று அவர்கள் தூங்க நெடுநேரம் சென்றது.

"உனக்காக எல்லாரும் குருடராக இருக்க முடியுமா?" என்றார் கௌதமர்.

"ஆனால் ஆந்தையாகவா விழிக்க வேண்டும்?" என்றாள் அகல்யை.

இந்திரன், தனது பைசாச உணர்ச்சியைப் பூர்த்தி செய்துகொள்ள எப்பொழுது சமயம் கிடைக்கும் என்று சுற்றி வருகிறான்.

விடியற்காலம் என்று கௌதமரை நினைக்கும்படி செய்து அவரை அப்புறப்படுத்தி விட்டால் ஆசை பூர்த்தியாகும்.

நடு நிசி, சந்திரனற்ற வானம், வெள்ளி மட்டும் கொஞ்சம் பிரகாசமாக, விடியற்காலம் என்று நினைக்கும்படி மங்கிய வெளிச்சத்தைத் தருகிறது. இந்திரன் கோழி மாதிரிக் கூவுகிறான்.

குடிசையினுள் அகல்யாவைத் தழுவியும் தழுவாமலும் உறங்குகிறார் கௌதமர். அவருக்கு எப்பொழுதும் பிசாசுத் தூக்கம் கிடையாது. கோழியின் குரல் கேட்டதும் காலைக் கடனைக் கழிக்க எழுந்து சிந்துக் கரைக்குச் செல்லுகிறார்.

அன்று நெடுநேரமாகத் தூங்காததினால் அகல்யைக்கு அயர்ந்த தூக்கம்.

பாதிக் கனவு, பாதித் தூக்கம். கணவனுடன் கொஞ்சித் தழுவி அவருடனேயே இருப்பதுபோல் கனவு. இந்திரன் பூனை போல மெதுவாக உள்ளே வருகிறான். ஆடைகள் சற்று நெகிழ்ந்து உறங்கும் அபலையைப் பார்க்கிறான்.

ஒரு மிருகத்தின் வேட்கை அன்று பூர்த்தியாயிற்று.

பாதிக் கனவு - உலகத்திலிருந்த அகல்யை விழிக்கவில்லை. கணவர் என்று நினைத்துத் தழுவுகிறாள். ஓரளவு இயற்கையின் வெற்றி.

கணவரை முத்தமிடக் கண்களை விழிக்கிறாள்.

ஐயோ, அந்தச் சண்டாளன்! எல்லாம் சுழலுகிறது. ஒன்றும் அர்த்தமாகவில்லை. சொந்த வீட்டிற்குள் இவன் எப்படி...?

பக்கத்திலிருந்த தடியால் அவன் மண்டையில் அடித்து உதறித் தள்ளிவிட்டு, ஒரு புறம் கிடந்து புரண்டு துடிக்கிறாள்.

இந்திரனுக்குச் சுய அறிவு வருகிறது. தன் பைத்தியக்காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை!...அவன் உள்ளமே வெடித்துவிடும் போல் இருக்கிறது!

நதிக்குச் சென்ற கௌதமர் இன்னும் விடியாததைக் கண்டு, ஏதோ சூது நடந்திருக்கிறதென்று விரைந்து வருகிறார்.

உள்ளே சரேலென்று நுழைந்ததும், அகல்யை கிடக்கும் கோலத்தில், காரியம் மிஞ்சிவிட்டது என்று அறிந்தார். உடனே தம் மனைவியை வாரி எடுக்கிறார். தீயில் பட்ட புழுப்போல் அவள் உடல் துடித்துப் பதறுகிறது.

குற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். "அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?"

"கண்ணே அகல்யா, அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்ற கல்லாய்ச் சமைந்துவிட்டது?" என்று அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார்.

அவர் மனத்தில் ஒரு சாந்தி.

ஒரு புதிய உண்மை:

'உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கிவிடுகிறது. மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?'

மௌனம்.

"இந்திரா! போய் வா!" என்றார் கௌதமர். அப்பொழுதும் அவர் மனத்தின் சாந்தி தெளிவாகத் தெரிந்தது.

அகல்யை?

அவள் உள்ளத்தில் நிகழ்ந்த ஊழியின் இறுதிக் கூத்து கணவனின் சாந்திக்குப் பகைப்புலமாக நின்றது.











Back to top Go down
 
== Tamil Story ~~ அகல்யை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil story ~~ டி.என்.ஏ
»  == Tamil Story ~~ பி ன் வா ச ல்
» ~~ Tamil Story ~~ பசி
» -- Tamil Story ~~ ஆ!
» ~~ Tamil Story ~~ பரிச்சயக்கோணங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: