BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. இடும்பன்காரி Button10

 

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. இடும்பன்காரி

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. இடும்பன்காரி Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. இடும்பன்காரி     ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. இடும்பன்காரி Icon_minitimeFri May 06, 2011 10:01 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

18. இடும்பன்காரி


கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம்.

வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டான்: "இந்த வாலிபன் மிகப் பொல்லாதவனாயிருக்கிறான். நாம் தட்டியில் நுழைந்தால் இவன் கோலத்தில் நுழைகிறான். இவன் உண்மையில் யாருடைய ஆள், எதற்காக, எங்கே போகிறான் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக் கூட்டத்தில் இவன் கலந்துகொண்டானா என்றும் தெரியவில்லை. நல்ல வேளையாகக் குடந்தை சோதிடரைப்பற்றி இவனிடம் சொல்லி வைத்தோம். நம்மால் அறியமுடியாததைக் குடந்தை சோதிடராவது தெரிந்து கொள்ளுகிறாரா பார்க்கலாம்!...

"என்ன சுவாமி! அரசமரத்தோடு பேசறீங்களா? உங்களுக்கு நீங்களே பேசிக்கிறீர்களா?" என்ற குரலைக் கேட்டு ஆழ்வார்க்கடியான் திரும்பிப் பார்த்தான். கடம்பூரிலிருந்து வந்த வந்தியத்தேவனுக்குக் குதிரை பிடித்துக்கொண்டு வந்த பணியாள் பக்கத்தில் நின்றான்.

"அப்பனே! நீயா கேட்டாய்? நான் எனக்கு நானே பேசிக் கொள்ளவும் இல்லை; அரச மரத்தோடு பேசவும் இல்லை. இந்த மரத்தின் மேலே ஒரு வேதாளம் இருக்கிறது. அதனோடு சிறிது சல்லாபம் செய்தேன்!" என்றான் திருமலையப்பன்.

"ஓஹோ! அப்படிங்களா! அந்த வேதாளம் சைவமா? வைஷ்ணவமா?" என்றான் அந்த ஆள்.

"அதைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்குள்ளே நீ வந்து குறுக்கிட்டாய். வேதாளம் மறைந்துவிட்டது. போனால் போகட்டும்! உன் பெயர் என்ன அப்பனே?"

"எதற்காகக் கேட்கறீங்க, சுவாமி!"

"நடுக் கொள்ளிடத்தில் படகு கவிழாமல் காப்பாற்றினாயே! அப்படிப்பட்ட புண்ணியவானாகிய உன்னை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டாமா?"

"என் பெயர்... என் பெயர்... இடும்பன்காரி, சுவாமி!" என்று இழுத்தாற்போல் சொன்னான்.

"ஓ! இடும்பன்காரியா? எப்போதோ கேட்ட ஞாபகமாயிருக்கிறதே!"

இடும்பன்காரி அப்போது ஒரு விசித்திரமான காரியம் செய்தான். தன்னுடைய விரித்த கைகள் இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றைக் குப்புறுத்தி வைத்துக் கொண்டு, இரு ஓரத்துக் கட்டை விரல்களையும் ஆட்டினான். ஆட்டிக் கொண்டே திருமலையப்பனின் முகத்தைப் பார்த்தான்.

"அப்பனே! இது என்ன சமிக்ஞை? எனக்கு விளங்கவில்லையே?" என்றான் திருமலை.

அப்போது இடும்பன்காரியின் கரியமுகம் மேலும் சிறிது கருத்தது. கண் புருவங்கள் நெரிந்தன.

"நானா? நான் ஒன்றும் சமிக்ஞை செய்யவில்லையே?" என்றான்.

"செய்தாய், செய்தாய்! நான் தான் பார்த்தேனே? பரதநாட்டிய சாஸ்திரத்தில் திருமாலின் முதல் அவதாரத்துக்கு ஒரு அஸ்தம் பிடிப்பதுண்டு. அது மாதிரி செய்தாயே?"

"திருமாலின் முதல் அவதாரம் என்றால்? அது என்ன? எனக்குத் தெரியவில்லை சுவாமி!"

"விஷ்ணுவின் முதல் அவதாரம் தெரியாதா? மச்சாவதாரம்!"

"மீனைச் சொல்லுறீங்களா!"

"ஆமாம், அப்பனே, ஆமாம்!"

"நல்ல வேளை, சாமி! உங்கள் கண்ணே விசித்திரமான கண்ணாயிருக்கிறதே! வெறும் மரத்தின்மேலே வேதாளம் தெரிகிறது. என் வெறுங்கையிலே மச்சாவதாரம் தெரிகிறது! ஒரு வேளை மீன் பேரிலே சாமியாருக்குக் கொஞ்சம் ஆசை அதிகமோ?"

"சேச்சே! அந்த மாதிரியெல்லாம் சொல்லாதே, அப்பனே! அது போனால் போகட்டும். நம்மோடு படகிலே ஒரு வீர சைவர் வந்தாரே, அவர் எந்தப் பக்கம் போனார் பார்த்தாயா?"

"பார்க்காமலென்ன? பார்த்தேன். நான் குதிரை வாங்கப்போன பக்கந்தான் அவரும் வந்தார். உங்களைப் பற்றித் திட்டிக் கொண்டே வந்தார்."

"என்னவென்று என்னைத் திட்டினார்?"

"உங்களை மறுபடியும் அந்த வீர சைவர் பார்த்தால் உங்கள் முன் குடுமியைச் சிரைத்துத் தலையை மொட்டையடித்து..."

"ஓகோ! அந்த வேலைகூட அவருக்குத் தெரியுமா?"

"உங்கள் திருமேனியிலுள்ள நாமத்தையெல்லாம் அழித்து விட்டுத் திருநீற்றைப் பூசி விடுவாராம்!"

"அப்படியானால் அவரைக் கட்டாயம் நான் பார்த்தேயாக வேண்டும். அவருக்கு எந்த ஊர் உனக்குத் தெரியுமா?"

"அவருக்குப் புள்ளிருக்கும் வேளூர் என்று அவரே சொன்னாருங்க!"

"அந்த வீர சைவரைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுகாரியம். அப்பனே! நீ எங்கே போகப் போகிறாய்! ஒரு வேளை நீயும் அந்த வழி வரப்போகிறாயோ?"

"இல்லை, இல்லை. நான் எதற்காக அங்கே வருகிறேன்? திரும்பிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்குத்தான் போகிறேன். இல்லாவிட்டால் எஜமானர் என் கண்ணைப் பிடுங்கிவிடமாட்டாரா?"

"அப்படியானால், உடனே திரும்பு. அதோ படகு புறப்படப் போகிறது!"

இடும்பன்காரி திரும்பிப் பார்த்தபோது, ஆழ்வார்க்கடியான் கூறியது உண்மை என்று தெரிந்தது. படகு புறப்படும் தருவாயில் இருந்தது.

"சரி, சாமியாரே! நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் படகுத் துறையை நோக்கி விரைந்து சென்றான் இடும்பன்காரி.

பாதி வழியில் ஒரு தடவை திரும்பிப் பார்த்தான். அதற்குள் ஆழ்வார்க்கடியான் ஒரு விந்தையான காரியம் செய்திருந்தான். மளமளவென்று அந்த அரசமரத்தின்மீது பாய்ந்து ஏறிக் கிளைகள் அடர்ந்திருக்கும் இடத்துக்குப் போய் விட்டான். ஆகையால் இடும்பன்காரியின் கண்ணோட்டத்தில் அவன் விழவில்லை.

இடும்பன்காரி நதியின் பரிசில் துறையை அடைந்தான். படகோட்டிகளில் ஒருவன், "அக்கரைக்கு வருகிறாயா, அப்பா?" என்று கேட்டான்.

"இல்லை, அடுத்த படகில் வரப்போகிறேன், நீ போ!" என்றான் இடும்பன்காரி.

"அடே! இவ்வளவுதானா? நீ வருகிற வேகத்தைப் பார்த்து விட்டுப் படகை நிறுத்தினேன்!" என்று சொல்லி ஓடக்காரன் கோல் போட்டு ஓடத்தை நதியில் செலுத்தினான்.

இதற்குள் அரசமரத்தின் நடுமத்தி வரையில் ஏறி நன்றாக மறைந்து உட்கார்ந்து கொண்டே திருமலை, "ஓகோ! நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இவன் படகில் ஏறவில்லை. திரும்பித்தான் வரப்போகிறான். வந்த பிறகு எந்தப் பக்கம் போகிறான் என்று பார்க்கவேண்டும். இவனுடைய கைகள் மச்சஹஸ்த முத்திரை காட்டியதை நான் நன்றாகப் பார்த்தேன். அதன் பொருள் என்ன? மீன்! மீன்! மீன் சின்னம் எதைக் குறிக்கிறது? ஆ! மீன் பாண்டியனுடைய கொடியில் பொறித்ததல்லவா? ஒரு வேளை, ஆஹாஹா!... அப்படியும் இருக்குமோ! பார்க்கலாம்! சிறிது பொறுமையுடன் இருந்து பார்க்கலாம். பொறுத்தவர் பூமி ஆள்வார், பொங்கியவர் காடாள்வார்... ஆனால், இந்தக் காலத்தில் பூமி ஆள்வதைக் காட்டிலும் காடு ஆள்வதே மேலானது என்று தோன்றுகிறது! ஆனாலும் பொறுத்துப் பார்க்கலாம்!..." இவ்விதம் அரச மரத்திலிருந்த அருவமான வேதாளத்தினிடம் திருமலை சொல்லிக் கொண்டிருந்தான்.

விரைவில் அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. படகு இடும்பன்காரியை ஏற்றிக் கொள்ளாமலே சென்றது. இடும்பன்காரி நதிக்கரையிலிருந்தபடி அரசமரத்தடியை உற்று உற்றுப் பார்த்தான். பிறகு நாலாத் திசைகளிலும் துளாவிப் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் எங்குமில்லையென்பதை நன்கு தெரிந்து கொண்டு திரும்பி அதே அரசமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். இன்னும் ஒரு தடவை சுற்றுமுற்றும் நன்றாய்ப் பார்த்துவிட்டு அந்த மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். எதையோ, அல்லது யாரையோ எதிர்ப்பார்ப்பவன் போல் அவனுடைய கண்கள் நாலாபுறமும் சுழன்று நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால், மரத்தின் மேலே மட்டும் அவன் அண்ணாந்து பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் திருமலை நன்றாகத் தம் திருமேனியை மறைத்துக் கொண்டிருந்தபடியால் மரத்தின் மேல் அவன் உட்கார்ந்திருப்பது இடும்பன்காரிக்குத் தெரிந்திராது.

சுமார் ஒரு நாழிகை நேரம் இவ்விதம் சென்றது. திருமலைக்குக் கால்கள் மரத்துப்போகத் தொடங்கின. இனி வெகு நேரம் மரத்தின் மேல் இருக்க முடியாதென்று தோன்றியது. இடும்பனோ மரத்தடியிலிருந்து எழுந்திருக்கும் வழியாகத் தோன்றவில்லை. தப்பித்துப் போவது எப்படி! எவ்வளவு ஜாக்கிரதையாக மரத்தின் மறுபக்கத்தில் இறங்கினாலும் ஏதாவது சத்தம் கேளாமல் இராது! கேட்டால் இடும்பன்காரி உடனே பார்த்துவிடுவான். அவனோ இடுப்பில் ஒரு கூரிய கொடுவாளைச் செருகிக்கொண்டிருந்தான். அதைத் தன் பேரில் அவன் பிரயோகிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

வேறு என்னதான் செய்வது? பேய் பிசாசைப் போல் பயங்கரமாகச் சத்தமிட்டுக்கொண்டு இடும்பனின் மேலேயே குதிக்கலாமா? குதித்தால் தன்னை வேதாளம் என்று நினைத்துக் கொண்டு அவன் பயத்தினால் மூர்ச்சையடைந்து விழலாம் அல்லவா? அல்லது தப்பித்து ஓடப் பார்க்கலாம் அல்லவா? அச்சமயம் தானும் தப்பி ஓடிவிடலாம்!... இவ்விதம் திருமலை எண்ணிய சமயத்தில், அவனுடைய சோதனை முடிவடையும் எனத் தோன்றியது.

ஓர் ஆள் தென்மேற்கிலிருந்து, அதாவது குடந்தைச் சாலை வழியாக, வந்துகொண்டிருந்தான். அவனுக்காகத்தான் இடும்பன்காரி இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறான் என்று திருமலையின் உள்ளுணர்ச்சி கூறியது.

புது ஆள் வந்ததைப் பார்த்ததும் அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த இடும்பன் எழுந்து நின்றான்.

வந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான். அதாவது ஒரு விரித்த புறங்கையின்மேல் இன்னொரு விரித்த கையை வைத்து, இரண்டு கட்டை விரல்கள் ஆட்டி, மச்ச ஹஸ்தம் பிடித்துக் காட்டினான். அதைப் பார்த்த இடும்பனும் அதே மாதிரி செய்து காட்டினான்.

"உன் பெயர் என்ன?" என்று வந்தவன் கேட்டான்.

"என் பெயர் இடும்பன்காரி. உன் பெயர்?"

"சோமன் சாம்பவன்!"

"உன்னைத்தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன்."

"நானும் உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன்."

"நாம் எந்தத் திசையில் போகவேண்டும்?"

"மேற்குத் திசையில்தான்!"

"எவ்விடத்துக்கு?"

"பகைவனின் பள்ளிப்படைக்கு!"

"திருப்புறம்பயம் அருகில்..."

"இரைந்து பேசாதே! யார் காதிலாவது விழப்போகிறது" என்று சொல்லிச் சோமன் சாம்பவன் நாலாப்பக்கமும் பார்த்தான்.

"இங்கே ஒருவரும் இல்லை. முன்னாலேயே நான் பார்த்துவிட்டேன்."

"பக்கத்தில் எங்கும் ஒளிந்திருக்கவும் இடமில்லையே?"

"கிடையவே கிடையாது!"

"அப்படியானால் புறப்படு. எனக்கு அவ்வளவு நன்றாக வழி தெரியாது. நீ முன்னால் போ! நான் சற்றுப் பின்னால் வருகிறேன். அடிக்கடி நின்று நான் பின்னால் வருகிறேனா என்று பார்த்துப் போ!"

"ஆகட்டும். வழி நல்ல வழியல்ல. காடும் மேடும் முள்ளும் கல்லுமாயிருக்கும் ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து வர வேண்டும்!"

"சரி, சரி, நீ புறப்பட்டுப் போ! காட்டு வழியாயிருந்தாலும் யாராவது எதிர்ப்பட்டால் மறைந்து கொள்ளவேண்டும். தெரிந்ததா?"

"தெரிந்தது, தெரிந்தது!"

இடும்பன்காரி கொள்ளிடக் கரையோடு மேற்குத் திசையை நோக்கிப் போனான். அவனுக்குச் சற்றுப் பின்னால் சோமன் சாம்பவனும் தொடர்ந்து சென்றான்.

இருவரும் கண்ணுக்கு மறையும் வரையில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேலேயே இருந்தான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தான்.

"ஆஹா! காலம் பொல்லாத காலம்! எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. ஏதோ ஒரு பெரிய மர்மமான காரியத்தைத் தெரிந்துகொள்ளக் கடவுள் அருளால் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இனி நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது விஷயத்தை அறிவது. கடம்பூர் மாளிகையில் அறை குறையாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கே அப்படி ஏமாந்து போகக்கூடாது. திருப்புறம்பயம் பள்ளிப்படையென்றால், கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப் படையைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அந்தப் பள்ளிப் படையைக் கட்டி நூறு வருஷம் ஆகிறது. ஆகையால் பாழடைந்து கிடக்கிறது. சுற்றிலும் காடு மண்டிக் கிடக்கிறது. கிராமமோ சற்றுத் தூரத்தில் இருக்கிறது. அங்கே எதற்காக இவர்கள் போகிறார்கள்! இந்த இரண்டு பேரும் மட்டும் பேச வேண்டிய விஷயமாயிருந்தால், இங்கேயே பேசிக் கொள்ளுவார்கள். காட்டு வழியில் ஒரு காத தூரம் போக வேண்டியதில்லையே? ஆகையால், அங்கே இன்னும் சிலரும் வரப்போகிறார்கள் என்பது நிச்சயம். எதற்காக? பிரிதிவீபதியின் பள்ளிப் படையைப் 'பகைவனின் பள்ளிப்படை' யென்று இவர்களில் ஒருவன் சொல்வானேன்? பிரிதிவீபதி யாருக்குப் பகைவன்? ஆகா! நாம் நினைத்தது உண்மையாகும் போலிருக்கிறதே! எதற்கும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் கொள்ளிடக் கரையோடு போகிறார்கள். நாம் மண்ணிக் கரையோடு போகலாம். மண்ணிக் கரையில் காடு அதிக அடர்த்தியாகயிருந்தாலும் பாதகமில்லை. காடும் மேடும் முள்ளும் கல்லும் நமக்கு என்ன இலட்சியம்? அவை தான் நம்மைக் கண்டு பயப்படவேண்டும்!...

இவ்வாறு எண்ணிக்கொண்டும், வாயோடு முணுமுணுத்துக் கொண்டும் திருமலை அரச மரத்திலிருந்து இறங்கிச் சற்றுத் தெற்கு நோக்கிப் போனான். மண்ணியாறு வந்தது. அதன் கரையோடு மேற்கு நோக்கி நடையைக் கட்டினான்.

ஜன சஞ்சாரமில்லாத அடர்ந்த காடுகளின் வழியாக ஆழ்வார்க்கடியான் புகுந்து சென்று சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் திருப்புறம்பயம் பள்ளிப்படைக் கோயிலை அடைந்தான்.









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. இடும்பன்காரி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. சக்கரவர்த்தியின் கோபம்
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. அருள்மொழிவர்மர்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பரிசோதனை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: