BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 24. அனலில் இட்ட மெழுகு Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 24. அனலில் இட்ட மெழுகு

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 24. அனலில் இட்ட மெழுகு Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 24. அனலில் இட்ட மெழுகு   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 24. அனலில் இட்ட மெழுகு Icon_minitimeWed May 11, 2011 3:36 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

24. அனலில் இட்ட மெழுகு



கிளி 'கிறீச்'சிட்ட சத்தமும், தாதிப் பெண் பயத்துடன் கூவிய சத்தமும் கலந்து வந்து, நந்தினியையும் கந்தன் மாறனையும் திடுக்கிடச் செய்தன. கந்தன் மாறன் திரும்பிப் பார்த்துப் பழுவேட்டரையர் வருகிறார் என்று அறிந்ததும் கதி கலங்கிப் போனான். சற்றுமுன்னால் அவன் 'பழுவேட்டரையரை எனக்கும் பிடிக்கவில்லை' என்று சொன்னது அவர் காதில் விழுந்திருக்குமோ என்ற எண்ணம் உதயமாயிற்று. அதை விடப் பீதிகரமான எண்ணம், நந்தினியையும் தன்னையும் பற்றி அவர் ஏதேனும் தவறாக எண்ணிக் கொள்வாரோ என்ற நினைவு, அவனுக்குத் திகிலை உண்டாக்கிற்று. கிழப்பருவத்தில் கலியாணம் செய்து கொண்டவர்களின் போக்கே ஒரு தனி விதமாக இருக்குமல்லவா? ஆகையினாலேயே அவர் அவ்வளவு கோபமாக வந்து கொண்டிருக்க வேண்டும்? வந்து என்ன செய்யப் போகிறாரோ, தெரியவில்லை. எதற்கும் சித்தமாயிருக்க வேண்டியதுதான்.

இவ்வளவு ஒரு நொடிப் பொழுதில் கந்தன்மாறன் மனத்தில் அலை எறிந்த சிந்தனைகள். ஆனால் அவனுக்கு அன்று ஒரு பெரிய அதிசயத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அவன் நினைத்ததற்கெல்லாம் மாறாக அந்த அதிசயம் நடந்தது. பழுவேட்டரையர் அருகில் நெருங்கியதும் நந்தினி முகமலர்ந்து அவரைத் தன் கரிய விழிகளால் பார்த்து, "நாதா! எங்கே தாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நாள் ஆகிவிடுமோ என்று பார்த்தேன். நல்லவேளையாக வந்துவிட்டீர்கள்!" என்றாள்.

அவளுடைய முகத்தைப் பார்த்து அந்தக் குரலையும் கேட்டதும் பழுவேட்டரையரின் கோபாவேசமெல்லாம் பறந்துவிட்டது. அனலில் இட்ட மெழுகைப்போல் உருகிப் போனார். அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்து, "ஆமாம்; போன காரியம் முடிந்து விட்டது; திரும்பி விட்டேன்" என்றார்.

பிறகு கந்தன்மாறனைப் பார்த்து, "இந்தப் பிள்ளை இங்கே என்ன செய்கிறான்? ஏதாவது காதற் கவிதை புனைந்து கொண்டு வந்து கொடுத்தானோ?" என்று கேட்டுவிட்டுத் தம்முடைய பரிகாசத்தைக் குறித்துத் தாமே சிரித்தார்.

கந்தன்மாறனுடைய முகம் சிவந்தது. ஆனால் நந்தினி பழுவேட்டரையரைவிட அதிகமாகச் சிரித்துவிட்டு "இவருக்குக் காதலும் தெரியாது; கவிதையும் தெரியாது சண்டை போட்டுக் காயமடையத்தான் தெரியும். நல்ல வேளையாகக் காயம் ஆறிவிட்டது. ஊருக்குப் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்!" என்றாள்.

"இந்தக் காலத்துப் பிள்ளைகளின் வீரத்தைத்தான் என்னவென்று சொல்லுவது? இருபத்துநாலு யுத்தகளங்களில் நான் அறுபத்துநாலு காயங்கள் அடைந்தவன். ஆனால் ஒரு தடவையாவது படுக்கையில் படுத்ததில்லை. இவனுக்குக் காயம் குணமாக ஒரு பட்சத்துக்கு மேலாகியிருக்கிறது. ஆனால் என் காயங்களெல்லாம் மார்பிலும் தோளிலும் தலையிலும் முகத்திலும் ஏற்பட்டவை. இந்தப் பிள்ளை முதுகிலே காயம் பட்டவன் அல்லவா? அதனால் இவ்வளவு நாள் ஆகிவிட்டது. நியாயந்தான்!" என்று கூறிப் பரிகாசச் சிரிப்புச் சிரித்தார்.

கந்தன்மாறன் கொதித்து எழுந்து, "ஐயா! தாங்கள் என் தந்தையின் ஸ்தானத்தில் உள்ளவர். அதனால் தங்களுடைய பரிகாசத்தைப் பொறுத்தேன்!" என்றான்.

"இல்லாவிட்டால், என்ன செய்திருப்பாயடா?" என்று பழுவேட்டரையர் கேட்டுத் தம் உறையிலிருந்த கத்தியில் கையை வைத்தார்.

நந்தினி இச்சமயம் குறுக்கிட்டாள். "நாதா! இவருக்கு முதுகில் மட்டும் காயமில்லை. நெஞ்சிலும் காயம் பட்டிருக்கிறது என்பது தங்களுக்குத் தெரிந்ததுதானே! இவர் தம்முடைய சிநேகிதன் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் இம்மாதிரி முதுகில் குத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டான் என்ற எண்ணம் இவர் நெஞ்சில் பெரிய புண்ணை உண்டாக்கியிருக்கிறது. முதுகில் காயம் ஆறியும், நெஞ்சில் புண் ஆறவில்லை. அந்தப் புண்ணில் கோல் இடுவதுபோல் நாம் பேசக்கூடாது தானே? அன்றிரவு, இவர் காயம்பட்ட அன்றிரவு, என்ன நடந்தது என்று தங்களுக்குத் தெரியாதா, என்ன?" என்று சொல்லிக் கொண்டே நந்தினி பழுவேட்டரையரைப் பார்த்த பார்வையில் மறை பொருள் ஏதோ இருந்திருக்க வேண்டும்! பழுவேட்டரையரின் முகத்தோற்றம் உடனே மாறிவிட்டது!

"ஆமாம்; நீ சொல்லுவது சரிதான்! பாவம், இவன் அறியாப் பிள்ளை. இவன் தந்தையோ என் பிராண சிநேகிதர். இவன் ஏதோ தெரியாத்தனமாகக் கூறியதை நான் பொருட்படுத்தக் கூடாதுதான். இது கிடக்கட்டும். நந்தினி! ஒரு முக்கியமான விஷயம் சொல்வதற்காக இப்போது வந்தேன். அது இவனுக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதான். இலங்கை மாதோட்டத்தில் ஒருவனை ஒற்றன் என்று சந்தேகித்துப் பிடித்திருக்கிறார்களாம். அவனிடம் இளவரசன் அருள்மொழிவர்மனுக்கு ஓலை ஒன்றிருக்கிறதாம். அங்க அடையாளங்களிலிருந்து அவன் நம் கந்தன்மாறனுடைய அழகான சிநேகிதனாயிருக்கலாமென்று நினைக்கிறேன். அவன் பெரிய கைகாரனாய்த் தானிருக்க வேண்டும். நம் ஆட்களிடம் அகப்படாமல் தப்பி இலங்கைக்குச் சென்று விட்டான் பார்!" என்றார் பழுவேட்டரையர்.

நந்தினியின் முக பாவத்தில் அப்போது ஏற்பட்ட ஒரு கண நேரமாறுதலை மற்ற இருவரும் கவனிக்கவில்லை.

"அடே! தப்பிச்சென்று விட்டானா? இலங்கைக்கா போய்விட்டான்?" என்று கந்தன்மாறன் ஏமாற்றத்துடன் கூறினான்.

"நாதா! அவன் தப்பிச் சென்றது எனக்கு ஒன்றும் அதிசயமாய்த் தோன்றவில்லை. தங்கள் சகோதரர் இந்தக் கோட்டைக் காவலுக்குத் தகுதியற்றவர் என்றுதான் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே! அவர் அனுப்பிய ஆட்களும் அப்படித்தானே இருப்பார்கள்?" என்றாள் நந்தினி.

"முன்னெல்லாம் நீ அப்படிச் சொன்னபோது எனக்கு அது சரியாகப் படவில்லை. இப்போது எனக்குக்கூட அப்படித்தான் தோன்றுகிறது. இன்னும் ஒரு விந்தையைக் கேள்! மாதோட்டத்தில் அகப்பட்ட ஒற்றனிடம் நமது பழுவூர் இலச்சினை ஒன்று இருந்ததாம். அது அவனிடம் எப்படிக் கிடைத்தது என்று அவன் சொல்லவில்லையாம்!..."

நந்தினி இலேசாக ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, "இது என்ன வேடிக்கை? பனை இலச்சினை அவனிடம் எப்படிக் கிடைத்ததாம்? தங்கள் சகோதரர் இதற்கு என்ன சொல்கிறார்?" என்றாள்.

"அவனா? அவன் சொல்லுவதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு வரும்! அந்தப் பனை இலச்சினை உன்னிடமிருந்துதான் அவனிடம் போயிருக்க வேண்டுமென்கிறான் காலாந்தகன்!" என்று சொல்லிவிட்டுப் பழுவேட்டரையர் இடிஇடியென்று சிரித்தார். அந்தச் சிரிப்பினால் லதா மண்டபமே குலுங்கியது போலிருந்தது. அரண்மனை நந்தவனத்து மரங்கள் எல்லாம் சிலிர்த்து நடுநடுங்கின.

நந்தினியும் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே, "என் மைத்துனர் இருக்கிறாரே, அவருக்கு இணையான புத்திக் கூர்மை படைத்தவர் இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் கிடையாது!" என்றாள்.

"இன்னும் உன் மைத்துனன் என்ன சொல்கிறான் தெரியுமா? நல்ல வேடிக்கை! அதை நினைக்க நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது! தஞ்சைக் கோட்டை வாசலில் நீ பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது உன்னை அந்த இந்திரஜித்து சந்தித்துப் பேசினானாம். பிறகு இந்த அரண்மனைக்குள்ளும் அந்த மாயாவி வந்திருந்தானாம். ஆகையால் நீயே அவனிடம் பழுவூர் இலச்சினையைக் கொடுத்திருக்கவேணுமாம்! அப்படியில்லாவிட்டால், உன்னிடம் யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி வருகிறானே, அவன் மூலமாக போயிருக்க வேண்டுமாம்! தன்னுடைய முட்டாள் தனத்தை மறைப்பதற்காக அவன் இப்படியெல்லாம் கற்பனை செய்து உளறுகிறான்!" என்று கூறிப் பழுவேட்டரையர் தமது நீண்ட பற்கள் எல்லாம் தெரியும்படியாக மறுபடியும் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரித்தார்.

"என் மைத்துனருடைய அறிவுக் கூர்மையைப் பற்றி நான் சந்தேகித்தது ரொம்பத் தவறு. அவருடைய அறிவு உலக்கைக் கொழுந்துதான்! சந்தேகமில்லை! ஆனால் இதையெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டு சும்மா இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வியப்பாயிருக்கிறது!" என்றாள் நந்தினி. அவளுடைய முகபாவம் மறுபடியும் மாறி, அதில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தது. கண்ணில் தீப்பொறி பறந்தது.

வீராதி வீரரும் போர்க்களத்தில் எத்தனையோ வேல் வீச்சுக்களை இறுமாந்து தாங்கியவருமான பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் சிறு கோபத்தைத் தாங்க முடியாமல் தடுமாறினார். அவருடைய தோற்றத்திலும் பேச்சிலும் திடீரென்று ஒரு தளர்ச்சி காணப்பட்டது.

"தேவி! நான் அதையெல்லாம் சும்மா கேட்டுக் கொண்டிருந்தேன் என்றா நினைக்கிறாய்? அவனுடைய கையாலாகாத் தனத்தைப் பற்றி மிகக் கடுமையாகப் பேசி அவனை அழவைத்து விட்டேன். நீ பார்த்திருந்தால் அவன் பேரில் இரக்கம் அடைந்திருப்பாய்!" என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கந்தன்மாறன் பாடு சங்கடமாகி விட்டது. நந்தினியிடம் அவனுக்குச் சிறிது பயமும், பழுவேட்டரையரிடம் இரக்கமும், அவமதிப்பும் ஏற்பட்டன. இந்தச் சதிபதிகளின் தாம்பத்ய விவகாரத்தில் சிக்கிக்கொள்ளாமல் அங்கிருந்து போய்விட விரும்பினான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு "ஐயா!..." என்றான்.

நந்தினி குறுக்கிட்டு "என் மைத்துனர் சாமர்த்தியத்தைப் பற்றிப் பேசுகையில் இவரை நாம் மறந்து விட்டோம். இவர் ஊருக்குப் போகிறேன் என்று சொல்கிறாரே, போகலாம் அல்லவா?" என்று கேட்டாள்.

"நன்றாய்ப் போகலாம். இத்தனை நாள் இங்கு இவன் தங்கியிருந்தது பற்றியே இவனுடைய தந்தை கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்!"

"இவரிடம் ஓலை ஒன்று கொடுத்தனுப்ப விரும்புகிறேன், கொடுக்கலாம் அல்லவா?"

"ஓலையா? யாருக்கு?"

"காஞ்சியிலுள்ள இளவரசருக்கு!"

பழுவேட்டரையர் நந்தினியையும் கந்தன் மாறனையும் சந்தேகக் கண்ணால் பார்த்து, "இளவரசருக்கு ஓலையா? நீயா எழுதுகிறாய்? எதற்கு?" என்று கேட்டார்.

"இளையபிராட்டி தம்பிக்கு ஓலை எழுதி இவர் சிநேகிதரிடம் அனுப்பியிருக்கிறார். பழுவூர் இளையராணி அண்ணனுக்கு ஏன் ஓலை எழுதக்கூடாது? எழுதி இவரிடம் ஏன் அனுப்பக்கூடாது?" என்றாள் நந்தினி.

"இவன் சிநேகிதன் கொண்டு போன ஓலை இளைய பிராட்டி குந்தவை எழுதிய ஓலையா? உனக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது?" என்று பழுவேட்டரையர் கேட்டார்.

"பின்னே எதற்காக என்னிடம் மந்திரவாதி அடிக்கடி வருகிறானாம்? அவன் மந்திரத்தின் மூலமாகத் தெரிந்தது. என் மைத்துனர் ஆட்களின் இலட்சணம்தான் தெரிந்திருக்கிறதே! பழுவூர் பனை இலச்சினை அவனிடம் இருப்பதாக கண்டு பிடித்துக் கொண்டு வந்து சொன்னவர்கள் ஓலை குந்தவை அனுப்பியது என்று சொல்லவில்லை, பாருங்கள்!"

"இலச்சினையைப் பற்றி நம் ஆட்கள் சொல்லவில்லை; அன்பில் பிரமராயர் இராமேசுவரம் போய்விட்டுத் திரும்பி வந்திருக்கிறார். அவர் கொண்டுவந்த செய்தி..."

"அந்தப் பிராமணனாவது குந்தவை தேவியின் ஓலையைப் பற்றித் தங்களிடம் சொன்னாரா?"

"இல்லை."

"நாதா! நான் தங்களுக்கு எச்சரித்ததை எண்ணிப் பாருங்கள். இந்த இராஜ்யத்தில் உள்ள அவ்வளவு பேரும் சேர்ந்து தங்களை வஞ்சிக்கப் பார்க்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா? இது உண்மை என்பது இப்போதாவது தங்களுக்குத் தெரிகிறதா? மந்திரவாதி சொன்னதை மட்டும் நான் நம்பிவிடவில்லை. கோடிக்கரையிலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வந்த வைத்தியர் மகனையும் அழைத்து வரச் செய்து விசாரித்தேன். அவனும் அதை உறுதிப் படுத்தினான். இளைய பிராட்டி தன் தம்பிக்கு ஓலை அனுப்பியிருப்பதாகச் சொன்னான்!" என்றாள் நந்தினி.

பழுவேட்டரையருக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருந்தது. கந்தன் மாறனை அவர் அருவருப்புடன் பார்த்தார். அந்தச் சிறு பிள்ளையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை.

இதைக் குறிப்பினால் உணர்ந்த நந்தினி, "நம்முடைய கதை இருக்கவே இருக்கிறது. இவருடைய பிரயாணம் ஏன் தாமதிக்க வேண்டும்!" என்று கூறிவிட்டுக் கந்தன்மாறனைப் பார்த்து "ஐயா! காஞ்சி இளவரசரிடம் இந்த ஓலையை நேரே கொண்டு போய்க் கொடுக்கவேண்டும். கொடுத்துவிட்டு, அவர் மறு ஓலை கொடுத்தால் சர்வ ஜாக்கிரதையாக அனுப்பி வைக்க வேண்டும். தங்களுடைய கடம்பூர் மாளிகைக்கு இளவரசரை அழைப்பதற்கு மறந்துவிட வேண்டாம்!" என்றாள்.

"என் தந்தையிடம் என்ன சொல்ல? இது பழுவூர் மன்னரின் விருப்பம் என்று சொல்லலாம் அல்லவா?" கந்தன்மாறன் சற்றுத் தயக்கத்துடன் கேட்டான்.

"தாராளமாகக் சொல்லலாம். என்னுடைய விருப்பந்தான் பழுவூர் மன்னரின் விருப்பமும். நாதா! நான் சொல்வது சரிதானே!" என்றாள் நந்தினி.

"ஆமாம், ஆமாம்!" என்று பழுவேட்டரையர் தலையை அசைத்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கிறுகிறுத்தது. நந்தினியை எதிர்த்துப் பேசவும் அவரால் இயலவில்லை.

கந்தன்மாறன் சென்ற பிறகு நந்தினி, பழுவேட்டரையர் மீது தன் காந்தக் கண்களைச் செலுத்தி, கொஞ்சம் கிளியின் குரலில், "நாதா; என்னிடம் தங்களுடைய நம்பிக்கை குன்றிவிட்டதாகத் தோன்றுகிறது! என் மைத்துனருடைய துர்ப்போதனை ஜயித்துவிட்டதுபோல் காண்கிறது!" என்றாள்.

"ஒருநாளுமில்லை நந்தினி! என் கையில் பிடித்த வேலிலும், அரையில் சொருகிய வாளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்தாலும் உன்னிடம் நம்பிக்கை குறையாது. வீர சொர்க்கத்தில் நான் நம்பிக்கை இழந்தாலும் உன் வார்த்தையில் நான் நம்பிக்கை இழக்கமாட்டேன்!" என்றார்.

"இது உண்மையானால் அந்தச் சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு என்னிடம் அவ்வளவு கேள்வி கேட்டீர்களே, ஏன்? எனக்கு அவமானமாயிருந்தது!" என்று நந்தினி கூறியதுபோது, அவள் கண்களில் கண்ணீர் பெருகத் தொடங்கியது.

பழுவேட்டரையர் துடிதுடித்துப் போனார். "வேண்டாம், என் கண்ணே! இப்படி! என்னைத் தண்டிக்கவேண்டாம்!" என்று கூறி, நந்தினியின் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துச் சமாதானம் செய்தார்.

"ஆயினும் உன்னுடைய காரியங்கள் சில எனக்கு அர்த்தமாகவில்லை. என்ன, ஏது, எதற்காக என்று கேட்க எனக்கு உரிமை இல்லையா?" என்றார்.

"கேட்பதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு. சொல்வதற்கும் எனக்கு உரிமையுண்டு. யார் இல்லை என்றார்கள்? அன்னியர்கள் முன்னால் கேட்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். என்ன வேண்டுமோ இப்போது கேளுங்கள்!" என்றாள்.

"ஆதித்த கரிகாலனுக்கு நீ எதற்காக ஓலை கொடுத்து அனுப்புகிறாய்? கடம்பூர் மாளிகைக்கு எதற்காக அவனை அழைக்கச் சொல்கிறாய்? அவன் அல்லவா நம்முடைய யோசனை நிறைவேறுவதற்கு முதல் விரோதி?" என்றார் பழுவேட்டரையர்.

"இல்லை, இல்லை! ஆதித்த கரிகாலர் நம் முதல் விரோதி இல்லை. அந்தப் பழையாறைப் பெண் பாம்புதான் நம் முதல் விரோதி. அவளை எதற்காக நம் அரண்மனைக்கு நான் அழைத்தேன்? அந்தக் காரணத்துக்காகவே தான் ஆதித்த கரிகாலனைக் கடம்பூருக்கு அழைக்கச் சொல்கிறேன். நாதா! நான் அடிக்கடி சொல்லி வந்திருப்பதை இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இளைய பிராட்டி குந்தவை தன் மனத்திற்குள் ஏதோ ஒரு தனி யோசனை வைத்திருக்கிறாள் என்று சொல்லி வந்தேன் அல்லவா? அது என்னவென்று இப்போது கண்டுபிடித்து விட்டேன். மற்ற எல்லாரையும் விலக்கிவிட்டு, அவளுடைய இளைய சகோதரன் அருள்மொழிவர்மனைத் தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க அவள் தீர்மானித்திருக்கிறாள். அவளுடைய சூழ்ச்சிக்கு எதிர் சூழ்ச்சி செய்து அவளுடைய நோக்கம் நிறைவேறாமல் செய்ய வேண்டும். காஞ்சிக்கு நான் ஓலை அனுப்பியதன் காரணம் இப்போது தெரிகிறதல்லவா?" என்று நந்தினி கேட்டு விட்டுப் பழுவேட்டரையரைப் பார்த்த பார்வை அவருடைய நெஞ்சை ஊடுருவி, அவர் அறிவை நிலை குலையச் செய்தது.

ஒன்றும் தெரியாவிட்டாலும், "ஆம் தெரிகிறது!" என்று குழறினார் அந்த வீரக்கிழவர்.

"நாதா! தாங்களும் தங்கள் முன்னோர்களும் புரிந்த அரும்பெரும் வீரச் செயல்களினாலேயே இன்று இந்தச் சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு பல்கிப் பரவியிருக்கிறது. இந்தத் தஞ்சைபுரியின் தங்கச் சிம்மாசனத்தில் ஒரு நாளாவது தங்களை ஏற்றி வைத்துப் பார்க்கும் வரையில் இந்தப் பாவியின் கண்கள் இரவிலும், பகலிலும் தூங்கப் போவதில்லை! அதற்குள்ளே எந்த விதத்திலாவது தங்களுக்கு என் பேரில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் தங்கள் உடைவாளினால் என்னை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்று விடுங்கள்!" என்றாள் நந்தினி.

"என் கண்ணே! இத்தகைய கர்ண கடூரமான மொழிகளைச் சொல்லி என்னைச் சித்திரவதை செய்யாதே!" என்றார் பெரிய பழுவேட்டரையர்.






Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 24. அனலில் இட்ட மெழுகு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 51. மாமல்லபுரம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. ஆழ்வார்க்கடியான் நம்பி
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: