BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  29. வானதியின் மாறுதல் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. வானதியின் மாறுதல்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  29. வானதியின் மாறுதல் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. வானதியின் மாறுதல்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  29. வானதியின் மாறுதல் Icon_minitimeWed May 18, 2011 3:39 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

29. வானதியின் மாறுதல்



குந்தவை வந்தியத்தேவனைச் சிறையிலிருந்து மீட்டு மறுபடியும் பிரயாணம் அனுப்புவதற்காகப் புறப்பட்டபோது, வானதி எதிரே வந்தாள். இளைய பிராட்டியிடம் அடிபணிந்து நின்றாள்.

"என் கண்ணே! உன்னை விட்டுவிட்டு வந்து விட்டேன். இன்னும் கொஞ்சம் முக்கியமான அலுவல் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். சற்று நேரம் தோட்டத்தில் சென்றிரு! ஓடைப்பக்கம் மட்டும் போகாதே" என்றாள்.

"அக்கா! தங்களுக்கு இனி தொந்தரவு கொடுக்கமாட்டேன். கொடும்பாளூருக்குப் போக விரும்புகிறேன், அநுமதி கொடுங்கள்!" என்றாள் வானதி.

"இது என்ன, என் தலையில் நீயுமா இடியைப் போடுகிறாய்? உனக்கு என் பேரில் என்ன கோபம்? உன் பிறந்தகத்தின் மீது திடீரென்று என்ன பாசம்?"

"உங்கள் பேரில் நான் கோபங் கொண்டால் என்னைப் போல் நன்றி கெட்டவள் யாரும் இல்லை. என் பிறந்தகத்தின் பேரில் புதிதாகப் பாசம் ஒன்றும் பிறந்துவிடவும் இல்லை. தாயும் தந்தையும் இல்லாத எனக்குப் பிறந்தகம் என்ன வந்தது? எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள காளி கோவிலுக்குப் பூசைபோடுவதாக என் தாயார் ஒருமுறை வேண்டிக்கொண்டாளாம். அதை நிறைவேற்றுவதற்கு முன் அவள் கண்ணை மூடிவிட்டாள். எனக்கு அடிக்கடி மயக்கம் வருகிறதல்லவா? ஒருவேளை அந்த வேண்டுதலை நிறைவேற்றாததால்தான் இப்படி என்னைப் படுத்துகிறதோ என்னமோ?"

"அதற்காக நீ அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை; நானே சொல்லி அனுப்பி அந்த வேண்டுதலை நிறைவேற்றச் சொல்கிறேன்."

"அது மட்டுமல்ல அக்கா! என் பெரிய தகப்பனார் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் தஞ்சையைத் தாண்டிப் பழையாறைக்கு வரமாட்டார். அவர் வரும்போது நான் கொடும்பாளூரிலிருக்க விரும்புகிறேன். அவரிடம் இலங்கையில் நடந்தவற்றையெல்லாம் நேரில் கேட்க ஆசைப்படுகிறேன்!"

"இலங்கையில் நடந்தவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் உனக்கு என்ன அவ்வளவு ஆசை?"

"அது என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? என் தந்தை இலங்கைப் போரில் வீர சொர்க்கம் அடைந்ததை மறந்து விட்டீர்களா...?"

"மறக்கவில்லை. அந்தப் பழி இப்போது நீங்கிவிட்டது..."

"முழுவதும் நீங்கியதாக எனக்குத் தோன்றவில்லை. யுத்தம் முடிவதற்குள்ளே அவசரப் பட்டுக்கொண்டு பெரிய வேளார் திரும்புகிறார்."

"அவரை மறுபடி இலங்கைக்குப் போய்ப் போர் நடத்தும்படி சொல்லப் போகிறாயா? அதற்காகவா கொடும்பாளூர் போக வேண்டும் என்கிறாய்?"

"அவ்வளவு பெரிய விஷயங்களைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார்? நடந்ததைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்..."

"ஆகா! உன் மனது இப்போது எனக்குத் தெரிகிறது. பொன்னியின் செல்வன் இலங்கைப் போரில் புரிந்த வீரச் செயல்களைப்பற்றி உன் பெரிய தகப்பனாரிடம் கேட்க விரும்புகிறாய், இல்லையா?"

"அது ஒரு தவறா, அக்கா?"

"அது தவறில்லை, ஆனால் இத்தகைய சமயத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே, அதுதான் பெரிய தவறு!"

"அக்கா! நானா தங்களைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன்? என்னைப்போல் தங்களுக்கு எத்தனையோ தோழிகள், தங்கள் கருத்தை அறிந்து காரியத்தில் நிறைவேற்ற எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..."

"நீ கூட இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாயா, வானதி? என் தம்பியைப் பற்றி செய்தி கேட்டு உன்மனம் பேதலித்து விட்டது போலிருக்கிறது. அந்தச் செய்தியைப் பற்றி நீ அதிகமாய்க் கவலைப்பட வேண்டாம்...

"தங்கள் தம்பியைப் பற்றி தங்களுக்கு இல்லாத கவலை எனக்கு என்ன இருக்க முடியும், அக்கா!"

"உண்மையைச் சொல்! ஓடையில் நீயாக வேண்டுமென்று விழுந்தாயா? மயக்கம் வந்து விழுந்தாயா?"

"வேண்டுமென்று எதற்காக விழ வேண்டும்? மயக்கம் வந்து தான் விழுந்தேன் தாங்களும் அந்த வாணர் குலத்து வீரருமாக என்னைக் காப்பாற்றினீர்கள்."

"காப்பாற்றியதற்கு நன்றி உள்ளவளாகத் தோன்றவில்லையே?"

"இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல; ஏழேழு ஜன்மத்திலும் நன்றியுள்ளவளாயிருப்பேன்."

"இந்த ஜனமம் இத்துடன் முடிந்து போய்விட்டது போல் பேசுகிறாயே? நான் சொல்கிறேன் கேள், வானதி! வீணாக மனதை வருத்தப்படுத்திக் கொள்ளாதே! அருள்மொழி வர்மனுக்கு அபாயம் எதுவும் வந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. சற்றுமுன் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்த ஜனங்களுக்குச் சொன்னதையே உனக்கும் சொல்லுகிறேன். அன்றொரு நாள் காவிரித்தாய் என் தம்பியைக் காப்பாற்றினாள். அதுபோல் சமுத்திரராஜனும் அவனைக் காப்பாற்றியிருக்க வேண்டும். சீக்கிரத்தில் நல்ல செய்தியை நாம் கேள்விப்படுவோம்."

"எந்த ஆதாரத்தைக் கொண்டு இவ்வளவு உறுதியாகத் தைரியம் சொல்கிறீர்கள் அக்கா?"

"என் மனத்திற்குள் ஏதோ ஒன்று சொல்கிறது. என் அருமைத் தம்பிக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அது என் உள்மனத்திற்குத் தெரிந்திருக்கும். நான் இப்படிச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்..."

"மனது சொல்வதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை அக்கா! உள் மனத்திலும் நம்பிக்கை இல்லை! வெளி மனத்திலும் நம்பிக்கை இல்லை!"

"அது எப்படி நீ மட்டும் அவ்வளவு தீர்மானமாகச் சொல்லுகிறாய்?"

"என் உள் மனத்திலும், வெளி மனத்திலும் சில நாளாக ஒரு பிரமை தோன்றிக் கொண்டிருந்தது. தூக்கத்தில், கனவிலும் தோன்றியது. விழித்துக் கொண்டிருக்கும் போதும் சில சமயம் அப்படிப் பிரமை உண்டாயிற்று."

"அது என்ன வானதி?"

"தண்ணீரில் தங்கள் தம்பியின் முகம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. என்னை அழைப்பது போலவும் இருந்தது. கனவிலும் இந்தப் பிரமை அடிக்கடி ஏற்பட்டு வந்தது."

"அதை ஏன் பிரமை என்று சொல்லுகிறாய்? நமக்கு வந்திருக்கும் செய்திக்கும் உன்னுடைய மனத்தோற்றத்துக்கும் பொருத்தமாக இருக்கிறதே?"

"இன்னும் முழுவதும் கேட்டால் அது எவ்வளவு பைத்தியக்காரப் பிரமை என்பதை அறிவீர்கள். ஓடையில் மயக்கம் போட்டு விழுந்தேனல்லவா? அப்போது நான் நாகலோகத்துக்கே போய் விட்டேன். அங்கே ஒரு திருமண வைபவம் நடந்தது..."

"யாருக்கும் யாருக்கும் திருமணம்?"

"அதைச் சொல்ல விருப்பமில்லை, அக்கா! மொத்தத்தில் மனத்தில் தோன்றுவதிலும், கனவில் தோன்றுவதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும்தான் இனிமேல் நம்புவது என்று தீர்மானித்திருக்கிறேன்..."

"வானதி! நீ சொல்வது முற்றும் தவறு. கண்ணால் காண்பதும், காதினால் கேட்பதும் சில சமயம் பொய்யாக இருக்கும். மனத்திற்குள் தோன்றுவதுதான் நிச்சயம் உண்மையாயிருக்கும். கதைகள், காவியங்களிலிருந்து இதற்கு எத்தனையோ உதாரணங்கள் நான் உனக்குச் சொல்லுவேன்..."

"பிறகு ஒரு சமயம் கேட்டுக் கொள்கிறேன், அக்கா! இப்போது எனக்கு விடை கொடுங்கள்!" என்றாள் வானதி.

இளவரசி குந்தவைக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு தைரியமும், திடீரென்று எப்படி ஏற்பட்டன என்று ஆச்சரியப்பட்டாள்.

"வானதி! இது என்ன அவசரம்? அப்படியே நீ கட்டாயம் ஊருக்குப் போக வேண்டுமென்றாலும், சிலநாள் கழித்துப் புறப்படக்கூடாதா? இப்போது நாடெங்கும் ஒரே குழப்பமாய் இருக்குமே? உன்னைத் தக்க பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டாமா?"

"எனக்கு என்ன பயம், அக்கா! கொடும்பாளூரிலிருந்து என்னை அழைத்து வந்த பல்லக்குத் தூக்கிகளும் காவல் வீரர் நால்வரும் ஒரு வேலையுமின்றி இத்தனை காலம் இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள்..."

"அழகாயிருக்கிறது! உன்னை அப்படி நான் அனுப்பி விடுவேன் என்றா நினைக்கிறாய்?"

"உங்களை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன் அக்கா! எனக்குப் பயம் ஒன்றுமில்லை. கொடும்பாளூர் வானதியை இந்த நாட்டில் யாரும் எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள். அதிலும் இளையபிராட்டியின் அன்புக்குகந்த தோழி நான் என்பது யாருக்குத் தெரியாது? ஒரே ஒரு காரியத்துக்கு மட்டும் அனுமதி கொடுங்கள். போகும்போது அந்தக் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்கு இன்னொரு தடவை போய் அவரைச் சில விஷயங்கள் கேட்க விரும்புகிறேன். அவ்விதம் செய்யலாமா?"

"அவரிடம் எனக்குக்கூட வரவேண்டும் என்று ஆசைதான். ஆனால் நீ இவ்வளவு அவசரப்படுகிறாயே?"

"இல்லை, அக்கா! இந்தத் தடவை அவரை நான் தனியாகப் பார்த்து ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்..."

குந்தவை மூக்கின்மீது விரலை வைத்து அதிசயப்பட்டாள்.

இந்தப் பெண் ஒரு நாளில், ஒரு ஜாம நேரத்தில், இவ்வளவு பிடிவாதக்காரியாக மாறிவிட்டது எப்படி என்று இளவரசிக்குப் புரியவேயில்லை. அவள் பிரயாணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தாள்.

"சரி, வானதி! உன் விருப்பம் போலச் செய்யலாம். நீ பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தம் செய். அதற்குள் சிறையிலிருக்கும் அந்த வாணர் குலத்து வீரகுமாரனை விடுதலை செய்துவிட்டு வருகிறேன்" என்றாள்





Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. வானதியின் மாறுதல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. வானதியின் ஜாலம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 53. வானதியின் யோசனை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 73. வானதியின் திருட்டுத்தனம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 26. வானதியின் பிரவேசம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 14. வானதியின் சபதம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: