BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  7. மக்கள் குதூகலம் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. மக்கள் குதூகலம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  7. மக்கள் குதூகலம் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. மக்கள் குதூகலம்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  7. மக்கள் குதூகலம் Icon_minitimeWed Jun 01, 2011 3:51 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்

7. மக்கள் குதூகலம்



ஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே "பெண்ணே! என்ன உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?" என்றான்.

"எனக்கு ஒன்றும் பைத்தியமில்லை. உனக்குப் பைத்தியம், உன் அப்பனுக்குப் பைத்தியம், உன் பாட்டனுக்குப் பைத்தியம். உனக்கு இவரை அடையாளம் தெரியவில்லை? ஈழத்தை வெற்றி கொண்டு, மன்னன் மகிந்தனை மலை நாட்டுக்குத் துரத்திய வீரரை உனக்கு இன்னாரென்று தெரியவில்லையா? சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, சோழநாட்டு மக்களின் கண்ணின் மணியானவரை, காவேரித்தாய் காப்பாற்றிக் கொடுத்த தவப் புதல்வரை உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா? அப்படியானால், இவரோடு எதற்காக நீ புறப்பட்டாய். எங்கே போகப் புறப்பட்டாய்?" என்றாள் ராக்கம்மாள்.

இளவரசர் இப்போது குறுக்கிட்டு, "பெண்ணே! நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்! உன்னோடு அழைத்துக்கொண்டு போ! வீண் கூச்சல் போடாதே!" என்றார்.

இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் பார்க்கலானார்கள்.

அப்போது ராக்கம்மாள் இன்னும் உரத்த குரலில், "ஆ! தெய்வமே! இது என்ன பொன்னியின் செல்வருக்குச் சித்தப் பிரமையா? கடலில் மூழ்கிய போது நினைவை இழந்து விட்டீர்களா? அல்லது அந்தப் பாவி புத்த பிக்ஷுக்கள் இப்படித் தங்களை மந்திரம் போட்டு வேறொருவர் என்று எண்ணச் செய்து விட்டார்களா? அல்லது - ஐயையோ! அப்படியும் இருக்குமா? தாங்கள் இறந்துபோய் தங்கள் திருமேனியில் எவனேனும் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்தவன் வந்து புகுந்திருக்கிறானா? அப்படியெல்லாம் இருக்க முடியாது! கோமகனே! நன்றாக யோசித்துப் பாருங்கள்! தாங்கள் வியாபாரி அல்ல. சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருப்புதல்வர். உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் பிறந்தவர். சந்தேகமிருந்தால் தங்கள் உள்ளங்கைகளைக் கவனமாகப் பாருங்கள். சங்கு சக்கர ரேகைகள் இருக்கும்!" என்று கத்தினாள்.

உடனே இளவரசர் அருள்மொழிவர்மர் தம் இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டார். "பெண்ணே! நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க மாட்டாயா!" என்று சொல்லிவிட்டு, முருகய்யனைப் பார்த்து, "இது என்ன தொல்லை? இவளுடைய கூச்சலை நிறுத்த உன்னால் முடியாதா?" என்று கேட்டார்.

முருகய்யன் தன் மனைவியின் அருகில் வந்து காதோடு, "ராக்கம்மா! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்! பேசாமலிரு! இளவரசர் யாருக்கும் தெரியாமல் வியாபாரி வேஷத்தில் தஞ்சாவூர் போக விரும்புகிறார்!" என்றான்.

"அடபாவி மகனே! இதை முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா? புத்த மடத்தில் இளவரசர் இருக்கவே மாட்டார் என்று சொன்னாயே? அந்தப் புத்தியோடு தான் இப்போதும் இருந்திருக்கிறாய்! ஐயையோ! என்ன குற்றம் செய்துவிட்டேன்! ஆசை மிகுதியால் உளறிவிட்டேனே! பாவிப் பழுவேட்டரையர்கள் தங்களைச் சிறைப்படுத்திப் பழிவாங்கச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! அது தெரிந்திருந்தும் இப்படித் தங்களை பகிரங்கப்படுத்தி விட்டேனே! இளவரசே! ஆனாலும் நீங்கள் அஞ்சவேண்டாம். பழுவேட்டரையர்கள் தங்கள் திருமேனியில் ஓர் அணுவுக்கும் தீங்கு செய்யமுடியாது. என்னைப் போலும், என் கணவனைப் போலும் லட்ச லட்சம் பேர்கள் தங்கள் கட்சியில் நின்று தங்களைப் பாதுகாக்க ஆயத்தமாயிருக்கிறார்கள்!" என்றாள். உடனே தன்னைச் சுற்றிலும் நின்ற பெருங் கூட்டத்தைப் பார்த்து, "நான் சொன்னதை நீங்கள் எல்லாரும் ஆமோதிக்கிறீர்கள் அல்லவா? உங்களில் யாரேனும் பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்டா? அப்படியானால், அவர்கள் இப்படி முன்னால் வாருங்கள்! என்னை முதலில் கொன்றுவிட்டுப் பிறகு இளவரசருக்குத் தீங்கு செய்ய எண்ணுங்கள்!" என்று அலறினாள்.

அதுவரையில் அடங்காத வியப்புடன் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள், "பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க!" என்று ஒரு பெரிய கோஷத்தைக் கிளப்பினார்கள். அதைக் கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே கூடினார்கள். அப்படி வந்தவர்களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார். அவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து "கோமகனே! தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோ ம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வெளிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்!" என்று கூறினார்.

இளவரசர் இனிமேல் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்ப்பதில் பயனில்லை என்று கண்டு கொண்டார். "ஐயா! தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள்!" என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் கிளம்பியது. "கூடாது கூடாது! இளவரசர் இங்கே ஒரு நாளாவது தங்கி ஏழைகளாகிய எங்களின் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்" என்று உரக்கச் சத்தமிட்டுக் கூறியது அக்குரல்.

அதைப் பின்பற்றி இன்னும் ஆயிரமாயிரம் குரல்கள் "கூடவே கூடாது! இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும்!" என்று கூச்சலிட்டன.

எண் பேராயத்தின் தலைவர் அப்போது "கோமகனே! என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா? எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வேண்டும். புத்த பிக்ஷுக்கள் செய்த பாக்கியம் நாங்கள் செய்யவில்லையா? நேற்று இந்நகர மாந்தர் தங்களைப் புத்த பிக்ஷுக்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டுச் சூடாமணி விஹாரத்தையே தகர்த்து மண்ணோடு மண்ணாக்கிவிடப் பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் புயல் வந்து விட்டது! நாங்கள் செய்யத் தவறியதைப் புயல் செய்துவிட்டது. விஹாரம் இடிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது!" என்று சொன்னார்.

அதைக் கேட்ட இளவரசர் "ஐயா! தாங்கள் புத்த பிக்ஷுக்கள் மீது குற்றம் சுமத்தியது சரியல்ல. என்னுடைய வேண்டுகோளுக்காகவே பிக்ஷுக்கள் புத்த விஹாரத்தில் என்னை வைத்திருந்தார்கள். நோய் வாய்ப்பட்டு உயிருக்கு மன்றாடிய என்னை யமனுடைய பாசக் கயிற்றிலிருந்து காப்பாற்றினார்கள். சூடாமணி விஹாரம் விழுந்து விட்டது என்று கேட்டு என் மனம் வேதனைப்படுகிறது. அதைத் திருப்பிக் கட்டிக் கொடுப்பது என்னுடைய கடமை!" என்றார்.

"ஆகா! இதெல்லாம் முன்னரே எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே! இப்போது தெரிந்துவிட்டபடியால் சூடாமணி விஹாரத்தை நாங்களே புதுப்பித்துக் கட்டிக் கொடுத்து விடுவோம். இளவரசே! தாங்கள் ஒருவேளை எங்கள் விருந்தாளியாக மட்டும் இருந்துவிட்டுப் போக வேண்டும்!" என்றார் எண்பேராயத்தின் தலைவர்.

"ஆமாம், ஆமாம்!" என்று பதினாயிரக்கணக்கான மக்களின் குரல்கள் எதிரொலி செய்தன.

"இளவரசே! இங்கே தங்குவதினால் ஏற்படும் தாமதத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். தாங்களோ கால் நடையாகப் புறப்பட்டிருக்கிறீர்கள். புயல் மழை காரணமாகச் சோழ நாட்டுச் சாலைகள் எல்லாம் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நதிகளிலெல்லாம் பூரண வெள்ளம் போகிறது. கால்நடையாகச் சென்று எப்போது போய்ச் சேர்வீர்கள்? தங்களை யானைமீது வைத்து ஊர்வலமாக அனுப்புகிறோம். தங்களுடன் நாங்கள் அனைவரும் வந்து தஞ்சாவூருக்கே கொண்டுவிட்டு வருகிறோம்" என்றார் எண்பேராயத்தின் தலைவர். அவர் பேசிக் கொண்டிருக்கையில் ஜனங்களின் கூட்டம் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

இளவரசர் யோசித்தார் 'காரியம் என்னவோ கெட்டுப் போய் விட்டது; இரகசியம் வெளியாகிவிட்டது. ராக்கம்மாள் மூடத்தனமாகக் கூச்சலிட்டு வெளிப்படுத்திவிட்டாள். மூடத்தனத்தினால் வெளிப்படுத்தினாளா?... அல்லது வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமா? எப்படியிருந்தாலும் இந்த நகர மக்களின் அன்பை மீறிக்கொண்டு உடனே புறப்படுவது இயலாத காரியம். அதனால் இவர்கள் மனக்கஷ்டம் அடைவார்கள். அதோடு, உத்தேசத்திலுள்ள நோக்கம் மேலும் தவறினாலும் தவறிவிடும். மத்தியானம் வரையிலேனும் இருந்து இவர்களைச் சமாதானப்படுத்திவிட்டுத்தான் போகவேண்டும். புயலினால் கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டுப் போக வசதியாகவும் இருக்கும். ஆகா! நான் இச்சமயம் என்னை வெளிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பம் விளையும் என்று இளைய பிராட்டி குந்தவை கூறினாரே? அது எவ்வளவு உண்மையான வார்த்தை? என் தமக்கையைப் போன்ற அறிவாளி இந்த உலகிலேயே யாரும் இல்லை தான்! தஞ்சைச் சிம்மாதன உரிமையைப் பற்றிப் பேசுகிறார்களே? உண்மையில், குந்தவை தேவியை அல்லவா சிம்மாதனத்தில் அமர்த்த வேண்டும்?...'

இவ்வாறு பொன்னியின் செல்வர் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஜனக்கூட்டம் மேலும் அதிகமாகி வருவதைக் கண்டார். அவர்களுடைய குதூகலமும் வளர்ந்து வருவதை அறிந்தார். புயலின் கொடுமைகளையும், புயலினால் விளைந்த சேதங்களையும் மக்கள் அடியோடு மறந்து விட்டதாகத் தோன்றியது. எங்கிருந்தோ, யானைகள், குதிரைகள், சிவிகைகள், திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன.

அரைப் பகல் நேரமாவது இங்கே தங்கிவிட்டுத்தான் புறப்பட வேண்டும் என்று இளவரசர் முடிவு செய்தார். எண்பேராயத்தின் தலைவரைப் பார்த்து, "ஐயா! இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா?" என்றார்.

இளவரசர் தங்கிச் செல்லச் சம்மதித்து விட்டார் என்ற செய்தி பரவியதும் ஜனக்கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து விட்டது. குதூகலத்தை வெளிப்படுத்தும் வழிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. ஆங்காங்கே வீதிகளில் கத்தி விளையாட்டு, கழி விளையாட்டு, குரவைக் கூத்து முதலியவை ஆரம்பமாயின. ஜனங்களையும் அவர்களுடைய குதூகல விளையாட்டுக்களையும் கடந்துகொண்டு நாகைப்பட்டினத்துச் சோழ மாளிகைக்குச் செல்வது பெரிதும் கஷ்டமாயிற்று. எப்படியோ கடைசியில் போய்ச் சேர்ந்தார்கள்.

மாளிகைக்குள் இளவரசர் சிறிது நேரம் கூடத் தங்கி இளைப்பாற முடியவில்லை. ஏனெனில், அவர் வெளிப்பட்ட செய்தி அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கெல்லாம் பரவிவிட்டது. ஜனங்கள் திரள் திரளாக வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். இளவரசரைப் பார்க்க வேண்டும் என்ற தங்கள் ஆவலைத் தெரியப்படுத்திக் கொண்டார்கள்.

இளவரசரும் அடிக்கடி வெளியில் வந்து ஜனக்கூட்டத்தினிடையே சென்று அவர்களுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டார். புயலினால் விளைந்த கஷ்ட நஷ்டங்களைப் பற்றி அனுதாபத்துடன் விசாரித்தார். தாம் தஞ்சாவூருக்குப் போனவுடனே ஜனங்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அதைப்பற்றி ஜனங்கள் அவ்வளவு உற்சாகமடையவில்லை என்பதையும் கண்டு கொண்டார். ஜனங்கள் ஒருவரோடொருவர் "பழுவேட்டரையர்களின் அதிகாரத்துக்கு முடிவு ஏற்படுமா?" என்று பேசிக்கொண்டதும் அவர் காதில் விழுந்தது. சக்கரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும், அடுத்தபடி சிம்மாதனத்துக்கு வரக்கூடியவரைப் பற்றியும் அடக்கமான குரலில், ஆனால் இளவரசர் காதில் விழும்படியாகப் பலரும் பேசினார்கள்.

இதற்கிடையில் நாகைப்பட்டினம் நகரின் ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். இளவரசருக்கு விருந்து அளிக்கப் பெருந்தர ஏற்பாடுகள் நடந்தன. இளவரசரைப் பார்க்க வந்த ஜனத்திரளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. புயலினால் நஷ்டமானது போக நகரில் எஞ்சியிருந்த தானியங்கள் எல்லாம் வந்து குவிந்தன. கறிகாய்களைப் பற்றியோ கவலையே இல்லை. விழுந்த வாழை மரங்களின் வாழைக்காய்க் குலைகளையும், விழுந்த தென்னை மரங்களின் தென்னை குலைகளையும் கொண்டு ஒரு லட்சம் பேருக்கு விருந்து தயாரித்து விடலாமே?

விருந்துகள் முடிந்து, புறப்பட வேண்டிய சமயம் நெருங்கிற்று. இளவரசர் சோழ மாளிகையின் மேன்மாடத்து முகப்பில் வந்து கைகூப்பிக் கொண்டு நின்றார். வீதியில் ஒரு பெரிய கோலாகலமான ஊர்வலம் புறப்படுவதற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்தன. இளவரசர் ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று வந்து நின்றது. முன்னாலும் பின்னாலும் குதிரைகள், ரிஷபங்கள் முதலியவை நின்றன. திருச்சின்னங்களும், கொடிகளும் ஏந்தியவர்களும், பலவித வாத்தியக்காரர்களும் அணிவகுத்து நின்றார்கள். மக்களோ நேற்று மாலை பொங்கி எழுந்த கடலைப்போல் ஆரவாரித்துக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நின்றார்கள்.

இளவரசர் வெளித் தோற்றத்துக்குப் புன்னகை பூத்த முகத்துடன் பொலிந்தார். அவர் உள்ளத்திலோ பெருங்கவலை குடிகொண்டிருந்தது. பெற்ற தாயைக் காட்டிலும் பதின்மடங்கு அவருடைய அன்பைக் கவர்ந்திருந்த ஈழத்து ராணியின் கதியைப் பற்றி அறிந்து கொள்ள அவர் உள்ளம் துடி துடித்தது. முருகய்யன் மனைவியிடம் இன்னும் சிறிது விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அவளோ ஜனக் கூட்டத்தில் மறைந்துவிட்டாள். முருகய்யன் மட்டும் முண்டியடித்துக் கொண்டு இளவரசரைத் தொடர்ந்து சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவன் மனைவி ராக்கம்மாள் என்ன ஆனாள் என்பது அவனுக்கும் தெரியவில்லை.

மற்றொரு பக்கத்தில் இளவரசரை வேறொரு கவலை பற்றிக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு விரோதமாகத்தான் இராஜ்யத்தைக் கைப்பற்ற விரும்புவதாய் முன்னமேயே பழுவேட்டரையர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த ஜனங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக அவர்கள் கூற்று உண்மை என்று ஏற்பட்டு விடலாம் அல்லவா?

எப்படியாவது இந்த நகர மாந்தர்களின் அன்புச் சுழலிலிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இளவரசருக்குத் தோன்றிவிட்டது. இந்த நிலைமையில் அவர் சற்றும் எதிர்பாராத இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஜனங்களிடம் விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் இளவரசர் கும்பிட்டுக் கொண்டு நின்ற போது, ஜனக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஐம்பெருங் குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து நின்றார்கள். முன்னேற்பாட்டின்படி நிகழ்ந்தது போல், சில நிமிட நேரம் பேரிகை முரசு, எக்காளம் முதலிய நூறு நூறு வாத்தியங்கள் கடலொலியையும் அடக்கிக்கொண்டு ஒலித்தன. சட்டென்று அவ்வளவு வாத்தியங்களும் நின்றபோது, அப்பெருங்கூட்டத்தின் நிசப்தம் நிலவியது. அச்சமயத்தில் நகர தலைவர்களில் முதியவராகக் காணப்பட்ட ஒருவர் மாளிகை முன் வாசலில் இருந்த நிலா மேடை மீது ஏறி நின்று கொண்டு கம்பீரமான குரலில் கூறினார்.

"பொன்னியின் செல்வ! ஒரு விண்ணப்பம். நாகை நகரையும் அக்கம் பக்கத்துக் கிராமங்களையும் சேர்ந்த ஜனங்களின் சார்பாக ஒரு கோரிக்கை. சக்கரவர்த்தியின் உடல் நிலையைப் பற்றி நாங்கள் அனைவரும் கவலை கொண்டிருக்கிறோம். அதைப் போலவே நாங்கள் கேள்விப்படும் இன்னொரு செய்தியும் எங்களுக்குக் கவலை தருகிறது. பழுவேட்டரையர்களும், பல சிற்றரசர்களும் சேர்ந்து சக்கரவர்த்திக்குப் பிறகு மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்டத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். மதுராந்தகத்தேவர் இன்று வரையில் போர்க்களம் சென்று அறியாதவர். அவர் பட்டத்துக்கு வந்தால் உண்மையில் பழுவேட்டரையர்கள்தான் இராஜ்யம் ஆளுவார்கள். சிற்றரசர்கள் வைத்ததே சட்டமாயிருக்கும். இளவரசர் ஆதித்த கரிகாலர் மூன்று ஆண்டு காலமாகச் சோழ நாட்டுக்கு வரவேயில்லை. அதற்கு ஏதோதோ காரணங்கள் சொல்கிறார்கள். அவருக்கு மகுடம் சூட்டிக்கொள்ள விருப்பமில்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் அடுத்தபடி நியாயமாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார்? சோழ நாடு தவம் செய்து பெற்ற புதல்வரும், காவேரித் தாய் காப்பாற்றித் கொடுத்த செல்வரும், ஈழம் வென்ற வீராதி வீரருமான தாங்கள் தான்... மக்களே! நான் கூறியது உங்களுக்கெல்லாம் சம்மதமான காரியமா?" என்று அந்த முதியவர் சுற்றிலும் நின்ற ஜனத்திரளைப் பார்த்துக் கேட்கவும், எட்டுத் திசையும் நடுங்கும்படியான பேரொலி அக்கூட்டத்திலிருந்து எழுந்தது; "ஆம், ஆம்; எங்கள் கருத்தும் அதுவே!" என்று பதினாயிரம் குரல்கள் கூறின. அதைத் தொடர்ந்து கோஷித்தன. இவ்வளவு கோஷங்களும் சேர்ந்து உருத்தெரியாத ஒரு பெரும் இரைச்சலாகக் கேட்டது.

மறுமொழி சொல்வதற்காக இளவரசரின் உதடுகள் அசையத் தொடங்கியது, ஏதோ மந்திர சக்தியினால் கட்டுண்டு அடங்கியது போல் அந்தப் பேரிரைச்சல் அடங்கியது.

"ஐயா! நீங்கள் எல்லாரும் என்னிடம் கொண்டிருக்கும் அன்பைக் கண்டு ஆனந்தப்படுகிறேன். ஆனால் அந்த அன்பை நீங்கள் காட்டும் விதம் முறையாக இல்லையே? என் அருமைத் தந்தை - சுந்தர சோழ சக்கரவர்த்தி இன்னும் ஜீவிய வந்தராக இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. 'சக்கரவர்த்தி நீடூழி வாழ வேண்டும்' என்று என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்திக்க வேண்டும். சக்கரவர்த்தி ஜீவியவந்தராக இருக்கும்போது அவருக்குப் பிறகு பட்டத்துக்கு யார் என்பதைப் பற்றி யோசிப்பது ஏன்?"

நகரத் தலைவர்களின் முதல் தலைவரான முதியவர் இளவரசரின் இக்கேள்விக்குச் சரியான விடை வைத்திருக்கிறார். "பொன்னியின் செல்வ! சோழ நாட்டில் ஒரு மன்னர் உயிரோடிருக்கும் போதே, அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் என்பதை நிர்ணயித்து விடுவது தொன்று தொட்டு வந்திருக்கும் வழக்கம். மதுரை கொண்ட வீரரும், தில்லையம்பலத்துக் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்தவருமான மகா பராந்தக சக்கரவர்த்தி, தம் காலத்திலேயே தமக்குப் பின் பட்டத்துக்கு வர வேண்டியவர்களை முறைப்படுத்தி விடவில்லையா? அதன்படி தானே தங்கள் தந்தை சிம்மாசனம் ஏறினார்?" என்றார்.

"ஆம், ஆம்! ஆகையால், இப்போதும் அடுத்த பட்டத்துக்கு உரியவரைப் பற்றிச் சக்கரவர்த்திதானே தீர்மானிக்க வேண்டும்? நீங்களும், நானும் அதைப் பற்றி யோசிப்பதும், பேசுவதும் முறை அல்லவே!" என்றார் இளவரசர்.

"பொன்னியின் செல்வ! சக்கரவர்த்திக்குத்தான் அந்த உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறோம். சக்கரவர்த்தி சுயேச்சையாக முடிவு செய்யக் கூடியவராயிருந்தால் அது சரியாகும். தற்போது சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் தஞ்சைக் கோட்டைக்குள் சிறைப்படுத்தி அல்லவோ வைத்திருக்கிறார்கள். இளவரசே! இன்னும் சொல்லப் போனால், சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பதைப் பற்றியே எங்களில் பலருக்குச் சந்தேகமாயிருக்கிறது. தங்களுடன் தொடர்ந்து தஞ்சைக்கு வந்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாகச் சக்கரவர்த்தி நல்லபடியாக இருந்தால், அவரிடம் எங்கள் விருப்பதைத் தெரிவித்துக் கொள்வோம். அவருக்குப் பிற்பாடு தாங்கள்தான் சிங்காதனம் ஏறவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்வோம். பிறகு, சக்கரவர்த்தி முடிவு செய்கிறபடி செய்யட்டும்!"

பெரியவர் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறாரா என்பதைப் பற்றிச் சந்தேகப்பட்டுக் கூறிய வார்த்தைகள் இளவரசரின் உள்ளத்தில் ஒரு பெரும் திகிலை உண்டாக்கின. இத்தனை நாளும் அவர் அறிந்திராத வேதனையும் பீதியும் ஏற்பட்டன. சக்கரவர்த்தியின் உயிருக்கு ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது போலவும் அதைத் தடுக்கமுடியாத தூரத்தில் தாம் இருப்பது போலவும் ஒரு பிரமை உண்டாயிற்று. ஈழத்து ராணியை யாரோ மூர்க்கர்கள் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போன விவரமும் நினைவுக்கு வந்தது. இனி ஒரு கணமும் தாமதியாமல் தஞ்சை போய்ச் சேர வேண்டும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில வினாடி நேரத்தில் இளவரசர் தாம் செய்யவேண்டியது இன்னதென்று தீர்மானித்துக் கொண்டார். இவர்களுடன் வாதமிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை. பிரயாணப்படுவதுதான் தாமதமாகும். இப்போது இவர்கள் பேச்சை ஒப்புக் கொண்டதாகச் சொல்லிப் பிரயாணப்பட்டு விட்டால், வழியில் போகப் போக வேறு உபாயங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

"ஐயா! உங்களுடைய விருப்பத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. சக்கரவர்த்தியைப் பற்றித் தாங்கள் கூறியது அவரைத் தரிசிக்க வேண்டுமென்ற என் கவலையை அதிகரித்து விட்டது. நான் உடனே புறப்பட வேண்டும். நீங்களும் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்பினால் தாராளமாக என்னுடன் வாருங்கள். பட்டத்து உரிமையைப் பற்றிச் சக்கரவர்த்தி என்ன சொல்லுகிறாரோ, அதைக் கேட்டு நாம் அனைவரும் நடந்து கொள்வோம்!" என்றார்.

சிறிது நேரத்துக் கெல்லாம் இளவரசர் யானைமீது ஏறிக் கொண்டு பிரயாணப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய ஒரு மாபெரும் ஊர்வலம் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது. போகப் போக இளவரசருடன் தொடர்ந்த ஊர்வலம் பெரிதாகிக் கொண்டிருந்தது




Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. மக்கள் குதூகலம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 57. மாய மோகினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. நிலவறை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: