BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!! Button10

 

 வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!! Empty
PostSubject: வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!   வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!! Icon_minitimeTue Dec 13, 2011 2:34 am

சில்லறை வர்த்தகத்தில் தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சில்லறை வணிகத்தில் அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை. அப்படி வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்? 2007ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரை அமெரிக்காவில் வால்மார்ட் பெற்ற ஏகபோகத்தின் விளைவுகளை விரிவாக தெரிவிக்கிறது. அதன் விலை குறைப்பு ரகசியமும், உழைப்புச் சுரண்டலும், உற்பத்தியாளர்கள் மீதான அதன் ஆதிக்கமும், உலகெங்கும் விரிந்திருக்கும் அதன் சாம்ராஜ்ஜியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

வால்மார்ட் நிலைபெற்றுவிட்டால் படிப்படியாக இந்தியாவில் இருக்கும் 4 கோடி வணிகர் குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். சில்லறை வணிகர்களை நம்பி வாழும் சிறு உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழிக்கும். இந்தியாவின் சில்லறை வணிகத்தின் பிரம்மாண்டமான சந்தை மதிப்பை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியை உணராமல், அதை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என்பதாக நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.

வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் (2007) அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால், கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும்.

இந்தக் கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு.

ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.

அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.

மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட், நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.

இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.

உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.

இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறி கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.

இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.

இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.

70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.

உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி

தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள், தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.

இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.

80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.

1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.

1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.
வளர்ச்சியின் மர்மம்
வால்மார்ட்

வால்மார்டின் வளம் - படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்

வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும், அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளைதனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.

இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர், அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.

உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.

உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்

ஏகபோகத்தின் வீச்சு

வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25% என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.

அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட்தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.

அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% – 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.

இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிகையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.

தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

ஏற்கெனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.

உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்

ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.

அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.

இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.

உழைப்புச் சுரண்டல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.

நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு 7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால், எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.

அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.

தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில், வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள் சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது.

அடுத்த குறி இந்தியா

சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.

மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?

thanks vinavu
Back to top Go down
 
வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மலிவு விலையில் மனித உயிர்கள், மரண வியாபாரத்தில் இந்தியா!
» இரண்டாவது மரணம் ~~ சிறுகதைகள்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. 'கலபதி'யின் மரணம்
» பிரபல பாடகி சித்திராவின் மகள் நீச்சல்குளத்தில் மூழ்கி பரிதாப மரணம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: