BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபெண்களும் மலரணிதலும் (சங்க காலம்) Button10

 

 பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்)

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்) Empty
PostSubject: பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்)   பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்) Icon_minitimeSat May 15, 2010 2:20 pm

இன்றைய சூழலில் எல்லாப் பெண்களும் மலரணிகிறார்கள். அவர்களிடம்

ஏன் மலரணிகிறீர்கள்?
என்று கேட்டால்.......
அவர்கள் சொல்வார்கள்.....

அழகுக்காக அணிகிறோம்.....
மணத்துக்காக அணிகிறோம்.....
என்று இன்னும் பல காரணங்களைக் கூறுவார்கள்.....

எப்போதிருந்து மலர் அணிகிறீர்கள் என்று கேட்டால்.....

நீண்ட காலமாகவே அணிகிறோம் என்பார்கள்.............

அவர்களில் பலருக்குச் சங்க கால மகளிர் மலரணியும் மரபு புதுமையாகவும், வியப்பாகவும் இருக்கும்.

ஆம்....

சங்க காலத்தில் எல்லாப் பெண்களும் மலரணியவில்லை. திருமணமான பெண்கள் மட்டும் தான் மலரணிந்தனர். திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை.

அவ்வாறு திருமணம் ஆகாத பெண் ஒருத்தி மலரணிந்திருந்தால் அவள் யாரையோ காதலிக்கிறாள்.... அவன் சூட்டிய மலர் தான் இது என்று ஊரார் பேசிக்கொள்வார்கள்.......

இம்மரபினை பல்வேறு சங்கப்பாடல்களும் சுட்டுகின்றன... அம்மரபினைச் சுட்டும் கலித்தொகைப் பாடல் ஒன்று இங்கே விளக்கம் பெறுகிறது.....

( எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதால் உரையாடல் வடிவில் இப்பாடலை விளக்கியுள்ளேன்)

களவு வெளிப்பட்டது என்று அஞ்சி, தோழிக்குச் சொல்ல நமர் நின்னை அவர்க்கே கொடுக்கச் சூழ்ந்தார் என்று சொல்லி அச்சம் நீக்கியது.

இதன் பொருள் – தலைவியின் காதல் அவள்தம் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது. அதனால் கலங்கிய தலைவி தம் கலக்கத்தைத் தோழியிடம் கூறினாள். தோழியோ தலைவியை, நீ கலங்காதே உன் பெற்றோர் நீ விரும்பியவாறே உன் தலைவனுக்கே மணம் முடித்துவைப்பர் என்று சொல்லி அச்சம் நீக்கினாள்.....
இதுவே தலைவியும் தோழியும் பேசிக் கொண்டது. இப்பாடலில் தலைவியின் காதல் வெளிப்பட்ட விதம் தமிழர்தம் மரபினை வெளிப்படுத்துவதாக உள்ளது........

தலைவி : நேற்று எங்க வீட்டில் என்ன நடந்ததுன்னு தெரியுமா?
தோழி : என்னடி நடந்தது?

தலைவி : புதிசா கள்ளருந்தியவன் எப்படி உண்மையெல்லாம் உளறிக் கொட்டிவிடுவானோ... அதுபோல ஆகிப்போச்சுடி என் நிலை.

தோழி : என்னடி சொல்ற....?

தலைவி : நேற்றிரவு என் தலைவனைச் சந்தித்தேன் அவன் தலையில் முல்லை மலர் சூடியிருந்தான்... எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மலரை நானும் எடுத்து என் கூந்தலில் சூடிக்கொண்டேன். அவனை விட்டுப் பிரியும் போதும், என் வீட்டுக்குச் செல்லும் போதும் அம்மலரை எடுத்து எறிய எனக்கு மனம் வரவில்லை அதனால் கூந்தலுக்குள் வைத்த மலருடனேயே வீட்டுக்குப் போய்விட்டேன்..

தோழி : உனக்கு என்ன துணிவு.... சரி.....
பின் என்ன நடந்தது?

தலைவி : வீட்டுக்குச் சென்ற பின்னர் கூந்தலுக்குள்ளே வைத்த மலரை மறந்துவிட்டேன்...

தோழி : ம்

தலைவி : வீட்டில் நற்றாயும் பெற்றோரும் இருக்கும் போது செவிலித்தாய் வந்து என் கூந்தலில் எண்ணை தேய்த்து முடிந்துவிடுகிறேன் என்றாள்....
( நற்றாய் – தலைவியைப் பெற்ற தாய்.
செவிலி – தலைவியை வளர்த்த தாய்)
நானும் மலரைக் கூந்தலில் வைத்த நினைவில்லாமல் அவள் முன் நின்றேன்...

தோழி : சரி....

தலைவி : என் தலைமுடியை அவிழ்த்தாள் செவிலி....
அதன் உள்ளே வைத்திருந்த முல்லை மலர் கீழே விழுந்தது.....

தோழி : அடடா....
அப்புறம் என்ன ஆச்சு....? வீட்டில என்ன சொன்னாங்க? உன் கூந்தலில் முல்லை மலர் எப்படி வந்தது..? யார் தந்தது? என்றெல்லாம் கேட்டு உன்னை துன்புறுத்தியிருப்பார்களே....?


தலைவி : நீ நினைக்கிறது மாதிரி அங்கு அப்படி எதுவும் நடக்கல...

தோழி : என்னடி சொல்ற............! யாரும் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா...........! நம்பமுடியலயே.........!

தலைவி : என்னாலும் தான் நம்பமுடியல..என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை.
என் கூந்தலில் இருந்து முல்லை மலர் விழுந்ததைப் பார்த்ததும் செவிலித்தாய் ஏதோ நெருப்பைத் தொட்டவர் போலப் பதறி அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்... நற்றாயும், தந்தையும் கூட எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அவ்விடத்தை விட்டு நீங்கிப் வீட்டின் பின்பக்கம் சென்று விட்டனர்.


தோழி : ம் ........ அப்புறம் நீ என்ன செய்தாய்.......?


தலைவி : எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.... கூந்தலை முடித்து விட்டு வீட்டின் அருகே உள்ள கானத்துக்குச் சென்றுவிட்டேன்....

தோழி : சரி ..... அது தான் உன் பெற்றோர் எதுவும் சொல்லவில்லையே. பிறகு எதற்கு பயப்படுகிறாய்........?

தலைவி : அது தானடி எனக்குப் பயமாக இருக்கிறது.....
இனி அவர்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை.

தோழி : அவங்க அடுத்து என்ன செய்யப்போறாங்கன்னு நீ நினைக்கிற....?

தலைவி : என்னை வீட்டை விட்டு வெளியே விடாமல்.... இற்செறிக்கலாம்..
வேறு ஒருவருக்குக் கூட திருமணம் செய்த வைக்கலாம்......

தோழி : ஓ அது தான் உனது பயத்துக்குக் காரணமா?
நீ நினைக்கிறது மாதிரி எதுவும் நடக்காது...
பயப்படாத......
உன் பெற்றோர் உன்னை அப்பொழுதே.....
கோபப்பட்டுப் பேசியிருந்தால் நீ சொல்வது போல என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...
ஆனால் ....
அவங்க கோபப்பபடாம இருக்கிறதப் பார்த்தா.........
எனக்கென்னமோ.... அவங்க உன் விருப்பப்படி நீ விரும்பியவனுக்கே உன்னை மணம் முடிப்பார்கள் என்று தான் தோன்றுகிறது...

தலைவி : என்னடி சொல்ற........
நீ சொல்ற மாதிரியெல்லாம் நடக்குமா?

தோழி : பயப்படாத........
நான் சொல்றது மாதிரி தான் நடக்கும்...
உன் விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்கமாட்டார்கள்...
உன் மகிழ்ச்சி தானே அவர்களுக்கு தேவை....
அதனால் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இரு

தலைவி : அப்படி நடந்தால் மகிழ்ச்சி தான்..

தோழி : அப்படியே நடக்கும் கலங்காதே.......

சங்கத்தமிழர் மரபுகளில் மலரணிதல் குறிப்பிடத்தக்கதாகும்..
ஆடவரும், பெண்டிரும் மலரணிந்தனர்....
ஒவ்வொரு நிலையிலும் மலரணிதலுக்கெனப் பல காரணங்கள் இருந்தன. மகளிர் மலரணிதல் பற்றி பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன..... அவற்றுள்,

தலைவி கூற்றும் தோழி கூற்றும்
'தோழி! நாம்இ காணாமை உண்ட கடுங் கள்ளைஇ மெய் கூரஇ
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குஇ
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும்இ மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடேஇ
அன்னையும் அத்தனும் இல்லராஇ யாய் நாணஇ
அன்னை முன் வீழ்ந்தன்றுஇ அப் பூ
அதனை வினவலும் செய்யாள்இ சினவலும் செய்யாள்இ
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டுஇ
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும்இ என்
சாந்து உளர் கூழை முடியாஇ நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇஇ தளர்பு ஒல்கிஇ
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்குஇ எல்லா!
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின்இ நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார்இ நின்னை; அகன் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்துஇ திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்இ
அல்கலும் சூழ்ந்த வினை.'

கலித்தொகை-115

இப்பாடல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இப்பாடல் வழி சங்க காலத்தில் திருமணமான பெண்கள் மட்டுமே மலரணிந்தனர் என்பதும், திருமணமாகாத பெண்கள் மலரணிவது இல்லை என்பதும் புலனாகிறது. அவ்வாறு திருமணம் ஆகாத பெண்கள் மலர் அணிந்தால் அப்பெண்
யாரையோ காதலிக்கிறாள் என்று பொருள்கொள்ளப்பட்டது.



(பெண்களும் மலரணிதலும் என்னும் கட்டுரைக்கு நண்பர் குமரன் அவர்கள் எழுப்பிய ஐயம் கீழே....
அதற்கு விளக்கமாகவும் தமிழரின் மலரணியும் மரபை மேலும் விளக்கும் விதமாகவும் இக்கட்டுரை அமைகிறது.....

கேள்விகள்
எளிய உரையாடல் வடிவாக விளக்கத்தைத் தந்ததற்கு நன்றி நண்பரே. முதன்மைச் செய்திகளை தடித்த எழுத்தில் இட்டதும் நன்று.

வழக்கம் போல் சில ஐயங்கள்: :-)

1. இப்பாடலில் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்ற சொற்றொடர் வருகிறது. இதற்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கம் என்ன? நம் என்றதால் தலைவனும் தலைவியும் ஆயர் குலம் என்பது தெரிகிறது. ஆனால் தன் குலத்தையே புல்லினம் என்று தலைவி கூறுவது புரியவில்லை; ஆயர் குலம் தாழ்ந்த குலம், புல்லினம் என்றொரு மரபு சங்க காலத்திலும் இருந்திருக்கிறதா? அதனை ஆயர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா? அதனால் தான் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்றாளா தலைவி? உரையாசிரியர்கள் சொல்வது என்ன?

2. இப்பாடலில் தலைவன் அணிந்த முல்லையங்கண்ணியைத் தலைவி சூடிய செய்தி மட்டுமே எனக்குத் தென்படுகிறது. மணமாகாத பெண்கள் மலர் அணிவது இல்லை என்ற செய்தி வருவித்துக் கொண்ட செய்தியைப் போல் தான் தோன்றுகிறது. நேரடியாக இந்தப் பாடலில் அந்த செய்தி இல்லை. இந்த செய்தியை நேரடியாக - அதாவது மணமாகாத பெண்கள் மலர் அணிவதில்லை என்ற செய்தியை நேரடியாக - கூறும் ஏதேனும் பாடல் உண்டா? மாற்றாக மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் உண்டா?

எனக்கென்னவோ மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் பலவும் சங்க இலக்கியத்தில் உண்டென்றே தோன்றுகிறது; அகத்துறையில் கொஞ்சம் தேடினால் நிறைய கிடைக்கும் என்று நினைக்கிறேன். நானும் தேடிப் பார்க்கிறேன்.

3. அப்படியே 'மணமாகாத பெண்கள் மலர் சூடுவதில்லை' என்னும் மரபு இருந்திருந்தாலும் அம்மரபு ஐவகை நிலத்தவரிடையேயும் அங்கே வாழ்ந்த எல்லா குடியினரிடையேயும் இருந்த மரபு தானா? அன்றி ஆய்க்குலத்துப் பெண்களுக்கு மட்டுமே ஆன மரபா? அப்படி ஆய்க்குலத்தவர்க்கு மட்டுமே ஆன மரபென்றால் அதனைச் சங்ககால மகளிர் அனைவருக்கும் பொதுமைப்படுத்துவது சரியாகுமா?

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விட்டால் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே செல்வேன். கேள்விகளைக் கேட்பதென்னவோ எளிது தானே?! :-)

எனக்குத் தென்படும் இன்னொரு செய்தி - தலைவனும் தலைவியும் ஆய்க்குலத்தவர் என்பதால் அதனை எப்படியோ உய்த்துணர்ந்த (சூடியது முல்லை மலர் என்பதால் தலைவனும் ஆய்க்குலம் என்று அறிந்தனர் போலும் யாயும் அன்னையும் அத்தனும்) பெற்றோர்கள் ஒத்த குலத்தவரான இருவரையும் சேர்த்து வைக்க மனம் கொண்டனர் போலும். இதுவே வேறு குலத்தவராயின் இற்செறித்தல், வெறியாட்டு, உடன்போக்கு போன்றவை நிகழ்ந்திருக்கும் போலும்.

பதில் – 1.
புல்லினம் என்பது ஆட்டினத்தைக் குறிக்கும். உரையாசிரியர்களும் ஆட்டிடையர்களின் ஒரு இனம் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆயர்குலம் தாழ்ந்த குலம் என்பதற்கான சான்றுகள் இல்லை நண்பரே...
பதில் – 2.சங்க காலத்தில் திருமணமாகத பெண்கள் கூந்தலில் மலரணிவது இல்லை. இம்மரபைப் பல பாடல்கள் வழி நேரிடையாகவே காணமுடிகிறது. திருமணத்தின் ஒரு குறியீடாக மலரணிதல் அமைந்திருந்தது.
திருமணமாகத பெண்கள் மலரணிந்தால் அப்பெண் காதலிக்கிறாள் அவன் சூடிய மலரே அது என்று அலர் தூற்றப்பட்டதை அறிகிறோம். சான்றுகள் கீழே....
பதில் -3.கூந்தலில் மலரணிதல் பற்றிய மரபு முல்லை நிலத்துக்கு மட்டுமன்றி எல்லா நிலங்களுக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.

தங்கள் கேள்வி மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது நண்பரே... விளக்கங்கள் கீழே...

சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கும் சான்றுகளுள் சில....

• தலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.( அகம் 180)
• ஒரு நாள் தாய் தன் மகளிடம் – உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே..? என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள்.( நற் – 143)
• தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வீழ்கிறது.அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள்.(கலி -115)
• இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள்.( குறுந் – 312)
• ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும்,அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள்.( கலி- 107)
• திருமணத்தின் போது தலைவனை, “ திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய் “ என்று தோழியர் வாழ்த்துகின்றனர். ( ஐங் – 296)

தமிழரின் மலரணியும் மரபு பற்றி மூதறிஞர் . வ.சுப. மாணிக்கனார் அவர்களின் கருத்து.....

கூந்தல் மலரணிதல்

பண்டை நாளில் வழங்கிய கரணம் ஒன்றே; அதுதானும் சிலம்பின் அகற்சி என்று முடிவு கட்டுதற்கு இல்லை. சிலம்பின்மை ஓர் எதிர்மறையடையாளம். இவள் மணவாட்டி என்று அறிவிப்பான் பல அடையாளங்கள் திணைக்கேற்ப இருந்திருத்தல் கூடும். அவை இலக்கியம் ஏறாதிருத்தலும்
கூடும். சங்கச் செய்யுட்களை நுணுகிக் காண்பார்க்கு மற்றொரு அடையாளமும் வழங்கியமை தெரியவரும். இஃது உடன்பாடான அறிகுறி; பெரிதும் வழக்கில் பரவியிருந்த கரணம்.

“ தண்கயத் தமன்ற ஒண்பூங் குவளை
அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி
பின்னுப் புறந்தாழக் கொன்னே சூட்டி
நல்வரல் இளமுலை நோக்கி நெடிதுநினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே...
பொன்னேர் நுண்தாது நோக்கி
என்னும் நோக்குமிவ் வழுங்கல் ஊரே ” (அகம். 180)

‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; வளரும் மார்பை ஒரு நோக்கு நோக்கிச் சென்றுவிட்டான்; இந்தச் செயலுக்கே ஊர் என்னை ஒருவகையாகப்பார்க்கலாயிற்று. புன்னைத் தாதின் நிறத்தையும் பசலை படர்ந்த என்மேனி நிறத்தையும் உற்று நோக்கிற்று’ எனத் தலைவி ஊரலருக்குக் காரணம் உரைக்கின்றாள். கூந்தலில் பூவைக் கண்டவளவிலேயே ஊர்ப்பார்வை மாறிவிட்டதே என்று தலைமகள் நொந்து கொள்ளினும், ஒருவனோடு ஒருத்திக்கு உறவு உண்டு என்பதற்கு மலர் போதுமான அடையாளம் என்று
ஊரார் துணிவுற்று அலர் மொழிந்தனர் என்று நாம் அறிய வேண்டும்.

அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சின்னாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும்நின் கதுப்பென் றேனே (நற். 143)

“இன்னானுடன் இவர் மகளுக்குத் தொடர்பு என்று என் காது கேட்க ஊர்ப்பெண்டுகள் பேசுவதை அறிவேன். சில நாட்களாகத் தெரிந்து வைத்தும், தெரியாதவள் போல ஒன்றும் காட்டிக் கொள்ளாதிருந்தேன். ஒருநாள் ‘நின் கூந்தல் நறுமணம் வீசுகின்றதே என்று கேட்டுவிட்டேன்’ என்று தாய் தன்
மகள் உடன் போகியதற்குத் தானே காரணம் எனச் சொல்லுகின்றாள்.
குமரியர் கூழையில் பூமணத்திற்கு இடமில்லை; நின் கூந்தல் மணக்கின்றதே என்று அன்னை வினவியதும் களவு வெளிப்பட்டுவிட்டது. இனி வீட்டில் இருத்தல் பொருந்தாது என்று மகள் தாய்க்கு அஞ்சி உடன்போயினாள்.
இயற்கை வனப்புமிக்க இடத்தில் இன்புறும் தலைவன் காதலியின் கருங்குழலில் பூங்கொத்துக்களைச் சூடி அணிசெய்து மகிழ்வான். வீடு செல்லும்போது தலைமகள் பூவைக் கூந்தலிலிருந்து அகற்றி விடுவாள். மலரை எடுத்தெறிந்து விட்டாலும், மலர் இருந்த கூந்தல் மணக்குமன்றோ? ஆதலின் தாய் மகளின்
கூந்தலில் மலரைப் பார்க்காவிட்டாலும், அதன் மணத்தை அறிந்து, நின் கதுப்பு நறிய நாறும் என்று வினவினாள் எனக்கொள்க.


குமரி மலரணியாமை

பண்டைத் தமிழ்க் கன்னி மலர்சூடாள் என்பதும், மலர் சூடின்
கன்னியாகாள், ஒருவனை வரித்தாள் என்பதும் நம் பழஞ் சமுதாய வழக்கு. இக்கருத்து கற்றார்க்கு இன்று வியப்பாகவும் புரட்சியாகவும் தோன்றும், தோன்றக்கூடும். இவ் வழக்கம் இந்நாள் தமிழகத்து இல்லாமையும், இருக்க இயலாமையும் கண்டு பலர் மலைக்கவும் மலைப்பர். தௌ¤விற்கு இன்னும் சில
சான்றுகள் காண்போம்.

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312)

இரவுக்குறி வந்து செல்லும் தலைமகன் இனி மணந்து கொள்ள
வேண்டியதுதான் என்று தன்னெஞ்சிற்குக் கூறும் கருத்துடையது இப்பாட்டு. ‘பலமலர்களைச் சூடிக் கமகமவென்று மணம் பரப்பி இரவில் வந்து முயங்கி என்னவளாகின்றாள்; பின்பு சூடிய மலர்களை உதிர்த்துக் கலவியிற் கலைந்த கூந்தலைச் சீர்செய்து, யாதொரு மாறுபாடும் தோன்றாதபடி, காலையில் தன் வீட்டாருக்குக் காட்சியளிக்கின்றாள். எனக்கு ஏற்பவும் தன் சுற்றத்தாருக்கு ஏற்பவும் இடமறிந்து நடந்து கொள்ளும் என் காதலி, நெஞ்சே! எத்தன்மையள் தெரியுமா? அவள் ‘இரண்டறி கள்வி’ என்று தலைவன் காதலாளின் அறிவுத் திறத்தை வியக்கின்றான். கூந்தலில் பெய்த மலர், தானே உதிரவில்லை; வேண்டுமென்றே உதிர்க்கின்றாள். ஏன்? “உதிர்த்து” என்ற பிறவினையை நினைக. கன்னியர் மலர் சூடுவது இயல்பு வழக்காயின், தலைவன் அணிந்த மலரையும் இயல்பு வழக்குப் போலப் பெற்றோர்க்குக் காட்டிவிடலாமன்றோ? அன்னை முன் பூ விழுந்தபோது தலைவி அவலப்பட வேண்டாமன்றே? அன்னையும் அதிர்ச்சியுற வேண்டுவதில்லையே! அன்போடு சூடிய பூவை
அச்சத்தோடு நினைந்து உதிர்த்தாள் எனின், குமரியர் பூவணிதல் சமுதாய வழக்கிற்கு ஒவ்வாக் காட்சி என்பது தௌ¤வு.

முல்லைக் குமரியின் கவலை

பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தாளென்று யாய்கேட்பின்
செய்வதி லாகுமோ மற்று. (கலி. 107)

குமரிப் பெண்ணாள் ஒருத்தியின் கவலையை இம் முல்லைக்கலி
உணர்த்துகின்றது. அவள் கவற்சிக்குக் காரணம் என்கொல்?
முல்லைத்திணையில் ஏறுகோள்விழா நடந்தது. பார்வையாளராகக்
குமரியரெல்லாம் குழுமியிருந்தனர். செவியிலே மறையுடைய ஒரு காளையை இடையன் மடக்கினான், அடக்கினான். அக்காளை தன் கொம்பினால் அவன் தலையிற் சூடிய முல்லைச்சரத்தை எடுத்து மாட்டிக்கொண்டு சுழற்றியது. கொம்பு சுழன்ற வேகத்தில் ஒரு முல்லைப்பூ தனித்துச் சென்று எங்கோ இருந்த இடைமகளின் கூழைக் கற்றை யுள்ளேபோய் விழுந்தது. (“அப்பூ
வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று”). இழந்த பொருள் எதிர்பாராது
கிடைப்பின், ஆசையோடு அதனைப் போற்றிக்கொள்வதுபோல, தானே வந்து கூந்தலில் விழுந்த பூவைக் கீழே நழுவி விழாதபடி அந்த ஆய்மகள் தலையில் முடித்துக் கொண்டனள். விழாவிற்கு வந்த பெண்கள் சிலர் கண்ணிலேனும் இந் நிகழ்ச்சி பட்டிருத்தல் கூடும். காதலிற் கண்டதைக் காணாதார்க்குப் போய்க் கூறினாலல்லது சில கண்களுக்குத் தூக்கம் வந்தொழியா; ஆதலின், முல்லைப்பூவை முடித்துக் கொண்டமை கண்ட மாதர்கள், தம் வீட்டுக்கு நேரே செல்லாது அவள் அன்னைக்குச் சென்று அலர் சொல்லியிருத்தல் கூடும். இந்நிலையில் ‘என்ன செய்வேன்? எங்ஙனம் தாயைக் காண்பேன்? கேட்டால், எதனை மறுமொழிவேன்’ என்று துடிக்கின்றாள் முல்லைமுடித்த கூந்தலி. ‘இவள் கூழைக் கூந்தல் இதுவரை மலர் பெய்து அறியாதது, ஒரு பூமேல் ஆசைகொண்டு இவள் தானே சூடிக்கொண்டாலும், அதுவே தவறாம். அயலான் கைதொட்டுத் தலையில் வைத்த கண்ணிப் பூவந்து விழுந்ததெனின், ஏறிட்டுப் பாராது எடுத்து எறிய வேண்டியதிருப்ப, என் மகள் அதனை விழைந்து முடித்துப் பொதிந்து கொண்டளாயின், அக்குற்றம் பொறுக்குந் தரத்ததோ? என்றெல்லாம் தாய் காரணத்தை அடுக்கி நினைத்து
அடங்காச் சினங்கொண்டால், என்செய்வோம்? எனக் கற்பனைசெய்து கவல்கின்றாள் முல்லைக் குழலி. அவள் கவலை கிடக்க; அக்கவலை நமக்கு அறிவிப்பது என்ன? ‘பெய்போது அறியாத் தன் கூழை’ என்ற தொடரின் கருத்து யாது? “மயிருக்கு மணந்தரும் பூ முடித்தல் வேண்டும் என்று அறியாதவள்” என்பது
நச்சினார்க்கினியர் உரைவிளக்கம். பூ முடித்துப் பழக்கமில்லாதவள் என்பது இதன் கருத்து. “பெய்போது அறியா” என்பது அவருரை. இவ்வுரையைக் காட்டிலும் போதுபெய்தலை (சூடுதலை) அறியாத என்று உரைப்பதுவே பொருந்தும். “ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை” (653) என்னும் குறள் நடையோடு பெய்போது என்ற நடையை ஒப்பிடுக. உரை எதுவாயினும் குமரிக்கொண்டை பூ மணம் அறியாதது என்பதுவே பொருள்.

கூழைக் கூந்தல்

கூந்தலைக் குறிக்கும் பலவகைச் சொற்களுள் கூழை என்பது ஒன்று. இச்சொல் ஒருபொருளின் இறுதி நிலையை, இறுதிப்பகுதியின் குறை நிலையைக் குறிக்கும்.1 இளங்குமரியின் தலைமயிர் நீண்ட வளர்ச்சி பெற்றிருப்பதில்லை. இன்னும் வளர வேண்டும் குறையுடையது.2 ஆதலின்
கூழைக் கிளவியைக் குமரியர் கூந்தலுக்கே ஆட்சிசெய்யும் இலக்கிய வழக்கைக் காண்கின்றோம். (குறுந்.113 நற்.140.; அகம்.315 கலி.107). முடித்தற்கு வேண்டும் கூந்தல் நீட்சி மனைவிப் பருவத்தே வளருமாதலின், பூ அணியும் வழக்கம் திருமணம் தொடங்கி மேற்கொள்ளப்படுவது எனக் கொள்ளலாம். குமரிப் பருவத்துக் கூழைக் கூந்தலைச் செவிலியர் எண்ணெய் தடவி வாரிப் பின்னி விடுமளவே செய்குவர். பின்னிய கூந்தலில் பூ அணிவதில்லை.

பின்னுவிட் டிருளிய ஐம்பால் (கலி.59)
மண்ணி மாசற்ற நின்கூழை (கலி.107)
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் (அகம்.108)
கூந்தல் வாரி நுசுப்பிவந் தோம்பிய
நலம்புனை யுதவி (அகம்.195)

இனைய பாடலடிகள் குமரியர் கூந்தலின் ஒப்பனையில் பூ இல்லாமைக்குச் சான்றுகளாம். கன்னியர் பூவணிதல் ஆகாது என்று தமிழ்ச் சமுதாயம் கொண்ட முறைக்குக் காரணம் என்ன?

கூழைமோனை “ஈறிலி கூழை, எனப்படும். (காரிகை 19)
ஐங் 374; “முடியகம் புகாஅக் கூந்தலள்”

பொலிவுடையது, கண்ணுக்கினியது, நட்பாடத் துணையாவது, கைக்கு அழகியது, மணம் பொதிந்தது, மனத்தைக் கிளறுவது, காதலுக்கு நாகரிகத் தூதாவது; அனைய பெருஞ் சிறப்பும் வாய்ந்த ஒரு சிறு பொருள் பூ; பூவனையர் பூப்பெய்திய குமரியர்.

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. (குறுந்.32)
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே (குறுந்.84)

காதற்கன்னி முல்லையும் குவளையும் வேங்கையும் காந்தளும் ஆம்பலும் போல்பவள் எனவும், ஐம்மையும் நறுமையும் இனிமையும் தன்மையும் வாய்ந்த மென்மையள் எனவும், பூவாகவும் பூவின் தன்மையனவாகவும் போற்றப் படுகின்றாள். இல்லக் குமரியர் பூச்சூடி மணம்
பரப்பிப் பிறரைக் கவரவேண்டும் என்பதில்லை; கவருதலும் கூடாது. அத்தகைய செய்புனை கவர்ச்சி கற்பு நெறிக்கு ஒவ்வாது. காதல் நெறியை வளர்க்காது என்றெல்லாம் தமிழ் மூதறிஞர்கள் கண்டனர்; குமரியர் பூவணிதலைக் கடிந்தனர் என்று கொள்ள வேண்டும்.

பூவணியும் உரிமை

குமரியர் பூவணியும் உரிமையைத் திருமணநாள் முதல் பெறுகின்றனர். இவள் இல்லறத்தி, மனைவியானாள் என்பதற்குப் பூக்கரணம் செய்யப்படும். இக்கரணத்தைத் தலைவன் செய்வான் என்று அறிகின்றோம். செந்நிற வேங்கை பூவின்மேல் இருந்த மயில் நகையணிந்த பெண் போலக் காட்சியளிக்கும் நாட்டவனே, நல்லது செய்தாய்; நின் குடும்பம் வாழ்க. திருமணத்தைக் கொண்டாடும்படி பின்னிய கரிய இவள் கூந்தலில் மலர்
சூட்டினாய்;

எரிமருள் வேங்கை யிருந்த தோகை
இழையணி மடந்தையில் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயரவிவள்
பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296)

என்று மணஞ்செய்து கொண்ட களவொழுக்கத் தலைவனைப் பார்த்துத் தோழி மனமார வாழ்த்துகின்றாள். கூந்தலைப் பின்னி மலரணிந்தான் என்று கூறாமல், பின்னிய கூந்தலில் மலரணிந்தான் என்று கூறுவதால், பின்னியநிலை குமரிக் கோலம் என்றும் மலரணிகை கற்புக்கோலம் என்றும் தௌ¤வாதல் காண்க. மலரணி சடங்கு செய்யும்போது, தலைவியின் கூந்தலைத் தலைவன் கை தொடும். தன் கூந்தலைத் தொட்டானுக்குக் குமரி உரிமையாகின்றாள். உற்றார்க்கு உரியர் பொற்றொடி
மகளிர்’ என்பது பழமொழி. “இவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே” (குறுந்.225)”குறுந்தொடிமகளிர் நாறிருங் கூந்தற்கிழவர்” (புறம்.113) என்ற அடிகளால், கூந்தலுக்கு உரியவன் யாவன் அவன் கொழுநன் என்ற மணவழக்குப் பெறப்படும். கூந்தலுக்கு உரியவன் என்றால், கூந்தலில் மலர் வேய்ந்து மணங்கொள்பவன் என்பது குறிப்பு.
நல்லாவூர் கிழார் பண்டு நடந்த மணமுறைகளைத் தாம் பாடிய ஒரே
ஒரு பாட்டில் தொகுத்துச் சொல்லுவர். குழந்தைகள் பெற்ற இல்லற மாதர் ஒருங்குகூடி, ‘கற்பு வழாமல் அறம்பல செய்க, கொண்டானைப் பேணி ஒழுகுக, தக்க வாழ்க்கைத் துணையாகுக’ என்று திருமணக் காலத்து மணப்பெண்ணை வாழ்த்துவர் எனவும், கூந்தல்மேல் பூவும் பிறவும் விளங்க நன்மணம்
நிகழ்த்துவர் எனவும் அப்பாட்டு மணச்சடங்கைச் சொல்லிச் செல்கிறது:-

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றை (அகம் .86)

திருமணந் தொட்டு மகளிர் பூவணிவர் என்பதற்கு இப் பாட்டும் குறிப்பிற் சான்றாதல் காண்க: இம் முடிபை நினைத்து களவுத் துறைப் பாடல்களைக் கற்கும்போது, எதிர்ச் சான்றுகள் போல்வன சில தோன்றக்கூடும்; குமரிக் காலத்துப் பூச்சூடும் வழக்கம் உண்டு போலும், அது சமுதாய விலக்கன்று என்று காட்டுவதுபோலச் சில செய்யுட்கள் காணப்படும்.

வண்டுவழிப் படரா தண்மலர் வேய்ந்து (அகம்.198)
வீபெய் கூந்தல் வீசுவளி உளர (நற்.264)
அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை
மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத்
துணிநீர்ப் பௌவம் துணையோ டாடி (நற்.265)
குவளை நாறுங் குவளையிருங் கூந்தல் (குறுந்.300)

இவ்வாறு வரும் பகுதிகளைக் கண்டு, என் முடிவுக்கு மாறான சான்றுகள் என்று கருதிவிட வேண்டா. துறைகளோடு பொருத்தி நேர்பட ஆராயின், இயற்கை புணர்ச்சியிலும் உடன்போக்கிலும் இன்பக்களிப்பிலும் இன்ப எதிர்பார்ப்பிலும் நீர் விளையாட்டிலும் குமரியர் பூவணிந்த குறிப்புக்களாகவே இருக்கும்.

முடிபுகள்

மேற் செய்த ஆராய்ச்சியால் கண்ட தெளிவு என்ன? மணந்த
குமரியரை மணவாக் குமரியரினின்றும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கமே கரணத் தோற்றத்திற்குக் காரணம் ஆம்: காலிற் கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம். கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ் விரண்டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த கரணங்கள் என்று
தௌ¤கின்றோம். இவள் மனைவியானாள் என்ற அறநிலையைச் சிலம்பு கழித்த அடியாலும், மலர் வேய்ந்த முடியாலும் அறிந்து கொள்ளலாம்; சிலம்பு இன்மையை நெருங்கிக் காணவேண்டும் என்பதில்லை. செவிக்குச் சிலம்பின் ஓசை கேளாமையால், இவள் மனைவிமை எய்தியவள் என்பதனைச் சேய்மையிலேயே விளங்கிக் கொள்ளலாம். மலர்சூடியிருப்பதை அணுகிக்
காணவேண்டுவதில்லை; மூக்கிற்குப் பூமணம் வந்து தாக்குதலால், இவள் இல்லறத்தி என்று சேய்மைக் கண்ணேயே முடிவு கொள்ளலாம். அடியாலும் முடியாலும் இன்மைக் குறியாலும் கன்னிமை கழிந்த மனையாட்டி என்பதனைத்
தமிழ்ச் சமுதாயம் எல்லாரையும் அறியச் செய்தது. மணமாகி யாளைத் தோற்றத்தால் குமரியென மயங்கி விடாதவாறும், அங்ஙனம் மயங்கிப் பொய்யும் வழுவும் மேற்கொள்ளாதவாறும் கரணத் தடுப்புக் கண்டது தமிழ்ச் சமுதாயம். சடங்கு தோன்றக் காரணம் என்ன? சடங்கு என்ன? சடங்கின் குறிக்கோள் என்ன? இவற்றிற்கு இன்று நாம் விடை பலவாறு கூறலாம்.
தொல்காப்பியம் சங்கப் பனுவல்களின் துணைகொண்டு, தமிழ்ச் சமுதாயம் காட்டும் விடைகளை மேலே கண்டோம்.

சடங்கு என்பது பெண் இனத்திற்கு மட்டுமா? மணமாகிய குமரனை மணமாகாக் குமரனின்றும் வேறுபடுத்திக் காட்ட வேண்டியதில்லையா? இவன் திருமணத்தான் என்பதற்கு அடையாளம் வேண்டாவா? இவ்வினாக்களுக்கு
அறிவு ஒப்பும் நேரிய மறுமொழி தரமுடியாதுதான். கற்பு இருபாலார்க்கும் பொது என்று நாம் இன்று கொள்வது போலப் பண்டைத் தமிழ்ச் சமுதாயம் கொள்ளாமலில்லை; கொண்டிருந்தது. எனினும் வழிவழிப்பட்ட சில செயல்
முறைகளை நடைமுறையில் ஒருவாறு ஒப்புக்கொண்டு குடும்பவியலைப் போற்றியது; போற்றும் பொறுப்பைச் செறிவும் நிறைவும் மிக்கபெண்ணினத்துக்கு அளித்தது. பலதாரமணம் ஆடவர்க்கு வழக்காறாக இருந்தமையின், இவன் மணங்கொண்டான் என அடையாளம் விதிக்க
வேண்டும் என்ற நிலை தோன்றவில்லை. “தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்று கண்ணகியின் கற்பின் மாட்சியைப் பாராட்டினார் இளங்கோ. கோவலனைப் பாராட்டும்போது அவர் பாராட்டிய தென்ன?
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன்

ஒருவன் மணமாகாப் பெண்டிர் பலரைக் காதலிக்கலாம்; ஒருவனை மணமாகாப் பெண்டிர் பலரும் காதலிக்கலாம். இவை தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோள் அல்ல. ஒருவன் ஒருத்தி என்பதுவே அதன் குறிக்கோள். எனினும் ஒருவன் பலர் என்னும் நடைமுறைக்கு இணங்கிச் சமுதாயம் இயங்க வேண்டியதாயிற்று. அதனாலன்றோ பிறன்மனை நயவாமை என்ற அறம்போலப் பிறன் கணவனை நயவாமை என்ற அறம் தோன்ற இடமில்லை.

களவு கற்பு என்னும் காதல் நிலைகளும், வெறியாட்டு அலர்
உடன்போக்கு கரணம் முதலான வழக்காறுகளும் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்டவை. இவற்றையே அக விலக்கியத்திலும் காண்கின்றோம். ஆகவே அகத்திணையியல் கண்கண்ட சமுதாய அடிப்படையுடையது. நடைமுறை
தழுவியது, மெய்யானது என்று உணர்வோமாக. “இல்லது” என்று நாட்ட எழுதினார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் (ப. 30) அகத்திணை பொய்க் கூறுகளின் புனைவா? எல்லாம் புனைநெறி வழக்கா? இல்லை என்பர்.
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். 999). தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தாலும். தகாத மரபுகளுக்கு அகத்திணையில் இடமில்லை?
தக்க மரபுகளுக்கு மிக்க இடமுண்டு. இது பொய்யெனப் படாது, அறிவுடைக் கற்பனையாகும். இதனைத் தொல்காப்பியர் புலன்நெறி வழக்கு என்று தெளிவாகக் கூறுவர். இறையனாரகப் பொருளும் அதன் உரையும் அவற்றின் வழிவந்த கருத்துரைகளும் அகத்திணைக்கு நேர் முரணாக எழுதிய இடங்கள் பல பொய்யாப் புலனெறி வழக்கைப் பொய்ந்நெறி வழக்கு (இல்லது) என்று
எழுதிய இவ்விடம் அவற்றுள் ஒன்று என்பர். அதனால் திருமணத்திற்கு முன்பு மகளிர் மலரணிதல் இல்லை என்றும் அவ்வாறு அணிந்தால் அப்பெண் யாரையே காதரலிக்கிறாள் என்றும் அலர் தூற்றினர் என்றும் அறியமுடிகிறது.

(கேள்விகளைப் போல எனது பதிலும் நீண்ட கொண்டே செல்கிறது என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் தேவையிருப்பின் இது தொடர்பான சான்றுகளை இன்னொரு கட்டுரையாகவும் தரத் தயாராகவுள்ளேன் கருத்துரை வழியே ஐயம் வினவியமைக்கு ந
ன்றி நண்பரே..)



thanks:
வேர்களைத்தேடி...................
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்) Empty
PostSubject: சங்கப் புலவர் அகரவரிசை   பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்) Icon_minitimeSat May 15, 2010 2:22 pm

சங்கப் புலவர் அகரவரிசை
0

சங்க இலக்கியம் குறித்த பல நுண்ணாய்வுச் செய்திகளை இவ்வலைப்பகுதியில் தரவுள்ளேன்.
இதுவரை வேறு தளங்களில் இல்லாத பல செய்திகளும் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோர் பயன்பெறுவதற்காக இம்முயற்சி மேற்கொண்டுள்ளேன்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே புலவர்களின் பெயர்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளளது.எனினும் இப்பெயர்கள் நூல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளதால் 473 புலவர்களின் பெயர்களையும் தொகுப்பாகக் காண இயலவில்லை.அதனால் நான் இப்பெயர்களை அகர வரிசையில் அளித்துள்ளேன்.

பெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,பண்பாட்டின் அடையாளமாகும்.
சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு,வாழ்க்கைமுறை ஆகியனவும் அறியமுடிகிறது.
இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.



சங்கப் புலவர் அகரவரிசை


1) அகம்பன் மாலாதனார்
2) அஞ்சியத்தை மகள் நாகையார்
3) அஞ்சில் அஞ்சியார்
4) அஞ்சில் ஆந்தையார்
5) அடைநெடுங்கல்வியார்
6) அணிலாடு முன்றிலார்
7) அண்டர் மகன் குறுவழுதியார்
Cool அதியன் விண்ணத்தனார்
9) அதி இளங்கீரனார்
10) அம்மூவனார்
11) அம்மெய்நாகனார்
12) அரிசில் கிழார்
13) அல்லங்கீரனார்
14) அழிசி நச்சாத்தனார்
15) அள்ளூர் நன்முல்லையார்
16) அறிவுடைநம்பி
17) ஆரியன் பெருங்கண்ணன்
18) ஆடுதுறை மாசாத்தனார்
19) ஆதிமந்தி
20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
22) ஆலங்குடி வங்கனார்
23) ஆலத்தூர் கிழார்
24) ஆலம்பேரி சாத்தனார்
25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
27) ஆவூர்கிழார்
28) ஆலியார்
29) ஆவூர் மூலங்கீரனார்
30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
31) இடைக்காடனார்
32) இடைக்குன்றூர்கிழார்
33) இடையன் சேந்தன் கொற்றனார்
34) இடையன் நெடுங்கீரனார்
35) இம்மென்கீரனார்
36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்
39) இரும்பிடர்தலையார்
40) இளங்கீரந்தையார்
41) இளங்கீரனார்
42) இளநாகனார்
43) இளந்திரையன்
44) இளந்தேவனார்
45) இளம்புல்லூர்க் காவிதி
46) இளம்பூதனார்
47) இளம்பெருவழுதி
48) இளம்போதியார்
49) இளவெயினனார்
50) இறங்குடிக் குன்றநாடன்
51) இறையனார்
52) இனிசந்த நாகனார்
53) ஈழத்துப் பூதந்தேவனார்
54) உகாய்க் குடிகிழார்
55) உக்கிரப் பெருவழுதி
56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
57) உம்பற்காட்டு இளங்கண்ணனார்
58) உருத்திரனார்
59) உலோச்சனார்
60) உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
61) உழுந்தினைம் புலவர்
62) உறையனார்
63) உறையூர் இளம்பொன் வாணிகனார்
64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
66) உறையூர்ச் சல்லியங் குமரனார்
67) உறையூர்ச் சிறுகந்தனார்
68) உறையூர்ப் பல்காயனார்
69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்
70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
71) ஊட்டியார்
72) ஊண்பித்தை
73) ஊண்பொதி பசுங்குடையார்
74) எயிற்றியனார்
75) எயினந்தையார்
76) எருமை வெளியனார்
77) எருமை வெளியனார் மகனார் கடலனார்
78) எழூப்பன்றி நாகன் குமரனார்
79) ஐயாதி சிறு வெண்ரையார்
80) ஐயூர் முடவனார்
81) ஐயூர் மூலங்கீரனார்
82) ஒக்கூர் மாசாத்தனார்
83) ஒக்கூர் மாசாத்தியார்
84) ஒருசிறைப் பெரியனார்
85) ஒரூத்தனார்
86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
87) ஓதஞானி
88) ஓதலாந்தையார்
89) ஓரம்போகியார்
90) ஓரிற்பிச்சையார்
91) ஓரேர் உழவர்
92) ஔவையார்
93) கங்குல் வெள்ளத்தார்
94) கச்சிப்பேடு இளந்தச்சன்
95) கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
96) கச்சிப்பேடு பெருந்தச்சனார்
97) கடம்பனூர்ச் சாண்டில்யன்
98) கடலூர்ப் பல்கண்ணனார்
99) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
100) கடுந்தொடைக் காவினார்
101) கடுந்தொடைக் கரவீரன்
102) கடுவன் இளமள்ளனார்
103) கடுவன் இளவெயினனார்
104) கடுவன் மள்ளனார்
105) கணக்காயன் தத்தனார்
106) கணியன் பூங்குன்றனார்
107) கண்ணகனார்
108) கண்ணகாரன் கொற்றனார்
109) கண்ணங்கொற்றனார்
110) கண்ணம் புல்லனார்
111) கண்ணனார்
112) கதக்கண்ணனார்
113) கதப்பிள்ளையார்
114) கந்தரத்தனார்
115) கபிலர்
116) கயத்தூர்கிழார்
117) கயமனார்
118) கருங்குழலாதனார்
119) கரும்பிள்ளைப் பூதனார்
120) கருவூர்க்கிழார்
121) கருவூர் கண்ணம்பாளனார்
122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
123) கருவூர் கலிங்கத்தார்
124) கருவூர் கோசனார்
125) கருவூர் சேரமான் சாத்தன்
126) கருவூர் நன்மார்பனார்
127) கருவூர் பவுத்திரனார்
128) கருவூர் பூதஞ்சாத்தனார்
129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
130) கல்பொருசிறுநுரையார்
131) கல்லாடனார்
132) கவைமகன்
133) கழாத்தலையார்
134) கழார்க் கீரனெயிற்றியனார்
135) கழார்க் கீரனெயிற்றியார்
136) கழைதின் யானையார்
137) கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
138) கள்ளில் ஆத்திரையனார்
139) காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
140) காசிபன் கீரன்
141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
142) காப்பியஞ்சேந்தனார்
143) காப்பியாற்றுக் காப்பியனார்
144) காமஞ்சேர் குளத்தார்
145) காரிக்கிழார்
146) காலெறி கடிகையார்
147) காவட்டனார்
148) காவற்பெண்டு
149) காவன்முல்லையார்
150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார்
நப்பூதனார்
155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
158) கிள்ளிமங்கலங்கிழார்
159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
160) கீரங்கீரனார்
161) கீரந்தையார்
162) குடபுலவியனார்
163) குடவாயிற் கீரத்தனார்
164) குட்டுவன் கண்ணனார்
165) குட்டுவன் கீரனார்
166) குண்டுகட் பாலியாதனார்
167) குதிரைத் தறியனார்
168) குப்பைக் கோழியார்
169) குமட்டூர் கண்ணனார்
170) குமுழிஞாழலார் நப்பசலையார்
171) குழற்றத்தனார்
172) குளம்பனார்
173) குளம்பாதாயனார்
174) குறமகள் இளவெயினி
175) குறமகள் குறியெயினி
176) குறியிறையார்
177) குறுங்கீரனார்
178) குறுங்குடி மருதனார்
179) குறுங்கோழியூர் கிழார்
180) குன்றம் பூதனார்
181) குன்றியனார்
182) குன்றூர்க் கிழார் மகனார்
183) கூகைக் கோழியார்
184) கூடலூர்க் கிழார்
185) கூடலூர்ப பல்கண்ணனார்
186) கூவன்மைந்தன்
187) கூற்றங்குமரனார்
188) கேசவனார்
189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
190) கொட்டம்பலவனார்
191) கொல்லன் அழிசி
192) கொல்லிக் கண்ணன்
193) கொள்ளம்பக்கனார்
194) கொற்றங்கொற்றனார்
195) கோக்குளமுற்றனார்
196) கோடைபாடிய பெரும்பூதன்
197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
198) கோட்டியூர் நல்லந்தையார்
199) கோண்மா நெடுங்கோட்டனார்
200) கோப்பெருஞ்சோழன்
201) கோவர்த்தனர்
202) கோவூர்க் கிழார்
203) கோவேங்கைப் பெருங்கதவனார்
204) கோழிக் கொற்றனார்
205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
207) சங்கவருணர் என்னும் நாகரியர்
208) சத்திநாதனார்
209) சல்லியங்குமரனார்
210) சாகலாசனார்
211) சாத்தந்தந்தையார்
212) சாத்தனார்
213) சிறுமோலிகனார்
214) சிறுவெண்டேரையார்
215) சிறைக்குடி ஆந்தையார்
216) சீத்தலைச் சாத்தனார்
217) செங்கண்ணனார்
218) செம்பியனார்
219) செம்புலப்பெயல்நீரார்
220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
221) செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
223) செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
224) சேந்தங்கண்ணனார்
225) சேந்தம்பூதனார்
226) சேந்தங்கீரனார்
227) சேரமானெந்தை
228) சேரமான் இளங்குட்டுவன்
229) சேரமான் கணைக்கால் இரும்பொறை
230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
233) சோழன் நலங்கிள்ளி
234) சோழன் நல்லுருத்திரன்
235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
237) தனிமகனார்
238) தாமாப்பல் கண்ணனார்
239) தாமோதரனார்
240) தாயங்கண்ணனார்
241) தாயங்கண்ணியார்
242) திப்புத்தோளார்
243) திருத்தாமனார்
244) தீன்மதிநாகனார்
245) தும்பிசேர்கீரனார்
246) துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
247) துறையூர்ஓடைக்கிழார்
248) தூங்கலோரியார்
249) தேய்புரி பழங்கயிற்றினார்
250) தேரதரன்
251) தேவகுலத்தார்
252) தேவனார்
253) தொடித்தலை விழுத்தண்டினர்
254) தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
255) தொல்கபிலர்
256) நக்கண்ணையார்
257) நக்கீரர்
258) நப்பசலையார்
259) நப்பண்ணனார்
260) நப்பாலத்தனார்
261) நம்பிகுட்டுவன்
262) நரிவெரூத்தலையார்
263) நரைமுடி நெட்டையார்
264) நல்லச்சுதனார்
265) நல்லந்துவனார்
266) நல்லழிசியார்
267) நல்லாவூர்க் கிழார்
268) நல்லிறையனார்
269) நல்லுருத்திரனார்
270) நல்லூர்ச் சிறுமேதாவியார்
271) நல்லெழுநியார்
272) நல்வழுதியார்
273) நல்விளக்கனார்
274) நல்வெள்ளியார்
275) நல்வேட்டனார்
276) நற்சேந்தனார்
277) நற்றங்கொற்றனார்
278) நற்றமனார்
279) நன்பலூர்ச் சிறுமேதாவியார்
280) நன்னாகனார்
281) நன்னாகையார்
282) நாகம்போத்தன்
283) நாமலார் மகன் இளங்கண்ணன்
284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
285) நெடுங்கழுத்துப் பரணர்
286) நெடும்பல்லியத்தனார்
287) நெடும்பல்லியத்தை
288) நெடுவெண்ணிலவினார்
289) நெட்டிமையார்
290) நெய்தற் கார்க்கியார்
291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
292) நெய்தற்றத்தனார்
293) நொச்சி நியமங்கிழார்
294) நோய்பாடியார்
295) பக்குடுக்கை நன்கணியார்
296) படுமரத்து மோசிகீரனார்
297) படுமரத்து மோசிக்கொற்றனார்
298) பதடிவைகலார்
299) பதுமனார்
300) பரணர்
301) பராயனார்
302) பரூஉமோவாய்ப் பதுமனார்
303) பறநாட்டுப் பெருங்கொற்றனார்
304) பனம்பாரனார்
305) பாண்டரங்கண்ணனார்
306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்
309) பாண்டியன் பன்னாடு தந்தான்
310) பாண்டியன் மாறன் வழுதி
311) பாரதம் பாடிய பெருந்தேவனார்
312) பாரிமகளிர்
313) பார்காப்பான்
314) பாலைக் கௌதமனார்
315) பாலை பாடிய பெருங்கடுங்கோ
316) பாவைக் கொட்டிலார்
317) பிசிராந்தையார்
318) பிரமசாரி
319) பிரமனார்
320) பிரான் சாத்தனார்
321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
322) புல்லாற்றூர் எயிற்றியனார்
323) பூங்கணுத் திரையார்
324) பூங்கண்ணன்
325) பூதங்கண்ணனார்
326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
327) பூதம்புல்லனார்
328) பூதனார்
329) பூதந்தேவனார்
330) பெருங்கண்ணனார்
331) பெருங்குன்றூர்க் கிழார்
332) பெருங்கௌசிகனார்
333) பெருஞ்சாத்தனார்
334) பெருஞ்சித்திரனார்
335) பெருந்தலைச்சாத்தனார்
336) பெருந்தேவனார்
337) பெருந்தோட் குறுஞ்சாத்தன்
338) பெரும் பதுமனார்
339) பெரும்பாக்கன்
340) பெருவழுதி
341) பேயனார்
342) பேய்மகள் இளவெயினி
343) பேராலவாயர்
344) பேரிசாத்தனார்
345) பேரெயின்முறுவலார்
346) பொதுக்கயத்துக் கீரந்தை
347) பொதும்பில் கிழார்
348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
350) பொத்தியார்
351) பொய்கையார்
352) பொருந்தில் இளங்கீரனார்
353) பொன்மணியார்
354) பொன்முடியார்
355) பொன்னாகன்
356) போதனார்
357) போந்தைப் பசலையார்
358) மடல் பாடிய மாதங்கீரனார்
359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
363) மதுரை இனங்கௌசிகனார்
364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
368) மதுரைக் கணக்காயனார்
369) மதுரைக் கண்டராதித்தனார்
370) மதுரைக் கண்ணத்தனார்
371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்
372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
374) மதுரைக் காருலவியங் கூத்தனார்
375) மதுரைக் கூத்தனார்
376) மதுரைக் கொல்லன் புல்லன்
377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
378) மதுரைச் சுள்ளம் போதனார்
379) மதுரைத் தத்தங்கண்ணனார்
380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
381) மதுரைத் தமிழக் கூத்தனார்
382) மதுரைப் படைமங்க மன்னியார்
383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
386) மதுரைப் புல்லங்கண்ணனார்
387) மதுரைப் பூதனிள நாகனார்
388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
389) மதுரைப் பெருங்கொல்லன்
390) மதுரைப் பெருமருதனார்
391) மதுரைப் பெருமருதிளநாகனார்
392) மதுரைப் போத்தனார்
393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
396) மதுரை வேளாசன்
397) மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
400) மருதம் பாடிய இளங்கடுங்கோ
401) மருதனிளநாகனார்
402) மலையனார்
403) மள்ளனார்
404) மாங்குடிமருதனார்
405) மாடலூர் கிழார்
406) மாதீர்த்தன்
407) மாமிலாடன்
408) மாமூலனார்
409) மாயேண்டன்
410) மார்க்கண்டேயனார்
411) மாலைமாறன்
412) மாவளத்தன்
413) மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
414) மாறோக்கத்து நப்பசலையார்
415) மாற்பித்தியார்
416) மிளைக் கந்தன்
417) மிளைப் பெருங்கந்தன்
418) மிளைவேள் பித்தன்
419) மீனெறி தூண்டிலார்
420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
422) முடத்தாமக்கண்ணியார்
423) முடத்திருமாறன்
424) முதுகூத்தனார்
425) முதுவெங்கண்ணனார்
426) முப்பேர் நாகனார்
427) முரஞ்சியயூர் முடிநாகராயர்
428) முள்ளியூர்ப் பூதியார்
429) முலங்கீரனார்
430) மையோடக் கோவனார்
431) மோசிக்கண்ணத்தனார்
432) மோசிக்கீரனார்
433) மோசிக்கொற்றன்
434) மோசிக்கரையனார்
435) மோசிசாத்தனார்
436) மோசிதாசனார்
437) வடநெடுந்தத்தனார்
438) வடவண்ணக்கன் தாமோதரன்
439) வடமோதங்கிழார்
440) வருமுலையாரித்தி
441) வன்பரணர்
442) வண்ணக்கன் சோருமருங்குமரனார்
443) வண்ணப்புறக் கந்தரத்தனார்
444) வாடாப்பிராந்தன்
445) வாயிலான் தேவன்
446) வாயிலிலங்கண்ணன்
447) வான்மீகியார்
448) விட்டகுதிரையார்
449) விரிச்சியூர் நன்னாகனார்
450) விரியூர் நன்னாகனார்
451) வில்லக விரலினார்
452) விழிகட்பேதை பெருங்கண்ணனார்
453) விற்றூற்று மூதெயினனார்
454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
455) வினைத் தொழில் சோகீரனார்
456) வீரை வெளியனார்
457) வீரை வெளியன் தித்தனார்
458) வெண்கண்ணனார்
459) வெண்கொற்றன்
460) வெண்ணிக் குயத்தியார்
461) வெண்பூதன்
462) வெண்பூதியார்
463) வெண்மணிப்பூதி
464) வெள்ளாடியனார்
465) வெள்ளியந்தின்னனார்
466) வெள்ளிவீதியார்
467) வெள்வெருக்கிலையார்
468) வெள்ளைக்குடி நாகனார்
469) வெள்ளைமாளர்
470) வெறிபாடிய காமக்கண்ணியார்
471) வேட்டகண்ணன்
472) வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
473) வேம்ப
ற்றுக் குமரன்
Back to top Go down
 
பெண்களும் மலரணிதலும் (சங்க காலம்)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்!
» காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்
» சங்க இலக்கியம்
» தமிழ்ச் சங்கம்
» சங்க இலக்கியம் {பதினெண் மேற்கணக்கு }

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: