BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழில் சிறுபான்மை இலக்கியம் Button10

 

 தமிழில் சிறுபான்மை இலக்கியம்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தமிழில் சிறுபான்மை இலக்கியம் Empty
PostSubject: தமிழில் சிறுபான்மை இலக்கியம்   தமிழில் சிறுபான்மை இலக்கியம் Icon_minitimeSun Mar 14, 2010 4:26 pm

தமிழில் சிறுபான்மை இலக்கியம்



பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுத துணிகிறேன் வகைப்படுத்தாமல் இலக்கியத்தை அறிந்துகொள்ளுவது சிரமம் என்பதனால் , வரலாற்றுபின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு , எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமேயொழிய சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையை செய்வது அபாயகரமான ஒன்று . வகுப்புவாதத்தின் பிடியில் அழிவை நோக்கி செல்லும் இந்த தேசத்தில் அது மேலும் பிளவு உருவாகவே வழிவகுக்கும் . விமரிசன தளத்துக்கு அப்பால் வாசக தளத்தில் இப்பிரிவினை ஒரு போதும் நிகழ்ந்துவிடலாகாது . காரணம் இலக்கிய அனுபவத்தில் மத, இன ,மொழி பிரிவினைகள் இல்லை .

மதச்சிறுபான்மையினரால் எழுதப்பட்ட ஆக்கங்களே இக்கட்டுரையில் சிறுபான்மை இலக்கியம் எனும்போது குறிக்கப்படுகிறது .

பிறமதங்கள் ,கருத்தியல்கள் ஆகியவற்றின் பாதிப்பே ஒரு இலக்கியத்தை அடுத்தகட்டம் நோக்கி நகரச் செய்கிறது . பெளத்த சமண மதங்களின் வருகையினாலேயே தமிழிலக்கியம் காப்பிய காலகட்டம் நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியது என்பது நாமறிந்ததே.இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு.முழுமையான பெளத்த காவியமும் [மணிமேகலை ] இஸ்லாமிய காவியமும் [ சீறாப்புராணம்] உள்ள ஒரே மொழி தமிழ் தான்.பல காரணங்களினால் இவ்விரு காவியங்களின் முக்கியத்துவமும் இங்கு உணரப்படவில்லை . நவீனச்சூழலிலும் பேசப்படவில்லை.[சீறாப்புராணம் குறித்து நான் மலையாளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன் ] தமிழின் நீதி ,மருத்துவ, இலக்கண நூல்களில் கணிசமானவை பெளத்த சமண மதங்களின் கொடையாகும் . விவாதத்துக்கு உரிய கணிப்பென்றாலும் என் தரப்பு தத்துவ விவாதத்தை இம்மதங்களே தமிழுக்கு கொண்டு வந்தன என்பதே.

தமிழகத்துக்கு அடுத்து வந்த பெரும் மதம் இஸ்லாம் .வெகுகாலம் இஸ்லாம் வணிகர்களின் மதமாக , அரபுமொழி சார்ந்ததாக இருந்து வந்திருக்க வேண்டும் . அதை தமிழக வெகுஜன மொழிக்கும் இலக்கிய தளத்துக்கும் கொண்டுவந்தவர் தமிழக இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையான மார்க்க மாமேதை சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் . அவரது மாணவரான வள்ளல் சீதக்காதி இரண்டாமர் . இருவருமே இலக்கியவாதிகளல்லர். துரதிர்ஷ்டவசமாக தமிழ்க் கலாசாரத்தின் முக்கியமான ஆளுமைகளான இவர்களைப்பற்றி இங்கு அதிகம் பேசப்பட்டதில்லை . [ஆழமாக இவர்களை படித்தும் கூட நானும் மலையாளத்திலேயே இவர்களைப்பற்றி எழுத முடிந்துள்ளது . அதற்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை குறித்த என் அச்சமே காரணம் . மேலும் சிறு விமரிசனக்குறிப்பைக்கூட அபாயகரமாக திரித்துவிடும் அளவுக்கு எனக்கு இலக்கிய எதிரிகள் இங்கு உண்டு .]

சமகாலத்தவர்களான இவ்விருவருக்கும் உள்ள பொது அம்சம் அதுவரை கலாச்சார ரீதியாக இஸ்லாமுக்கும் பிறருக்கும் இடையே இருந்த இடைவெளியை இவர்கள் குறைத்தார்கள் என்பதுதான் . ஹிஜ்ரி 1042 ல் காயல்பட்டினத்தில் பிறந்த சதக்கா தன் அரபுமொழிப்புலமையாலும் மார்க்கத் தேர்ச்சியாலும் சதக்கத்துல்லாஹ் என புகழ்பெற்றார் . இல்லறத்துறவு வாழ்க்கையை மேற்கொண்ட இவர் தமிழிலும் பெரும் பண்டிதர் . படிக்காசுத்தம்புரான் ,நமச்சிவாயபுலவர் போன்ற அக்கால சைவ அறிஞர்கள் பலர் இவருடைய மாணவர்களாக இருந்தனர். ஏராளமான மாற்று மதத்தினர் — அவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்துக்குமேல் — இவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள் . தமிழகம் முழுக்க பெரும்பாலான ஊர்களில் இவர் வந்து சென்றதாக ஐதீகக் கதை உள்ளது . அக்கால சூஃபி க்கள் பெரும்பாலானவர்களிடம் இவர் உரையாடியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது .73 வயது வரை உயிர் வாழ்ந்தார் .

‘ ‘ செத்தும் கொடுத்த சீதக்காதி ‘ ‘ என்று படிக்காசுப் புலவரால் பாடப்பட்ட சீதக்காதியின் இயற்பெயர் ஷேக் அப்துல் காதர் .சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மாண்வர் இவர் . கடல்வணிகம் செய்த பெரும் செல்வந்தர் .ராமநாதபுரம் கிழவன் சேதுபதியிடம் அமைச்சராக இருந்தபோது இவர் பொறுப்பில்தான் ராமநாதபுரம் கோயில் புதுப்பிக்கப்பட்டு இன்றைய நிலையில் அமைக்கப்பட்டது. மேலும் பல ஆலய்ங்களு திருப்பணியும் குடமுழுக்கும் செய்வித்துள்ளார். இந்தியக் கட்டடக்கலையின் அமைப்பில் பல மசூதிகளை கட்டியுள்ளார் . ராமநாதபுரம் மதுரை பகுதிகளில் ஏராளமான அன்னசத்திரங்களும் அமைத்தவர் . தமிழறிவு மிகுந்த சீதக்காதி தமிழறிஞர்களின் புரவலராக இருந்தார்.இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் உருவாக இவர் பெருமுயற்சி எடுத்தார் .

தமிழ்க் காவியங்களில் இலக்கியச்சுவையில் சிந்தாமணி ,சிலப்பதிகாரம் ,மணிமேகலை , கம்பராமாயணம் பெரியபுராணம் ஆகியவற்றுக்கு நிகராக வைக்கத்தக்க பெருங்காப்பியமான ‘சீறாப்புராணத்தை ‘ எழுதிய உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதி கேட்டுக் கொண்டதற்கேற்ப , சதக்கத்துல்லா அப்பா அவர்களிடமும் அவரது மாணவர் மஹ்மூது தீபி அவர்களிடமும் மார்க்க கல்வி பெற்று , அதன் பின்னரே எழுதினார் என்பது வரலாறு .இவர் முடிக்காமல் விட்ட நபியின் வரலாற்றை பனீ அஹம்மது மரைக்காயர் என்பவர் இயற்றியுள்ளதாகவும் அது சின்ன சீறா எனப்படுவதாகவும் தெரிகிறது . பின்பு மொன்னா முகம்மது காதிரி என்பவர் இரு பகுதியையும் இணைத்து தானும் சில பகுதிகளை சேர்த்து முழுமைப்படுத்தியதாக தெரிகிறது . இந்நூல்களை நான் பார்த்ததில்லை .அச்சில் உள்ளனவா என்றும் தெரியவில்லை .

இங்கு ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும் . சதக்கத்துல்லாஹ் அப்பா உள்ளிட்ட கணிசமான இஸ்லாமிய அறிஞர்கள் அரபு மொழியில் எழுதியுள்ளனர் . அவற்றை தமிழ் இலக்கியம் என்று கொள்ளாவிட்டாலும் தமிழக இலக்கியத்தின் பகுதியாக கருதவேண்டும் .வடமொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட தமிழர் ஆக்கங்கள் அவ்வண்ணமே கருதப்படுகின்றன .

தமிழிலக்கியத்தில் செவ்வியல் பண்புகொண்ட இஸ்லாமிய இலக்கியங்கள் குறைவெனவே கொள்ள வேண்டும் . சீறாப்புராணம் போல காவியச்சுவை உடைய எந்தப்படைப்பும் இல்லை என்பது என் எல்லைக்குட்பட்ட வாசிப்பிலிருந்து அடைந்த முடிவு. பிற்கால இஸ்லாமிய இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்களின் தொடர்ச்சியாக எழுதபட்டவை . மாலை , கண்ணி எனும் வடிவங்கள் பிரபலமாக இருந்திருக்கின்றன. இன்று இவை தற்செயலாக கிடைத்தால்தான் உண்டு . இஸ்லாமிய இலக்கியங்களுக்கான ஆய்வு மையமும் , ஆவணக் காப்பகமும் இன்று பெரிதும் தேவையாகின்றன. ஹிஜ்ரி 1270 களில் கண்ணகுமது மகதூம் முகம்மது புலவர் தன் தனிப்பட்ட முயற்சியால் அச்சில் ஏற்றி வெளிக்கொணராவிடில் இஸ்லாமிய இலக்கியங்கள் முற்றிலும் அழிந்து விட்டிருக்கும் . ஏறத்தாழ் அறுபது நூல்களை இவர் பதிப்பித்திருக்கிறார் . உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு செய்த சேவையுடன் ஒப்பு நோக்கத்தக்க இப்பெரும் பணி எவ்வகையிலும் தமிழில் அங்கீகரிக்கப்படவில்லை .

இன்று ஒரு கூர்ந்த வாசகனுக்கு கூட இஸ்லாமிய இலக்கியங்களின் பெரும்பகுதி கிடைப்பதில்லை . சிற்றிலக்கியங்களில் பெரும்பாலோர் வாசித்திருக்கக் கூடிய குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களையே நானும் வாசித்திருக்கிறேன். ஹிஜ்ரி 1207 ல் பிறந்த சுல்தான் அப்துல் காதிர் ஒரு பக்கீராக சென்னையில் ராயபுரத்தில் வாழ்ந்து குணங்குடி சித்தர் என அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டு அங்கேயே இறந்தார் . இவரது பாடல்கள் இவர் மாணவர் முஹம்மது ஹுசைன் புலவர் என்பவரால் எழுதியெடுக்கப்பட்டு சீயமங்கலம் அருணாசல முதலியார் என்பவர் பதிப்பித்தார் என்பதும் வரலாறு . என் பெரியப்பா குணங்குடியார் பாடல்களை சிறப்பாகக் கற்றிருந்தார் . தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் சீறாப்புராணம் ஒரு சிகரம் என்றால் குணங்குடியார் பாடல்கள் இன்னொரு சிகரம்.

இசைப்பாடல்களில் இஸ்லாமியப் பாடல்கள் பெரும்புகழ் பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது .பல பாடல்களை நானே கேட்டதுண்டு . கோட்டாறு சையிது அபூபக்கர் புலவர் எழுதிய சீறா கீர்த்தனைகள் ஒருகாலத்தில் குமரிமாவட்டத்தில் புகழ்பெற்றிருந்தன. சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழிசை இயக்கத்தில் தீவிரப் பங்கு பெற்றதும் முக்கியமான பல கீர்த்தனைகளை எழுதியதும் குறிப்பிடத்தக்கவை .

வீரமாமுனிவர் தமிழின் நவீனமயமாக்கலை தொடங்கி வைத்தவர் , உரைநடையின் பிதாமகர்களில் ஒருவர் என்பது நாம் அறிந்ததே. அவரது தேம்பாவணி ஒரு முக்கியமான ஆக்கம் .ஆனால் அது இலக்கியச்சுவை உடைய முக்கியமான காவியமாக எனக்குப் படவில்லை . இன்னொரு கிறித்தவக் காவியமான எச் . ஏ கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும் வெறும் செய்யுளாகவே நின்று விட்டது . ஆனால் இன்னொரு கவனமான வாசிப்புக்குப் பிறகே இது குறித்து திட்டவட்டமாக என்னால் சொல்லமுடியும் .

கிறிஸ்தவ இலக்கியத்தின் மிக முக்கியமான தமிழ்ப் பங்களிப்பு பைபிள் மொழிபெயர்ப்பு தான் . விவிலியத்தின் எளிய கம்பீரமான நடையின் தாக்கம் தமிழில் எழுதப் புகுந்த முக்கியமான எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு . மூத்த தலைமுறையில் சுந்தர ராமசாமி , வண்ணநிலவன், வண்ண தாசன் ஆகியோரின் உரைநடையிலும் புது படைப்பாளிகளில் நான் எஸ் .ராமகிருஷ்ணன் ஆகியோரின் உரைநடையிலும் விவிலியத்தின் மொழித்தாக்கம் மிக வெளிப்படையானது . சரோஜினி பாக்கியமுத்து எழுதிய ‘விவிலியமும் தமிழும் ‘ என்ற ஆய்வு நூல் விவிலியத்தின் தமிழ் தாக்கம் குறித்து பேசும் முக்கியமான நூல் .

அதே சமயம் பொதுவான இலக்கியப் போக்கில் குர் ஆனின் தக்கம் அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்லவேண்டும். விவிலியத்தின் நடை உணர்ச்சிகரமான கவித்துவம் கொண்டது என்றால் குர் ஆனின் நடை கச்சிதமும் வீரியமும் உடையது. ஆனால் குர் ஆன் இஸ்லாமிய எழுத்தாளர்களில் கூட தாக்கம் செலுத்தவில்லை. இதுவே மலையாளத்திலும் உள்ள நிலைமை என விமரிசகர்குறிப்பிடுகின்றனர் . அதற்குக் காரணம் என்ன என்பது யோசிக்கத் தக்கது . குர் ஆன் வெறும் வழிபாட்டுப்பொருளாகவே இஸ்லாமியரால் கூட எண்ணப்பட்டது என்பதும் , அனைத்து மானுடருக்குமான இறைச்செய்தி என்ற முறையில் அது பரவலாக எடுத்துச் செல்லப்படவில்லை என்பதும் முக்கியமான காரணங்கள் என்று படுகிறது .

பைபிளை மனம் தோய்ந்து நான் படிக்கும்போது என் வயது பதினாறு . ஆனால் இருபது வருடம் கழித்தே குர் ஆன் என்னை ஆட்கொள்ளும் நூலாக ஆகியது . என் ஆசிரியரான நித்ய சைதன்ய யதி [நாராயண குருவின் மாணவரான நடராஜ குருவின் மாணவர். தத்துவப் பேராசிரியராக மேலை நாடுகளில் பணியாற்றியவர். 150 நூல்களை ஆக்கியவர் ] தன் வாழ்வின் இறுதி வருடத்தில் குர் ஆனை கற்கவும் ஒரு பகுதியை அழகிய கவித்துவ மொழியில் மலையாளத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார் .அவருடைய மாணவரான உஸ்தாத் ஷெளக்கத் அலியிடமிருந்து நான் குர் ஆனின் சில பகுதிகளை அறிந்த பிறகுதான் அம்மாபெரும் நூலை பயில ஆரம்பித்தேன் . குர் ஆன் அனுபவம் குறித்து மலையாளத்தில் இரு கட்டுரைகளையும் ஆக்கினேன். இந்த ஐந்து வருடங்களில் குர் ஆனை சற்றேனும் படித்த இஸ்லாமியரல்லாத ஒரே ஒரு தமிழ் எழுத்தாளரைக்கூட நான் கண்டதில்லை . அடிப்படையில் இது இஸ்லாமிய அறிஞர்களின் தோல்வியே.

நவீன இலக்கியத்தின் துவக்க காலத்தில் பண்டைய இலக்கியத்தை சமகாலத்துடன் பிணைக்கும் பணியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்த குலாம் காதிர் நாவலரின் பங்களிப்பு முக்கியமானது . இவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவர் . நன்னூலுக்கு இவர் எழுதிய எளிய விளக்கம் பிற்பாடு தமிழை நவீன காலகட்டத்துக்கேற்ப கற்பிக்கும் முயற்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது ‘ .

நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் ஈழ எழுத்தாளரான சித்தி லெவ்வை மரைக்காயர் முக்கிய்மானவர் . [1838 - 1898] அவரது இயற்பெயர் முகம்மது காசிம் . இவர் எழுதிய ‘அசன்பே சரித்திரம் ‘ தமிழின் முதல்கட்ட நாவல்களில் ஒன்று என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் . இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் ‘முஸ்லீம் நேசன் ‘ என்ற இதழை நடத்தியவர் .

நவீன இஸ்லாமிய படைப்பாளிகள் பலர் முக்கியமானவர்கள் .பெயர்களை யெல்லாம் இங்கு சொல்லிவிட முடியாது .ஆரம்ப கால எழுத்தாளர்களில் ‘கருணாமணாளன் ‘ இஸ்லாமிய வாழ்க்கையை பற்றிய சித்திரங்களை அளித்திருக்கிறார் . ‘ ஜெ எம் சாலி ‘ நல்ல கதைகளை எழுதியிருக்கிறார் . களந்த பீர்முகம்மது முக்கியமான படைப்புகளை ஆகியுள்ளார்.ஆயினும் பொதுவாக இலக்கிய வீச்சும் வேகமும் கொண்ட முதன்மையான இஸ்லாமிய படைப்பாளி ‘தோப்பில் முகம்மது மீரான் ‘ என்றே ஓர் இலக்கிய விமரிசகனாக நான் கூறுவேன் . [அவரைப்பற்றி நான் விரிவாக எழுதியதுமுண்டு ].சமீபகாலமாக ‘மீரான் மைதீன் ‘ கவனிப்புக்குரிய கதைகளை எழுதிவருகிறார் .

கவிஞர்களில் அப்துல் ரஹ்மான் , மு மேத்தா ஆகியோர் அதிகமும் பேசப்படும் இஸ்லாமியக்கவிஞர்கள் . ஆனால் இவர்கள் எழுத்து மீது எனக்கு மிகக் கடுமையான எதிர் விமரிசனம் உண்டு .ரகுமானின் பாண்டித்யம் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றாலும் அரசியல் நிலைபாடுகளை ஒட்டி போலியாக உருவாக்கப்படும் கவிதைகள் அவை என்பது என் எண்ணம் . அத்துடன் ஒரு கவிஞன் கண்டிப்பாக காத்துக் கொள்லவேண்டிய அறிவார்ந்த சுய்மரியாதையை அவர் காத்துக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளை புகழ்ந்து தரமிறங்கி அவர் எழுதிய வரிகள் மிக மோசமான முன்னுதாரணங்கள் .

மூத்த தலைமுறை தமிழ் கவிஞர்களில் அபி முக்கியமானவர் . இஸ்லாமியக் கவிஞர்களில் பரவலாக அறியப்பாடாத நவீனக்கவிஞர்கள் ‘நாகூர் ரூமி ‘, ‘ஷாஅ ‘ . இஸ்லாமிய கருக்களை எடுத்து எழுதுவதனால் கவனிக்கப்பட்ட முக்கிய கவிஞர்கள் ஹெச் ஜி ரசூல் , ஹமீம் முஸ்தபா ஆகியோர் . சல்மா சமீபகாலமாக கவனிக்கப்பட்டு வரும் தமிழ்க் கவிஞர்.

ஆனால் இளையதலைமுறை தமிழ் கவிஞர்களில் முக்கியமான நால்வரில் ஒருவராக நான் எப்போதுமே குறிப்பிட்டு வரும் ‘ மனுஷ்ய புத்திரன் ‘ தான் இவர்களில் முதன்மையானர் . இஸ்லாமிய வாழ்க்கை சார்ந்த சித்திரங்களோ இஸ்லாமிய பிரச்சினைகளோ அவர் கவிதைகளில் அதிகமில்லை . ஆனால் இஸ்லாமிய தரிசன அடிப்படையின் உச்ச நிலையில் நின்று கனிவும் கூர்மையும் கூடிய பல கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார் .

நவீனத்தமிழில் கிறித்தவ இலக்கியம் அழுத்தமான பதிவை உருவாக்கியுள்ளது . பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு ஒரு திருப்புமுனையாக அமைந்த படைப்பு என்பது இலக்கிய வரலாறு . ஐசக் அருமைராசன் , மாற்கு , எம். ஜேக்கப் ஆகியோரின் நாவல்கள் குறிப்பிடத்தக்கவை .முகையூர் அசதா சமீபகாலமாக கவனத்துக்கு உள்ளாகிவரும் படைப்பாளி .

இஸ்லாமிய இலக்கியத்தை தமிழுக்கு தொகுத்து தருவதில் மணவை முஸ்தபா அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமான ஒன்று . ‘ தமிழில் இஸ்லாமிய இலக்கியம் ‘ அவருடைய முக்கியமானநூல் . இஸ்லாமிய பண்பாட்டை விரிவாக அறிய உதவும் மாபெரும் ஆக்கம் 1977ல் ‘அப்துற்- றகீம் ‘ அவர்களால் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய கலைக்களஞ்சியம் . நான்கு தொகுதிகள் வெளிவந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல் , தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமைபெறாது நின்றுவிட்டது.

பொதுவாக சொல்லப்போனால் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் காலகட்டத்தில் நடந்த ஒரு படைப்பூக்கக் கொந்தளிப்பை தவிர்த்தால் தமிழில் சிறுபான்மை இலக்கியம் தீவிரமான வளர்ச்சி எதையும் அடையவில்லை என்றே எனக்கு படுகிறது . சீறாபுராணம் ஒரு சிகரம் . குணங்குடியார் பாடல்கள் அபூர்வமான விதிவிலக்கு . தோப்பில் முகம்மது மீரானும் மனுஷ்யபுத்திரனும் மட்டுமே நாம் உலக இலக்கிய மரபை நோக்கி முன்வைக்க ஓரளவேனும் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் . அண்டை மொழியான மலையாளத்திலோ அவர்களின் மிகச்சிறந்த படைப்பாளிகளே சிறுபான்மையினர்தான். வைக்கம் முகம்மது பஷீரும் , சக்கரியாவும் எந்த உலகபெரும் படைப்பாளிக்கும் நிகரானவர்கள்

இது ஏன் என நாம் யோசித்துப்பார்க்க வேண்டும். நமது பொதுச்சூழல் சிறுபான்மையினரின் எழுத்தில் அவர்களுடைய மிகச்சிறந்த தளத்தை எதிர்பார்ப்பதாக இருக்கிற்தா ? சிறுபான்மையினரின் கலாச்சார , இலக்கிய மரபு குறித்த போதிய புரிதல் பொதுச்சூழலில் இல்லை என்பது ஒரு பெரும் குறை . ஆகவே சிறுபான்மை சமூக எழுத்தாளன் தன் வாழ்க்கை குறித்து நேர்மையாக எழுதினால் அது பொதுச்சூழலுக்கு புரிந்துகொள்ளக் கூடியதாகவோ ,ஏற்கக்கூடுவதாகவோ இல்லை .தோப்பில் முகம்மது மீரான் தன் நாவல்களின் நடையையும் சூழலையும் புரியவைக்கவும் ஏற்கச்செய்யவும் கடுமையாக போராடவேண்டியிருந்தது .

மறுபக்கம் சிறுபான்மை சமூகம் தன் எழுத்தாளர்களை மதிப்பதாகவோ , அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதாகவோ இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும் . அதற்கும் தோப்பில் முகம்மது மீரான் போராட வேண்டியிருந்தது நாமறிந்ததே . சகஜமான சுதந்திரத்துடன் எழுத்தாளர்கள் எழுதும்போதும் , அவர்களை சமூகம் கூர்ந்து கவனிக்கும்போதும் மட்டுமே உயர்ந்த இலக்கியம் உருவாகிறது . பஷீர் தன் சமூகத்தை மிகக் கடுமையாக விமரிசித்திருக்கிறார் . ஆனால் அவர் எப்போதுமே உச்ச கட்ட அங்கீகாரத்தையே அடைந்திருக்கிறார் .

ஒரு மொழிச்சூழலில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளன் தன் அடையாளத்தைத் தவிர்த்துவிட்டு எழுதுகிறான் ,பொது மொழியையும் பொதுவான சூழலையும் தேர்வு செய்கிறான் என்றால் அச்சமூகம் கருத்தியல் அடக்குமுறை கொண்ட சமூகம் என்றே பொருள். படைப்பூக்கம் கொண்ட சுதந்திர சமூகத்தில் தன்னுடைய தனித்தன்மை கொண்ட மொழியும் சூழலும் அவனுக்கு ஒரு பெரிய சொத்தாகவே இருக்கும் . வாழும் சமூகமும் மொழியும் ஒருபோதும் ஒற்றைப்படையான இயக்கம் கொண்டிருக்காது .


-jayamohan-
Back to top Go down
 
தமிழில் சிறுபான்மை இலக்கியம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழில் ஒரு சல்மான் ருஷ்டி -
» இசுலாமிய தமிழ் இலக்கியம்
» சங்க இலக்கியம்
» தற்கால இலக்கியம்
» கடித இலக்கியம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: