BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள் Button10

 

 ஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

ஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள் Empty
PostSubject: ஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள்   ஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள் Icon_minitimeFri Mar 25, 2011 9:45 am

ஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள்


ரமணியின் அறைக்கு செல்லவேண்டுமானால் அரசரடியில் இறங்கினால் சரியாக இருக்கும் என்று சொல்லியிருந்தான். இறங்கி நடந்து வடக்குவாசலில் நுழைந்தால் அவன் சொன்ன மாதிரியே ஒரு மேன்சன் இருந்தது. அதன் நுழைவுக்கடுத்தாற் போல இருந்த ஹோட்டலில் ஒரு காஃபி சாப்பிட்டேன்.

கிங் சைஸ் ஃபில்டரை பற்ற வைத்தேன். முதல் இழுப்பை உறிஞ்சி வெளியில் விட்ட போது என்னை கடந்தவர் லேசாக முறைத்தார். அவர் வாயில் இருந்த பீடா விழுந்து விடக்கூடாது என்ற காரணம் கூட என்னை எதுவும் சொல்லாமல் ஒரு முறைப்புடன் சென்றிருக்க கூடும் என நினைக்கும் பொழுதே சிரிப்பு வந்து விட்டது. லேசாக சிரிக்க தொடங்கியவன் என் தனிமை தந்த வெட்கத்தால்
அந்தச் சிரிப்பை நிறுத்திக்கொண்டேன்.

இன்னும் ரமணி இறங்கி வரவில்லை. அவன் எப்பொழுதும் அப்படி தான். நேரம் தவறுதலை தவறாமல் கடைப்பிடிப்பவன். தவசி சொல்லுவான் "அவன் சிகரெட் அடிச்சா கூட 10 நிமிசம் அடிக்கிறாண்டா.." என்று. அப்படிப்ப்பட்ட ஒரு நிதானம். முனிவர் மாதிரி இருப்பான். உனக்கு நன்றாக இல்லை என கிட்டத்தட்ட எல்லாராலும் சொல்லப்பட்ட அந்த தாடியை விடாமல் ட்ரிம் செய்து வளர்ப்பான். கேட்டால் "விடுறா. பழகிருச்சு. இருந்துட்டு போகட்டும்" என்பான். மெல்ல பேசுவான். அவன் சொல்வதெல்லாமே ரகசியத் தொனியில் தான் இருக்கும். யாரையும் புண்படுத்தாத குரல். உள்ளே விஷம். அது மற்றவருக்கு தெரியாது. தவசி கத்திக்கொண்டே இருந்ததற்கு ரமணி தான் காரணம். ஆனால் ஊரைப் பொருத்த வரை தவசி கெட்டவன். ரமணி நல்லவன்.

அல்ப விஷயங்களுக்கு கூட சண்டை வரும் எங்களுக்குள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் தவசியின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புறக்கணித்து விட்டு ரமணிக்கு பரிந்து பேசியிருக்கிறேன். . அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் ரமணி எப்பொழுதாவது போதைஉரை நிகழ்த்தும் போது அதைப் பெரிய விஷயமாக சொல்லுவான்.

என்னை பாராட்டிக்கொண்டே இருப்பான். அது தவசிக்கு ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும் என்பது கூட அந்தப் பாராட்டுக்களின் நோக்கமாக இருக்கலாம். ஆனாலும் இரண்டு முரண்பாடுகளுக்கு இடையில் சுக இடைவெளி ஒன்றில் நான் கழித்த கல்லூரி காலம் என்னால் மறக்க இயலாதது.

கிராமத்திலிருந்து வந்த தவசியும் பாலக்காட்டை சேர்ந்த ரமணியும் எப்படி ஒருவரை ஒருவர் கொலை செய்துகொள்ளாமல் இருந்தனர் என்பது வரலாற்றுக்கே வியப்பளிக்க கூடிய விஷயம். ஆனால் இடையில் நான் இருந்ததால் அப்படி நடக்கவில்லை. எதற்கு அடித்துக்கொள்வார்கள், ஏன் சண்டை வருகிறது என்றெல்லாம் யாராலுமே யூகிக்க முடியாது.

ஒரு நாள் கடைசி வருடப் பரிட்சைக்கு எல்லாரும் மும்முரமாக தயாராகிக்கொண்டிருந்த போது, ஏற்கனவே நாங்கள் 4 பேர் படித்துக்கொண்டிருந்த பொழுது அறைக்குள் வந்தான். அவன் லேசாக உள்-அபிஷேகம் செய்து கொண்டு வந்திருப்பதை மோப்பம் பிடித்த நான் அவன் கவனிக்காத தருணத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்தவர்களிடம் மெல்லிய குரலில் எச்சரித்தேன்.

மற்றவர்கள் அமைதியாக இருக்க, தவசி கிண்டலான குரலில் "என்ன ரமணி. .? மப்பா. . ?" என்றான்.

ரமணி இந்த நேரடி தாக்குதலை எதிர் பார்க்காதவனாய். . "மப்பு தான். . இப்ப என்ன.. ?" என்றான் அமைதியான குரலில்.

"என்ன சோகமா?" என்றான் கிண்டலுடனேயே. அதற்கு பெருமூச்சை வெளியிலிட்டபடியே "சித்ரா நு ஒருத்தி சூப்பர் டிக்கெட்டு.. வர்ரேன்னா... கடசீல வர்லை.. அதான் சரக்கடிச்சேன்" என்றான். சித்ரா என்பது தவசியின் காதலி பெயர். வேகமாக எழுந்த தவசியையும் ரமணியையும் நாங்கள் விலக்கிய போது இருவரும் பிறாண்டி முடித்திருந்தனர்.

விலங்கினங்களாய் குரோதம் காட்டிய இரண்டு பேரை இன்னும் ஒரு மாசம் கையாண்டு விட்டால் போதும். படிப்பு முடிந்து விடும் என்ற நிலையில் அனைவருமே பரிட்சைகளில் மூழ்கினோம். அதன் பின் கடைசீ பரிட்சை எழுதின பின் தவசிக்கு வேறு ஒரு பிரச்சினை வந்தது. சித்ரா வீட்டாருக்கு காதல் விஷயம் தெரிந்ததால் அவளைக் கூட்டிக் கொண்டு எங்காவது சென்று வாழ்வை தொடங்கும் முடிவில் அவன் எல்லாரிடமும் பணம் சேகரித்துக்கொண்டிருந்தான். கிட்டதட்ட 10000 ரூபாய். விடிந்தால் வந்து விடுவாள் என்ற நிலையில் அந்த மறக்க முடியாத பிரிவின் இரவு தொடங்கியது. ரமணி நல்ல போதை.

அறைக்குள் நுழைந்த தவசி தன் பொருட்களனைத்தையும் பெட்டியிலடுக்கி விட்டு திடீரென என்னை அழைத்தான். "பணத்தை காணம்டா... எதுல விளையாடுறதுன்னு ஒரு அளவில்லையா.. ?" என்றான். அதற்கடுத்த சில நேரம் இவன் கேட்க, ரமணி மறுக்க... ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த சிறு நகவெட்டியின் இணைப்பில் இருந்த கத்தியால் தீவிரமாக ரமணியை கிழிக்கவே தொடங்கிவிட்டான் தவசி.

பலனெதுவுமில்லை. வழக்கம்போலல்லாமல் நான் அமைதியாயிருந்தேன். என்னால் ரமணியை இந்த விஷயத்தில் ஆதரித்துப் பேச முடியாமல் போனதும் ஒரு காரணம். அவிழ்த்து விட்ட காளைகள் உக்ரமாக சண்டையிட்டு முடித்தன. தவசி கோபமாய் போய் விட்டான். அதன் பின்னும் வெகு நேரம் ரமணி தவசிடம் பேசுவதாக சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தான்.

இதெல்லாம் நடந்து எட்டு வருடங்களாகிவிட்டன. சொந்த ஊரான மதுரைக்கு நான் வந்தும் ஏழு வருடங்களாகி விட்டன. தவசியை அதன் பின் நான் சந்திக்கவே இல்லை. நான் வெளிநாட்டில் இருந்த பொழுது யதேச்சையாக ஒரு நாள் இண்டெர்னெட்டில் என் பழைய கல்லூரி மாணவர்களின் வலைப்பூ ஒன்றில் ரமணியின் செல் நம்பர் கிடைத்தது. அதற்கு தொடர்பு கொண்டதில் அவன் மதுரையில் தான் பணி புரிந்து கொண்டிருப்பதாக சொன்னான்.

சீக்கிரத்திலேயே நான் நாடு திரும்பி மதுரைக்கு வந்தேன். இதோ ரமணியை எட்டு வருடங்கள் கழித்து பார்க்கப் போகிறேன். அடுத்த சிகரட்டை நான் பற்ற வைக்க எடுத்தேன். ரமணி இறங்கி வந்து என் கையிலிருந்த சிகரட்டை இயல்பாக பிடுங்கிக்கொண்டு சிரித்தான்.

"வாடா, வெள்ளைக்காரா. . எப்டி இருக்கே..? வழுக்கை ஸ்டார்ட் ஆய்டுச்சு போல..?" என்றான். நான் மலர்ச்சியாக "ரமணி... நல்லா இருக்கியா மாப்ள.. ?" என்றேன்.

"எனக்கென்னடா.? ஏரியா மேனேஜர். இந்த மதுரைக்கே ராஜாடா.... நல்லா இருக்கேன்." பேசிக்கொண்டே அவன் படியேற துவங்க இரண்டாவது மாடியில் 222 என்ற எண்ணுள்ள அறையை திறந்து என்னை உள்ளே அழைத்தான். நல்ல வசதியான அறை. குளிரூட்டப்பட்டது.

"சரக்கு சாப்டுவோம் மாப்ள... என்றவன் அறை வாசலில் நின்று ரூம்பாயை வரவழைத்து பணம் கொடுத்து அனுப்பினான். மறுபடி உள்ளே வந்தவன் தனது பீரோவிலிருந்து ஒரு புதிய கைலியை எடுத்து கொடுத்து என்னை உடைமாற்றி கொள்ள சொன்னான்.

அதே ரமணி. நான் கூச்சத்துடன் பேச ஆரம்பித்தேன்.

"ரமணி. . . ரொம்ப சந்தோஷம்டா. உன்னை பார்த்ததுல.. தவசி பத்தி எதாவது தெரியுமா...? நீ சங்கடப்படலைன்னா" எனத் துவங்கியவனை இடைமறித்து "முதல்ல சரக்கு. அப்றம் தான் மத்ததெல்லாம்" என்றபடியே மிக்சிங் எனப்படும் சடங்கை துவங்கினான்.

இரண்டு ரவுண்டு வரை அமைதியாயிருந்தான். தனது மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினான். "ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் தவசி எங்க போனான்னு எனக்கும் தெரியாது. மதுரைக்கு வர்ரதுக்கு முன்னாடி நான் சேலத்துல இருந்தேன். அப்போ தான் தற்செயலா தவசிங்கறவனை பார்த்தேன். தண்ணி, கஞ்சா ஒவராகி கிட்டத்தட்ட சாவோட விளிம்புல இருந்தான். அவனுக்கு என்னை அடையாளமே தெரியலை.

நம்ம கூட படிச்சானே சேலம் பல்ராமன்... அவன் தான் எங்கிட்டே கூட்டிட்டு வந்தான்.. அவனுக்கு சித்ரா கிடைக்கலைங்கறது பெரிய்ய ஏமாற்றம்டா... "

நான் அமைதியுடனும் ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த மது என்னும் திரவம் எனக்கு இந்த அளவுக்கு பிடித்தமாய் இருந்ததில்லை. அதற்கு காரணம் ரமணி.

"அப்புறம் நாங்க ரெண்டு பேரும் அவனை ஆஸ்பத்திரில சேர்த்து அப்டி இப்டின்னு ஒரு மாதிரி தேறி வந்தாண்டா... இப்ப சேலத்துலயே என் கம்பனி ஸ்டாக்கிஸ்ட் கிட்டே வேலை பாக்குறான். நான் தான் ஏற்பாடு. ஒரு 10ரூவா சம்பளம். இப்போ அமைதியாயிட்டான். எந்த பழக்கமும் இல்லை.. வேறென்னடா..?"

எனக்கு சந்தோஷமாக இருந்தது. அமைதியாகவும் இருந்தது. கொண்டு வந்த சிற்றுண்டியை பரிமாறிய ரூம்பாய் விலகியவுடன் கேட்டேன்.

"ஏன் மாப்ள. . . தவசி என்னை பத்தி எதுனா கேட்டானா. . ?"

அதுவரை அமைதியாயிருந்த ரமணி பெருமூச்சொன்றை வெளியிட்டான். ஒரு தம்மை பற்ற வைத்தான். "மாப்ள. . . . அவன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சதுக்கப்புறம் ஒரு நாள் சாதாரணமா உன்னை பத்துன பேச்சு வந்துது. அவன் உன் மேல கெட்ட வெறுப்பா பேசுனான். ஏன்னு கேட்டா காரணம் எதும் சொல்லலை. அந்த பணம் காணாமப் போனதுல்ல.. அதை நான் எடுக்கலைன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டான். அதை நீ எடுத்திருப்பேன்னு சந்தேகப்படுறாண்டா முட்டாத்தனமா.. நீ எதும் மனசுல வெச்சுக்காத.. அவனுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்.. புரியுதா. . ?"

"அவன் நம்பர் சொல்லுடா பேசுரேன்... "

"இவன் யார்ரா முட்டாதனமா..? நம்பர் கேக்குறான். உன்னை கேவலமா பேசுவாண்டா.. தேவையா இது. பிடிக்கலைன்னா விலகிடனும்.எனக்கு தெரியும் நீ நல்லவன்னு. அப்புறம் அவங்கிட்டே எதுக்குடா பேசணும்.. ? விட்றா" என்றான்.

"இல்லைடா.. ரமணி. அந்த பணத்தை எடுத்தது நான் தாண்டா. அவன் கிட்டே பேசணும்டா.. மன்னிப்பு கேட்கணும்டா" என்றேன்.

ரமணி எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தான். அவனது கைகள் நடுங்கின. அதிகமான மதுவை நிரப்பிக் குடித்தான். என் முகத்தை என் கண்களை பார்க்கத் தயங்குவது தெரிந்தது. நான் இமைக்காமல்இருந்தேன்.

"மாப்ள.. இதை மறந்துடு இத்தோட. அவன் கிட்டே நீ பேசவேண்டாம். அவன் இப்போ தான் சரியாயிட்டு வர்றான். அவனுக்கு நீ வந்ததோ, அல்லது நீ சொன்னதோ எதுவுமே தெரியவேணாம். இப்படியே விட்று. நீ பேசவேண்டாம் அவன் கிட்டே. நடந்ததெல்லாம் அவனுக்கு சந்தேகமாவே இருக்கட்டும். புரியுதா. . ?"என்றான்.

"ஏண்டா... இப்டி சொல்றே... நான் அவன் கிட்டே பேசக்கூடாதாடா.. ? வலிக்குதுடா. எனக்கு" இப்பொழுது நான் தேம்பத்தொடங்கினேன். என் கட்டுப்பாடுகள் எதுவுமே என்னிடம் பலனளிக்கவில்லை. என்னை அழ அனுமதித்ததே எனக்கு வழங்கப்படும் தண்டனையின் தொடக்கமாகத் தோன்றியது. அவன் என்னிடம் வரவே இல்லை. நானாக சற்று அழுகையை நிறுத்தினேன்.

"வலிக்கும்டா... அதுக்கு தான் சொல்றேன். வலிச்சுக்கிட்டே வாழ்ந்துறலாம். இல்லைன்னா சாக வேண்டியிருக்கும். அவங்கிட்டே சொன்னே... உன்னை கொன்னுருவான். வலிச்சா பரவால்லை... என்ன..?"

அதன் பின் நான் கிளம்பும் வரை நாங்கள் இருவரும் எதையுமே பேசிக்கொள்ளவில்லை.





Back to top Go down
 
ஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தண்டனை ~~ சிறுகதைகள்
» பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம்
» ஜ‌ன்னல் ~~ சிறுகதைகள்
» ~~ வசை ~~ சிறுகதைகள்
» விதை ~~ சிறுகதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: