BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதண்டனை ~~ சிறுகதைகள்  Button10

 

 தண்டனை ~~ சிறுகதைகள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

தண்டனை ~~ சிறுகதைகள்  Empty
PostSubject: தண்டனை ~~ சிறுகதைகள்    தண்டனை ~~ சிறுகதைகள்  Icon_minitimeFri Mar 25, 2011 3:43 pm

தண்டனை ~~ சிறுகதைகள்



ஒரு கைதேர்ந்த கொலைகாரன், நாடி, நரம்பு, பேச்சு, மூச்சு, சுவாசம் என சகலமும் கொலை வெறியால் நிறைந்து, அடங்காத கொலைப்பசியில் எதிரியைக் கைக்கெட்டும் தூரத்தில் கண்டம் துண்டமாய்க் கிழித்துப்போடும் வன்மத்தில் அவன் மீது அரிவாளுடன் பாய‌ அவதானிக்கும் நிலையில் அவனின் மனநிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? எதிரியை மூர்க்கமாய்த் தாக்க வேண்டி, உள்ளங்கைகள் இறுக்கிப் பிடித்த உருட்டுக்கட்டையைச் சுற்றி தசை நார்கள் இருகி கட்டையின் தின்மையை எதிர்க்கும் நிலையில் அவன் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? சட்டென ஒரு மூர்க்கம் உடலெங்கும் இறங்கி திக்குத் தெரியாமல் அங்குமிங்கும் ஓடி, ஒரு வன்மம் இன்னும் இன்னும் அதிகரிக்கும் நிலையில் அவன் மன நிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு?

தெரியாதா! எனக்கும் இதற்கு முன் தெரியாது தான். ஆனால் இப்போது நானிருக்கும் நிலை அப்படி ஒன்றாக இருக்கலாமென்று தோன்றியது. என் ஒரு கஸ்டமரின் காரை சர்வீஸ் செய்ய பழுதுபட்ட ரேடியேட்டருக்கான ஸ்பேர் பார்ட் வாங்கலாமென்று போட்டிருந்த சட்டை பாண்டுடன் பைக்கில் வந்தவன் நான். ஆனால் இப்போது என் கையில் ஒரு உருட்டுக்கட்டை. இதோ இந்த ஒதுக்குப்புறமாக உள்ளடங்கி வேலை பாதியில் நின்று போன ஒரு கட்டடத்தில் மறைவாய் நின்றபடி காத்துக்கொண்டிருக்கிறேன் நான். இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. இங்கு இருளாய் இருந்தது. யாருமில்லை. இன்று சனிக்கிழமை. என் கணிப்பு சரியாக இருந்தால் நாளையும் யாரும் வேலைக்கு வரமாட்டர். இன்றே ரத்தம் வர அடித்துப்போட்டு, சத்தம் போடாமலிருக்க வாயை உடைத்து, ரணமான இடங்களில் மண்ணடித்து, நகராமல் இருக்க கை கால்களை உடைத்துப்போட்டால், இரண்டு நாட்களுக்கு யாரும் வரமாட்டர். கிருமி அண்டி ரணப்பட்ட இடங்களில் நோய் பீடிக்கும். சீழ் பிடிக்கும். கொலையாக இல்லாவிட்டாலும் ஆறாத காயங்கள் பல உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும். அதற்கு இந்த இடம் தான் சரி.

என் பைக் பக்கத்து தெருவில் ஒரு மர நிழலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நான் அவனுக்காக காத்திருக்கிறேன். இந்த வழியாகத்தான் ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் போனான். அவன் போய் ஒரு மணி நேரம் இருக்கும். இதே வழியில்தான் வந்தாக வேண்டும். ஒரு மணி நேரம் முன் போனதால், இன்னேரம் திரும்பி வரலாமென்று எனக்கு தோன்றுகையிலேயே தூரத்தில் யாரோ ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் வருவது தெரிந்தது. அவனா என்று கண்களைச் சுருக்கிப் பார்த்தேன் நான். அவனேதான். அதே அரக்கு நிற கட்டம்போட்ட சட்டை. பச்சை நிறத்தில் லுங்கி.

சுதாரித்துக்கொண்டேன். என் வ‌ல‌துகையில் அந்த‌ உருட்டுக்க‌ட்டை இறுக்கிப் பிடித்தேன். என் கையில் அது திட‌மாக‌ பொறுந்திற்று. சரியான உருட்டுக்கட்டை இந்தத் தாக்குதலுக்காகத் தானாகவே அமைந்துவிட்டதாய்த் தோன்றியது. சுற்றிலும் யாரும் இல்லை. நான் ம‌றைந்திருக்கும் இட‌த்திலிருந்து அவ‌ன் வ‌ந்துகொண்டிருந்த‌ ம‌ண் சாலை அருகாமைதான். அத‌னால் க‌ண்ணிமைக்கும் நேர‌த்தில் அவ‌ன் அருகே வ‌ருகையில் அவ‌ன் முன்னே பாய்ந்து, அவ‌ன் முக‌த்தை நோக்கி வேக‌மாக‌ க‌ட்டையை வீசினால், முக‌ம் குலைந்து போகும். மூக்கு சில்லு உடைந்து ர‌த்த‌ம் கொட்டும். தாக்க‌ம் அதிக‌மாக‌ இருந்தால் க‌ழுத்தெலும்பு உடைந்து மூச்சுக்குழ‌ல் அடைத்து உயிர் போகும். அத‌னால் அத்த‌னை வேக‌ம் வேண்டாம். அவ‌ன் உயிரோடு இருக்க‌வேண்டும். ஆனால் ந‌டைப்பிண‌மாக‌ இருக்க‌ வேண்டும். அதனால் வேகம் குறைத்து வீச வேண்டும். மூர்ச்சையாகும் அளவு வீசினால் போதும். நிலைகுலைந்து விழும் அவனை உடனே அந்தக் கட்டிடத்தில் இருட்டான பகுதிக்கு இழுத்து வந்தவிட வேண்டும். அவனின் மொபெட் சாலையில் கிடக்குமே. யாராவது பார்த்துவிட்டால்?

மணி மதியம் 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை. அதனால் அவன் சுயநினைவிழக்கும்வரை அவனை அடிக்கும் வரைக்கும் சற்று நேரம் அது ரோட்டில் கிடந்தாலும் பெரிதாக பிரச்சனை வராது என்றே தோன்றியது. அவன் நெருங்கிக்கொண்டிருந்தான். அந்த உருட்டுக்கட்டையை நான் இறுக்கியபடி அவன் மேல் பாய ஆயத்தமானேன்.

அவனின் மொபெட் மிக அருகில் நெருங்க, உருட்டுக்கட்டையை ஓங்கியபடி மறைவிலிருந்து திடீரென்று அவன் மேல் பாய்ந்து உருட்டுக்கட்டை வேகமாய் பக்கவாட்டிலிருந்து அவன் முகத்தை நோக்கி இறக்கினேன். அது அவன் மூக்கையும் வாயையும் அதகமாக தாக்கியிருக்கவேண்டும்.

'அ ஆஆஆஆ ம்மா' என்றபடி அவன் கீழே விழுந்தான். நிலைகுலைந்த மொபெட்டின் பின் சக்கரம் சறுக்கியபடி என் கால்களில் இடித்ததில் நானும் அவன் மேல் விழுந்தேன். என் கையிலிருந்த உருட்டுக்கட்டை சற்று தொலைவில் போய் விழுந்தது. நான் சுதாரித்துக்கொண்டு உருட்டுக்கட்டையை நோக்கி ஓட அவன் திடீரென்று நடந்த தாக்குதலில் சுதாரித்து வலியில் முனகிக்கொண்டே மூக்கிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட எழ முயற்சிசெய்வது தெரிந்தது. அப்போது தான் கவனித்தேன். அவனின் இடது கால், முட்டிக்கு கீழே இருக்கும் பகுதி அவனுக்கு இல்லை. ஊனமுற்றவனா இவன்!! என் கோபம் அப்போதுதான் தலைக்கேறியிருக்கவேண்டும். வேகமாக அந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் அவன் தலையில் அடித்தேன். எழ முயற்சித்து என் இரண்டாவது தாக்குதலில் அவன் மீண்டும் விழுந்தான்.

இப்போதுதான் அவனுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும். தள்ளாடி விழுந்தான் அவன். இப்போது ரத்தம் மண்ணில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் விழுந்தது. யாரெனும் பார்த்துவிடுவார்களோ என்று தோன்றியது. அவனின் அரக்கு நிற சட்டையுடன் அவனை அந்தக் கட்டிடத்தின் இருட்டான பகுதிக்கு இழுத்துச்சென்றேன். அங்கே நெடுஞ்சாலையில் வாகனத்தில் சிக்கி காலுடைந்த நாயைப் போலக் கிடந்தான் அவன். என் ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தேன். அவனை குப்புறப் படுக்க வைத்து கைகளை நீட்டி, கட்டையால் அடித்து உடைத்தேன். பக்கவாட்டில் சரிந்து கிடந்த ரத்தம் தோய்ந்த அவன் முகத்தில் ஓங்கி ஓங்கி தாடை உடையும் வரை அடித்தேன். அத்தனை தடவை அடித்தது என் பயிற்சியின்மையைக் காட்டியது. அவன் இப்போது அடங்கியிருந்தான். உயிர் இருந்தது. ஆனால் நினைவு இல்லை. அவன் கால்களை உடைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே அது உடைந்து இருந்ததால் அதை உடைப்பது இந்த ஒட்டுமொத்த தாக்குதலுக்கே இழுக்கு என்று தோன்றியது.

அவனை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு விரைந்து சுற்றும்முற்றும் பார்த்தேன். சாலையில் யாருமில்லை. அவசர அவசரமாக அவனின் மொபெட்டை இழுத்து கட்டிடத்தின் ஓரத்தில் ஒதுங்கப் போட்டேன். அதன் மீது அங்கு கிடந்த பெயிண்ட் கொட்டிக்கிடந்த சாக்கை போட்டு மூடினேன். முழுவதும் மறையவில்லை. எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. சாலையிலிருந்து மண்ணை வாரி அவன் உடலில் ரத்தம் வரும் இடங்களிலெல்லாம் கொட்டினேன். கைகளைத் தட்டிவிட்டு விறுவிறுவென வெளியில் வந்தேன்.

ஏதும் நடவாதது போல் சாலையில் இறங்கி என் பைக் நிறுத்தியிருந்த அடுத்த தெருவை நோக்கி நடக்கத்தொடங்கினேன். நாளை ஞாயிற்றுக்கிழமை. யாரும் வேலைக்கு வரமாட்டர். நடு நிசியில் இவனுக்கு நினைவு திரும்பினாலும் இவனால் கத்தவோ, நகர்ந்து மற்றவர் பார்வையில் விழும் வகைக்கு அசையவோ முடியாது. அசைக்க உதவக்கூடிய எல்லா உறுப்புக்களையும் அடித்து உடைத்தாயிற்று. நாளை ஒரு நாள் முழுவதிலும் காயங்கள் ரணப்பட்டு, வலி கொடுத்து, சீழ் பிடித்து உடல் கெடும். அவனுக்கு கெட்ட நேரமானால், நாளடைவில் அதுவே அவனை இறக்கவும் செய்யும்.

அவன் மேல் ஏன் இவனுக்கு இத்தனை வன்மம் என்றுதானே யோசிக்கிறீர்கள்? இவன் என்ன செய்தான் தெரியுமா? கல்பனாவிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான். அவளின் கைப் பிடித்து இழுத்திருக்கிறான். தன்னுடன் படுக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறான். இப்படி ஒரு விதவையை பலவந்தப்படுத்துகையில் இவன் ஊனமுற்றவனாக இருந்திருக்கிறான். எத்தனை கொடூரம் நிறைந்தவனாயிருந்திருக்கிறான் பார்த்தீர்களா? கல்பனா யார் தெரியுமா? அவள் ஒரு இளம் விதவை. வயது 25 தான். அவள் கதையை கேட்கும் யாருக்கும் பரிதாபம் வரும். அவளுடையது காதல் திருமணம். ஆசை ஆசையாய் காதலித்தவனை திருமணமான மூன்றே வருடத்தில் ஒரு விபத்தில் பரிகொடுத்துவிட்டு மூலியானவள் அவள். அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். காதல் திருமணத்தால் பெற்றவர்களின் துணையில்லை. தனியொருத்தியாய் அந்த இளம் வயதில் தன் பெண் பிள்ளைக்காக வாழத்தலைபட்டிருக்கிறாள். அவளிடம் இப்படி நடந்திருக்கிறான் இந்த மனசாட்சியில்லாதவன்.

சரி, உனக்கேன் இத்தனை அக்கறை என்று தானே கேட்கிறீர்கள்? என்னைப்போல் நீங்களும் அக்கறைப்படாததால் தான் ஒரு மாதம் முன்பு சீரழிக்கப்பட்டாள் அந்தப் பேதை. அப்போதுதான் அவள் விதவை ஆகியிருந்தாள். இருந்த வீட்டில் இறந்துபோன கணவனின் நினைவுகள் அதிகம் வந்ததால், வேறு வீட்டிற்கு மாறச்சொல்லி சுற்றுப்பட்டவர்களால் அறிவுறுத்தப்பட்டிருககிறாள். அவள் வீடு மாற்றிச் சென்ற புதிய வாடகை வீட்டில்தான் அந்தக் கொடுமை நடந்தது. சில அப்பாக்களின் கடின உழைப்பு அவர்தம் மகன்களிடம் விரயமாகும். அப்படித்தான் விரயமானது என் அப்பா சம்பாதித்து கட்டிய வீடு. என் சோம்பேரித்தனத்துக்கும், முட்டாள்தனத்துக்கும், கையாளாகாத தனத்துக்கும் அந்த ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைத்த பணம் என் வயிற்றை வளர்த்தது. அதே வீடுதான் அவளை கெடவும் வைத்தது.

சிற்றின்பங்களையே சுவைத்து பழக்கப்பட்ட என் சிற்றறிவுக்கு அவளின் வனப்பான உடலையும், எடுப்பான முலைகளையும் பிருஷ்டங்களையும் அன்றி வேறெதுவும் தெரியவில்லை. புதிதாக வந்த வீட்டில் அவளுக்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. அவளின் கையிலிருந்த மொபைலை அவளின் குழந்தை தண்ணீரில் போட்டு பாழடித்திருந்தது. அதனால் தகவல் தொடர்புக்கு அடுத்தவர்களை அண்டியிருக்க வேண்டிய சூழ் நிலை. என் மனைவி ஊருக்குச் சென்றிருந்த ஒரு கரிய நாளில், அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது என் வீட்டு தொலைப்பேசியில். நான் துள்ளிக் குதித்தேன், பின்னாளில் நானே அதற்கு வருத்தப்பட்டு வேறொருவனைக் கொலை கூட செய்யத் துணிவேன் என்றறியாமல். விரைந்தவளை வரவழைத்தேன்.

ஓநாயையும் நம்பி வந்தது அந்தப் புள்ளிமான். அன்று அந்த வீட்டில் அது நடந்தது. முதலில் திமிறினாள். ஆனால் சத்தம் போடவில்லை. நேரம் செல்லச்செல்ல அடங்கிப் போனாள். அவளுக்கும் அதில் விருப்பமோ!!! நான் குதூகளித்தேன். எனக்கொரு இரை சிக்கிவிட்ட மகிழ்வு. பலவீனமாக அவள், என் படுக்கையில் , அவள் மேல் நான் பலவந்தமாய் முயங்கிக்கொண்டிருந்தபோது அவள் கண்கள் கரைந்து கண்ணீரானது ஏனென்று அப்போது புரியவில்லை. அன்றிரவு நான் ஆனந்தமாய் உறங்கினேன், அதுதான் என் நிம்மதியான இரவுகளில் எஞ்சிப்போன கடைசி இரவு என்று விளங்காமல். மறுநாள் அவள் என் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவள் இல்லை. அக்கம்பக்கத்தில் யாரிடமும் அவள் ஏதும் சொல்லவில்லை. என் நெஞ்சை ஈட்டியால் நிதமும் கிழித்தெடுக்க‌ அவளின் மெளனத்தை மட்டும் விட்டுச் சென்றிருந்தாள், யாரோ ஒரு பண்பட்ட தாயால் வளர்க்கப்பட்டவள்.

அவளின் மானம் கப்பலேறிவிடக்கூடாதென்றுதான் அவள் சத்தம் போடாமலிருந்திருக்கிறாள். அவளுக்கு அதில் துளியும் விருப்பமில்லையென்றுதான் திமிறியிருக்கிறாள். இழப்புகளால் சிதிலமடைந்து உடலாலும் உள்ளத்தாலும் பலவீனமாய்த்தான் எதிர்க்க சக்தியின்றி அடங்கிப் போயிருக்கிறாள். அவளின் இருத்தல் தொலைந்து போன அந்த நொடிகள், சம்மட்டியால் என் புத்தியை அறைந்து சொல்லிக்கொண்டிருந்தன அவள் இல்லாத அந்த வீட்டில்.

நினைவு தெரிந்து அன்று தான் நான் அத்தனை அதிகமாய் பலவீனமாய் உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன். ஊருக்கு முன் என் முகத்திரை கிழித்திருக்கலாம். யாருமில்லாத அந்த இரவில் கத்தியால் என் அந்தரங்கம் கிழித்து என்னைக் கொன்றிருக்கலாம். என் முகத்தில் ஆசிட் வீசியிருக்கலாம். போதையில் மயங்கி கிடந்த நேரத்தில் ஆள் வைத்து என்னை அடித்துப் போட்டிருக்கலாம் அல்லது கொன்றே இருக்கலாம். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் நான் திமிருடன் எதிர்த்திருக்கலாம், என்னை படுக்கக் கூப்பிட்டதாக அவள் மேல் சேற்றை வாரி இரைத்திக்கலாம், அவளின் ஃபோன் நம்பரை எல்லா தியேட்டர் பாத்ரூமிலும் விபசாரியென பெயரிட்டு கிறுக்கியிருக்கலாம், நடு இரவில் அவள் வீட்டு முன் அசிங்கம் செய்துவிட்டு கதவு தட்டிவிட்டு ஓடிப்போயிருக்கலாம், அவள் கையால் கொல்லப்பட்டிருந்தால் ஆவியாகி, அவள் மகளை கெடுத்திருக்கலாம்.

ஆனால், அவ‌ள் ஒரேயொரு மெளனத்தால் என்னை நடைப்பிணமாக்கியிருந்தாள். அதை மெளனம் என்று சொல்லிட முடியாதுதான். இயலாமை. ஆணாதிக்க உலகில் ஒரு கைம்பெண்ணாய் என்ன செய்துவிட முடியும் என்று அவள் நினைத்திருக்கலாம். பாலின சமத்துவத்தில் காணாமல் போய்விட்ட பெண்மையின் வெளிகளை தன்னால் மட்டும் தேடிட இயலுமாவென நம்பிக்கை இழந்திருக்கலாம். அத்தனை வருடங்களில் என்னைப் பெற்ற தாயால் கூட கழுவ முடியாத என் ரத்தத்தை பரிசுத்தமாக்கியிருந்தாள். ஒரே நொடியில் என் ஆண்மையின்மேல் நரகலை ஊற்றியிருந்தாள். இனி உயிர் உள்ளமட்டும் என் முகத்தை என்னாலேயே பார்க்க முடியாமல் செய்துவிட்டிருந்தாள். அன்று தொடங்கியது இந்த தண்டனை. இனி அவளுக்கு நான் காவல். எதுவரை காவல்? உங்களில் யாரோ என்னை அடையாளம் கண்டு, இதே போல் ஒரு பாதி கட்டப்பட்ட கட்டிடத்திலோ அல்லது நாற்றமடிக்கும் சாக்கடையிலோ என்னை அடித்து போடும்வரை காவல்.

அவளுக்கே தெரியாமல் அவளைத் தேடினேன். கண்டுபிடித்தேன். எனக்குப் பயந்து நான்கு ஊர் தள்ளிப் போயிருந்தாள் அவ‌ள். அவளுக்கே தெரியாமல் தினமும் அவளை பின்தொடர்கிறேன். அவளிடம் யாராவது தவறாக நடப்பதாக கேள்வியும் பட்டாலே போதும், அவனை இது போல் யாருமில்லாத சமயம் பார்த்து கையை காலை உடைத்து போடுவதென முடிவு செய்தேன். இந்தத் தண்டனைதான் எனக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். ஆறடி, தொண்ணூறு கிலோ எடை, பருத்த தொப்பை, உடல் முழுவதும் கருப்பாய் அடர்த்தியாய் ரோமம், அதிகமாய் குடித்ததால் வீங்கிப்போன தாடை, மிதமிஞ்சிய மைதுனங்களால் விழுந்துவிட்ட முன் தலை வழுக்கை என‌ காட்டுமிராண்டி போல் வளர்ந்திருந்ததால் எனக்கு அந்த தண்டனை தரப் பயந்து சிலர் கண்டும் காணாமல் போயிருக்கலாம். உண்மையில், அப்படி யாராவது என்னை அடித்திருந்தால், எலும்பு நொறுக்கியிருந்தால், குடல் கிழித்திருந்தால், மண்டை உடைத்திருந்தால், அந்தரங்கத்தை சிதைத்திருந்தால் கூட இத்தனை பலவீனப்பட்டிருக்க மாட்டேன். நான் அவளுக்கிழைத்தது என்னை பலவீனப்படுத்தியது. ஆறடிக்கு நின்றபடி, யாரும் பார்க்காத வகைக்கு மறைவாக நின்று அழவைத்தது. தினம் தினம் உள்ளுக்குள்ளேயே புழுங்கி சாக வைத்தது. என்னை ஊனமாக்கியது.

காலத்தை பின்னோக்கிப் பயணிக்க எல்லோருக்கும் ஆசை. எல்லோருக்கும் திருத்திக்கொள்ள கடந்த காலத்தில் ஒரு பிழை நிச்சயம் இருக்கிறது. ஆனால், காலம் பின்னோக்கி நகராது. நடந்தது நடந்ததுதான். அதை மாற்ற முடியாது. ஆனால், இனி நடவாமல் பார்த்துக்கொள்ளலாம். அதைத்தான் செய்ய நினைக்கிறேன். செய்துகொண்டும் இருக்கிறேன். இக்கதையிலும் காலத்தை பின்னோக்கி செல்லக்கூடிய வகையில் ஒன்று நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இதை நான் எழுதும் இக்கணம் வரை அது நிகழவில்லை. அது, காலம் கடந்த பின்னும் நீங்கள் இன்னும் என்னை கண்டுகொள்ளவில்லை. தண்டனைக்கு இன்னும் ஏங்குகிறேன் நான். யாராவது என் கையை காலை அடித்து உடையுங்களேன். என் முகத்தில் அப்பிக்கிடக்கும் நரகலைத் துடைக்க ஒரு காயம் தாருங்களேன்.










Back to top Go down
 
தண்டனை ~~ சிறுகதைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆயுள் தண்டனை ~~ சிறுகதைகள்
» பார்த்திபன் கனவு மூன்றாம் பாகம்
» ஜ‌ன்னல் ~~ சிறுகதைகள்
» ~~ வசை ~~ சிறுகதைகள்
» விதை ~~ சிறுகதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: