அன்பின் தோழமைகளே, பாசமிகு இதயங்களே! வணக்கம்.
இன்றைய எமது பதிவு பேராசிரியர். தி.க. சந்திரசேகரன் அவர்களின் கையேட்டில் இருந்து பெறப்பட்டது.
நம்மைச் சுற்றி மனிதர் இன்றி வாழ்வதென்பது நீண்ட காலப் போக்கில் முடியாத காரியம். எம் துக்கங்களையும், சந்தோஷங்களையும் பங்குபோட ஒரு உறவு, அல்லது நட்பு எமக்கு இன்றியமையாது. உங்கள் வசம் அவர்கள் கவரப்பட உங்களுக்கும் சில அடிப்படை காந்தசக்தி இருக்க வேண்டும். அந்தக் காந்தசக்திகள் என்ன என்பதைப் பற்றியதானதே இன்றைய பகிர்வு; இதோ :
மற்றவர்களைக் கவருவது எப்படி ?
ஒவ்வொரு மனிதனும் தன்னை அனைவரும் விரும்பி ஏற்க வேண்டும் போற்ற வேண்டும் என விரும்புகிறான். எல்லோராலும் பாராட்டப்படக் கூடிய நிலையையும், பலரையும் கவர்ந்திழுக்கக் கூடிய காந்த சக்தியையும் அவாவுகிறான். இத்தகைய நிலையை நாம் நிச்சயம் அடைய முடியும்; ஆனால் அதற்கெனக் கடைபிடிக்க வேண்டிய சில நெறிகள் உள்ளன.
புன்னகை: புன்னகை தவழும் முகமுடைய ஒருவரை அனைவரும் விரும்புவார்கள். புன்னகை உங்கள் இதய மலர்ச்சியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி; உங்களுக்கு நான் உதவுவேன் எனப் பறைசாற்றும் அத்தாட்சிப் பத்திரம்; நீங்கள் என் நண்பர் என வார்த்தையில் அல்லாமல் வெளிக்காட்டக் கூடிய வழி. புன்னகைக்கும் போது உங்கள் முகம் மேலும் பொலிவடைகிறது 12 தசைநார்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது ஒரு புன்னகை பூக்க. இலவசமான ஆரோக்கியமான பயிற்சி உங்கள் முகத்துக்கு. “A man without a smile should not open a shop " என்பது பழமொழி. ஆகவே எப்போதும் முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிடக் கற்றுக் கொள்வோம்.
பேசுங்கள்: இனிமையாகப் பேசுங்கள். யாரையாவது சென்று பார்க்கும் போதோ அல்லது ஏதாவது வேறு வழிகளில் பேசும்போதோ அவருடைய உடல்நிலை, குடும்பத்தார் நலன்கள், குழந்தைகளின் கல்வி, அவர்களின் வேலை, அவரின் பொழுதுபோக்குகள் தொடர்பான கேள்விகளைக் கேளுங்கள். அவராக்க் கேட்டால் ஒழிய உங்களைப் பற்றியும், உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கள் பற்றியும், உங்கள் சொத்து செல்வாக்கு, புகழ் போன்ற வீரப்பிரதாபங்களைப் பற்றி பேசவேண்டாம். யாரையாவது கவர அவரைப் பற்றிப் பேசுவதொன்றே இலகு வழி.
நகைச்சுவை உணர்வு: நகைச்சுவை உணர்வு மனிதனுக்கு மட்டுமே உரிய சொத்தாகும். வாய்விட்டு சிரிக்கவும், மற்றவருக்கு சிரிப்பூட்டவும் தெரிந்திருக்க வேண்டும். நிறைய நகைச்சுவைத் துணுக்குகளைப் படியுங்கள். அவற்றை அழகாகச் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். யார் நயம்பட நகைச்சுவையுடன் பேசுகிறார்களோ அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். புன்னகை பூப்பது போலவே வாய்விட்டுச் சிரிப்பதும் உடலுக்கு நல்லது.
- நன்றியுடன்................ ப்ரியமுடன்