எதிர்பாருங்கள்- உங்களிடம் மட்டும்
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றங்களும் குறைவாக இருக்கும் என்ற பழமொழி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. எதிர்பார்ப்புகள் இருக்கையில் அதற்கு எதிர்மாறாக என்ன நடந்தாலும், யார் நடந்து கொண்டாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கசப்பையே எதிர்பார்ப்பின் பலனாக நாம் காண நேர்கிறது.
எத்தனையோ விதங்களில் நடந்ததும் மற்றவர் நடந்து கொண்டதும் சிறப்பாக இருந்தாலும் நம் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாக நடந்த சிறு சிறு விஷயங்கள் அந்த சிறப்பு அம்சங்களை ரசிக்க விடாமல் மனம் சிணுங்க வைக்கிறது. இப்படி செய்திருக்கக்கூடது, அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று மனம் விமரிசித்துக் கொண்டே இருக்கையில் நன்றாக நடந்த மற்ற விஷயங்களை நாம் கவனிக்கவும் மறந்து விடுகிறோம். எனவே எதிர்பார்க்காமல் இருக்கும் போது நடப்பதை ஏற்றுக் கொள்வது எளிதாகிறது. அப்படி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறும் போது எல்லா சூழ்நிலைகளிலும் மன அமைதியுடன் இருக்கவும் செயல்படவும் முடிகிறது.
மார்கஸ் அரேலியஸ் என்ற ரோமானியப் பேரரசர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அவர் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் "இன்று நான் எல்லா தரப்பட்ட மோசமான மனிதர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களது சொல்லும் செயலும் என்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப் போகிறேன்...."என்று கூறி மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு தான் வேலையைத் துவங்குவார் என்று கூறுவார்கள். இந்த எதிர் மறையான எதிர்பார்ப்பு அவரை எல்லாவற்றிற்கும் தயார் மனநிலையில் வைத்திருந்தது. இதில் முக்கியமானது அவரது இரண்டாம் வாக்கியம்.
மார்கஸ் அரேலியஸ் சொன்னது போல மற்றவர்களது சொற்களும், செயல்களும் நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். அதை சாதிக்க மற்றவர்களிடம் எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் உதவுகிறது. எனவே மற்றவர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் கைவிடுங்கள். அந்த எதிர்பார்ப்பை புறத்திலிருந்து உட்பக்கம் திருப்புங்கள். உங்களிடமிருந்து எதிர்பார்க்கத் துவங்குங்கள். எதிர்பார்க்கும் உரிமையும் அங்கு மட்டும் தான் உங்களுக்கு இருக்கிறது.
ஆனால் பொதுவாகவே இதற்கு நேர்மாறானததைத் தான் நாம் செய்கிறோம். நம்மிடம் அதிகம் எதிர்பார்க்காமல் மற்றவர்களிடம் தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம். நம்மை நாம் இருப்பது போலவே ஒத்துக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்கிறோம். "நான் சின்னதில் இருந்தே அப்படித்தான்.." என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். மற்றவர்களை அளக்கும் போதோ நம் அளவுகோல்கள் மாறி விடுகின்றன. கறாராக மாறி விடுகிறோம். இந்த ஏற்றுக் கொள்தலும், எதிர்பார்ப்பும் நம்மிடம் இருப்பது நல்லதே - ஏற்றுக் கொள்தல் அடுத்தவரிடத்தும், எதிர்பார்ப்பு நம்மிடத்தும் இருக்கும் வரை.
"ஒவ்வொரு கல்லிலும் ஒரு அழகான சிலை ஒளிந்து கொண்டு இருக்கிறது. தேவையற்ற பகுதிகளைத் தட்டி எறிந்து மீதமிருப்பதை அழகாக செதுக்கினால் கல்லும் சிற்பம் ஆகும்"
நம்மில் பலரும் அப்படி கல்லாக இருக்கிறோம். என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குத் தேவையில்லாத பலதையும் நம்மிடம் இருந்து நீக்க வேண்டும். சிலவற்றை நம்மில் மெருகுபடுத்த வேண்டும். சிலவற்றைக் கூராக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய உந்துதல் வேண்டும். அப்படி ஆக நம்மிடம் நமக்கு உறுதியான எதிர்பார்ப்பு வேண்டும். நம்மை நாம் இப்படி ஆராய்ந்து எதிர்பார்த்து செயல்பட ஆரம்பிக்கும் போது, ஒரு சில மாற்றங்கள் நம்மில் ஏற்பட்டு நாம் சாதிக்க ஆரம்பிக்கும் போது தானாக உற்சாகம் நம்மில் பிரவாகம் எடுக்கும். வேகமும் ஏற்படும். நாம் விரும்பிய உருவத்தை நம் வாழ்வில் தரும் வரை நம்மால் ஓய முடியாது.
எனவே உங்களிடம் இருந்து நிறைய எதிர்பாருங்கள். ஒவ்வொரு கணத்திலும் உயர்ந்ததை மட்டுமே வெளிப்படுத்துவேன் என்று உறுதி பூணுங்கள். அந்த எதிர்பார்ப்பிற்குக் குறைவாக நீங்கள் செயல்படத் துவங்கும் போதெல்லாம் உங்களையே கடிந்து கொண்டு உயர்வுக்கு மாறுங்கள். "நான் அப்படித்தான். என்னால் இதற்கு மேல் முடியாது. ஏனென்றால் ....." என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்கு எதிரியாக நீங்களே செயல்படாதீர்கள். உங்களை நீங்களே மட்டுப்படுத்தி விடாதீர்கள்.
இன்றே உங்களிடமிருந்து அகற்ற வேண்டியதையும், மெருகூட்ட வேண்டியதையும் பட்டியல் இடுங்கள். உங்கள் ஆதர்ச உருவம் இப்படி இருக்க வேண்டும் என்று உருவகம் கொடுத்து உங்களைச் செதுக்க ஆரம்பியுங்கள். உங்களிடம் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் வரை, அதற்கு நேர்மாறான எதையும் உங்களிடத்தில் நீங்கள் சம்மதிக்காத வரை, அந்த உருவமாக நீங்கள் உருவாவதை யாருமே தடுக்க முடியாது.
-என்.கணேசன்