காணாமல் போன கனவுகள்!
பட்டாம்பூச்சிகள் பிடிப்பது
பாவமென்றாய்,
மழையில் நனைந்த சிறகானது மனது..
வெயிலும், மழையும்
விரும்புதல் தவறென்றாய்..
கற்பனைக் காளான்கள் கருகின
ஒவ்வொரு மழைநாளிலும்...
இடைவருட எத்தனித்த
ஒற்றைப்பின்னல் கூடாதென்றாய்,
இரண்டானது
பின்னலும், மனதும்..
பால்ய நண்பனிடம் பழகுதல்
குற்றமென்றாய்,
நண்பர்கள் தொலைத்து
நான் மட்டும் நடைபோட்டேன்
நாட்கள் தள்ளி...
பிடித்த நிறங்களும்,
பணிகளும், பொழுதுபோக்குகளும்,
விளையாட்டுகளும்
என்னால் கண்டுகொள்ளப்படாமல்
உன்னால் திணிக்கப்பட்டது...
கனவில் மட்டுமே கைநிறையும்
மண்குடிசை மழலையின்
மாளிகை பொம்மையென
கண்ணீரில் பிரதிபலிக்கும்
செவ்வானமானது
என்னின் காதல் கனவுகள்
இதோ,
இன்று, வேறு பாதையை நோக்கி
என்னை செலுத்த தயார்படுத்துகின்றாய்
கடிவாளமிட்ட குதிரையென
கடக்க காத்திருக்கிறேன்
மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..
உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...
(02-03-09)உயிரோசை இதழில் பிரசுரமானது.
-அன்புடன்,
Anand