BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகலிதொடர்காண்டம் – பக்கம் 1 Button10

 

 கலிதொடர்காண்டம் – பக்கம் 1

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கலிதொடர்காண்டம் – பக்கம் 1 Empty
PostSubject: கலிதொடர்காண்டம் – பக்கம் 1   கலிதொடர்காண்டம் – பக்கம் 1 Icon_minitimeFri Apr 02, 2010 12:47 pm

இக்காண்டம் அவலச்சுவை கொண்டியன்றது. காரணம் ,இக்காண்டத்துள் முழுவதும் அவலமே நிறைந்தது என்பது அன்று; பெரும்பான்மை நோக்கி அவ்வாறு கூறப்பெற்றது.

தொடங்குங்கால் இன்பமாய்ப் பின்னர்த் துன்பமாய் முடிவது இக்காண்டத்தின் சாரம்.

னெஞ்சுருக்கும் காட்சிகள் இக்காண்டத்தில் அடுத்தடுத்து வருகின்றன! இக்காண்டம் இயல்பான முறையிலேயே சென்று , உண்மைக்கும் கற்பனைக்கும் வேறு பாடில்லாத உயிருள்ள ஓவியங்களைக் கண் முன்னர் நிறுத்தும். இதிலுள்ள மற்ற நலங்களைக் காணுமுன்பு கதையைக் காண்போம் :

னளன் தமயந்தியை மணந்ததை சென்ற காண்டத்துள் கண்டோம். அம்மணத்திடையே , ‘ஏதோ ஒன்று காணப்படுகின்றதே! இது எதில் கொண்டு நிறுத்துமோ!’ எனவும் கருதுகிறோம். கருதக் காரணமானது கலியின் வஞ்சவுரை.

‘செங்கதிர்வேல் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் திரியேன்!’

என்றுரைத்தானே! அதன் விளைவு என்ன? அதன் விளைவே இக்காண்டம் . இக்காண்டத்துள் கலியின் வஞ்சச் செயல் முழுவதும் உயிர் பெற்று எழுகின்றது. அவனது இரக்கமொன்றிலா அரக்கத் தன்மையைக் காண்கிறோம்! ஆனால், அதற்கு முன்பு……………….

னளன் தன் நாடு நோக்கித் திரும்புகிறான். தமயந்தியும் உடன் வருகின்றாள். வருகின்ற வழியிலே நளன் பொழில் விளையாட்டையும் புனல் விளையாட்டையும் பார்த்துக் கொண்டே , தன் மனைவி தமயந்திக்கும் காட்டிக்கொண்டே வருகின்றான். இன்பச்சுவை பயக்கும் பகுதி இது ஒன்றே.

இருவரும் நகர் வந்து சேர்கின்றனர். அரண்மனைபுக்கு அரசோச்சி வருகின்றான் நளன். பன்னிரண்டு ஆண்டுகள் கழிகின்றன. இப்பன்னிரண்டாண்டு வாழ்க்கையில் அவர்கள் கந்தன் அனையதோர் ஆண் குழவியையும் ( இந்திரசேனையையும் ) பெற்றெடுத்தனர். மக்கட்செல்வத்திலும் பொருட்செல்வத்திலும் இன்பத்தை நுகர்கின்றனர். இப்பன்னிரண்டாண்டுகளில் அவர்கள் வாழ்கையில் எவ்விதமான குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியும் காணவில்லை.

பன்னிரண்டு ஆண்டுகளாகக் கலி தான் கூறிய வஞ்சத்தை நிறைவேற்ற ஏற்ற காலத்தை எதிர்பார்க்கின்றான். ஆனால் , பயனென்ன? ஒன்றுமில்லை. பன்னிரண்டாண்டுகள் கழிந்ததும் ஒரு நாள் நளன் சத்தியாவந்தனம் என்னும் மாலைக் கடவுள் வழிபாட்டின் பொருட்டு கால் கழுவ சென்றான். அதுவரை ஒரு சிறு தவறும் செய்யாத நளன், அன்று கால் முழுவதும் கழுவவில்லை. ஆகவே , இதைக் காரணமாக வைத்துக்கொண்டு நளனைப் பற்றுகிறான் கலி புருடன்.

னளனைக் கலி பற்றியதும் அவன் சிந்தை மாறுகிறது; இயல்பில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன . கண்டவர் திகைக்கின்றனர்.

கலி நளனைப் பற்றியதோடு அமையாது, புட்கரன் என்னும் நளனுக்கு உடன் பிறப்பு முறையினனான அரசனிடம் செல்கின்றான். அப்புட்கரன் நளனுக்கு அடங்கிய சிற்றரசன்; காலம் கருதி நளனது ஞாலத்தைக் கொள்ளப் பார்க்கின்றவன். கலி, அவனுக்குத் துணையிருப்பதாகக் கூறி நளனோடு சூதாடுமாறு சொல்கின்றான்.

புட்கரன் நளனைச் சந்திக்கிறான். புட்கரனைக் கண்ட நளன் , ‘ நீ எடுத்த கொடி, என்ன கொடி ?’ என்கிறான். ‘ இது சூதில் எதிர்த்தவர்களை வெல்லும் கொடி,’ என்று விடை கூறுகிறான் புட்கரன் . சூதாட முனைந்த நளனைத் தடுத்து அமைச்சர் முதலியோர் அறிவுரை கூறுகின்றனர். நளனை தடுத்து அமைச்சர் முதலியோர் அறிவுரை கூறுகின்றனர். நளனை கலி பற்றியுள்ளான்; ஆதலால் , அவன் சூதாடுதலை மேற்கொண்டு அனைத்தையும் இழந்தான் . கடைசியாக ‘உன் மனைவியையும் வைத்துச் சூதாடு,’ எஙிறான் புட்கரன் . உடனே சினத்தோடு எழுந்தான் நளன். ‘ மனைவியையும் வைத்து சூதாடுவதா!’ என்பது அவன் கருத்து.

னாடும் நகரும் துறந்து தம் இரு குழந்தைகளுடன் நளதமயந்தியர் புறப்பட்டனர். குடிமக்கள் அழுது புலம்பினர். ‘ஆருயிரின் தாயே , அறத்தின் பெருந்தவமே , பேரருளின் கண்ணே,’ என்று கூறி அழுதார்கள் . ஆயினும் புட்கரனோ , ‘னளனைப் பாராட்டியவர் யார்? அவர் கொலைத்தண்டத்துக்காளாவர்!’ என்றான்.

னளதமயந்தியர் நாட்டை நீங்கி காட்டை அடைந்தனர். கொடுமை மிக்க பாலையைப்பற்றி நினைத்த நளன் , தமயந்தியை வீமன் திரு நகர்க்கு ஏக ஏவினான். அவளோ, அவனையும் தன் தந்தை நகர்க்கு வருமாறு அழைத்தாள். அவன் மறுத்தான். எனவே , பெற்றோர் தம் மக்களைமட்டும் உடன் வந்த அந்தணனுடன் விதர்ப்ப நாட்டுக்கு அனுப்புகின்றனர்.

காட்டில் இருள் சூழ்ந்தது . கதிரவன் மறைந்தான். கலி ஓர் அழகிய புள் வடிவாய் அவர்கள் முன் தோன்றினான். இராமனைச் சீதை மாயமானைப் பிடித்துத் தருமாறு கேட்டது போல, தமயந்தியும் அப்புள்ளைப் பிடித்துத் தருமாறு நளனை கேட்டாள். அதனைப் பிடிக்க முயன்று நளன் சோர்ந்தான் ; ‘ இனி ஆடையால் வளைத்துப் பிடிப்போம்,’ எனக்கருதி, புள்ளைப்பிடிக்க தன் ஆடையை வீச , புள் ஆடையுடன் பறந்தோடி விட்டது.

இருள் சூழ்ந்து விட்டதால் இருவரும் அங்குப் பாழ்மண்டபமொன்றில் தங்கினர்; தம் நிலை நினைத்துப் புலம்புவாராயினர். இரவில் தமயந்தி தூங்கிய பின் , கலியின் தூண்டுதலால் , நளன் அவளைப் பிரிய நினைத்தான். அப்போது கலி அவன் பக்கத்தே வாளாகி கிடந்தான். நளன் அவ்வாளால் தமயந்தியின் சேலையை அரிந்து உடுத்துக்கொண்டு நள்ளிரவில் புறப்பட்டான்!

கண்விழித்த தமயந்தி நளனைக் காணாது திகைத்தாள்; வருந்தினாள் ; தேடினாள் ; தளர்ந்தாள் ; இரவும் விடிந்தது. அவள் அங்கு ஒரு மலைப்பாம்பை கண்டாள்.அது இன்னதென அறியாதவளாய் அருகே சென்றாள் . மலைப்பாம்பு அவளை விழுங்கியது! அவளின் உடலின் முக்காற்பகுதி – மார்புக்கு மேற்பகுதி தெரியும்படி பாம்பால் விழுங்கப்பட்டது. அவள் நளனை நினைத்தாள் . உடனே அங்கு வேடன் ஒருவன் வந்தான். அவன் அவளைக் காப்பாற்றினான். அவன் தன் உதவிக்குப் பரிசாகத் தமயந்தியின் காதலை எதிர் பார்த்தான். மதுரையை எரித்த கண்ணகியைப் போலத் தமயந்தி அவ்வேடனை எரித்தாள்.

இது நிகழ்ந்த பின்னர்த் துன்பம் மிகுந்தது தமயந்திக்கு. அவ்வழியே வணிகன் ஒருவன் வந்தான். நிகழ்ந்தவை அவன் நெஞ்சை உலுக்கின. அவன் அவளுக்குச் சேதி நாட்டுக்குச் செல்லும் வழியைக் காட்டித் தன் போக்கில் சென்றான்.

தமயந்தி சேதி நாட்டை அடைந்து, தன் சிற்றன்னை அரண்மனையில் அவளால் ஆதரிக்கப் பெற்றாள். நளதமயந்தியரால் மக்களுடன் அனுப்பப்பட்ட அந்தணன் , விதர்ப்ப நாட்டை அடைந்து, நிகழ்ந்ததை வீமனுக்குக் கூறினான். வீமன் அனலிடப்பட்ட மெழுகு போல உருகி, நளதமயந்தியரை நாடிக்கொண்டர ஓர் அந்தணனை அனுப்பினான். அவ்வந்தணன் சேதி நாட்டை அடைந்து தமயந்தியைக் கண்டான்; அவளை அழைத்துக்கொண்டு வீமன் திரு நகர்க்குச் சென்றான். மகளைக் கண்ட தாய் புலம்பினாள். இக்காண்டம் தாயின் புலம்பலோடு முடிகிறது.

இக்காண்டம் பொழில் விளையாட்டு, உனல் விளையாட்டோடு தொடங்குகிறது. இக்காண்டத்தின் எஞ்சிய பகுதியுடன் இந்தப் பகுதியையும் நினைத்தால் , இப்பகுதி மற்றதை விடச் சிறிது நீண்டது என்றே கருத வேண்டும். ஏனென்றால் , இக்காண்டத்துக்கென ஆசிரியர் புனைந்த பாக்கள் நூற்று ஐம்பத்தைந்து . இவற்றுள் பொழில் விளையாட்டுக்கும் புனல் விளையாட்டுக்கும் இருபத்தைந்து பாக்கள் புனைகிறார். எனவே , இப்பகுதி மற்றைப் பகுதிகளை நோக்கப் பெரிதெனவே கூற வேண்டும்.மேற்கோளுக்கும் ஒரு பகுதியைக் காட்டலாம்; தமயந்தி சேதி நாட்டிலிருந்து தன் நாட்டுக்குக் காண்கின்றனர். அப்போது உண்மையிலேயே கூற வேண்டுவன பல. ஆனால், ஆசிரியர் இப்பகுதியை முடித்துக் காட்ட ஐந்து பாக்களையே பாடியுள்ளார். தந்தையும் தாயும் கண்டோரும் புலம்புவதை மிகுதியும் கூறியிருக்கலாம். மற்றக் காவியங்களில் இம்முறையைதான் காண்கிறோம். குண்டினபுரம் புலம்புவதாக இரு பாக்களும், தமயந்தி புலம்புவதாக ஒரு பாவும் கூறப்பட்டுள்ளன. ஆனால் , அந்தப் பேசும் பொன் சித்திரத்தைப் பெற்றெடுத்தாளே தாய் எனும் ஒருத்தி, அவள் புலம்புவது ஒரே ஒரு பாடலில்!
சேய் முகம் கண்டு தாய் அதிகம் வருந்துவாள் என்று உலக இயல்பின் வண்ணம் எதிர் பார்த்து ஏமாற்றத்தை அடைவது போல இருக்கிறது இது. நகர மாந்தர் இரண்டு பாடலில் புலம்ப , தாய்க்கு மட்டும் ஒரு பாடலா? அவள் வாயிலாகச் சொல்லி அழ வேண்டுவது அந்த ஒரு பாடலிலே முடிந்துவிட்டதா? அல்லது நகர மாந்தரே அழுது புலம்பியதால் , மேலும் புலம்பல் வேண்டா என்று ஆசிரியர் கருதுகிறாரா? தாய்க்குப் ப்லம்பும் ஆற்றல் இல்லையா, அல்லது அவள் துன்பத்தைத் தனக்குள் அடக்கிக்கொண்டு குமைகின்றாளா? அவ்விதமாகச் சித்தரித்து காட்ட வேண்டும் எனக் கருதினாரா ஆசிரியர்?
புனல் விளையாட்டுக்கும் பொழில் விளையாட்டுக்கும் இருபத்தைந்து பாக்கள் பாடும் புகழேந்தியார், இங்கே மிகச் சுருக்கிக்கொண்டு செல்வதேன்? அவர் ஏதோ ஒன்றைக் கருதுகிறார் என்றே கூறல் வேண்டும் . அதாவது இன்பச் சுவையாயின் , நீண்டதாயினும், சுவை குன்றுவதில்லை;அவலமோ நீண்டதாயின் சுவையில் குன்றுவதாகத்தான் இருக்க முடியும்! எனவே தான் அவ்வாறு அவலத்தைச் சுருக்கினராதல் வேண்டும். மேலும் , ஆசிரியர் நூல் நெடுகச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அழகையே கையாண்டுள்ளார் என்பதையும் நினைத்தல் வேண்டும் !
கதையை மேற்போக்காகப் பார்ப்போர்க்கும் ஓர் எண்ணம் தோன்றும்: சூதாட்டத்தில் நளனை எல்லாவற்றையும் இழந்தான் . முடிவில் புட்கரன், ‘ உம் மனைவியை வைத்து ஆடும்,’ என்று கூறிய போது நளன் உடனே எழுந்தான்; ‘வேல் விழியே , சூது முடிந்தது! எழுந்திரு! போவோம்! என்று கூறி நாட்டை விட்டுப் புறப்படுகின்றான். பாரதக் கதையை நினைவில் கொண்டு வந்தால் , நளனுடைய செயல் உயர்ந்ததென்பது புலப்படுகின்றது. பாரதத்தில் மனைவியையும் வைத்து ஆடி அவளை அவமானம் செய்யக் காண்கிறோம் . இங்கே அத்தகு நிகழ்ச்சிகள் இல்லை. ‘மனைவியை வைத்து ஆடும்,’ என்றவுடனே சீறி எழுந்து நாட்டை விட்டு நகர்கின்றான் நளன்.

இவ்விடத்திலே இன்னொன்றை நினைவில் கொண்டுவர வேண்டும். மனைவியைச் சூதாட்டத்தில் வைத்து ஆடிய தருமனே இக்கதையைக் கேட்டு வருகின்றவன். வியாசர் கதையைக் கூறுகின்றவர். இவ்விடத்தில் தருமன் என்ன நினைக்கின்றான்? அவன் மன உணர்வுகள் எவ்வண்ணமிருந்தன? இவற்றைப் புகழேந்தியார் இடையிலே காட்டியிருந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றுகின்றது!

தமயந்தியின் உருவம் இக்காண்டத்துள் பரிதாபமாகச் சித்தரிக்கப்படுகின்றது. அவள் பேசா மடந்தையாய் முதலிலே காட்சி அளிக்கின்றாள். நளன் சூதாடுகின்றனன்; அப்போதும் அவள் பேசாமடந்தை ; ‘மாதே , நாடு முதலியன இழந்தோம் ! நாடுவிட்டுச் செல்வோம்!’ என்றபோதும் பேசாமடந்தை . அதுமட்டுமன்று, அவள் பேசத்தான் இல்லையே ! அவள் மெய்ப்பாட்டையேனும் ஆசிரியர் கூறினாரா ? சிந்தித்தாரா? ஓரிடத்தேனும் சொன்னாரில்லை! சிந்திக்காரில்லை ! அது தேவையற்றது எனக் கருதினார் போலும் ! ‘ கொண்டான் இருக்க மனைவி பேசல் தகாது,’ என்று கருதுகின்றனர் போலும்!

தமயந்தி தான் காதலித்த கணவனோடு கானகத்தே புகின்றாள். அங்கேயும் பேசினாள் இல்லை! மக்கள் அவர்களைப் பார்த்துக் கேட்கின்றார்கள் : ‘ நாம் செல்ல வேண்டிய தூரம் முடிந்ததா? ‘ என்று. இங்ஙனம் பெற்றெடுத்த பிள்ளைகள் கேட்கின்ற பொழுது தமயந்தி ஒன்றும் கூறாமலே இருக்கின்றாள் . மக்களின் மனத்துயரை கேட்டபோது அவளது துன்பம் கரை மீறி எழவில்லையா? அடக்கமே உருவாய் எங்ஙனம் இருக்க முடிந்தது?

பின்பு எப்பொழுது இக்காண்டத்துள் முதலாவதாகப் பேசினாள்? தமயந்தியை நோக்கி , ‘ நீ நம் குழந்தைகளுடன் குண்டின புரத்திற்கு செல்க , ‘ என்று கூறினான் நளன். அது கேட்ட தமயந்தியின் செம்பவள இதழ்கள் அசைந்தன. தேனினும் இனிய அவளது குரலிலே துன்பத்தின் நிழலாடுகின்றது. ஆனால் , அவள் சொல்லும் விடையில் கற்பின் மேம்பாடு விளக்கமாக வெளிப்படும்! அப்படி என்ன கூறினாள் தமயந்தி?






‘குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்
பெற்றுக் கொள்லாம்; பெறலாமோ – கொற்றவனே
கோக்கா தலனைக் குலமகளுக்கு?’‘பிள்ளைகளை பெற்றுக்கொள்ளலாம், கணவரைக் கற்புடையாள் இழந்தால் பெறலாகுமோ? என்றாள்.






தமயந்தியின் படைப்பு இதன் பின்னர் இரங்கத் தக்கதாய் உள்ளது; போற்றத்தக்கதாகவும், கற்புடைமை என்று நூல்கள் விரித்துரைக்கின்றவற்றிற்கு எடுத்து காட்டாகவும் உள்ளது!நளன் மக்கட் செல்வத்தின் அருமை பெருமைகளை விரித்துரைத்த பின்னர் , தமயந்தி கூறுகிறாள்:
சூதினால் நாட்டை இழந்ததற்கோ , தன்னையும் தன் மக்களையும் கொடுந்துன்பத்திற்குள்ளாக்கியதற்கோ வருந்தாமல், சினந்தொரு மொழியும் கூறாமல், ‘ அதை வெளியார் அறியாதிருக்க எம்பதிக்கு எழுந்தருளுக’ என்றாள். கணவனைப் பற்றித் தான் தவறாக நினைத்திலளாயினும் , ‘ பிறர் பேசுவரோ! அரசர்க்குச் சூது தகுதியோ!’ என்று கருதினாள். பிறருக்கு இது தெரியாதிருக்க வேண்டி வீமன் நகரம் செல்லலாம் என்று கூறினாள்.
பெரும்பொருளும் , நாடும் , நகரும் , பிறவும் இழந்த நளனைச் சூதினால் இழந்தான் என்னும் குறைபாட்டைக் கூறும் தகையளாக ஓரிடத்தும் தமயந்தி காட்சியளிக்கின்ற்லள்; அது விதியின் வலியால் நேர்ந்தது என்றே கூறுகின்றாள்! எடுத்துக்காட்டாக நளன் பிரிந்த போது துன்பப்படுபவள் , விதியை நொந்து கொள்கிறாள்.

சூதினால் ஏற்படும் தீமையை நளன் சூதாடத் தொடங்கிய போது ஆசிரியர் விளக்குகின்றார். அவர் கூறுவன சிந்திக்க தக்கவை.’ காதல் , சூது, கள்ளுண்ணல் , பொய், கொடை மறுத்தல் என்னும் இவை அறத்தைக் கருதாதார் நெறி,’ என்று கூறுகின்றார்.




நளன் தன் நாட்டிற்கு செல்லல்.
————————————

தவளத் தனிக்குடையின் வெண்ணிழலும் தையல்
குவளை கருநிழலும் கொள்ளப் – பவளக்
கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரில் ஏறினான் சென்று.

தவளம் = வெண்மை.
தனிக்குடை = ஒப்பற்ற குடை.
குவளைக் கரு நிழலும் = குவளை போன்ற கண்களின் கருமையான நிழலும்.

திருமணம் முடிந்து நீண்ட காலம் தமயந்தியோடு குண்டின புரத்திலேயே தங்கியிருந்த நளன், பின்னர்த் தன் நாடு நோக்கி வருகின்றான்.

பவளக்கொடிகள் படர்ந்து உயரச் சென்று, செந்நெற் கதிர்களை வளைத்து ஆழச் செய்கின்ற நிடத நாட்டு மன்னனாகிய நளன் , வெண்கொற்றக்குடையின் நிகரற்ற வெண்மையான ஒளி பரந்த நிழலும், தமயந்தியின் விழிகளாகிய குவளைப் பூக்களின் கருமையான நிழலின் ஒளியும் தன்னை சூழ சென்று அழகான தேரின் மீது ஏறினான்.

வண்டுகளின் வரவேற்பு.
————————————

‘மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையப்
பொங்கி எழுந்த பொறிவண்டு – கொங்கோடு
எதிர்கொண் டணைவனபோல் ஏங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய்! காண்.’

கொங்கோடு = தேனோடு.
கதிர் = ஒளி.

‘ ஒளி வீசுகின்ற முத்துமாலைகளை அணிந்த கொங்கைகளையுடைய பெண்ணே, தமயந்தியே , பெண்கள் மணமுடைய மலர்களைப் பறிப்பதற்காக வந்து சேர்தலினால் அதிலிருந்து மேலோங்கிப் பறந்த புள்ளிகளையுடைய வண்டுகள் தேனை கொண்டு அவர்களை எதிர்கொண்டு அழைக்கச் சேர்வன போல ஒலிப்பதைப் பார்! என்று நளன் தமயந்திக்குக் கூறினான்.

பெண்கள் சோலையில் மலர்களை கொய்ய சென்றார்கள் . அவர்களைக் கண்டு அஞ்சிய வண்டுகள் எழுந்து பறந்தன. அவ்வாறு பறத்தல் வருவாரை வரவேற்படு போல இருந்ததாம்!

மங்கை அடி வீழாதார் யார்?
————————————-

‘பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே?
பூவையர்கை தீண்டலும்ப் பூங்கொம்பு – மேவியவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய்!காண்! என்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.

மேவியவர் = பற்றிய பெண்டிர்.
மின் நெடு வேல் = மின்னலைப் போல ஒளி வீசும் நீண்ட வேல்.

ஒளியையுடைய வேலை ஏந்திய கையினையுடைய நளன், ‘ பூ முடித்த கூந்தலையுடையாய், பதுமை போன்ற அழகையுடைய பெண்கள் கையால் தொட்டால் தாழ்ந்து வணங்காதவர் யாரிருக்கின்றார்? மலர்களையுடைய அக்கிளைகள் பெண்களின் கைகளினால் தொட்டவுடனே விரைவில் வளைந்து சென்று அவர்களுடைய அழகிய பாதங்களில் பணிவது பார்!’

முகமா மலரா?
———————-

‘மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
காத்தாள்;அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து.

பங்கயம் = தாமரை.
காத்தாள் = வண்டுகள் மொய்க்காமல் பாதுகாத்தாள்.

மலரைக் கொய்பவளாகிய ஒரு பெண்ணின் ஒளி வீசும் முகத்தினைச் செந்தாமரை மலர் என்று கருதி மொய்க்கின்ற வண்டுகளை அவள் தனது செந்நிறமான கையால் தடுத்து நின்றாள்; அக்கைகலையும் காந்தள் மலர் எனக்கருதி வண்டுகள் மொய்த்தன; அதனால் அச்சங்கொண்டு வியர்த்துக்கொட்ட நின்றவளை நீ பார்!’ என்று நளன் தமயந்திக்குக் காட்டினான்.

மலரைப் பறியாது , தளிரைப் பறித்தாள்!
————————————————

‘புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து – மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா த்ருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே ! தெளி.’

புல்லும் = சேர்ந்திருக்கும்.
சிலம்பு அவித்து = சிலம்பினது ஓசையைக் கேளாதவாறு அடக்கி.

‘ நல்ல தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகள் போன்றவளே, ஒரு மலரில் கூடியிருக்கும் ஆண் பெண் வண்டுகளைப் பார்த்து, வனத்தில் வாழ்கின்ற மயிலைப் போன்று செல்லுகின்ற பெண், தன் காலில் சிலம்பொலி கேளாதவாறு மெதுவாய் நடந்து சென்று, ஆண் பெண் வண்டுகள் அமர்ந்துள்ள மலரினைக் கொய்யாமல், அரிய தளிர்களைக் கொய்கின்றவளைக் காண்பாயாக!’

கூந்தல் மலர் அடிகளுக்கா!
————————————

‘கொய்த மலரைக் கொடுங்கையினா லனைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து – தையலாள்
பாரத விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்கு
ஆதார மின்மை அறிந்து.’

கொடுங்கை = வளைந்த கை.
மொய் குழல் = அடர்ந்த கூந்தல்.

‘ஒரு தலைவன் தான் பறித்த மலர்களைத் தன் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு , தன் தலைவியின் அடர்ந்த கூந்தலில் அணிவதற்கு அவள் நேரே வந்து நின்று, அவளது இடையினை உற்று நோக்கி , பாவை போன்ற தன் காதலியின் இடுப்பிற்கு யாதொரு பற்றுக்கோடும் இல்லாதிருத்தலைத் தெரிந்துகொண்டு , அவளுடைய தாமரை மலரைப்போன்ற அடிகளில் அம்மலர்களை வைத்தான். தமயந்தியே பார்!’ என்று நளன் சொன்னான்.

மணல் மேடோ ! மஞ்சமோ !
—————————————–

‘ஏற்ற முலையார்க் கிளைஞர் இடும்புலவித்
தோற்ற அமளியெனத் தோற்றுமால் – காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணல்மேல் இசைந்து.’

ஏற்ற முலையார் = சிறந்த முலையை உடையவர்கள்.
புலவித்தோற்ற அமளி = ஊடல் நீங்கக் காதலர்கள் இட்டு வைத்தது போன்ற படுக்கை.
ஆல் = ஆசை.
உக்க = உதிர்ந்த
உகுத்த = ஈன்ற.

‘காற்று வீசுவதால் கீழே உதிர்ந்த மலர்களுடன் சங்குகள் ஈன்ற முத்துகள் மணல் மேட்டின்மேல் சேர்ந்து கிடக்கின்றன; அவை உயர்வு பொருந்திய கொங்கைகளையுடைய பெண்களுக்கு , அவர்களுடைய இளங்காதலர்கள் ( ஊடல் நீங்குவதற்கு ) இட்டு வைத்த படுக்கை போன்று தோன்றும்!’

சோலையும் மகளிரே!
——————————

‘அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக் – கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை அழகு.’

புலரந்து அசைந்து = வாடியசைந்து.
பூவணை = மலர்படுக்கை.
புல்லி = தழுவி.
ஒசிந்த = வாட்டமடைந்த.
புல் என்ற = அழகற்றிருக்கின்ற.
அல் = இருள்.

‘கதிரவன் ஒளியானது உள்ளே செல்ல இயலாத அடர்த்தி உள்ளதால் பார்த்தோர்’ இருளாகும் ‘ என்று கூறத்தக்க சோலை அது! அதன் அழகிய மலரையுடைய உயர்ந்த கிளைகள், தம்மிடம் மலர்ந்துள்ள பூக்களைக் கீழே உதிர்த்துச் சிதறி வாடி அசைகின்றன; ஆதலால், அக்காட்சி மலர் பரப்பபட்ட படுக்கையின் மேல் தம் கணவரைத் தழுவி புணர்ந்து வாட்ட முற்றிருக்கின்ற அழகொளி குறைந்திருக்கும் மங்கையர்கள் போன்று காட்சி அளிக்கின்றது!( வாட்டத்திற்கு காரணம் புணர்ச்சியால் ஏற்பட்ட அயர்ச்சியாகும்.) தமயந்தியே , காண்பாயாக ! ‘ என்று நளன் கூறினான்.

அல்லியின் மலர்ச்சி.
—————————

‘கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூக் – கொங்கவிழ்ந்தேன்
வார்க்கின்ற கூந்தல் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்!’

அணையக்கூட்டி = பொருந்தச் சேர்ந்து.
கொடுங்கை = வளைந்த கை.
அவிழ் = வெளிப்படும்.

‘மணம் வீசுகின்ற தேனை கொட்டுகின்ற பூவை அணிந்த கூந்தலையுடைய பெண் பொய்கையில் நீராடுகின்ற போது அல்லி மலரை தன்னுடைய முலைகளிலே சேரும்படி அணைத்துப் பிடித்தாள். தன் வளைந்த கைகளால் நன்றாய் அணைத்துக்கொண்டிருந்தாள் . அதனால் விரிந்த அல்லி மலரின் தோற்றம் அவளது முகத்தை நிறைந்த நிலவு என்று நினைத்து பார்ப்பது போல் இருக்கின்றது என்று பார்ப்போர் கூறும்படி காட்சி தருகிறது! அதைப் பார்ப்பாயாக !’ என்று நளன் கூறினான்.

அல்லி மலர வேண்டுமானால் , மதியம் தோன்ற வேண்டும் . தன் கொங்கைகளில் அழுத்திப் பிடித்தலால் விரிந்தது அல்லி. அவ்வாறு விரிந்தது அவள் முகமாகிய நிலவைப் பார்த்துத்தான் மலர்ந்ததோ என்னும்படி காட்சி தருகிறதாம்! எத்துணை அழகு!

சிவனையொத்த பெண்.
———————————

‘கொய்த குவளை கிழித்துக் குறுநுதல்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள் – வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை உண்ட ஒருமூன்று
கண்ணானைப் போன்றவளே காண்’

ஏந்து இழையாள் = அணிந்த அணிகளையுடைய.
கடுவிடத்தை = கொடிய நஞ்சினை.

‘ தன்னால் கொய்யப்பட்ட குவளை மலர்களைக் கிள்ளித் தனது சிறிய நெற்றியில் பொருந்தும்படியாக வைத்த தன்னிகரற்ற ஒரு மங்கை, உலகத்தார் ஒருவரும் உண்ண முடியாத கொடிய நஞ்சை உண்ட ஒப்பற்ற மூன்று கண்களை உடைய சிவபெருமானை ஒத்திருக்கின்றாள் ! தமயந்தியே காண்பாயாக !’ என்று நளன் கூறினான்.

திருமகளிடம் முறையீடு!
——————————–

‘கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் – கெழுமியவக்
கோமகற்குத் தானினைந்த குற்றங்கள் அத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல்’

கொழுநன் = கணவன்.
கொழுந்தாரை = நீரினது ஒழுக்கு
கெழுமிய = அன்புடைய.

‘ நீர் விளையாட்டில் தன் காதலன் நன்கு ஒழுங்காகப் பாய்கின்ற துருத்தி நீரினை மேலே சிதறினாள்; அதனால் வெட்கமுற்று அன்புடைய அந்த மேன்மையுடைய கணவனிடம் பொருந்திய குற்றங்கள் எல்லாவற்றையும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளுக்கு சொல்வது போல தன் அழகிய முகத்தி தாமரை மலரில் மறைத்துக்கொண்டாள்!’

மும்முகங்களா?
—————————

‘பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகம்மூன்று பெற்றாள்போல் – எய்த
வருவாலைப் பார்!’என்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்த்துவக்கும் சேய்.

பெய்து = செருகி.
மாற்றாரை = பகைவரை.
செரு வாள் = போர் செய்கின்ற வாள்.

பகைவரை வெற்றிகண்ட போர்வாளைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்ற முருகனைப் போன்ற நளன், ‘ விளையாட்டாக இரு தாமரை மலர்களைத் தன்னுடைய காதுகளிரண்டிலும் செருகிக்கொண்டு மூன்று முகங்களையுடையவள் போல நம்மை நெருங்கி வருகின்றவளை நீ பார்!’ என்று தமயந்திக்கு கூறினான்.

மனையாளைக் காணாது மயங்கல்.
————————————————-

‘பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த – மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிகம் என்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்.’

‘பொன்னைப் போலும் நிறத்தையுடைய பூந்தாதின் மணத்துடன் கொட்டையையுமுடைய தாமரை மலர்கள் அலையும்படி தன் காதலியோடு நீரிலே முழுகித் தான் மட்டும் தனியாக மேலே எழுந்து , ஒளியுடைய அணிகள் அணிந்த தன் காதலியின் முகத்தை ‘இதுவும் தாமரை மலர்களில் ஒன்று ,’ என்று நினைத்து , தன் காதலியைக் காணாமல் வருந்துகின்ற இவனை நீ பார்!’

கரும் பாம்பு கவ்வியதோ!
——————————

‘சிறுக்கின்ற வாள்முகமும் செங்காந்தட் கையால்
முறுக்கும்நெடு மூரிக் குழலும்- குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையாய் ஆம்.’

‘தாமரையினது அரும்பைப் போன்ற பருத்த முலைகளையுடைய தமயந்தியே, இப்பெண்ணினுடைய சிறியதாக சுருங்கிய ஒளியையுடைய முகமும், சிவந்த காந்தள் மலரைப் போன்ற தன்னுடைய கைகளால் முறுக்கி நீரைப் பிழிகின்ற சிறப்புடைய கூந்தலும், ஒப்பிட்டுப் பார்த்தோமானால் , இராகு என்னும் பாம்பு வெண்ணிறமுடைய மதியை பிடிக்கும் தோற்றத்தைப் போல இருக்கின்றது.’

முகிலைக் கிழித்து வெளி வரும் நிலவு!
————————————————————-

‘சோர்புனலில் மூழ்கி எழுவாள் சுடர்நுதல்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம் – பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு’

சோர்புனல் = ஓடிவரும் நீர்.
சுடர் நுதல் = ஒளி பொருந்திய நெற்றி.
பொற்பு = அழகு.

ஓடி வருகின்ற நீரில் குளித்து எழுந்திருப்பவள் ஒளி பொருந்திய தன் நெற்றியின் மீது படியும் கூந்தலை ஒதுக்கிக் கொண்டு வருகின்றாள். அக்காட்சி மேகத்தைக் கிழித்துக் கொண்டு அதி விரைவிலே தோன்றிய நிலாப் பிறையினது அழகை ஒத்திருக்கின்றது என்று கூறலாம். தமயந்தியே, பார்!’

( ‘வருந்தோற்றம் பிறைப்பொற்புப் புரைகின்றது என்னலாம்,’ எனக் கூட்டிப் பொருள் கொள்க. )

கழுநீர் மலர் கொய்யாது சென்றாள்!
———————————————

செழுநீல நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீலம் என்றயிர்த்து முன்னர்க் – கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன்.

செழு நீல நோக்கி எறிப்ப = மலரைப் பறிப்பவள்லுடைய நீல மலரைப்போன்ற பார்வையின் ஒளிவீச.
செங்குவலை = செங்கழு நீர்ப்பூ.
என்று அயிர்த்து = என்று ஐயங்கொண்டு.

கூர்மையையுடைய வேலை ஏந்திய பெரிய கைகளை உடைய நளன், சிவந்த கழுநீர் மலரைக் கொய்கின்ற ஒருத்தி, குளிர்ந்த கருங்குவளை மலரைப் போன்ற தன் பார்வை ஒளி அம்மலரின் மேல் படிய , நிரைந்த குவளை மலராகும் என்று அதை ஐயம் கொண்டு , தன் முன்னுள்ள செங்கழு நீர் மலரினைப் பறியாமல் செல்வதை அழகிய வளையலை அணிந்த தமயந்திக்குக் காட்டினான்.

நளனும் தமயந்தியும் நீராடல்.
—————————————-

காவி பொருநெடுங்கட் காதலியுங் காதலனும்
வாவியும் ஆறுங் குடைந்தாடித் – தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி யாடி
ஒழியா துறைந்தார் உவந்து.

கரிய குவளைப்பூவைப் போன்ற நீண்ட கண்களையுடைய தலைவியாகிய தமயந்தியும் நளனும் குளங்களிலும் ஆறுகளிலும் நீரை அசைத்து அசைத்து நீராடி, ஆண்டவனை மறவாத மனத்தோடு கங்கை நீரிலே மூழ்கி , அங்கே உள்ள ஒரு சோலையிலே மகிழ்ந்து தங்கினார்கள்.

சோலையைக் காணல்.
————————–

‘ நரையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும் – இறைவளைக்கைச்
சிற்றிடையாய்! பேரல்குல் தேமொழியாய்! மென்முறுவற்
பொற்றொடியாய்! மற்றிப் பொழில்.’

னறை = தேன்.
வண்டு உறையும் = வண்டுகள் வசிக்கும்.
நல் நகர்வாய் = நல்ல நகரமான மாவிந்த நகரத்தில்.
உறையும் = தங்கி இருக்கும்.
இளமரக்கா = இள மரங்கள் அடர்ந்த சோலை.
இறைவளை = சிறந்த வளையல்.
அல்குல் = பிட்டம்.
தேமொழி = தேன் போன்ற இனிய சொல்.
மென்முறுவல் = புன் சிரிப்பு.
பொன் தொடியாய் = பொன்னாலான வளையல் அணிந்தவளே.
பொழில் = சோலை.

‘சிறந்த வளையல்களை அணிந்த கைகளையும் சிறிய இடையையும் உடையவளே , பெரிய அல்குலையுடைய இனிய மொழியாளே , புன்முறுவலோடு கூடிய பொன்னாலான தோள்வளையுடையாளே, இந்தப் பொழிலானது தேன் ஒழுகுவதால் வண்டுகள் தங்கியிருக்கின்ற வளம் நிறைந்த மாவிந்த நகரத்தில் நாங்கள் தங்கியிருக்கின்ற இளமரங்கள் நிறைந்த சோலையைப் போன்றுள்ளது,’ என்றான் நளன்.

‘ நீங்கள் உறையும் சோலையோ!
————————————-

கன்னியர்தம் வேட்கையே போலும் களிமழலை
தன்மணிவா யுள்ளே தடுமாற , – ‘மன்னவனே!
இக்கடிகா நீங்கள் உறையும் இளமரக்கா
ஒக்குமதோ’! என்றாள் உயிர்த்து.

மணப்பருவம் அடைந்த இளமங்கையர் அடக்கிக் கொண்டிருக்கின்ற காதலைப்போலத் தனது அழகிய வாயிலிருந்து இளஞ்சொற்கள் முழுதும் வெளிப்படாமல் தோன்றும்படி, மெல்லிய குரலில், பெருமூச்சு விட்டு, ‘ அரசே, இம்மணம் மிகுந்த பூஞ்சோலை ‘ நீங்கள் ‘ இருக்கின்ற இளமரச்சோலையை ஒத்துள்ளதோ !’ என்று தமயந்தி நளனைக் கேட்டாள்.

ஊடல்.
—————

தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதல்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக் – கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழல்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி.

வீரக்கழலைப் பூண்ட பகையரசர்களுடைய வெண் கொற்றக் குடைகள் போர்க்களத்தில் குருதிக் கறை படிய வெற்றி பெற்று நின்ற வீமனுடைய மகளாகிய பூங்கொம்பைப் போன்ற தமயந்தி, ஒளியையுடைய நெற்றியில் முத்துப் போன்ற வியர்வைத் துளிகள் தோன்றவும் கெண்டை மீன் போன்ற தன்னுடைய விழிகள் சிவப்படையவும் அசைவற்று நின்றாள்.

நளனிடம் ஊடினாள் தமயந்தி . அவள் உதடுகள் துடித்தன; முத்துப்போன்ற வியர்வைத் துளிகள் அரும்பின! கண்கள் சிவந்தன! சினங்கொண்டார்க்கு இவை இயல்பு.

முகமெனும் அரங்கில் புருவம்
—————————————–
எனும் மடந்தையின் கூத்து.
—————————————-

தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் – அங்கண்
வடுவாள்மேல் கால்வளைத்து வார்புருவ மென்னுங்
கொடியாடக் கண்டானோர் கூத்து.

புலவித்தலையில் = ஊடலில்.
தனித்திருந்த = தனியாய் விலகியிருந்த.
வதனமணி அரங்கு = முகம் என்னும் அழகிய நடன மேடையில்.
அங்கண் = அழகிய கண்கள்.
வடி வாள் = கூர்மை பொருந்திய வாள்.
வார் புருவம் என்னும் கொடி = நீண்ட புருவம் என்னும் கொடிபோலும் பெண்கள் .

நளனுக்கும் தமயந்திக்கும் நேர்ந்த ஊடலில் நளனை விட்டுத் தனியாகப் பக்கத்திலிருந்த தமயந்தியின் முகம் என்னும் நடன அரங்கில் அழகிய விழிகள் என்னும் கூர்மை பொருந்திய வாளின் மீது நெடிய புருவங்கள் என்னும் நடனப் பெண்கள், தங்கள் நுனியாகிய கால்களை வளைத்துச் சிறந்த நடனம் ஆடுவதை நளன் கண்டான்.

‘ தமயந்தியின் சினத்தில் புர்வங்கள் துடித்தன. அத்துடிப்பு, புர்வங்கள் நடனமாடுவது போல் இருந்தது!’ என்கிறார் ஆசிரியர். புருவம் பெண்; புருவத்தின் நுனிகள், நடன மாதர் கால்கள்.

நளன் தமயந்தியின் அடிகளில் வீழ்தல்.
—————————————————

சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் ; – வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
சுழுநீல மாறாச் சிவப்பு.

சில பருக்கைக்கற்களைக் கொண்டு ஒலி செய்கின்ற சதங்கைகளை அணிந்த மென்மையான பெருமை பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிறிய காலடிகளை, நளன் , ஒளியையுடைய மணிகள் பதித்த தன் முடியின் மீது அணிந்தான்; காம்பினைக் களையாது கட்டப்பட்ட நீலமலர் மாலையை அணிந்த கூந்தலை உடையவளாகிய தமயந்தியின் முகத்தில் பூத்திருக்கும் நீல மலரைப் போன்ற கண்கள், விரைவிலே செந்நிறம் மாறித் திகழ்ந்தன!

கூடல்.
——————

அங்கைவேல் மன்னன் அகலம் எனுஞ்செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் – அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு.

பெண்களிற் சிறந்த பூங்கொம்பு போன்றவளாகிய தமயந்தி, அழகிய கையில் வேலைத் தாங்கிய ந
Back to top Go down
 
கலிதொடர்காண்டம் – பக்கம் 1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கலிதொடர்காண்டம் – பக்கம் 2
» கலிநீங்குகாண்டம் – பக்கம் 1
» கலிநீங்குகாண்டம் பக்கம் - 2
» சுயம்வர காண்டம் பக்கம் 2
» நபிகளை இழிவுபடுத்தும் படங்கள் இடம் பெற்ற ஃபேஸ்புக் பக்கம் நீக்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: