BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஆழ்மனதின் அற்புத சக்திகள்-9 Button10

 

 ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 42

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9 Empty
PostSubject: ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9   ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9 Icon_minitimeSat Apr 03, 2010 5:05 am

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9


நினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார்.


1973 நவம்பர் மாதத்தில் BBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர் தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார். யூரி கெல்லர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.

அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள், அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.

சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது. பரபரப்படைந்த ஜிம்மி "ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது.... என்னால் நம்ப முடியவில்லை" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.

அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக போன்கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல போன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக அங்கு பணிபுரிபவர் சொன்னார். பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் போன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.

நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.

அதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.

யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான் ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள். எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜேக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).

ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிக்கை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது. யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.


பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் "ட்ராவல்ஸ்" என்ற நூலில் "ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார். "என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத் தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ·போர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்".

"எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்".

"இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்திற்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மன ஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்".

"இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது"

எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. ஆனால் அவர் தான் மட்டுமல்லாமல் சிறுவர்களும் செய்ய முடிந்ததாகச் சொன்ன அந்த அற்புதச் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்.....




நன்றி:விகடன்
Back to top Go down
 
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆழ்மனதின் அற்புத சக்திகள்-5
» ஆழ்மனதின் அற்புத சக்திகள்-4
» ஆழ்மனதின் அற்புத சக்திகள்-10
» ஆழ்மனதின் அற்புத சக்திகள்-11
» ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 12

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: