உலகின் சிறந்த மூளைப் பயிற்சி நிபுணரான ஆல்வாரோ பெர்னாண்டஸ் அதிக மூளைத்திறன் படைத்தோரை ஆராய்ந்து கீழ்க்கண்ட பத்து பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் அவர்களைப் போல சிறந்த மூளைத்திறனை பெறலாம் என்று கூறுகிறார்.
பத்துப் பழக்க வழக்கங்கள் இதோ:-
1. 'அதைப் பயன்படுத்து' அல்லது 'அதை இழந்து விடு' என்பதில் 'அது' என்ன?
கோடானு கோடி நியூரான்கள் உள்ள உங்கள் மூளை அமைப்பைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதன் அழகான அமைப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான் அந்தக் கோடானு கோடி நியூரான்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிய முடியும்.
2. உங்கள் ஊட்டச்சத்து மேல் கவனம் வையுங்கள்.
உங்கள் உடல் எடையில் உங்களது மூளை 2 சதவிகிதம் எடைதான் கொண்டுள்ளது; ஆனால் அது நீங்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனில் 20 சதவிகிதம் எடுத்துக் கொள்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். பிரமாதமான விசேஷமான ஊட்டச்சத்துகளை உங்கள் மூளை கேட்கவில்லை. மாறாக, தேவையற்ற அழுகல் பதார்த்தங்களை உட்கொண்டு அதைக் கெடுத்து விடாதீர்கள் என்பதைத்தான் மறந்துவிடக் கூடாது என்கிறது அது!
3. உடலின் ஒரு பகுதி தான் மூளை என்பதை மறந்து விடாதீர்கள்!
உங்கள் உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல; மூளைக்கும் சேர்த்துதான்; உடல் பயிற்சி நியூரோஜெனிஸிஸை அதிகரிக்கிறது.
4. ஆக்கபூர்வமான எதிர்கால வளம் பற்றிய சிந்தனைகளைப் பயிற்சி செய்யுங்கள்; அது உங்களை ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வ வழியில் கொண்டு செல்லும் மனப்பழக்கத்தை ஏற்படுத்தும்!
வெளியிலிருந்து வரும் நிகழ்வுகளாலோ அல்லது உங்களின் சொந்த சிந்தனைகளாலோ ஏற்படும் மன அழுத்தமும் கவலையும் உங்களின் நியூரான்களை அழிக்கின்றன. அத்தோடு புதிய நியூரான்கள் உருவாவதையும் அவை தடுக்கின்றன. உடற்பயிற்சிக்கு எதிர்மாறானதாக தொடர்ந்த மன அழுத்தத்தைச் சொல்லலாம்.
5. மனதிற்கு வரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுங்கள்!
புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு அதற்கேற்ப தயாராவதற்குத்தான் மூளை என்பது படைக்கப்பட்டிருக்கிறது. புதிய நியூரான்கள் உருவானவுடன் அது எவ்வளவு நாள் இருக்கப் போகிறது, எங்கே இருக்கப் போகிறது என்பது அவற்றை எப்படி நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்து என்று சொல்லும்போது குறுக்கெழுத்துப் புதிரை வரிந்து கட்டிக் கொண்டு தீர்க்க ஆரம்பியுங்கள் என்பதல்ல அர்த்தம்! உங்கள் மூளைக்கு புதுப் புது சவாலான வெவ்வேறு விஷயங்களைத் தாருங்கள் என்பதுதான் அர்த்தம்!!
6. இந்த பூமியிலேயே இது வரை நாம் அறிந்தபடி நாம்தான் தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும் உயிரினம். ஆகவே லட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும்.
எந்த வயதிலும் கற்பதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். எத்தனை வயதானாலும் சரி.. உங்கள் மூளை வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நீங்கள் செய்வதை அது பிரதிபலிக்கிறது!
7. பயணம் செய்யுங்கள்; புதியதைப் பாருங்கள்.
புதிய இடங்களுக்குத் தக்கபடி இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு சுற்றுப்புறத்தை நன்கு கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய முடிவுகளை மேற்கொள்ளுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்!
8. உங்கள் மூளையை அடகு வைக்காதீர்கள்!
உங்கள் மூளையை டி.வி.யில் தோன்றும் ஷோ பேர்வழிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ தாரை வார்த்துத் தராதீர்கள். உங்கள் அண்டை அயலாருக்கு அதை அடகு வைக்காதீர்கள். உங்கள் முடிவை நீங்களே தேர்ந்தெடுங்கள். தவறு செய்யலாம்; ஆனால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் மூளைக்குத்தான் பயிற்சி; அண்டை அயலாரின் மூளைக்கு அல்ல!
9. ஊக்கமூட்டும் நண்பர்களை பழக்கப்படுத்தி நட்பைத் தொடருங்கள்.
நாம் சமூக பிராணிகள். ஆகவே, சமூக பழக்க வழக்கம் நமக்கு இன்றியமையாதது. நல்ல நண்பர்களை உருவாக்கி நட்பைத் தொடருங்கள்.
10. சிரியுங்கள் - அடிக்கடி!
மூளை ரசிக்கக்கூடிய சஸ்பென்ஸ் உள்ள ஆச்சரியம் தரும் நகைச்சுவைகளை அடிக்கடி கேட்டு மகிழுங்கள். முடிந்தால் உங்களுக்கென்றே பிரத்யேகமான ஜோக்குகளை உருவாக்கி மகிழுங்கள்.
இந்த பத்து பழக்க வழக்கங்களைப் படித்தால் மட்டும் போதாது. இவற்றில் ஒவ்வொன்றாக ஆரம்பியுங்கள். விடாதீர்கள். மூச்சுவிடுவது போல இயல்பாக இவை ஆவது வரை விடாமல் பயிற்சி செய்து கொண்டே இருங்கள். முடிவில் உங்கள் மூளை திறன் வாய்ந்த மூளையாக மாறி
இருக்கும் - சந்தேகம் இல்லாமல்![b]
THANKS:
நெல்லைச்சாரல்