BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபுதுமைப்பித்தன் Button10

 

 புதுமைப்பித்தன்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

புதுமைப்பித்தன் Empty
PostSubject: புதுமைப்பித்தன்   புதுமைப்பித்தன் Icon_minitimeSun Mar 14, 2010 12:34 pm

நடுநிசி
இன்றைக்கும் இரவு மணி பன்னிரண்டு அடிக்கும்போது, விளக்கிச் சொல்ல முடியாத ஒரு பயம் ஏற்படுகிறது. கடிகார ஒசையைக் கேட்ட மறு நிமிடமே, பூரான் நெளிவது மாதிரி சத்தமில்லாமல் பயம் மனதில் நெளியத் துவங்கிவிடுகிறது. காரணம், இரவு பன்னிரண்டு மணி நம்முடைய நேரமல்ல! அது பேய்கள் நடமாடும் நேரம் என்று நாலைந்து வயது முதல் நம்பி வந்த பயம். (எதற்காகப் பேய்கள் எப்போதும் நடுநிசி பன்னிரண்டு மணிக்கு நடக்கத் துவங்குகின்றன என்று இன்று வரை எனக்குப் புரியவேயில்லை).
பேய்கள் நம் பால்ய காலத்தின் பிரிக்க முடியாத தோழர்கள். எந்த இடத்தில் பேய் இருக்கிறது, எந்த இடத்தில் இல்லை என்று வேறுபடுத்தித் தெரிந்துகொள்ள முடியாத வயது அது. அதை உறுதி செய்வது போலவே ஊரெங்கும் பேய்க் கதைகள் நிரம்பியிருந்தன. (கதைகள் இல்லாத பேய்கள் இருக்க முடியுமா என்ன?) பேய்களைப் பார்த்தவர்களும், அதோடு பேசிப் பழகியவர்களும் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த காலம் அது!
பேய் பிடித்து விரட்டுவது அன்றாடக் காட்சியாக இருந்தது. (ஆண்களுக் குப் பேய் பிடித்து நான் பார்த்ததே இல்லை. பாட்டியிடம் கேட்டபோது, ஆண்கள் ஏற்கெனவே பிசாசுகள்தான். பேய் வேறு பிடிக்கணுமாக்கும் என்பாள்.) பேய்கள் யாருமற்ற வீடுகளில்தான் குடியிருக்கின்றன. யாருமற்ற பாதைகளில்தான் நடமாடித் திரிகின்றன. யாருமற்ற கிணற்றிலே குளிக்கின் றன. என்றால், தனிமையின் பெயர்தான் பேயா? பேய்கள் சிறுவயதில் என்னைக் கடுமையாக அலைக் கழித்தன. குறிப்பாக, கிணற்றில் தனியாகக் குளிக்கப் போகும்போது, கனகவல்லி காலைப் பிடித்துக் கொள்வாள் என்ற பயம் வீட்டில் இருந்து கிளம்பும்போதே துவங்கிவிடும். இதற்காக சிலரைத் துணைக்கு அழைத்துப் போக வேண்டும்.
ஒவ்வொரு பேய்க்கும் ஒரு இடமிருந்தது. கனகவல்லிக்கு ஒற்றைப் பனையடி கிணறு. ஜோதிக்கு கண்மாய்க் கரை பாதை. சண்முகத் தாய்க்கு காரை வீடு. இப்படி ஒருவருக் கொருவர் சண்டை சச்சரவின்றி அவரவர் பகுதியில் அவரவர் நிம்மதி யாகத்தான் இருந்தார்கள். நாம் எப்போதாவது அவர்கள் பகுதியைக் கடந்து போனால், அது அத்துமீறல்! ஆகவே, அவர்கள் நம்மைப் பிடித்து வைத்துக்கொள்வார்கள். சிறுவர் களை பேய்கள் பிடித்து வைத்துக்கொள்வது இல்லை. மாறாக, பய முறுத்தித் துரத்திவிடும்.
பேய்கள் விநோத மானவையே! அவை சிறுவர்களைக் கொஞ்சுவதில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள் கின்றன. என்னோடு படித்த பாண்டிய ராஜனை ஒரு பேய் தாடையைப் பிடித்து மாறி மாறிக் கொஞ்சி யதாகவும், அதன் விரல்கள் ஐஸ்கட்டி உருகியது போலிருந் ததாகவும் சொன்னான் அவன். (பெற்றவர்கள் குழந்தைகளைக்கொஞ்சுவதில்லை என்ற ஆதங்கத்தைப் பேய்கள் தீர்த்து வைக்கின்றபோலும்.)
பேயாக அலையும் ஆண்கள் அதிகத் தொல்லை தருவது இல்லை. மாறாக, யாராவது கறிச் சோறு கொண்டுபோனால் மட்டும், அந்த ஆளை அடித்துப் போட்டுவிட்டுக் கறிச் சோற்றைச் சாப்பிட்டுவிடும் (செத்தும் சாப்பாட்டு ஆசை போகாது போல). கிட்ணதேவர் செத்துப் பல வருடமாகியும், தனியாகச் சைக்கிளில் போகிறவர்களின் பின்னால் டபுள்ஸ் ஏறிக்கொண்டு பீடிக்கு நெருப்பு கேட்பாராம். அவரைத் திரும்பிப் பார்த்தாலோ, பேச்சுக் கொடுத்தாலோ மாட்டிக்கொள்வார்கள். (அவர் வாழ்ந்த நாட்களிலும் இதுதானே நடந்தது!)
என் பயம் கனகவல்லி பற்றி மட்டுமே! கணவனுடன் சண்டை யிட்டுக்கொண்டு கிராமத் தில் இருந்த கிணற்றில் குதித்துச் செத்துப் போனவள் கனகவல்லி. அவள் மிக அழகாய் இருப்பாள் என்றார்கள். குழந்தையில்லாத அவள் மீது தினமும் புருஷன் ஏச்சும் பேச்சுமாக இருக்கவே, மனத் துயரம் தாங்க முடியா மல் அவள் கிணற்றில் விழுந்து செத்துப் போனாள். அன்றிலிருந்து அவள், கிணற்றில் தனியே யாராவது குதித்துக் குளித்தால் அவர்களின் கால்களைப் பிடித்து உள்ளே இழுத் துக் கொண்டுபோய்க் கெஞ்சுவாள். கட்டிக் கொண்டு, வெளியே போகவிடாமல் பிடித்து வைத்துக்கொள்வாள். அது நிஜம் என்பது போல, கிணற்றில் குதித்தவுடன் காலைப் பற்றிக்கொண்டு யாரோ இழுப்பதுபோல் தண்ணீரின் விசை கடுமையாகிவிடும். எப்படி எழும்பினாலும் மேலே போக முடியாது. மேலும், தண்ணீருக்குள் பார்வை துல்லியமாக இருக்காது என்பதால், யாரோ இருப்பது போல ஒரு மங்கலான தோற்றம் இருக்கும். கிணற்றில் தண்ணீர் வற்றிப் போன காலங்களில் கனகவல்லி அழுதுகொண்டு இருக்கும் சத்தம் கேட்கும் என்பார்கள். எப்படியோ, ஒவ்வொரு நாளும் அவளுக்குப் பயந்து தான் குளிக்கவேண்டியிருந்தது.
கிராமத்து இரவுகள் ஆற்றுப் படுகை போல பயத்தின் படுகையாக இருந்தன. எங்கே தோண்டினாலும் பயம் ஊற்றெடுக்கத் துவங்கிவிடும். அதன் காரணமாக, தாக மெடுத்தால்கூட எழுந்து சமையலறைக்குப் போய் தண்ணீர் குடிக்கப் பயமாக இருக்கும். எப்போதாவது வயல் வரப்பில் தனியே நடந்து வரும்போது வாய்க்கு வந்த பாடல் களைச் சத்த மாகப் பாடிய படி வர வேண் டியதிருக்கும். அப்படியும், பயம் அடங்காது போனால், கண்களை மூடிக்கொண்டு ஓடி வர வேண்டிய நிலையும் உண்டாகும்.
ஊரில் வாழ்பவர்களை விடவும், செத்துப் போனவர் களே ஊர் மீது அதிகப் பற்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் எங்கள் ஊரை விட்டு வேறு ஊர்களுக்கு போவதே இல்லை. பேய்கள் காற்றில் அலைந்து திரியக்கூடியவை என்றபோதும், ஊர் விட்டு ஊர் போவதே இல்லை. அவற்றுக்கு எல்லைக் கோடுகள் இருக்கின்றன.
பெண் பேய்கள் எப்போதுமே வெள்ளை உடையைத்தான் அணிகின் றன. (உலகமெங்கும் பேய்கள் ஒரே நிறத்தில்தான் உடை அணிகின்றன.) தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இருக்கின்றன. (இப்போதாவது நிம்மதி யாக தன் விருப்பம்போல இருக்கட்டுமே!) ஆண் பேய்கள் இது போல வெள்ளைச் சட்டை, வேட்டி அணிவது கிடையாது. மாறாக, கறுப்பு உடை அணிந்திருக்கும் என்பார்கள்.
எங்களோடு எட்டாம் வகுப்பில் படித்துப் பெயிலாகி, அந்த வருத்தம் தாள முடியாமல் தங்கம் என்ற மாணவி பூச்சிமருந்தைக் குடித்துவிட்டாள். உடனே, ஊர்க் களத்தில் இருந்த ஒரு மாட்டுவண்டியைக் கவிழ்த்துப் போட்டு, அவளை சக்கரத்தின் மீது வைத்துக் கட்டி, கிறுகிறுவெனச் சுற்றினார்கள். அவள் மஞ்சளும் கோழையுமாக வாந்தியெடுத்தாள். கசக்கியெறிந்த காகிதம்போல அவள் உடல் சுருண்டு கிடந்தது. கண்கள் கிறங்கிப் போயிருந்தன. அவளைக் கண்டு ஊர் ஜனங்கள் வேதனை தாங்க முடியாமல் அழுது கூப்பாடு போட்டார்கள். அவள் உதடுகள் நடுங்கிக்கொண்டு இருந்தன.
தங்கம் தேய்ந்து போன குரலில், ‘குடிக்கத் தண்ணி வேணும்’ என்று கேட்டாள். ‘தண்ணீர் கொடுக்க வேண்டாம். குரல் சுருங்கிவிடும்’ என்று ஊர்ப் பெரியவர்கள் தடுத்து விட்டார்கள். யாவரும் பார்த்துக்கொண்டு இருந்தபோதே, தங்கம் இறந்து போனாள். ஆனால், அதன் பிறகு... எங்கள் வகுப்பில் மாணவர்கள் குடிப்பதற்கு வைத்திருக்கும் மண்பானையில் இருந்து அவள் டம்ளர் டம்ளராக தண்ணீர் மோந்து மோந்து குடிப் பதாகவும், பள்ளிக்கூடத்தையே சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் சொல்லத் துவங்கினர்கள். இதை மெய்ப்பிப்பது போல சில நாட்கள் இரவு நேரம் டியூஷன் படிக்கும் போது யாவரும் பாடத்தைச் சத்தமாக வாசித்துக்கொண்டு இருப்போம். எங்கள் யாவரின் சத்தமும் ஓய்ந்துபோன ஒரு நிமிடத்தில், யாரோ முணு முணுக்கும் சத்தம் கேட்கும். அது தங்கம்தான் என்றும், அவளும் எங்களோடு படித்துக் கொண்டு இருக்கிறாள் என்றும் நம்பினோம். அவளை நினைக் கும் போது மட்டுமே இன்று என் தொண்டையில் நெறி கட்டியது போல வலி உண்டாகிறது.
கிராமத்துக்குள் பேருந்து வந்து போகத் துவங்கிய நாளில் பேய்களின் பயம் கரைந்துபோகத் துவங்கியது. ஊருக்குள் வேற்று மனிதர்கள் வரத் துவங்கி னார்கள். மின்சாரம் அறிமுக மானது. குளியல் அறைகள் அறிமுகமாகின. டெலிபோனும் தொலைக்காட்சியும் சாத்திய மாயின. பேய்கள் இந்த மாற் றத்தினால் கோபம் கொண்டு யாரையும் பிடிக்கவே இல்லை. அவை பிடிவாதமான கிராமத்து விவசாயியைப் போல யாரோ டும் பேசக் கூடப் பிடிக்காமல் வம்படியாக தனியே ஒதுங்கிக் கொண்டு விட்டன.
கடவுளைக் கவனிக்கவே நேரமில்லாத மனிதர்களுக்குப் பேய்கள் எம்மாத்திரம்? அவற்றை மறந்தே விட்டார்கள். கனகவல்லி இருந்த கிணற்றில் குளிப்பதற்கு யாரும் வராமல் போய் பத்து வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் கண்மாயில் வேலிமரங்களைத் தவிர, ஜோதிக்கு வேறு துணையில்லை.
இன்றுள்ள மெட்ரிக் பள்ளியில், பேய்களாக இருந்தாலும் தமிழில் பேசமுடியாது என்பதால் பயந்து எந்தப் பேயும் பள்ளியின் பக்கமே போகவில்லை. உண்மையிலே இடிந்த வீடுகளையும் யாருமற்ற பாதைகளையும் தவிர பேய்கள் வேறு போக்கிடமற்றுப் போய் விட்டன. அங்கும் அவற்றைச் சீந்துவார் இல்லை. அதனால் தானோ என்னவோ, எனக்குப் பேய்களைப் பிடிக்கத் துவங்கி இருக்கிறது.
பேயை நம்புகிறீர்களா, இல்லையா என்று என்னை எவராவது கேட்டால், ‘நம்ப மாட்டேன். ஆனால் பயமாகத் தான் இருக்கிறது’ என்று புதுமைப்பித்தன் சொன்ன பதிலைத்தான் சொல்வேன்.
புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையுலகின் உன்னதக் கலைஞன். பாரதியைப் போல அசலானதொரு தமிழ்க் கலைஞன். அவரது கற்பனையும் மொழியும், தமிழ் சிறுகதை உலகுக்கு ஒரு புது பாய்ச்சலை உருவாக்கியது.
இவரது ‘காஞ்சனை’ என்ற கதை பேயைப் பற்றியது. அல்லது, பேய் பற்றிய பயத்தைப் பற்றியது. (பயமும் பேயும் வேறு வேறா என்ன?) ஒரு எழுத்தாளரின் வீட்டில் இக்கதை நடக்கிறது. அவருக்கு ஒரு நள்ளிரவில் தூக்கம் பிடிக்காமல் விழிப்பு வந்து விடுகிறது. எங்கிருந்தோ பிணம் எரிப்பது போல நாற்றம் வருவதை நுகர முடிகிறது. வீட்டில் எப்படி இந்த நாற்றம் வருகிறது என்று சுற்றிலும் தேடிப் பார்க்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. சில நிமிஷங்களில் அந்த நாற்றம் கமகமவென நறுமணமாகிறது. அதுவும் எங்கிருந்து வருகிறது என்று தேடிக் கண்டுபிடிக்க முடிய வில்லை. மனைவியை எழுப்பிக் கேட்கிறார். அவள் உறக்கம் கலையாமல் ‘பக்கத்தில் யார் வீட்டி லாவது ஊதுபத்தி ஏற்றி வைத்திருப்பார்கள், பேசாமல் படுத்துத் தூங்குங்கள்’ என்கிறாள்.
மறுநாள், அவர்கள் வீட்டுக்கு ஒரு பிச்சைக்காரி வருகிறாள். அவளை எழுத்தாளரின் மனைவி, உழைத்துப் பிழைக்கக்கூடாதா என்று கேட்கவே, எந்த வேலை கொடுத்தாலும் செய்வதாகச் சொல்கிறாள் பிச்சைக்காரி. எழுத்தாளரின் மனைவியும், மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அவளை வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறாள். அவருக்கு இது பிடிக்கவில்லை. பிச்சைக்காரியை உற்றுப் பார்க்கும்போது, அவள் கால்கள் தரையில் இல்லாமல் அந்தரத்தில் மிதப்பது போலவே இருக்கின்றன. மனப்பிரமையா இல்லை நிஜமா என்று தெரியாமல் விழிக்கிறார்.
சில நாட்களில், பின்னிரவில் வேலைக்காரி காஞ்சனை உறங்குகிறாளா இல்லையா என்று பார்க்கப் போகிறார். அவள் படுக்கை காலியாகக் கிடக்கிறது. எங்கே போயிருப் பாள் என்று அவர் வெளியே தேடிப் பார்க்கும் நிமிஷத்தில் அவள் திரும்பவும் படுக்கையில் இருக் கிறாள். எப்படி என்று புரியவேயில்லை. இது போலவே மறுநாள் இரவு ஆழ்ந்த தூக்கத்தில் தன் குரல்வளையை யாரோ அழுத்திக் கடிப்பது போல அவருக்குத் தோன்றுகிறது. திடுக்கிட்டு எழுந்து பார்க்கிறார். தொண்டையில் லேசான ரத்தத் துளி இருக்கிறது. காஞ்சனையைப் படுக்கையில் காணவில்லை.

பயத்துடன் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்கும் அவரை யாரோ ஒருவன் அழைத்து சுடலைச் சாம்பல் தந்து, அவரது மனைவி நெற்றில் பூசினால் யாவும் சரியாகிவிடும் என்கிறான். அதன் பிறகு காஞ்சனை அவர்கள் வீட்டுக்கு வரவே இல்லை. எங்கே போனாள் என்றும் தெரியவில்லை என்பதோடு கதை முடிகிறது.
பேய்கள் நிஜமா, பொய்யா எனத் தெரியவில்லை. ஆனால், அது ஒரு மன விசித்திரம். மனம் கொள்ளும் தடுமாற்றத்தின் பெயர்தான் பேய் போலும்! சமீபத்தில் இந்தியில் வெளியான பேய்ப் படம் ஒன்று பார்த்தேன். அதில், காட்டுக்குள் புகைமூட்டத்தோடு அலையும் பெண் பேய், ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்திருந்தது. நல்லவேளை, காலத்தில் பேய்கள் பின்தங்கிவிடவில்லை என்று மனதில் சந்தோஷம் பொங்கியது. இன்று பேய்கள் இடத்தை வேறு ஏதோ பயம் நிரப்பிக் கொண்டுவிட்டது. எனது இப்போதைய பயம் பேய்கள் அல்ல... டெலிவிஷன் மெகா சீரியல்கள் மட்டுமே!
உலகின் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்துப் பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது. திருநெல்வேலியில் 1906&ல் பிறந்த இவரது பெயர் விருத்தாசலம். முதல் கதை, மணிக்கொடி இதழில் 1934\ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா, அரசியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் என பன்முகத் தன்மைகொண்ட கலைஞனாக விளங்கினார். இவரது கதைகளை தமிழ்வாழ்வின் நாடித் துடிப்புகள் எனலாம். கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான பகடி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்த இந்த அபூர்வ கலைஞன், புதிய தமிழ்ச் சிறுகதைகளுக்கு மூலவித்தாக தனது படைப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்.
Back to top Go down
 
புதுமைப்பித்தன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆண்மை - புதுமைப்பித்தன் கதை
» புதுமைப்பித்தன் சிறுகதைகளில் நடை - ஓர் ஆய்வு
» புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதை
» பய‌ம் - ( கதாசிரியர் : புதுமைப்பித்தன் ) கதைகள்
» ~~ Tamil Story ~~ ஆண்மை - புதுமைப்பித்தன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: