lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேறுமா? Mon May 10, 2010 11:05 am | |
| இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட மும்பைத் தாக்குதல் வழக்கு இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. வெளிநாட்டவர், பாதுகாப்பு படையினர், அப்பாவி பொதுமக்கள் என, 166 பேரை குருவியை சுடுவது போல் சுட்டுக் கொன்ற கும்பலைச் சேர்ந்த கசாபுக்கு, மும்பை சிறப்பு கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இந்த தீர்ப்பு, ஓரளவு மன ஆறுதலை தரக் கூடும் என்றாலும், கசாபை தூக்கிலிட்ட பின்னரே அவர்கள் மனம் அமைதி பெறும். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டான் கசாப். பாதிக்கப்பட்டவர்களின் அடி மனதுக்குள் உறைந்து கிடக்கும் வலியை போக்கும் வகையில், கசாபுக்கான தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படுமா என்பது தான், தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ள கேள்வி.
கண்ணாமூச்சி: இந்தியாவை பொறுத்தவரை, தூக்கு தண்டனை என்பது, ஏதோ கண்ணாமூச்சி விளையாட்டு போல் ஆகி விட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் கூட, அதை நினைத்து பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை. கடைசியாக கடந்த 2004ல் தனஞ்செய் சட்டர்ஜி என்ற குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு பின், யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதற்காக, தூக்கு தண்டனை கைதிகள் யாருமே இல்லையோ என, கருதி விடக் கூடாது. மளிகை கடை லிஸ்ட் போல் 29 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுக்கள், ஜனாதிபதியிடம் நீண்ட காலமாக பரிசீலனையில் உள்ளன. இந்த 29 பேரின் கருணை மனுக்களின் மீது முடிவு எடுத்து விட்டு, கடைசியாகத் தான் கசாப் கதைக்கு வர வேண்டும்.
அமெரிக்காவின் அதிரடி: 'யாருக்குமே தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது' என, மனித உரிமை அமைப்புகளும், சமூக நல ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சில மேற்கத்திய நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. உலக போலீஸ்காரரான 'பெரியண்ணன்' அமெரிக்கா கூட, இந்த கருத்துக்கு ஒத்துப் போகிறது. ஆனால், தங்களது நாட்டுக்கு விரோதி என, தெரிந்து விட்டால், மனித உரிமையாவது, மண்ணாங்கட்டியாவது என அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு, அதிரடியாக முடிவு எடுப்பதில் அமெரிக்காவை மிஞ்சுவதற்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லை. ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்டதும், அவசரம், அவசரமாக விசாரணை நடத்தி அவரை தூக்கில் போட்டு விட்டது அமெரிக்கா.
இலங்கையில் நடந்தது என்ன? நமது அண்டை நாடான இலங்கையில், விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். நீண்ட காலமாக அவர்களை ராணுவத்தால் ஒழிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தான், இலங்கை தடாலடியாக முடிவு எடுத்தது. தங்களது எதிரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்பதற்காக எந்தவிதமான கடும் நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாரானது. மனித உரிமை அமைப்புகள், ஐ.நா., போன்றவையும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, போர் விதிமுறைகளை எல்லாம் புறம் தள்ளி விட்டு, விடுதலைப் புலிகளை கொன்று குவித்தது. புலிகளுக்கு எதிரான சண்டையில் இடையில் இருந்த அப்பாவி மக்கள் யாரும் இலங்கை ராணுவத்தின் கண்ணுக்கு தெரியவில்லை. உலக நாடுகளின் மனிதாபிமான குரல்கள் எதுவும் இலங்கையின் காதுகளுக்கு எட்டவே இல்லை. தனது எதிரிகளை சுத்தமாக அழித்து ஒழித்த பின் தான், இலங்கை ராணுவம் ஓய்ந்தது.
இந்தியாவில்...? எதிரிகளை ஒழிப்பதற்கு அமெரிக்காவிலும், இலங்கையிலும் பின்பற்றியது போன்ற நடவடிக்கைகள் நம் நாட்டிலும் எடுக்கப்படும் என்று நினைத்து விடக் கூடாது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் குரல் எழுப்பும் போதெல்லாம், மனித உரிமை மீறல் என்ற குரல் எழுவது வாடிக்கையாக உள்ளது. அரசியல்வாதிகளுக்கும் இதில் பொறுப்புள்ளது. ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என, கோர்ட் அறிவித்து விட்டால், அந்த வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக கருதுகின்றனர். அந்த வழக்கின் பின்னணியையும், அதனால் பாதிக்கப்பட்டோரின் வலிகளையும் யாருமே பார்ப்பது இல்லை. கருணை மனு என்ற பெயரில் தூக்கு தண்டனையை முடக்கி வைத்து விடுவது இங்கு வாடிக்கையாகி விட்டது. கீழ் கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என, அனைத்து கோர்ட்டுகளும் தூக்கு தண்டனையை உறுதி செய்து விட்டால், இறுதியாக ஜனாதிபதியிடம் கருணை மனு போடுவதற்கு குற்றவாளிக்கு வாய்ப்பு அளிக்கப்படும். சிறை அதிகாரிகள் அனுமதியுடன், குற்றவாளியின் கருணை மனு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டால், குற்றவாளி தூக்கில் தொங்குவதை தவிர வேறு வழி இல்லை.
சமீபகாலமாக தூக்கு தண்டனைக்கு எதிராக கண்டனக் குரல்கள் அதிகரித்துள்ளதால், நமக்கு ஏன் வம்பு என, ஜனாதிபதிகள் நினைத்து விடுகின்றனர். பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல் குருவை தூக்கிலிட வேண் டும் என, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுத்தன. அப்போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,'ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தவர்களின் பட்டியலில் அப்சல் குருவுக்கு முன்பாக 21 பேர் உள்ளனர். இவர்கள் விஷயத்தில் முடிவு எடுத்த பின்னரே, அப்சல் குரு விஷயத்தில் முடிவு எடுக்க முடியும். இது சட்ட நடைமுறை' என்றார். கசாப் விஷயத்திலும் இதுதான் நடக்கப் போகிறது என்பது பெரும்பாலானோரின் கருத்து.
கண்ணீருக்கு தீர்வு எப்போது? குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க கூடாது என்பதில், மனிதாபினம் உள்ள யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்த குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டோரின் வலிகளையும், சோகத் தையும் புரிந்து கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை சரமாரியாக சுட்டு வீழ்த்தி விட்டு, அவர்கள் ரத்தக் கறைகளுடன் வலியில் துடிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடையும் கொடூர குணம் கொண்ட கசாப் போன்றவர்களின் குற்றத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கசாப்பின் செயல், 'இந்தியாவுக்கு எதிரான போர்'என, கூறியுள்ளது, மும்பை சிறப்பு கோர்ட். நாட்டுக்கு எதிராக போர் தொடுத்து, அப்பாவி மக்களை கொன்று குவித்த கசாபுக்கு மரண தண்டனையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதே, மும்பை தாக்குதலில் பலியானோரின் குடும் பத்தினரின் கண்ணீர் கோரிக்கை. 'ஆனால், இவர்களின் கோரிக் கையை பொருட்படுத்தாமல், பத்தோடு பதினொன்றாக கசாப் விவகாரத்தையும் கருணை மனு என்ற பெயரில் முடக்கி வைத் தால், அது மற்ற பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் அளித்து விடுமே என்பது நாட்டுப் பற்றுள்ளோரின் கவலை. அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது?
ஜனாதிபதி முடிவு என்ன? கசாப், ஜனாதிபதியிடம் கருணை மனு போட்டால், அந்த மனு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த விஷயத்தில் தற்போதைய ஜனாதிபதி பிரதிபா அவரம் காட்ட மாட்டார் என்றே தோன்றுகிறது. தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவதை பிரதிபா விரும்பவில்லை. தனது இரண்டரை ஆண்டு கால பதவிக்காலத்தில், இதுவரை எந்த ஒரு கருணை மனு மீதுமே இவர் நடவடிக்கை எடுக்கவில்லை. மீதமுள்ள பதவிக் காலத்தையும் இதுபோல் முடித்து விட அவர் விரும்புகிறார். இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்த அப்துல் காலம், தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தில் இரண்டு கருணை மனுக்களை மட்டுமே பரிசீலித்தார். கே.ஆர்.நாராயணன் பதவி காலத்தில் ஒரு கருணை மனு கூட பரிசீலிக்க படவில்லை. எனவே, கசாப் கருணை மனுவும், ஜனாதிபதி பிரதிபாவின் பதவிக் காலத்தில் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இல்லை என, சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆண்டு கணக்கில் ஆகுமா? கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஏராளமான சட்டப்பூர்வமான தடைகள் உள்ளன. தற்போது மும்பை சிறப்பு கோர்ட் கசாபுக்கு விதித்துள்ள தண்டனையை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும். ஐகோர்ட் தண்டனையை உறுதி செய்தால், அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில், கசாப் விரும்பினால் மேல் முறையீடு செய்யப்படும். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, சாட்சியங்கள், தற்போதுள்ள சூழ்நிலை மற்றும் இரு தரப்பு வக்கீல்களின் வாதம் ஆகியவற்றை பரிசீலித்து, அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும். சுப்ரீம் கோர்ட்டிலும் தண்டனை உறுதி செய்யப் பட்டால், இறுதி கட்டமாக ஜனாதிபதிக்கு கருணை மனு போடப்படும். கசாபுக்கு முன்னதாக 29 பேரின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை பரிசீலித்து முடித்த பின்னரே, கசாபின் கருணை மனு பரிசீலிக்கப்படும். இந்த சட்ட நடைமுறைகள் முடிவடைவதற்கு இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.
தூக்கு தண்டனைக்காக காத்திருப்போர் பட்டியல்
ஜனாதிபதியிடம் கருணை மனு போட்டு, காத்திருக்கும் குற்றவாளிகள் பற்றிய விவரம்
* முருகன், சாந்தன், பேரறிவாளன் (தமிழகம்) ராஜிவ் கொலை வழக்கு (1991) * திவேந்தர்பால் சிங் (டில்லி) டில்லி குண்டு வெடிப்பு (1993) * சைமன் மற்றும் மூன்று பேர் (கர்நாடகா) 22 பேரை கொலை செய்தது (1993) * முகமது அப்சல் குரு (டில்லி) பார்லிமென்ட் தாக்குதல் (2001) * குர்மித் சிங் (உ.பி.,) 17 பேர் கொலை (1986) * சோனியா, சஞ்சீவ் (அரியானா) ஒரே குடும்பத்தினரை கொலை செய்தது (2001) * ஷ்யாம் மனோகர் மற்றும் ஐந்து பேர் (உ.பி.,) ஐந்து பேர் கொலை (1990) * தர்மேந்திரா மற்றும் நரேந்திரா யாதவ் (உ.பி.,) ஐந்து பேர் கொலை (1994) * பைரா சிங் மற்றும் மூன்று பேர் (பஞ்சாப்) ஐந்து பேர் கொலை(1991) * ஷோபித் சாமர் (பீகார்) ஆறு பேர் கொலை(1989) * மோகன் மற்றும் கோபி (தமிழகம்) பத்து வயது சிறுமி கொலை (1993) * மலை ராம் மற்றும் சந்தோஷ் (ம.பி.,) மைனர் பெண் கற்பழித்து கொலை (1996) * தராம்பால் (அரியானா) ஐந்து பேர் கொலை (1993) * மகேந்திர நாத் தாஸ் (அசாம்) ஜாமீனில் வந்தவர் கொலை(1996) * பிங்கலே (மகாராஷ்டிரா) இரட்டை கொலை (1991) * ஜாய் குமார் (ம.பி.,) கர்ப்பிணி பெண் கொலை (1997) * சுரேஷ் மற்றும் ராம்ஜி (உ.பி.,) ஐந்து பேர் கொலை * ஷேக் மீரான் மற்றும் இரண்டு பேர் (தமிழகம்) ஒருவர் கொலை (1994) * பிரவீண் குமார் (கர்நாடகா) ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை (1994) * சதீஷ் (உ.பி.,) குழந்தை கொலை (2001) * சுஷில் முர்மு (ஜார்க்கண்ட்) காளி கோவிலுக்கு குழந்தையை பலி கொடுத்தது (1996) * சய்பன்னா(கர்நாடகா) குடும்பத்தினரை கொலை செய்தது (1994) * கன்வர் பகதூர் சிங் மற்றும் கரன் பகதூர் சிங் (உ.பி.,) ஐந்து பேர் கொலை (1999) * லாலியா தூம் மற்றும் ஷிவ்லால் (ராஜஸ்தான்) மூன்று பேர் கொலை (1999) * ஜாபர் அலி (உ.பி.,) மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் கொலை * பண்டு பாபுராவ் திகாடே (கர்நாடகா) ஒருவர் கொலை (2002) | |
|