விருந்தாளி – கவிதை
நீ இல்லாமலேயே கூட
நான் அழகாய்த்தான்
இருந்திருக்கிறேன்!
நீ வந்ததிலிருந்து
…
காலையில் எழுந்தவுடன்
உன்னைக் கவனிக்கத்தான்
சரியாக இருக்கிறது!
-
கோபம் வந்தால்
யாரையாவது கடித்து தொலைத்து
வம்பில் மாட்டி விடுகிறாய்!
கிடைக்கும் பொருள்களை எல்லாம்
தூள் தூளாக்குகிறாய்!
ஆனாலும்…
உன்னைப் புகழ்கிறார்கள்!
நீ வந்ததிலிருந்துதான்
நான் இன்னும்
அழகாய் இருக்கிறேன் என்று
அம்மா ஆசையோடு சொல்லிக் கொள்கிறாள்!
-
அடக்கமாய் இருந்தாய் உள்ளே!
ஆசையை வளரவிட்டேன் உன்மீது!
மூன்றாம் வகுப்பில் படிக்கிறபோது
முந்திரிக் கொட்டையாய்
ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்தாய்!
-
ஒரு நாள்-
தோழிகளெல்லாம் கிண்டல் செய்ய…
என் வருத்தத்தையும் பாராமல்
ஏமாற்றிவிட்டு ஓடிப்போனாய்!
முதன் முதலாய் வந்த நீயே…
முதன் முதலாய் பிரிந்தாய்!
-
இப்போது நான்…
பொக்கையோடு நிற்கிறேன்!
பிரிந்து சென்ற
பால் பல்லே…
இப்போது … திருப்தியா?
Anand
நன்றி; மங்கையர் மலர்