ஜன்னல் ~~ சிறுகதைகள்
ஜன்னல் வழியாகவே மொத்த காம்பெளன்டும் தெரிகிறது முப்பிடாதிக்கு. வேப்ப மர நிழல் சியாமளா அக்கா வீட்டு சுவர் மேல் படர்ந்து இருக்கிறது. சியாமளா அக்கா தூங்கிக் கொண்டிருப்பாள். மத்தியானம் பால்காரன் வரும் வரைக்கும் தூங்கிக் கொண்டிருந்து விட்டு, மணி சத்தம் கேட்டவுடன் தலைமுடி கலைந்து அரைத்தூக்கத்தில் தான் அக்கா பால் வாங்குவாள். ஒரு வரைந்த ஓவியத்தில் உள்ள பெண் திடீரென நகர்வது போல் அவ்வளவு அழகாயிருக்கும் அது.
"க்கா.." என்று ஜன்னல் வழியாக அவளைக் கூப்பிட்டு "விகடன் வ்ந்துருச்சாக்கா?" என்பான்.
"இல்லடா... அண்ணா வர்றப்ப தான் கொண்டு வருவார்" என்று ஒருவிதமான கரகரத்த குரலில் சொல்லி நகர்வாள் சியாமளா.
"எங்கம்மாவுக்கு சிவசங்கரி நாவல்னா ரொம்பப் பிடிக்கும். அதான் சியாமளானு பேர் வச்சாங்க தெரியுமா முப்பிடாதி?" என்றாள் ஒரு நாள். அம்மா கூட தனக்கு வேறு பெயர்கள் வைத்திருக்கலாம் என்று தோன்றிற்று இவனுக்கு.
ராத்திரி அம்மாவிடம்,"ம்மா...எனக்கு ஏதாச்சும் விஜய், விக்ரம்னு பேர் வச்சிருக்கலாம் இல்லே?" என்றான் இவன். அம்மா சலிப்புடன், "கொடுக்காதப் புள்ளய குலதெய்வம் குடுக்குனு நினைச்சேன்.." என்றாள். அவளும் பார்க்காத ஆஸ்பத்திரி கிடையாது. இலவச மருத்துவ முகாம்கள் கிடையாது.
"என் புள்ள தான்ங்க.. கால் வரல.." என்று சொல்வதற்குள் பல தடவை அழுதிருக்கிறாள். மருத்துவமனைகள் போய் வந்த இரவுகளின் அமைதியில் அம்மா வயிற்றில் கலைந்தாவது போயிருக்கலாம் என்று தோன்றியிருக்கிறது.
மூன்றாவது வீட்டு பரந்தாமன் சித்தாவில் மருந்து இருக்கிறதென்று அம்மாவிடமிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டான். மிச்சம் இருப்பது தாலி மட்டும் தான். அம்மாவிடம் அது பற்றின வலி உண்டு. என்ன செய்வது? பரந்தாமன் இப்போது பேசுவதில்லை. அவன் வீட்டம்மா கூட "நல்லது செஞ்சி செஞ்சி ஓஞ்சிப் போனது போறாதா?" என்று அவனை முற்றத்தில் வைத்து திட்டினாள். அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் சைக்கிள் செயினை சுற்ற விட்டபடி இருந்தான்.
கால்கள். முப்பிடாதி அவன் கால்களை நேசித்தது யாருக்கும் ஏனோ தெரியவில்லை. எல்லாரையும் போல் அவனால் அந்த வளைந்த கால்களை நேசிக்காமல் இருக்க முடியவில்லை. அண்ணா அதை அருவெறுப்போடு பார்க்கும்போது அம்மாவின் காலத்திற்குப் பின் தனது நிலைமையை நினைக்காமல் இருக்க முடியாது.
அது ஒரு மழை நாள். அண்ணாவின் பைக் சாவியைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தான். "நீ எடுத்தியா?" என்று இவனைப் பார்த்து கர்ஜித்தான். அதற்கு முந்தைய நாள் தான் ரஜினியின் எஜமான் படம் பார்த்திருந்தான் இவன். சட்டையை மடக்கி திருப்பி போட்டு இல்லை என்றான். பளாரென ஒரு அறை. முப்பிடாதியின் கண்களில் கண்ணீர் பரவிற்று. அம்மா எட்டிப் பார்த்து விட்டு "அவன் தான் டென்சன்ல தேடுறானில்ல.. நீ பொத்திக்கிட்டு கிடக்கிரது தான?" என்றாள்.
வேறு எங்கோ சாவியை தேடி எடுத்துக் கொண்டு வேகமாக பைக்கில் போனான். அவன் கல்லத்தி முடுக்குத் தெருவில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று சியாமளா சொன்னாள். "கேட்டுடாதே தம்பி.. எனக்கே ஒரு ஆள் சொல்லுச்சு." என்றாள்.
"இல்லக்கா மாட்டேன் " என்றான் இவன். திடீரென்று தன் கால்களைப் பெரிதுபடுத்தாத பெண் யாராவது தன்னைக் காதலிக்க மாட்டார்களா என்று ஏக்கம் வந்தது.
"காதல்லாம் பண்ணி என்ன புண்ணியம்? என்றாள் சியாமளா அக்கா மறுபடி. "என்ன மாதிரி கேக்க நாதியில்லாம ஆயிட வேண்டியது தான்..."என்றாள்.
தன்னிடம் அவள் பேசுவது கண்ணாடியைப் பார்த்து அவள் மனசாட்சியிடம் பேசுவது போலிருந்தது. ரகசியங்களின் பெட்டகத்தை வைத்து சாவியை கடவுள் இவனிடம் கொடுத்து வைத்திருந்தாற் போலிருந்தது அவள் பேச்சு.
அவளை இறுக கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது இவனுக்கு. நகன்று அவள் பக்கத்தில் லேசாய் மூச்சு காற்றுபடுகிறாற் போல் உட்கார்ந்தான். "சுயபச்சாதாபம் தான் நம்ம எதிரினு ஒரு புஸ்தகத்துல வாசிச்சேன்" என்றான். என்ன புத்தகத்தில் என்று அவள் கேட்டு விடக் கூடாது என்று தோன்றினாலும் அப்படியே கேட்டாலும் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்று தோன்றிற்று. திடீரென ஒரு தைரியம் கூட வந்த மாதிரி கூட இருந்தது.
ஜன்னலுக்குள் கை விட்டு மழைக்கம்பியை கையால் பிடித்தான். "எங்க அம்மா..அப்பா யாரும் இப்ப பேசாது தெரியுமா?" என்றாள். எதுவுமே பேசாமல் அவளையே வெறித்தான். "ஆசையா இருக்கு முப்பிடாதி... அவங்க எல்லரையும் பாக்கணும்னு. இப்ப அவங்க மேலயும் லவ் வருது" என்றாள்.
இந்த இடத்திலேயும் ஏதாவது தத்துவமாய் பேசலாமா என்று நினைத்து உடனடியாக எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அம்மா கல்யாணத்துக்கு பார்க்கும் காலங்களில் சியாமளா அக்கா மாதிரி பாருங்க என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. "திரும்பவும் சொல்றேன்... நாஞ் சொன்னேன்னு உங்கண்ணன்ட்ட ஏதும் சொல்லிறாத.. சரியா? என்றாள் இறைஞ்சுகிறாற் போல். அண்ணன் அடித்ததெல்லாம் மறந்த மாதிரி இருந்தது.
மனசுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டாள்.. "இது அக்கா தான். பாசம் அதிகமா இருக்கதால தான் இந்த அக்கா எனக்குப் பிடிச்சிருக்கு." மழை அடர்த்தியாய் பெய்ய ஆரம்பித்தது. "ஐயோ .. அழிக்கதவு சாத்தல.. தூவானம் துணியை நனைச்சிடும்.. வரட்டா" என்ற போது இவன் கன்னத்தை தட்டி விட்டுப் போனாள்.
அம்மாவை விட சியாமளா அக்கா வரவர அன்பாய் இருப்பது போலிருந்தது. எப்படியும் அண்ணா வரும்போது விகடன் கொண்டு வருவார். அதை வாங்கும் சாக்கில் விளக்கு வைத்த பிறகு அவளிடம் பேசலாம் என்று தோன்றிற்று. அவள் அப்பா வீட்டில் எல்லா வகைப் புத்தகங்களும் வாசிக்கக் கிடைக்கும் என்றும் சாப்பிடும்போதுகூட புத்தகம் வைத்துக் கொண்டு தான் சாப்பிடுவதாகவும் அம்மா திட்டி திட்டி சாப்பிட சொல்லுவாள் என்றும் ஒரு நாள் சொல்லியிருக்கிறாள். ஆனால் விகடன் மட்டும் வாங்கிக் கொடுக்கவே அண்ணன் அழுவதாக சொல்லுவாள். "என்ன பண்ண... வருமானம் கம்மி தான.. பாவம்.. எனக்குனு வாங்கி வாராக.. இல்லியா அத நினைக்கணும்" என்றாள்.
முதல் கல்யாண நாளுக்கு அக்காவுக்கு எடுத்துக் கொடுத்த சேலையைக் காட்டி "உன்ட்ட காட்ட சொன்னாக அண்ணா" என்றாள். அப்போது தான் இவனுக்கு அந்த சந்தேகம் வந்தது. "அவங்க அண்ணன்னா நீங்க எனக்கு மைதினி தானக்கா..?" என்றான். விழுந்து விழுந்து சிரித்து "ஆமா கிடக்கு முறையும் கிறையும்.. எப்படி கூப்பிட்டா என்ன?" என்றாள்.
தண்ணீர் பிடிப்பதில் இவளுக்கும் பரந்தாமன் மனைவிக்கும் சண்டை வந்தபோது நேராக அம்மாவிடம் தான் அழுதபடி வந்து "என்னலாம் பேசுறா பாருங்கக்கா.." என்றாள். அடுத்த நாள் வெட்டப் போவது அறிந்த ஒரு கோழிக்குஞ்சின் பாவனைகள் அவள் கண்களில் தெரிந்தது. பரந்தாமனின் மனைவி பெருங்குரலில் இரைந்து கொண்டிருந்தாள். "விடு.. அழிஞ்சிப் போவா.. எங்கள ஏமாத்ததா.. வயித்தால போயே சாவா மூதி" என்றாள் அம்மா. "நீ வேணும்னா இங்க தண்ணி எடுத்துக்க" என்றாள்.
அன்றிலிருந்து அக்கா தண்ணி எடுக்கப் போனால் அம்மாவுடன் தான் போவாள். ஒரு நாள் அப்படி தண்ணீர் எடுக்கப்போகும்போது தான் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. இவனிடம் தான் வந்து முதலில் கேட்டார்கள். "இங்க சியாமானு.." அந்த ஆள் மெல்லிசாய் இருந்தார். "தோ.. அந்த வீடு தான் " என்று சொல்வதற்குள் அக்கா குடத்துடன் ஓடி வந்தாள்.
"அப்பா....எப்படிப்பா இருக்கீங்க?" அழுதாள். சியாமளா அக்கா அழுதது இவனுக்குப் பிடிக்கவில்லை. ஹீனமாய் "அழாதீங்கக்கா.." என்று சொன்னது யாருக்குமே கேட்கவில்லை. "உஞ்செல்லைத் தாயேன் முப்பிடாதி.. அவுகட்ட சொல்லணும் " என்றாள்.
"அவன்ட்ட ஏது? அவன் அண்ணன் கொண்டு போயிட்டானே?" என்றாள் அம்மா. "உள்ள கூட்டிட்டுப் போம்மா.. அப்பாவ உக்கார வை" என்றாள்.
பரந்தாமன் மனைவி வெளியே வந்து வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவளின் செல்போனைக் கேட்கலாமா என்று இவனுக்குத் தோன்றிற்று. அக்காவே அதற்கு திட்டலாம் என்று தோன்ற அமைதியானான். சியாமளா அக்கா பரபரவென பாயாசம் கொண்டு வந்து கொடுத்தாள். "சந்தோஷமாருக்கு.. அப்பா வந்துட்டார்.. நான் சமைச்சா அவருக்குப் புடிக்கும் முப்பிடாதி" என்றாள்.
மத்தியானத்துக்கு மேல் கார் கிளம்பிப் போயிற்று. அன்று மதியம் அக்கா தூங்கவில்லை. "நாளைக்கு அம்மாவைக் கூட்டிட்டு வர்றேன்னார் அப்பா.. அவசரமா போக வேண்டியிருக்குனார்." என்று படியில் உட்கார்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். பரந்தாமன் மனைவி பார்த்தது பற்றி "யாரும் சந்தோஷமா இருந்தா அவளுக்கு பேதில போயிடுமே" என்றாள் அம்மா.
அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. சாயங்காலம் அவள் கணவன் வந்ததும் வராததுமாய் சந்தோஷத்தில் வாசலில் வைத்து அப்பா வந்தது பற்றி சொன்னாள். அவன் அவள் கையை உதறி விட்டு உள்ளே போனான். பயங்கர கூச்சலும் சண்டையுமாய் உள்ளே இருந்தது.
"அந்தாள் வந்தோன்ன எங்கிட்ட சொல்லிருக்கலாமே.. என்ன என்னலாம் பேசினான். அதுக்கெல்லாம் பதில் சொல்லாம அவன் எப்படி என் வீட்டுக்குள்ள நுழைவான்?"
அக்கா அழுதபடியே செல்போன் தேடி அலைந்ததை சொல்லும் போதே பரந்தாமன் மனைவி வாசல் பக்கமாய் நின்று "நான் கூட என் செல்லை தாரேன்னு சொன்னேன் தம்பி.. யோசன பண்ணாப்ல இருந்துச்சு.. அதான்.." என்றாள்.
"ஐயோ பொய் சொல்றாளே.." என்று அக்கா கதற கதற அவளுக்கு அடி விழுந்தது. பெண்களை அடிக்கும் ஆண்களை காயடிக்க வேண்டும் போலிருந்தது இவனுக்கு.
கொஞ்ச நேரம் அக்கா தேம்பிக்கிட்டு இருந்தாற் போல் இருந்தது. அப்புறம் கதவை அவன் பூட்டி விட்ட சத்தம் மட்டுமே கேட்டது. இவனுக்கு நெஞ்சை அடைப்பது போலிருந்தது. கண்ணில் கண்ணீர் வழிந்ததை மறைக்க போர்வையை வைத்து மூடிக் கொண்டான். "சாப்பிடுடா" என்றாள் அம்மா. வேணாம்..தூக்கம் வருது என்று போர்வைக்குள்ளிருந்தே சொன்னான்.
ராத்திரி மூன்று மணிக்கு சியாமளா அக்காவின் கணவன் "ஐயோ" என்று அலறினான். இவன் சட்டென்று ஜன்னல் வழியாய் பார்த்தான். "இப்படி செஞ்சிட்டாளே" என்று அலறினபடி ஓடி வந்தான். அம்மா மற்றும் எல்லாருமே அங்கு ஓடினார்கள். அக்கா இறந்து விட்டாள் என்று இவனுக்குத் தோன்றிற்று.
மூச்சு வாங்க வாங்க "விஷம் குடிச்சிட்டாடா.. போயிடுச்சு" என்றாள் அம்மா ஜன்னல் வழியாக. அவள் கண்கள் கலங்கியிருந்தன. விடிய விடிய போலிசும் அவள் பிறந்த வீட்டு மனிதர்களும் வந்தார்கள். ஸ்ட்ரெச்சரில் அக்காவின் உடலைக் கொண்டு போனபோது இவன் குலுங்கி அழுதான். "அவ அம்மா வீட்டுக்கு கொண்டு போயிட்டாங்க பாடியை. வீடு எங்க இருக்கோ ..." என்று அம்மா புலம்பினபடி இருந்தாள்.
-----------------------------------------------------------------------------------------
இரண்டு மாதத்திலேயே அந்த வீட்டை வெள்ளையடித்து வாடகைக்கு விட்டார்கள்.. அம்மாவிடம் வந்து அந்த வீட்டுப் பெண் பால் காய்க்க தீப்பெட்டி வாங்கிப் போனாள். ஒரு வார்த்தைக்குக் கூட வாங்கனு கூப்பிடலப் பாருனு அம்மா புலம்பினாள். சாயந்திரமே லாரியில் சாமான்கள் வந்து இறங்க ஆரம்பித்ததைப் பார்த்த முப்பிடாதி, ஜன்னலை சட்டென பூட்டினான்.