BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?  Button10

 

 ~~ Tamil Story ~~ அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?    ~~ Tamil Story ~~ அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?  Icon_minitimeSun Mar 27, 2011 4:24 am

~~ Tamil Story ~~ அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?




நாதிக்கமலத்திலிருந்து காற்றானது தொண்டைக்குழி வழியாக பயணம் செய்து, கன்னம் இரண்டும் வீங்க உதடுகளை குவித்து குறும்புயல் போல காற்றை வெளிப்படுத்திய போது அவர் விசில் என்கிற அந்தக் கருவியை உபயோகித்துக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு பாதித் தூக்கம் கலைந்த பேருந்து ஓட்டுனர் பழக்க தோஷத்தில் மீதித் தூக்கம் கலையாமல் பேருந்தை இயக்க ஆரம்பித்தார். பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்தை கிளப்பும் பொழுது 5 விநாடிக்கு ஒரு முறை ஹாரன் ஒலி எழுப்ப ‍வேண்டும் என்கிற பல வருட பழக்கத்திற்கு மதிப்பு கொடுத்து கடைபிடிக்க ஆரம்பித்தார் ஓட்டுனர். அந்த சத்தம் எழுப்பப்படுவதன் நோக்கம் என்னவெனில் யாரும் பேருந்தின் முன் வந்து விட வேண்டாம். ஆனால் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்பது மட்டுமே, எவ்வளவு தான் இந்தியாவில் மக்கள் தொகை இருந்தாலும் உயிர்பயம் என்கிற ஒன்றுதான் பேருந்து ஓட்டுநர்களை பல்வேறு வழக்குகளிலிருந்து காப்பாற்றுகிறது என்றால் அது மிகையில்லை.

ஆனால் ஒவ்வொரு முறையும் பேருந்து நிறுத்தத்தை விட்டு வெளியேறுவதற்குள் ஓட்டுனரின் தூக்கம் முழுமையாக கலைந்து விடுகிறதென்றால் அதற்கு ஒரே காரணம் அந்த மூத்திரவாடைதான். அது தமிழ்நாட்டு அரசின் திட்டமிட்ட சதி. இந்த சதிவேலையின் காரணமாக ஒவ்வொரு முறையும் ஒரு பேருந்து ஓட்டுனர் முழுமையாக விழித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.

ஆனால் ஒரு பேருந்தில் மிகப்பொறுப்பான ஒரு மனிதர் என்றுமே இருப்பார். அவர்தான் நடத்துனர். சுருக்கமாக அவரது திறமையை பற்றி கூறுவதென்றால், அவர் தொண்டை கிழிய அடிக்கும் விசில் சத்தத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் பாதித்தூக்கம் கலைந்து விடுகிறது என்பதுதான். அவர் ஒரு பாதுகாப்பான பயணத்துக்கு அப்பொழுதே 50 சதவீத ஏற்பாடுகளை செய்துவிடுகிறார் என்பது பயணிகளுக்கான மிகப்பெரிய உதவி என்பதை எந்தவொரு பயணியும் நன்றியுணர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.

அன்று அந்த நடத்துனர் மிகக் கொடூரமாக கதறிக் கொண்டிருந்தார்.

"வண்டி மணப்பாறை, வடமதுரை எல்லாம் நிக்காது, திண்டுக்கல் மட்டும் ஏறு, மத்த ஆளுக எல்லாம் எறங்கிடுங்க"

திருச்சி பேருந்து நிலையத்துக்கே கேட்டிருக்கும் அந்த குரல். ஆனால் சர்வாதிகாரத்தனமாக தூங்கும், ஆச்சரியப்படத்தக்க இயல்பை, ஜனநாயக முறைப்படி, பிறப்புரிமையாக பெற்றிருக்கும் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அவர்களின் ஊரில் இறங்குவதில்லை. அடுத்த ஊர் வந்த உடன் ஏன் தன்னை எழுப்பிவிடவில்லை என நடத்துனரிடம் சண்டையிடுவார்கள். சும்மா இல்ல, 13 ரூபாய் 50 பைசாவுக்கு டிக்கெட் வாங்கியிருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடப்போவதாகவும் மிரட்டுவார்கள். ஆனாலும் இந்த சுப்ரீம் கோர்ட்டை பற்றி பேசும் போது அவர்கள் கூச்சப்படுவதேயில்லை. வெகுகாலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைத்தான் சுப்ரீம் கோர்ட்டாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது ஆழ்மனதில் அந்த கட்டடத்துக்குள் தான் திரு. விஜயகாந்த் கனம் கோர்ட்டார் அவர்களை எதிர்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசியதாக நியாபகத்தில் இருக்கும்.

அந்த நடத்துனர் தான் ஒரு அநாதையைப் போல் கதறியதை உணர்ந்தே இருப்பார். ஆனால் கடமை என்று வந்துவிட்டால் அடுத்தவர்கள் கேட்கிறார்களோ, இல்லையோ, வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்துவிட்ட திருப்தியை பெறுவதற்காகவாவது சொல்ல வேண்டியதை 9 கட்டை சுருதியில் உச்சபட்ச வெறித்தனத்துடன் சொல்லி விடுவது இயந்திரத்தனமாகிவிட்டது.

இதற்கிடையே 32 ரூபாய் 50 பைசா என டிக்கெட் விலையை நிர்ணயித்த முகம் தெரியாத அந்த நபரை, "பேதில போக" என மூவாயிரத்து 700வது தடவையாக திட்டிவிட்டு, டிக்கெட்டுகளை கொடுக்க ஆரம்பித்தார் அந்த நடத்துனர். அதாவது அந்த முகம் தெரியாத நபருக்கு தின்கிற உணவு செரிக்கக் கூடாதாம். அதுதான் அந்த நடத்துனர், அந்த நபருக்கு வழங்க நினைத்த தண்டனை. காரணம் அந்த 50 பைசா சில்லரையை வாங்குவதற்கு ஒரு 20 பேரிடமாவது அவர் போர் செய்ய வேண்டும். அந்த கிராமத்து மனிதர்கள் ஒரு 50 பைசாவை அவ்வளவு இலகுவாக நினைக்கமாட்டார்கள். தன் சொத்து முழுவதையும் ஏமாற்றி எழுதி வாங்கி விட்டான் என அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு சென்று எழுத்து மூலமாக எஃப். ஐ. ஆர். பதிவு செய்து விடுவார்கள். அந்த 50 பைசாவையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கொடுத்து விட வேண்டும் அவ்வாறு இல்லையெனில் அவர்கள் சாதாரணமாக முறைத்துப் பார்க்கும் பார்வை நெற்றிக் கண்ணுக்கு நிகரானதாக இருக்கும்.

அன்று இவ்வாறெல்லாம் சிரமப்பட்டு நடத்துனர் 5 வது இருக்கையை அடைந்த போது, அந்த பயணி

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்"

என்கிற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கின்ற விதத்தில், ஒரு நீளமான, இழுவையான கொட்டாவியை விட்டபடி கேட்டார்.

"தேனிக்கு ஒரு 3 டிக்கெட் தாங்க"

அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகிலிருக்கும் கம்பியில் சாய்ந்த அந்த நடத்துனர், அப்பொழுது ஏற்பட்ட கோபத்தை தன் பக்கமாக, திருப்பிக் கொண்டு தனக்கே தண்டனை கொடுத்துக் கொள்ள நினைத்தார்.

ஆம் பொங்கி வந்த கோபத்தை அடடக்க்கிக்க் கெசாண்டு அந்த பயணிக்கு பொறுமையாக பதில் சொல்ல நினைத்தார்.

"இந்த பஸ் திண்டுக்கல் வரதான் போகும், தேனி போகாதுன்னு எத்தன தடவ கத்தி, கத்தி சென்னேன், ஏங்க காது கொடுத்து கேக்கவே மாட்டீங்களா"

"ஓ... அப்படியா....... சத்தமா சொன்னாத்தானய்யா காதுல விழும், மனசுக்குள்ளேயே மொனங்குனா யாருக்கு கேக்கும்"

ஆனால் ஒருவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வாழ்க்கை அவருக்கு நிறைய வாய்ப்பை வாரி வழங்குகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கில். கற்றுக் கொள்ள விரும்பும் (உதாரணமாக) ஒரு நடத்துனரால் இவ்வாறு ஒரு முடிவெடுக்க முடியும், எந்த அரசு உயரதிகாரியாவது கத்தி முனையில் தன்னை நிறுத்தி, ஒழுங்கு மரியாதையாக இந்த நடத்துனர் வேலைக்குரிய அப்பாய்ண்மென்ட் ஆர்டரை பெற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் (பிறிதொரு ஜென்மத்தில்) என வற்புறுத்தினால், அப்போது குத்துப்பட்டு சாவதற்குரிய தைரியமான முடிவை எடுப்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. புத்தருக்கு நிகராக வாழ்க்கையை வெறுத்துச் சென்ற இன்னொரு நபர் ஒரு நடத்துனராகக் கூட இருக்கலாம். அதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

எப்பொழுதும் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியேறிச் செல்லும் சில கிலோமீட்டர் பகுதிகளில் நகராட்சியானது, திட்டமிட்டே புதைபொருள் ஆராய்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கும். ஆங்காங்கே சிறு மற்றும் பெரும் பள்ளங்களை தோண்டிப் போட்டு, அப்படி என்ன செய்கிறார்கள் என்று கோபப்பட்டு போய்க் கேட்டால், அவர்கள் அதை மறந்து போயிருப்பார்கள். ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் சரியாகப் படிக்காமல் பொதுத் தேர்வில் உட்கார்ந்து மோட்டுவளையத்தை பார்த்து கொண்டு யோசிப்பதைப் போல, எவ்வளவு தான் யோசித்தாலும், அந்த பள்ளங்கள் எதற்காக தோண்டப்பட்டது என்பதை அவர்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. அவை பல வருடங்களாக அப்படியே இருக்கும்.

ஆனால் சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டு கிடக்கும் பள்ளங்களுக்கு நடுவே இந்த ஆச்சரியம் தினசரி நடக்கும். இரண்டு பேருந்துகள், ஒரு லோடு லாரி மற்றும் எப்பொழுதும் நின்று கொண்டிருக்கும் தண்ணி லாரி, மற்றும் எல்போர்டு மாருதி கார், மிகக்கட்டாயமாக கத்திக் கொண்டேயிருக்கும் ஆம்புலன்ஸ் வேன் மற்றும் 10 சைக்கிள் மனிதர்கள், 10 பைக் மனிதர்கள் என இவர்கள் அனைவரும் அந்த குறுகலான பாதை வழியாக பயணித்து விடுவார்கள். இந்த சாகசத்தை உலக மக்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் இந்தியர்களை பெருமையாக கருதுவார்கள். இவ்வளவு திறமை சத்தியமாக உலகில் வேறு யாருக்கும் இருக்காது. இவ்வளவுக்கும் நடுவில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் அந்த ஆம்புலன்சில் நெஞ்சுவலியில் படுத்திருக்கும் வயதான மனிதரை காப்பாற்றி விடுவார்கள். இத்தகைய அசாதாரணத்துக்கு பெயர்போன தமிழர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த வியூகத்தை தாண்டிச் சென்றபின், சாலை போடுவதற்காக கற்களைக் கொட்டி வைத்திருப்பார்கள். உலகில் வேறு எங்குமே பார்த்திருக்க முடியாது இத்தகையதொரு ஒற்றுமையை. அதாவது ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலைபோடும் பொறுப்புணர்ச்சியை, ஒற்றுமை உணர்ச்சியை வேறு எந்தநாட்டிலும் காணமுடியாது.

ஆம், நகராட்சியானது தன் பங்கிற்கு ஊசி, ஊசியான கற்களை கொட்டிவிட்டு சென்றுவிடும். இதர வாகன ஓட்டிகள் அனைவரும் அப்பாதையில் பயணித்து அந்த கற்களை தரையோடு தரையாக சமன் செய்து விடுவார்கள். எப்படியிருந்தாலும், சாலையின் மீது புழுதியைக் கிளப்பி அந்த கற்கள் மீது நமது மக்கள் மண்ணை நிரப்பி விடுவார்கள் என்பது அரசாங்க அதிகாரிகளுக்கு மிக நன்றாகத் தெரியும். அதனால் ஒரு வருடத்திற்கு அந்த சாலை போடும் பணியை அப்படியே விட்டுவிடுவார்கள். சாலையானது இயல்பாகவே மணல் மூடி ஒரு அமைப்புக்கு வந்துவிடும். இதன் உள் நோக்கம் என்னவென்றால், சாலை போடுவதில் மண் செலவு மிச்சம். அந்தப் பணத்தை அரசாங்கத்திற்கு கணக்கு காட்டிவிட்டு தங்களுக்குள் பிரித்துக் கொள்ளலாம் என்பதே அதிகாரிகளின் திட்டம். அதன்பின் வெயில் காலமாக பார்த்து அதன் மேல் பூசி மெழுகி சாலை போன்ற தோற்றத்தைக் கொண்டு வந்து விடுவார்கள்.

அடுத்த மழைக்காலம் வரும் வரை அந்த அழகான சாலையின் மீது பயணிக்க வேண்டிய துர்சங்கடமான நிலைமைக்கு தாங்கள் தள்ளப்பட்டதை நினைத்து மக்கள் மிகவும் வருந்துவார்கள். ஆனால் வருணபகவான் அவர்களின் கண்ணீரைத் துடைத்து விடுவார். அடுத்த மழைக் காலத்தில் இந்த சாலை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். அதன் பின் மக்கள் தாங்கள் எதார்த்த நிலைக்கு திரும்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்வார்கள். எதார்த்தம் என்றால் எதார்த்தம் தான், அது ஒரு இந்திய எதார்த்தம்.

அந்த நடத்துனர் பேருந்து நகரத்தைக் கடந்து விட்டது என்பதை அறிய ஒரு புது வழிமுறையைக் கண்டுபித்து வைத்திருக்கிறார். அது என்னவெனில் பேருந்தானது மேலும் கீழுமாக ஒரு குதிரையில் செல்வது போல் குலுங்கியபடி செல்லுமானால் அது நகரத்துக்குள் செல்கிறது என்று பொருள். ஆனால் நமது பொறியாளர்களுக்கு நிஜமாகவே நல்ல சாலைகளை அமைக்கத் தெரியும் என்பதை புறநகர் சாலைகளைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் பேருந்தானது புறவழிச் சாலையை அடைந்தவுடன் அனைவரும் உறங்கிவிடுவர், ஓட்டுனர் உட்பட.

அந்த ஓட்டுனரின் ஆதங்கம் என்னவெனில், "நாங்கள் மட்டும் அரசு ஊழியர்கள் இல்லையா? எங்களுக்கும் உரிமை இருக்கிறது அரைத் தூக்கத்தில் வேலை செய்ய" என்பது மட்டுமே. அடுத்தவர் உரிமைகளில் அநாவசியமாக மூக்கை நுழைப்பது அநாகரிகமான செயல் என்பதாலும், மேலும், அரைத் தூக்கத்திலும், போதையிலும் எப்பொழுதும் உலகமானது சரியாக இயங்கும் என்பதாலும் ஒரு இந்திய ஓட்டுநரை மன்னித்து விடலாம்.

ஆனால் இன்னும் சில கிராம மக்கள் பாய்ண்ட் டு பாய்ண்ட் பேருந்து என்றால் என்னவென்றே அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஊர் வழியாக எந்த வாகனம் வந்தாலும் சரி அதன் மீது ஒரு வெறியோடு பாய்ந்து சென்று ஏறி அமர்ந்து மிகக் கொடூரமாக பயணம் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். பேருந்தில் டயர் என்ற பகுதியானது சுற்றவில்லை என்றால் அதன் மீதமர்ந்து பயணம் செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையதொரு பயணப் புலிகள். லாரி, வேன், சைக்கிள், மாட்டுவண்டி என எதையும் விடுவதில்லை.

அவர்கள் பேருந்துக்குள் செல்ல பல சுலபமான வழிமுறைகளைக் கையாள்வார்கள். மழைக்காலங்களில் அந்த பேருந்தின் ஜன்னல் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த கிராமத்து மனிதர்கள் தான். அந்த ஜன்னல் வழியாக ஒரே நேரத்தில் 3 பேர் புகுந்தால் என்னாவது. அந்த ஜன்னல் அகண்டு, விரிந்து காற்றோட்டமாக காணப்படுவதற்கு காரணம் இந்த கிராமத்துப் பொறியாளர்கள்தான். இது போன்ற இடைப்பட்ட கிராமங்களில் வண்டியானது நிறுத்தப்படாமல் போகிறது என்றால் முதலில் சந்தேஷமடைபவர் நடத்துனர்தான்.

பெரும்பாலும் அவரால் தொண்டை கிழிய கதறப்படும் விஷயங்கள் யாவும் அவருடைய காதுகளுக்குக் கூட கேட்பதில்லை. அந்த குரல் காற்றில் கரைந்து வீணாய் மறைந்துவிடும். ஓடும் வண்டியை மறைத்து இடம் பிடிக்க முயற்சி செய்யும் ஒரு கிராமத்து மனிதனுக்கும், ஒரு வழிப்பறி கொள்ளையனின் வெறிச் செயலுக்கும் பெரிதாக ஏதும் வித்தியாசங்கள் தென்படுவதில்லை. அவர்கள் இருவரும் முயற்சி செய்கிறார்கள், அவர்கள் இருவரும் முயன்று தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். அதில் எவ்வித வித்தியாசமும் இருக்கப் போவதில்லை.

ஒருநாள் ஒரு கிராமத்தானும், ஒரு வழிப்பறி கொள்ளையனும் ஒரே நேரத்தில் ஒரு பேருந்தை நிறுத்தும் பட்சத்தில், மக்கள் வழிப்பறி கொள்ளையனை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போகலாம். அந்த கொள்ளையன் அவமானத்தால் கூனிக் குறுகி மனம் நொந்து போகலாம். தான் ஒரு கொள்ளையன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள கூடிய துர்சங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம். அந்த நேரத்தில் பேருந்து பயணிகள் அனைவரும் சிரிக்காமல் இருந்தால் அவன் அவமானப்படுத்தப்படாமல், அவனது கௌரவம் காப்பாற்றப்படும்.

ஆனால் பேருந்துகளில் தேவையில்லாமல் இருக்கைகளை அமைத்து இடைஞ்சல் செய்யும் அரசாங்கம் மீது அந்த கிராமத்து மனிதர்களுக்கு என்றுமே கோபம் உண்டு. வண்டியை நீளமாக ஒரு செவ்வக வடிவ அறையை போன்று அமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். படுத்துக் கொண்டே பயணம் செய்வது, படுத்துக் கொண்டே சினிமா பார்ப்பது போன்ற நவீன யுக்திகள் எல்லாம் அன்றே அவர்களது மூளையில் உதித்துவிட்டது. அவர்களுக்கு உட்கார வேண்டும் என்று தோன்றினால் அவர்களே தங்களது இருக்கைகளை சுமந்து வருவார்கள். அந்த இருக்கை ஒரு சீயக்காய் மூட்டையாகவோ, மிளகாய் வற்றல் மூட்டையாகவோ கூட இருக்கலாம். இவ்வாறு நவீன யுகத்தில் இயற்கையான இருக்கையில் அமர்ந்து பயணிப்பதைப் பற்றி யோசிக்க, இந்த உலகமானது இன்னும் 20 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். நம் தமிழர்கள் தெரிந்தோ தெரியாமலோ 20 வருடங்கள் அட்வான்சாக யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு யாருக்குத்தான் புரியப்போகிறது.

ஆனால் ஒரு நடத்துனர் மிளகாய் நெடிக்கெல்லாம் அசந்துவிடக்கூடாது. அந்த நெடி அவரது தொண்டையில் கிச் கிச் மூட்டலாம். அதற்கெல்லாம் அவர் ஆத்திரப்படக் கூடாது. அவர் அன்பாகத்தான் பேச வேண்டும். அவர் இவ்வாறு ஒரு பத்து முறை கேட்க அனுமதி உண்டு.

"தம்பி எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்"

அந்த தம்பி வசதிப்பட்ட நேரத்தில் டிக்கெட் எடுப்பார் அல்லது எடுக்காமல் கூட இருப்பார். அதற்காகவெல்லாம் அவரை கோபித்துக் கொள்ளக் கூடாது. ஒரு 10 பயணியிடம் 100 முறை இவ்வாறு அன்பாக பேசி 5 டிக்கெட்டை விநியோகம் செய்துவிடும் பட்சத்தில், அந்த நடத்துனரின் குரல் கட்டையாகிப் போய்விடலாம். ஆனால் என்றுமே அவர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுபவராகத்தான் இருக்க வேண்டும்.

ஒருநாள் வீட்டுக்குச் சென்று தனது அன்பு மகனை, தனது கட்டையாகிப் போன கணீர் குரலில் ஒரு நடத்துனர் கொஞ்சும் பட்சத்தில், அந்த அன்பு மகன் இவ்வாறு கூறலாம்.

"எங்க அப்பா வேலைக்கு போயிருக்காரு அங்கிள், நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க"

அதையும் மீறி அவர் தனது மனைவியிடம் அதே த்வனியில் முயற்சி செய்யும் பட்சத்தில்

"அடி செருப்பால நாயே, என் புருஷனுக்குத் தெரிஞ்சா வெட்டி உப்புக் கண்டம் போட்டுருவாரு, ராஸ்கல், கம்மினாட்டி, தே....(சென்சார் கட்)" என்று கூறலாம்.









Back to top Go down
 
~~ Tamil Story ~~ அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story~~ ஒரு குரல்~~
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
» Tamil story
» ~~ Tamil Story ~~ மழை
» ~~ Tamil Story ~~ படுக்கையறைக்கொலை - 3

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: