~~ Tamil Story ~~ பூனை ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியை வெறித்தபடி அவன் படுத்திருந்தான். அவனுடைய பிரக்ஞைக்குள் மின்விசிறி இல்லை; வேறு ஏதேதோ யோசனைகள். வெற்று மார்பில் அடர்ந்திருந்த கேசத்தை வருடிக்கொண்டிருந்தன. அவன் விரல்கள். அறை வெறிச்சோடிக் காணப்பட்டது. சில புத்தகங்களும் பத்திரிக்கைகளும் கட்டிலின் ஓரத்திலும் டீப்பாயின் மேலும் இரைந்து கிடந்தன. அவனுடைய பொருள்கள் என்று அங்கே அதிகமில்லை.
யாராவது பார்த்தால் நிச்சயம் அவன் மாத வாடகையில் இங்கே வந்து தங்கியிருக்கிறான் என்பதை நம்ப மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறான். இதிலொன்றும் பெரிய சதி இல்லை. எவ்வளவு நாட்கள் தங்கவேண்டியிருக்கும் என்பது அவனுக்கே தெரியவில்லை என்பததால்தான் இந்த ஏற்பாடு. ரயில் நிலையத்திற்கு எதிரே ஜனசந்தடி நிறைந்த ஒரு சாலையில் இருந்தது அந்த விடுதி. மூன்றாவது மாடியில் தனித்திருந்த ஒரு அறை அது. கீழே இருக்கும் அறைகளைவிட சற்றுப்பெரியது. ஜன்னல் ரோட்டைப் பார்த்தவாக்கில் இருந்தது.
அவன் இங்கே வந்து ஒரு வாரம் முடியப்போகிறது. சதா படிப்பதும், யோசிப்பதும், உறங்குவதுமாக இருந்து கொண்டிருக்கிறான். வெளியே கூட அதிகமாக எங்கும் நடமாடப்போகவில்லை. உணவை விடுதிப்பையன் வாங்கிவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். தெரிந்தவர்கள் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற அச்சம்தான் அவனை இந்த அறைக்குள்ளாகவே அடைந்து கிடக்கச்செய்தது.
தூங்கிவிட வேண்டுமென்ற விருப்பம், இரைச்சலிடும் யோசனைகளால் நிறைவேறாமல் போய்க்கொண்டிருந்தது. இன்று பகலில் நடந்த ஒரு சம்பவம் அவனுக்குள் ஏதோ ஒன்றை உறுதிபடுத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது. வெளியே ஏதோ பரபரப்பான சப்தம் கேட்கிறதே என்று அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தான். விடுதிப்பையன்கள் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையே சட்டென்று தோன்றிமறைந்த ஒரு பூனையின் உருவத்தை அவன் பார்த்தான். ஆமாம், அதைத்தான் துறத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பையனை நிறுத்தி எதற்காக அதைத்துரத்துகிறீர்கள் என்று கேட்டான். ‘பூனை தற்கொலை செய்துகொள்ளப்போகிறது’ என்று சொல்லிவிட்டு அவசரமாக ஓடி அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
அங்கே நடப்பதை இவன் பார்த்துக்கொண்டிருந்தான். பூனையும் பையன்களும் ஆங்காங்கே தோன்றி மறைந்து கொண்டிருந்தார்கள். பூனை அகப்பட மறுத்தது. புதுப்புது உத்திகளில் தப்பித்து தாவிப் பாய்ந்து கொண்டிருந்தது. பையன்களும் விடுவதாக இல்லை. துரத்திக்கொண்டிருப்பதே அவர்களை கிளர்ச்சியடையச் செய்திருக்க வேண்டும். அந்த சம்பவத்தின் உச்சகட்டமாக பையன்களின் முற்றுகையிலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து பூனை கீழே குதித்துவிட்டது.
வெற்றியின் மிதப்பில் கூச்சலிட்டுக்கொண்டு பூனையைப்பார்க்க படிகளில் சப்தத்துடன் இறங்கி ஒடிக்கொண் டிருந்தார்கள் அவர்கள். இவனும் தன்னுடைய அறைக்குள் சென்று ஜன்னலின் வழியே கீழே பார்த்தான். பூனை சாலையில் விழுந்து கிடந்தது. இவனுக்காக என்று இல்லாமல் எதேச்சையாகத்தான் அது நடந்திருக்க வேண்டும். இந்த எதேச்சைகள் ஏதோ ஒன்றின் ஒழுங்குபடுத்தப்பட்ட கூறுகளாகக்கூட இரு க்கலாம். இது போல் அவனுக்கு நிறைய நேர்ந்திருக்கிறது.
பகல் பொழுதில் ஜன்னலுக்கு அருகே உட்கார்ந்து சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பான். ஜன்னலுக்கு கம்பிகள் இல்லை. கண்ணாடிக் கதவைத்திறந்தால் கீழே சாலையில் போகும் நாகரீக யுவன்களையும், யுவதிகளையும் இங்கிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். உணவுவிடுதிகளிலும், துணிக்கடைகளிலும் நேர்த்தி காட்டி நாசுக்குடன் பாயும் அவர்களை வேடிக்கை காட்சி போல பார்த்துக்கொண்டிருப்பான். ஒருவருடைய முகத்திலும் சாந்தமில்லை; பிரகாசம் இல்லை.
இவர்களுடன் பேசுவதற்கும் உறவாடுவதற்கும் என்ன இருக்கிறது? அவனுடைய மனைவியுடன் நடக்கும் சம்பாஷனையை நினைத்துக்கொள்வான். சாதாரண உரையாடல் கூட சண்டையில்தான் போய்முடிகிறது. சிறிது பிசகினாலும் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விட்டுவிடுகின்றன இந்த வார்த்தைகள். மொழிகள் எல்லாமே அழிவை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும் கருவிகளாக மாறிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவை கொலைகளுக்கான நியாயங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறன.
என். டி. ஜோசப் என்ற பாதிரியார் மலையாளத்தில் எழுதி, நீலவாணன் என்பவரால் தமிழில் 1962-ல் வெளிவந்த ‘இந்தியாவில் பலிகள்’ என்ற பழைய புத்தகம் ஒன்றையும் சமீபத்தில் அவன் படித்திருந்தான். உயிர்களை பலி கொடுப்பது கடவுளுடன் செய்யும் பரிவர்த்தனையாக அவருக்கு தோன்றுகிறது. மனிதனின் குற்ற உணர்வுதான் இதற்கு காரணம் என்கிறார் அவர். எல்லா உயிர்களுக்கும் இயற்கை வழங்கியுள்ள கொடையை தான் அபகரித்து உண்பது அவனை பரிகாரம் செய்ய நிர்ப்பந்திக்கிறது.
இதுதான் புதையலுக்காக நரபலி செலுத்துவது வரை அவனை இட்டுச்செல்கிறது என்ற முடிவுக்கு வருகிறார். இயற்கையிலிருந்து விலகுவதன் காரணமாக அதன் சமநிலைப்பற்றிய பிரக்ஞையை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மனிதனாக பிறந்து விட்டதற்காக நாம் செய்யக்கூடிய பரிகாரம்தான் என்ன? இந்த குற்ற உணர்விலிருந்து மீள்வது எப்படி? அந்த புத்தகத்தை வாசித்து முடிக்கையில் இந்தக் கேள்விகள் அவனுக்குள் எழுந்தன.
இந்த பூமியில் வாழ்வதற்கான உயிர்களுக்குரிய தகுதியை நாம் இழந்து விட்டோம் என்று அவன் கருதினான். தன்னையே அவன் கேட்டுக்கொள்வான், ‘வாழ்வது என்பது முக்கியமானதுதானா?’ காலம்காலமாக இந்த கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று தோன்றியது. நிகழும் தற்கொலைகள் எல்லாம் இந்த கேள்வியின் ஒருதன்மையிலான பதில்களாக இருக்கலாம். இருந்தும் இந்த பூமியில் கோடான கோடி மனிதர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்; இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்தல் என்பது தற்காலிகமானதாகவும், மரணம் நிரந்தரமானதாகவும் இருக்கிறது. ஆமாம், இருளைப்போலவே மரணமும் பிரபஞ்சத்தில் நிரந்தரமாக நிறைந்திருக்கிறது.
இரவின் தூக்கமற்ற கணங்களில், யோசனைகளின் அழுத்தத்தில், தற்கொலைதான் சரியான முடிவாக உறுதியாகிக்கொண்டு வந்தது. இந்த வாய்ப்புதான் எப்போதும் அவனுக்கு அருகிலேயே தென்பட்டது. ஒரு வளர்ப்பு மிருகம் போல அது அவனை சுற்றிசுற்றி வந்துகொண்டிருந்தது. தற்கொலைக்கு எப்படிப்பட்ட வழியை மேற்கொள்வது என்பதிலும் அவனுக்கு தெளிவில்லை. வலியற்ற மரணம் சாத்தியமா என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான்.
வலி என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் தற்கொலை ரொம்பவும் சகஜமாகிவிடும் என்று தோன்றியது. சாவுநேரும் கணம் இது எந்த அளவுக்கு உணரக்கூடியதாக இருக்கும்? இதற்கு முன்புவரை தற்கொலை செய்து கொண்டவர்கள் எப்படி இந்த பிரச்சனைக்கு முடிவுகண்டார்கள்?. புறக்கணிக்கப்பட்டதன் ஆவேசம் வலி பற்றிய எண்ணத்தை வென்றிருக்கலாம். அப்படியானால் வாழ்தலின் மேலான ஈர்ப்பு தம்மிடம் இன்னும் மிச்சமிருக்கிறதா? பகல்பொழுதுகள் இதுபோல் அவனுக்குப் பிரச்சனையாய் இல்லை. இரவு நேரத்திலோ அவனுக்குள் கனன்று கொண்டிருந்த எண்ணங்களின் வெப்பம் கலவரமூட்டுவதாக இருந்தது.
கட்டிலைவிட்டு இறங்கி ஜன்னலருகில் போய் நின்று கீழே சாலையைப்பார்த்தான். தெரு விளக்குகளின் மஞ்சள் ஒளியில் வெறிச்சிட்டு படுத்திருந்தது சாலை. தொலைவில் திறந்திருந்த ஒரு டீக்கடையின் முன்னால் இரண்டு மூன்று மனிதர்கள் தென்பட்டார்கள். வெளியேகூட எங்கும் இப்போது போய் வரமுடியாது. நேற்று இரவு அப்படித்தான் நடந்தது. உலாவிவிட்டு வரலாமே என்று விடுதியை விட்டு அவன் சாலைக்கு வந்தான். மனிதர்களின் நடமாட்டம் நின்று சாலை வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதாவது சில வாகனங்கள் மட்டும் இருளின் அமைதியைகுலைக்கும்படி கூச்சலிட்டுச் சென்றன.
வெகுதூரம் சென்று திரும்ப வேண்டும் என்ற உத்தேசத்துடன் நடந்தான். அவ்வளவாக பரிச்சயம் இல்லாத நகரமிது. ஏதாவது வாங்குவதற்காக இங்கே வந்து போவதைத்தவிர இந்த நகரத்திற்கும் அவனுக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை. நண்பர்களோ, உறவினர்களோகூட யாரும் இல்லை. இந்த நகரத்திற்கு வந்துவிட்டால் தவறாமல் கடற்கரைக்குப் போய்வருவான். மணலில் உட்கார்ந்து பெரும் ஆகிருதியுடன் அசையும் கடலையே பார்த்துக்கொண்டிருப்பான். கரையோரம் அலைகள் செய்யும் ஆர்பாட்டத்திற்கு அப்பால் விரியும் அமைதியில் லயித்திருப்பான்.
இங்கே வந்த பிறகு ஒருமுறைகூட கடலை சென்று பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அது தனது நோக்கத்தை பின் வாங்கச் செய்துவிடுமோ என்ற அச்சம் அவனைத் தடுத்துக்கொண்டிருந்தது. இப்போது அறையைவிட்டு கிளம்பும்போதுகூட சபலம் தட்டியது; அப்படியே போய்வந்து விடலாமே என்று.
இரவில் இப்படி தனியாக நடப்பது இதமாக இருந்தது. அதே நேரத்தில் தன் மீதான பட்சாதாபத்தை பெருக்கியது. துயரமான ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு, அழவேண்டும் போல இருந்தது. யாரோ தனக்கு பின்னாலிருந்து ‘நீ ஒரு முட்டாள்’ என்று சொல்லிக்கொண்டிருப்பது போல ஒரு உணர்வு. இப்படி அவன் மனம் பின்னடைவு கண்டு குழம்பியபடி இருக்கையில்தான் இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு கடைக்கு முன்னாலிருந்து எழுந்து வந்து இவனை வழிமறித்தார்கள்.
‘இந்த நேரத்தில எங்கே போற?’ என்றான் மிரட்டும் தொனியில் ஒரு போலீஸ்காரன்.
‘சும்மா காலாற நடக்கலாமென்று வந்தேன்’ என்றான் இவன்.
‘இது என்ன உங்க அப்பன் வீட்டுத் தோட்டமுன்னு நினைச்சியா கண்ட நேரத்தில நடந்து பார்க்கிறதுக்கு; ஊர் நிலவரம் என்னன்னு தெரியுமில்லே. பத்து மணிக்கு மேல எவனும் அனாவசியமா ரோட்டுல நடக்கக்கூடாது. சந்தேகப்பட்டா புடிச்சி உள்ள போட்றுவாங்க’
‘எங்க வேல பாக்கிற?’ என்றான் இன்னொரு போலீஸ்காரன்.
‘கம்ப்யூட்டர் சென்டர்ல’
எந்த ஊர் என்று அவர்கள் கேட்காமல் போனது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.
‘பேசாம வீட்டுக்கு திரும்பிப்போ. உன் நல்லதுக்காகத்தான் சொல்றோம்’ என்றான் மற்றவன்.
‘பத்து ரூபாய் இருந்தா கொடுத்துட்டுப்போ டீ குடிக்கலாம்’ என்றான் அதே மிரட்டும் தொனியில். இவன் பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து கொடுத்துவிட்டு திரும்பி நடந்தான்.
அறைக்கு வந்த பிறகு வெகுநேரம் இந்த சம்பவத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். அவர்களுடைய மிரட்டலுக்கு பயந்திருக்கிறோம் என்பது புரிந்தது. எதற்காக பயப்படவேண்டும்? எல்லோருக்கும் பொதுவான இந்த இரவின் அந்தகாரத்தை அனுபவி¢க்க முடியாமல் தடுக்க இவர்கள் யார்? இவர்கள் என்ன பிரபஞ்சத்தின் எஜமானர்களா? ஏன் சகமனிதனை இப்படி விரட்டியடிக்க வேண்டும்? இந்த முகங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் என்ன சம்மந்தம்? ஒரு பறவையோ புழுவோ சாவதுவரை அதுவாகவே வாழ்ந்து மடிகின்றது. மனிதர்கள் என்பதால் எதுஎதுவாகவோ மாறவேண்டியிருக்கிறது.
மனிதனுக்கு மட்டுந்தான் நாம் சாகப்போகிறோம் என்பது தெரிந்திருக்கிறது. அதனால்தான் இந்த தப்பித்தல்கள் போலும். இது போன்ற நகரங்கள் அதற்கான வசதிகளைத்தான் செய்து கொடுப்பதாக அவனுக்கு தோன்றியது.‘பின்பு நான் எதற்காக இந்த நகரத்திற்கு வந்திருக்கிறேன்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டான். குற்றங்களிலிருந்து வேண்டுமானால் தப்பித்து விடலாம் ஆனால் குற்ற உணர்வுகளிலிருந்து எப்படித்தான் தப்பிப்பது? கொஞ்சம் கொஞ்சமாக அது அவனைக் கொன்றுகொண்டிருக்கிறது.
கீழே உள்ள அறைகளில் யாரோ உரத்து சிரிப்பது கேட்டது. பின்னிரவில்தான் வழக்கமாக அவர்கள் தூங்கப்போகிறார்கள். இந்த சிரிப்பும் கும்மாளமும் அடங்குவதற்குள் நடுஇரவு கடந்துவிடும். இவர்களைக் காணும்போது நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட பிறந்தவர்கள் போலவே அவனுக்குத் தோன்றினார்கள். அவர்களுடைய எல்லா தேவைகளும் இங்கே பூர்த்தியாகி விடுகின்றன; பெண்கள் உட்பட. இங்கு வந்து சேர்ந்த அடுத்த நாள், உணவு கொண்டு வந்த விடுதிப்பையன் கேட்டான், ‘தனியாக இருக்கிறீர்களே ஏதாவது கம்பனி வேண்டுமா சார், ரேட் கம்மிதான்’ என்று. அன்பு, காதல் எல்லாம் ரொம்ப மலிவு இந்த நகரத்தில். பகல் முழுக்க நாகரீக பவிசு காட்டி காசுக்காக அலைந்து விட்டு இரவில் தங்களைத்தாங்களே அவமானப் படுத்திக்கொள்வது போல இருக்கிறது இவர்களுடைய செயல். நேற்று இரவு வருகிற வழியில் குடித்துவிட்டு எவனோ வாந்தியெடுத்து வைத்திருந்தான்.
திரும்பவும் கட்டிலில் சென்று படுத்தான். தூங்குவதற்கான பிரயத்தனங்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. தூங்கிவிட்டால் மட்டும் இந்த பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவா முடிகிறது; கனவுகளாக உருமாறியல்லவா துரத்துகின்றன. இப்போதெல்லாம் கனவுகள் காணாமல் தூங்கி எழமுடிவதில்லை அவனுக்கு. ஏதேதோ கனவுகள் தோன்றி மனதை அலைகழிக்கின்றன. இங்கு வந்து சேர்ந்த அன்றுதான் இப்படி ஒரு கனவு வந்தது அவனுக்கு. அவனுடைய கணினிமையம் போலத்தான் அது தெரிந்தது. வெளியே அசாதாரண கூச்சல் ஒன்று எழுந்து, நெருங்கி வருகிறது. ஒருவன் கண்ணாடி கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான். நிஜத்தில் அவனுடைய மையத்தில் கண்ணாடிக்கதவுகள் எதுவும் இல்லை.
கையில் உள்ள கத்தியைப் பகட்டாக தூக்கிப்பிடித்தபடி இவனுக்கு எதிரே நெருங்கி வந்து நிற்கிறான். இவனோ தனது அதிர்ச்சியை வெளிகாட்டிக்கொள்ளாமல் வழக்கமான ஒரு வாடிக்கையாளனிடம் கேட்பது போல கேட்கிறான், சொல்லுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?’ அருகில் வந்து இவனுடைய நீண்ட தலைமுடியை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடக்கிறான். ‘நம்பிக்கை துரோகி’ என்று அவன் முணுமுணுப்பதை கேட்கமுடிகிறது. அவனை எங்கோ பார்த்தது போல இருக்கிறது, ஆனால் சரியாக அடையளம் காணமுடியவில்லை. இவனுடைய வாடிக்கையாளர்களில் ஒருவனாக இருக்கலாம் என்று தோன்றியது.
உச்சிவெய்யில் நேரம். முன்னால் சாய்ந்தவாக்கில் அவனுடன் நடக்கிறான். மற்ற கடைக்காரர்களும், சாலையில் போவோரும் சாவகாசமாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரும் தடுக்க வரவில்லை. போக்குவரத்து தடைபட்டிருந்தது போலத்தான் தெரிந்தது. இருந்தும் வாகனங்களின் பொறுமையற்ற கூச்சல்கள் காணப்படவில்லை. குழப்பமான ஒரு அமைதியங்கே சூழ்ந்து நிற்கிறது. அந்த இடம் சாலையின் விஸ்தாரமான பகுதியா அல்லது விளையாட்டு மைதானமா தெரியவில்லை. அருகில் ஒன்றிரண்டு மரங்கள் கூட தென்பட்டன. ஏதோ ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க காத்திருந்தவர்கள் போல உயரமான மாடியிலிருந்து ஆண்களும் பெண்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தெரிகிறது.
அவன் மனைவிகூட அந்த கூட்டத்தில் இரக்கமற்ற பாவத்துடன் நின்றிருக்கிறாள். அவளுக்கு அருகில் தோழி போல மற்றவளும் நின்று கொண்டிருக்கிறாள். இவர்கள் எப்படி சிநேகமானார்கள்? அவர்களிடம் ஏதோ அவன் சொல்ல நினைக்கிறான். சொல்லிவிட்டது போலவும் இருந்தது. சப்தம் வெளிவந்ததாகத் தெரியவில்லை. திணறலை மட்டும் அவனால் உணரமுடிந்தது. ‘நீங்கள் எல்லோரும் என்னை கைவிட்டுவிட்டீர்கள்.’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். கூடை பந்து மைதானம் போன்ற ஒரு இடத்தில் அவனை நிறுத்தி வைத்து ஒரு சடங்¢கை நிகழ்த்துவது போல அவன் தலையைத் துண்டிக்கிறான். கழுத்திலிருந்து பீறிட்ட ரத்தம் அந்த வெறிகொண்ட மனிதனை நனைக்கிறது. இவன் உடல் துடித்தபடி கீழே கிடக்கிறது. இப்போது அவனை அடையாளம் கண்டு கொள்கிறான்; அவனுடைய நண்பன்தான் அது. இந்த இடத்தில் கனவு இழை அறுபட்டு விழிப்பு வந்தது. அன்று நீண்ட நேரம் அவனால் தூங்க முடியவில்லை.
மூளைச்செல்கள் சிதறிவிடும் போல இருந்தது. இது பைத்தியம் பிடிப்பதற்கான அறிகுறியோ என்று பயந்தான். பைத்தியமாவதைவிட செத்துப்போகலாம். ஆமாம் தற்கொலைப் பறவை இதோ மறுபடியும் அருகில் வந்து பறக்கிறது. அதை எதிர்கொண்டு அழைப்பதுதான் உத்தமம். உடனே செயல்படுத்திவிட வேண்டும். இந்தக் கனவைப்போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல் மிக எளிதாக அது நிகழவேண்டும் என்று அவன் விரும்பினான். குளிர்ந்த காலை நேரம்தான் இதற்கு சரியானதாகத்தோன்றியது. பட்சிகளின் சப்தங்களும், கீழே சாலையில் பரபரக்கும் ஜனங்களின் இரைச்சல்களும் கேட்கத்தொடங்குகிறது. காலை சூரியனின் மஞ்சள் கிரணங்கள் அறைக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கின்றன.
உருகி வழிந்து விடுவது போன்ற பிரகாசத்திலிருக்கும் ஜன்னலின் வழியே அந்த பூனையைப்போல சாலையை நோக்கி தலைகுப்புற விழப்போகிறான். சாவகாசமான மனிதர்களுக்கு மத்தியில் அவன் தலை சிதறி சாகிறான். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது. ஒருவேளை இது பார்ப்பவர்களுக்கு வாழ்வில் தோல்வி கண்ட ஒருவனின் இறுதிமுடிவாகவே தோன்றக்கூடும். பார்த்துவிட்டு, முணுமுணுத்தபடி அவர்கள் கடந்து போய்க்கொண்டிருப்பார்கள். சிலர் பயந்து பார்ப்பதைக்கூட தவிர்த்துவிட்டு ஒதுங்கிச்செல்வார்கள். ஒரு வேடிக்கை காட்சியென சிலர் அங்கே நின்றிருப்பார்கள். இது இப்படி அபத்தத்தமாகவும், அலங்கோலமாகவும் முடிவுறாமல் வேறுவிதமாக ஆகுமென்றால், அக்கணத்தில் சப்தங்கள் அடங்கி, பூமியின் மேல் இருள் கவியலாம்... அப்போது எல்லாம் ஒரு ஆகர்ஷணத்தின் இழுவையில் ஒடுங்கி, ஒரு புள்ளியில் குவிந்து, மீண்டும் ஒளியும், சப்தமுமாக விரிந்து... பரிணாமத்தில் பின் நகர்ந்து பூமி சுழன்றுகொண்டிருக்கிறது...மனிதன் உருவாவதற்கு முந்தைய காலத்தில்...
ரயில் ஒன்று நிலையத்தைக் கடந்து செல்லும் ஒலி கேட்கிறது. இந்த வண்டிகள் ஓயாமல் வருவதும் போவதுமாக இருப்பது இரவின் அமைதியில் துல்லியமாக கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் இரவின் பெரும்பகுதி மிச்சமிருந்தது. தனிமையும், துயரமும், வலியும், அப்ப்பணிப்பும், நிறைந்த நீண்ட அவகாசம்... மனதின் எழுச்சியில் உடல் ஆதாரமில்லாமல் தள்ளாடத் தொடங்கியது. காலை வரை எப்படி அதை காப்பாற்றி வைப்பதென்ற பதட்டம் அவனைப்பற்றிக்கொள்கிறது. அது காமமாக கசிந்ததனால் உடல் அல்லாடத்தொடங்குகிறது. ஒரு பெண்ணின் உடலில் புகுந்து முயங்கவேண்டுமென்ற ஆவேசம் எழுகிறது.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு விடுதிப்பையனுக்காக காத்திருந்தான். எழுந்து சென்று கதவைத்திறந்து வைத்து வாசலில் நின்றான். மீண்டும் ஒரு முறை அழைப்புமணியை அழுத்தினான். கீழே செல்வதற்கு அவனுக்கு அச்சமாக இருந்தது. நேரம் கழித்துத்தான் பையன் வந்தான். வெளியே போயிருந்தேன் என்றான். காலத்தைக்கடத்த விரும்பாமல் நேரடியாகவே அவனிடம் கேட்டான், ‘ஒரு பொம்பளைய கூட்டிவா’. எந்த சங்கோஜமும் இல்லாமல் இப்படிக் கேட்டது பையனை வியப்படையச்செய்தது. அதிலும் இந்த ஒருவார காலத்தில் இவனைப்பற்றி ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களை எல்லாம் சிதறடித்தது இவன் கேட்ட தொனி. பையனின் கைகளை அழுந்த பற்றிக்கொண்டு ‘உடனே வேண்டும்’ என்றான்.
பையன் அச்சத்துடனேயே பார்த்தான் என்றாலும் நிதானமாவே பதில் சொன்னான், ‘உடனேன்னா எப்படி சார்? சாந்திரம் சொல்லியிருந்தா கூட ஏற்பாடு பண்ணியிருக்கலாம்...’. ‘ காசு எவ்வளவுன்னாலும் பரவாயில்ல’. ‘சார் காசுக்காக இல்ல ஏற்கனவே புக்காயிருக்கும் அதான்’. ‘முயற்சி பண்ணு’. பையன் யோசித்தான். இந்த சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான், ‘வேற ஒருத்தருக்கு புக்கான சரக்கு... நல்லா இருக்கும் காசுகொஞ்சம் கூட ஆகும்...சார், ஒரு மணி நேரத்துக்குன்னா முன்னூறு ரூபாய், இராத்திரி பூரான்னா ஐநூறு...’ இவன் நிதானமில்லாமல் சற்று உரக்கவே சொன்னான், ‘போய் கூட்டிவா’.
பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கின் மங்கிய ஒளியில் அவன் பொறுமையற்று காத்திருந்தான். இது நாள்வரை விலைமாதர்களை நாடியதில்லையவன். அதற்கான அவசியமும் நேர்ந்ததில்லை. இன்று மட்டும் ஏன் இப்படி ஒரு விபரீத எண்ணம் எழவேண்டும்? இப்படி தீர்த்துக்கொள்ள கொந்தளித்து அழைத்ததா அவன் காமம்? அவனால் எதையும் நிதானமாக புரிந்துகொள்ள முடியவில்லை. புதிதாக ஒரு பெண்ணை எதிர்கொள்ளப்போகிறோம் என்ற பதட்டமும் அவனிடம் இருந்தது. காதல் என்ற பெயரில் வரக்கூடிய பெண்களை அவனுக்குத் தெரியும். ஆனால் பணத்துக்காக வரக்கூடியவர்களின் உலகம் பெரும் புதிர்போல அவனுக்குமுன் வியாபித்து நின்றது இப்போது. ஏதோ ஒரு துரோகத்தின் சாயயை அவர்கள் சுமந்து திரிவதாக அவன் நினைப்பான். யாருக்கான துரோகம் என்பதை அவனால் யூகிக்க முடிவதில்லை. இப்போது தானும் அதில் பங்கெடுத்துக்கொள்ளப் போவதாகவே அவன் கருதினான்.
கதவைத்தள்ளிக்கொண்டு பையன் வந்தான். அவனுக்குப்பின்னால் அவள் தெரிந்தாள். இரவு விளக்கின் மங்கிய ஒளியில் அவளுடைய உருவத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. முகத்தில் இருள் கவிந்திருந்தது. ‘சரி காலையில வா’ என்றான் இவன். பையன் அங்கிருந்து அகன்றான். அவள் கதவை தாளிட்டுட்டுவிட்டு கட்டிலருகே வந்தாள். அவள் பயந்திருக்க வேண்டும், ‘லைட்ட போடவா’ என்று கேட்டாள். ‘வேண்டாம்’ என்றான். அவனுடைய முகத்தைகாணக்கூட அவள் பிரியப்பட்டிருக்கலாம். கட்டிலில் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். முதன்முதலாக ஒரு பெண்ணை தொடுவது போல பதட்டத்துடன் அவள் தோல்களைப்பற்றினான். அவள் அவன்மேல் சரிந்தாள். அவன் இறுக அணைத்துக்கொண்டான்.
அவளுடைய உடலின் இதம் அவனை சற்று நிதானப்படுத்தியது. சிறிதுநேரம் அதேநிலையில் அவளை தன் கைகளுக்குள் வைத்திருந்தான். அவளும் அதைவிரும்பியிருக்க வேண்டும். தனது கைகளை அவனுடைய முதுகில் படரவிட்டு பரிவுடன் அவளும் அவனை தழுவிக்கொண்டாள். அவள் கேட்டாள் ‘ஏன் லைட்டு வேண்டான்னிங்க, என்னப்பார்க்க பயமா இருக்கா?’ அவன் பேசப்பிரியப்படவில்லை. அவளுடைய இரண்டு தொடைகளையும் பற்றிஅழுத்தினான். முகத்தை அவளுடைய முலைத் திரட்சியின்மேல் வைத்து மேல்சென்று கழுத்தில் முத்தமிட்டான். அவள் சற்றுவிலகி பின்னைநீக்கி முந்தானையை ரவிக்கையிலிருந்து விடுவித்தாள். இடுப்பை பற்றி முகத்தை மீண்டும் அவள் முலைகளில் வைத்து அழுத்தி அசைத்தான். ‘ஜாக்கட்ட கழட்டிடுறேன்’ என்றாள் அவள். ரவிக்கையையும், பிராவையும் கழட்டிப்போட்டதும் அவளை கட்டிலில் கிடத்தி கீழேயும் அவளை நிர்வாணமாக்கினான். தனது உடைகளை களைந்து எறிந்துவிட்டு பாம்புபோல அவள்மேல் கவிழ்ந்து பரவினான்.
‘உறை போட்டுக்கிட்டு செய்யுங்க’ என்றாள் அவள். ‘என்கிட்ட சீக்கு எதுவும் இல்லை’ என்றான். ‘என்கிட்ட இருந்துச்சுன்னா’. ‘நாளைக்கு காலைகுள்ள சாகமாட்டேன் இல்ல’. அவனுடைய பதில் அவளுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. அவள் எதுவும் பேசவில்லை. அவனுடைய ஆவேசமான அழுத்தத்தில் அவள் திணறினாள். அவளுக்குள் நுழைந்து இயங்கினான். தாபத்துடன் அவளுக்குள் புதைந்து மேலெழுந்தான். முழுதாக தனக்குள் அவனை அனுமதித்துவிட்டு நிலம்போல அவள் மலர்ந்து கிடந்தாள். மலையிலிருந்து நழுவி வரும் பாறைபோல கீழ்நோக்கி அவளுக்குள் அவன் சரிந்துகொண்டிருந்தான். அவள் திகைத்தாள். முயக்கத்தின் முடிவில் அவன் சரீரம் உடைந்து திரவமென அவளுக்குள் இறங்கினான்.
அவள் அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள். அசையாமல் நீண்டநேரம் அவள் மேல் கிடந்தவன் சரிந்து கீழே படுத்தான். அவன் பக்கம் ஒருக்களித்தவள் அவனுடைய முகத்தை தனது மார்பில் வைத்து அணைத்துக் கொண்டாள். ஒரு குழந்தை போல அவளுடன் அவன் படுத்துக்கிடந்தான். அவள் கேட்டாள், ‘உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா?’. ‘ஏன்’. ‘இல்ல சும்மாதான் கேட்டேன்’. ‘ஆயிடுச்சி’. ‘அவுங்ககிட்ட இப்படித்தான் செய்விங்களா?’. ‘இப்படித்தான்னா?’. ‘சாமிவந்ததுமாதிரி, மொரட்டுத்தனமா...’. ‘ஏன் பிடிக்கலையா?’. ‘பயமா இருந்திச்சி, சுயநினைப்பு இல்லாம செய்யற மாதிரி... எங்க அப்படியே செத்துபோயிடுவீங்களோன்னு பயந்தேன்’ என்றாள் அவள்.