BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ பயம்  Button10

 

 ~~ Tamil Story ~~ பயம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ பயம்  Empty
PostSubject: ~~ Tamil Story ~~ பயம்    ~~ Tamil Story ~~ பயம்  Icon_minitimeTue Apr 05, 2011 3:46 am

~~ Tamil Story ~~ பயம்




பயம் கலந்த போர்க்கள மனோபாவம் நெஞ்சில் மிதந்து மிதந்து பல்கிப் பெருகி பின் கரைந்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொண்டு ஒருவித அரக்க மனோபாவத்துடன் உருவெடுத்து ஆளுமை செய்யும் எடை மிகுந்த சூழ்நிலைகளை சுமந்து திரியும் 22 வயதுடன் ஆரோக்கியமான அல்லது அவ்வாறு வெளித்தோன்றும் ஒரு அழகான மாலை நேரத்தில், என் இயந்திரக் கால்கள் வேதனை மறந்து சுழன்ற படி சென்று கொண்டிருந்தது. ஒரு இனிமையான அநுபவம் நோக்கி. இனிமையான அநுபவங்கள் எப்பொழுதுமே பலி கொடுக்கத் தயங்குவதில்லை. ஒன்று இனிமையான அநுபவங்கள் அல்லது வேதனை மிகுந்த தியாகங்கள் இவை இரண்டைத் தவிர்த்து வாழ்க்கை என்பது அர்த்தம் அற்றதாகத் தோன்றுகிறது. எப்பொழுதும் தியாகங்கள் இனிமையாவது, இனிமையான விஷயங்கள் வெகுமதியாக கிடைக்கும் பொழுது மட்டுமே. வெகுமதி மட்டும் நிச்சயமாக கிடைக்காது என்கிற பட்சத்தில் தியாகங்கள் விரும்பத்தகாத விஷயங்களாக மாறிவிடுகின்றன. என் மாலை நேரத்து தியாகம் எனக்கு கிஞ்சித்தும் விருப்பமற்ற, வெறுப்பு மிகுந்த சூழ்நிலைகளை கடந்து இனிமையான அநுபவத்தை நோக்கி அடிமேல் அடியாக செலுத்திக் கொண்டே இருந்தது.

அது உருவாக்கப்பட்ட பொழுது எக்கு போன்ற கடினமான இரும்பில் தான் உருவாக்கியிருக்க வேண்டும். தகரமும் இரும்புதான் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை என்றாலும், தகரம் இரும்புக்கு நிகரானது இல்லை. அந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது பெரிய விஷயமாக இருந்திருக்கலாம். இப்பொழுது அப்படி ஒன்றும் கேவலம் இல்லை என்றாலும், அதன் சத்தம் சகிக்க முடியாதது. நான் அந்த இயந்திரத்தை இயக்கிச் செல்லும் பொழுது அக்கம் பக்கம் நடந்து செல்வோர் அசிரத்தையாக திரும்பிப் பார்த்து சத்தம் வெளிப்படுத்தாமல் தங்கள் உதடுகளுக்குள் மெலிதாக சிரிக்கும் பொழுது அவமான உணர்வு என்னுள் மேலோங்குவது பொய்யல்ல. எத்தனை முறை தத்துவங்களுக்குள் போய் ஒளிந்துகொண்டு என் அவமான உணர்வை முடக்கி கொள்வது. எனது இந்த ஓட்டை சைக்கிளால் நான் பெருமைப் படுவது போல் எனக்குள் நான் உணரத் தலைப்பட்டது, தத்துவங்களை அதிகமாக படிக்க ஆரம்பித்ததிலிருந்துதான். வறுமையை இயல்பாகவும், பெருமையாகவும் ஏற்றுக் கொள்ள இருவரால் மட்டும் தான் முடியும். ஒருவன் தத்துவவாதி, மற்றொருவன் ஒரு இந்தியன். நான் ஒரு மதில் மேல் பூனை, நான் என் அவமான உணர்வையும் உணர்கிறேனன். என் தத்துவ அறிவு (எதற்கும் உதவாத) உணர்த்திய 5 பைசா பிரயோஜனம் இல்லாத பெருமையையும் உணர்கிறேன். என் மாலை நேரத்து இனிமையான பயணம் அதீத உள்மன பயத்துடனும், அரக்க குணம் கொண்ட வெற்றிடம் நிரம்பிய நெஞ்சத்துடனும், வெளிறிய பார்வையுடனும் நிதானமாக நடைபெற்று கொண்டிருந்தது.

உடல் முழுவதும் குலுங்க குலுங்க சிரிக்கும் குழந்தையுடன் ஒப்பிடும் பொழுது, ஒரு குழந்தைக்கு முன் அதன் உணர்வுகளின் நிஜத் தன்மையில் நான் எப்படி நிஜமற்று ஒரு குழந்தையாக இருக்கிறேன் என்பது எவ்வளவு நிஜமாக இருக்கிறது. குழந்தைகள் வளர வளர குழந்தைகளாகிப் போகிறார்கள், தங்கள் குழந்தைத் தன்மையை இழப்பதன் மூலமாக. வலி உணர்வு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்து உணர்த்தும் திறனை நான் எப்பொழுது இழந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. என் நெஞ்சத்தை ஆக்கிரமித்து பய உணர்வை உணர்த்துகிறது என்று குத்துமதிப்பாக நான் கூறுவது, அந்த பகுதியில் தான் வலி உணர்வு முழுமையாக ஆக்கிரமித்துள்ளதா என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. அது நிச்சயம் வலி உணர்வுதானா? இல்லை வேறு விதமான ஏதேனும் உணர்வா? ஆக்கிரமித்து உள்ளிழுக்கிறது என்னை. ஆக்கிரமித்து உறிஞ்சுகிறது என்னை. மாலை நேரம் மங்க மங்க இருட்டுக்குள் செல்வது இக உலகம் மட்டுமல்ல எனது அக உலகமும் கூடத்தான்.

கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஒரு கேள்விக் குறிக்குள் தான் எத்தனை விதமான மனோவியாதிகள் உருக்கொள்கிறது. கிடைத்துவி;ட்டாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, மதில் மேல் நிற்கும் பூனைக்கு பக்கத்தில் எனக்கும் ஒரு தங்க சிம்மாசனம் எப்பொழுதும் தயாராகவே காத்திருக்கிறது. நான் அங்கிருந்து விடுபடுவதில் ஏதோ ஒரு சக்திக்கு விருப்பமில்லை. நான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். இப்பொழுது தோல்வியைக் கூட விரும்புகிறேன். ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து தோற்று வீழ்வது. அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. நிச்சயமாக தோற்று வீழ்வது. அதன் மூலம் நான் வெற்றி பெற விரும்புகிறேன். சத்தியமாக, ஆனால் தங்க சிம்மாசனம் எப்பொழுதும் தங்க சிம்மாசனம் தான். பளபளப்புடன் கண்ணுக்கு தெரியா தங்கச் சங்கிலிகளுடன் என்னை இருத்தி வைத்தபடி, எழுந்திரிக்க விடாமல். எனக்கு மூச்சு முட்டுகிறது. எனது சுவாசக் குழாய்க்கு ஒத்துக் கொள்ளவில்லை சுவாசக் காற்று. அதற்கு விஷ வாயு தேவையாய் இருக்கிறது. சந்தோசத்துடன் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறது. உண்மையில் தற்கொலைகள் எல்லாம் மனோரீதியாக ஏதோ ஒன்றால் நிகழ்த்தப்படுகின்றன. உந்தித் தள்ளும் அந்த சக்தியை மட்டும் கண்டுபிடித்துவிட்டால், இன்பம் நிரந்தரமாகிவிடும் அல்லவா? பின் அது மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாகிவிடும்.

இயற்கையின் இன்னொரு பக்கத்தின் உதவி நான் கவனிக்காமல் இருந்தபொழுதிலும் எனக்கு கிடைத்தபடியே இருந்திருக்கிறது. இனிமையை நோக்கிய பயண எதிர்பார்ப்பு, ஆசை, மதில் மேல் பூனையாகிய மாபெரும் தோல்வியை புறந்தள்ள சக்தி அளித்தபடி எனக்கு உதவி கொண்டிருக்கிறது. எனது கண்கள் பயம் என்ற உணர்வை சிந்திக் கொண்டே இருக்கும். அதை உற்பத்தி செய்வது நான் இல்லை. அவ்வாறு உற்பத்தி செய்கிற அளவிற்கு எனக்கு சக்தி இருந்தால் அதை நிறுத்தவும் எனக்கு தெரிந்திருக்குமே. அந்த பய உணர்வு எங்கிருந்து வருகிறது. யாரால் உருவாக்கப்படுகிறது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. கண்கள் தான் எனது என்று பெயர். அதை இயக்குபவர்கள் யார் யாரோ? இனிமையை நோக்கிய எதிர் பார்ப்பும், காரணமே தெரியாத பயமும் ஒரே கண்களில் வெளிப்பட்டு ஒரு மாதிரியாக, அஷ்டகோணலாக, இது என்னவிதமாக அசிங்கமான முகம், நான் என்னையே வெறுக்கிறேன். எனது ஆசைக்கும் நான் பொறுப்பல்ல, எனது துக்கத்துக்கும் நான் பொறுப்பல்ல, காட்டாற்றில் சிக்கிய சருகு அதன் பயணத்துக்கு பொறுப்பாக முடியுமா?

இனிமை அது ஒன்று தான் நான் பற்றிச் சுழலும் ஆதாரமாக இருக்கிறது. குழந்தைக்கு தாய் முகம் இனிமை, இளைஞனுக்குக் காதலியின் முகம், தந்தைக்குத் தன் குழந்தைகள், சிலருக்குப் பணம், சிலருக்கு மது, பெண், ......... போய்க் கொண்டே இருக்கும், மிகநீண்ட பயணங்கள் சலிப்பற்று போகும் மனோ நிலையை அனுபவிப்பது ஒரு அழகான விஷயம். கிட்டத்தட்ட 16 கிலோ மீட்டர்கள். நான் எனது ஓட்டை சைக்கிளுடனும், எனது அழுகிப் போன நாற்றமெடுத்த சிந்தனைகளுடனும், ஆனால் சந்தோஷமாக, சீக்கிரம் எதிர்பார்ப்பு முடிந்துவிடக் கூடாது என்ற எண்ணமும், சீக்கிரம் எதிர்பார்த்தது நடக்க வேண்டும் என்ற எண்ணமும் மலைப் பாம்பை போல் சுற்றி முறுக்கி வளைத்துக் கொண்டு என்னை அமுக்கியது. என்னை அமுக்குவது, என்னை சுருக்கி உள்ளிழுப்பது எது என்று வெகு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் மூச்சுத்திணறல் வருகிறது. ஒரு வேளை நான் எதிர்பார்த்தது நடக்க வில்லை எனில் என்ன ஒரு மனநிலையில் திரும்பி வருவேன் என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். என் கண்ணீர் அந்த இருட்டில் யாருக்கும் தெரிந்துவிடாது என்கிற தைரியத்தில் நான் சுந்திரமாக அழுது கொண்டு வருவேன். நெஞ்சத்துக்குள் நீராவி பெருகி கொள்கலன் வெடித்து விடும் அளவுக்கு, பலமுறை இவ்வாறு திரும்பி தோற்று வரும் பொழுது அழுத்தம் தாங்காமல் ஒரு ஓரமாக சைக்கிளை நிறுத்தி விட்டு மறைவான இருட்டுக்குள் நெஞ்சை பிடித்துக் கொண்டு இன்னும் சுதந்திரமாக சத்தமிட்டு அழுததுண்டு. ஆள் அறவமற்ற அது போன்ற இடங்களில் ஏதேனும் நாய்கள் இருந்தால் என்னை வித்தியாசமாக நினைத்துக் கொண்டு அச்சம் கொள்ளும்.

இப்படி ஒரு அதீத தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக அறிவித்து அழும் அளவிற்கு எனக்கு துணிவில்லை. இந்நேரத்தில் மறைமுகமாக கூறுவதையின்றி நான் வெளிப்படுத்த தயங்குவதின் காரணம், எனது துன்பம், எனது உள்குழப்பம், சிறுகுழந்தை போன்ற கதறிய அழுகை, காரணம் கேட்கப்படும் பொழுது சிரிப்பிற்குள்ளாகுமோ? என்கிற பயம். ஆனால் பகிர்ந்து கொள்ள யாருமல்ல என்பது அதைவிட அதீத பயம், எனது மனோபயம் அதிகமாகும் போது, நான் செய்வது இது தான். பேருந்து நிலையத்தின் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடமாக பார்த்து ஏதேனும் ஒரு டீ கடையை தேர்ந்தெடுத்து ஒன்றுக்கு 4 டீயை மெதுவாக குடித்துக் கொண்டிருப்பது. பார்ப்பவர்களுக்கு நான் டீ குடிப்பவன். உண்மையில் நான் பயந்து போன மன நிலையில் மக்கள் நடுவில் பாதுகாப்புணர்வுடன் ஜாக்கிரதையாக இருந்து கொண்டிருக்கிறேன். மக்கள் கூட்டத்திற்கு நடுவில் என் பாதுகாப்புணர்வு அர்த்தப்படுகிறது. தனிமையில் சாவை மீறிய காரணமற்ற பயம். நெஞ்சம் வெடிக்க மாட்டேன் என்கிறது. வெடித்து விட்டால் விஷயம் முடிந்து விடுமே. தந்திரமான தோல்வி.

எனக்கு இரண்டு பேர் உதவக்கூடும். ஒன்று நன்கு தேர்ந்த பொறுமை மிகுந்த ஒரு மனோநிலை மருத்துவர். மற்றொருவர் காது கேட்;காத ஒரு ஆர்ப்பாட்டமற்ற அமைதியான பைத்தியக்காரன். நான் என் உள்ளே உள்ளதை எல்லாம் சங்கோஜமற்று உளறிக் கொட்டலாம். அவர்கள் ஆபத்தற்றவர்கள். நான் கண்டுபிடித்த மற்றொரு வழி இது, எனக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாம் பார்த்துக் கொள்ள போவதும் இல்லை. நாளை கண்டுகொள்ளப்படும் சூழ்நிலை ஏற்படும் பொழுது நான் பேருந்துநிலைய கூட்ட நடுவில்; ஓடி ஒளிய வசதியான நூறு கோடி மக்கள் தொகை கொண்ட நாடு வேறு எனக்கு கைகொடுக்கும். வசதியான விஷயம்; உங்களுக்கு தொடர வேண்டிய கட்டாயம் கூட இல்லை.

நெருங்கிவிட்டது. 15 கிலோமீட்டர்களை கடந்துவிட்டேன். இரவு மணி 7.30. மெதுவாக இரவின் பனி வருடிக் கொண்டிருந்தது. நகரத்தின் வெளிப்பகுதி என்பதால் மரங்கள் சுத்தமான காற்றை ஏற்படுத்தி வைத்திருந்தது. உடல் ஆரோக்கியமாக உணர்ந்தது. பனியும் ஊதல் காற்றும் உடலை குளுமை படுத்திவிட்டது. மனம் எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் இன்னும் இன்னும் வெப்பமடைந்து கொண்டிருந்தது. கால்களின் வேகமான இயக்கத்தால் உடல் லேசாக வியர்த்தது. அதோ வந்து விட்டது. தூரத்தில் வெளிச்சப்புள்ளிகள். புள்ளி புள்ளியாக சாலையோர மின்சார விளக்குகள். அந்த குறுகளான சாலையின் வழியாக ஒவ்வொரு வெளிச்சத்தையும் கடக்கும் போது பயம் வந்து வந்து சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நன்றாக இருக்கும். திருடனைப் போல் ஆகிவிட்டேனே என்று நினைக்கிற பொழுது இன்னும் சற்று நேரம் கழித்து வரப் போகிற கண்ணீர் இப்பொழுதே வந்து விடும் போல. நான் தேடிய அந்த வீடு என்னிடமிருந்து நூறு மீட்டர் தூரத்தில். எனக்கு வசதியாக அந்த மரத்தடியில் சைக்கிளை நிறுத்திக் கொண்டு அமர்ந்து கொண்டேன். மனம் உச்ச நிலையிலிருந்தது. தெறிநிலை அதிகமாக இருந்தது. தூரத்தில் சென்று சொண்டிருந்த லாரி பிரேக் போட்ட சத்தம் கூட என் காதில் விழுந்தது. நகரத்தின் பக்கத்து கிராமத்தில் அம்மனின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எங்கோ ஒரு நாய் குளைத்துக் கொண்டிருந்தது. நல்லவேளை என் அருகில் எந்த நாயும் இல்லை. இயற்கைக்கு என் மீது சற்றேனும் கருணை இருக்கிறது. காலநிலை மென்மையாக இருந்தது. நெஞ்சத்தின் தெறிநிலையில் இயற்கையின் மென்மை அதீதமாக உணரப்பட்டது. எனது ஆரோக்கியம் எனக்கு புலப்பட்டது.

தூரத்தில் அந்த வீட்டின் குறிப்பிட்ட சில அறைகளில் மட்டும் வெளிச்சம் இருந்தது. உள்ளிருந்து ஒரு நாய்க்குட்டி குடுகுடு வென வெளியே ஓடி வந்தது. அதை எனக்கு நன்றாகத் தெரியும். தினசரி நான் முதலில் பார்ப்பது அதைத்தான். எதிர் பார்த்தது போலவே முதலில் அது வந்தது. எதிர் பார்த்த இரண்டாவது இன்னும் வரவில்லை பனிவில்லையின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டால் பற்றிக் கொள்ளுமா? எனக்கு பற்றிக் கொள்ளும் என்று தான் தோன்றியது. மகிழ்ச்சியும், வேதனையும் ஒரே நேரத்தில், ஒரு மாதிரியாக ஆனால் கதகதப்புடன் உணர்ச்சிகள் மேலோங்கி என் முகத்தை பார்க்க வேண்டுமே அந்த நேரத்திலும் அதை நினைத்து எனக்குள் குறுஞ்சிரிப்பு. யாரும் பார்க்க வில்லை, நானும் கூட என்னை பார்க்க முடியாது. இருள் நிறைந்து தனிமையில் நான் மறைக்கப்பட்டவனாக, பாதுகாப்பாக நானும் எனது எதிர்பபார்ப்புணர்வும் கைகோர்த்துக் கொண்டு காத்திருந்தோம்.

அந்த வயதான பெண்மணி தளர் நடையுடன் மெதுவாக வாய் நிறைய புன்னகையுடன் வெளியே வந்தார். அவரை நான் எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. எனக்கு என்ன முறை என்றும் விலங்கவில்லை. அவர் அந்த நாயை கெஞ்சி கெஞ்சி அழைத்தது, பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது. நான் என்னையறியாமலேயே சிரித்தேன். அப்படியே நான் சிரித்ததையும் சற்று கவனித்தேன். என்னை நான் கவனிப்பதை கூட நான் விரும்பவில்லை அல்லது என் உள்ளுணர்வு விரும்பவில்லை. என் சிரிப்பு சட்டென்று அடங்கிவிட்டது. என் உள்ளுணர்வு எவ்வளவு வெட்கத்துடன் காணப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும் பொழுது முதலிரவு மணப்பெண் தோற்றாள். சற்று நிதானித்து நிலைமை மறக்கடித்து விட்ட பின் ஆர்வமும், கண்ணிமையும் ஒரே நேரத்தில் மேலோங்கியது. இளம் ரோஜாவின் நிறத்தில் போர்த்தப்பட்ட மேலாடையுடன் அந்த பெண் வெளியே ஓடி வந்தார் சிரித்துக் கொண்டு. என் உணர்வு ஒரு நிமிடம் உச்சத்துக்கு சென்று பின் படிப்படியாக அடங்கியது. அவர் மீது எனக்கு இயல்பாகவே மரியாதை பொங்கியது. அவருடன் ஒரு முறை கூட பேசியது கிடையாது. பின் என் அரை மணித்துளிகள் உணர்ச்சிக் கொந்தளிப்பாக கடந்தது. மெழுகு போன்ற உருகுதலை ஓஷோவின் கிருஷ்ணா என்னும் புத்தகத்தில் ராதை கூறுவதாக படித்திருக்கிறேன். உண்மையில் படித்தல் என்பது எவ்வளவு மேலோட்டமானது. உணர்வுகள் அடி ஆழத்தில் அல்லவா நீராவி கெட்டிலைப் போல தடதடத்துக் கொண்டிருக்கிறது. என்னுள் பொங்கிய உணர்வுகள் மெழுகு போன்ற உருகிய திரவ நிலையில் இருந்தது. உச்ச கட்ட உணர்ச்சிக்காக காத்திருந்தேன். நான் ஆவியாகிப் போக காத்திருந்தேன். அதன் பின் எதுவும் தேவையில்லை. அவளும் கூட, ஆம் அவளும் கூட.............................. இதைக் கூறும் போதே மனம் பதறுகிறது. என் உள்ளுக்குள் நான் நடுங்குவது எனக்கே தெரிகிறது.

நேற்றைப் போலவே இன்றும் நிகழ்ந்தது. தோல்வி எதிர்பார்ப்பின் தோல்வி, வேதனைகள் பாரமாக நெஞ்சை அழுத்த அந்த இரவு நேரத்தில் யாரும் பார்ப்பார்கள் என்ற அச்சமின்றி நான் கண்ணீரை சொறிந்த படி வந்து கொண்டிருந்தேன். அவள் தான் எவ்வளவு ஆச்சரியங்களை தன்னுள் வைத்திருக்கிறாள். மின்னும் தங்கத் துகள்களை உடல் முழுவதும் தூவிய படி, ஜொலித்துக் கொண்டிருக்கும் தேவதையை போல. அவளை தூர நின்று பார்க்க மட்டுமே நான் தகுதியானவன், அருகிலிருந்து அவள் கண்களுக்கு தெரிவது போல் பார்த்தால் கூட அவள் மாசடைந்துவிடுவாள். நான் இருட்டிற்குள் என்னை மறைத்துக் கொண்டு பார்ப்பதன் நோக்கம். அந்த தேவதைக்கு தெரியாது. என் பாலுணர்வு, அது ஒரு நகைச் சுவை. என்னிடம் அது முயன்று தோற்று போனது. அது எனது இடது கால் முனையில் ஒட்டியிருக்கும் தூசியைப் போல அற்பமாக இருக்கிறது. நான் அதற்கு நன்றி சொல்கிறேன். அது என்னிடம் அவ்வாறு இருப்பதற்காக. நான் அதை கடந்து தான் நிற்கிறேன் என உறுதியாக சொல்ல முடியும்.

நான் இது மரத்தை தேடிச் செல்லும் நேரம். இந்த இருட்டிலும் யாரேனும் என்னை பார்த்து விடுவார்களோ என்ற பயம், என் அழுகையை தடுத்து வைக்கும் சக்தி அந்த பயத்திற்கு மட்டுமே உண்டு. அணையை நிரப்பிக் கொண்டு வழியும் மழை நீரை போல உணர்வுகள் பயத்தை மூழ்கடித்துக் கொண்டு அவ்வப்பொழுது தடுமாறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. எனது வலிமையிழந்த நெஞ்சத்திற்கு அதனைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு வலிமை உண்டா என்று கேட்டால் நிச்சயமாக சொல்லமுடியாது. அது ஒரு காகித தடுப்பு போல எப்பொழுது வேண்டுமென்றாலும் உடைந்து விடக் கூடிய அளவிற்கு, ஆனால் அது ஒன்றுதான் எனக்கு ஆதாரம். என்றோ தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டிய என்னை தடுத்து நிறுத்தி வைத்திருக்கக் கூடிய ஒரு கூறு வலிமையற்ற அந்த தடுப்புக்கு மட்டுமே உண்டு என்பதை நன்றியோடு நினைக்க வேண்டியதிருக்கிறது.

வீசிக் கொண்டிருக்கும் ஈரக் குளிர் காற்றுக்கு என் நெஞ்ச நெருப்பை சீண்டும் அளவுக்கு தைரியம் இல்லை. கொதித்துக் கொண்டிருக்கும் உள்ளத்து உணர்வுகள் உடலின் நீரை எல்லாம் கண்ணீராக வெளியேற்றிக் கொண்டிருந்தது. நான் எரிந்து கொண்டிருந்தேன். என்னை இப்பொழுது நெருங்க முடியாத உணர்வுகள் என கணக்கெடுத்துப் பார்த்தால், அருகில் வரக் கூட பயம் கொள்வது அந்த பய உணர்வு மட்டுமே. இப்பொழுது என் முன் ஒருவன் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும் என் உள்ளுணர்வு அசைந்து கொடுக்காது. அவனை அப்படியே வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும். நான் தோற்றுக் கொண்டிருப்பவன். நான் தோற்றுக் கொண்டேயிருப்பவன். நான் தோல்விகளுக்கு பரிச்சயமானவன். நான் தோல்விகளின் உலகில் ராஜா. ஆம் நான் தோற்றுவிட்டேன் முழுமையாக. என்ன ஒரு அதிசயம். கடவுளுக்கு என் மேல் கருணை பிறந்துவிட்டது. என்னுள் ஏதோ ஒரு ஏற்றுக்கொள்ளல் நிகழ்ந்து விட்டது. எனது தோல்வியை யார் ஏற்றுக்கொண்டார்கள் என்பது கூட அறியாதவனாய் இருக்கிறேன். எனதுபெயர் கொடுக்க முடியாத உணர்வுகள் என்னைவிட, என் தோல்வியை விட, அவளை விட, புனிதமானது, அழகானது, உயர்வானது. அது என்னை சீண்டிச் செல்ல கொடுத்து வைத்திருக்க வேண்டுமோ என்னவோ?. அது என்னை மிதக்கச்செய்கிறது. உண்மையில் துக்கத்தில் மிதந்து திரிதல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமோ என்னவோ?. நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நிச்சயமாகத் தெரிகிறது. என்னை மிதக்கச்செய்யும் அதற்கு நான் வந்தனம் செய்ய வேண்டுமா? இல்லை வசை பாடவேண்டுமா? என்னை குழப்பத்திலேயே வைத்திருப்பதன் நோக்கம் தான் என்ன? நான் எந்த வகையில் இந்த விஷயத்தில் முக்கியத்துவம் பெறுகிறேன். நான் எனது நானை இழந்துவிட வேண்டும் என்பது இந்த விஷயத்தின் விதிகளுள் ஒன்றோ? கடவுளே நான் மூளை குழம்பிவிட்டேன் என்று யாரும் சொல்லிவிடாமல் இருக்க வேண்டும். எனது இப்பொழுதைய அளவுகோல் அடுத்தவர்கள் தான். அடுத்தவர்களின் என்னைப் பற்றிய மதிப்பீட்டை மட்டுமே இப்பொழுது என்னால் உண்மை என ஏற்றுக் கொள்ள முடியும். என்னைப் பற்றி என்னிடம் கேட்டால் நான் ஒத்துக் கொள்வேன் என் மூளை குழம்பிவிட்டது என்று. போதும் எனக்கு இந்த துக்க உணர்வு மட்டும்.

சீக்கிரம் அழுது முடித்துவிட்டால் எனது குழம்பிப் போன மூளையுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் சென்று அடைந்து விடலாம். எனது அழுகையை யார் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அது தன்னிச்சை பெற்றுவிட்டது போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் என் கட்டுப் பாட்டுக்குள் இல்லை. மேலும் மரத்தினடியில் இருட்டிற்குள் சுதந்திரமாக இருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை வேறு என்னை நகரச் செய்ய விடாமல் பிடித்து இழுத்து வைத்திருக்கிறது. நான் காத்திருப்பதை தவிர கெஞ்சுதல், கோபப்படுதல் போன்ற எந்த மூடத்தனங்களுக்கும் இடம் கொடுத்துவிடாமல் இருப்பது, நான் வீட்டிற்கு செல்லும் நேரத்தை சற்று குறைத்து விடும் என்பதில் எனக்கு ஏற்கனவே அனுபவமுண்டு. நான் அமைதியாக எனது அழுகை அடங்கும் நேரத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். ஆம் நான் அழாதியான மற்றும் அதீதமான முறையில் அழுது கொண்டிருந்தேன். என் கண்களுக்குள் தான் எவ்வளவு கண்ணீர். என்னுடைய நான் தனித்துவிட்ட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் கண்ணுக்குத் தெரியாத நண்பனே நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் வழிமுறை எனக்குத் தெரியாது. ஆனால் அது இப்பொழுது என்னிடம் இருக்கிறது. நான் இப்பொழுது அனுபவப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் உணர்வுகளுக்குள் விழுந்து விடாமல் நான் தனித்து விட்டேன். ஆம் அது நிஜம் தான். என் உணர்வுகள் அழுகிறது. துடிக்கிறது. நெஞ்சம் வெதும்புகிறது. கனல் போல் எரிந்து கொண்டிருக்கிறது. நான் அதை வெளியிலிருந்து கவனித்துக் கொண்டு வேறு இருக்கிறேன். நான் என் துக்கத்துக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

உணர்வுகளின் உச்சம் படிக்கட்டுகளாய் இருக்கிறது. ஏதோ ஒரு, குறைந்த பட்சம் எனக்குத் தெரியாத என்னால் மட்டுமே கண்டு கொள்ளப்பட்ட எதற்கும் அசைந்து கொடுக்காத அந்த அமைதியான உச்சத்தை பொங்கி பெருகி வரும் அன்புடனும், கருணையுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பனே. உன்னை ஒருமையில் கூப்பிடுகிறேன். ஏன் தெரியுமா? நீ என்னுடன் இதைப் பகிர்ந்து கொள்ளத் தகுதியானவன். ஆம் அதற்கு நான் இட்ட பெயர் இது. அருமையான பெயர். அதை நீயும் அடையாளம் கண்டு கொள்ளும் பட்சத்தில் அதற்கு வேறு ஏதேனும் பெயர் வைத்துவிடாதே. அது மாசடைந்துவிடக் கூடாது. அதை நீ அடையாளம் கண்டு கொள்ளப்படும் போது உனக்கும் அப்படித்தான் தோன்றும். அது மாசடைந்து விடக் கூடாது. என்னை பாதுகாக்கும் சக்தி வாய்ந்த அமர்வு அல்லது அதை எவ்வாறு அழைப்பது. இதைப் பற்றி அறிந்து கொள் நண்பா.

இதை, நான் யாரும் படித்து விடக் கூடாது என நினைக்கும் அளவிற்கு வெட்க மனப்பான்மையுடன் பதிவு செய்தது. சற்றேனும் பரிதாப உணர்வு இருக்கும் பட்சத்தில் (நான் அடுத்தவர் பரிதாபத்தை விரும்பவில்லை என்பது முக்கியமான விஷயம்) மக்கள் கூட்டத்தின் நடுவே மறைந்து வாழும் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் நீங்கள் பார்த்தும் பார்க்காமல் சென்று விடுங்கள். உங்களின் ஒரு கவனிப்பு கூட என் கண்ணீரை வெளிக் கொண்டு வந்துவிடும். நாம் பார்க்காதவர்களாகவே தொடர்பில் இருப்போம். எனக்கு ஒரு பார்வையற்ற நட்பு இருப்பதில் நான் சற்று மகிழ்ச்சி அடைவேன். எனது மனோபாரம் சற்று குறையும். சொல்லிக் கொள்ளவே வெட்கமாய் இருக்கும் விஷயத்தை சொல்லி விட்டதில், கேட்பவர்கள் பற்றி எந்த கவலையும் அற்று பகிர்ந்து கொண்டேன். இப்பொழுது என் மனம் ஹீலியம் பலூனைப் போன்று உள்ளது. நன்றி நான் இரவு உணவு உண்ணப் போகிறேன்.












Back to top Go down
 
~~ Tamil Story ~~ பயம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Tamil story
» ~~ Tamil Story ~~ படுக்கையறைக்கொலை - 3
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: