BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ Tamil Story ~~ காற்றின் தீராத பக்கங்கள் Button10

 

 ~~ Tamil Story ~~ காற்றின் தீராத பக்கங்கள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ Tamil Story ~~ காற்றின் தீராத பக்கங்கள் Empty
PostSubject: ~~ Tamil Story ~~ காற்றின் தீராத பக்கங்கள்   ~~ Tamil Story ~~ காற்றின் தீராத பக்கங்கள் Icon_minitimeTue Apr 05, 2011 9:40 am

~~ Tamil Story ~~ காற்றின் தீராத பக்கங்கள்



இதைப்பற்றி ஏன் இவ்வளவு சிந்தித்து மருக வேண்டும்? வேலையில்லாதவனின் வேலை, யாரிடமும் சொல்லவும் முடியாது. சிரிப்பார்கள், கேலி செய்வார்கள், அல்லது கேவலமாய் ஒதுங்கிப் போவார்கள், ஏதேனும் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டவும் கூடும், அது அவரவர் தரத்தின் வெளிப்பாடாய் அமையும். அதற்கு, தான் காரணமாக அமையும் நிலை எழும். வலிய ஒரு வெற்றுச் சூழலை ஏற்படுத்திய நிலையில் இதில் ஆகப்போவது என்ன? அவனவனுக்கு அவனவன் கஷ்டங்கள். அவரவர் உணர்தலின் வெளிப்பாடாகவும், செயலுாக்கமாகவும் அமைகின்றன. இது வேண்டும், வேண்டாம் என்று ஒதுக்க வேண்டியது அவனவன் பாடு. யாரை நொந்து கொள்வது?

இப்படியெல்லாம் இல்லாமல், அதை ஒரு மருத்துவ நோக்கில் எடுத்துக்கொண்டாள் அவன் மனைவி லட்சுமி. அதுவே பெருத்த ஆறுதல் இவனுக்கு. மற்றவர்போல், ஊரார் போல் அவளும் இருக்கக் கூடுமோ என்றுதான் அவனும் முதலில் நினைத்தான். இந்த விஷயத்தை நினைக்கும் அல்லது செய்யும் பொழுதினில், தற்செயலாய்ப் பேச வேண்டி வரும் போதினில் எதிர்வினைகள் அத்தனையும் பல இடங்களில் இப்படியாகவே இருந்திருக்கின்றன. அது ஒரு இயற்கையான விஷயம் என்று பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். தயங்குகிறார்களா அல்லது இதைப்பற்றி ஏன் பேச வேண்டும் என்று நினைக்கிறார்களா? தெரியவில்லை, பேசத் துணியாதவர்கள் செய்யவில்லை என்பது என்ன நிச்சயம்? அவர்களுக்கும் அந்தத் தொந்தரவு இல்லை என்பது என்ன உறுதி? இயற்கை சார்ந்த விஷயம் எல்லாருக்கும் பொருந்தும்தானே?

லேசாய்ச் சிரித்தவாறே பலரும் ஒதுங்கிப் போனார்கள். நாகரீகமான விஷயமல்ல, பொருளாய் எடுத்துப் பேசத்தக்கதல்ல. உலகத்தில் பேச வேறு விஷயமே இல்லையா? எதுவானால் என்ன? அது ஒரு பிரச்னைதான் இவனைப் பொறுத்தவரை. இன்றுவரை அப்படித்தான், அதோடுதான் காலம் கழிகிறது, எல்லோரும் அப்படித்தான் கழிக்கிறார்கள் என்றாலும் இவனுக்கு மட்டும் அது ஒரு கஷ்டமான, தீண்டத்தகாத, தன்னைக் கேவலப்படுத்தக் கூடிய அல்லது தன்னைக் காட்டிக் கொடுக்கக் கூடிய, தன் சிந்தனையை உழட்டக் கூடிய விஷயமாகத்தான் இன்றுவரையில் இருந்து வந்திருக்கிறது,

"இதுக்குப் போயி ஏன் இவ்வளவு அலட்டிக்கிறீங்க?"- இது ஒரு சாதாரண விஷயம். உண்மையிலேயே அவள் இப்படிச் சொல்கிறாளா? அல்லது இனி என்ன செய்வது என்ற தலைவிதி நோக்கில் பேசுகிறாளா? இப்படிச் சொல்லும்போதெல்லாம் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்க அதில் கேலி தொனிக்கிறதா? அல்லது பரிதாபமா? புரிந்து கொள்ள முனைந்தான், "நான் ஒரு புத்தகத்துல படிச்சேங்க... மாவுப் பொருள், எண்ணெய் பண்டம், இதெல்லாம் அதிகமா சாப்பிடக் கூடாதுன்னு, அப்டியெல்லாம் இருந்தா இதெல்லாம் வரத்தான் செய்யும்.. .வர்றது மட்டுமில்லே... மலச் சிக்கலும் ஏற்படுமுன்னு போட்டிருக்கான்... நம்ப இரைப்பை இருக்கே அது வெறும் பழங்களை ஜீரணிக்கக் கூடிய அளவு திறனுடையதுதானாம்... அதுல கொண்டு இஷ்டத்துக்குக் கண்டதையும் அடைச்சா எல்லாம் சேர்ந்து கிரைண்டர்ல கெட்டிப்பட்ட மாவு கணக்கா ஆகாதா? ஜீரணிக்காம சக்கை வேறே, சத்து வேறேன்னு பிரிக்கப்படாமக் கெடக்குறபோது அதுலேர்ந்து வாயு உற்பத்தி ஆகத்தானே செய்யும்? அது வெளியேறும்போது பேட் ஸ்மெல் அடிக்கத்தானே செய்யும்? மோஷன் க்ளியரா இல்லைன்னா வயிறு சுத்தமா இல்லைன்னு அர்த்தம்... அப்போ எல்லா வியாதியும் வரத்தானே செய்யும்! நமக்கே தெரியுமே... இதை எந்த டாக்டர் சொல்லணும்? நம்ப உடம்பை நாமதான் கவனிச்சிக்கணும்... நீங்க தினமும் பழங்கள் சாப்பிடுங்க... அதான் நல்லது..."

முடிக்கும்போது லட்சுமி இப்படிச் சொன்னது இவனைப் பெரிதும் சங்கடப்படுத்தியது, இவள் சமைத்துப் போடுவதைத்தானே தினமும் கொட்டிக்கொள்கிறேன்... அப்படியானால் அதில்தானே கோளாறு? அதையேன் உணர மாட்டேன் என்கிறாள்? உணரவில்லையா அல்லது மறைக்கிறாளா? "எவ்வளவு பெருங்காயம் போடுறேன்... அதுவே கேஸ் அத்தனையையும் பிரிச்சு விட்டிருமே? "

"அதனாலதானடி கோளாறுன்னு சொல்ல வர்றேன்... அதப் புரிஞ்சிக்கலேன்னா?"

"அதெப்படிங்க கோளாறாகும்? வாயு பிரிஞ்சா நல்லதுதானே? வயிறு க்ளீனாகுமில்ல...?"

"லட்சுமி நீ நான் சொல்றதையே புரிஞ்சிக்க மாட்டேங்கிற... அதெல்லாம் சாதாரண உடம்புக்கு... எனக்கு அப்படியில்லே... அந்த மலையாள வைத்தியர் சொன்னாரே... நீ கவனிக்கலையா...? எனக்கு உஷ்ணவாயு ஓடுதுடி உடம்புலே... அதைக் கலைச்சு விரட்டணுமானா பூண்டு மாதிரி ஹெவி அட்டாக்தான் லாயக்கு... அப்பத்தான் உஷ்ண வாயு பீறிட்டுக் கிளம்பும்... பெரும்பாலான வீடுகள்ல மாசத்துக்கு ரெண்டு கிலோ பூண்டு உபயோகப்படுத்தறாங்க... நாம கால்கிலோ கூடப் பயன்படுத்தறது இல்லை... எவ்வளவோ லேகியமெல்லாம் போட்டுப் பார்த்துட்டுத்தானே இந்த முடிவுக்கு வந்தேன்... நீ தான் ஒத்துழைக்க மாட்டேங்கிற...! "

"அய்யோ ராமா... பெறவு எப்பவும் கக்கூசிலதான் கிடப்பீங்க... பார்த்துக்கிங்க.."

"கிடந்தா கிடந்துட்டுப் போறேன்... சைடு போர்ஷன் சும்மாத்தானே கிடக்கு... நிறைய வீடுகள்ல இதுக்குக் கூச்சப்பட்டுக்கிட்டுத்தான் டாய்லெட்டையே தனியா வச்சிக்கிடுறாங்க... இது ஒரு இயற்கையான விஷயம்ங்கிறதை யாரும் ஒத்துக்கத் தயாரில்லைங்கிறதை இது நிரூபிக்கிறதா இல்லையா? கூச்சப்படவேண்டிய விஷயம்ங்கிறது சரிதான்..."

"போதும் ஆராய்ச்சி..." - சலித்துக்கொண்டாள் அவள். வீட்டுக்குள்ளேயே ரெண்டு மூணு கக்கூஸ் வைத்துப் பலரும் கட்டிக்கொள்கிறார்களே? எவ்வளவு புத்திசாலிகள்? போதும்டா சாமி...உலகத்துல சிந்திக்கிறதுக்கு வேறே விஷயமா இல்லை...? திடீரென்று மனசுக்குள் சுணக்கம் வந்தது. என்ன தப்பு? உடல் நலத்தைப் பற்றி யோசிக்கையில் இதையும் யோசித்துத்தானே ஆக வேண்டும்? டாக்டர் சொன்னால் மட்டும் பொத்திக்கொண்டு கேட்டுக் கொள்கிறோம்? நேரத்தை வீணாக்குகிறோமோ என்று தோன்றியது. இப்படி நினைத்துத்தான் கையில் புத்தகத்தை எடுத்தான். வாங்கிக் குவித்துள்ள புத்தகங்கள் ஏராளமாய் உள்ளன. ஒரே சமயத்தில் ரெண்டு மூன்று புத்தகங்களைப் படிப்பதுதான் தன்னின் மிகப் பெரிய பலவீனமோ என்று அடிக்கடி இவனுக்குத் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்தப் பழக்கத்தை ஏனோ இவனால் இன்றுவரை நிறுத்த முடியவில்லை.

பலரும் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பதாகச் சொல்கிறார்கள். பாத்ரூம், கீத்ரூம் என்று போகவே மாட்டார்களோ? நடமாட்டமின்றி அப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்து படித்துக் கிடப்பதும் கெடுதல்தானே? மல இறுக்கத்தை ஏற்படுத்தாதா? கேஸ் ப்ராப்ளம் வராதா? எப்படிச் சமாளிக்கிறார்கள்? காற்றுப் பிரியும் ககன வெளியில்... கவிதை ஒன்று குறுக்கிட்டது இடையே... படிப்பதும்கூட இப்படியா கண்ணில் பட வேண்டும்...?

"இது ஒரு பிரச்னையாடா? எதுக்கு ஆண்டவன் உடம்புல வாயுத் துவாரத்தைக் கொடுத்திருக்கான்? இழுத்து விடவேண்டிதான்..." பள்ளியில் உடன் படித்த நாகநாதனை முந்திக்கொண்டு அவன் விடும் டர்ர்ர்ர்ர்ர்ர்......சத்தம்தான் நினைவுக்கு வந்தது இவனுக்கு... அவன் அந்த வயதிலேயே அப்படித்தான்... ஏற்றாற்போல் உடல் அசைவுகளைக் கொடுப்பதுதான் பெரிய வேடிக்கை அவனிடம்.. விளையாட்டுக்கு நடுவில் எங்கேயாவது சாக்கடை ஓரமாய் ஒன்றுக்கிருக்க உட்காருகையில் வேட்டடிப்பான் அவன்.

"அதெப்படிறா...ஒன்றுக்கிருக்கைலெல்லாம் போடுறே...?" கேட்டான் மனோகரன். அவன் இப்போது இல்லை. சமீபத்தில்தான் ஹார்ட் அட்டாக்கில் இறந்தான்.

"வருது... போடறேன்..." என்றான் நாகு. இதிலென்ன இருக்கு... நா வீட்லயே போடுவேனே... என்றான் தொடர்ந்து.

"அய்யய்ய...." அன்றுபோலவே இன்று கூட என் வாய் தானாகவே முனகுகிறது....!

"ஏண்டா, தங்கச்சிகள் இருக்கைல எப்டிறா? உங்க அப்பா, அம்மால்லாம் வேறே இருப்பாங்க...உனக்குத் தாத்தா கூட உண்டே?”

"இருந்தா என்னடா? அவுங்க விடலியா? வெறும் காத்து தானடா... எங்க வீட்ல யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... எப்பயாவது என் தங்கச்சிகதான்...சீ...ன்னு சிரிக்கும்... கழுதைங்க....”

"ஏண்டா, பெரியவங்க முன்ன இதைச் செய்றது சரியா? ஒரு மரியாதை வேண்டாம்? உங்கப்பாகூடவா ஒண்ணும் சொல்ல மாட்டாரு?"

"அவுரும் கண்டுக்கிறதில்லை... ஆரம்பத்துல ஒண்ணு ரெண்டு தடவை சொல்லியிருக்காரு... பெறவு விட்டிட்டாரு... ஏன்னா அவுரு பிரச்னையே இதுதான்... அன்னைக்கு செகன்ட் ஷோ பார்த்திட்டு வர்ரைல தெருவே அதிர்ர்றமாதிரி ஒரு வேட்டுச் சத்தம் கேட்டுச்சே... நினைவில்லே? அது எங்கப்பர் அடிச்சதுதான்... நீகூடப் பயந்து போய் என்னடா ரோடு ரோலரான்னு கேட்டியே... ஞாபகமிருக்கா...? திருடன் கூடப் பயந்து போயிடுவான்டா அந்தக் காலத்துல... தெரிஞ்சிக்கோ..."

"நம்ப ஹிந்திப் பண்டிட்டோட வேட்டுச் சத்தம் கேட்டிருக்கியா நீ?"

"கோயில்ல படுத்துத் துாங்கிறபோது, ராத்திரி சலங்கைச் சத்தம் கேட்டு பயந்து, மாடன் சந்நிதிலேர்ந்துதான் வருதுங்கிறதை உணர்ந்து பயத்தைப் போக்கிறதுக்கு பதிலுக்கு இழுத்து ஒரு வேட்டடிச்சாராம்.... சலங்கைச் சத்தம் கப்புன்னு நின்னு போச்சாம்... ராத்திரி உலா வர்ற காவல் தெய்வம்கூட எதுக்கு வம்புன்னு ஒதுங்கிப் போயிடும்னுவாங்க... பேய் பிசாசு அண்டாதுறா... அவ்வளவு ஃபேமஸ்டா மாப்ள.... தெரிஞ்சிக்கோ..."

எத்தனையோ கதைகள் உண்டு கிராமத்தில், எல்லாமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதுபோல்... ஆனால் தனக்கு மட்டும் இது பிரச்னைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது, அல்லது அப்படி அதை நினைத்து நினைத்தே தான் நாட்களைக் கழித்து வந்திருக்கிறோம்...

"ஆட்டோக்கிராஃப் படத்துல வாத்தியார் போடுவாரே...அதை மட்டும் ஜனங்க ரசிச்சாங்களே, எப்டி? யதார்த்தமான காட்சியோட இயல்பா அது சேர்ந்திருந்ததுனாலதானே? அதுபோல இதையும் யதார்த்தமா எடுத்துக்க இந்த உலகம் பழகிக்கணும்... அது இன்னும் வரலைன்னுதான் சொல்லணும்..."

"உலகமும் மனுஷாளும் எல்லாம் அப்படித்தான் இருக்காங்க... நீதான் வெட்டிக்கு எதையோ நினைச்சிட்டிருக்கே..." நாகநானோடு பேசுவது போலவே இருந்தது இவனுக்கு. வாய் இவனை அறியாமல் முருகா...முருகா...என்று முனக ஆரம்பித்தது, வாயாவது நல்லதைப் பேசட்டும் என்றிருந்தது. அநிச்சைச் செயல் போலிருந்தது. காலைல எந்திருச்சதிலேர்ந்து, ராத்திரி படுக்கைக்குப் போகிற வரைக்கும் இதே சிந்தனை தானா? என்ன கண்றாவி இது? அப்பப்பா எவ்வளவு நல்ல விஷயம்? இதைக் கெட்டது என்று ஏன் நினைக்க வேண்டும்? உடல் ஆரோக்கியம் நிமித்தம் எண்ணிப் பார்ப்பது தவறா? தவறில்லைதான், ஆனால் சதா சர்வ காலமும் இதுவேவல்லவா எண்ணமாக இருக்கிறது?

"எதைத் தொடர்ந்து நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிப் போகிறோம். அதனாலதான் நல்லதையே நினைக்கணும்னு சொல்றது... அதுக்கு மனசைப் பக்குவப்படுத்திக்கணும்... மனுஷ மனசு சாதாரணமா அப்படிப் பக்குவப் படாதுங்கிறதாலதான் உருவ வழிபாடுன்னு வச்சது. போயில் குளத்துக்குப் போகணும்னு சொன்னது...ஏதாவது ஸ்லோகம் சொல்லிப் பழகுங்க..."

தான் என்ன சொன்னோம் என்று இவள் இப்படித் தனக்கு அட்வைஸ் பண்ணுகிறாள்? ஏதேனும் வாய்விட்டுப் பேசினேனா? என்னையறியாமல் பேசியிருக்கிறேனோ? பின் எப்படிக் கண்டு பிடித்தாள் என் எண்ண ஓட்டங்களை?

"என்னவோ இவுங்கதான் பெரிய இவுக மாதிரி... தெரியாதாக்கும்... மனுஷன் படுற அவஸ்தை எனக்குல்ல தெரியும்...? வாயு பிரியலேன்னா என்ன பாடு படுது உடம்பு...? "

"அப்படிப் போடு... போடு... போடு... அசத்திப் போடு தன்னாலே... இப்படிப் போடு ... போடு...போடு....இழுத்துப் போடு பின்னாலே...," -பாட்டுக்கூடப் போடுவதைப் பற்றித்தானா...? அந்தப் போடு வேறே...தனக்குத்தான் இந்தப் போடு என்று தோன்றுகிறதோ...? எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அப்படியே ஆகிறோம்... எவன் சொல்லி வைத்தான் இந்தத் தத்துவங்களையெல்லாம்...? இவனுக்கு இவன் மனைவி கல்யாணம் ஆன புதிதில், புதிதாய்ப் போட்டது சங்கீதமாய்க் காதில் ஒலித்தது அப்போது...!!!








Back to top Go down
 
~~ Tamil Story ~~ காற்றின் தீராத பக்கங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» == Tamil Story ~~ எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: