lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: நம்புங்கள் நடக்கும் Mon Apr 11, 2011 6:57 pm | |
| நம்பிக்கை. நிச்சயமாக இது ஒரு மந்திரச்சொல். இந்த மந்திரச்சொல்லை மனதில் பதித்து அடிக்கடி உச்சரித்து உழைத்த பலர் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். இந்த பூமிக்கு வந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் தாயின் கைபிடித்து நடக்கிறான். ஒரு கட்டத்திற்கு பின்னர் நம்பிக்கையின் கையைப் பிடித்து நடக்கத் தொடங்குகிறான். கைகளை இழந்தவர்கள் கூட நம்பிக்கைகளை தங்கள் கைகளாகக் கொண்டு பலவிதமான சாதனைகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இரண்டு கைகள் உள்ள பலரும் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொலைத்த வண்ணம் இருக்கின்றனர்.
என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும் என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம். இப்படி ஏங்கித் தவித்தால் போதுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் முழு நம்பிக்கையோடு செய்யப் பழக வேண்டும். ஒரு ஊரில் வருடக்கணக்கில் மழை பெய்யவில்லை. ஊர் மக்கள் மழைக்காக ஒரு யாகம் நடத்தினார்கள். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த யாகத்தில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் குடையோடு வந்திருந்தான். பலர் அவனை விநோதமாய் பார்த்தார்கள். சிலர் கேலி யும் செய்தார்கள். வீடு திரும்பும்போது நிச்சயம் மழை வரும் என்று அவன் நம்பிக்கையுடன் பதிலளித்தான். இளைஞனின் நம்பிக்கை ஜெயித் தது. அவனைத் தவிர அனைவரும் மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பினார்கள்.
மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம். வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டைவிட்டு புறப்படு கிறோம். ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது.
வில்பர் ரைட், ஆர்வில் ரைட் என்ற ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கள். விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே சின்னஞ்சிறு வயது முதலே இருந்து வந்தது. ஏன் ஒரு வைராக்கியம் என்றே சொல்லலாம்.
சிறுவயதில் ரைட் சகோதரர்கள் தங்கள் தாயாருடன் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஆற்றங்கரையில் ஒரு பறவை பறந்து செல்வதைக் கண்டார்கள். அப்போது வில்பர் ரைட் தன் தாயாரிடம் கேட்டான்.
“அம்மா நமக்கும் சிறகுகள் இருந்தால் நாமும் அந்த பறவையைப் போல பறக்கலாம் அல்லவா?”
அம்மா முடியாது என்று சொல்ல வில்லை. அப்பொழுதே அவன் மனதில் நம்பிக் கையை விதைத்தாள்.
“நிச்சயம் பறக்கலாம் ரைட்”
உடனே வில்பர் சொன்னான்.
“அம்மா, என்றாவது ஒருநாள் பறந்தே தீருவேன்”
சின்னஞ்சிறு வயதில் என்ன ஒரு ஆழ்ந்த நம்பிக்கை ஆச்சரியம்தான்.
ஒருசமயம் தடிமனான அட்டைக் கொண்டு காற்றாடி ஒன்றைச் செய்து பறக்க விட்டார்கள். காற்றாடி தடினமாக இருந்ததால் அது அவர்களை மேலே இழுக்க முயற்சித்தது. அப்போது ஆர்வில் சொன்னான்.
“விரைவில் நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நாம் செய்தே தீர வேண்டும்”
வில்பரும் “நிச்சயம் செய்யலாம்” என்றான்.
ஒருநாள் வில்பர் தன் தந்தையிடம் நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நான் செய்யப் போகிறேன் என்றான்.
ஆனால் அவனுடைய தந்தையோ “அது முடியாது” என்றார்.
வில்பர் விடவில்லை.
“நிச்சயம் செய்வேன்” என்றான்.
சகோதரர்கள் கண்ட கனவு ஒருநாள் பலித்தது.
வடகரோலினா மாகாணத்தில் கிட்டிஹா என்ற இடத்தில் 1903ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தாங்கள் வடிவமைத்த சிறிய கிளைடர் விமானத்தில் பறந்து காட்டினார்கள். நம்பிக்கை ஜெயித்தது. முடியாது என்ற சொல் வெட்கித் தலைகுனிந்தது.
நம்மில் பலருக்கு தம்மீதே நம்பிக்கை இருப்பதில்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல தோல்விகளுக்கு இந்த எண்ணமே காரணமாகி விடுகிறது. நாம் முதலில் நம் மீது திடமான நம்பிக்கை வைக்க வேண்டும்., அப்போதுதான் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். இந்த எண்ணம் தோன்றிவிட்டால் தொட்டதெல்லாம் வெற்றி தான். நம்மை நம்பாத போது தாழ்வு மனப் பான்மை நம் மனதில் வந்து சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டு நம்முடைய செயல்களை முடக்கி விடுகிறது.
அமெரிக்காகவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக் காவைக் கண்டுபிடித்தார். அட்லாண்டிக் பெருங் கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.
பயணம் பலமாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களை காதில் வாங்கவே மறுத்துவிட்டார். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.
உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்றுவிட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.
ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப் பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரி கிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந் தார். உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார் கள். அச்சமயத்தில் கொலம்பஸ் சந்தோஷத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற் பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது.
தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.
கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவருடைய பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.
நம்பிக்கை என்பது சாதனை தொடர் பான விஷயம் மட்டுமல்ல. அது வாழ்க்கை தொடர்பானதும் கூட. நம் வாழ்க்கையில் அன்றாடம் தோன்றும் பிரச்சனைகளுக்கு மூல காரணம் நாம் பிறரை முழுமையாக நம்பாததாகும். நம்முடைய பெற்றோர் நமக்கு நல்லதே செய்வார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வேண்டும். நாம் நம்முடைய குழந்தைகளை நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். நம்முடைய மனைவி உன்னதமானவன் என்ற நம்பிக்கை ஒவ்வொரு ஆண் மகனுக்கும் இருக்க வேண்டும். நம் கணவன் சத்தியவான் என்று மனைவி நூறு சதவிகிதம் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை எப்போது பொய்த்துப் போகத் தொடங்குகிறதோ அக்கணமே குடும்பத்தில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் தோன்றத் தொடங்கிவிடுகிறது.
நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் நல்ல எண்ணங்களைக் கொண்ட மனிதர்களுடன் மட்டுமே பழக வேண்டும். அப்போதுதான் நமக்கும் அவர்களைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிலர் எதற்கெடுத் தாலும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். புலம்பல்கள் அடுத்தவர்களைப் பற்றி குறை கூறுதல், பொறாமையோடு பேசுதல் போன்ற வற்றைத் தவிர்த்து எப்போதும் பாஸிட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசிப் பழக வேண்டும். தோல்விகளைக் கண்டு பயப்படவே கூடாது. தொடர்ந்து தோற்பவர்கள் ஒருநாள் ஜெயித்துத் தான் ஆக வேண்டும். இந்த நியதியை யாராலும் மாற்ற முடியாது.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க சுமார் ஆயிரம் முறை பல விதமாக சோதனைகளைச் செய்ததாகச் சொல்லு கிறார்கள். அவர் செய்த ஆயிரம் சோதனைகளும் தோல்வியிலேயே முடிந்தன. பின்னர்தான் வெற்றிகரமான மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஒருவர் இதைப்பற்றி தாமஸ் ஆல்வா எடிசனிடம் கேட்டாராம்.
“ஆயிரம் முறை தோல்விகளைச் சந்தித்தீர் கள். ஆயினும் நீங்கள் சோர்ந்து போய்விட வில்லையே? இது எப்படி உங்களுக்கு சாத்திய மாயிற்று?”
இதற்கு தாமஸ் ஆல்வா எடிசன் “ஒவ்வொரு முறையும் என் சோதனை தோற்கும் போதும் ஒரு சோதனையை எப்படி செய்யக் கூடாது என்று கற்றுக் கொண்டேன். நான் ஒருபோதும் தோற்றதாகக் கருதவேயில்லை” என்றாராம். இது ஒரு பாசிட்டிவ் அணுகுமுறை. இதுபோன்ற அணுகுமுறையை நீங்கள் கடைபிடிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள். நிச்சயம் நினைத்தது நடக்கும். உங்கள் கனவெல்லாம் பலிக்கும். வாழ்க்கை தேனாய் இனிக்கும். | |
|