BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in -- Tamil Story ~~ புரிதலின் தொடக்கம்  Button10

 

  -- Tamil Story ~~ புரிதலின் தொடக்கம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

 -- Tamil Story ~~ புரிதலின் தொடக்கம்  Empty
PostSubject: -- Tamil Story ~~ புரிதலின் தொடக்கம்     -- Tamil Story ~~ புரிதலின் தொடக்கம்  Icon_minitimeSat Apr 16, 2011 4:28 am

-- Tamil Story ~~ புரிதலின் தொடக்கம்



வாசலில் ராகவப்பிள்ளை மாமா வந்து நின்றார். அவரது வருகையில் ஏதோ சங்கதி இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்துகொண்டேன். திண்ணையில் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணக்குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து மாமா, "அம்மா எங்கேடா? ". என்று கேட்டார். ராகவன் மாமா கேட்ட தொனியிலேயே புரிந்துகொண்டேன். ஏதோ விசமம் இருக்கக் கூடும் என்று. "உள்ளே இருக்காங்க " என்று சப்தமில்லாமல் கூறிவிட்டு மேற்படி படிப்பைத் தொடர்ந்தேன். மாமா ஒரு பூனையைப் போல மெல்ல உள்ளே சென்றார்.

அவரது இந்த திடீர் வருகை அம்மாவுக்கு எப்படிப்பட்ட சந்தோசத்தைக் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவரை வேவு பார்க்கும் எண்ணத்தோடு வீட்டுக்குப் பின்புறம் உள்ள கழிவறைக்குச் சென்றேன். அங்கே கிடப்பில் போடப்பட்டிருந்த அண்டாவை எடுத்து தண்ணீர்த் தொட்டியின் மேல் கவுத்தி, அதன் மேலே ஏறி நின்றேன்.

அம்மா உள்ளே படுத்திருந்தார். இப்போதெல்லாம் அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவள் முகத்தைப் பார்க்கவோ கிட்ட நெருங்கவோ சகிக்காது. நோயாளி என்பதை காட்டிக் கொள்ளத்தான் என்னவோ கொஞ்சம் கூட கவனம் ஏதுமின்றி படுத்திருப்பாள். அவ்வப்போது மாத்திரைகள், சாப்பாடு வாங்கிக் கொடுப்பதோடு சரி, வேறு எப்போதும் அம்மாவின் அறைக்குச் செல்லமாட்டேன். இப்போது கூட ராகவன் மாமாவைப் பின்தொடர்ந்து சென்றாலும் அவர் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் எனக்கு ஏனோ மனம் கேட்கவில்லை.

மாமா வந்ததும் அம்மா மெல்ல எழுந்து நிற்க முயன்றார். அவரால் முடியவில்லை என்பதால் ராகவமாமா வேண்டாம் படுத்துக்கோ என்று சொல்லிவிட்டு கட்டிலின் நுனியில் அமர்ந்து கொண்டார். அவர்களை மெல்ல கழிவறைச் சன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"சுந்தரேசர் உன்னைக் கூட்டிட்டு வரச்சொன்னார், எப்போ தயாராகப் போற?" என்று கேட்டார் மாமா. "இப்போ என்னால் முடியாது ராகவா, அவர்கிட்ட போய் சொல்லு, வேற ஆளப் பாக்கச் சொல்லு" அம்மாவின் குரல் கிட்டத்தட்ட ஒடிந்துபோய் வந்தது. முடியாமையின் உச்சத்தில் அமர்ந்துகொண்டு அவளின் நாக்கு பேசியது. "உன்னைத் தவிர வேற ஆளை சுந்தரேசர் கேட்கமாட்டார்...," மாமா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அம்மா குறுக்கிட்டு, "ராகவா, இப்போ இருக்கிற நிலைமையப் பாத்தியல்ல? பிறகு எப்படி வாரது?" என்றாள்.

மாமா ஒன்றும் சொல்லாமல் எழுந்து நின்றுகொண்டார். "சரி வரேன் லெட்சுமி, உன்னால முடியும்னா சொல்லி அனுப்பு, எப்போ வந்தாலும் சுந்தரேசருக்கு சந்தோசம் தான்". சொன்னவர் அறையைவிட்டு அகன்று சென்றுவிட்டார். அம்மா திரும்பவும் போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டார். ராகவன் மாமா சென்றதும் கழிவறை விட்டு நீங்கி மீண்டும் திண்ணையில் அமர்ந்துகொண்டேன்.

ராகவன் மாமாவை எனக்குச் சின்னவயதிலிருந்தே தெரியும். அடிக்கடி வீட்டுக்கு வருவார், உடன் யாராவது ஒருவரைக் கூட்டிக் கொண்டு வருவார். எப்போதெல்லாம் வருகிறாரோ அப்போதெல்லாம் எனக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார், பின், தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவார். மாமாவுடன் வரும் ஆள் என் வீட்டுக்குச் சென்று தாளிட்டுக் கொள்வார். மிகச் சிறு வயதில் இது எனக்குப் புரியாத புதிராக இருந்தாலும் அதை நான் கண்டுகொள்ளவில்லை. எந்த ஒரு விசயமும் ஆராயத பொழுதுவரைக்கும் அதைப் பற்றிய அக்கறையோ தெளிவோ இருப்பதில்லை. ஆனால் காலம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆசான்.

அவனிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை எத்தனையோ, நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது மதிய விடுமுறையில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். அந்த நாள் நான் கற்றவை எத்தனையோ. வீட்டுக்குள் தாளிடப்பட்டிருந்தது. உள்ளே தட்ட எனக்கு மனம் வரவில்லை. அப்படி என்னதான் நடக்கிறது என்பதைக் காணும் ஆவலில் வீட்டு சன்னலைத் திறந்தேன். யாரோ ஒருவர் சன்னலைத் திறக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட அம்மாவும், அம்மாவிடம் இருந்த ஆசாமியும் பரபரத்தார்கள். அம்மாவைக் காணுகையில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆசாமி தன் உடைமைகளை எடுத்து சரி செய்துகொள்ள நேர்கையில் அம்மா என்னிடம், "தம்பி, ராசாக் கண்ணு அண்ணன் கடையில போய் ஏதாச்சும் வாங்கி சாப்பிடு ராசா, கொஞ்சம் நேரம் கழிச்சு அம்மாவே வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமியை நோக்கி சன்னலை சாத்தச் சொன்னார்.

வெகு சீக்கிரமே சன்னலை விட்டு அகன்றாலும் யாரோ ஒரு ஆசாமியிடம் கற்பை விற்றுக் கொண்டிருந்த அம்மாவின் கோலத்தைக் கண்டதிலிருந்து மனதெல்லாம் பயம் கலந்து இருந்தது. நான் நேரே ராசாக்கண்ணு அண்ணா கடைக்குச் செல்லவில்லை, அந்த சூழ்நிலை என்னை சிறுவன் என்ற நிலையிலிருந்து மெல்ல மாற்றிக் கொண்டிருந்தது. ராகவன் மாமா வீட்டுக்குப் போய் இதைப் பற்றிக் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு திண்ணையில் புத்தகப்பையை வைத்துவிட்டு மாமா வீட்டுக்கு ஓடினேன். ராகவன் மாமா தான் இந்த ஆசாமியை விட்டிருக்கக் கூடும். மாமாவுக்கு இந்த விசயம் தெரிந்தால் கோபம் கொப்பளிக்க அந்த ஆசாமியை பின்னியெடுத்துவிடுவார். மாமா வீட்டை அடைந்ததும் மாமாவிடம் "மாமா, வீட்டுக்குப் போனேன், அங்கே..." என்று சொல்வதற்குள் மாமா வாயைப் பொத்தி வெளியே அழைத்துவந்தார்.

"டேய், உன்னை யாருடா வெள்ளனே வரச்சொன்னது? வூட்டுக்கு வர நேரமா இது?" என்று கடிந்தார். "மாமா, சீக்கிரமே பள்ளீக்கூடம் விட்டுட்டாங்க, அதான் வந்தேன். வந்து வீட்டுல பார்த்தா ஒரே அசிங்கமா இருக்கு மாமா" என்று அழுதவாறே கூறினேன். எனது தேம்பல் அவருக்கு சங்கடத்தை ஏற்படித்தியிருக்கக் கூடும். தலையில் கைவைத்துக் கொண்டு, "அதெல்லாம் கண்டுக்காத! உங்கம்மா ஒரு xxxxxxxx . அது ஊருக்கே தெரியும். உனக்கு இப்பத்தான் தெரிஞ்சிருக்கு. எப்படியும் ஒருநாளைக்குத் தெரியத்தான் போவுது. அது இப்பவே தெரிஞ்சிடுச்சு அவ்வளவுதான்.. நீ போய் உங்கம்மாகிட்ட இதெல்லாம் கேட்டுட்டு இருக்காத. புரிஞ்சுதா?" என்று கண்டிப்புடன் கூறினார்.

இனி மாமாவிடம் பேசி பிரயோசனமில்லை. மாமாவுக்குத் தெரிந்துதான் இது நடக்கிறது. இந்த உலகமே என்னைச் சுற்றி நெருப்பை வளர்ப்பது போலத் தோன்றியது. அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டே வீட்டுக்குச் சென்றேன். என்னை வரவேற்பதற்காகவோ என்னவோ திண்ணைத் தூணைப் பிடித்தவாறு அம்மா நின்றுகொண்டிருந்தாள்.

அம்மாவின் இந்த செய்கை எனக்கு அறுவறுப்பைக் கொடுத்தது. என்னை இன்னும் சிறுவன் என்றே நினைத்துக் கொண்டிருந்தாள் போலும். எனக்கும் சில சங்கதிகள் தெரியும் என்பது அவளுக்குத் தெரியாது. இது நடந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் அம்மா அடிக்கடி யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. ஒருவேளை எனக்குத் தெரிந்துவிட்ட குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதோடு நோய் வந்து படுத்துக் கொள்ளுகிறாள். இதோ, இப்போதுகூட சுந்தரேசர் என்ற பணக்காரப்புள்ளி என் அம்மாவின் சுகத்திற்காக காத்திருக்கிறதாம்..

சில தினங்கள் கழிந்தன. கோச்சு ஐயர் வீட்டுக்கு வந்தார். அவர் மாதம் ஒருமுறை வந்து பூசை நடத்திவிட்டு செல்வார். அன்று பள்ளி முடிந்ததும் எப்போதும் போல திண்ணையில் அமர்ந்துகொண்டு பாடம் படித்துக் கொண்டிருந்தேன். "அம்மா உள்ளே இருக்காளா" என்று ஐயர் கேட்டார். ராகவன் மாமா கேட்ட அதே கேள்வி. அவர் மேல் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றாலும் ஒருவித சலிப்போடு "உள்ளே இருக்கா பாருங்க " என்று சொல்லிவிட்டு அவரை ஏற இறங்கப் பார்த்தேன். ஐயர் மேல் எந்த தவறும் இல்லை என்றாலும் அவர்மேலும் சந்தேகம் வலுத்தது. அதை அவர் புரிந்துகொண்டார்" அப்படியெல்லாம் பாக்காதடா! அப்பறமா வரட்டா?" என்று கிளம்பப் பார்த்தவரை கூப்பிட்டேன். என்ன என்று கேட்டுக் கொண்டே திண்ணையில் அமர்ந்தார்.

"கோச்சு மாமா, உங்ககிட்ட ஒரு விசயம் கேட்கலாமா" என்று புதிர் போட்டேன். "சொல்லுடா தம்பி, என்ன கேட்கப் போறே?" என்று திவ்யமாக பதிலளித்தார். "மாமா, அம்மா இந்தத் தொழில் பண்ணீட்டு இருக்கிறாளே! என்னை எதுக்கு பெத்தா? "என் கேள்வி அவரை ஆச்சரியப் படுத்தியிருக்கக் கூடும். . "அடடா! அவ வாழ்க்கையில பண்ணின தப்புகள்லாம் பெரிசு உன்னை பெத்துண்டதுதான்.. விபச்சாரி இருந்தா ஆயிரம் பொன்னு, இறந்தா சல்லிக்காசு. தூக்கிப் போட ஆளு இருக்காது. அதுகூட காரணமா இருக்கும்டா " சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.. அவரின் பதில் எனக்கு சலிப்பையே தந்தது. காரணம் புரியாமல் பிறந்துவிட்டேன் என்ற வருத்தம் ஓங்கியிருந்தது. "உங்கம்மா கிட்டயே கேளுடா தம்பி, அவ சொல்லுவா.. நான் வரேண்டா, இன்னிக்கு வேலை ஜாஸ்தி,," சொல்லிவிட்டு திண்ணையை காலிசெய்தார்..

அம்மாவிடம் கேட்பதா? என்ன கேட்பது? என்னைப் பெற்றது வெறும் கொள்ளி போடத்தானா? அம்மாவின் மேல் வெறுப்பு கூடியது. அவள் செய்த தொழில் காலப்போக்கில் வேறுவழியில்லாமல் செய்கிறாள் என்று உணர்ந்த போது அவள் மேல் எனக்கு வெறுப்பு ஏற்படவில்லை. அம்மா அடிக்கடி என்னை சமாதானப்படுத்தும் நோக்கில், "தம்பி! இதை நான் ஒண்ணும் விரும்பி செய்யலடா! எங்கம்மா என்னை வலுக்கட்டாயமா தள்ளிவிட்டா, அப்படியும் மீண்டு வந்தாலும் என்னைக் கட்டிக்க ஒத்த ஆம்பிளை இருக்காது.. என்ன பண்ண சொல்ற? நான் உடம்பை விக்கிறவ இல்ல, சுகத்தை விக்கிறவ. வித்ததுக்கப்பறம் என்கிட்ட சுகம் இருக்காதுடா.. சோகம் தான் இருக்கும்.. " என்பாள்.

அவளின் பக்க நியாய அநியாயங்கள் கண்ணுக்குள் வந்து மறைந்தாலும் ஏதோ ஒரு குற்றம் உணர்ச்சி அவ்வப்போது மனதுக்குள் அடித்துக் கொண்டிருந்தது. என்றாலும் அவளை ஒரு தாயாகவே நான் நினைத்தேன். ஆனால் என்னைப் பெற்றதே அவளைத் தூக்கிப் போடுவதற்கு எனும் போது மனம் உண்மையிலேயே எரிந்தது. முடியாமல் படுத்துக் கிடக்கும் அம்மாவை அப்படியே கொன்றுவிடலாமோ என்று தோன்றும். கூடாது.. அவள் இறக்கக் கூடாது. என்னைப் பெற்றிருக்கிறாள் அல்லவா? ஒருவேளை பிறக்காமல் இருந்திருந்தால் இது எதுவுமே பார்த்திருக்கவோ அனுபவித்திருக்கவே முடியாது.

திண்ணையைவிட்டு அம்மாவின் அறைக்குச் சென்றேன்.. அம்மா ஏதோ சபித்துக் கொண்டிருந்தாள். அது, கந்தஷஷ்டி கவசமாக இருக்கலாம். மெல்ல நெருங்கியதும், அம்மாவைத் தொட்டேன்,. என்ன என்பதைப் போல தலையாட்டினாள். "அம்மா! எதுக்காகம்மா என்னைப் பெத்தே? " என்று கலங்கியவாறு கேட்டேன் "அந்தக் கேள்வி அவளை உறுத்தியிருக்கக் கூடும். சிறிது நேரம் மவுனமாக இருந்தாள். பின் மெல்ல எழுந்து ஒரு நாற்காலில் அமர்ந்துகொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்தவாறே சொன்னாள் "தம்பி, நான் தப்பானவள்னு உனக்கு இப்பத்தான் தெரியும். எனக்கு முதல் தப்பு செய்யும்போதிருந்தே தெரியும்... என் அம்மா, உன் அம்மாவைப் போலத்தான். ஆனா கொடூரக்காரி. வயசுக்கு வந்த பத்தாவது நாள்ல என்னை முத்தண்ணாவுக்கு முடிச்சாள்.. அந்த சூழ்நிலையில நீ நெனச்சுப்பாரு. என்னால என்ன செய்யமுடியும்? எனக்குன்னு ஆதரவா இருந்த ராகவனும் மாறிட்டான்.

என்னை வெச்சு காசு பணம் பார்த்தான். இதில இருந்து தப்பிக்க எனக்கு உன்னைவிட்ட வேற வழியேதுடா? பிள்ளை பெத்துகிட்டா விட்டிருவாங்கன்னு நெனச்சேன். ஆனா, ராகவன் விடலை. என்னை மிரட்டினான். இப்பக்கூட சுந்தரேசருக்கு சுகம் தர வரமுடியுமான்னு கேட்டுட்டுப் போனான். முடியாதுன்னு சொல்லிட்டேன்... எனக்கு பிள்ளைதான் முக்கியம். தம்பி, உங்கம்மாவ நீ காப்பாத்துவேங்கிற நம்பிக்கையிலதான் உன்னைப் படிக்கவைக்கிறேன். இந்த ஊர்ல நான் xxxxxx ன்னு பட்ட வாங்கிட்டேன். வேற பொழப்பும் தெரியாது. உன்ன ஆசைக்கு பெத்துக்கலைடா... என்னைக் காப்பாத்த வந்த சாமின்னு நெனச்சுத்தான் பெத்தேன்... நீ நல்லா படிச்சு பெரியாளா வரணும்.. என்னைத் தனியே வெச்சு காப்பாத்தணும்டா..." சொல்லிக்கொண்டே அழுதுவிட்டாள். அந்த அழுகையில் உண்மை தெறித்து வந்தது. எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. ஆனால் அம்மாவின் மனதுக்குள் புகுந்து வந்த உணர்வு ஏற்பட்டது.

அம்மா, நீ என்னை வீணாகப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக உன்னைக் காப்பாற்ற வந்த ஒரு தெய்வமாக என்னை எண்ணுகிறாய்... ஒருவேளை இத்தனை நாள் தெரிந்துகொள்ளாமல் போனது என் அறிவின்மையா? அம்மாவின் வாழ்வில் இதுவரை சுகம் கண்டதே இல்லை போலும்.. நான் இதுநாள் வரை நினைத்தவைகள் எல்லாம் போலியா?

திண்ணைக்கு ஓடினேன். சிதறிக் கிடந்த புத்தகங்களை ஒழுங்காக எடுத்து வைத்து பாடத்தில் கவனம் செலுத்தினேன். சிறிது நேரத்தில் ராகவன்மாமா வந்தார். நானாகவே " அம்மா உள்ளேதான் இருக்காங்க... போய்ப் பாருங்க " என்றேன்.. சற்றே குழம்பியவாறே உள்ளே சென்றார் ராகவன் மாமா.













Back to top Go down
 
-- Tamil Story ~~ புரிதலின் தொடக்கம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» -- Tamil Story ~~ தேடலின் தொடக்கம்
» ~~ Tamil Story ~~ மழை
» ~~ Tamil Story ~~ பசி
» Tamil story
» ~~ Tamil Story ~~ படுக்கையறைக்கொலை - 3

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: