BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in -- Tamil Story ~~ துரத்தும் நிழல்  Button10

 

  -- Tamil Story ~~ துரத்தும் நிழல்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

 -- Tamil Story ~~ துரத்தும் நிழல்  Empty
PostSubject: -- Tamil Story ~~ துரத்தும் நிழல்     -- Tamil Story ~~ துரத்தும் நிழல்  Icon_minitimeSun Apr 17, 2011 4:17 am

-- Tamil Story ~~ துரத்தும் நிழல்




தினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னதான் கண்டித்தாலும், புத்தி சொன்னாலும் அமைதியாக பாவம் போல் பார்த்துக் கொண்டு நிற்பவனை என்னதான் செய்வது?

கடந்த மூன்று தினங்களாக அவன் வேலைக்கும் வரவில்லை. அவனிடமிருந்து தகவலும் இல்லை. அவன் தங்கியிருக்கும் 'லேபர் கேம்பிற்கு' போன் பண்ணிக் கேட்டபோதும் சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எங்கு போய்த் தொலைந்தான்? இவர்கள் கம்பெனி விசாவில் இருந்து கொண்டே வேறெந்த கம்பெனியிலும் வேலைக்குப் போகிறானா?

அவன் வேலைக்கு வந்தாலும் பிரச்னை; வராவிட்டாலோ பெரும் பிரச்னை. அவன் செய்கிற முக்கிய வேலை - கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது. அவன் வேலைக்கு வராத பட்சத்தில் கழிவறைகள் நாறத் தொடங்கி அந்தப் பக்கமே போக முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

"காலையில ஒரு தரம்; மத்தியானம் ஒரு தரம்னு கக்கூஸைக் கிளீன் பண்றதோட சரி. வேற ஒரு வேலையும் செய்யிறதில்ல. அவசர ஆத்திரத்துக்கு ஆள் இல்லாத குறைக்கு ஏதாவது சின்ன வேலை குடுத்தாலும் செய்ய மறுத்து முறைச்சுட்டுப் போயிடுறான் ஸார்.... " - எல்லா போர்மேன்களும் நரசய்யாவின் மீது புகார் வாசித்து விட்டார்காள். "நீங்க அவனுக்கு அதிகப்படியாய் குடுக்கிற செல்லமும் சலுகைகளும் தான் அவனை யார் பேச்சையும் கேட்காத மூர்க்கனா வளர்த்து விட்டிருக்கு..." என்று தனபாலின் மீது நேரிடையாகவே குற்றம் சுமத்தினார்கள் அவனுடைய உதவிப் பொறியாளர்கள்.

வேலை ஆட்களுக்கும் நரசய்யாவிற்கும் எப்போதும் சண்டை தான். எப்போது யார் டாய்லெட்டை உபயோகிக்கப் போனாலும் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றும்படியும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியும் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பான். 'என்னத்தத் தான் திங்கிறாய்ங்களோ; நாத்தமெடுத்த பயலுவ...' என்று தொடங்கி கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து தனபாலே அவனை அழைத்து பல தடவை கண்டித்து அனுப்பியிருக்கிறான். ஆனாலும் ஓரளவிற்கு மேல் அவனைக் கண்டிக்க முடிவதில்லை.

ரொம்பவும் கோபப்பட்டுப் பேசினால் "எனக்கு வேலை மாத்திக் கொடுங்க ஸார்; இந்த அசிங்கம் புடுச்ச வேலைய வேற யாரையாவது விட்டுச் செய்யச் சொலுங்க..."என்கிறான். அதில் தான் பிரச்னையே! அவன் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கழிவறைகளைச் சுத்தம் செய்கிற வேலையைச் செய்ய யாருமே முன் வருவதில்லை. இது சம்பந்தமாக வேலைத் தளத்தில் கூட பெரும் பிரச்னை வெடித்து, அப்புறம் நரசய்யாவின் தயவால் தான் முடிவிற்கு வந்தது.

ஆரம்பத்தில் கொத்தனாருக்கு உதவியாளாக நரசய்யா வேலை பார்த்தபோதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவுமே வேலை பார்த்தான். அவனுக்கு இட்ட வேலைகளை வேக வேகமாக முடித்துவிட்டு கொத்தனார் வேலை பழகுவதிலும் பெரிய அளவில் ஆர்வம் காட்டினான். அவ்வப்போது தனபாலிடம் வந்து, 'பூச்சு வேலை தான் இன்னும் தனக்கு கை வரவில்லை என்றும், ஆனால் கட்டு வேலை எல்லாம் நன்றாகவே தன்னால் செய்ய முடியும் என்றும் கூறி அதனால் தன்னைத் தனியாக ஒரு பகுதியில் கட்டு வேலை செய்ய அனுமதிக்கும் படியும் பணிவுடன் கேட்டிருக்கிறான். இவனும் பார்க்கலாம் என்று சொன்னதோடு போர்மேன்களை அழைத்து அவனுக்கு பிளாக் கட்டும் வேலை பிரித்துக் கொடுக்கும்படி உத்தரவும் போட்டிருக்கிறான். ஆனால் அதற்குள் என்னன்னெவோ நடந்து விட்டது.

தனபாலுக்கு துபாயில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் 'பிராஜெக்ட் மேனேஷர்' வேலை கிடைத்து விமானம் ஏறும்போது மனசு முழுக்க ஒரு பயம் இருந்தது. ஏனென்றால் தமிழக எல்லையைத் தாண்டி வெளியில் அவன் வேறெங்குமே இதுவரைப் போனதில்லை. தமிழ் மற்றும் தடுமாற்றமான ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் ஒரு வார்த்தையையும் அவன் அறிந்திருக்கவில்லை. இவனுடைய
நண்பர்கள் வேறு ஒரேயடியாய் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். "மகனே நீ நல்லா மாட்டிக்கிட்ட; ஹிந்தி தெரியாம ஒரு வாரம் கூட துபாயில உன்னால காலந்தள்ள முடியாது. ஏன்னா துபாயில ஆட்சி மொழி அரபின்னாலும் பேச்சு மொழி ஹிந்தி தான்......."

தனபாலின் நண்பர்கள் பயமுறுத்தியபடி தான் துபாயில் நிலைமை இருந்தது. ஏர்போர்ட்டிலேயே பாஸ்போர்ட் செக்கிங் கவுண்ட்டரில் இருந்த முழுக்க கறுப்பில் அங்கியும் பர்தாவும் அணிந்திருந்த அரபிப் பெண் ஹிந்தியிலேயே கேள்வி கேட்கத் தொடங்க, இவன் எதுவும் புரியாமல் விழிக்க "இந்தியன் தானே! இந்தி தெரியாதா?"என்று ஆச்சிரியமாய்ப் பார்த்து விட்டு ஆங்கிலத்திற்கு மாறினாள்.

ஏர்போர்ட்டிற்கு இவனை அழைத்துப் போக வந்திருந்த பாகிஸ்தானி டிரைவருக்கோ ஆங்கிலத்தில் ஒரு அட்சரமும் புரியவில்லை. சைகையிலேயே இவன் பேசுவதைப் பரிகாசமாய்ப் பார்த்தபடி வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான். அடுத்த நாள் அலுவலத்திற்குப் போனபோது பெர்ஸனல் மேனேஜர் - அவர் தமிழர் தான் என்றாலும் - ஹிந்தியில் பேசத் தொடங்கி இவன் முழிப்பதைப் பார்த்து ஆங்கிலத்தில் தொடர்ந்தார். 'கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி கற்றுக் கொள்ளும்படியும் இல்லையென்றால் லேபர்ஸைச் சாமாளிக்க முடியாது' என்றும் அறிவுரைகளை அள்ளி வழங்கி இவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வேலைத்தளத்திற்கு அனுப்பி வைத்தார். ஒரு வார்த்தை கூட இவனிடம் தமிழில் பேசவில்லை என்பதும் இவனாகவே அவர் தமிழரென்று அறிந்து கொண்டபடியால் வலிந்து தமிழில் பேசியபோதும் அதை ரசிக்காமல் தவிர்த்து விட்டார் என்பதும் அதில் விசேஷம்.

அப்படியே சென்னைக்கு விமானம் ஏறிவிடலாம் போலிருந்தது தனபாலுக்கு. ஆனால் அதெல்லாம் வளைகுடா நாடுகளில் அத்தனை சுலபமில்லை. வேலையில் சேர்ந்த முதல் நாளே பாஸ்போர்ட்டை பிடுங்கி அலுவலகத்தில் பத்திரப்படுத்திக் கொள்வார்கள் என்பதால் நினைத்த மாத்திரத்தில் எங்கும் போய்விடவும் முடியாது. மனசு முழுக்க பயத்தையும் பீதியையும் சுமந்து கொண்டு கோயிலுக்கு வெட்டுப்படப் போகும் ஆடு மாதிரி வேலைத்தளத்திற்குப் போனான் தனபால். அங்கு போன பின்பு தான் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான்.

ஏனென்றால் இவனுடைய தலைமையில் இவனுக்குக் கீழே வேலை பார்க்க நியமிக்கப்பட்டிருந்த சூபர்வைசர்களும் பெரும்பாலான வேலையாட்களும் தென்னிந்தியாவின் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக - அதுவும் அதிக பட்சம் மலையாளிகளாகவும் கொஞ்சம் தமிழர்களாகவும் - இருந்ததால் மொழிப் பிரச்னை மூச்சை நிறுத்துவதாக இல்லை. ஆனால் இவன் கொஞ்சமும் எதிர்பார்க்காத முற்றிலும் புதிதான வேறொரு பெரும் பிரச்னை வெடித்தது.

சென்னையில் தனபால் பார்த்த கட்டுமான வேலைகளிலெல்லாம் 'சைட் ஆபீஸ்' என்பது கீற்றுக் கொட்டகையும் புழுதித் தரையும் நான்கைந்து மேஜை நாற்காலிகளுடனுமிருக்கும். அவ்வளவு தான். கழிவறை வசதிகளுக்கெல்லாம் திறந்தவெளிகளையோ, பொதுக் கழிவறைகளையோ தான் தேடிப் போக வேண்டியிருக்கும். அபூர்வமாய் சைட் ஆபீஸிலேயே கழிவறை வசதியிருந்தாலும் தொடர்ந்த உபயோகத்தில் நாறி நாத்தம் குடலைப் புரட்டுவதாகி உபயோகிக்கக் கொஞ்சமும் லாயக்கற்றதாக மாறியிருக்கும். ஒருமுறை வேலையிலிருக்கும்போது வயிற்றைக் கலக்கி 'உட்கார' தோதான இடம் தேடி அலைந்து அதற்குள் பேண்ட்டிலேயே கழிந்து போன அவல அனுபவமெல்லாம் அவனுக்கு இருக்கிறது.

ஆனால் தனபால் துபாய்க்கு வேலைக்கு வந்ததும் இங்கு அவன் பார்த்த சைட் ஆபிஸ்கள் ஆச்சர்யமும் பிரமிப்பும் ஊட்டுவதாய் இருந்தது. போர்ட்டோ கேபின்கள் என்ற பெயரில் மரத்தாலும் பிளாஸ்டிக்குக்ளாலும் வண்ணத் தகடுகளாலும் வடிவமைக்கப்பட்டு, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டு எங்கு வேண்டுமானாலும் அப்படியே தூக்கிக் கொண்டு போய் நிர்மாணித்து விடும்படியாய் பளபளவென்று சென்னையின் மல்டி நேஷனல் கம்பெனிகளை நினைப்பூட்டுவதாய் இருந்தது. அதை விடவும் ஆச்சர்யம் அந்த போர்ட்டோ கேபின்களிலேயே அலுவலர்களுக்காக இணைக்கப்பட்டிருந்த கழிவறை வசதிகளும் வேலையாட்களுக்கு கழிவறைகளுக்காகவே அமைக்கப்பட்டிருந்த தனி போர்ட்டோ கேபின்களும் நம்ப முடியாத சுத்தத்துடன் தாராளமான நீர் வசதிகளுடனும் இருந்தது தான்!

எத்தனை தான் அழகாகவும் பளபளப்பாகவும் இருந்தாலும் தொடர்ந்து பராமரித்தால் தானே கழிவறைகள் சுத்தமாக இருக்கும்? கழிவறைகள் பற்றிய பிரக்ஷையே இல்லாமல் அதை யாவரும் உபயோகிக்க மட்டுமே செய்ததால் இவனுடைய சைட்டில் வேலை தொடங்கி ஒரிரு வாரத்துக்குள் அவை மிக மோசமாக நாறத் தொடங்கின. ஒருமுறை வேலைகளை மேற்பார்வையிட வந்த தனபாலின் ஆங்கிலேய மேலதிகாரி வேலையில் நிறைய முன்னேற்றங்களும் சிறப்புகளுமிருப்பதாய் பாராட்டிக் கொண்டே வந்தவர் அவனே சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் சட்டென வேலையாட்களின் கழிவறைக்குள் புகுந்து விட்டு, அதே வேகத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவர் இவனை மிக மோசமாக திட்டித் தீர்த்து விட்டார்.

"முகத்தை மட்டும் கழுவினாப் போதாது மேன்; பின்புறத்தையும் கழுவனும்...." என்று தொடங்கி ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகம் செய்துவிட்டு, போகிற போக்கில் தான் அடுத்த முறை விசிட் வரும்போது ஒழுங்காக பராமரிக்கப்படாமல் கழிவறைகள் இதே நிலையில் தொடர்ந்தால் நீ இந்தியாவிற்கே திரும்பிப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்து விட்டுப் போனார்.

'பின்புறத்தை பேப்பரால் துடைத்துப் போட்டு விட்டு போகிறவனெல்லாம் கழுவுவதைப் பற்றி பேச, அதைக் கேட்கிற நிலைமை நமக்கு வந்து விட்டதே' என்ற தன்னிரக்கத்தையும் மீறி, ஒரு சின்ன விஷயத்தில் தான் இத்தனை அசிரத்தையாக இருந்து வாங்கிக் கட்டிக் கொண்டோமே என்று தனபாலுக்கு வருத்தமாகவும் இருந்தது. உடனே போர்மேன்களையும் பொறியாளர்களையும் அழைத்து தினசரி குறைந்தது இரண்டு தடவைகள் கழிவறைகளைச் சுத்தம் பண்ணுவதற்கு ஆட்களை நியமிக்கும்படி உத்தரவிட்டான்.

அப்போதெல்லாம் தனபால் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லை என்று தான் நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய உதவியாளர்கள் அவனிடம் வந்து "யாருமே கக்கூஸ் கழுவுற வேலை செய்ய ஒத்துக்கமாட்டேனென்கிறார்கள்" என்று சொன்ன போது தான் தனபாலுக்கு இதிலுள்ள தீவிரம் புரிந்தது.

முதலில் ஆபீஸ் பையனை அழைத்து அலுவலகக் கழிவறைகளை மட்டுமாவது தினசரி சுத்தம் செய்யும்படி சொன்னான் தனபால். எந்தவிதமான மரியாதையோ தயவு தாட்சண்யமோ இல்லாமல் உடனடியாக "அதெல்லாம் என்னால முடியாது; வேறாள பார்த்துக்கோ ஸார்......" என்று வெடுக்கென பதில் சொல்லிவிட்டு வேலை இருக்கிற பாவனையில் அங்கிருந்து நகர்ந்து போனான் அவன். அடுத்த கட்டமாக வேலைத்தளத்திற்கே போய் கொத்தனார், தச்சு வேலை மற்றும் கம்பி வேலைகளில் உதவியாளர்களாக இருப்பவர்களிடம் பேசிப் பார்த்தான்.

"நல்ல கதையா இருக்கே! ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம்னு ஏஜெண்ட்களுக்கு பணம் குடுத்து இங்க கக்கூஸ கழுவுறதுக்கா வந்துருக்கோம்? அதெல்லாம் முடியாது" என்று அவர்களும் முகத்திலடித்தது போல் மறுத்து விட்டார்கள். இப்படியெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தால் காரியமாகாது; அதிரடியாக ஏதாவது செய்தால் தான் வழிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தான்.

"நம்முடைய கழிவறைகளை நாமே சுத்தப்படுத்திக் கொள்வதில் என்ன கேவலமிருக்கிறது...!" என்று தொடங்கி சின்னதாய் ஒரு உரை நிகழ்த்தி விட்டு அவர்களில் லேபர் பிரிவிலிருந்த 12 பேரை ஆறு டீம்களாகப் பிரித்து "தினசரி ஒரு டீம் காலையில் சுமார் இரண்டு மணி நேரம் மட்டும் கக்கூஸைக் கிளீன் பண்ணிவிட்டு மற்ற வேலைகளைச் செய்யப் போய் விடலாம். அதன்படி செய்தால் ஒவ்வொருவரும் வாரம் ஒருமுறை தான் கக்கூஸைக் கிளீன் பண்ண வேண்டி இருக்கும் ..." என்று தன் முடிவை அறிவித்தான் தனபால்.

வேலையாட்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் காச்மூச்சென்று பேச அந்த இடம் ஒரே சத்தக்காடாய் இருந்தது. அப்புறம் ஒருவன் மட்டும் - அவன் பெயர் வெங்கடேஷன் - எழுந்து " நீங்க சொல்றதெல்லாம் ஆகுற வேலையில்ல; எல்லாரும் எல்லா வேலையும் செய்ய முடியாது. இன்னின்ன ஆள் இன்னின்ன வேலை தான் செய்யனும்னு ஒரு கணக்கிருக்கு...அதால நீங்க சொல்ற வேலைய
எங்களால செய்ய முடியாது. நம்ம சைட்ல இப்ப இருக்கிறவங்கள்ல நரசய்யாவால மட்டும் தான் அதைச் செய்ய முடியும். அவனுக்குத் தான் 'இது' பழக்கமான வேலை..." என்று சொல்லவும் நரசய்யா எழுந்து வெங்கடேஷனிடம் சண்டைக்குப் போனான்.

தனபால் அவர்களை அதட்டி அமைதிப்படுத்தி விட்டு வெங்கடேஷிடம் மிகக் கடுமையாகச் சொன்னான். "இங்க பார்; இந்த சைட்டைப் பொறுத்தவரைக்கும் நீயும் லேபர்; அவனும் லேபர். ஏன் அவன் மட்டும் கக்கூஸ் கழுவுற வேலையைச் செய்யனும்! நீ ஏன் அதே வேலையைச் செய்யக் கூடாது? நாளையிலிருந்து நீதான் 'அந்த' வேலையைச் செய்ற. இது என் ஆர்டர்....." என்று சொல்லவும் வெங்கடேஷ் மிகவும் கோபமாக எழுந்து இவனிடம் வந்து கத்தினான். " யாரைப் பார்த்து என்ன வேலை செய்யச் சொல்ற? என் சாதி என்ன! குலம் கோத்ரம் என்ன! ஏதாவது தெரியுமா உனக்கு? எதுக்கும் ஒரு தகுதி தராதரம் தெரிய வேணாம்? இது கூட புரியாம நீ என்ன பெரிய மயிரு என்ஜீ£னியரு!" சக வேலையாட்கள் அவனைப் பிடிக்கவில்லை என்றால் தனபாலை அடித்து விடுவான் போலிருந்தது. அத்தனை ஆக்ரோஷமும் ஆவேஷமுமிருந்தது அவனது குரலில்.

தனபாலுக்கே ஒரு கணம் பயமாகி விட்டது - அவனுடைய சுயமரியாதையைப் புண்படுத்தும்படி ஏதாவது பேசிவிட்டோமோ என்று. அப்புறம் சமாளித்துக் கொண்டு "இங்க பார் வெங்கடேஷ்! உன்னுடைய சாதீயத் திமிரைக் காட்டுறதுக்கு இது இந்தியா இல்ல; அங்கயும் கூட இப்பல்லாம் இது சாத்தியமில்ல. ஒருவேளை உன்னோட குக்கிராமத்துல வேணுமின்னா இது சாத்தியப்படலாம். நீ இப்ப துபாய்க்கு வேலைக்கு வந்திருக்கிறேங்குறத மொதல்ல மனசுல வச்சுக்கிட்டுப் பேசு......" என்றான் பொறுமையாக.

"துபாய்க்கு வேலைக்கு வந்தா நீ சொல்ற எல்லா எடுபிடி வேலையையும் செய்யணுமா என்ன? அதுக்கெல்லாம் நான் ஆளு இல்ல; தோட்டி வேலை செய்ற சாதியிலயா பொறந்திருக்கோம் நாங்க! பீயத் திங்குறதுக்கு நாங்க என்ன பன்னியா?" மீண்டும் எடக்காகவும் இளக்காரமாகவுமே பேசினான்.

"அப்படீன்னா நீ இந்தியாவுக்குத்தான் திரும்பிப் போகனும்......" தனபாலும் கடுமை காட்ட "சரி என்னை ரீலீஸ் பண்ணு; நான் இந்தியாவிற்கே போய்க்கிறேன்......" என்று அவனும் வீம்பு காட்டினான். இவனிடம் எதற்கு மல்லுக்கட்ட வேண்டும் என்று யோசித்து அவனை அவனிடத்தில் போய் உட்காரச் சொன்னான்.

"இங்க பாருங்க என்னால உங்க யாரோட வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. ஏன்னா உங்கள மாதிரி நானும் பொழைக்கத்தான் இங்க வந்துருக்கேன். அதே சமயத்துல என்னோட பிரச்னையையும் நீங்க புரிஞ்சுக்கனும். அன்னைக்கு கோரா (இங்கிலீஸ்காரர்களை UAE யில் அப்படித்தான் அழைப்பார்கள்) வந்து எப்படிச் சத்தம் போட்டுட்டுப் போனான்னு தெரியுமில்ல! நாம யூஸ் பண்ற கக்கூஸ நாமளே க்ளீன் பண்றதுல எதுக்கு வீண் பிடிவாதம்! நம்ம மகாத்மா காந்தி கூட கக்கூஸ் கழுவி இருக்கார் தெரியும்ல...ப்ளீஸ். கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க ...." தனபால் இறங்கி வந்து பொதுவாய் எல்லோரிடமும் பேசினான்.

ஆனால் அதற்கும் அவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. வெங்கடேஷே தான் இம்முறையும் எழுந்து பதில் சொன்னான். "காந்திய எல்லாம் வீணா வம்புக்கிழுத்து உதாரணம் காட்ட வேண்டாம். அந்த மனுஷன் முட்டாள்தனமா ஏற்படுத்திட்டுப் போன முன்னுதாரணங்களை எல்லாம் பாலோ பண்ண முடியாது.. ஊர்ல எங்க வீட்டுக் கக்கூஸ்களயே வேற யாரோ வந்து தான் இன்னும் கழுவிக் குடுத்துக்கிட்டு இருக்கிறாங்க..... அதனால 'அந்த' வேலையச் செய்ய எங்க மனசு ஒப்பாது......." எல்லோரும் அவனை ஆமோதிப்பது போல் அமைதி காத்தார்கள்.

தனபால் அடுத்த அஸ்திரத்தையும் வீசிப் பார்த்தான். "உங்கள்ல டாய்லெட் கழுவ யார் முன் வர்றாங்களோ அவங்களுக்கு தினசரி ரெண்டு மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஓவர்டைம் குடுக்கச் சொல்றேன்.." அப்படியும் யாருமே மசியவில்லை. பெரியதோர் மௌனத்தையே பதிலாகத் தந்தார்கள். எந்தவிதமான இறுதி முடிவிற்கும் வராமலேயே, எல்லோரையும் அவரவர்களின் வேலைகளுக்குத் திரும்பிப் போகச் சொன்னான். அவர்கள் யாவரும் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி கலைந்து போனதில் தனபாலுக்கு தான் தோற்றுப் போன உணர்வு பீறிட்டது.

அடுத்த முறை ஆங்கிலேய மேலதிகாரி வரும்போது எப்படி அவனை எதிர் கொள்வது? இந்த சின்னப் பிரச்னையைக் கூட உன்னால் சமாளிக்க முடியவில்லையா? என்று இளக்காரமாய்ப் பார்ப்பானே, என்ன செய்வது? தனபாலின் உதவிப் பொறியாள்ர்கள் வந்து "நீங்க இப்படி எல்லாம் மயிலே மயிலே இறகு போடுன்னு கெஞ்சிக்கிட்டுருந்தா காரியம் ஆகாது ஸார். நரசய்யா தான் இதுக்கு சரியான ஆளு. அவனைக் கூப்பிட்டு மிரட்டி செய்யிடான்னு சொல்லுங்க; கண்டிப்பா செய்வான்..."என்று ஆலோசனை சொன்னார்கள்.

"யாருமே செய்ய முன்வராதப்போ நரசய்யாவ மட்டும் ஏன் கட்டாயப்படுத்தனும்? அவன் மட்டும் என்னெ பாவம் பண்ணுனான்? ஏன் எல்லா விரல்களும் அவனை நோக்கியே நீள்கின்றன....." ஆச்சர்யமாய்க் கேட்டான் தனபால்.

"என்ன ஸார் இன்னுமா புரியல? அவங்க குடும்பத் 'தொழிலே' இது தான் ஸார். ஊர்ல இவனோட குடும்பமே காலங்காலமா 'இதைத்' தான் பண்ணிக்கிட்டு இருக்கு. அதால அவனுக்கு இது ஒண்ணும் புதுசில்ல. நீங்க அவனைத் தனியாக் கூப்பிட்டு நீதான் செய்யணுமின்னு கண்டிசனாச் சொல்லுங்க. தட்டாமச் செய்வான்....." என்றார்கள்.

தனபாலுக்கும் வேறு வழி தெரியவில்லை. ஆங்கிலேய மேலதிகாரி மீண்டும் சைட் விசிட் வருவதற்குள் இந்த கழிவறைப் பிரச்னை தீர்க்கப்பட்டால் அவனுக்கும் நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியதால் நரசய்யாவைத் தனியாக அழைத்துப் பேசினான். "உனக்கு சொந்த ஊர் எதுப்பா..." மெதுவாய் ஆரம்பித்தான்.

"ஆந்திராவில குண்டூரு ஸார்....."

"இத்தனை சுத்தமா தமிழ் பேசுறயே எப்படி?" ஆச்சர்யமாய்க் கேட்டான் தனபால்.

"ஆந்திராக்காரன் தமிழ் பேசுறதுல என்ன ஸார் பெரிய ஆச்சர்யம். எண்ணூர், சூளூர்பேட்டை ஏரியாக்கள்ல தான் என்னோட சின்ன வயசுல இருந்தேன். பல ஊர் சுத்திட்டதால பல பாஷையும் பழக்கமாயிருச்சு..." சிரித்தபடி சொன்னான்.

"நான் எதுக்கு உன்னை வரச் சொன்னேன்னா எனக்காக நீ மறுக்காம ஒரு வேலை பண்ணனும். என்ன வேலைன்னு உனக்கே தெரியும். அதான் டாய்லெட் க்ளீன் பண்ற வேலை. நாளையிலருந்து பண்ணனும். செய்வியா? கொஞ்ச நாளைக்கு செய்; போதும். அப்புறம் மாற்று ஏற்பாட்டுக்கு வேற சைட்லருந்து ஆள் கிடைச்சதும் உன்னை நீ ரொம்ப ஆசைப்பட்ட கொத்தனார் வேலைக்கு மாத்தி விடுறேன்...." தயங்கித் தயங்கித் தான் தனபால் கேட்டான்.

கொத்தனார் வேலை பழகுபவனை ஒருபடி கீழே இறக்குவது தனபாலுக்கே கஷ்டமாகத்தான் இருந்தது. மாற்று ஏற்பாடு அது இது என்பதெல்லாம் இப்போதைய சமாளிப்பு தான் என்பதும் கடைசிவரை நரசய்யா கழிவறைகளைத்தான் கழுவிக் கொண்டிருக்க வேண்டுமென்பதும் மனசுக்குள் உறுத்தலாகத்தான் இருந்தது. கேட்டு விட்டு அவனின் பதிலுக்காக அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"பரவாயில்ல; செய்றேன் ஸார். நீங்க இவ்வளவு கேட்கும் போது மத்தவங்க மாதிரி செய்ய மாட்டேன்னு முரண்டு பிடிக்கவா முடியும்? செய்யின்னா செஞ்சாக வேண்டிய எளிய சாதிக்காரன்தான ஸார் நானு..." அவன் குரல் கம்மி கண்களில் கண்ணீர் பெருகியது. முப்பது வயதைக் கடந்த வாலிபன் செய்வதறியாமல் கண்ணீர் பெருக்குவதைப் பார்க்க மனம் பதைத்தது.

"நரசய்யா, என்னப்பா இது சின்னக் குழந்தை மாதிரி... உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். விட்டுரு. நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்....."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். நான் பிறந்த விதிய நெனச்சேன்: தானா கண்ணீர் பெருகிருச்சு. அவ்வளவு தான். எங்கள மாதிரி ஏழைகளோட கண்ணீருக்கு என்ன ஸார் மதிப்பிருக்கு? நானும் நான் பிறந்த சாதியிலருந்து - அதன் இழிவுகளிலிருந்து விலகிடனும்னு ஓடிஓடிப் பார்க்கிறேன். அது நிழல் மாதிரி துரத்திக்கிட்டு வருதே, என்ன தான் செய்யட்டும்! தலைமுறை தலைமுறையா சாக்கடையிலயும் மலத்துலயும் தான் பொரண்டுக்கிட்டு இருக்கிறோம். இதுக்கு விடிவே வர மாட்டேங்குது எங்களோட முப்பாட்டன், பாட்டன், தாத்தன் ஏன் எங்க அப்பன் முதற்கொண்டு எல்லோருமே பாதாளச் சாக்கடைய சுத்தம் பண்ணும்போது அந்த 'வாயு'ல சிக்கித்தான் செத்தொழிஞ்சாங்க. எங்க பெண்
மக்களும் மலத்த சுமந்துக்கிட்டு கக்கூஸ¤கள சுத்தப்படுத்திக்கிட்டுன்னு அதுலேதான் உழண்டுக்கிட்டு இருக்கிறாங்க. எப்படியாவது இந்த இழிவுலருந்து தப்பிச்சுக்கலாம்னு வேற எடத்துக்கு வேலை தேடி ஓடி வந்தா எனக்கு முன்னால என் சாதி இங்க வந்துடுது. பழையபடியும் அதே வேலையிலயே எங்களப் போட்டு அமுக்கிடுது.....

முதல்ல சவூதி அரேபியாவிற்கு தோட்ட வேலைக்கின்னு கூட்டிட்டுப் போனாங்க. கொஞ்ச நாள் தோட்ட வேலை ஒட்டகப் பராமரிப்புன்னு குடுத்தாங்க... அப்புறம் பண்ணையில இருக்கிற டாய்லெட்டுக்கள கழுவ விட்டுட்டாங்க. இங்க வந்தும் இந்த நாறப் பொழப்பு தானான்னு ரெண்டு வருஷக் கான்ட்ராக்ட் முடிஞ்சதும் போதும்னு ஊருக்கே திரும்பிப் போயிட்டேன். அப்புறந்தான் துபாய்ல கட்டட வேலைக்கின்னு இந்த கம்பெனிக்கு வந்து சேர்ந்து, உங்களுக்கே தெரியுமே - கொத்தனார் வேலையெல்லாம் கத்துக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள மறுபடியும் பழைய குருடி; கதவைத் திறடின்னு.... விடுங்க ஸார். இதுல நான் யாரை நோக முடியும் சொல்லுங்க....

என் சாதி அடையாளங்களை அறிந்திடாத இந்தியர்கள் யாரும் போயிருக்காத புனிதமான தீவு ஏதாவது இருந்தா அங்க, என் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு போய் குடியேறி வாழனும் ஸார்...பேராசை தான். நம்ம அப்துல்கலாம் சொன்னமாதிரி அது என்னோட கனவு. நிறைவேறுமான்னு பார்க்கலாம்.....ஆனா இப்போதைக்கு, முதல் தலைமுறையா என் தங்கச்சி ஒருத்தி நல்லாப் படிக்குறா. கல்வியாலயாவது எங்க சாதி இழிவுகள போக்க முடியாதாங்குற நப்பாசையில முழு மூச்சா அவளப் படிக்க வைக்கிறதுக்காகத் தான் ஓடி சம்பாரிச்சுக்கிட்டு இருக்கிறேன். திடுதிப்புன்னு வேலைய விட்டுட்டும் போகமுடியாது......." கண்ணீரைத் துடைத்தபடி சிரித்தான் அவன்.

"இதுக்காக ஏதோ ஒரு தீவை எல்லாம் நீ தேடிப் போகத் வேண்டிய தேவை இருக்காது நரசய்யா. காலம் ரொம்ப மாறீட்டு வருதுப்பா. இங்க நல்லா சம்பாதிச்சு நிறைய பணம் கொண்டு போய் இந்தியாவுல நிலம் வீடுன்னு வாங்கிப் போட்டு வாழத் தொடங்கும் போது நீ சொல்கிற இழிவுகளெல்லாம் தானா உதுந்துடும்; கவலைப்படாதே..."என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தான்.

ஆனாலும் தனபாலுக்கு மிகவும் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தது. நரசய்யாவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 'இந்த' வேலையிலிருந்து விடுவித்து விட வேண்டும் என்று மனசுக்குள் சங்கல்பம் செய்து கொண்டான். அதனால் அவனைப் பற்றி வரும் புகார்களையும் கண்டும் காணாதது மாதிரி இருந்து விடலானான். ஆனால் தொடர்ந்து வேலைக்கு வராமலிருப்பதை அப்படி எளிதில் விட்டுவிட முடியாது. மூன்று நாட்களுக்கு மேல் முன் அனுமதி பெறாமல் தொடர்ந்து வேலைக்கு வராமலிருந்தால் தலைமை அலுவலத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது இவனுடைய கடமை. அப்படித் தெரியப்படுத்தி விட்டால் நரசய்யாவின் வேலைக்கே அது பெரும் சிக்கலாகி விடலாம்.

அப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவனில்லை நரசய்யா. கடந்த எட்டு மாதத்தில் ஒருநாள் கூட அவன் விடுப்பே எடுத்ததில்லை. திடீரென்று அவனுக்கு என்னவாகி விட்டது. ஏன் இப்படி அவனே சிக்கலை உருவாக்குகிறான்? இப்படி ஏடாகூடமாய் ஏதாவது செய்தால் தான் அவனை இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையிலிருந்து விடுவிப்பேன் என்று எதிபார்க்கிறானா? தனபாலுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

நல்லவேளையாக மூன்றாம் நாள் மத்தியானத்துக்கு மேல் வேலைத்தளத்திற்கு வந்திருந்தான் நரசய்யா. வந்ததும் வராததுமாக தனபாலின் கேபினுக்குள் நுழைந்தான். அவன் பரபரப்பும் பதட்டமுமாய் மிகவும் சோர்ந்து களைப்புடன் கலைந்த நிலையில் காணப்பட்டான். அவனுக்கு தாங்க முடியாத அளவிற்கு ஏதோ பெரிய துக்கமோ இழப்போ ஏற்பட்டிருக்கிறது என்பது அவனுடைய தோற்றத்திலிருந்தே தெரிந்தது.

தனபால் அவனது இருக்கையிலிருந்து எழுந்து போய் ஆறுதலாய் அவன் தோளைத் தொட்டு "என்னாச்சு நரசய்யா......" என்றான். அதற்கு மேல் அடக்க முடியாது என்பது போல் வெடித்து அழத் தொடங்கி விட்டான். அவனால் நிற்கவே முடியாமல் அறையின் மூலையில் குறுகி உட்கார்ந்தபடி குலுங்கி அழத் தொடங்கினான். அவன் அழுது முடிக்கட்டுமென்று தனபாலும் அமைதியாகக் காத்திருந்தான்.

"நல்லா நாடகம் போடுறான் ஸார். மூணு நாள் சொல்லாமக் கொள்ளாம வேலைக்கு வராம இருந்ததுக்கு நீங்க ஆக்ஷன் எடுத்தாலும் எடுத்துருவீங்கன்னு அதைத் தடுக்கிறதுக்காக ஸிம்பத்தி க்ரியேட் பண்ணிக்கிட்டு இருக்கிறான். எல்லா லேபர்ஸ¤ம் வழக்கமாகப் பண்ற டிராமா தான். உஷாரா இருங்க ஸார். ஏமாந்துடாதீங்க..." குசுகுசுவென்று ஆங்கிலத்தில் தனபாலிடம் சொன்னான் அவனுடைய உதவியாளன் ஒருவன்.

"வாயைக் கொஞ்சம் மூடிட்டு பேசாம இருங்க. எல்லாத்தையும் கொச்சைப் படுத்தாதிங்க..." என்று தனபால் அவனிடம் எரிந்து விழவும் "அப்புறம் உங்க இஷ்டம் " என்றபடி உதவியாளன் எழுந்து போனான். கொஞ்சம் அழுகை குறைந்து விசும்பலினூடே "தலைமை ஆபிஸிலிருந்து என்னோட பாஸ்போர்ட்ட வாங்கிக் குடுங்க ஸார்.....நான் உடனே ஊருக்குப் போகனும்......."என்றான் நரசய்யா.

"அதுக்கென்னப்பா ஏற்பாடு பண்ணீடலாம்....என்ன விஷயமா ஊருக்குப் போகனும்னு சொல்லு. நான் எழுதி அனுப்பி வாங்கி தர்றேன்......"

"போச்சு ஸார்; எல்லாம் போச்சு. குடும்பமே அழிஞ்சு சின்னாபின்னமா ஆயிப் போச்சு. கொலைகாரப் பாவிங்க....சீரழிச்சுட்டாய்ங்க....ஐயோ நான் என்ன பண்ணுவேன்? இழிந்த சாதியில பொறந்தா காலமெல்லாம் மலமள்ளிக் கிட்டுத்தான் திரியனுமா? கௌரவமா வேற தொழில் பண்ணிப் பொழைக்கக் கூடாதா? என்ன கொடுமையான விதி ஸார் இது....." மறுபடியும் ஓவென்று தரையில் புரண்டு அழத் தொடங்கினான்.

"நீங்க கூடச் சொல்லி இருந்தீங்கள்ல ஸார்; நிலம், வீடுன்னு வாங்கி வசதியா வாழத் தொடங்கிட்டா நாங்க பொறந்த சாதி இழிவு எங்கள விட்டு உதுந்துடும்னு....உதிரலையே ஸார்; உயிரையில்ல காவு வாங்கிருச்சு.. சவூதீயிலயும் துபாயிலயும் உழைச்ச காசை குருவி சேர்க்குறாப்ல சேர்த்து வச்சு ஊர்ல ஒரு ரெண்டு ஏக்கரா விவசாய நெலம் வாங்குனோம்; விவசாயம் பண்ணப் போனப்ப ஊர்ல இருக்கிற உயர்ந்த சாதிக்காரங்க எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து வந்து மிரட்டி இருக்காங்க; ஊர் பஞ்சாயத்து அது இதுன்னு கூட்டி எங்க குடும்பத்தையே அசிங்கப்படுத்தி இருக்காங்க...

'நீங்க எல்லாம் விவசாயம் பார்க்கப் போயிட்டா தோட்டி வேலைய எவண்டா செய்றது? எங்க வீட்டு கக்கூஸ்கள் எல்லாம் நாறிக் கெடக்கனுமா....'ன்னு கேட்டிருக்காங்க. என் தங்கச்சி படிச்ச புள்ளயில்லையா? அந்த துடுக்குத்தனத்துல 'உன் பீய நீ தான் சுமக்கனும்; உன் நாத்தத்த நீ தான் கழுவனும் 'னு சொல்லி இருக்கு...இது பெரிய குத்தமா ஸார். அன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா அந்த உயர்சாதி மிருகப் பயல்கள் எங்க வீட்டுக்குள்ள புகுந்து....." பேச்சு வராமல் திணறினான். அருவி மாதிரி கண்ணீர் கொட்டியது.

தனபால் தண்ணீர் வரவழைத்துக் குடுத்தான். குடித்து விட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். "என் அக்கா, அம்மா, தங்கச்சி - பதிமூணு வயசு பச்ச மண்ணு ஸார் அது - மூணு பேரையும் மாறிமாறி பலாத்காரம் பண்ணி, தடுக்கப் போன எங்க அண்ணனையும் வெட்டிக் கொன்னுட்டு அப்படியும் ஆத்திரம் தீராம, நாலு பேத்தையும் துண்டு துண்டா வெட்டி நாங்க விவசாயம் பண்ண இருந்த நிலத்துல வீசிட்டுப் போய்ட்டாங்களாம் ஸார்..... இதை மறைஞ்சுருந்து பார்த்த ஒரே சாட்சியான என் பெரியப்பன கொலை வெறியோட அந்த கும்பல் தேடிக்கிட்டுத் திரியுதாம் இன்னும்....நான் போனாலும் என்னையும் வெட்டுனாலும் வெட்டுவாங்க. ஆனாலும் போய்த் தான் ஆகணும். தயவு பண்ணி என் பாஸ்போர்ட்ட வாங்கிக் குடுங்க ஸார்...."

நரசய்யா சொன்னதைக் கேட்டதும் தனபாலுக்கே தாங்க முடியவில்லை. இப்படியும் கொடுமை நடக்குமா என்று மனசு நடுங்கியது. உடனே தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகள் செய்து அவசரமாய் ஒரு கடிதம் தயாரித்து, நரசய்யாவிற்கு எமர்ஜென்சி லீவைப் பரிந்துரைத்து டிரைவரை அழைத்து தேவையான வழிமுறைகளைச் சொல்லி, அவனை ஏர்போட்டில் போய் பத்திரமாய் இறக்கி விட்டு வரும்படி பணித்தான்.

நரசய்யா கிளம்பிப் போனதும் தனபாலுக்குள் அந்தக் கேள்வி எழுந்தது - நரசய்யா இனி என்னவாவான்? அவன் குடும்பத்தினர்களை அழித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டணையை பெற்றுத் தர போராடுவானா அல்லது உயர்ஜாதி பண்ணையார்களைக் கொன்றொழிக்கும் நக்ஸலைட்டாக மாறுவானா? பதில் காலத்தின் கைகளில் பத்திரமாய் இருக்கிறது...








Back to top Go down
 
-- Tamil Story ~~ துரத்தும் நிழல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு
» == Tamil Story ~~ பு ற ப் பா டு
» ~~ Tamil story ~~ மிருகாதிபத்தியம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: