BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~Tamil Story ~~ யோகா   Button10

 

 ~~Tamil Story ~~ யோகா

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~Tamil Story ~~ யோகா   Empty
PostSubject: ~~Tamil Story ~~ யோகா    ~~Tamil Story ~~ யோகா   Icon_minitimeFri Apr 29, 2011 3:27 am

~~Tamil Story ~~ யோகா



யோகாவில் மூழ்கிக் கிடந்தேன். தவ நிலையை அடைந்து விட்டேன். மோன நிலையில் இருந்த என்னை நிஷ்டையில் இருந்து கலைக்க ஊர்வசிகள், ரம்பைகள் ஆட கண் விழித்தேன்” என்றெல்லாம் எழுத ஆசை தான். ஆனால் நடந்தது என்ன பாருங்கள்?

முதலில் நாற்பது வயதில் செய்யாததை மும்முரமாகச் செய்ய முற்பட்டதில் முதுகு பிடித்துக் கொண்டு “அய்யோ அம்மா!” என்று வலியில் மூழ்கிக் கிடந்தேன். பிறகு வலிக்கப் போகின்றதே என்று ஒரு புறம் ஒதுக்கி படுத்துக் கொண்டே தொலைக்காட்சி பார்க்க ரம்பா, ஊர்வசி சினிமாவில் வந்து முன்னால் “ஹோம் தியேட்டரில்” ஆடினாலும் தூக்கம் வந்து மோன நிலைக்குப் போய் விட்டேன்.

பிறகு சபித்துக் கொண்டே “கிழமாகப் போகும் வயதில் கால் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டே?” என்று மனைவி திட்டுவதைக் கேட்டுக் கொண்டே “திடுக்”கிட்டு கண் விழித்தேன்.

சுமார் நாற்பது வருடம் முன்னால் கணவரை “ஏக வசனத்தில்” திட்டும் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போதெல்லாம் அன்பு மிகுந்து விட்டதால் (மனைவியைப் பலர் “டார்சர்” பண்ணித் தொல்லைகள் புரிவதால்) “அறிவிருக்கிறதா செல்ல முண்டம்!” என்றளவில் வசனங்கள் வந்து விழுகின்றன.

எல்லாம் பரவாயில்லை “அன்பு தானே!” என்று துடைத்து விட்டு எழுந்திருக்க முயன்றால் “அம்மா!” என்று முதுகைப் பிடித்தபடி நொண்டினேன்.

மனைவிற்கு முன்னால் “அம்மா!” என்றூ சொன்னது தப்பு தான். அதனால் வலி நிவாரணம் தரும் மருந்து எனக்கு “லேட்டா”கக் கொடுக்கப்பட்டது என்பது எங்கள் வீட்டில் எனக்கு மட்டுமே அறிந்த ரகசியம். பிள்ளைகள் நான் “அவர்களின் அம்மாவைத்” தான் அழைத்ததாக எண்ணினார்கள்.

யோகா கற்றுத் தரும் கற்றுணர்ந்த குரு உடம்பு பிசகாமல் இருக்கத் தக்க உடற் பயிற்சிகளைக் கேட்க முடியாமல் தாமதாமாக வகுப்பிற்குப் போனேன். போனவுடன் அருகே நிறைய பெண்மணிகள் கவர்ச்சியாக உடை உடுத்திக் கொண்டு உடம்பைச் செவ்வனேயென்று பராமரிப்பதைப் பார்த்து உவகை கொண்டேன். ஆதனால் ஜம்பமாக எனக்கும் அவர்களைப் போல வில்லாக என் உடம்பை வளைக்க முடியுமென்று நினைத்து வளைத்தேன். அப்போது வளைந்த இந்தத் தமிழ் உடம்பு எழுந்திருக்கவே முடியவில்லை.

“அச்சமில்லை! அச்சமில்லை” என்று நெஞ்சை நிமிர்த்திப் பாட கூட என்னால் முடியாது. அச்சமாக உள்ளது.

“தலையை மட்டும் கீழே வைத்து அந்தரத்தில் இடுப்பைத் தூக்கி காலைச் செங்குத்தாகப் பிடியுங்கள்” என்றார் யோகா மாஸ்டர்.

(சும்மா படிப்பதற்காகத் தமிழில் எழுதினேன்! யோகா மாஸ்டர் கூறியது “ஹெட்டைப் ஃப்ளோரில் ரெஸ்ட் பண்ணி, ஹிப்பை ஹாண்ட்ஸ் வச்சு ஹோல்டு பண்ணி, லெக்ஸ் ஸ்டிரெயிடாக லிஃப்ட் பண்ணுங்கள்! கமான் லெட் ஸ் டூ தட்!” என்றார்.

”பண்ணி, வச்சு” போன்று சிலத் தமிழ் வார்த்தைகள் வைத்து பெரிய மனது வைத்துச் யோகாச் சொல்லிக் கொடுத்தது வியப்பாக இருந்தது!). அப்போது தான் கூடியிருந்த பெண்மணிகளுக்கும் புரிந்தது போலும்.

அவர்கள் பதிலும் மேலும் என்னை வியக்க வைத்தது.

“மாஸ்டர்! கரெக்டா?. ஐ தின்க் ஐ ஹாவ் அ பிராப்ளம்!” என்று சொல்ல, மாஸ்டரும் “நோ பிராப்ளம்” என்று விரைந்தார்.

“என் முதுகு ஒடிந்தது!” என்று தமிழில் அழைத்தால் வருவாரா என்றெண்ணியபடி “மாஸ்டர், மை பாக் புரோக்!” என்று “அரக் புறக்” என்று என் மதுரைத் தமிழில் கடித்தேன். அரைத்தேன்

எப்படி பார்த்தாலும் என் முதுகு ஒடிந்ததைக் காண முடியும்.

வலியில் மேலும் பண்ணலாமா? வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிருந்த வேளையில், “பண்ணினால் கிட்னிக்கு நல்லதாமே” என்றான் என் நண்பன்.

எனக்கு முதுகே இல்லை! அதற்கு கீழே இருக்கும் கிட்னியைப் பற்றி என்ன கவலை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்!

யோகா குரு, இப்போது சிரஸாஸனம் அதாவது “தலை கீழ் நில்!” என்று கட்டளையிட்டார்.

இதனால் தலையில் ரத்தம் பாய்ந்து உடம்பு “ஜிவ்”வென்றூ ஆகும் என்றார். மேலும் ரத்தக் கொதிப்பு, மூளை இருப்பவர்கள் இதைப் பண்ணக் கூடாதென்றும் சொன்னார்.

அவரைத் தவிர யாருமே பண்ண முயற்சிக்கவில்லை!

நானும் “தலை கீழ் நின்று பார்த்தேன்! முடியவில்லையே!” என்று கூறத் தான் ஆசை. நான் வணங்காமுடி என்று அம்மா கூறி என்னைச் சிறு வயது முதலே வளர்த்ததால் பண்ண முடியாமல் வெறுமனே உட்கார்ந்தேன்.

பக்கதிலே ஒரு குண்டானவர் தொப்பையை இருக்க கட்டிக் கொள்ளும் பனியனைப் போட்டுக் கொண்டு பெருத்த தொடையுடன் படுத்துக் கிடந்தார். பிறகு “ஹும்! ஹும்” என்று ஸ்பானீஷ் காளை போன்று உறுமி தன் அனைத்து தொந்தியையும் தன் இருபதுக் கைகளால் (இரண்டு கைகளால் தான்! ஆனால் அந்தப் பெரிய தொந்தியை நாம் தான் அனைவரும் சேர்ந்து தூக்க வேண்டும்!) சேர்த்துத் தூக்கி மூச்சை இழுத்துக் கொண்டு மேலே அந்தரத்தில் தூக்கினார். அவர் ஜட்டி தெரிந்து இது தான் என்று சொல்ல முடியாத ஒரு “ஜந்து” துள்ளி வெளியே பிதுங்கியது!

அதைப் பார்க்க கண் வேண்டுமென்று சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு அனைவரும் அதை பார்த்தும் பார்க்காததுமாய் இருந்தனர். வேறு ஒரு பெண்மணி சேலையைக் கட்டிக் கொண்டு யோகா கற்றுக் கொள்ள வந்திருந்தார். சேலையைக் கட்டிக் கொண்டால் அதற்கு ஒரு பயன் தான் என்னைப் பொறுத்த வரையில்.

ஆண்களைக் கவருவதற்கு மட்டும் தான் அது பயன்படும் என்பது என் நம்பிக்கை! ஒருவித ஆணதிகார “ஜொள்”ளதிகாரத் தனமென்று வைத்துக் கொள்ளுங்கள்!

ஆனால் அதனால் தனக்கு காலை வளைத்து, இடுப்பை வளைத்து யோகா பயில்வது இக்கட்டம் என்பது அப் பெண்மணிக்குத் தெரிந்து தெரியாமல் பயிற்சிப் பண்ணிக் கொண்டிருந்தார். மேற்கண்ட தொந்திக் கனவானைப் பார்க்காத பல கண்கள் அப்பெண்மணியின் “யோக வலிமையை” பார்க்க விழைந்தன என்பதைக் கூறவும் வேணுமோ?

இப்படியாக மனமும், கண்களும் அலபாய்வதைக் கண்ட குர்வாகப் பட்டவர் எங்களை மனப் பயிற்சி செய்விக்கலானார்.

அடுத்து, மூச்சையிழுத்து அடக்கி பிராணாயமம் செய்வதென்பது குரு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். மூக்கை அடக்கி இன்னொரு மூக்கால் மூச்சை இழு என்றார்.

உன் நுரையீரல் சுத்தப்படும்! உள்ளம் மெதுவே அடங்கும். உனக்குள்ளே தூங்கும் மிருகம் தூங்கும் என்றெல்லாம் சொல்ல “எந்த மிருகம்?” என்று எண்ணிப் பார்த்தேன்?.

பளீரென்று அடிக்கும் மிருகமா?. பெண்ணைத் துவண்ட நேரத்தில் மேலும் துவளச் செய்யும் உக்கிரமா? குழந்தைகளைப் பேச்சினால் கண்டிக்க வக்கில்லாமல், பளேரென்று கை பதிய கன்னத்தில் தாக்கும் மிருகத் தனமா?. பேருந்தில் இடித்தும், “சாரி!” என்று தவறுக்கு வருந்தாமல் “கண்டுக்காமல்” போகும் தனமா? எவன் போகிற பாதையோ என்று கருது “பிளீச்” என்று துப்பும் மனப்பான்மையா? ஒருவனையும் விட்டு விடாமல் “பைக்”கில் முந்தும் அதிவேக நாய்த் தன்மையா?

இதெல்லாம் இல்லை ஐய்யா! இல்லை! என்று விவேக் பாணியில் சட்டைக்குள்ளிருந்து ஒரு “பூனையை” எடுத்துக் காண்பித்து இது தான் என் மிருகம்” என்று காண்பிக்க ஆசைப்பட்டேன்.

அதற்குள் அனைவரும் மூக்கில் கைவைத்து மூக்கினை உறிஞ்சவே, கை ஈரமானது!

அந்த மூக்கில் ஜலடோஷத்தினால் அடைத்த மூக்கின் வழியே சளி உள்ளேயும் போகாமல், வெளியேயும் போகாமல் பிராணனே போகுமளவிற்கானது.

சனியன்! இப்படி இழுக்கும் போது ஆஸ்துமாகாரன் மாதிரி சத்தம் போடுதே என்று அக்கம் பக்கத்தில் பார்த்தேன். அனைவருக்கும் அவ்வாறே “ஞீ கீ” என்றும், “தஸ் புஸ்” ஸென்றும் இழுத்தது.

கொஞ்சம் பெருமை. மற்றவர்கள் மாதிரி தான் நான் மூச்சு விடுகின்றேன்! இது நாள் வரை நான் மற்றவர்கள் மாதிரி இல்லை என்று அகம்பாவம் கொண்டவனுக்கு இது புது மாதிரியாக இருந்தது.

காலை சப்பணம் பண்ண உட்காரச் சொன்னார், குரு! சப்பணம் பண்ணி உட்காராமல் கடந்த இருபது வருடங்களாய் கம்ப்யூட்டர் (கணிணி) முன்னால் நாற்காலியில் உட்கார்ந்த என் கால்களுக்கு பணிவு வர மறுத்தது. கடைசியாக சப்பணம் பண்ணிக் கலியாண விருந்து சாப்பிட்ட பிறகு உட்காரவே இல்லை. உட்கார்ந்தேன் கால்கள் மாட்டிக் கொண்டன. யாரும் பார்பதற்கு முன்னாள் எடுத்து விட வேண்டுமெறு அவசர அவசரமாய் பிரித்து எடுத்தேன்.

என் தலை முடி எடுக்கும் நாவிதர் சின்ன வயதில் தம்பி! உட்கார்! தலைய்க் குனி! இப்படி திருப்பு! என்று செல்லமாகச் சொன்னது ஞாபகத்தில் வந்தது. இந்த யோகா குரு அப்படியில்லாமல் “ஒழுங்காய் சப்பணம் போடு!” என்று மிரட்டினார்.

எனக்கு சிறு வயதில் பள்ளியில் அழுவதைப் போன்று அழுதேன்!!!.

என் உடம்பு பருத்திருந்ததால்

“குனிந்து முழங்காலைத் தொடு! தரையை தொடு!” என்றால் இடுப்பிற்குக் கீழே குனிய முடியவில்லை.

அதற்கே மூச்சு வாங்கியது.

“கழுத்தைத் திருப்பு மேலே பார்!” என்றால் மேலே நோக்கிய கழுத்து அப்படியே இருந்தது. கீழே திரும்ப இரண்டு நாட்களாகியது.

“புறம், சிரம், கரம் அனைத்தும் தரையைத் தொடவேண்டும்” என்றால் தொப்பை மட்டும் தரையைத் தொட அனைத்தும் அந்தரத்தில் வளைய வந்தது.

ஆனால் பக்கத்தில் சிலர் படும் கஷ்டங்களைக் கண்டால் மனது லேசாகி “ஜாலி”யாகிறது.

“அவனுக்கென்ன உடம்பில் சதை! அதான் குனிய முடியவில்லை! ரொம்ப தின்பான் போலிருக்கு!”

“இவள் சோம்பேறி! வேலை செய்யாமல் இப்போது பாரு பருமனாக இருக்கிறாள்!”

“அவன் (செய்) வினைப் பயல்! உடம்பு ஒல்லிக்குச்சான்! அதான் அப்படி நல்லா செய்றான்!”

“நல்லவேளை நம்மால் இந்த ஆசனம் பண்ணும் போது அவனை விட சற்று “தம்” பிடிக்க முடிகிறது. நமது கால், கை இப்போதெல்லாம் வளைந்து கொடுக்கிறதே!” என்று தம்பட்டம் கூட அடித்துக் கொள்ள முடிகிறது!

சர்வாங்காசனம் (“சர்வ அங்கத்தினையும்” உடம்பைத் தூக்கி இடுப்பைக் கையில் தாங்கி) பண்ணும் போது நான் மிகவும் கஷ்டப்படும் போது அருகில் இருந்த ஒல்லிக்குச்சான் வந்து உதவி பண்ணி “மெதுவா! அப்படி தான் இருக்கும்! போகப் போக சரியாப் போயிடும்!” என்றார்.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்.

அதை விட பருமனான மனிதர் வந்து என்னவெல்லாம் சாப்பிட்டால், எப்படி இளைக்கலாம் என்று “டிப்ஸ்” வேறு கொடுத்தார்!

இவர் ”சிப்ஸ்” சாப்பிட்டு விட்டு “சியர்ஸ்” சொல்லிவிட்டு, என்னை இளைக்கச் சொன்னால் எனக்கு கோபம் வராதா? நானே என் மனைவி போடும் இலை, மற்றும் தழைகளை உண்டு வாழும் “பசுவாக” இருப்பவன். கொஞ்சம் “மடி” கனம். அவ்வளவு தான்!

பக்கத்தில் ஒரு சிறுமி உடம்பு லாகவமாக வளைந்து முதுகு வளைத்து தன் கால்களைப் முதுகின் பின்னால் இருந்த தரையில் படுத்த நிலையில் தொட்டாள். எழுதும்போதே இவ்வளவு கடினமாக இருந்த ஒரு பயிற்சியை எழுதில் செய்தாள்.

அதைப் பண்ண முயற்சி செய்து அப்படியே கழுத்தில் உடம்பை வைத்து தலை கீழாக முயர்சி செய்தேன். என் முயற்சியில் “மண்ணைக் கவ்வினேன்!”. “மளுக்” கென்று ஏதோ முறிந்த சப்தம் கேட்டது என்று பயந்தேன். ஆனால் சிறுமி தான் “அப்படி ‘களுக்’ கென்று சிரித்திரிக்கிறாள்.

நமக்கெங்கே அப்படி வளைகிறது?

ஐந்தில் விளையாதது (வளையாதது!) ஐம்பதில் (வி) வளையுமா?

உட்கார்ந்து சாப்பிடுவதைத் தவிர வேறு எதுவும் நம்மால் முடியாது போலிருக்கிறதே என்று நொந்த என்னைக் காப்பாற்ற வந்த தெய்வமாய் வந்தது “சாவாசனம்!”.

படுத்துக் கொண்டு கை கால்களை விரித்து கண்களை மூடுவதாம்! ஒவ்வொரு மனக் கதவுகளாய் மூட, பிணம் போன்று கிடந்து மீண்டும் துயில் எழ வேண்டும்.

தூங்குவதற்குத் தாண் நமக்குப் பிடிக்குமே! விளக்குகளை அணைத்தவுடன் கண்களை மூடி மனக் கதவுகள் மூட முயற்சித்தேன். ஒரு கதவு மூடினால் எதிர் வீட்டுக் கதவு திறந்து கொண்டு மின்னலென எதிர்படும் யெளவன மங்கை கண் முன்னால் வந்து போனாள். அந்தக் கதவை மூடி வேறு கதவைத் திறந்தால் மற்றொரு மங்கை! சரி! ஆண்முகமாக இருக்கட்டும் என்றால் எனக்குப் பிடிக்காத என் அலுவுலகத் தலைவர்! பாஸ்! என்ரு வெறுத்து ஓங்கிச் சாத்தினால், கோபத்துடன் என் மனைவி! சரி!

அனைவரையும் விட்டு ஓட வேண்டும் என்று அனைத்தையும் மூடினால் மீண்டும் முதுகு வலியைப் பற்றி பிரஞை!!! அப்பாடி! இப்படியெல்லாம் தூங்கவும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்!

வகுப்பு முடிந்தது.

“எனக்கு வலிக்கின்றது ஐயா!” என்றேன் குருவிடம்.

“தினந்தோறும் பண்ணி வா! நிறைய ஸ்ட்ரெட்ச் பண்ணு. உடலுக்கு, குடலிற்கு, கிட்னிக்கு நல்லது!” என்றார்.

கையில் ஒரு பீர் பாட்டிலோ ஒரு வைன் பாட்டிலோ இருக்கட்டும்!

குடலிற்கு, மனதிற்கு, கிட்னிக்கு நல்லது.

அப்புறம் படுத்தவாறு தூங்கி காலை சோபாவின் மேல் போட்டு சரிந்து அகமும், புறமும் ஒரு படத்தில் ஒடுங்கி மயங்கிக் கிடப்பது தான் என்னைப் பொறுத்த வரையில் “சர்வாங்காசனம்!”.

அதுவே என்னைப் பொறுத்த வரையில் யோகா!







Back to top Go down
 
~~Tamil Story ~~ யோகா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ எனக்குப்பின்தான் நீ
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
» ~~ Tamil Story ~~ மரு
» == Tamil Story ~~ பு ற ப் பா டு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: