~~ Tamil Story ~~ கண்ணாடிச் சுவர்கள்
கண்ணாடி மாட்டியதும் முதலில் ஒரு மாதிரி இருந்தது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் போட்டிருந்தால் நெற்றிப் பொட்டுகள் வலிக்க ஆரம்பித்தன. மூக்கில் கண்ணாடி அமர்ந்திருந்த இடம் உறுத்தியது. கண்களை ஏதோ ஒரு கூண்டிற்குள் போட்டு அடைத்த மாதிரி. கண்கள் அதிலிருந்து விடுதலையடையப் போராடுவது போல இமைகள் படபடத்தன. கண்களோடு நெருக்கமாகக் கண்ணாடி இருந்ததால் இமைகளின் மீது உரசியது. அந்நியப் பொருள் மீது உராய்ந்த இமைகள் அலறின. அவைகளின் அலறல் தாளாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. துடைக்கத் துடைக்க வழிந்து கொண்டேயிருந்தது. அவனாலும் பொறுக்க முடியவில்லை. உடம்பின் அசைவுகளே இந்தக் கண்ணாடியால் கட்டுப்பட்டது போல ஆகிவிட்டது. சுதந்திரமாய் கைகளால் முகத்தைத் துடைக்கவோ, கண்களைத் துடைக்கவோ, மூக்கைச் சிந்தவோ, தலையை உதறவோ, முடியவில்லை. கண்ணாடியின் இருப்பு மற்ற எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டிருந்தது.
வீட்டின் நீள அகலங்களும், சுவர்களின் நிறமும் கூட கண்ணாடியால் கணக்குத் தப்பியது. இதற்குமுன் வெறும் கண்களால் பார்த்தபோது, இருந்த நெருக்கம் இப்போது இல்லை. ஏதோ ஒரு அந்நியத்தனம் எல்லாவற்றிலும் ஒளிர்ந்தது. உருப்பெருக்கிக் கண்ணாடியை கண்களில் மாட்டிக் கொண்டு திரிவது போல. ஈ, எறும்பு, தூசி, துரும்பு எல்லாம் இவ்வளவு பெரிதாகவா தெரியும். இப்போது அவனைச் சந்தேகம் கடிக்க ஆரம்பித்தது. இத்தனை நாள் தான் பார்த்தது உலகமா? இப்போது தெரிகிறதே இது தான் உலகமா? மனைவி, குழந்தைகள் எல்லோரும் வித்தியாசமாய் தெரிந்தார்கள். இன்னும் சில விஷயங்களை வெளியில் சொல்லக்கூட முடியாது. உள்ளது உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடியோ. அவன் குழப்பத்தின் பிடியில் சிக்கி நெறிந்து கொண்டிருந்தான்.
குழந்தைகள் ஒரே குரலில், அவனிடம் “யெப்பா... கண்ணாடி ஒனக்கு நல்லாவே இல்லப்பா... சர்க்கஸ் கோமாளி மாதிரி இருக்கு...” என்று ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரத்தின் ஆழத்தில், அவன் கண்ணாடியைக் கழட்டிப் புதைத்து விடலாம் என்று நினைத்தான். ஆனால் அவ்வளவு எளிதாகக் கண்ணாடியை கழட்டி எறியமுடியாதே.
அவன் கூட இந்தக் கண்ணாடியினால் தன் வாழ்க்கையை மாறிப்போகும் என்றா நினைத்தான். முதலில் கண்வலி கட்டியம் கூறியது. புத்தகமோ, செய்தித்தாளோ வாசிக்க முடியவில்லை. புத்தகத்தை விரித்தால் எழுத்துகள் அலையலையாய் வந்து அவன் மீது மோதின. அவன் விழுந்து எழுந்து நீந்திப் பார்த்தான். கண்கள் சோர்வுறும் ஒரு கணத்தில் திடீரென ஒரு பேரலை புறப்பட்டு வந்து அவனை அடித்து வீழ்த்தி கரையில் கொண்டு போட்டது. அருகில், கொஞ்ச தூரத்தில், ரொம்ப தூரத்தில் என்று புத்தகத்திற்கும் அவனுக்குமான இடைவெளியை அதிகமாக்கி சிரமத்துடன் படகோட்டிப் பார்த்தான். படகு கவிழ்ந்து நீரின் ஆழத்திற்குப் போய்க் கொண்டேயிருந்தான். கண்களைத் திறந்தால் இருட்டு. மரண இருட்டு. கடலின் இரைச்சல் மட்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. எழுத்துகள் ஒலிகளாய் மாறிப் புயற்காற்றாய் சுழன்றடித்தது. அவனால் தாங்க முடியவில்லை. இனியும் சும்மா இருந்தால் அவன் வாழ்க்கை அவ்வளவுதான்.
அவன் கண்மருத்துவரைப் போய்ப் பார்த்தான். அவர் ஏதேதோ பரிசோதனைகளுக்குப் பின் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்தார். பின்னர் இந்தக் கண்ணாடியை மாட்டிவிட்டார். வெளிநாட்டிலிருந்து இந்த மாதிரி நோய்க்கென்றே பிரத்யேகமாய் தயாரிக்கப்பட்டது என்றும் சொன்னார். தோள்வரை தொங்கும் தலைமுடியும், குறுந்தாடியும் பச்சைநிறக் கண்களும் கொண்ட அவர், அவனுக்கு யேசுவைப் போல காட்சியளித்தார். அவன் “ஓ...ஜீசஸ்...” என்று முணுமுணுத்தான். அவர் அவன் முகத்தைப்பார்த்து,
“என்ன சொல்லுங்க.. எதாச்சும் சந்தேகம் இருந்தா கேளுங்க...”
“இல்ல சார்... எங்க குலதெய்வம் கருப்பசாமியை நெனச்சுகிட்டேன்...”
“கவலைப்படாதீங்க.. எல்லோருக்கும் நாற்பது வயசில வரக்கூடிய நோய்தான்... எல்லாம் குழம்பித் தெரியும்... எது உண்மை எது மாயை என்று புரியாது... எங்கிட்டே வந்திட்டீங்கல்ல... இனிமே கவலையே வேண்டாம்...” என்று ஆறுதல் சொன்னார். ஆனால் அதில் ஏதோ ஒரு சூது உட்கார்ந்து கொண்டு அவனைப் பார்த்துக் கள்ளச் சிரிப்பு சிரித்தது.
அவ்வப்போது கண்ணாடியைக் கழட்டி விடலாம் என்ற நினைப்பு முண்டியடித்தது. தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம் என்று கூட நினைத்தான். ஆனால் தேவைப்படும் நேரங்களும், தேவைப்படாத நேரங்களும் தமக்குள் மாறிக் கலந்து செம்புலப்பெயல் நீராகிவிட்டது. அதுமட்டுமல்ல கழட்டி கழட்டி மாட்டுவதில் கண்ணாடி தொலைந்து விடும் அபாயத்தை மனைவி இரவு பனிரெண்டு மணிக்குக் கூவித் தெரிவித்தாள். சட்டைப்பைக்குள்ளே போடலாம் என்றால் நல்ல நாளிலேயே வாசல், கதவு, மேஜை நிலை, பஸ் கம்பி என்ற கணபரிமாணங்களின் கணக்குத் தவறினால், அடிக்கடி கைக்கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து கொண்டிருக்கிறது. இது வேறு சேர்ந்து அவனை முழுக்கோமாளியாக்கிவிடும் ஆபத்து எப்போதும் காத்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். கண்ணாடிக் கூடைப் பயன்படுத்தலாமே என்ற நண்பரின் யோசனையும் கூடைத்திறந்து, திறந்து எடுத்து அணிந்து கழட்டி வைக்கிற அவகாசம் உடைய வேலை இல்லை என்ற அம்பில் பட்டு வீழ்ந்தது. இப்படி யோசித்து, யோசித்து கைவிட்ட யோசனைகள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மியடிக்க, அவன் கண்ணாடியைக் கழட்டி வைக்கவே வேண்டாம் என்ற முடிவை நோக்கி பயணம் செய்தான்.
ஆரம்பத்தில் எந்தப் பிரச்சனைகளும் இல்லையென்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஏன் அவனும் கூடத்தான். ஆனால் அந்த நினைப்பின் வழியே ஊர்ந்த எட்டுக்கால் பூச்சியொன்று அவன் முகத்தில் வலை பின்னிவிட்டது. அந்த வலைக்குள் புதியபுதிய காட்சிகளும், படிமங்களும் வந்து வீழ்ந்தன. அதை நினைத்து பெருமைப்பட்டான். கழட்டாத கண்ணாடி வழியே இதுவரை அவன் பார்த்திராத அழகும், அபூர்வமும், குரூரமும், பயங்கரமும் தெரிந்தன. அறிவின் பாதைகளில் அடைத்துக் கிடந்த இருள் கண்ணாடியின் ஒளியில் பாகாய்க் கரைந்தன. பாதை தெரியத் தெரிய மனம் பெருமிதங்கொள்ள ஆரம்பித்தது. அந்த உணர்வின் அலைகள் தாலாட்டு போல அவனை உறங்கவைத்தன. அந்த உறக்கத்தின் விளிம்பில், அவன் கடந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் தரிசித்தான். கிடைத்தரிதான அந்தத் தரிசனத்தின் விளைவாக, சதாவும் அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றிக் கொண்டேயிருந்தது. அந்தப் புன்னகை ஏராயமான விளக்கங்களை அள்ளித் தெளித்தபடியிருக்க அவரவரும் அவரவருக்கேற்றபடி அவற்றைப் புரிந்து கொண்டனர். அதனால், நண்பர்களும், விரோதிகளும் அதிகமாயினர் அவனுக்கு. உறங்கும்போதுகூட கழட்டாத கண்ணாடி முகத்தை மனைவியும் வெறுத்தாள். அருகில் நெருங்கவோ முத்தமிடவோ மாட்டேன் என்று சபதம் செய்தாள். அவன் அந்தச் சபதத்தை உடைக்க கண்ணாடியைக் கழட்டிப் பார்த்தான். கண்கள் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டன. குருட்டு இருளின் குரூரம் தாங்க முடியாமல் கண்ணாடியை மாட்டினான். உடனே ஒளி பிறந்தது. கண்கள் கண்ணாடியாகவோ, கண்ணாடி கண்களாகவோ மாறி விட்டதால் இனி எதுவும் செய்வதற்கில்லை என்றுமனைவியிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தான். அவள் தொடர்ந்து பிடிவாதமாய் இருக்கவே, அவன் அவளுடைய பிடிவாதச் சுவற்றைத் தாண்டிக் குதித்து தனியே படுத்துறங்க ஆரம்பித்தான்.
குளிக்கும்போதும், முகம் கழுவும் போதும், சாப்பிடும்போதும், உறங்கும்போதும் கழட்டாத கண்ணாடி அவன் முகத்துடன் ஒட்டி, உடலின் மற்றொரு உறுப்பாய் மாறத் தொடங்கிவிட்டது. அதற்கு உள்ளேயும் ரத்த ஓட்டமும், நாடித்துடிப்பும் கேட்டது. செல்கள் பிறந்தன. வளர்ந்தன. இறந்தன. அவனுக்கு இப்போது கொஞ்சங்கூட தொந்தரவே யில்லை. ஆனால் என்ன? கண்ணாடியுடன் கூடிய அவன் முகம் கற்சிலை போல ஆகிவிட்டது.
நாளாக, நாளாக கண்ணாடிக்குள்ளும் முதுமையின் வரிகள் ஓடித்திரிந்தன. கொஞ்சம் கொஞ்சமாக, நரை திரை மூப்பு கவிய கண்ணாடியின் தெளிவு குறைந்தது. காட்சிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி நின்று கெக்கலி கொட்டின. வண்ணங்கள் குழம்பின. வாழ்க்கையே வெறுத்துப்போனது. விரக்தி தன் அஸ்திவாரக் குழியைத் தோண்டிக் கொண்டிருந்தது. அவனுக்குப் புரியவில்லை. வாழ்க்கையில் அவன் சேமித்து வைத்திருந்த ஏராளமான புரியவில்லைகளுடன் இதையும் சேர்த்துவிட்டான். ஆனால் விரைவாகக் குறைந்து கொண்டே வந்த ஒளியின் தெளிவு உலகை மங்கலாக்கி விட, மீண்டும் இருள் பள்ளத்தாக்குக்குள் விழுந்து விடுமோ என்று பயந்தான். பயத்தின் மீது ஊர்ந்த தேள்களின் கொடுக்குகளில் மீண்டும் பொருட்களின் கனபரிமாணங்கள் மாறிக்கொண்டேயிருந்தன. யதார்த்தம் புதிய புதிய பரிமாணத் திசைகளின் வழியே தன் எல்லையற்ற வேர்களை விரித்தபடி பயணித்தது. அவனும் அதில் சிக்கி உள்ளும் வெளியும் இழுபட்டான்.
அடிக்கடி இப்போது முகத்தோடு ஒட்டிய கண்ணாடியைத் துடைத்துப் பார்த்தான். ஒன்றும் அற்புதம் நிகழவில்லை. மீண்டும் கண்மருத்துவரைத் தேடிப்போனான். பழைய மருத்துவர் இல்லை. இப்போது புதியவர் இருந்தார். சாதாரண உடையில், கிராமப்புறத் தோற்றத்தில் இருந்தார். அவன் அவனுடைய பிரச்னையைச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டபிறகு, “பிரச்னை கண்ணாடியில் இல்லை. உங்களிடம்தான் இருக்கிறது. கண்களை கண்ணாடியிடம் ஒப்படைத்து விட்டதுதான் காரணம். கண்களுக்குத் தான் கண்ணாடி. கண்ணாடிக்கு அல்ல கண்கள்... கிராமத்திற்குச் சென்று பாருங்கள்.... வாழ்வின் உண்மையான அழகைக் காண்பீர்கள்....” என்று சொன்னார். பின்னர் அவனை உட்காரவைத்து உளியை வைத்து கண்களோடு இறுகிப்போன கண்ணாடியை சிறிது சிறிதாகப் பெயர்த்தெடுத்தார். எடுக்கவே முடியாத சில பகுதிகளை முகத்தோடு விட்டுவிட்டார். கண்ணாடிக்கும் கண்களுக்கும் இடையில் அடைசேர்ந்திருந்த பாசியை, சகதியை சுரண்டி அள்ளி வீசினார். முகத்தைக் கழுவி நன்றாகச் சுத்தம் செய்தபின் அவனைக் கண்களைத் திறக்கச் சொன்னார். அவன் முதன்முறையாகக் கண்களைத் திறந்தான்.