BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. கடம்பூர் மாளிகை  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. கடம்பூர் மாளிகை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. கடம்பூர் மாளிகை  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. கடம்பூர் மாளிகை    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. கடம்பூர் மாளிகை  Icon_minitimeFri May 06, 2011 7:59 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

4. கடம்பூர் மாளிகை



இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது. ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.

கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்ன வென்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் ஆவலும் ஒரு பக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல்பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது.

தயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்டுக்கொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம்! குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலுபேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான்.

வல்லவரையன் முகத்தில் கோபம் கொதிக்க, "இதுதான் உங்கள் ஊர் வழக்கமா? வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது...?" என்றான்.

"நீ யார் தம்பி இவ்வளவு துடுக்காகப் பேசுகிறாய்? எந்த ஊர்?" என்றான் வாசற் காவலன்.

"என் ஊரும் பேருமா கேட்கிறாய்? வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள்! என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்! தெரிந்ததா?" என்றான்.

"இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரனையும் கூட அழைத்து வருவதுதானே?" என்றான் காவலர்களில் ஒருவன். இதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்தார்கள்.

"நீ யாராயிருந்தாலும் இனி உள்ளே போக முடியாது! இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை!" என்றான் காவலர் தலைவன்.

ஏதோ வாக்குவாதம் நடக்கிறதைப் பார்த்துக் கோட்டைக்குள்ளே சற்று தூரத்தில் நின்ற சில வீரர்கள் அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன், "அடே! நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா!" என்றான்.

"இன்னொருவன் கழுதை என்று சொல்லடா" என்றான்.

"கழுதைமேல் உட்கார்ந்திருக்கிறவன் என்ன விறைப்பாக உட்கார்ந்திருக்கிறான் பாரடா!" என்றான் மற்றொருவன்.

வல்லவரையன் காதில் இந்தச் சொற்கள் விழுந்தன.

அவன் மனதிற்குள், "என்னத்திற்கு வீண் வம்பு? திரும்பிப் போய் விடலாமா? அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா?" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக் கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா? இப்படி அவன் மனத்திற்குள் விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் பழுவேட்டரையர் ஆட்களின் கேலிப் பேச்சு அவன் காதில் விழுந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான்.

"குதிரையை விடுங்கள்; திரும்பிப் போகிறேன்!" என்றான்.

தடுத்த வீரர்கள் குதிரையின் முகக்கயிற்றை விட்டார்கள்.

குதிரையின் அடிவயிற்றில் வந்தியத்தேவன் தன் இரு கால்களினாலும் ஒரு அழுத்து அழுத்தினான். அதே நேரத்தில் உடைவாளை உறையிலிருந்து உருவி எடுத்தான். மின்னல் ஒளியுடன் கண்ணைப் பறித்த அந்த வாள் சுழன்ற வேகத்தினால் அவனுடைய கையில் திருமாலின் சக்கராயுதத்தை வைத்துக் கொண்டு சுழற்றுவது போல் தோன்றியது. குதிரை முன்னோக்கிக் கோட்டைக்குள்ளே பாய்ந்து சென்றது. வழியிலிருந்த வீரர்கள் திடீர் திடீரென்று கீழே விழுந்தார்கள். வேல்கள் சடசடவென்று அடித்துக்கொண்டு விழுந்தன. வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. இந்த மின்னல் தாக்குதலைச் சிறிதும் எதிர்பாராத வீரர்கள் நாற்புறமும் சிதறிச் சென்றார்கள்.

இதற்குள் வேறு பல காரியங்கள் நிகழ்ந்து விட்டன. கோட்டைக் கதவுகள் தடால் என்று சாத்தப்பட்டன. "பிடி! பிடி!" என்ற கூக்குரல்கள் எழுந்தன. வேல்களும் வாள்களும் உராய்ந்து 'கிளாங்' 'கிளாங்' என்று ஒலித்தன. திடீரென்று அபாயம் அறிவிக்கும் முரசு 'டடம்!' 'டடம்!' என்று முழங்கிற்று.

வந்தியத்தேவன் குதிரையைச் சுற்றிலும் வீரர்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். இருபது, முப்பது, ஐம்பது பேருக்கு மேலேயே இருக்கும். குதிரையின் மேலிருந்த வந்தியத்தேவன் பாய்ந்து தரையில் குதித்தான். கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, "கந்தமாறா! கந்தமாறா! உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்!" என்று கத்தினான்.

இந்தக் கத்தலைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.

அச்சமயம் மாளிகையின் மேல் மாட முகப்பிலிருந்து, "அங்கே என்ன கூச்சல்? நிறுத்துங்கள்!" என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்திலிருந்து ஏழெட்டுப் பேர் நின்று கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"எஜமான்! யாரோ ஒரு ஆள் காவலை மீறிப் புகுந்து விட்டான். சின்ன எஜமான் பெயரைச் சொல்லிக் கூவுகிறான்!" என்று கீழேயிருந்த ஒருவன் சொன்னான்.

"கந்தமாறா! நீ போய்க் கலவரம் என்னவென்று பார்!" - இவ்விதம் மேல் மாடத்திலிருந்து அதே இடிமுழக்கக் குரல் சொல்லிற்று. அந்தக் குரலுக்கு உடையவர்தான் செங்கண்ணர் சம்புவரையர் போலும் என்று வந்தியத்தேவன் எண்ணினான்.

அவனும் அவனைச் சுற்றி நின்ற வீரர்களும் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள்.

"இங்கே என்ன ஆர்ப்பாட்டம்?" என்ற ஒரு இளங்குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் நின்றவர்கள் விலகிக் கொண்டு வழி ஏற்படுத்தினார்கள். வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். கையில் பிடித்த கத்தியை இலேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல் நின்ற வந்தியத்தேவனை ஒருகணம் வியப்புடன் நோக்கினான்.

"வல்லவா! என் அருமை நண்ப! உண்மையாகவே நீதானா?" என்று உணர்ச்சி ததும்பக் கூவிக்கொண்டு ஓடிச் சென்று வல்லவரையனை அந்த இளைஞன் கட்டித் தழுவிக் கொண்டான்.

"கந்தமாறா! நீ படித்துப் படித்துப் பல தடவை சொன்னாயே என்று உன் வீட்டுக்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இத்தகைய வீர வரவேற்புக் கிடைத்தது" என்று வந்தியத்தேவன் தன்னைச் சுற்றி நின்றவர்களைச் சுட்டிக் காட்டினான்.

அவர்களைப் பார்த்து "சீ! முட்டாள்களே! போங்களடா! உங்கள் அறிவு உலக்கைக் கொழுந்துதான்!" என்றான் கந்தமாறன்.

* * * * *

கந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போனான். அவனுடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்டு ஒரு நண்பன் கிடைத்தால் அதைக்காட்டிலும் ஒருவனைப் பரவசப்படுத்தக் கூடியது வேறு என்ன உண்டு? காதல் என்பது ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காதலில் இன்பமும் குதூகலமும் எத்தனை உண்டோ அதைவிட அதிகமாக துன்பமும் வேதனையும் உண்டு. யௌவனத்துச் சிநேக குதூகலத்திலோ துன்பத்தின் நிழல் கூட விழுவதில்லை. ஒரே ஆனந்தமயமான இதயப் பரவசந்தான்.

போகிற போக்கில், வல்லவரையன், "கந்தமாறா! இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது? இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக?" என்றான்.

"இன்றைக்கு இங்கே என்ன விசேஷம் என்பதைப் பற்றி அப்புறம் விவரமாகச் சொல்கிறேன். நீயும் நானும் பெண்ணையாற்றங்கரைப் பாசறையில் தங்கியிருந்த போது, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்; மழவரையரைப் பார்க்கவேண்டும்; அவரைப் பார்க்கவேண்டும்; இவரைப் பார்க்க வேண்டும்; என்று சொல்வாயே? அந்த அவர், இவர், சுவர் - எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே நீ பார்த்துவிடலாம்!" என்றான் கந்தமாறன்.

பிறகு விருந்தாளிகள் அமர்ந்திருந்த மாளிகை மேல் மாடத்துக்கு வல்லவரையனைக் கந்தமாறன் அழைத்துச் சென்றான். முதலில் தன் தந்தையாகிய சம்புவரையரிடம் கொண்டுபோய் நிறுத்தி, "அப்பா! என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவனைப் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேனே? அவன் இவன் தான்!" என்றான். வந்தியத்தேவன் பெரியவரைக் கும்பிட்டு வணங்கினான். அதைக் குறித்து சம்புவரையர் அவ்வளவாக மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றவில்லை.

"அப்படியா? கீழே அரண்மனை வாசலில் அவ்வளவு கலவரம் செய்தவன் இவன் தானா?" என்று கேட்டார்.

"கலவரத்துக்குக் காரணம் என் தோழன் அல்ல; வாசல் காப்பதற்கு நாம் அமர்த்தியிருக்கும் மூடர்கள்!" என்றான் கந்தமாறவேள்.

"இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருட்டி அரை ஜாமத்திற்குப் பிறகு, இவன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை!" என்றார் சம்புவரையர்.

கந்தமாறவேளின் முகம் சுருங்கிற்று. மேலும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அப்பால் அழைத்துச் சென்றான். வந்திருந்த விருந்தாளிகளுக்கு மத்தியில் நடுநாயகமாக ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த பழுவேட்டரையரிடம் அழைத்துப் போய், "மாமா! இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன். வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா?' என்று கேட்டுக் கொண்டிருப்பான். 'ஒரு நாள் நீயே எண்ணிப் பார்த்துக் கொள்' என்று நான் சொல்லுவேன்" என்றான்.

பழுவேட்டரையர் சுருங்கிய முகத்துடன், "அப்படியா, தம்பி! நீயே எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ? அவ்வளவு அவநம்பிக்கையா உனக்கு? 'வாணர் குலத்தைக் காட்டிலும் வேறு குலத்தில் வீரம் இருக்க முடியுமா?' என்ற சந்தேகமோ?" என்றார்.

தோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். தோத்திரமாகச் சொன்னதை இப்படி இவர் குதர்க்கமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

வந்தியத்தேவனுடைய மனத்தில் எரிச்சல் குமுறியது. ஆயினும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், "ஐயா! பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரிமுனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார்?" என்று பணிவுடன் சொன்னான்.

"நல்ல மறுமொழி; கெட்டிக்காரப் பிள்ளை!" என்றார் பழுவேட்டரையர்.

இந்தமட்டில் பிழைத்தோம் என்று வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். அப்போது சம்புவரையர் தமது மகனை அழைத்துக் காதோடு, "உன் தோழனுக்குச் சீக்கிரம் உணவு அளித்து எங்கேயாவது ஒரு தனி இடத்தில் படுக்கச் சொல்லு! நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருக்கிறான்" என்றார்.

பிறகு கந்தமாறன் வந்தியத்தேவனை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே பெண்கள் பலர் இருந்தார்கள். மாறவேளின் அன்னைக்கு வந்தியத்தேவன் நமஸ்காரம் செய்தான். அவளுக்கு பின்னால் கூச்சத்துடன் மறைந்திருக்கும் பெண்தான் கந்தமாறனின் சகோதரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.

'தங்கச்சி'யைப் பற்றி மாறவேள் பல தடவை சொன்னதில் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருந்தான் வந்தியத்தேவன். இப்போது ஒருவாறு ஏமாற்றமே அடைந்தான்.

அந்தப் பெண்களின் கூட்டத்திலே பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த மாது யாராக இருக்கலாம் என்பதை அறிய வந்தியத்தேவனுடைய கண்கள் தேடி அலைந்தன.












Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. கடம்பூர் மாளிகை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 40. இருள் மாளிகை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: