BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. திரை சலசலத்தது!   Button10

 

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. திரை சலசலத்தது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. திரை சலசலத்தது!   Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. திரை சலசலத்தது!      ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. திரை சலசலத்தது!   Icon_minitimeFri May 06, 2011 10:18 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

21. திரை சலசலத்தது!




ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.

சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள் மடைகளின் வழியாக வாய்க்கால்களிலும் வயல்களிலும் குபுகுபுவென்று ஜலம் பாய்ந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாயிருந்தது. சோழ தேசத்தை 'வளநாடு' என்றும் சோழ மன்னனை 'வளவன்' என்றும் கூறுவது எவ்வளவு பொருத்தமானது? - இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் அவன் நினைவுக்கு வந்தன. இந்த நிலைமையில் தன்னுடைய கடமை என்ன? இளவரசர் கரிகாலர் கொடுத்த ஓலையை மட்டும் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பித்து விட்டுத் தன் கடமை தீர்ந்தது என்று இருந்துவிடுவதா? இந்த இராஜகுலத் தாயாதிக் காய்ச்சலிலும் பூசலிலும் நாம் எதற்காகத் தலையிட்டுக்கொள்ள வேண்டும்? சோழ நாட்டுச் சிம்மாசனத்துக்கு யார் வந்தால் தான் நமக்கு என்ன? பார்க்கப் போனால், நம்முடைய குலத்தின் பூர்வீகப் பகைவர்கள் தானே இவர்கள்? சோழர்களும் கங்கர்களும் வைதும்பர்களும் சேர்ந்து கொண்டுதானே வாணகோப்பாடி ராஜ்யமே இல்லாதபடி செய்து விட்டார்கள்? இன்றைக்கு ஆதித்த கரிகாலர் நம்மிடம் அன்பாக இருந்ததினால் அந்த அநீதியெல்லாம் மறைந்து போய்விடுமா?... சேச்சே! அந்தப் பழைய சம்பவங்களை அநீதியென்றுதான் எப்படிச் சொல்ல முடியும்? அரசர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது இயற்கை. அது போலவே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதும் இயற்கை. வென்றவர்கள் மீது தோற்றவர்கள் கோபங்கொள்வதில் என்ன பயன்? நம்முடைய மூதாதைகள் நல்ல நிலைமையில் இருந்த போது அவர்களும் மற்ற அரசர்களைக் கதிகலங்கத்தானே அடித்தார்கள்? அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள்? ஆ! அது என்ன பாடல்? இதோ ஞாபகம் வந்துவிட்டது!

"சேனை தழையாக்கிச் செங்குருதி நீர் தேக்கி
ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன்
பாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து நட்டான்
மூவேந்தர் தங்கள் முடி!"

இப்படியெல்லாம் போர்க்களத்தில் கொடூரமான காரியங்களை நம் முன்னோர்களும் செய்திருக்கிறார்கள். போர்க்களத்தில் தோற்றவர்களின் கதி எப்போதும் அதோ கதிதான். இராமரைப் போலவும் தர்ம புத்திரரைப் போலவும் எல்லா அரசர்களும் கருணை வள்ளல்களாக இருந்துவிட முடியுமா? அப்படி அவர்கள் இருந்தபடியினால் தான் காட்டுக்குப் போய்த் திண்டாடினார்கள்! வீர புருஷர்களாயிருந்தும், வீரர்களின் துணையிருந்தும் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள். இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது. பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்லவேண்டும். எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள். அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள்! சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்துகொள்ளவில்லையா? அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால் தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறந்து விளங்குகிறார்கள்... ஆ! அழகி என்றதும் அந்தக் குடந்தை நகரத்து மங்கை... அரிசிலாற்றங்கரைப் பெண்மணியின் நினைவு வருகிறது. நினைவு புதிதாக எங்கிருந்தோ வந்து விடவில்லை. அவனுடைய உள்ளத்துக்குள்ளேயே கனிந்து கொண்டிருந்த நினைவுதான்.

வந்தியத்தேவனுடைய வெளிமனம் சோழ நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றியும் இராஜரீகக் குழப்பங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுடைய உள் மனம் அந்த மங்கையினிடத்திலேயே ஈடுபட்டிருந்தது. இப்போது உள் மனம், வெளி மனம் இரண்டும் ஒத்து அம்மங்கையைக் குறித்துப் பட்டவர்த்தனமாகச் சிந்திக்கத் தொடங்கின. பிறகு, வெளியில் எந்த அழகான இயற்கைப் பொருளைப் பார்த்தாலும் அந்த மங்கையின் அவயங்களுடன் ஒப்பிடத் தோன்றின. வழுவழுப்பான மூங்கிலைப் பார்த்ததும் அவளுடைய தோள்கள் நினைவு வந்தன. ஓடைகளில் மண்டிக்கிடந்த குவளை மலர்கள் அவளுடைய கண்களுக்கு உவமையாயின. பங்கஜ மலர்கள் அவளுடைய தங்க முகத்துக்கு இணைதானா என்ற ஐயம் தோன்றியது. நதியோர மரங்களில் குலுங்கிக் கொண்டிருந்த மலர்களில் வண்டுகள் செய்த ரீங்காரத்தை அவள் குரலின் ஒலிக்கு உவமை சொல்வது சரியாகுமா? இப்படியெல்லாம் கவிகள் கற்பித்திருக்கிறார்களே தவிர, உண்மையில் இவையெல்லாம் எங்கே? அந்த மங்கையின் சௌந்தரியம் எங்கே? அவளுடைய திருமுகத்தைப் பார்த்தபோது மெய் சிலிர்த்ததே! இப்போது நினைத்துப் பார்க்கும்போது கூட நெஞ்சு விம்முகிறதே! இந்தப் பூக்களையும் வண்டுகளையும் பார்த்தால் அத்தகைய மெய் சிலிர்ப்பு உண்டாகவில்லையே?...சேச்சே! முதியோர்கள் நமக்குச் செய்த உபதேசத்தையெல்லாம் மறந்து விட்டோ ம்! பெண்களின் மோகத்தைப் போல் உலக வாழ்க்கையில் பொல்லாத மாயை வேறொன்றுமில்லை.

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோன் பெண்களின் மோக வலையில் விழவே கூடாது; விழுந்தால் அவன் ஒழிந்தான்! கோவலன் கதைதான் அந்த விஷயத்தை அபூர்வமாய் எடுத்துச் சொல்கிறதே! கோவலன் மட்டும் என்ன? இந்த நாளில் வீராதி வீரரும் சோழ நாட்டிலே இணையற்ற செல்வாக்கு உள்ளவருமான பெரிய பழுவேட்டரையரைப் பற்றி மக்கள் பரிகாசம் பேசுங்காரணமும் அதுதானே? ஆனால் மக்கள் உண்மை அறியாதவர்கள். மூடு பல்லக்கிலே வைத்துப் பழுவேட்டரையர் யாரைக் கொண்டு வருகிறார் என்று மக்களுக்குத் தெரியாது! ஆகையால் மூடத்தனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், அந்த மதுராந்தகத் தேவர் தம்மை அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. சீச்சீ! மூடுபல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, பழுவேட்டரையரின் ராணியின் ஸ்தானத்தில் மறைந்து கொண்டு ஊர் ஊராய்ப் போவதா? இதுதான் ஆண்மைக்கு அழகா? இப்படியாவது இராஜ்யம் சம்பாதிக்க வேண்டுமா? இப்படிச் சம்பாதித்த இராஜ்யத்தைத்தான் அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? பழுவேட்டரையர் முதலியோரை நம்பி அவர்களுக்கு உட்பட்டுத்தானே இராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான்! பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும் மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும் போது? நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும் உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது...? அந்த மங்கை, சோதிடர் வீட்டில் பார்த்தவள், ஆற்றங்கரையில் பேசியவள், - அவள் முகம் யாருடைய ஜாடையாயிருக்கிறது?... அப்படியும் இருக்கலாமோ? - பைத்தியக்காரத்தனம்! ஒரு நாளும் இருக்க முடியாது! - ஏன் இருக்க முடியாது? ஒரு வேளை அவ்விதம் இருந்தால், நம்மைப் போன்ற அறிவீனன் வேறு யாரும் இல்லை! நம்மைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இல்லை! இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் எந்தப் பெண்ணரசியின் புகழ் பரந்து விரிந்து பரவியிருக்கிறதோ, அவளிடம் நாம் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொண்டோ ம்! - நாளைக்கு அவளிடம் எப்படி இளவரசரின் ஓலையுடனே சென்று முகத்தைக் காட்ட முடியும்?

இப்படியாக என்னவெல்லாமோ வானத்தையும் பூமியையும் சேர்த்து எண்ணமிட்டுக்கொண்டு வந்தியத்தேவன் காவேரிக் கரையோடு வந்து திருவையாற்றை அடைந்தான். அந்த ஊரின் வளமும் அழகும் அவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. அது திருவையாறுதானா என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். அந்த அற்புத க்ஷேத்திரத்தின் மகிமையைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் உண்மைக்குக் கொஞ்சம் குறைவாகவே தோன்றியது. ஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள வர்ணனை இங்கே அப்படியே தத்ரூபமாய்க் காண்கிறது. முந்நூறு ஆண்டு காலத்தில் மாறுதல் ஒன்றுமேயில்லை. அதோ காவேரியின் கரையில் உள்ள மரங்கள் என்ன செழிப்பாய் வளர்ந்திருக்கின்றன! பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக் காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான்! ஆகா! வளமான இடங்களுக்கென்று குரங்குகள் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. அவை கிளைக்குக் கிளை தாவுவது எவ்வளவு அழகாயிருக்கிறது? சம்மந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார்? இதோ ஞாபகம் வருகிறது! திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது. அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன! அடடா! இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! உயர்ந்த மரங்களில் உச்சாணிக் கிளைகளில் குரங்குகள் ஏறுகின்றன! அது மட்டுமா? ஆடல் பாடல்களுக்குரிய இனிய சத்தங்களும் ஊருக்குள்ளிருந்து வருகின்றன. யாழ், குழல், முழவு, தண்ணுமை முதலிய கருவிகளின் ஒலியுடன் சதங்கைச் சத்தமும் சேர்ந்து ஒலிக்கின்றன. இங்கே ஆடுகிறவர்கள் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆடியவர்களைப் போல் குரவைக் கூத்தர்கள் அல்ல. ஆகா! இங்கே கேட்பது பண்பட்ட இனிய கானம். கலைச் சிறப்பு வாய்ந்த பரத நாட்டியம் ஆடுவோரின் சதங்கை ஒலி. அதோ, ஆட்டிவைக்கும் நடன ஆசிரியர்கள் கையில் பிடித்த கோலின் சத்தம் கூடச் சேர்ந்து வருகிறதே!

"கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுகையார் முகத்தினின்று
சேலோடச் சிலை யாடச் சேயிழை
யார் நடமாடுந் திருவையாறே!"

ஆகா! சம்பந்த ஸ்வாமிகள் சிறந்த சிவபக்தர்; அதை காட்டிலும் சிறந்த ரஸிகர்! அவர் அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே! இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும் தரிசித்து விட்டுத்தான் போகவேண்டும்! அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்கிறார்கள்? பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவு களையாயிருக்கிறது? சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக்கொண்டு, 'நமச்சிவாய' மந்திரத்தின் ஒலி கேட்கிறதே! அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப் பாடுகிறார்களே? இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும்! இந்த ஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும்! தஞ்சாவூருக்கு அவசரமாகப் போய்த்தான் என்ன பயன்? கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ? அப்படிப் பிரவேசித்தாலும் மகாராஜாவின் பேட்டி கிடைக்குமா? மகாராஜாவைத்தான் இரண்டு பழுவேட்டரையர்களுமாகச் சேர்ந்து சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்களாமே...? காவேரியின் வடகரைக்குப் போக வேண்டியது தான்!

இந்த முடிவுக்கு வந்தியத்தேவன் வந்துவிட்ட தருணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மேற்குத் திசையிலிருந்து காவேரிக் கரையோடு ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் சில காவல் வீரர்களும் வந்தார்கள். வந்தியத்தேவனுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பல்லக்கு அருகில் வருகிற வரையில் அங்கேயே நின்று காத்துக் கொண்டிருந்தான். அவன் நினைத்தபடியே இருந்தது. பல்லக்கை மூடியிருந்த வெளித் திரையில் பனைமரத்தின் இலச்சினைச் சித்திரம் காணப்பட்டது! ஆஹா! கடம்பூரிலிருந்து வருகிற பல்லக்குத்தான் இது! நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள்! ஆனால் பழுவேட்டரையரைக் காணோம்! அவர் வேறு எங்கேயாவது வழியில் தங்கிவிட்டார் போலும்.

பல்லக்கு தஞ்சாவூர் இருந்த தென் திசை நோக்கித் திரும்பியது. அவ்வளவுதான், வந்தியத்தேவன் திருவையாற்றில் தங்கும் எண்ணத்தை விட்டு விட்டான். அந்தப் பல்லக்கைப் பின் தொடர்ந்து செல்லத் தீர்மானித்தான். என்ன நோக்கத்துடன் அப்படித் தீர்மானித்தான் என்றால், அது அச்சமயம் அவனுக்கே தெரிந்திருக்கவில்லை. பல்லக்கில் வீற்றிருப்பது மதுராந்தகத் தேவர் என்று மட்டும் அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது. அவர் மேல் ஏற்பட்டிருந்த அருவருப்பு மேலும் சிறிது வளர்ந்தது. ஆனாலும் பல்லக்கைப் பின் தொடர்ந்து கொஞ்சம் போனால், ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படலாம். பல்லக்கைச் சுமப்பவர்கள் அதைக் கீழே வைக்கலாம். ஏதேனும் ஒரு காரணத்துக்காக இளவரசர் மதுராந்தகர் வெளிப்பட்டு வரலாம். அச்சமயம் அவருடன் பழக்கம் செய்து கொள்ளலாம். அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும், சக்கரவர்த்தியைப் பார்க்கவும் பயன்படலாம். அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது. தந்திர மந்திரங்களைக் கையாளாவிட்டால் எடுத்த காரியம் கைகூடாது அல்லவா? அதிலும் இராஜாங்கக் காரியங்களில்?

எனவே, பல்லக்கையும் பரிவாரங்களையும் முன்னால் போக விட்டுச் சற்றுப் பின்னாலேயே வந்தியத்தேவன் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும் கிட்டவில்லை. காவேரிக்கும் தஞ்சாவூருக்கும் மத்தியிலிருந்த மற்றும் நாலு நதிகளைக் கடந்தாகி விட்டது. அப்படியும் பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை; ஒரே மூச்சாகப் போய்க்கொண்டிருந்தது. அதோ சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை மதிலும் வாசலும் தெரியத் தொடங்கிவிட்டன. கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம் அவன் எண்ணம் கைகூடப் போவதில்லை. அதற்குள் தைரியமாகவும் துணிச்சலாகவும் ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும். என்னதான் வந்துவிடும்? தலையா போய்விடும்? அப்படிப் போனால் தான் போகிறதே? - எடுத்த காரியத்தை முடிக்காமல் உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம்? இதற்கெல்லாம் அடிப்படையில் மதுராந்தகத்தேவர் பேரில் வந்தியத்தேவனுக்கு கோபம் வேறு இருந்தது. பல்லக்கின் மூடுதிரையைக் கிழித்தெறிந்து உள்ளேயிருப்பது பெண்ணல்ல, மீசை முளைத்த ஆண்பிள்ளை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்று அவன் கை ஊறியது; அவன் உள்ளம் துடிதுடித்தது.

இதற்கு என்ன வழி என்று அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பல்லக்கோடு சென்ற பரிவாரங்களில் ஒருவன், சற்றுப் பின் தங்கி வந்தியத்தேவனை உற்று நோக்கினான்.

"நீ யார் அப்பா! திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய்?" என்று கேட்டான்.

"நான் உங்களைத் தொடர்ந்து வரவில்லை ஐயா! தஞ்சாவூருக்குப் போகிறேன்! இந்தச் சாலைதானே தஞ்சாவூர் போகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

"இந்த சாலை தஞ்சாவூருக்குத்தான் போகிறது. ஆனால் இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம்; மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது!" என்றான் வீரன்.

"அப்படியா? ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான்!" என்றான் வந்தியத்தேவன்.

அதைக் கேட்ட அவ்வீரன் புன்னகை செய்துவிட்டு, "தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய்?" என்றான்.

"என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார். அவருக்கு நோய் என்றறிந்து பார்க்கப் போகிறேன்" என்று கூறினான் வந்தியத்தேவன்.

"உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார்? அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா?"

"இல்லை, இல்லை; சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார்"

"ஓகோ! அப்படியா! சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே? ஏன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறாய்?"

"குதிரை களைத்துப் போயிருக்கிறது ஐயா! அதனால்தான்! இல்லாவிடில் உங்கள் முதுகைப் பார்த்துக் கொண்டே வருவதில் எனக்கு என்ன திருப்தி?"

இப்படிப் பேசிக்கொண்டே வந்தியத்தேவன் பல்லக்கின் அருகில் வந்துவிட்டான். உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டுவிட்டது. குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின் தண்டைத் தூக்கியவர்களின் பேரில் விட்டித்தான். அவர்கள் பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள். வந்தியத்தேவன் உடனே, "மஹாராஜா! மஹாராஜா! பல்லக்குத் தூக்கும் ஆள்கள் என் குதிரையை இடிக்கிறார்கள்! ஐயோ!" என்று கத்தினான். பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது.














Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. திரை சலசலத்தது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: