BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை  Icon_minitimeFri May 06, 2011 10:22 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

22. வேளக்காரப் படை



முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை - பனைமரச் சின்னம் உடைய துணித் திரை - விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பது தகாது என்று எண்ணி ஒரு நொடியில் கீழே குதித்தான். சிவிகையின் அருகில் ஓடி வந்து, "இளவரசே! இளவரசே! பல்லக்குச் சுமக்கும் ஆட்கள்..." என்று சொல்லிக் கொண்டே அண்ணாந்து பார்த்தான். மீண்டும் உற்றுப் பார்த்தான்; கண்ணிமைகளை மூடித் திறந்து மேலும் பார்த்தான்; பார்த்த கண்கள் கூசின! பேசிய நாக் குழறியது. தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது. "இல்லை, இல்லை! தாங்கள்... பழுவூர் இளவரசி!... பழுவூர் இளவரசி... உங்கள் ஆட்களின் குதிரை என் பல்லக்கை இடித்தது!..." என்று உளறிக் கொட்டினான்.

இதெல்லாம் கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள் நடந்தது. பல்லக்கின் முன்னும் பின்னும் சென்ற வேல் வீரர்கள் ஓடி வந்து, வல்லவரையனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்பது வல்லவரையனுக்கும் தெரிந்தது. அவனுடைய கையும் இயல்பாக உறைவாளிடம் சென்றது. ஆனால் கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில் ஒளிர்ந்த மோகனாங்கியின் சந்திர பிம்ப வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை!

ஆம்; வல்லவரையன் எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்போது அப்பல்லக்கில் அவன் கண்டது ஒரு நிஜமான பெண்ணின் வடிவந்தான்! பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண்! பார்த்தவர்களைப் பைத்தியமாக அடிக்கக் கூடிய இத்தகைய பெண்ணழகு இவ்வுலகில் இருக்கக்கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணியதே இல்லை!

நல்ல வேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று அசைந்தது. அதிசயமான ஓர் எண்ணம் அவன் உள்ளத்தில் உதயமாயிற்று. அதை உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான்.

ஒரு பெருமுயற்சி செய்து, தொண்டையைக் கனைத்து, நாவிற்குப் பேசும் சக்தியை வரவழைத்துக் கொண்டு, "மன்னிக்க வேண்டும்! தாங்கள் பழுவூர் இளையராணிதானே! தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இத்தனை தூரம் வந்தேன்!" என்றான்.

பழுவூர் இளையராணியின் பால் வடியும் முகத்தில் இளநகை அரும்பியது. அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து, உள்ளே பதித்திருந்த வெண்முத்து வரிசையை இலேசாகப் புலப்படுத்தியது. அந்தப் புன்முறுவலின் காந்தி நமது இளம் வீரனைத் திக்குமுக்காடித் திணறச் செய்தது.

அவனருகில் வந்து நின்ற வீரர்கள் தங்கள் எஜமானியின் கட்டளைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்ததாகத் தோன்றியது. அந்தப் பெண்ணரசி கையினால் ஒரு சமிக்ஞை செய்யவே, அவர்கள் உடனே அகன்று போய்ச் சற்றுத் தூரத்தில் விலகி நின்றார்கள். இரண்டு வீரர்கள் பல்லக்கின் மீது மோதிக் கொண்டு நின்ற குதிரையைப் பிடித்துக்கொண்டார்கள்.

பல்லக்கிலிருந்த பெண்ணரசி வந்தியத்தேவனை நோக்கினாள். வந்தியத்தேவனுடைய நெஞ்சில் இரண்டு கூரிய வேல் முனைகள் பாய்ந்தன!

"ஆமாம்; நான் பழுவூர் இளையராணிதான்!" என்றாள் அப்பெண்மணி. இவளுடைய குரலில் அத்தகைய போதை தரும் பொருள் என்ன கலந்திருக்க முடியும்? ஏன் இக் குரலைக் கேட்டு நமது தலை இவ்விதம் கிறுகிறுக்க வேண்டும்?

"சற்று முன்னால் நீ என்ன சொன்னாய்? ஏதோ முறையிட்டாயே? சிவிகை சுமக்கும் ஆட்களைப் பற்றி?"

காசிப்பட்டின் மென்மையும் கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா?... அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே!

"பல்லக்கைக் கொண்டு வந்து அவர்கள் உன் குதிரைமீது மோதினார்கள் என்றா சொன்னாய்?"...

பழுவூர் ராணியின் பவள இதழ்களில் தவழ்ந்த பரிகாசப் புன்னகை, அந்த வேடிக்கையை அவள் நன்கு ரசித்ததாகக் காட்டியது. இதனால் வந்தியத்தேவன் சிறிது துணிச்சல் அடைந்தான்.

"ஆம், மகாராணி! இவர்கள் அப்படித்தான் செய்தார்கள்! என் குதிரை மிரண்டுவிட்டது!" என்றான்.

"நீயும் மிரண்டு போய்த்தானிருக்கிறாய்! துர்க்கையம்மன் கோயில் பூசாரியிடம் போய் வேப்பிலை அடிக்கச் சொல்லு! பயம் தெளியட்டும்!"

இதற்குள் வந்தியத்தேவனுடைய பயம் நன்கு தெளிந்துவிட்டது. அவனுக்குச் சிரிப்பு கூட வந்துவிட்டது.

பழுவூர் ராணியின் முகபாவம் இப்போது மாறிவிட்டது. குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று.

"வேடிக்கை அப்புறம் இருக்கட்டும்; உண்மையைச் சொல்! எதற்காகப் பல்லக்கின் மேல் குதிரையைக் கொண்டு வந்து மோதி நிறுத்தினாய்?"

இதற்குத் தக்க மறுமொழி சொல்லித்தான் ஆகவேண்டும். சொல்லா விட்டால்...? நல்லவேளையாக, ஏற்கனவே அந்த மறுமொழி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாயிருந்தது. சற்றுத் தணிந்த குரலில், பிறர் கேட்கக்கூடாது என்று வேண்டுமென்றே தனித்த அந்தரங்கம் பேசும் குரலில், "தேவி! நந்தினி தேவி! ஆழ்வார்க்கடியான்... அவன் தான், திருமலையப்பன்...தங்களைச் சந்திக்கும்படி சொன்னான். அதற்காகவே இந்தச் சூழ்ச்சி செய்தேன். மன்னிக்க வேண்டும்!" என்றான்.

இவ்விதம் சொல்லிக் கொண்டே பழுவூர் ராணியின் முகத்தை வந்தியத்தேவன் கூர்ந்து கவனித்தான். தன்னுடய மறுமொழியினால் என்ன பயன் விளையப் போகிறதோ என்னும் ஆவலுடன் பார்த்தான். கனி மரத்தின்மேல் கல் எரிவது போன்ற காரியந்தான். கனி விழுமா? காய் விழுமா? எறிந்த கல் திரும்பி விழுமா? அல்லது எதிர்பாராத இடி ஏதாவது விழுமா? பழுவூர் ராணியின் கரிய புருவங்கள் சிறிது மேலே சென்றன. கண்களில் வியப்பும் ஐயமும் தோன்றின. மறுகணத்தில் அந்தப் பெண்ணரசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

"சரி; நடுச்சாலையில் நின்று பேசுவது உசிதம் அல்ல; நாளைக்கு நம் அரண்மனைக்கு வா! எல்லா விஷயமும் அங்கே விபரமாகச் சொல்லிக் கொள்ளலாம்" என்றாள்.

வந்தியத்தேவனுடைய உள்ளம் பூரித்தது. நினைத்த காரியம் வெற்றி பெற்றுவிடும்போலே காண்கிறது! ஆனால் முக்கால் கிணறு தாண்டி பயனில்லை. மற்றக் காற்பங்குக் கிணற்றையும் தாண்டியாக வேண்டும்.

"தேவி! தேவி! கோட்டைக்குள் என்னை விடமாட்டார்களே! அரண்மனைக்குள்ளும் விடமாட்டார்களே? என்ன செய்வது?" என்று பரபரப்புடன் சொன்னான்.

பழுவூர் ராணி உடனே பல்லக்கில் தன் அருகில் கிடந்த ஒரு பட்டுப் பையைத் திறந்து அதற்குள்ளிருந்து ஒரு தந்த மோதிரத்தை மோதிரத்தை எடுத்தாள்.

"இதைக் காட்டினால் கோட்டைக்குள்ளும் விடுவார்கள்; நம் அரண்மனைக்குள்ளும் விடுவார்கள்!" என்று சொல்லிக் கொண்டே கொடுத்தாள். வந்தியத்தேவன் அதை ஆவலுடன், வாங்கிக் கொண்டான். ஒருகணம் பனம் இலச்சினை பொறித்த அந்த தந்த மோதிரத்தைப் பார்த்தான். மறுபடி நிமிர்ந்து ராணிக்கு வந்தனம் கூற என்ணியபோது பல்லக்கின் திரைகள் மூடிக் கொண்டிருந்தன. ஆகா! பூரண சந்திரனை ராகு கவ்வும்போது சிறிது சிறிதாகக் கவ்வுகிறது. ஆனால் இந்தப் பல்லக்கின் திரைகள் அந்தப் பேசும் நிலா மதியத்தை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டனவே!

"இனியாவது என்னைப் பின் தொடர்ந்து வராதே! அபாயம் நேரும். நின்று மெதுவாக வா!" என்று பல்லக்குத் திரைக்குள்ளிருந்து பட்டுப் போன்ற குரல் கேட்டது.

பிறகு பல்லக்கு நகர்ந்தது. வீரர்கள் முன்போலவே அதன் முன்னும் பின்னும் சென்றார்கள்.

வந்தியத்தேவன் குதிரையின் தலைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சாலையோரமாக ஒதுங்கி நின்றான். பழுவூர் ஆள்களில் தன்னை அணுகி வந்து பேசியவன் இரண்டு மூன்று தடவை திரும்பித் திரும்பிப் பார்த்ததை அவனுடைய கண்கள் கவனித்து உள்மனத்துக்குச் செய்தி அனுப்பின.

ஆம்; அவனுடைய வெளி மனம் பல்லக்கிலிருந்த பழுவூர் ராணியின் மோகன வடிவத்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. இத்தனை நேரம் கண்டது, கேட்டது எல்லாம் உண்மை தானா? அல்லது ஒரு மாய மனோகரக் கனவா? இப்படியும் ஒரு அழகி, ஒரு சௌந்தரிய வடிவம், இந்தப் பூவுலகில் காண முடியுமா!

அரம்பை, ஊர்வசி, மேனகை என்றெல்லாம் தேவமாதர்கள் இருப்பதாகப் புராணங்களில் சொல்வதுண்டு. அவர்களுடைய அழகு, முற்றும் துறந்த முனிவர்களின் தவத்தையும் பங்கம் செய்ததாகக் கேட்டதுண்டு. ஆனால் இந்த உலகத்தில்... பெரிய பழுவேட்டரையர் இந்த மோகினியின் காலடியில் அடிமை பூண்டு கிடப்பதாக நாடு நகரங்களில் பேசுவதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். இருந்தால், அதில் வியப்பு ஒன்றும் இராது! நரை திரை மூப்புக் கண்டவரும், தேகமெல்லாம் போர்க் காயங்களுடன் கடூரமான தோற்றங் கொண்டவருமான பழுவேட்டரையர் எங்கே? ஸுகுமாரியும் கட்டழகியுமான இந்த இளம் மங்கை எங்கே? இவளுடைய ஒரு புன்னகையைப் பெறுவதற்காக அந்தக் கிழவர் என்ன காரியந்தான் செய்ய மாட்டார்?...

வெகு நேரம் சாலை ஓரத்தில் நின்று இவ்விதம் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த பிறகு வந்தியத்தேவன் குதிரைமேல் ஏறிக் கொண்டு மெள்ள மெள்ள அதைத் தஞ்சைக் கோட்டையை நோக்கிச் செலுத்தினான்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பிரதான கோட்டை வாசலை அடைந்தான். கோட்டைக்குச் சற்றுத் தூரத்திலேயே நகரம் ஆரம்பமாகியிருந்தது. விதவிதமான பண்டங்கள் விற்கும் கடை வீதிகளும், பலவகைத் தொழில்களில் ஈடுபட்ட மக்கள் வாழும் தெருக்களும், கோட்டையைச் சுற்றி அடுக்கடுக்காக அமைந்திருந்தன. வீதிகளில் போவோரும் வருவோரும் பண்டங்கள் வாங்குவோரும் விலை கூறுவோரும் மாடு பூட்டிய வண்டிகளும் குதிரை பூட்டிய ரதங்களும் நிறைந்து, எங்கும் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்த வீதிகளுக்குள்ளே புகுந்து சென்று சோழ நாட்டுப் புதிய தலைநகரத்தில் வாழும் மக்களையும், அவர்கள் வாழும் விதத்தையும் பார்க்க வந்தியத்தேவனுக்கு மிக்க ஆவலாயிருந்தது. ஆனால் அதற்கெல்லாம் இப்போது அவகாசம் இல்லை. வந்த காரியத்தை முதலில் பார்க்க வேண்டும். வேடிக்கை பார்ப்பதெல்லாம் பிற்பாடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தீர்மானத்துடன் வந்தியத்தேவன் தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான். கோட்டை வாசலில் பிரம்மாண்டமான கதவுகள் அச்சமயம் சாத்தியிருந்தன. வாசலில் நின்ற காவலர்கள் மக்களை ஒதுங்கச் செய்து வீதி ஓரங்களில் நிற்கும்படி செய்து கொண்டிருந்தார்கள். மக்களும் ஒதுங்கி நின்றார்கள். ஆம் அவரவர்கள் தங்கள் அலுவல்களைப் பார்த்துக்கொண்டு போவதற்குப் பதிலாக, ஏதோ ஊர்வலம் அல்லது பவனி பார்ப்பதற்காகக் காத்திருப்பவர்களைப் போல் நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர் எல்லாருமே ஆவலுடன் நின்றார்கள்.

கோட்டை வாசலுக்கு முன்னால் சிறிது தூரம் வரை வெறுமையாகவே இருந்தது. வாசலண்டை காவலர்கள் மட்டும் நின்றார்கள்.

விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள வந்தியத்தேவன் ஆவல் கொண்டான். எல்லாரும் ஒதுங்கி நிற்கும்போது தான் மட்டும் கோட்டை வாசல் காப்பாளரிடம் சென்று முட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை. அதிலிருந்து வீண் வாதமும் சண்டையும் மூளலாம். இப்போது தனக்குக் காரியம் முக்கியமே தவிர வீரியம் பெரிது அல்ல. வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல.

எனவே, வந்தியத்தேவன் கோட்டை வாசலைக் கவனிக்கக் கூடிய இடத்தில் வீதி ஓரத்தில் ஒதுங்கி நின்றான். பக்கத்தில் கம்மென்று மலரின் மணம் வீசியது. திரும்பிப் பார்த்தான். ஒரு வாலிபன், திருநீறு ருத்திராட்சம் முதலிய சிவச் சின்னங்கள் தரித்தவன், இரண்டு கைகளிலும் இரண்டு பூக்கூடைகளுடன் நிற்பதைக் கண்டான்.

"தம்பி! எல்லாரும் எதற்காக வீதி ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள்! ஏதாவது ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா?" என்று கேட்டான்.

"தாங்கள் இந்தப் பக்கத்து மனிதர் இல்லையா? ஐயா?"

"இல்லை, நான் தொண்டை நாட்டைச் சேர்ந்தவன்!"

"அதனால்தான் கேட்கிறீர்கள். நீங்களும் குதிரை மேலிருந்து இறங்கிக் கீழே நிற்பது நல்லது."

வாலிபனோடு பேசுவதற்குச் சௌகரியமாயிருக்கட்டும் என்று வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து குதித்தான்.

"தம்பி! எதற்காக என்னை இறங்கச் சொன்னாய்?" என்று கேட்டான்.

"இப்போது வேளக்காரப் படை அரசரைத் தரிசனம் செய்து விட்டுக் கோட்டைக்குள்ளிருந்து வரப்போகிறது. அதற்காகத்தான் இத்தனை ஜனங்களும் ஒதுங்கி நிற்கிறார்கள்."

"வேடிக்கை பார்க்கத்தானே?"

"ஆமாம்."

"நான் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் என்ன?"

"பார்க்கலாம்; ஆனால் வேளக்காரப் படை வீரர்கள் உங்களைப் பார்த்துவிட்டால் ஆபத்து."

"என்ன ஆபத்து? குதிரையைக் கொண்டு போய் விடுவார்களா?"

"குதிரையையும் கொண்டு போவார்கள்; ஆள்களையே கொண்டு போய்விடுவார்கள். பொல்லாதவர்கள்."

"குதிரையையும் ஆளையும் கொண்டு போனால் சும்மா விட்டு விடுவார்களா?"

"விடாமல் என்ன செய்வது? வேளக்காரப் படையார் வைத்ததே இந்த நகரில் சட்டம். அவர்களைக் கேள்வி கேட்பார் கிடையாது. பழுவேட்டரையர்கள் கூட வேளக்காரப்படை விஷயத்தில் தலையிடுவது கிடையாது."

இச் சமயத்தில் கோட்டைக்கு உட்புறத்தில் பெரிய ஆர்ப்பாட்ட ஆரவாரங்கள் கேட்டன. நகரா முழங்கும் சத்தம், பறைகள் கொட்டும் சத்தம், கொம்புகள் ஊதும் சத்தம் இவற்றுடன் பல நூறு மனிதர் குரல்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகளும் கலந்து எதிரொலி செய்தன.

வேளக்கார வீரர் படைகளைப் பற்றி வந்தியத்தேவன் நன்கு அறிந்திருந்தான். பழந்தமிழ் நாட்டில், முக்கியமாகச் சோழ நாட்டில் இது முக்கிய ஸ்தாபனமாக இருந்து வந்தது. 'வேளக்காரர்' என்பவர் அவ்வப்போது அரசு புரிந்த மன்னர்களுக்கு மெய்க்காப்பாளர் போன்றவர். ஆனால் மற்ற சாதாரண மெய்க்காப்பாளருக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. 'இவர்கள் எங்கள் உயிரைக் கொடுத்தாவது அரசரின் உயிரைப் பாதுகாப்போம்' என்று சபதம் செய்தவர்கள். தங்கள் அஜாக்கிரதையினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்துவிட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள். அத்தகைய கடூர சபதம் எடுத்துக் கொண்ட வீரர்களுக்கு, மற்றவர்களுக்கு இல்லாத சில சலுகைகள் இருப்பது இயல்புதானே?

கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும் படார் படார் என்று திறந்துகொண்டன. முதலில் இரண்டு குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்கள் தங்களது வலக்கையில் உயரப் பறந்த கொடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொடியின் தோற்றம் விசித்திரமாக இருந்தது. செந்நிறமான அக் கொடியின் மேலே புலியும், புலிக்கு அடியில் கிரீடமும் சித்தரிக்கப்பட்டிருந்தன. கிரீடத்துக்கு அடியில் ஒரு பலிபீடமும், கழுத்து அறுபட்ட ஒரு தலையும், ஒரு பெரிய பலிக் கத்தியும் காட்சி அளித்தன. கொடியைப் பார்க்கச் சிறிது பயங்கரமாகவே இருந்தது. கொடி தாங்கிய குதிரை வீரர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய ரிஷபம் இரண்டு பேரிகைகளைச் சுமந்துகொண்டு வந்தது. இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள்.

ரிஷபத்துக்குப் பின்னால் சுமார் ஐம்பது வீரர்கள் சிறுபறை, பெரும்பறை, தம்பட்டம் ஆகியவற்றை முழங்கிக் கொண்டு வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்னும் ஐம்பது பேர் நீண்டு வளைந்த கொம்புகளை 'பாம் பாம் பாம்' என்று ஊதிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கும் பின்னால் வந்த வீரர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் பின்வரும் வாழ்த்தொலிகளை இடிமுழக்கக் குரலில் எழுப்பிக்கொண்டு வந்தார்கள்.

"பராந்தக சோழ பூமண்டல சக்கரவர்த்தி வாழ்க!"

"வாழ்க, வாழ்க!"

"சுந்தர சோழ மன்னர் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"கோழி வேந்தர் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"தஞ்சையர் கோன் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"வீரபாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமான் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"மதுரையும் ஈழமும் தொண்டை மண்டலமும் கொண்ட கோ இராஜகேசரி வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"கரிகால் வளவன் திருக்குலம் நீடூழி வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"துர்க்கை மாகாளி பராத்பரி பராசக்தி வெல்க"

"வெல்க! வெல்க!"

"வீரப் புலிக்கொடி பாரெல்லாம் பரந்து வெல்க!"

"வெல்க! வெல்க!"

"வெற்றிவேல்!"

"வீரவேல்!"

நூற்றுக்கணக்கான வலிவுள்ள குரல்களிலிருந்து எழுந்த மேற்படி கோஷங்கள் கேட்போரை மெய் சிலிர்க்கச் செய்தன. கோட்டை வாசலின் வழியாக வந்தபோது அந்தக் கோஷங்கள் உண்டாக்கிய பிரதித்வனிகளும் சேர்ந்து கொண்டன. வீதி ஓரங்களில் நின்ற மக்களில் பலரும் கோஷத்தில் கலந்து கொண்டார்கள்.

இவ்விதம், (தமிழ்நாட்டின் தெய்வமான முருகனுக்கு 'வேளக்காரன்' என்று ஒரு பெயர் உண்டு என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்; 'பக்தர்களைக் காப்பாற்றுவதாகச் சபதம் பூண்ட தெய்வம்' என்பதால் முருகனுக்கு அப்பெயர் வந்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்) வேளக்காரப் படை வீரர்கள் தஞ்சைக் கோட்டை வாசல் வழியாக வெளிவரத் தொடங்கி, வீதி வழியாகச் சென்று, தூரத்தில் மறையும் வரையில் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தது.














Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. கண் திறந்தது!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 58. கருத்திருமன் கதை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 28. இராஜபாட்டை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: