BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே  Button10

 

  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே     ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே  Icon_minitimeFri May 06, 2011 10:40 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

25. கோட்டைக்குள்ளே




பனை இலச்சினை தாங்கிய மோதிரம் கதைகளில் வரும் மாய மோதிரத்தைப் போல் அபாரமான மந்திர சக்தி வாய்ந்ததாயிருந்தது. காலை நேரத்தில் பால், தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள், கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்காரர்கள், மற்றும் பல தொழில்களையும் செய்வோர், கணக்கர்கள்; உத்தியோகஸ்தர்கள் முதலியோர் ஏகக் கூட்டமாகக் கோட்டைக்குள் பிரவேசிக்க முயன்று கொண்டிருந்தார்கள். கோட்டைக் கதவின் திட்டி வாசலைத் திறந்து அவர்களை ஒவ்வொருவராக உள்ளே விடுவதிலே கோட்டை வாசற் காவலர்கள் தங்கள் படாடோப அதிகாரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நம் இளம் வீரன் பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம், காவலர்கள் மிக்க மரியாதை காட்டி, கோட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான்.

ஆகா! தஞ்சைபுரிக் கோட்டைக்குள் அவன் கால் வைத்த வேளை என்ன வேளையோ தெரியாது! அதிலிருந்து எத்தனை எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன! சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திரத்திலேயே அது ஒரு முக்கிய சம்பவமாகவல்லவா ஏற்பட்டது!

கோட்டைக்குள் பிரவேசித்துச் சிறிது நேரம் வரை வந்தியத்தேவன் ஒரே பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான்.

காஞ்சி பழைய பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரம். பல தடவை பகைவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது. அங்கிருந்த மாளிகைகளும் மண்டபங்களும் மற்ற கட்டிடங்களும் பழமையடைந்து சிதிலமாகிப் பூஞ்சக் காளான் பூத்திருந்தன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கட்டிடங்கள்தான்; ஆனாலும் பல பகுதிகள் இடிந்தும் சிதைந்தும் கிடந்தன. ஆதித்த கரிகாலர் வந்த பிறகு புதுப்பித்துக் கட்டிய சில மாளிகைகள் மட்டும், பட்டமரத்தில் ஒவ்வோரிடத்தில் தளிர்த்திருக்கும் மலர்களைப்போல் விளங்கி, நகரத்தின் பாழடைந்த தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டின.

இந்தத் தஞ்சையின் தோற்றமோ நேர்மாறாக இருந்தது. எல்லாம் புதிய மாளிகைகள்; புதிய மண்டபங்கள். வெண் சுண்ண மாளிகைகளுக்கு மத்தியில் செம்மண்ணில் சுட்ட செங்கற்களினால் கட்டிய சிற்சில கட்டிடங்கள் வைரங்களுக்கும் முத்துக்களுக்கும் இடையிலே இரத்தினங்களைப் பதித்ததுபோல் ஒளி வீசித் திகழ்ந்தன. ஆங்காங்கு அரண்மனைத் தோட்டங்களில் வளர்ந்திருந்த விருட்சங்கள் செம்மண் பூமியின் சத்தை உண்டு, கொழுகொழுவென்று செழித்து ஓங்கியிருந்தன. புன்னை, தென்னை, அசோகம், அரசு, ஆல், பலா, வேம்பு முதலிய மரங்களில் அடர்ந்து தழைத்திருந்த இலைகள் மரகதப் பச்சையின் பல சாயல்களுடன் கண்ணுக்கு இனிமையையும் மனத்துக்கு உற்சாகத்தையும் அளித்தன. அதிசய சக்தி வாய்ந்த மந்திரவாதியான மயன் புதிதாக நிர்மாணித்த நகரம் இது. இந்தப் புதிய நகருக்குள் பிரவேசிக்கும் போதே ஒரு புதிய உற்சாகம் பிறந்தது; உள்ளம் பூரித்துப் பொங்கியது; காரணம் தெரியாத கர்வம் நிறைந்தது.

கோட்டையின் கட்டுக்காவலையும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில் உள்ள நிர்ப்பந்தங்களையும் கவனித்திருந்த வந்தியத்தேவன், உள்ளே அதிக ஜன நடமாட்டமே இல்லாமல் வெறிச் சென்று இருக்கும் என்று எண்ணியிருந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக, தெருக்களெல்லாம் 'ஜே ஜே' என்று கூட்டமாயிருந்தது. குதிரைகளும், குதிரை பூட்டிய ரதங்களும் பூமி அதிரும்படி சத்தமிட்டுக் கொண்டு சென்றன. கரிய குன்றுகள் அசைந்து வருவது போல் நிதானமாகவும் கம்பீரமாகவும் நடந்து வந்து யானைகளின் மணி ஓசை நாலாபுறங்களிலும் கேட்டது! பூ, கறிகாய், பழம், பால், தயிர், விற்போரின் கூச்சல்கள் செவிகளைத் தொளைத்தன. அவ்வப்போது காலத்தை அறிவிக்கும் ஆலாட்சி மணிகளின் ஓசையுடன் பேரிகையின் முழக்கமும் கலந்தது. இசைக் கருவிகள் எழுப்பிய இன்னிசைகளுடன் மங்கையர் பாடிய மதுர கீதங்கள் கலந்தன. எல்லாம் ஒரே திருவிழாக் கோலாகலமாகவே இருந்தது.

நகரம் என்றால் இதுவல்லவோ நகரம்! நாளுக்கு நாள் பரந்து வரும் ஒரு சாம்ராஜ்யத்தின் தலைநகரம் இப்படித்தான் இருக்கும் போலும்!

தான் இத்தகைய நகரத்துக்கு முற்றிலும் புதியவன் என்று காட்டிக் கொள்ள வந்தியத்தேவன் விரும்பவில்லை. யாரையாவது வழி கேட்டால் தன்னை ஏற இறங்கப் பார்த்து, "நீ இந்த ஊருக்குப் புதியவனா?" என்று அலட்சியமாகப் பேசுவார்கள். அரண்மனைக்கு வழி கேட்கிறவனை வெளியூரிலிருந்து வந்த பட்டிக்காட்டான் என்று கூட நினைத்துவிடுவார்கள். ஆகையால், யாரையும் வழி கேட்காமலேயே சக்கரவர்த்தியின் அரண்மனையைக் கண்டுபிடித்துப் போய்விடவேண்டும். அது அப்படியொன்றும் முடியாத காரியமாயிராது...

எந்தப் பக்கம் நோக்கினாலும் மாடமாளிகைகளின் மீது மகர தோரணங்களும் கொடிகளும் தோன்றின. வேகத்துடன் வீசிய மேலக்காற்றுடன் அவை துவந்த யுத்தம் செய்து சடசட படபட வென்ற சத்தம் செய்துகொண்டு பறந்தன. புலிக் கொடிகளும் பனைக்கொடிகளுமே அதிகமாகக் காணப்பட்டன. மற்ற எல்லாக் கொடிகளையும் தாழ்த்திக் கொண்டு மேக மண்டலத்தை அளாவிக் கம்பீரமாக ஒரு பெரிய புலிக்கொடி பறந்தது. அதுவே சக்கரவர்த்தி தங்கும் அரண்மனையாக இருக்கவேண்டும் என்று வல்லவரையன் ஊகித்துக்கொண்டு, அக்கொடி பறந்த திக்கை நோக்கித் தான் மேலே செய்யவேண்டிய காரியத்தைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டு நடந்தான்.

சக்கரவர்த்தியை நேரில் சந்தித்து ஓலையைக் கொடுப்பது முதற்காரியம். அதோடு ஆதித்த கரிகாலர் நேரில் வாய்மொழியாகத் தெரிவிக்கச் சொன்னதையும் சொல்ல வேண்டும். சின்னப் பழுவேட்டரையரின் அனுமதியின்றிச் சக்கரவர்த்தியை பார்க்க முடியாது. அவருடைய அனுமதியை எப்படிப் பெறுவது? கோட்டைக்குள் பிரவேசிப்பதற்குத் தெய்வம் துணை செய்தது. ஆனால் முழுதும் தெய்வம் வழிகாட்டும் என்றே இருந்துவிடலாமா? சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு நாமேதான் யுக்தி கண்டுபிடித்தாக வேண்டும்! அது என்ன யுக்தி! வாணர் குலத்தில் வழி வழியாக வந்த மூளையே! கொஞ்சம் வேலை செய், பார்க்கலாம்! சிறிது உன் கற்பனா சக்தியைத் தட்டிவிடு! காவியம், கவிதை எழுதுவோருக்கு மட்டும் கற்பனா சக்தி தேவை என்பதில்லை. உன்னைப் போல் இராஜாங்க காரியங்களில் ஈடுபட்டவர்களுக்கும் கற்பனா சக்தி வேண்டும். எங்கே, உன் கைவரிசையைக் காட்டு, பார்க்கலாம்!...

பெரிய பழுவேட்டரையர் இன்னும் கோட்டைக்கு வந்து சேரவில்லை என்பதை வந்தியத்தேவன் உறுதிப்படுத்திக் கொண்டான்.

கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே வந்ததும், அங்கே உள்புறத்தில் நின்ற காவலன் ஒருவனிடம், "ஏன் அப்பா! பழுவேட்டரையர் திரும்பி வந்து விட்டாரா?" என்று கேட்டான்.

"யாரைக் கேட்கிறாய், தம்பி! சின்னவர் அரண்மனையில்தான் இருக்கிறார்."

"அது எனக்குத் தெரியாதா? நடு நாட்டுக்குச் சென்றிருந்த பெரியவரைப் பற்றித்தான் கேட்கிறேன்."

"ஓ! பெரியவர் நடு நாட்டுக்கா சென்றிருந்தார்? அது எனக்குத் தெரியாது. நேற்று மாலை இளைய ராணியின் பல்லக்குத் திரும்பி வந்தது. பெரிய அரசர் இன்னும் வரவில்லை. இன்று இரவு திரும்பக் கூடும் என்று செய்தி வந்திருக்கிறது!" என்றான் காவலன்.

இது நல்ல செய்திதான். பெரிய பழுவேட்டரையர் திரும்பி வருவதற்குள்ளே எப்படியும் சக்கரவர்த்தியைப் பார்த்து ஓலையைக் கொடுத்தாக வேண்டும். அதற்கு என்ன வழி?... வந்தியத்தேவனுடைய மூளையில் ஒரு யோசனை உதயமாகிவிட்டது! அந்தக் கணமே அவன் முகத்தில் கவலைக்குறி மறைந்தது; குறும்புப் புன்னகையும் குதூகல மலர்ச்சியும் தோன்றின.

சக்கரவர்த்தியின் அரண்மனையை அணுகுவதற்கு அவன் அதிகமாக அலைந்து திரிய வேண்டியிருக்கவில்லை. பெரிய புலிக்கொடியை பார்த்துக்கொண்டே போனான். விரைவிலேயே அரண்மனை முகப்பை அடைந்துவிட்டான். ஆகா! இது எத்தகைய அரண்மனை! தேவலோகத்தில் தேவேந்திரனுடைய அரண்மனையையும் உஜ்ஜயினி நகரத்து விக்ரமாதித்யனுடையை அரண்மனையையும் போல அல்லவா இருக்கிறது? அந்த முன் வாசல் மண்டபத்துத் தூண்களில் செய்திருக்கும் சிற்ப வேலைகளின் அற்புதந்தான் என்ன! ஒவ்வொரு தூணிலும் செதுக்கியிருக்கும் குதிரை, முன்கால்களைத் தூக்கிக்கொண்டு அப்படியே பாய்வது போல இருக்கிறதே!

அரண்மனையை அடைவதற்குப் பல பாதைகள் நாலா திசைகளிலிருந்தும் வந்தன. ஒவ்வொரு பாதை முடிவிலும் இரண்டு குதிரை வீரர்களும் சில காலாள் வீரர்களும் நின்றார்கள். அவர்களண்டை நெருங்கி வராமலே அவ்வீதிகளில் நடமாடிய ஜனங்களில் பலர் திரும்பிப் போய் விட்டார்கள். ஒரு சிலர் அவர்கள் கிட்ட வந்து சற்றே நின்று அரண்மனை முகப்பை எட்டிப் பார்த்துவிட்டும், புலிக்கொடியை அண்ணாந்து பார்த்துவிட்டும் போனார்கள். அதிக நேரம் நின்று கூட்டம் சேரும் போலிருந்தால் காவலர்கள் கையினால் சமிக்ஞை செய்து அவர்களைப் போகும்படி செய்தார்கள். கூட்டங்கூடி நின்றவர்கள் இரைந்து பேசாமல் காதோடு மெள்ளப் பேசிக்கொண்டார்கள்.

வந்தியத்தேவன் மற்றவர்களைப்போல் சிறிதும் தயங்கி நிற்கவில்லை. வேகமாகவும் மிடுக்காகவும் நடந்து சென்று அரண்மனைப் பாதைக் காவலர்களை நெருங்கினான். உடனே இரு குதிரைகளும் முகத்தோடு முகம் உராயும்படி வழிமறித்து நின்றன. குதிரை மேலிருந்தவர்கள், கீழே நின்றவர்கள், அனைவருடைய வேல்களும் முனையோடு முனை பொருந்தி வழியை அடைத்தன.

வந்தியத்தேவன் தன்னுடைய மந்திர மோதிரத்தை நீட்டினான். அவ்வளவுதான்; அதைப் பார்த்தவுடனே அவ்வீரர்களின் முடுக்கும் பெருமிதமும் அடங்கின. ஒருவர் பின் ஒருவராக மூன்று பேர் மோதிரத்தை உற்றுப் பார்த்தார்கள். "சரி; வழி விடுங்கள்!" என்று ஒருவன் சொன்னான். இரண்டு வேல்கள் உடனே அகன்று நின்று வழிவிட்டன. வந்தியத்தேவன் மிடுக்குடன் நடந்து சென்றான்.

ஆயினும், என்ன? இன்னும் எத்தனை காவல்கள் இப்படி உண்டோ ? சின்னப் பழுவேட்டரையர் எங்கே இருக்கிறாரோ? எப்படி விசாரிப்பது? யாரிடம் கேட்பது? சின்ன பழுவேட்டரையரின் அனுமதியின்றிச் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; இந்தப் பெரிய விஸ்தாரமான அரண்மனையில் நோயாளியான சக்கரவர்த்தி எந்த இடத்தில் இருக்கிறாரோ? அதைத்தான் எவ்விதம் தெரிந்துகொள்வது?

தனக்குப் பின்னால் சிலர் கூட்டமாக வருவதை அறிந்து வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். ஆம்; பத்துப் பதினைந்து பேர் கும்பலாக வந்து, காவலர்களருகில் நின்றார்கள். அவர்கள் உயர்ந்த பட்டுப் பீதாம்பரங்கள் தரித்திருந்தார்கள். முத்துமாலைகள், மகர கண்டிகள், காதில் குண்டலங்கள் அணிந்திருந்தார்கள். சிலர் நெற்றியில் திருநீறும் மற்றவர்கள் சந்தனம், குங்குமம், சவ்வாதுப் பொட்டும் இட்டிருந்தார்கள்! ஆ! இவர்களைப் பார்த்தால் புலவர்களைப் போல அல்லவா இருக்கிறது!... ஆம், புலவர்களின் கூட்டந்தான் என்று மறுகணமே தெரிந்துவிட்டது.

காவலர்களில் ஒருவன், - அவர்களுடைய தலைவனாயிருக்க வேண்டும்,- "கவிராயர்கள் வந்திருக்கிறார்கள்! வழி விடுங்கள்!" என்று சொன்னதுடன் ஒரு வீரனைப் பார்த்து, "சின்னப் பழுவேட்டரையர் ஆஸ்தான மண்டபத்தில் இருக்கிறார். அவரிடம் கொண்டு போய்விடு!" என்றான்.

"புலவர்களே! ஏதாவது பரிசு கிடைத்தால் போகும்போது இந்த வழியாகவே திரும்பிச் செல்லுங்கள்! பரிசு கிடைக்காவிட்டால் வேறு வழியாகப் போய்விடுங்கள்!" என்று மேலும் அவன் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தார்கள்!

சற்று நின்று இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவன், "பழம் நழுவிப் பாலில் விழுந்தது!" என்று எண்ணிக் கொண்டான். இந்தப் புலவர்களுடனே போனால் சின்னப் பழுவேட்டரையர் இருக்குமிடம் போய்ச் சேரலாம். யாரையும் வழி விசாரிக்க வேண்டியதில்லை. பிறகு, நமது சாமர்த்தியம் இருக்கிறது; அதிர்ஷ்டமும் இருக்கிறது! இவ்வாறு எண்ணியபடியே புலவர் கூட்டத்துடன் சென்றான்.










Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. நிலவறை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 57. மாய மோகினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. கொல்லுப்பட்டறை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: