BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. மரத்தில் ஒரு மங்கை!  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. மரத்தில் ஒரு மங்கை!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. மரத்தில் ஒரு மங்கை!  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. மரத்தில் ஒரு மங்கை!    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. மரத்தில் ஒரு மங்கை!  Icon_minitimeFri May 06, 2011 11:14 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

33. மரத்தில் ஒரு மங்கை!



கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. கோட்டை வாசல் வழியாக வெளியே யாரையும் போக விடாமல் பார்த்துக் கொள்ளும்படி கட்டளை பிறந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும் அவன் அன்று முன்னிரவுக்குள் தப்பிச் சென்றே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் வந்துவிட்டால், பிறகு தப்பித்துச் செல்வது இயலாத காரியம்; உயிர் பிழைத்திருப்பதே முடியாத காரியமாகிவிடும்.

ஆகவே, தஞ்சாவூர்க் கோட்டைக்குள் வந்தியத்தேவன் அங்குமிங்கும் அலைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அவனுடைய மனம் தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டேயிருந்தது. முதலில் இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்ப வேண்டும்; பின்னர், கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும். எப்படித் தப்புவது; அதுதான் தெரியவில்லை.

பார்க்கப் போனால் இவர்களிடமிருந்து தப்புவது பெரிய காரியமில்லை. இரண்டு பேரையும் ஒரு விநாடி நேரத்தில் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடலாம். ஆனால் எங்கே ஓடுவது? தஞ்சைக் கோட்டையைப் பழுவேட்டரையர்கள் எவ்வளவு பலப்படுத்திக் கட்டியிருக்கிறார்கள் என்பது நாடறிந்த செய்தி. அவர்களுடைய அனுமதியின்றித் தஞ்சைக் கோட்டைக்குள் காற்றுக் கூட நுழைய முடியாது என்று ஜனங்கள் சொல்லுவார்கள். யமனும் வரமுடியாது என்று சக்கரவர்த்தியே இன்று காலையில் சொன்னார். அத்தகைய கோட்டையிலிருந்து எப்படி செல்வது? இந்த இருவரையும் தொட வேண்டியது தான்; அவர்கள் உடனே கூச்சல் கிளப்பிவிடுவார்கள். அடுத்த கணத்தில் தான் பாதாளச் சிறைக்குப் போக நேரிடும். அல்லது உயிரிழக்க நேரிடும். இவர்களைத் தாக்குவதில் பயனில்லை; தாக்காமல் தந்திரத்தினாலேயே தப்பிக்க வேண்டும். அப்படித் தப்பித்த பிறகு கோட்டையிலிருந்து வெளியேற வழி தேட வேண்டும். எவ்வளவு பலமான கோட்டையாயிருந்தாலும் இரகசியச் சுரங்கவழி இல்லாமற் போகாது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அது யாருக்குத் தெரிந்திருக்கும்? தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தாலும், தனக்குச் சொல்வார்களா?

இப்படிப் பலவகையாகச் சிந்தித்துக்கொண்டே நடந்த போது, சட்டென்று பழுவூர் இளைய ராணியின் நினைவு வந்தது. ஆகா! அந்தக் கோட்டைக்குள் யாராவது தனக்கு உதவி செய்வதாயிருந்தால், அந்த மாதரசிதான் செய்யக்கூடும். அதுவும் சந்தேகந்தான். ஆனால் ஆழ்வார்க்கடியானின் பெயரைச் சொல்லி ஏதேனும் தந்திர மந்திரம் செய்து பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதற்கு முதலில் பழுவேட்டரையரின் அரண்மனையைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தாலும், தான் அங்கே ராணியைப் பார்க்கச் செல்வது இந்தத் தடியர்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் இவர்கள் போய்ச் சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிவிடுவார்கள். அதிலிருந்து என்ன விபரீதம் நேருமோ, யார் கண்டது? ஒருவேளை, பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில் நாம் இருக்கும் போது அவரே வந்துவிட்டால் என்ன செய்வது? சிங்கத்தின் குகைக்குள் நாமாகச் சென்று தலையைக் கொடுப்பதுபோல ஆகுமே?

வந்தியத்தேவனுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய வாயும் கண்களும் சும்மா இருந்து விடவில்லை. பின்னோடு வந்தவர்களை "அது என்ன?" "இது என்ன?", "அது யார் அரண்மனை", "இது யார் மாளிகை?", "இது என்ன கட்டிடம்?" "அது என்ன கோபுரம்?" என்றெல்லாம் அவன் வாய் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவனுடைய காதுகள் "இது பெரிய பழுவேட்டரையர் அரண்மனை" அல்லது "பழுவூர் இளையராணி அரண்மனை" என்ற மறுமொழி வருகிறதா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தன. அவனுடைய கண்களோ அப்புறமும் இப்புறமும் நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்தன. அப்படிப் பார்த்து வந்தபோது ஒரு விஷயம் அவன் கண்கள் வழியாக மனத்தில் நன்கு பதிந்தது. கோட்டைக்குள்ளே பிரதான வீதிகள் விசாலமாயும் ஜனப் போக்குவரவு நிறைந்ததாயும் இருந்தபோதிலும் சந்துபொந்துகளும் ஏராளமாயிருந்தன. மரமடர்ந்த தோட்டங்களும் அதிகமாயிருந்தன. அந்தச் சந்து பொந்துகளின் வழியாகச் சென்று அடர்ந்த தோட்டங்களுக்குள் புகுந்து மறைந்து கொள்வது அசாத்தியமான காரியம் அல்ல. ஒரு நாள், இரண்டு நாள் கூடத் தலைமறைவாக இருப்பது சாத்தியந்தான். ஆனால் யாரும் பாராத சமயத்தில் மறைந்து கொள்ள வேண்டும்; யாரும் தேடாமலும் இருக்கவேண்டும். சின்னப் பழுவேட்டரையர் அவருடைய கணக்கற்ற ஆட்களைத் தேடுவதற்கு ஏவிவிட்டால் மறைந்திருப்பது சாத்தியமல்ல. அல்லது யாருடைய வீட்டுக்குள்ளாவது புகுந்து அடைக்கலம் பெற வேண்டும். அம்மாதிரி தஞ்சைக் கோட்டைக்குள் தனக்கு அடைக்கலம் யார் கொடுப்பார்கள்? பழுவூர் ராணி கொடுத்தால் தான் கொடுத்தது. தன்னுடைய கற்பனா சக்தியையெல்லாம் பிரயோகித்து அவளிடம் கதை கட்டிச் சொல்லி நம்பும்படி செய்யவேண்டும். அதற்கு முதலில், இவர்களிடமிருந்து தப்பித்து நழுவ வேண்டும்....

ஆகா! இது என்ன கோஷம்? இது என்ன ஆர்ப்பாட்டம்?... ஓ! இவ்வளவு கூட்டமாகப் போகிறார்களே, இவர்கள் யார்? தெய்வமே! நீ என் பக்கத்தில் இருக்கிறாய் என்பதில் சந்தேகமில்லை. இதோ ஒரு வழி புலப்படுகிறது! இதோ ஒரு துணை தோன்றுகிறது!....

குறுக்கு வீதியில் ஒரு திருப்பத்துக்கு வந்ததும், பிரதான வீதி வழியாக ஒரு பெரிய கும்பல் வாத்திய கோஷ ஜயகோஷ முழக்கங்களுடன் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து வந்தியத்தேவன் மேற்கண்டவாறு நினைத்தான். அந்தக் கும்பலில் சென்றவர்கள் வேளக்காரப் படையினர் என்பதைத் தெரிந்து கொண்டான். வழக்கம்போல் மகாராஜாவைத் தரிசனம் செய்துவிட்டு அவர்கள் கோட்டையை விட்டு வெளியேறுகிறார்கள் போலும்! இந்தக் கூட்டத்தில் தானும் கலந்து விட்டால்?... ஆகா! தப்புவதற்கு இதைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் என்ன?

பின்னோடு வருகிறவர்கள் அவ்வளவு சுலபத்தில் தன்னை விட்டுவிடமாட்டார்கள். தான் கூட்டத்தில் கலந்தால் அவர்களும் கூடத் தொடர்ந்து வருவார்கள். கோட்டை வாசல் வழியாக வெளியேறுவதும் எளிதாயிராது! வாசற் காவல் செய்வோர் அவ்வளவு ஏமாந்தவர்களாக இருந்துவிடுவார்களா? தன்னைக் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்திவிட மாட்டார்களா? ஆயினும் ஒரு பிரயத்தனம் செய்து பார்க்கவேண்டியதுதான். வேறு வழியில்லை. கடவுளே பார்த்துக் காட்டியிருக்கும் இந்த வழியை உபயோகித்துக் கொள்ளாவிட்டால் தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இல்லை.

வழக்கம்போல், பின்னோடு வந்தவர்களைப் பார்த்து, "இது என்ன கூட்டம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான். "வேளக்காரப் படை" என்று சொன்னதும், அந்தப் படையைப் பற்றிய விவரங்களைக் கேட்கலானான். அத்தகைய வீரப்படையில் சேர்ந்துவிட விரும்புவதாகவும், ஆகையால் நெருங்கிப் பார்க்க வேண்டுமென்றும் சொன்னான். இப்படியெல்லாம் பேசிக் கொண்டே வேளக்கார படையை அணுகினான். சிறிது நேரத்தில் "முன்னால் தாரை தப்பட்டை முழக்குகிறவர்களைப் பார்க்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே வேளக்காரப் படைக் கூட்டத்தில் கலந்துவிட்டான்.

கூட்டம் மேலே போகப் போக, இவனும் ஒரே இடத்தில் நில்லாமல் மேலும் கீழும் அப்பாலும் இப்பாலும் நகர்ந்து கொண்டிருந்தான். வேளக்காரப் படை வீரர்களைக் காட்டிலும் அதிக உற்சாகத்துடன் கோஷங்களைச் செய்தான். அவ்வீரர்களில் சிலர் இவனை உற்று உற்றுப் பார்த்தார்கள். "இவன் யார் பைத்தியக்காரன்?" என்ற பாவனையில் சிலர் பார்த்தார்கள். "மிதமிஞ்சி மதுபானம் செய்தவன் போலிருக்கிறது!" என்ற பாவனையில் சிலர் பார்த்தார்கள். ஆனால் யாரும் அவனைத் தடுக்கவோ, அப்புறப்படுத்தவோ முயலவில்லை.

அவனுடன் வந்த சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களோ, வேளக்காரப் படைக்குள் நுழையத் துணியவில்லை. "எப்படியும் அவன் வெளியில் வருவான். அப்போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம்" என்ற நம்பிக்கையுடன் வேளக்காரப் படையின் ஓரமாகச் சற்று விலகியே அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள்.

அச்சமயம் வீதியில் எதிர்ப்புறமாகத் தயிர்க் கூடையுடன் வந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீ வேளைக்காரப் படைக்கு ஒதுங்கி ஒரு சந்தில் நின்றாள். அந்த வீரர்களில் ஒருவன், "அம்மா! தாகமாயிருக்கிறது; கொஞ்சம் தயிர் தருகிறாயா?" என்று கேட்டான். அந்தப் பெண் துடுக்காக, "தயிர் இல்லை; கன்னத்தில் இரண்டு அறை வேணுமானால் தருகிறேன்!" என்றாள்.

அதைக் கேட்ட ஒரு வீரன் "ஓகோ! அதைத்தான் கொடுத்து விட்டுப் போ!" என்று அந்தப் பெண்ணை அணுகிச் சென்றான். தயிர்க்காரப் பெண் பயந்து ஓடினாள். வீரன் அவளைத் தொடர்ந்து ஓடினான். அவனைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக இன்னும் இரண்டு வீரர்கள் ஓடினார்கள். ஓடியவர்கள் அனைவரும் தலைக்குத் தலை ஒவ்வொரு விதமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடியபடியால் விஷயம் என்னவென்பதே யாருக்கும் தெரியவில்லை. ஏதோ தமாஷ் என்று மட்டும் எல்லாரும் எண்ணினார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் வல்லவரையன். அந்த ஒரு கணத்தில் அவன் மனத்திற்குள் தீர்மானத்துக்கு வந்துவிட்டான். தீர்மானிப்பதும் தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றுவது வந்தியத்தேவனுக்கு ஒன்றுதான் என்பதை நாம் ஏற்கனவே பல முறை பார்த்திருக்கிறோம். தீர்மானித்த பிறகு தயங்குவதென்பது அவனுடைய இயற்கைக்கு விரோதமானது. எனவே, "ஓடு! ஓடு!", "பிடி! பிடி!" என்று கூவிக் கொண்டே வந்தியதேவனும், தயிர்க்காரப் பெண்ணைத் துரத்திக்கொண்டு ஓடியவர்களைத் தொடர்ந்து தானும் ஓடினான். அந்தப் பெண் சற்றுத் தூரம் ஓடி, ஒரு குறுகிய சந்தில் திரும்பினாள். பின் தொடர்ந்து ஓடியவர்கள் அங்கே போய்ப் பார்த்தபோது தயிர்க்காரப் பெண்ணைக் காணவில்லை. மாயமாய் மறைந்து விட்டாள்! துரத்தி வந்த வீரர்களும் அவளைப் பற்றி அப்புறம் கவலைப்படவில்லை; திரும்பிவிட்டார்கள். வந்தியத்தேவன் மட்டும் திரும்பவில்லை. அந்தப் பெண் புகுந்து சென்ற சந்து வழியாகவே மேலும் ஓடினான். இன்னும் இரண்டு மூன்று சந்துகள் புகுந்து திரும்பிய பிறகே ஓட்டத்தை நிறுத்தி மெதுவாக நடக்கலுற்றான்.

வேளக்காரப் படை சாதாரணமாகக் கோட்டையிலிருந்து வெளியேறும் நேரம் சூரியாஸ்தமன நேரம் அல்லவா? வந்தியத்தேவன் இப்போது புகுந்த சென்ற சந்துகளில் ஏற்கனவே இருள் சூழ்ந்துவிட்டது. இருபுறமும் சில இடங்களில் மதில் சுவராயிருந்தது. சில இடங்களில் செடி கொடிகள் அடர்ந்த வேலியாயிருந்தது. வந்தியத்தேவன் எங்கும் நிற்காமல் போய்க் கொண்டேயிருந்தான். திசையைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. பெரிய வீதிகளில் புகாமல் சந்து பொந்துகளின் வழியாகப் புகுந்து போனால் எப்படியும் கோட்டை வெளிச்சுவரை அடைந்தே தீரவேண்டும். கோட்டைச் சுவரை அடைந்த பிறகு என்ன செய்வது என்பதைப் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம். யோசித்து யுக்திகள் கண்டுபிடிப்பதற்குத்தான் இரவெல்லாம் நேரம் இருக்கிறதே!

சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாக இருட்டி விட்டது. அவன் சென்ற பாதை கடைசியில் ஒரு மதில் சுவரில் வந்து முடிந்தது. இருட்டில் நடந்து வந்த வந்தியத்தேவன் அச்சுவரின் மேல் இலேசாக மோதிக் கொண்டான். சுவர் என்று மட்டும் தெரிந்தது. அது என்ன சுவர், எவ்வளவு உயரமான சுவர் என்பது ஒன்றும் தெரியவில்லை. அநேகமாக அது கோட்டை மதில் சுவராகவே இருக்கலாம். அப்படியானால் இங்கேயே உட்கார்ந்து விடுவது தான் சரி. சிறிது நேரத்துக்கெல்லாம் சந்திரன் உதயம் ஆகும். அப்போது பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதுவரை ஒளிந்திருப்பதற்கு இதைக் காட்டிலும் நல்ல இடம் இருக்க முடியாது. இத்தனை நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் திரும்பிப் போய்ச் சொல்லியிருப்பார்கள். கோட்டைத் தளபதி தன்னுடைய ஆட்களை நாலாபுறமும் ஏவியிருப்பார். ஒருவேளை வேளக்காரப் படையுடன் தான் வெளியேறியிருக்கலாம் என்றும் சந்தேகித்திருப்பார். கோட்டைக்கு உள்ளேயும் வெளியிலேயும் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள். தேடட்டும்; தேடட்டும்; நன்றாகத் தேடட்டும். அவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு நான் இக்கோட்டையை விட்டுத் தப்பித்துச் செல்லாவிட்டால் நான் வாணர் குலத்தவன் அல்ல! என் பெயரும் வந்தியத்தேவன் அல்ல!

ஆனால் சந்திரன் உதயமாகி நிலா அடிக்கத் தொடங்கி விட்டால் பழுவேட்டரையர் ஆட்களுக்கும் வசதியாகப் போய்விடும். தன்னைத் தேடி இங்கே வந்தாலும் வந்துவிடுவார்கள். வந்தால் வரட்டும்; தாராளமாய் வரட்டும்; இந்த அடர்ந்த தோப்புக்குள் ஒளிந்து கொண்டால் யார் தான் தேடிக் கண்டு பிடிக்க முடியும்?

இப்படி எண்ணிக்கொண்டே சுவரின் மீது சாய்ந்துகொண்டு வந்தியத்தேவன் உட்கார்ந்தான். இளம்பிள்ளையாதலாலும் பகலெல்லாம் அலைந்து களைத்திருந்தபடியாலும் கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. மேலக்காற்றில் மரக்கிளைகள் ஆடி ஒன்றோடொன்று உராய்ந்து உண்டாக்கிய சத்தம் தாலாட்டுப் பாடலைப் போல் மயக்கத்தை உண்டு பண்ணியது. அப்படியே தூங்கிவிட்டான்.

அவன் தூக்கம் நீங்கிக் கண் விழித்த போது சந்திரன் உதயமாகிக் கீழ்வானத்தில் சிறிது தூரம் மேலே வந்திருந்தது. அடர்ந்த மரக்கிளைகளின் வழியாக நிலா வெளிச்சம் வந்து சுற்றுப் புற காட்சிகளை அரைகுறையாக அவனுக்குக் காட்டியது. தனது நிலை என்ன வென்பதை வந்தியத்தேவன் ஞாபகப்படுத்திக் கொண்டான். சுவரில் சாய்ந்தபடி தான் தூங்கிவிட்டது அவனுக்கு வியப்பை அளித்தது. அதைக் காட்டிலும் துயில் நீங்கி விழித்துக் கொண்டது ஆச்சரியம் அளித்தது. தன்னுடைய துயிலை நீக்கி விழிக்கச் செய்த காரணம் யாது? ஏதோ ஒரு குரல் கேட்டதுபோல் தோன்றியதே? அது மனிதக் குரலா? அல்லது விலங்கின் குரலா? அல்லது இரவில் விழித்திருக்கும் பறவையின் குரலா? - குரல் கேட்டதுதான் உண்மையா?

வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். அரைகுறையான நிலா வெளிச்சத்தில் செங்குத்தான சுவர் தெரிந்தது. ஆ! இது கோட்டைச் சுவராயிருக்க முடியாது. கோட்டைச் சுவர் இன்னும் உயரமாயிருக்கும். ஒரு வேளை வெளிக் கோட்டைச் சுவருக்குள்ளே இன்னொரு சிறிய கோட்டைச் சுவராக இருக்குமோ? அல்லது பெரியதொரு அரண்மனைத் தோட்டத்தின் மதில் சுவரோ?

அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்தியத்தேவன் எழுந்தான். ஒருகணம் அவனுடைய இருதயத் துடிப்பு நின்று போயிற்று. வயிற்றிலுள்ள குடல் மேலே மார்பு வரை விம்மி வந்து அடைத்தது. அவ்வளவு பீதி உண்டாயிற்று. அதோ அந்த மதில் சுவருக்கு மேலேயுள்ள மரக்கிளையில் இருப்பது என்ன? மரங்களில் வசிக்கும் வேதாளம் என்னும் பிசாசைப் பற்றி அவன் கேட்டிருந்த கதைகள் பலவும் நினைவுக்கு வந்தன.

ஆனால் வேதாளம் பேசுமா? மனிதக் குரலில் பேசுமா? அதுவும் பெண்ணின் குரலில் பேசுமா? இந்த வேதாளம் அவ்வாறு பேசுகிறதே? என்ன சொல்கிறது என்று கேட்கலாம்.

"என்ன ஐயா! சுவரில் சாய்ந்தபடி தூங்கிவிட்டாயா? எத்தனை தடவை கூப்பிடுகிறது?"

ஆ! இது வேதாளம் அல்ல. மனித குலத்துப் பெண்மணிதான் பேசுகிறாள். மரக்கிளையின் மீது உட்கார்ந்திருப்பவள் ஒரு பெண்மணிதான்! இது என்ன கனவா? அல்லது உண்மையில் நடப்பதா?

"அழகுதான்! இன்னும் தூக்கம் கலையவில்லை போலிருக்கிறது. இதோ ஏணியை வைக்கிறேன். ஜாக்கிரதையாக ஏறி வா! கீழே விழுந்து தொலைக்காதே!"

இப்படிச் சொல்லிக் கொண்டே அப்பெண் சுவரின் உட்புறத்திலிருந்து மெல்லிய மூங்கிலினால் ஆன ஏணி ஒன்றை எடுத்து வெளிப்புறத்தில் சுவர் ஓரமாக வைத்தாள்.

வந்தியத்தேவனுக்கு ஒன்றும் விளங்கவில்லைதான்! ஆனால் இப்படிப்பட்ட அரிய சந்தர்ப்பத்தை, - தன்னைத் தேடி வரும் சந்தர்ப்பத்தை அவன் விட்டுவிடுவானா?

வருகிறது வரட்டும்; பிறகு நடப்பது நடக்கட்டும். இப்போது இந்த ஏணியில் ஏறலாம்; சுவரின் உச்சியை அடைந்த பிறகு மற்ற விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஏணியில் முக்கால் பங்கு அவன் ஏறியபோது அந்தப் பெண் மறுபடியும், "நல்ல தாமதக்காரன் நீ! அங்கே இளைய ராணியம்மாள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நீ மதில் சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாய்!" என்றாள். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியினால் வந்தியத்தேவன் ஏணியிலிருந்து நழுவி விழுந்து விட இருந்தான். நல்ல வேளையாக, அங்கே சுவரில் நீட்டிக் கொண்டிருந்த கல்லைப் பிடித்துக் கொண்டு சமாளித்தான்.

இளைய ராணியென்றால், பழுவூர் இளைய ராணியாகத்தான் இருக்கும்! தான் இங்கே வந்து உட்கார்ந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது? மாயமந்திரம் ஏதோ அவள் அறிந்திருக்க வேண்டும்! தன்னைப் பார்ப்பதில் அவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்படக் காரணம் என்ன? ஒரு வேளை, - ஒரு வேளை, - வேறு எவனுக்காகவோ வைத்த ஏணியில் நான் ஏறி விட்டேனோ? எப்படியிருந்தாலும் இருக்கட்டும்! முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது! எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்து போய்விடுகிறது.

சுவரின் உச்சியருகில் வந்ததும் அவனுடைய கையைப் பிடித்து அந்தப் பெண் தூக்கிவிட்டாள். அப்போது நிலா வெளிச்சம் அவள் முகத்தில் அடித்தது. இதற்குள் ஆச்சரியப்படும் சக்தியையே வந்தியத்தேவன் இழந்து விட்டான். அதனால் தான் அவளுடைய முகம் வேளக்காரப் படையினர் துரத்திய தயிர்கூடைக்காரியின் முகம்போலத் தோன்றியும், அவன் சுவரிலிருந்து தவறி விழவில்லை. இன்றிரவு இதற்கு மேல் என்னென்ன வியப்பான நிகழ்ச்சிகள் நடந்தாலும் வியப்படைவதற்கு இடமில்லைதான்.

"ஊம்! ஏன் விழித்துக் கொண்டு சுவர் மேலேயே உட்கார்ந்திருக்கிறாய்? ஏணியை எடுத்து உள்ளே இறக்கிவிட்டுக் குதி சீக்கிரம்!" என்று சொல்லிக் கொண்டே அந்தப் பெண் சரசரவென்று மரக்கிளையிலிருந்து கீழே இறங்கினாள்.

வந்தியத்தேவன் அவள் கூறியவாறே செய்தான். அவன் இறங்கிய இடம் ஒரு விஸ்தாரமான தோட்டம் என்று தெரிந்தது. சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய அரண்மனையின் மாடகூட கோபுரங்களும் சிகரங்களும் மங்கிய நிலா வெளிச்சத்தில் சொப்பன உலகக் காட்சியைப் போல் தோன்றின.

அது யாருடைய அரண்மனை என்று கேட்பதற்காக வந்தியத்தேவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். உடனே அந்தப் பெண் "உஷ்!" என்று சொல்லி, உதட்டில் விரலை வைத்து எச்சரித்துவிட்டு முன்னால் நடந்தாள். வந்தியத்தேவன் அவளைத் தொடர்ந்து சென்றான்.













Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 33. மரத்தில் ஒரு மங்கை!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: