BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. நந்தினியின் ஊடல்  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. நந்தினியின் ஊடல்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. நந்தினியின் ஊடல்  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. நந்தினியின் ஊடல்    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. நந்தினியின் ஊடல்  Icon_minitimeSat May 07, 2011 5:12 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

38. நந்தினியின் ஊடல்


பெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது. வீதிப் புழுதியை வாரி அடித்துக் கொண்டு சுழன்று சுழன்று அடித்த மேலக் காற்றைக் காட்டிலும் அவருடைய உள்ளத்தில் அடித்த புயல் அதிகப் புழுதியைக் கிளப்பியது. அருமைச் சகோதரனை அவ்வளவு தூரம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது பற்றிச் சிறிது பச்சாதாபப் பட்டார். அவர்மீது தம்பி வைத்திருந்த அபிமானத்துக்கு அளவேயில்லை. அந்த அபிமானத்தின் காரணமாகத்தான் ஏதோ சொல்லிவிட்டான். இருந்தாலும் சந்தேகக்காரன். எதற்காக அநாவசியமாய் நந்தினியைப் பற்றிக் குறைகூற வேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் போலும். தான் செய்த தவறுக்குப் பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை. ஆனால் இவன் எதற்காக அந்த இழிவான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்? கைவசம் சிக்கியிருந்த அந்த மோசக்காரத் திருட்டு வாலிபனை விட்டுவிட்டு, அதற்காக ஒரு பெண்ணின் பேரில், அதுவும் மதனியின் பேரில் குற்றம் சொல்வது இவனுடைய வீரத்துக்கும் ஆண்மைக்கும் அழகாகுமா? போனால் போகட்டும்! அதற்காகத்தான் அவன் வருந்தி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு விட்டானே? மேலும் அதைப்பற்றி நாம் எதற்காக நினைக்க வேண்டும்?

இருந்தாலும், அவன் கூறியதில் அணுவளவேனும் உண்மை இருக்கக் கூடுமோ? ஒருவேளை இந்த முதிய பிராயத்தில் நமக்குப் பெண் பித்துதான் பிடித்திருக்குமோ? எங்கேயோ காட்டிலிருந்து பிடித்து வந்த ஒரு பெண்ணுக்காக, கூடப் பிறந்த சகோதரனை, நூறு போர்க்களங்களில், நமக்குப் பக்கபலமாயிருந்து போரிட்டவனை, பலமுறை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நமக்கு வந்த அபாயத்தைத் தடுத்துக் காத்தவனையல்லவா கடிந்து கொள்ள வேண்டியிருந்தது? அப்படி என்ன அவள் உயர்த்தி? அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது. அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் சில சமயம் சந்தேகத்துக்கு இடமாகத் தான் இருக்கின்றன. சீச்சீ! தம்பியின் வார்த்தை நம் உள்ளத்திலும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்கிவிட்டதே! என்ன அநியாயம்? அவள் எப்படி நம்மிடம் உயிக்குயிரான அன்பு வைத்திருக்கிறாள்? எவ்வளவு மட்டு மரியாதையுடன் நடந்து கொள்ளுகிறாள்? நம்முடைய காரியங்களில் எல்லாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறாள்? சில சமயம் நமக்கு யோசனைகள் கூடச் சொல்லி உதவுகிறாளே? இந்த அறுபது வயதுக்கு மேலான கிழவனைத் துணிந்து மணந்து கொண்டாளே, அதைப் பார்க்க வேண்டாமா? தேவலோக மாதரும் பார்த்துப் பொறாமைப்படும்படியான அந்தச் சுந்தரிக்குச் சுயம்வரம் வைத்தால், சொர்க்கத்திலிருந்து தேவேந்திரன் கூட ஓடி வருவானே? இந்த உலகத்து மணிமுடி வேந்தர் யார்தான் அவளை மணந்துகொள்ள ஆசைப்பட மாட்டார்கள்? ஆ! இந்தச் சுந்தர சோழன் கண்ணில் அவள் அகப்பட்டிருந்தால் போதுமே? அப்படிப் பட்டவளைப்பற்றி எந்த விதத்திலும் ஐயப்படுவது எவ்வளவு மடமை? இளம் பெண்ணை மணந்து கொண்ட கிழவர்கள், இல்லாத சந்தேகங்கள் எல்லாம் கொண்டு தம் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உலக வாழ்க்கையில் அத்தகைய உதாரணங்களைப் பார்த்துமிருக்கிறோம். அம்மாதிரி ஊரார் சிரிப்பதற்கு நம்மை நாமே இடமாக்கிக் கொள்வதா?

இருந்த போதிலும் சிற்சில விவரங்களை அவளுடைய வாய்ப் பொறுப்பில் கேட்டறிந்து கொள்வதும் அவசியந்தான். அடிக்கடி முத்திரை மோதிரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்கிறாளே, எதற்காக? அடிக்கடி தன்னந்தனியாக லதா மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறாளே, அது எதற்கு? யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோமே, அவளே ஒப்புக்கொண்டாளே, அது எதற்காக? மந்திரவாதியிடம் இவள் என்னத்தைக் கேட்டறியப் போகிறாள்? மந்திரம் போட்டு இவள் யாரை வசப்படுத்த வேண்டும். இதெல்லாம் இருக்க, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற நிலையில் என்னை எத்தனை காலம் வைத்திருக்கப் போகிறாள்? ஏதோ விரதம், நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை! கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது? அதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாது! இன்றிரவு அதைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசித் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்!

பழுவேட்டரையர் அவருடைய மாளிகை வாசலுக்கு வந்த போது அரண்மனைப் பெண்டிரும் ஊழியர்களும் தாதியர்களும் காத்திருந்து வரவேற்றார்கள். ஆனால் அவருடைய கண்கள் சுற்றிச் சுழன்று பார்த்தும் அவர் பார்க்க விரும்பிய இளையராணியை மட்டும் காணவில்லை. விசாரித்ததில், இன்னும் லதா மண்டபத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. அவர் மனத்தில், "நள்ளிரவு ஆன பிறகும் அங்கு இவளுக்கு என்ன வேலை!" என்ற கேள்வியுடன் தம்மை அலட்சியம் செய்கிறாளோ என்ற ஐயமும் கோபமும் எழுந்தன. சிறிது ஆத்திரத்துடனே கொடி மண்டபத்தை நோக்கிச் சென்றார்.

இவர் கொடி மண்டப வாசலை அடைந்த போது நந்தினியும் அவளுடைய தோழியும் எதிரே வருவதைக் கண்டார். அப்படி வந்தவள் இவரைக் கண்டதும் நின்று, அவரைப் பார்க்காமல், தோட்டத்தில் குடிகொண்டிருந்த இருளை நோக்கத் தொடங்கினாள். தாதிப் பெண் சற்று அப்பாலேயே நின்றுவிட்டாள்.

பழுவேட்டரையர் நந்தினியின் அருகில் வந்த பின்னரும் அவள் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. நந்தினியைக் கடிந்து கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு வந்ததற்கு மாறாக அவளுடைய கோபத்தை இவர் தணிக்க முயல வேண்டியதாயிற்று!

"நந்தினி! என் கண்மணி! என்ன கோபம்? ஏன் பாராமுகம்?" என்று கேட்டுக்கொண்டு தம் இரும்பையொத்த கையை அவளுடைய தோளின்மீது மிருதுவாக வைத்தார்.

நந்தினியோ மலரினும் மிருதுவான தன் கர மலரினால் அவருடைய வஜ்ராயுதத்தையொத்த கையை ஒரு தள்ளுத் தள்ளினாள். அம்மம்மா! மென்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் இத்தனை பலமும் உண்டா?

"என் உயிரே! உன் பட்டுக் கையினால் தொட்டு என்னைத் தள்ளினாயே, அதுவே என் பாக்கியம்! திரிகோண மலையிலிருந்து விந்திய மலை வரையில் உள்ள வீராதிவீரர் யாரும் செய்ய முடியாத செயலை நீ செய்தாய்! அது என் அதிர்ஷ்டம்! என்றாலும், எதற்குக் கோபம் என்று சொல்ல வேண்டாமா? உன் தேன் மதுரக் குரலைக் கேட்க என் காது தாபம் அடைந்து தவிக்கின்றதே?" என்று கெஞ்சினார் ஆயிரம் போர்க்களங்களில் வெற்றிக் கண்ட அந்த மகாவீரர்.

"தாங்கள் என்னைப் பிரிந்து போய் எத்தனை நாள் ஆயிற்று? முழுமையாக நாலு நாள் ஆகவில்லையா?" என்று சொன்ன நந்தினியின் குரலில் விம்மல் தொனித்தது. அது எத்தனையோ வாள்களையும் வேல்களையும் தாங்கி நின்றும் தளராத பழுவேட்டரையரின் நெஞ்சத்தை அனலில் இட்ட மெழுகைப் போல் உருக்கிவிட்டது.

"இதற்காகத்தானா இவ்வளவு கோபம்? நாலு நாள் பிரிவை உன்னால் சகிக்க முடியவில்லையா? போர்க்களத்துக்குப் போக நேர்ந்தால் என்ன செய்வாய்? மாதக் கணக்காகப் பிரிந்திருக்க நேரிடுமே?" என்றார்.

"தாங்கள் போர்க்களத்துக்குப் போனால் மாதக்கணக்கில் தங்களை நான் பிரிந்திருப்பேன் என்றா எண்ணினீர்கள்? அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தங்களுடைய நிழலைப் போல் தொடர்ந்து நானும் போர்க்களத்துக்கு வருவேன்..."

"அழகாயிருக்கிறது! உன்னைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போனால் நான் யுத்தம் பண்ணினாற் போலத்தான்! கண்மணி! இந்த மார்பும் தோள்களும் எத்தனையோ கூரிய அம்புகளையும் வேல் முனைகளையும் தாங்கியதுண்டு. அவ்வாறு ஏற்பட்ட காயங்கள் அறுபத்து நான்கு என்று உலகோர் என்னைப் புகழ்வதுமுண்டு. ஆனால் உன்னுடைய மிருதுவான மலர் மேனியில் ஒரு சிறு முள் தைத்து விட்டால், என்னுடைய நெஞ்சு பிளந்து போய்விடும். எத்தனையோ வாள்களும் வேல்களும் என்னைத் தாக்கிச் சாதிக்க முடியாத காரியத்தை உன் காலில் தைக்கும் சிறிய முள் சாதித்து விடும். உன்னை எப்படி யுத்த களத்துக்கு அழைத்துப் போவேன்? நீ இத்தனை நேரம் கருங்கல் தரையில் நின்றுகொண்டிருப்பதே எனக்கு வேதனையாயிருக்கிறது. இப்படி வா; வந்து உன் மலர்ப் படுக்கையில் வீற்றிரு! உன் திருமுகத்தைப் பார்க்கிறேன். நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே! உன்னைக் காணாத ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாயிருந்தது. இப்போதாவது என் தாபம் தீர, உன் பொன் முகத்தைப் பார்க்கிறேன்!" என்று கூறி, நந்தினியின் கரத்தைப் பற்றி அழைத்துக்கொண்டு போய் மஞ்சத்தில் உட்கார வைத்தார்.

நந்தினி தன் கண்களை துடைத்துக் கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. 'ஆகா! இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே? மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம்! ஆனால் இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை!' - இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர்.

அவளைக் கேள்வி கேட்பது, கடிந்து கொள்வது என்கிற உத்தேசம் போயே போய்விட்டது! நந்தினி காலால் இட்ட பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கும் வந்து விட்டார்! எந்தவித அடிமைத்தனமும் பொல்லாததுதான்! ஆனால் பெண்ணடிமைத்தனத்தைப் போல் ஒருவனை மதி இழக்கச் செய்வது வேறொன்றுமில்லை!

"நாலு நாள் வெளியூரில் இருந்து விட்டுத்தான் வந்தீர்களே, திரும்பி வந்தவுடன் நேரே ஏன் இங்கு வரவில்லை? என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார்!" என்று கேட்டாள் நந்தினி. கேட்டுவிட்டுக் கள்ளக் கோபத்துடன் அவரைக் கடைக் கண்ணால் பார்த்தாள்.

"அப்படியில்லை, என் கண்மணி! வில்லிலிருந்து புறப்பட்ட பாணத்தைப் போல் உன்னிடம் வருவதற்குத்தான் என் மனம் ஆசைப்பட்டது. ஆனால் அந்த அசட்டுப் பிள்ளை - மதுராந்தகன் - சுரங்க வழியின் மூலமாகப் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்கிறானா என்று தெரிந்து கொள்வதற்காகவே தம்பியின் வீட்டில் தாமதிக்க வேண்டியதாயிற்று..."

"ஐயா! தாங்கள் எடுத்த காரியங்களிலெல்லாம் எனக்குச் சிரத்தை உண்டு. தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றிபெற வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் ஏற வேண்டிய மூடு பல்லக்கில் ஓர் ஆண்பிள்ளையைத் தாங்கள் ஏற்றிக் கொண்டு போவதை நினைத்தால் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நாடு நகரங்களில் உள்ள ஜனங்கள் எல்லோரும் தாங்கள் போகுமிடமெல்லாம் என்னையும் கூட அழைத்துப் போவதாக எண்ணுகிறார்கள்..."

"அது எனக்கு மட்டும் சந்தோஷமளிக்கிறது என்றா நினைக்கிறாய்? இல்லவே இல்லை! ஆனால் எடுத்த காரியம் பெரிய காரியம். அதை நிறைவேற்றுவதற்காகச் சகித்துக்கொண்டு செய்கிறேன். மேலும், இந்த யோசனை கூறியதே நீதான் என்பதை மறந்து விட்டாயா? உன்னுடைய மூடு பல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போகும்படி நீதானே சொன்னாய்? கோட்டையிலிருந்து போகும் போதும் வரும் போதும் அவனைத் தனியாகச் சுரங்க வழியில் அனுப்பும் யுக்தியையும் நீதானே கூறினாய்?..."

"என்னுடைய கடமையைத் தான் நான் செய்தேன். கணவர் எடுத்திருக்கும், காரியத்துக்கு உதவி செய்வது மனைவியின் கடமை அல்லவா? ஏதோ எனக்குத் தெரிந்த யுக்தியைச் சொன்னேன். தங்களுக்கு அதனால்.."

"அது மட்டுமா செய்தாய்? இந்த மதுராந்தகன் உடம்பெல்லாம் விபூதியைப் பூசிக்கொண்டு ருத்ராட்ச மாலையை அணிந்து நமசிவாய ஜபம் செய்துகொண்டிருந்தான்! கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு 'அம்மாவுக்குப் பிள்ளை நான் தான்' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான்! அரசாள்வதில் ஆசை உண்டாக்க நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான். இப்போது அவனுக்கு உள்ள இராஜ்ய ஆசையைச் சொல்லி முடியாது. தற்போது அவனுடைய மனோராஜ்யம் இலங்கையிலிருந்து இமயமலை வரையில் பரவியிருக்கிறது! பூமியிலிருந்து ஆகாசம் வரையில் வியாபித்திருக்கிறது. நம்மைக் காட்டிலும் அவனுக்கு அவசரம் தாங்கவில்லை. சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான். நந்தினி! அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை!... ஆமாம், நீதான் இப்படிப்பட்ட மாயமந்திரக் காரியாயிருக்கிறாயே? வேறு மந்திரவாதியை நீ ஏன் அழைக்கிறாய்? அதைப்பற்றி அநாவசியமாக ஜனங்கள்..."

"அரசே! அதைப் பற்றி அநாவசியமாக யாரேனும் பேசினால், அப்படிப்பட்ட துஷ்டர்களின் நாக்கைத் துண்டித்துப் புத்தி கற்பிப்பது தங்கள் பொறுப்பு. மந்திரவாதியை நான் ஏன் அழைக்கிறேன் என்பதை முன்னமே சொல்லியிருக்கிறேன். தாங்கள் மறந்திருந்தால், இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள அந்தப் பெண் பாம்பின் விஷத்தை இறக்கத்தான். நீங்கள் ஆண்மை உள்ள புருஷர்கள். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள். 'கேவலம் பெண் பிள்ளைகள்' என்று அலட்சியம் செய்வீர்கள். பெண் பிள்ளைகளுடன் போர் செய்வது உங்களுக்கு அவமானம். ஆனால் நூறு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பெண் பிள்ளை அதிகமான தீங்கு செய்து விடுவாள். பாம்பின் கால் பாம்பு அறியும். அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். தங்களையும் என்னையும் சேர்த்து அவள் அவமானப்படுத்தியதைத் தாங்கள் மறந்திருக்கலாம். நான் மறக்க முடியாது. நூறு பெண்களுக்கு மத்தியில் என்னைப் பார்த்து, 'அந்தக் கிழவனுக்குத்தான் சாகப் போகிற சமயத்தில் பெண் மோகம் பிடித்துப் புத்தி கெட்டுப் போய்விட்டது; உன் அறிவு எங்கேயடி போயிற்று? அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்து கொண்டாய்?' என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா? 'தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே, எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே? போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய்க் கலியாணம் செய்துகொண்டாயே! என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா? இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது!" என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் பொங்கிய கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களின் வழியாகப் பெருகி அவளது மார்பகத்தை நனைத்தது












Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. நந்தினியின் ஊடல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 55. நந்தினியின் காதலன்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 47. நந்தினியின் மறைவு
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 23. நந்தினியின் நிருபம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. நிலவறை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: