BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்  Icon_minitimeSun May 08, 2011 4:50 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்





கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின. வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, - இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், - இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அரிய பொருளை, - இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, - அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான். "எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை,- கற்பகக் கனியை, - என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?" என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜுவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.

ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.

இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்!

மேற்கூறிய ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் ஒத்திருந்தார்கள் அந்த நேரத்தில் நம் வல்லவரையனும் குந்தவை தேவியும். இப்பூவுலகில் தாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த நிமிஷத்துக்காகவே,- இந்தச் சந்திப்புக்காகவே, - என்பதை அவர்களுடைய உள்ளுணர்ச்சி உணர்த்தியது. ஆனால் ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் போலின்றி இவர்கள் நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் அல்லவா? ஆகையால் தங்களுடைய பரஸ்பர அந்தஸ்தில் இருந்த வேற்றுமையை அவர்களால் மறக்க முடியவில்லை. முழுதும் உணர்ச்சி வசப்பட்டு மனத்தைக் கட்டுக்கடங்காமல் அவர்கள் விட்டுவிடவில்லை. ஒரு கணம் ஒருவரையருவர் பார்த்துக் கண்ணோடு கண் சேர்வதும், அடுத்த கணத்தில் தங்கள் கண்களைத் திருப்பி அக்கம் பக்கத்திலிருந்த பூ, மரம், பட்டுப் பூச்சி, ஓடை முதலியவற்றைப் பார்ப்பதுமாயிருந்தார்கள்.

ஈசான சிவபட்டர் தொண்டையைக் கனைத்த பிறகுதான் இருவரும் ஏதோ ஒரு முக்கியமான காரியம் பற்றி இங்கே சந்திக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள்.

"நீர் என்னைத் தனிமையில் பார்க்க வேண்டுமென்று ஈசான பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?" என்று குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு இளையபிராட்டி வினவினாள்.

அந்தக் குரலின் கடுமையும் அதிகார தோரணையும் வந்தியத்தேவனை நிமிர்ந்து நிற்கச் செய்தன.

"தாங்கள் யார் என்று தெரிந்தால் அல்லவா தங்களது கேள்விக்கு விடை சொல்லலாம்? ஈசான பட்டர் என்னைத் தவறான இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரோ என்று ஐயுறுகிறேன்!" என்றான் அந்த வீர வாலிபன்.

"எனக்கும் அவ்வித சந்தேகம் உண்டாகிறது. நீர் யாரைப் பார்க்க விரும்பினீர்?"

"சோழர் தொல்குலத்தின் மங்காமணி விளக்கை, சுந்தர சோழ மன்னரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலருக்குப் பின் பிறந்த சகோதரியை, அருள்மொழிவர்மரின் அருமைத் தமக்கையை, இளையபிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென்று ஈசான சிவபட்டரிடம் சொன்னேன்......"

குந்தவைப் பிராட்டி புன்னகை பூத்து, "அவ்வளவு பெருமையையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பவள் நான் தான்!" என்றாள்.

"அப்படியானால் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நான் பார்த்த நாரீமணி தாங்கள் இல்லைதானே?" என்றான் வல்லவரையன்.

"ஆமாம், ஆமாம்! அந்த இரண்டு இடத்திலும் அவ்வளவு மரியாதைக் குறைவாகத் தங்களிடம் நடந்து கொண்டவளும் நானேதான். அந்த நாகரிகமில்லா மங்கையை மறுபடியும் இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்போம் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்!"

"மறுபடியும் சந்திப்பதாகச் சொல்வது பொருத்தமில்லை, தேவி!"

"ஏன்?"

"விட்டுப் பிரிந்திருந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனத்தை விட்டு ஒரு கணமும் அகலவில்லை......."

"தொண்டை மண்டலத்தார் இவ்வளவு சமத்காரமாகப் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

"எல்லாப் பெருமையையும் சோழ நாட்டிற்கேதான் கொடுப்பீர்களாக்கும். வேறு நாடுகளுக்கு ஒரு பெருமையும் தர மாட்டீர்கள் போலிருக்கிறது."

"ஆம்; என்னிடம் அந்தக் குற்றம் இருப்பது உண்மைதான். உமக்கு எங்கள் சோழ நாட்டைப் பிடிக்கவில்லையாக்கும்!"

"பிடிக்காமல் என்ன? நன்றாய்ப் பிடித்திருக்கிறது. ஆனால் இச்சோழ நாட்டில் இரண்டு பெரும் அபாயங்கள் இருக்கின்றன. அவற்றை எண்ணினாலே எனக்குப் பயமாயிருக்கிறது.....!"

"சோழ நாட்டு வீரர்களின் வாளும் வேலும் அபாயகரமான ஆயுதங்கள் தான்! அயல் நாட்டவர்கள் இங்கே ஜாக்கிரதையாகவே வர வேண்டும். முக்கியமாக, ஒற்றர் வேலை செய்வதற்கென்று வருவோர்....."

"இளவரசி! அந்த இரு அபாயங்களை நான் குறிப்பிடவில்லை. வாளும் வேலும் என்னிடமும் இருக்கின்றன. அவற்றை உபயோகிப்பதற்கும் நான் நன்கு அறிவேன்......."

"உமது வேலின் வன்மையைத்தான் அரிசிலாற்றங்கரையில் அன்று பார்த்தேனே? செத்துப் போன முதலையை உமது வேல் எத்தனை வேகமாய்த் தாக்கியது? ஒரே தாக்குதலில் உள்ளே அடைந்திருந்த பஞ்சையெல்லாம் வெளிக் கொண்டு வந்து விட்டதே?"

"அம்மணி! சோழ நாட்டு மாதரசிகள் செத்த முதலையைக் கண்டு பயந்து சாகும் வீர நாரீமணிகள் என்பதை நான் அறியேன். சோழ நாட்டு வீரர்கள் செத்த முதலையைத் தாக்கும் சுத்த வீரர்கள் என்றும் எனக்குத் தெரியாது. உயிருள்ள முதலையாக்கும் என்று எண்ணி வேலை எறிந்தேன். அது என் தவறும் அன்று; என் வேலின் தவறும் அன்று!......"

"அந்த அசட்டு முதலையின் தவறுதான்! வாணர் குலத்தில் பிறந்த வீர வந்தியத்தேவர் வேலோடு வரும் வரையில் காத்துக் கொண்டிராமல் முன்னதாகவே செத்துப் போய்விட்டதல்லவா? அதற்கு நன்றாய் வேணும் இந்த அவமானம்...! வேறு எந்த இரு அபாயங்களைப் பற்றிச் சொன்னீர்?"

"இந்தச் சோழ நாட்டு நதிகளில் புது வெள்ளம் வரும்போது உண்டாகும் சுழல்கள் அபாயமானவை! அவற்றை ஒரு போதும் நம்பவே கூடாது. என்னைத் திண்டாடித் திணறும்படி செய்து விட்டன!"

"வெள்ளச் சூழலில் நீர் எப்படி அகப்பட்டுக் கொண்டீர்? தண்ணீரில் காலையே வைக்க மாட்டீர் என்றல்லவா உம்மைப் பார்த்தால் தோன்றுகிறது?"

"வேதாளத்துக்கு வாழ்க்கைப் பட்டு முருங்கை மரத்தில் ஏற மாட்டேன் என்றால், முடிகிற காரியமா? சோழ நாட்டுக்கு வந்த காரணத்தினால், நதி வெள்ளத்தில் முழுகிச் சுழலிலும் சிக்கும்படியாகி விட்டது! என்னோடு துணைக்கு வந்த ஒரு அசட்டுப் பிள்ளையின் பிடிவாதத்தினால் அப்படி நேர்ந்தது! கேளுங்கள், தேவி! அந்தப் பிள்ளை ஒரு சின்னஞ் சிறிய பொய் சொல்ல முடியாது என்றான். அதனால் வந்த வினை..."

"நீர் சொல்லுவது புதிராக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நல்லது."

"சொல்கிறேன். தங்களுடைய அருமைச் சகோதரரின் ஓலையுடன் தூதனாக வந்த என்னைத் தஞ்சைக் கோட்டைத் தலைவர் சிறிய பழுவேட்டரையர் 'ஒற்றன்' என்று குற்றஞ்சாட்டிப் பிடித்து வர ஆட்களை ஏவினார். வந்த காரியம் பூர்த்தியாவதற்குள் சிறைப்பட நான் விரும்பவில்லை. ஆகையால் நான் தஞ்சையில் தங்கியிருந்த வீட்டுச் சிறுவனை வழிகாட்ட அழைத்துக் கொண்டு கிளம்பினேன்......"

"தஞ்சை நகரில் யாருடைய வீட்டில் தங்கினீர்?"

"கோட்டைக்கு வெளியிலே பூக்காரப் பெண்மணி ஒருத்தியின் வீட்டில் தங்கினேன். அந்த அம்மாள் ஊமை."

"ஓகோ! அவளுடைய பெயர்?"

"அந்த அம்மாளின் பெயர் தெரியாது; ஆனால் அவளுடைய பிள்ளையின் பெயர் மட்டும் எனக்குத் தெரியும். அவன் பெயர் சேந்தன் அமுதன்....."

"நான் நினைத்தது சரிதான்; மேலே சொல்லுங்கள்!"

"என் குதிரை மேல் அச்சிறுவனையும் ஏற்றிக் கொண்டு இந்தப் பழையாறை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அதற்குள் பழுவேட்டரையரின் ஆட்கள் சிலர் எங்களை நெருங்கி வந்து விட்டார்கள். நான் வந்த காரியம் முடிவதற்குள் அவர்களிடம் பிடிபட விரும்பவில்லை. குடமுருட்டி ஆறு வந்ததும் அச்சிறுவனிடம், 'நான் இங்கே இறங்கிக் கொள்கிறேன், தம்பி! நீ பாட்டுக்குக் குதிரையை விட்டுக் கொண்டு போ! உன்னை நான்தான் என்று அவர்கள் தொடர்ந்து துரத்தி வருவார்கள். உன்னைப் பிடித்த பிறகு ஏமாறுவார்கள்! நான் எங்கே என்று அவர்கள் கேட்டால் ஆற்றில் விழுந்து முழுகிப் போய் விட்டதாகச் சொல்!" என்றேன். அந்தப் பையனோ அரிச்சந்திரனுடைய சந்ததியில் வந்தவன் போலிருக்கிறது. 'நீங்கள் முழுகாத போது எப்படி முழுகி விட்டதாகப் பொய் சொல்லுவேன்?' என்றான். அந்தப் பிள்ளை பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாமலிருக்கும் பொருட்டு, அவனைக் குதிரையில் சேர்த்துக் கட்டி விட்டு, நான் நதியில் குதித்து முழுகி விட்டேன். அம்மம்மா! இந்தச் சோழ நாட்டு நதிகளில், அதுவும் கரை ஓரங்களில், எப்பேர்ப்பட்ட நீர்ச் சுழல்கள்! அவற்றில் அகப்பட்டுக் கொண்டு நான் பெரிதும் திண்டாடிப் போனேன். கடைசியில், கரை ஓரத்தில் இருந்த மரத்தின் வேர் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கரையேறி உயிர் பிழைத்து வந்தேன். தேவி! நீர்ச் சுழலில் நான் அகப்பட்டுக் கொண்டு சுழன்று சுழன்று மதி மயங்கி மூச்சுத் திணறிக் கஷ்டப்பட்ட போது என்ன கண்டேன், எதை நினைத்துக் கொண்டேன் என்று எண்ணுகிறீர்கள்?'

"நான் எவ்விதம் அறிவேன்? ஒருவேளை கஜேந்திர மோட்சத்தை நினைத்துக் கொண்டிருக்கலாம்...."

"இல்லை, இல்லை; என்னைப் போலவே அந்த நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடிய சில கயல் மீன்களைக் கண்டேன். அந்தக் கயல் மீன்கள் இந்தச் சோழ நாட்டுப் பெண்களின் கண்களை நினைவூட்டின. நதியின் நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவனாவது எப்படியோ தப்பிப் பிழைக்கலாம்; ஆனால் இந்தச் சோழ நாட்டுப் பெண்களின் விழிச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவன் ஒரு காலும் தப்பிப் பிழைக்க முடியாது என்று எண்ணிக் கொண்டேன்!...."

"இம்மாதிரி பெண்களைக் குற்றம் கூறி பழி சொல்வதில் சிலருக்கு ஒரு பெருமை; தாங்கள் செய்யும் தவறுக்குப் பெண்களின் மீது குற்றம் சொல்வது ஆண் பிள்ளைகளின் வழக்கம்..."

"அந்த வழக்கத்தைத்தான் நானும் கைப்பற்றினேன். அதில் என்ன தவறு?" என்றான் வந்தியத்தேவன்.

அச்சமயம் அரண்மனைக்குள்ளேயிருந்து இனிய குழலோசை கேட்டது. அதைத் தொடர்ந்து தண்டைச் சிலம்புகளின் கிண்கிணி ஒலியும், மத்தளத்தின் முழக்கமும் கலந்து வந்தன. பின்னர், இளம் பெண்களின் இனிய குரல்கள் பல சேர்ந்து ஒலித்தன. சிலப்பதிகாரக் காவியத்தில் உள்ள பின்வரும் ஆய்ச்சியர் குரவைப் பாடலைப் பாடினார்கள்:--

"கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள்வருமேல் அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!"

பாடல் முடியும் வரையில் குந்தவையும் வந்தியத்தேவனும் அதன் இனிமையில் ஈடுபட்டுத் தம் வசமிழந்து நின்றார்கள். மறுபடியும் வாத்திய முழக்கத்துடன் ஆடல் தொடங்கியதற்கு அறிகுறியாகத் தண்டைச் சதங்கைகளின் ஒலி எழுந்தது.

"அரண்மனையில் குரவைக் கூத்து நடக்கிறது போலும்! கடம்பூர் மாளிகையில் குரவைக் கூத்து ஒன்று பார்த்தேன். அது முற்றும் வேறுவிதமாயிருந்தது!" என்றான் வல்லவரையன்.

"ஆம்; என் தோழிகள் குரவைக் கூத்துப் பயில்கிறார்கள். சீக்கிரத்தில் என்னைக் காணாமல் தேடத் தொடங்கி விடுவார்கள். தாங்கள் வந்த காரியம் என்ன?" என்று இளைய பிராட்டி குந்தவை தேவி கேட்டாள்.

"இதோ நான் வந்த காரியம்; தங்கள் தமையனாரின் ஓலை; எத்தனையோ அபாயங்களுக்குத் தப்பி, நீர்ச் சுழல்கள் - விழிச் சுழல்களிலிருந்து காப்பாற்றி, இதைக் கொண்டு வந்தேன்!" என்று வல்லவரையன் கூறி ஓலையை எடுத்து நீட்டினான்.











Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: