BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. "சமுத்திர குமாரி"  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. "சமுத்திர குமாரி"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. "சமுத்திர குமாரி"  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. "சமுத்திர குமாரி"    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. "சமுத்திர குமாரி"  Icon_minitimeMon May 09, 2011 3:54 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

7. "சமுத்திர குமாரி"



அன்று பகற்பொழுது வந்தியத்தேவனுக்கு எளிதில் போய்விட்டது. பாதி நேரத்துக்கு மேல் தூங்கிக் கழித்தான். விழித்திருந்த நேரமெல்லாம் பூங்குழலியின் விசித்திர சுபாவத்தைப் பற்றி எண்ணுவதில் சென்றது.

என்ன அதிசயமான பெண்? எவ்வளவு இனிய சரளமான பெயர்? ஆனால் சுபாவம் எவ்வளவு கடுமையானது? 'கடுமை' மட்டுந்தானா? அதில் இனிமையும் கலந்து தானிருந்தது! சிறுத்தையை அடித்துக் கொன்ற காரியத்தைப் பற்றி எவ்வளவு சர்வசாதாரணமாகக் கூறினாள்? இவ்வளவுடன் சில சமயம் உன்மத்தம் பிடித்தவள் மாதிரி நடந்து கொள்கிறாளே, அது ஏன்? இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்க வேண்டுமே! கசப்பான சம்பவமோ, அல்லது இனிப்பான சம்பவந்தானோ! இரண்டினாலும் இப்படி ஒரு பெண் உன்மத்தம் பிடித்தவள் ஆகியிருக்கக் கூடும்! அல்லது ஒன்றுமே காரணமில்லாமல், பிறவியிலேயே இத்தகைய இயற்கையுடன் பிறந்தவளோ? இவளுடைய பெற்றோர்களின் இயற்கையில் விசேஷம் ஒன்றையும் காணவில்லையே? இனிய, சாந்த சுபாவம் படைத்தவர்களாயிருக்கிறார்களே!... குணம் எப்படியாவது இருக்கட்டும். நம்மிடம் இவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்பட்டதன் காரணம் என்ன? பழுவூர் ஆட்களிடம் நாம் பிடிபடாமல் தப்புவிப்பதற்கு இவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறாளே? இலங்கைக்குப் படகு வலித்துக் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறாளே? இதிலெல்லாம் ஏதாவது ஏமாற்றம் இருக்குமோ?... ஒருநாளும் இல்லை. ஆனாலும் இவள் மனம் மாறியதன் காரணம் என்ன? நம்மிடம் இவள் எந்தவித பிரதி உபகாரத்தை எதிர்பார்க்கிறாள்? பின்னால் கூறுவதாகக் கூறியிருக்கிறாளே? அது என்னவாயிருக்கும்?...'

இவ்வாறு வந்தியத்தேவன் சிந்தனை செய்து கொண்டிருந்த சமயங்களில், பூங்குழலி கூறியிருந்தது போலவே, அவனைச் சுற்றி நாலாபுறங்களிலும் அடிக்கடி அமளிதுமளிப்பட்டது. குதிரைகளின் ஓட்டம், மனிதர்களின் அட்டகாசம், சிறிய வன ஜந்துக்களின் பயம் நிறைந்த கூச்சல், பறவைகள் கிறீச்சிடுதல் - இவ்வளவும் சேர்ந்து சில சமயம் ஒரே அமர்க்களமாயிருந்தது. அடுத்தாற்போல் அமைதி குடிகொண்டு நிசப்தமாயுமிருந்தது. அமர்க்களப்பட்டதெல்லாம் தன்னைச் தேடிப் பிடிப்பதற்காகத்தான் என்று வந்தியத்தேவன் உணர்ந்தான். வைத்தியரின் மகன் செய்த துரோகமும் அவனுடைய மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருந்தது!

'நிர்மூடன்! பூங்குழலியிடம் அதற்குள் மையல் கொண்டு விட்டதாக அவனுக்கு எண்ணம் போலும்! சிறிய குட்டையில் உள்ள தண்ணீர் வடவா முகாக்கினியின் மீது காதல் கொண்டது போலத் தான்! பெண் சிங்கத்தை ஒரு சுண்டெலி கல்யாணம் செய்து கொள்ள எண்ணிய கதைதான்! ஆனாலும் அவனுடைய அறிவீனத்தை இந்தப் பெண் எப்படிப் பயன்படுத்திக் கொண்டு விட்டாள்! அவனுடைய மனத்தில் எவ்விதம் பொறாமைக் கனலை மூட்டிவிட்டாள்?... அரை நாழிகை நேரத்தில் அவனைத் துரோகியாக்கி விட்டாளே! பெண்மையின் சக்தி அபாரமானதுதான்!'

'வந்தியத்தேவா! ஒன்று மட்டும் நீ ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்! நீ உன்னை வெகு கெட்டிக்காரன் என்று எண்ணியிருந்தாய்! தந்திர மந்திர சாமர்த்தியங்களில் உனக்கு இணை யாரும் இல்லை என்று இறுமாந்திருந்தாய்! ஆனால் இந்த நாகரிகமறியாத காட்டு மிராண்டிப் பெண் உன்னைத் தோற்கடித்து விட்டாள்! கடலில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த உன்னை இந்த மறைந்த மண்டபத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவள் கையாண்ட யுக்தியை என்னவென்று சொல்வது? அப்படி அவள் உன் அரைச் சுற்றுச் சுருளை எடுத்துக்கொண்டு ஓடியிராவிட்டால், இத்தனை நேரம் என்ன ஆகியிருக்கும்? பழுவூர் ஆட்களிடம் நீ சிக்கியிருப்பாய்! காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்கும்!... ஆம் இனி எப்போதும் இம்மாதிரி அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது.'

மேற்குக் கடலில் சூரியன் அஸ்தமித்தது. கோடிக்கரையில் இது ஓர் அற்புதமான காட்சி. அதுவரை தெற்கு நோக்கி வரும் கடற்கரை அந்த முனையில் நேர்கோணமாக மேற்கு நோக்கித் திரும்பிச் செல்கிறது. ஆதலின் கோடிக்கரையில் மேடான இடத்திலிருந்து பார்த்தால் கிழக்கு - மேற்கு - தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் பரந்திருக்கக் காணலாம். சிற்சில மாதங்களில் சூரிய சந்திரர்கள் கிழக்குக் கடலில் ஜோதிமயமாக உதயமாவதையும் பார்க்கலாம். மேற்கே கடலைத் தங்கமயமாகச் செய்து கொண்டு முழுகி மறைவதையும் காணலாம். வந்தியத்தேவனுக்கு மண்டபத்தை மூடியிருந்த மணல்திட்டின் மேல் ஏறிச் சூரியன் கடலில் மறையும் காட்சியைப் பார்க்க ஆவல் உண்டாயிற்று. அதைப் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டான்.

நாலாபுறமும் அந்தகாரம் சூழ்ந்து வந்தது. மறைந்த மண்டபத்தில் முன்னமே குடி கொண்டிருந்த இருள் பன்மடங்கு கரியதாயிற்று. வந்தியத்தேவனால் அங்கே மேலும் இருக்க முடியவில்லை வெளியேறி வந்தான். மண்டபத்தை மூடிய மணல் திட்டின் மீது நின்றான். வெகுதூரத்தில் கலங்கரை விளக்கின் ஒளி தெரிந்தது. வானத்தில் வைரமணிகள் சுடர்விட்டு ஜொலித்தன. காட்டில் பல விசித்திரமான ஒலிகள் உண்டாயின. பகலில் வனப்பிரதேசத்தில் கேட்கும் ஒலிகளுக்கும் இரவில் கேட்கும் ஒலிகளுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. இரவில் கேட்கும் ஒலிகள் மர்மம் நிறைந்து உள்ளத்தில் பீதியையும் உடலிலே சிலிர்ப்பையும் உண்டாக்கின. பகலில் எதிரே புலியைப் பார்த்தாலும் மனம் பதறுவதில்லை; பயமும் உண்டாவதில்லை. இரவில் ஒரு புதரில் சின்னஞ்சிறு எலி ஓடினாலும் உள்ளம் திடுக்கிடுகிறது!

இதோ குயிலின் குரல்; 'குக்கூ!', 'குக்கூ!' அந்தக் குரல் தேவகானத்தைப் போல் வந்தியத்தேவன் காதில் ஒலித்தது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான். பூங்குழலி அங்கு நின்றாள். 'சத்தம் செய்யாமல் என்னுடன் வா' என்று சமிக்ஞை செய்தாள். அங்கிருந்து கடற்கரை வெகு சமீபம் என்று தெரிய வந்தது.

கடற்கரையில் படகு ஆயத்தமாயிருந்தது. அதில் பாய் மரமும் பாயும் அதைக் கட்டும் கயிறும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. படகிலிருந்து இரண்டு கழிகள் நீட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கழிகளின் முனையில் ஒரு பெரிய மரக்கட்டை பொருத்திக் கட்டப்பட்டிருந்தது. படகைக் கடலில் இறக்குவதற்கு வந்தியத்தேவன் உதவி செய்யப்போனான்.

'நீ சும்மா இரு!' என்று பூங்குழலி சமிக்ஞை செய்தாள்.

படகை லாவகமாகத் தள்ளிக் கடலில் இறக்கினாள். சிறிதும் சத்தமின்றிக் கடலில் அப்படகு இறங்கியது.

வந்தியத்தேவன் படகில் ஏறிக்கொள்ள யத்தனித்தான். "உஷ்! சற்றுப் பொறு! கொஞ்ச தூரம் போன பிறகு நீ ஏறிக்கொள்ளலாம்!" என்று பூங்குழலி மெல்லிய குரலில் கூறிவிட்டுப் படகைப் பிடித்து இழுத்துக் கொண்டே போனாள்.

வந்தியத்தேவன் தானும் உதவி செய்ய எண்ணிப் படகைத் தள்ளினான். படகு நின்று விட்டது.

"நீ சும்மா வந்தால் போதும்!" என்றாள் பூங்குழலி.

கரை ஓரத்தில் அலை மோதும் இடத்தைக் தாண்டிய பிறகு "இனிமேல் படகில் ஏறிக்கொள்ளலாம்!" என்று சொல்லி, அவள் முதலில் ஏறிக் கொண்டாள். வந்தியத்தேவனும் தாவி ஏறினான். அப்போது படகு அதிகமாக ஆடியது. அந்த ஆட்டத்தில் வந்தியத்தேவன் கடலில் விழுந்து விடுவான் போலத் தோன்றியது; சமாளித்துக்கொண்டு உட்கார்ந்தான். ஆயினும் அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

"இனிமேல் ஏதாவது பேசலாம் அல்லவா?" என்று கேட்டான்.

"நன்றாகப் பேசலாம். உனக்கு நடுக்கம் நீங்கியிருந்தால் பேசலாம்!" என்றாள் பூங்குழலி.

"நடுக்கமா? யாருக்கு நடுக்கம்? அதெல்லாம் ஒன்றுமில்லை."

"ஒன்றுமில்லாவிட்டால் சரி!"

"பாய்மரம் கட்ட வேண்டாமா?"

"பாய்மரம் கட்டினால் கரையில் உள்ளவர்கள் ஒருவேளை நம்மைப் பார்த்துவிடுவார்கள். ஓடி வந்து பிடித்துக் கொள்வார்கள்."

"இனி அவர்கள் வந்தால் ஒரு கை பார்த்து விடுகிறேன். நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம்!" என்று வந்தியத்தேவன் தன் வீரப்பிரதாபத்தைச் சொல்லத் தொடங்கினான்.

"இப்போது எதிர்க்காற்று அடிக்கிறது. பாய்மரம் விரித்தால் படகை மறுபடி கரையிலே கொண்டு போய் மோதும். நடுநிசிக்கு மேல் காற்றுத் திரும்பக்கூடும். அப்போது பாய்மரம் விரித்தால் பயன்படும்!" என்று பூங்குழலி கூறினாள்.

"ஓ உனக்கு இதெல்லாம் நன்றாய்த் தெரிந்திருக்கிறது; அதனாலேதான் உன்னை அழைத்துப் போகும்படி உன் தந்தை சொன்னார்."

"என் தந்தையா? யாரைச் சொல்லுகிறாய்?"

"உன் தகப்பனாரைத்தான் சொல்லுகிறேன். கலங்கரை விளக்கின் தியாகவிடங்கக்கரையரைச் சொல்லுகிறேன்."

"கரையில் இருக்கும்போதுதான் அவர் என்னுடைய தந்தை, கடலில் இறங்கிவிட்டால்..."

"தகப்பனார் கூட மாறிப் போய்விடுவாரா, என்ன?"

"ஆமாம்; இங்கே சமுத்திர ராஜன்தான் என் தகப்பனார். என்னுடைய இன்னொரு பெயர் சமுத்திரகுமாரி. உனக்கு யாரும் சொல்லவில்லையா?"

"சொல்லவில்லை! அது என்ன விசித்திரமான பெயர்?"

"சக்கரவர்த்தியின் இளைய குமாரனைப் 'பொன்னியின் செல்வன்' என்று சிலர் சொல்லுகிறார்கள் அல்லவா! அது போலத்தான்!"

இதைக் கேட்டதும் வந்தியத்தேவன் தனது அரைச் சுற்றுச் சுருளைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.

அதைக் கவனித்த பூங்குழலி, "பத்திரமாக இருக்கிறதல்லவா?" என்று கேட்டாள்.

"எதைப் பற்றிக் கேட்கிறாய்?"

"உன் அரைச் சுருளில் வைத்திருக்கும் பொருளைப் பற்றித்தான்."

வந்தியத்தேவனுடைய மனத்தில் "சொரேல்" என்றது. ஒரு சிறிய சந்தேகம் ஜனித்தது.

அவனுடன் பேசிக்கொண்டே பூங்குழலி துடுப்பை வலித்துக்கொண்டிருந்தாள். படகு போய்க் கொண்டிருந்தது.

"இலங்கைத் தீவுக்கு நாம் எப்போது போய்ச் சேரலாம்?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"இரண்டு பேராகத் துடுப்பு வலித்தால் பொழுது விடியும் சமயம் போய்ச் சேரலாம், காற்று நமக்கு உதவியாக இருந்தால்!"

"நானும் துடுப்பு வலிக்கிறேன்; உன்னைத் தனியாக விட்டுவிடுவேனா?"

வந்தியத்தேவன் தன் அருகிலிருந்த துடுப்பைப் பிடித்து வலித்தான். ஆ! படகு வலிப்பது இலேசான வேலையன்று. மிகவும் கடினமான வேலை. படகு 'விர்' என்று சுழன்று அடியோடு நின்று விட்டது.

"இது என்ன? நீ துடுப்பை வலித்தால் படகு போகிறது; நான் தொட்டவுடனே நின்றுவிட்டதே!"

"நான் சமுத்திரகுமாரியல்லவா? அதனாலேதான்! நீ சும்மா இருந்தால் போதும்! உன்னை எப்படியாவது இலங்கையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறேன்; சரிதானே?"

வந்தியத்தேவன் சிறிது வெட்கமுற்றான். சற்று நேரம் சும்மா இருந்தான்! சுற்றுமுற்றும் பார்த்தபோது, படகிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த கழிகளும் கட்டைகளும் அவன் கண்களில் பட்டன.

"இந்தக் கட்டை என்னத்திற்கு?" என்று கேட்டான்.

"படகு அதிகம் ஆடாமல் இருப்பதற்காக."

"இதைக் காட்டிலும் படகு அதிகம் ஆடுமா என்ன? இப்போவேதான் வேண்டிய ஆட்டம் ஆடுகிறதே? எனக்குத் தலை சுற்றும் போலிருக்கிறது."

"இது ஒரு ஆட்டமா? ஐப்பசி, கார்த்திகையில் வாடைக் காற்று அடிக்கும் போதல்லவா பார்க்க வேண்டும்?"

கரையிலிருந்து பார்த்தால் கடல் அமைதியாகத் தகடு போல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் உண்மையில் அவ்விதம் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். நுரையில்லாத அலைகள் எழும்பி விழுந்துகொண்டு தானிருந்தன. அவை அப்படகைத் தொட்டில் ஆட்டுவது போல் ஆட்டிக்கொண்டிருந்தன.

"பெருங்காற்று அடிக்கும்போது இந்தக் கட்டை என்ன ஆகும்?"

"எவ்வளவு பெரிய காற்று என்பதைப் பொறுத்தது. சாதாரணமாய்ப் பெருங்காற்று அடித்தாலும் இந்தக் கட்டை படகைக் கவிழாமல் நிறுத்தி வைக்கும். ஒருவேளை சுழிக்காற்று அடித்து, படகு கவிழ்ந்து விட்டால் இந்தக் கட்டையைப் படகிலிருந்து அவிழ்த்து விட்டுவிடாமல், அதைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்புவதற்குப் பார்க்கலாம்.

"ஐயோ! காற்றில் படகு கவிழ்ந்துவிடுமா, என்ன?"

"சுழிக்காற்று அடித்தால் பெரிய பெரிய மரக்கலங்கள் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். இந்தச் சிறிய படகு எம்மாத்திரம்?"

"சுழிக்காற்று என்றால் என்ன?"

"இதுகூடத் தெரியாதா? ஒரு பக்கமிருந்து அடிக்கும் காற்றும், இன்னொரு பக்கத்திலிருந்து அடிக்கும் காற்றும் மோதிக் கொண்டால் சுழிக்காற்று ஏற்படும். இங்கே தை, மாசி மாதங்களில் 'கொண்டல் காற்று' அடிக்கும். அப்போது அபாயமே இல்லை. சுலபமாகத் கோடிக்கரைக்கும் இலங்கைக்கும் போய் வரலாம். 'இரவுக்கிரவே போய்விட்டுத் திரும்பலாம். வைகாசியிலிருந்து 'சோழகக் காற்று' அடிக்கும். சோழகக் காற்றில் இங்கிருந்து இலங்கை போவது கொஞ்சம் சிரமம். இப்போது சோழகக் காற்றுக்கும் வாடைக்காற்றுக்கும் இடையில் உள்ள காலம். கடலில் சில சமயம் காற்றும், காற்றும் மோதிக்கொள்ளும். மத்தினால் தயிர் கடைவது போல் காற்று கடலைக் கடையும். மலை போன்ற அலைகள் எழும்பி விழும். கடலில் பிரம்மாண்டமான பள்ளங்கள் தென்படும். அப்பள்ளங்களில் தண்ணீர் கரகரவென்று சுழலும். அந்தச் சுழலில் படகு அகப்பட்டுக் கொண்டால் அரோகராதான்."

வந்தியத்தேவனுக்குத் திடீரென்று மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. அத்துடன் ஒரு சந்தேகமும் உதித்தது.

"ஐயோ! நான் வரவில்லை! என்னைக் கரையிலே கொண்டு போய் விட்டுவிடு!" என்று கத்தினான்.

"என்ன உளறுகிறாய்? பேசாமலிரு! பயமாயிருந்தால் கண்ணை மூடிக்கொள் இல்லாவிட்டால் படுத்தூங்கு!"

வந்தியத்தேவனுடைய சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது. "நீ பெரிய மோசக்காரி! என்னைக் கடலில் மூழ்க அடிப்பதற்காக அழைத்துப் போகிறாய். நான் தூங்கினால் உன் காரியம் மிகவும் சுலபமாகும் என்று பார்க்கிறாய்!"

"இது என்ன பைத்தியம்?"

"எனக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை! படகைத் திருப்புகிறாயா, இல்லையா? திருப்பாவிட்டால் கடலில் குதித்து விடுவேன்!"

"தாராளமாய்க் குதி! ஆனால் குதிப்பதற்கு முன்னால் பொன்னியின் செல்வனுக்கு நீ எடுத்துப் போகும் ஓலையை என்னிடம் கொடுத்துவிடு!"

"ஓ! அந்த ஓலையைப் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது?"

"உன் இடுப்பில் சுற்றியிருக்கும் சுருளை அவிழ்த்துப் பார்த்ததில் தெரிந்தது. நீ யார், எதற்காக இலங்கை போகிறாய் என்று தெரிந்து கொள்ளாமல் உனக்குப் படகு தள்ளச் சம்மதித்திருப்பேனா? காலையில் மரத்தின் மேல் உட்கார்ந்து உன் அரைச் சுருளை அவிழ்த்து ஓலையைப் பார்த்தேன்..."

"மோசக்காரி! உன்னை நம்பி வந்துவிட்டேனே! படகைத் திருப்புகிறாயா, மாட்டாயா?"

வந்தியத்தேவனுடைய திகிலும், வெறியும் பன்மடங்கு ஆயின. "படகைத் திருப்பு! படகைத் திருப்பு!" என்று அலறினான்.

"நான் மட்டும் இளைய பிராட்டி குந்தவையாக இருந்திருந்தால் இவ்வளவு முக்கியமான ஓலையை உன்னைப் போன்ற சஞ்சல புத்திக்காரனிடம் கொடுத்து அனுப்பியிருக்க மாட்டேன்!" என்றாள் பூங்குழலி.

"ஓகோ! ஓலை கொடுத்தது யார் என்று கூட உனக்குத் தெரிந்திருக்கிறதே! நீ வஞ்சகி என்பதில் சந்தேகமில்லை. படகைத் திருப்புகிறாயா? கடலில் குதிக்கட்டுமா?"

"குதி! தாராளமாய்க் குதி!" என்றாள் பூங்குழலி.

வெறி கொண்ட வந்தியத்தேவன் தொப்பென்று கடலில் குதித்தான். கரையோரத்தில் இருந்ததுபோல் தண்ணீர் கொஞ்சமாக இருக்குமென்று எண்ணிக் குதித்தான். அதற்குள்ளே படகு நீச்சுநிலை கொள்ளாத ஆழமான கடலுக்கு வந்துவிட்டது என்பதை அவன் அறியவில்லை. கடலில் குதித்த பிறகுதான் அதை அறிந்தான். அறிந்த பிறகு அலறித் தத்தளித்தான்.

இதற்குள் வந்தியத்தேவன் ஓரளவு நீந்தத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் தண்ணீரைக் கண்டால் அவனுக்கு இயற்கையாக ஏற்படும் பயம், கை கால்களின் தெம்பைக் குறைத்தது. ஆற்றிலே குளத்திலே என்றால், பக்கத்தில் உள்ள கரையைப் பார்த்துத் தைரியம் கொள்ள இடமிருந்தது; இதுவோ மாகடல். நாலாபுறமும் எங்கே பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயம். கடலில் அங்கே இலேசான அலைதான். எனினும் ஒரு சமயம் அவனை மேலே கொண்டு வந்தது, இன்னொரு சமயம் பள்ளத்தில் தள்ளியது. மேலே வந்தபோது படகு கண்ணுக்குத் தெரிந்தது. 'ஓ' என்று கத்தினான். பள்ளத்தில் விழுந்த போது படகு கண்ணுக்குத் தெரியவில்லை. சுற்றிலும் இருண்ட தண்ணீரின் சுவர் மட்டுமே தெரிந்தது. 'ஓ' என்று அலறும் சக்தியைக் கூட அவனுடைய நா இழந்துவிட்டது. மூன்றாவது முறை கடல் அலை அவனை மேலே கொண்டு வந்தபோது படகு முன்னைவிடத் தூரத்துக்குப் போய்விட்டதாகத் தோன்றியது. 'அவ்வளவு தான் கடலில் முழுகிச் சாகப் போகிறோம்' என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டாகிவிட்டது! நாம் முழுகுவது மட்டுமில்லை; நம்முடைய அரைக்கச்சும் அதில் உள்ள ஓலையும் முழுகப் போகின்றன! குந்தவை தேவியின் முகம் அவன் மனக் கண்ணின் முன்னால் வந்தது.

"இப்படி செய்து விட்டாயே?" என்று கேட்பது போல் இருந்தது.

"ஆகா! என்னவெல்லாம் கனவு கண்டோ ம்? என்னவெல்லாம் மனக் கோட்டை கட்டினோம்? வாணர் குலத்துப் பழைய அரசு திரும்ப வந்து, இரத்தின சகிதமான சிங்காதனத்தில் பக்கத்தில் இளைய பிராட்டியுடன் வீற்றிருக்கப் போவதாக எண்ணினோமே? அவ்வளவும் பாழாகி விட்டது! இந்தப் பாவிப்பெண் கெடுத்துவிட்டாள்! இவள் ஒரு பெண் அல்ல; பெண் உருக்கொண்ட பேய்! பழுவேட்டரையர்களைச் சேர்ந்தவள். இல்லை, அந்த மோகினிப்பிசாசு நந்தினியைச் சேர்ந்தவள். நாம் கடலில் முழுகிச் செத்தாலும் பாதகமில்லை. இந்தப் பெண் பேய் மட்டும் இப்போது நம்மிடம் சிக்கினால் இவள் கழுத்தை நெறித்து... சீச்சீ! இது என்ன எண்ணம்! சாகும் போது நல்ல விஷயமாக எண்ணிக் கொள்வோம்! கடவுளை நினைப்போம்! உமாபதி! பரமேசுவரா! பழனி ஆண்டவா! பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளே!... குந்தவை தேவி! மன்னிக்கவும். ஒப்புக்கொண்ட காரியத்தை முடிக்காமல் போகிறேன்... அதோ படகு தெரிகிறது. அந்தப் பெண் மட்டும் இப்போது கையில் சிக்கினால்!'

வந்தியத்தேவன் கடலில் குதித்துச் சிறிது நேரம் வரையில் பூங்குழலி அலட்சியமாகவே இருந்தாள். தட்டுத்தடுமாறி நீந்தி வந்து படகில் தொத்திக் கொள்வான் என்று நினைத்தாள். 'கொஞ்சம் திண்டாடட்டும்' என்ற எண்ணத்துடனே படகுக்கும் அவனுக்கும் இருந்த தூரத்தை அதிகமாக்கினாள். விரைவில் அவள் எண்ணியது தவறு என்று தெரிந்து விட்டது. 'இவனுக்கு நன்றாக நீந்தத் தெரியவில்லை; அதோடு பீதியும் அடைந்து விட்டான்; 'ஆ!,' 'ஓ!' என்று அவன் அலறுவது விளையாட்டுக்கு அன்று; உண்மையான பயத்தினாலேதான். இன்னும் சற்றுப் போனால் உப்புத்தண்ணீரைக் குடிக்கத் தொடங்கி விடுவான்! முழுகியும் போய்விடுவான். பிறகு அவனுடைய உடலைக் கண்டுபிடிக்கவும் முடியாது. சேச்சே! தவறு அல்லவா செய்து விட்டோ ம்? விளையாட்டு விபரீதமாக முடிந்துவிடும் போலிருக்கிறதே! அக்கரை போகும் வரையில் நாம் வாயை மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அவனுடைய இரகசியம் நமக்குத் தெரியும் என்று காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குள்ளே அவசரப்பட்டு விட்டோ ம். ஆனாலும் இந்த முரடன் இப்படிச் செய்வான் என்று யாருக்குத் தெரியும்? தண்ணீரைக் கண்டு இவன் இப்படி பயப்படுவான் என்று யார் கண்டது?'

அலையின் உச்சியில் வந்தியத்தேவன் அடுத்த தடவை தெரிந்த போது, பூங்குழலி படகை அவனை நோக்கிச் செலுத்தினாள். ஒரு நொடிப் பொழுதில் படகு அவனுக்கருகில் நெருங்கி விட்டது. "வா! வா! வந்து ஏறிக்கொள்!" என்றாள். ஆனால் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. விழுந்தாலும் படகைத் பிடித்து ஏறிக்கொள்ளப் போகிறவனாகத் தெரியவில்லை. கேட்கும் சக்தியோடும் பார்க்கும் சக்தியையும் இழந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால் அலறும் சக்தி மட்டும் இருந்தது. ஒரு கையை மேலே தூக்கி, தலையை மேலாக நிமிர்த்தி, 'ஓ' என்று ஒரு கணம் அலறினான். சகல நம்பிக்கையையும் இழந்து முழுகிச் சாகப் போகிறவனுடைய ஓலக்குரல் அது என்பதை பூங்குழலி அறிந்தாள். அவன் தலையை நிமிர்த்தியபோது பிறைச் சந்திரனின் மங்கிய நிலா வெளிச்சத்தில் அவன் முகம் ஒரு கணம் தெரிந்தது. வெறி முற்றிய பைத்தியக்காரனின் முகந்தான் அது! அவனாக வந்து படகில் ஏறிக் கொள்வான் என்று நினைப்பது வீண்!... நாம்தான் அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றியாக வேண்டும்! நல்ல சங்கடத்தை நாமாக வரவழைத்துக் கொண்டோ ம்! 'பெண்புத்தி பின்புத்தி' என்று சொல்லுகிறார்களே, அது சரிதான்!'

உடனே பூங்குழலி மிகப் பரபரப்புடன் சில காரியங்களைச் செய்தாள். படகில் கிடந்த பாய்மரம் கட்டுவதற்கான கயிற்றின் ஒரு முனையைப் படகிலிருந்து நீண்டிருந்த கட்டையில் சேர்த்துக் கட்டினாள். இன்னொரு முனையைத் தன் இடுப்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்; கடலில் குதித்தாள். வெகு லாவகமாகக் கைகளை வீசிப்போட்டு நீந்திக்கொண்டு போனாள். வந்தியத்தேவன் அருகில் சென்றாள். கையினால் தாவிப் பிடிக்கக் கூடிய தூரத்தில் நின்று கொண்டாள்.

வந்தியத்தேவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவனுடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமான கொலை வெறி தாண்டவமாடியது.

பூங்குழலியின் உள்ளம் அதிவேகமாக இயங்கியது. நீந்தத் தெரியாதவர்களும் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகிறவர்களும் கடைசி நேரத்தில் என்ன செய்வார்கள் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. தங்களைக் காப்பாற்றுவதற்காக யாராவது வந்தால், அப்படி வருகிறவர்களின் தோளையோ கழுத்தையோ கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுவார்கள். காப்பாற்ற வருகிறவர்களும் நீந்த முடியாமல் செய்து விடுவார்கள்; உயிரின் மேலுள்ள ஆசையானது அச்சமயம் அவர்களுக்கு ஒரு யானையின் பலத்தை அளித்துவிடும். காப்பாற்ற வருகிறவர்களை இறுக்கிப் பிடித்துத் தண்ணீரில் அமுக்கப் பார்ப்பார்கள். அவர்களுடைய பயங்கர ராட்சதப் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ளவும் முடியாது; நீந்தவும் முடியாது. இரண்டு பேருமாகச் சேர்ந்து கடலுக்கு அடியில் போகவேண்டியதுதான்!

இதையெல்லாம் நன்கு அறிந்திருந்த பூங்குழலி மின்னல் வேகத்தில் சிந்தனை செய்தாள்; ஒரு தீர்மானம் செய்து கொண்டாள். உயிருக்கு மன்றாடித் தத்தளித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனை மேலும் சிறிது நெருங்கினாள். அவனுடைய தலைப்பக்கமாக வந்தாள். ஒரு கையினால் நீந்திக்கொண்டு இன்னொரு கையை இறுக மூடி ஓங்கினாள். வந்தியத்தேவனுடைய முகத்தை நோக்கிப் பலமாக ஒரு குத்துக் குத்தினாள். மூக்குக்கும் நெற்றிக்கும் நடுவில் அந்தக் குத்து விழுந்தது. படகு வலித்து வலித்துக் கெட்டிப்பட்டிருந்த அவளுடைய கையினால் குத்திய குத்து வஜ்ராயுதம் தாக்கியது போல் வந்தியத்தேவனைத் தாக்கியது. அவனுடைய தலை ஆயிரமாயிரம் சுக்கலாயிற்று. அவனுடைய கண்கள் பதினாயிரம் துணுக்குகள் ஆயின. ஒவ்வொரு கண் துணுக்கிற்கு முன்னாலும் ஒரு லட்சம் மின்பொறிகள் ஜொலித்துக்கொண்டு பறந்தன. ஒவ்வொரு மின்பொறியிலும் சமுத்திரகுமாரியின் முகம் தோன்றி 'ஹா ஹா ஹா ஹா' என்று பேய்ச்சிரிப்புச் சிரித்தது. ஆயிரம், பதினாயிரம், லட்சம் பேய்களின் அகோரமான சிரிப்பின் ஒலியில் அவன் காது செவிடுபட்டது. அப்புறம் அவனுக்குக் காதும் கேட்கவில்லை; கண்ணும் தெரியவில்லை! நினைவும் இல்லை! முடிவில்லாத இருள்! எல்லையில்லாத மௌனம்!












Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 7. "சமுத்திர குமாரி"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: