BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. தெரிஞ்ச கைக்கோளப் படை  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. தெரிஞ்ச கைக்கோளப் படை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. தெரிஞ்ச கைக்கோளப் படை  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. தெரிஞ்ச கைக்கோளப் படை    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. தெரிஞ்ச கைக்கோளப் படை  Icon_minitimeMon May 09, 2011 4:09 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

11. தெரிஞ்ச கைக்கோளப் படை




இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை எழுதும் திருமந்திர நாயகர்கள், அகப்பரிவாரக் காவலர்கள் முதலியோர் அவரவர்களுடைய இடத்தில் ஆயத்தமாக இருந்தார்கள். அநிருத்தர் படகிலிருந்து இறங்கி வந்து அம்மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஆனதும், தம்மைப் பார்க்க வந்திருந்தவர்களை அழைக்குமாறு கட்டளையிட்டார். ஐந்து பேர் முதலில் வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் செல்வச் செழிப்புள்ள வர்த்தகர்கள் என்று தோன்றியது. ஒரு தட்டில் நவரத்தின மாலை ஒன்றை வைத்துச் சமர்ப்பித்தார்கள். அதை அநிருத்தப் பிரம்மராயர் வாங்கிக் கணக்கரிடம் கொடுத்து, "செம்பியன் மகாதேவியின் ஆலயத் திருப்பணிக்கு என்று எழுதி வைத்துக் கொள்க!" என்றார்.

பிறகு வந்தவர்களைப் பார்த்து "நீங்கள் யார்?" என்று கேட்டார்.

(இந்த நீண்ட தொடர்ப் பெயர் கொண்ட வர்த்தகக் கூட்டத்தார் சோழப் பேரரசின் கீழ், கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் நடத்தி வந்தார்கள்.) "நானா தேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் சார்பில் நாங்கள் வந்திருக்கிறோம்" என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

"சந்தோஷம்; பாண்டிய நாட்டில் உங்களுடைய வாணிபம் செழிப்பாயிருக்கிறதல்லவா?"

"நாளுக்கு நாள் செழிப்படைந்து வருகிறது!"

"பாண்டிய நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?"

"பாண்டிய வம்ச ஆட்சியைக் காட்டிலும் சோழ குல ஆட்சியே மேலானது என்று பேசிக் கொள்கிறார்கள். முக்கியமாக, இளவரசர் அருள்மொழிவர்மரின் வீர தயாளங்களைக் குறித்துச் சிலாகிக்கிறார்கள். இலங்கையில் நடப்பதெல்லாம் இந்தப் பக்கத்து மக்களிடையில் பரவியிருக்கிறது..."

"கீழ்க்கடல் நாடுகளுடன் உங்கள் கப்பல் வாணிபம் இப்போது எப்படியிருக்கிறது?"

"சுந்தர சோழ சக்கரவர்த்தி ஆளுகையில் ஒரு குறைவும் இல்லை. சென்ற ஆண்டில் அனுப்பிய எங்கள் கப்பல்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டன; ஒன்றுகூடச் சேதமில்லை."

"கடல் கொள்ளைக்காரர்களினால் தொல்லை ஒன்றுமில்லையே?"

"சென்ற ஆண்டில் இல்லை, மானக்கவாரத் தீவுக்கு அருகில் இருந்த கடற் கொள்ளைக்காரர்களை நம் சோழக் கப்பற் படை அழித்த பிறகு கீழைக்கடல்களில் கொள்ளை பயம் கிடையாது."

"நல்லது; நாம் கொடுத்தனுப்பிய ஓலை சம்பந்தமாக என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?"

"கட்டளைப்படி செய்திருக்கிறோம். இலங்கைச் சைன்யத்துக்கு அனுப்ப ஆயிரம் மூட்டை அரிசியும், ஐந்தாறு மூட்டை சோளமும், நூறு மூட்டை துவரம்பருப்பும் இந்த இராமேசுவரத் தீவில் கொண்டு வந்திருக்கிறோம். இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்."

"உங்களுடைய கப்பல்களிலேயே ஏற்றி அனுப்ப முடியுமா?"

"கட்டளையிட்டால் செய்கிறோம். இலங்கை யுத்தம் எப்போது முடியும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்."

"ஆ! அது யாருக்குத் தெரியும்? உங்களுடைய வர்த்தக சபைக்குச் சோதிடக்காரன் இருக்கிறான் அல்லவா? அவனைக் கேட்டு எனக்கும் சொல்லுங்கள்!"

"பிரம்ம ராஜரே! எங்கள் சோதிடக்காரன் சொல்வதையெல்லாம் எங்களாலேயே நம்ப முடியவில்லை."

"அப்படி அவன் என்ன சொல்லுகிறான்?"

"இளவரசர் அருள்மொழிவர்மர் போகுமிடமெல்லாம் வெற்றிதான் என்று சொல்லுகிறான். அவருடைய ஆட்சியில் சோழக் கப்பல் படை கடல் கடந்த தேசங்களுக்கெல்லாம் சென்று வெற்றி கொள்ளும் என்று சொல்லுகிறான். தூர தூரத்தில் உள்ள தேசங்கள் பலவற்றில் புலிக்கொடி பறக்கும் என்று சொல்லுகிறான்."

"அப்படியானால் உங்கள் பாடு கொண்டாட்டம் தான்!"

"ஆம்; எங்கள் கடல் வர்த்தகம் மேலும் செழித்து ஓங்கும் என்றும் சொல்லியிருக்கிறான்."

"மிகவும் சந்தோஷம் ஸ்ரீரங்கநாதருடைய அருள் இருந்தால் அப்படியே நடக்கும். இலங்கையில் யுத்தம் நடக்கும் வரையில் மாதம் ஒரு தடவை நீங்கள் இப்படியே அரிசி முதலியவை அனுப்பி வரவேண்டும். போய் வாருங்கள்."

"அப்படியே செய்கிறோம், போய் வருகிறோம்."

ஐந்நூற்றுவர் சபையின் பிரதிநிதிகள் போன பிறகு ஒரு காவலன் வந்து, "தெரிஞ்ச கைக்கோளப் படைச் சேனாதிபதிகள் காத்திருக்கிறார்கள், பார்க்க விரும்புகிறார்கள்" என்று சொன்னான்.

"வரச் சொல்லு!" என்றார் முதல் அமைச்சர் அநிருத்தர்.

மூன்று கம்பீர புருஷர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது.

(இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர். அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.)

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன். ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம் வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"

"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடுஎன்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."

"பாண்டியர்களும் சேரர்களும் போர்க்களத்தில் எதிர்த்து நின்றார்கள்; அதனால் அவர்களைத் தாக்கி முறியடித்தீர்கள். பகை வீரர்களை முதலில் கண்ணால் பார்த்தால்தானே அவர்களை நீங்கள் ஒரு கையும் பார்க்கலாம்; மூன்று கையும் பார்க்கலாம்?"

"இராவணர் காலத்து அசுரர்களைப்போல் இந்தக் காலத்து இலங்கை வீரர்களும் மாயாவிகளாகிவிட்டார்களா? மேக மண்டலத்தில் மறைந்து நின்று போரிடுகிறார்களா?"

"மாயாவிகளாய் மறைந்துதான் விட்டார்கள்; ஆனால் போர் செய்யவில்லை. போரிட்டால்தான் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விடலாமே? இலங்கை அரசன் மகிந்தனையும் காணவில்லை; அவனுடைய சேனா வீரர்களையும் காணவில்லை. காடுகளிலே, மலைகளிலே எங்கே போய் ஒளிந்து கொண்டார்களோ, தெரியவில்லை. ஆகையால் ஆறு மாதமாக இலங்கையில் யுத்தமே நடைபெறவில்லை. உங்களையும் அங்கே அனுப்பி என்ன செய்கிறது?"

"மகா மந்திரி! எங்களை அனுப்பிப் பாருங்கள்! மகிந்தனும், அவனுடைய வீரர்களும் காடு மலைகளிலே ஒளிந்திருக்கட்டும்; அல்லது மேக மண்டலத்திலே ஒளிந்திருக்கட்டும்; அவர்களைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து இளவரசரின் காலடியில் சேர்க்கிறோம். அப்படிச் சேர்க்காவிட்டால், 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயரை மாற்றிக்கொண்டு 'வேளாளரின் அடிமைப்படை' என்ற பட்டயத்தைப் பெற்றுக் கொள்கிறோம்!"

"வேண்டாம்; வேண்டாம்! அப்படி ஒன்றும் இப்போது சபதம் செய்ய வேண்டாம்! தெரிஞ்ச கைக்கோளர் படையின் வீர பராக்கிரமம் இந்த ஜம்புத்வீபத்தில் யாருக்குத் தெரியாது? தஞ்சாவூர் சென்றதும் சக்கரவர்த்தியைக் கேட்டுக் கொண்டு உங்களுக்குக் கட்டளை அனுப்புகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள். பாண்டிய நாட்டில் பகைவர்களை அடக்கி அமைதியை நிலை நாட்டி வாருங்கள்!"

"மகா மந்திரி! பாண்டி நாட்டில் இனி அடக்குவதற்குப் பகைவர் யாரும் இல்லை. குடி மக்கள் யுத்தம் நின்றது பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவரவர்களும் விவசாயம், வாணிபம், கைத்தொழில்களில் ஈடுபட்டு அமைதியான வாழ்க்கை நடத்துகிறார்கள். பாண்டிய மன்னர் குலமோ நாசமாகி விட்டது..."

"அவ்விதம் எண்ண வேண்டாம்! வீர பாண்டியனோடு பாண்டிய வம்சம் அற்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். அது தவறு, பாண்டிய சிம்மாசனத்துக்கு உரிமை கோருவோர் இன்னும் இருக்கிறார்கள்...! அவர்களுக்காகச் சதிசெய்வோரும் இருக்கிறார்கள்...!"

"ஆகா! எங்கே அந்தச் சதிகாரர்? தெரியப்படுத்துங்கள்!"

"காலம் வரும்போது உங்களுக்கே தெரியும். பாண்டிய குலத்தின் பழைமையான மணிக் கிரீடமும், இந்திரன் அளித்த இரத்தின மாலையும், வைரமிழைத்த பட்டத்து உடைவாளும் இன்னும் இலங்கையில் இருந்து வருகின்றன. ரோஹண மலை நாட்டில் எங்கேயோ ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் மீட்டுக்கொண்டு வரும் வரையில் பாண்டியப் போர் முற்றுப் பெறாது."

"ஆபரணங்களை மீட்டுக்கொண்டு வரவேண்டும்; இளவரசர் அருள்மொழிவர்மரை மதுரைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய மணி மகுடத்தையும், பட்டாக் கத்தியையும் அணிவிக்கும் நாளும் வரவேண்டும்!"

"ஆகா! இது என்ன வார்த்தை சொல்கிறீர்கள்?"

"குடிமக்களின் நாவிலும், போர் வீரர்களின் உள்ளத்திலும் இருப்பதைச் சொல்கிறோம்!"

"அதெல்லாம் பெரிய இராஜரீக விஷயங்கள், நாம் பேசவேண்டாம். உங்களுக்குச் சந்தோஷமளிக்கக்கூடிய வேறு ஒரு முக்கிய விஷயம் சொல்லப் போகிறேன்..."

"கவனமாய்க் கேட்டுக் கொள்கிறோம், மகா மந்திரி!"

"இலங்கை யுத்தத்தோடு யுத்தம் முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைப்போர் முடிந்த பிறகு நாலா திசைகளிலும் திக்விஜயம் செய்யப் புறப்படுவார். ஆயிரம் கப்பல்களில் வீரர்களை ஏற்றிக்கொண்டு கீழ்த்திசைக் கடல்களிலே செல்வார். மாநக்கவாரம், மாபப்பாளம், மாயிருடிங்கம், கடாரம், இலாமுரி தேசம், ஸ்ரீவிசயம், சாவகம், புட்பகம் ஆகிய நாடுகளை அந்த மகா வீரர் வெற்றி கொள்வார். தெற்கே முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும் கைப்பற்றுவார். மேற்கே, கேரளம், குடமலை, கொல்லம் ஆகிய நாடுகள் அவருடைய காலடியில் வந்து பணியும். பிறகு வடதிசை நோக்கிப் புறப்படுவார். வேங்கி, கலிங்கம், இரட்டபாடி, சக்கரக்கோட்டம், அங்கம், வங்கம், கோசலம், விதேகம், கூர்ஜரம், பாஞ்சாலம் என்னும் நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்வார். காவியப் புகழ் பெற்ற கரிகால வளவனைப் போல் இமயமலைக்கும் சென்று புலிக்கொடியை நாட்டுவார். வீர சேநாதிபதிகளே! இப்படியெல்லாம் நமது தென்திசை மாதண்டநாயகர் திட்டம் இட்டிருக்கிறார். தமிழகத்தில் வீர ரத்தமும், வயிர நெஞ்சமும் படைத்த அனைவருக்கும் வேண்டிய வேலை இருக்கும்; தத்தம் வீர பராக்கிரமங்களை நிலை நாட்டச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆகையால் நீங்களும் உங்கள் தெரிஞ்ச கைக்கோளப் படையும் பொறுமை இழக்க வேண்டாம்!"

சேநாதிபதிகள் மூவரும் ஏக காலத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க! இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க! மகா மந்திரி அநிருத்தர் வாழ்க!" என்று கோஷித்தார்கள்.

பிறகு அவர்களில் ஒரு படைத்தலைவன் கூறினான்; - "மகாமந்திரி! இன்னும் ஒரே ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறோம். எங்கள் படையின் பெயர் 'சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படை' என்பது தாங்கள் அறிந்ததே."

"தெரிந்த விஷயந்தான்."

"சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருப்பணியில் உயிரையும் விடுவோம் என்று பகைவர்களின் இரத்தம் தோய்ந்த சிவந்த கையினால் அடித்துப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்."

"அதுவும் நான் அறிந்ததே."

"ஆகையால் சக்கரவர்த்தியைத் தவிர வேறு யாரையும் நாங்கள் சேரமாட்டோம்; வேறு யார் சொல்வதையும் கேட்கமாட்டோ ம்."

"உங்களிடம் நான் எதிர்பார்த்ததும் இதுவேதான்!"

"முன்னொரு காலத்தில் பழுவேட்டரையர்களின் மாபெரும் சேனையில் ஒரு பகுதியாக இருந்தோம். அது காரணம் பற்றி எங்கள் பேரில் யாருக்கும் யாதொரு சந்தேகமும் ஏற்படக் கூடாது..."

"ஆகா! இது என்ன வார்த்தை? யாருக்கு என்னச் சந்தேகம்!"

"தஞ்சாவூரில் நடப்பது பற்றி ஏதேதோ வதந்திகள் காற்றிலே வருகின்றன."

"காற்றிலே வருகிறது காற்றோடு போகட்டும்! நீங்கள் அதையெல்லாம் நம்பவும் வேண்டாம்; திருப்பிச் சொல்லவும் வேண்டாம்."

"கொடும்பாளூர் வேளாளர்கள் ஏதாவது எங்களைப் பற்றிச் சந்தேகத்தை கிளப்பக்கூடும்..."

"கிளப்ப மாட்டார்கள்; கிளப்பினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்."

"மனித காயம் அநித்தியமானது..."

"அதனால் சுத்த வீரர்கள் உயிருக்குப் பயப்படமாட்டார்கள்."

"திரிபுவன சக்கரவர்த்தியானாலும் ஒரு நாள்..."

"இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டியதுதான்."

"சக்கரவர்த்திக்கோ உடல்நிலை சரியாக இல்லை..."

"வானத்தில் வால் நட்சத்திரம் பிரகாசிக்கிறது!"

"சக்கரவர்த்திக்கு அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால், எங்கள் படை வீரர்கள் அருள்மொழிவர்மரின் அகப் பரிவாரமாக விரும்புகிறார்கள்!"

"சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் படி நடப்பது உங்கள் கடமை!"

"சக்கரவர்த்தியின் ஆக்ஞையை எங்களுக்குத் தெரிவிப்பது தங்களுடைய கடமை. தாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது தஞ்சைக்குப் போய்ச் சக்கரவர்த்தியைத் தரிசிக்க எங்களுக்கு அநுமதி கொடுங்கள்...!"

"வேண்டாம்; நீங்கள் தஞ்சை போவது உசிதமல்ல; வீண் குழப்பம் ஏற்படும். சக்கரவர்த்தியைக் கண்டு உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்துவதை நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் நிம்மதியாக இருங்கள்!"

"தங்களிடம் தெரியப்படுத்தியதுமே எங்களுடைய மனத்திலிருந்த பாரம் நீங்கிவிட்டது! போய் வருகிறோம்!" தெரிஞ்ச கைக்கோளப் படைத் தலைவர்கள் மூவரும் அங்கிருந்து அகன்று சென்றார்கள்.

அநிருத்தப் பிரமராயர் "ஆகா! பொன்னியின் செல்வரிடம் அப்படி என்னதான் ஆகர்ஷண சக்தி இருக்குமோ, தெரியவில்லை! அவரை ஒரு முறை பார்த்தவர்கள்கூடப் பைத்தியமாகி விடுகிறார்களே!" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

பிறகு, உரத்த குரலில், "எங்கே? அந்த முரட்டு வைஷ்ணவனை இங்கே வரச் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டார்










Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. தெரிஞ்ச கைக்கோளப் படை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "இதோ யுத்தம்!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. அருள்மொழிவர்மர்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பரிசோதனை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: