BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. குருவும் சீடனும்  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. குருவும் சீடனும்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. குருவும் சீடனும்  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. குருவும் சீடனும்    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. குருவும் சீடனும்  Icon_minitimeTue May 10, 2011 3:42 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

12. குருவும் சீடனும்



இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இக்கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். திருச்சிராப்பள்ளி ஜில்லா லால்குடி தாலுகாவில் அன்பில் என்ற பெயர் கொண்ட கிராமம் ஒன்று இருக்கிறது. இதை வடமொழியாளர் 'பிரேமபுரி' என்று மொழிபெயர்த்துக் கையாண்டிருக்கிறார்கள். (இந்த அத்தியாயம் எழுதப்பட்டது 1951-ல்) இன்றைக்குச் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் ஒரு வேளாளர் தம்முடைய பழைய வீட்டை இடித்துப் புதுப்பித்துக் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டினார். அப்போது ஓர் அதிசயமான வஸ்து பூமிக்கடியிலிருந்து அகப்பட்டது. பல செப்புத் தகடுகளை நுனியில் துவாரமிட்டு வளையத்தினால் கோத்திருந்தது. அந்தத் தகடுகளில் ஏதோ செதுக்கி எழுதப்பட்டிருந்தது. இரண்டு ஆள் தூக்க முடியாத கனமுள்ள அந்தத் தகடுகளை அவர் சில காலம் வைத்திருந்தார். பிறகு அந்தக் கிராமத்துக் கோயிலைப் புதுப்பித்து திருப்பணி செய்யலாம் என்று வந்த ஸ்ரீ ஆர்.எஸ்.எல். லக்ஷ்மண செட்டியார் என்பவரிடம் அத்தகடுகளைக் கொடுத்தார். ஸ்ரீ லக்ஷ்மண செட்டியார், அத்தகடுகளில் சரித்திர சம்பந்தமான விவரங்கள் இருக்கலாம் என்று ஊகித்து அவற்றை எடுத்துக் கொண்டுபோய் மகா மகோபாத்தியாய சுவாமிநாத ஐயர் அவர்களிடம் தந்தார். ஐயர் அவர்கள் அச்செப்பேடுகளில் மிக முக்கியமாக விவரங்கள் இருப்பதைக் கண்டு அந்த நாளில் சிலாசாஸன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ டி.ஏ. கோபிநாத ராவ், எம்.ஏ. என்பாரிடம் அத்தகடுகளைச் சேர்ப்பித்தார். ஸ்ரீகோபிநாதராவ் அச்செப்புத் தகடுகளைத் கண்டதும் அருமையான புதையலை எடுத்தவர் போல் அகமகிழ்ந்தார். ஏனென்றால், சோழ மன்னர்களின் வம்சத்தைப் பற்றிய அவ்வளவு முக்கியமான விவரங்கள் அச்செப்பேடுகளில் செதுக்கப்பட்டிருந்தன.

சுந்தரசோழ சக்கரவர்த்தியின் 'மான்ய மந்திரி'யான அன்பில் அநிருத்தப்பிரமராயருக்குச் சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த நாலாம் ஆண்டில் அளித்த பத்து வேலி நில சாஸனத்தைப் பற்றிய விவரங்கள் அந்தச் செப்பேடுகளில் செதுக்கப்பட்டிருந்தன. இந்த நில சாஸனத்தை எழுதிய மாதவ பட்டர் என்பவர் சுந்தர சோழர் வரைக்கும் வந்த சோழ வம்சாளியை அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அநிருத்தப் பிரமராயரின் வைஷ்ணவ பரம்பரையைக் குறிப்பிட்டு, அவருடைய தந்தை, தாயார், பாட்டனார், கொள்ளுப்பாட்டனார் ஆகியவர்கள் ஸ்ரீரங்கநாதரின் ஆலயத்தில் செய்து வந்த சேவையைத் குறித்தும் எழுதியிருந்தார். இதற்கு முன்னால் அகப்பட்டிருந்த ஆனைமங்கலச் செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், ஆகியவற்றில் கொடுத்திருந்த சோழ வம்சாவளியுடன் அன்பில் செப்பேடுகளில் கண்டது பெரும்பாலும் ஒத்திருந்தது. எனவே, அந்தச் செப்பேடுகளில் கண்டவை சரித்திர பூர்வமான உண்மை விவரங்கள் என்பது ஊர்ஜிதமாயிற்று. மற்ற இரண்டு செப்பேடுகளில் காணாத இன்னும் சில விவரங்களும் இருந்தபடியால் "அன்பிற் செப்பேடுகள்" தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சித் துறையில் மிகப் பிரசித்தி அடைந்தன.

எனவே, அநிருத்த பிரமராயர் என்பவர் சரித்திரச் செப்பேடுகளில் புகழ் பெற்ற சோழ சாம்ராஜ்ய மந்திரி என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு மேலே கதையைத் தொடர்ந்து படிக்குபடி நேயர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
*****
மானிய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த மண்டபத்துக்குள் ஆழ்வார்க்கடியான் பிரவேசித்தான். அவரை மூன்று தடவை சுற்றி வந்தான்! சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்!

"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு" என்று நாலு தடவை உரத்த குரலில் உச்சரித்துவிட்டு, "குருதேவரே விடை கொடுங்கள்" என்றான்.

அநிருத்தர் புன்னகையுடனே, "திருமலை! என்ன இந்தப் போடு போடுகிறாய்? எதற்கு என்னிடத்தில் விடை கேட்கிறாய்?" என்றார்.

"தாஸன் அவலம்பித்த ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தையும், 'ஆழ்வார்க்கடியான்' என்ற பெயரையும், தங்களுக்குக் கைங்கரியம் செய்யும் பாக்கியத்தையும் இந்த மாகடலில் அர்ப்பணம் செய்துவிட்டு வீர சைவ காளாமுக சம்பிரதாயத்தைச் சேர்ந்து விடப் போகிறேன். கையில் மண்டை ஓட்டை எடுத்துக்கொண்டு 'ஓம் ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு' என்ற மகத்தான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஊர் ஊராகப் போவேன்! தலையில் ஜடாமகுடமும், முகத்தில் நீண்ட தாடியும் வளர்த்துக் கொண்டு, எதிர்ப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய மண்டைகளையெல்லாம் இந்தத் தடியினால் அடித்துப் பிளப்பேன்..."

"அப்பனே! நில்! நில்! என்னுடைய மண்டைக்குக் கூட அந்தக் கதிதானோ?"

"குருவே! தாங்கள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை இன்னமும் அவலம்பிக்கிறவர்தானோ?"

"திருமலை! அதைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்? என்னை யார் என்று நினைத்தாய்!"

"தாங்கள் யார்? அது விஷயத்திலேதான் எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு நதிகளின் நடுவில் அறிதுயில் புரிந்து சகல புவனங்களையும் காக்கும் ஸ்ரீ ரங்கநாதருக்குப் பணி செய்வதையே வாழ்க்கை எடுத்த பயனாகக் கொண்டிருந்த அன்பில் அனந்தாழ்வார் சுவாமிகளின் கொள்ளுப்பேரர் தாங்கள் தானே?"

"ஆம் அப்பனே? நான்தான்!"

"ஸ்ரீமந் நாராயண நாமத்தின் மகிமையை நானிலத்துக்கெல்லாம் எடுத்துரைத்த அன்பில் அநிருத்தப் பட்டாச்சாரியின் திருப்பேரரும் தாங்கள்தானே?"

"ஆமாம்; நானேதான்! அந்த மகானுடைய திருநாமத்தைத் தான் எனக்கும் சூட்டினார்கள்?"

"ஆழ்வார்களுடைய அமுதொழுகும் மதுர கீதங்களைப் பாடிப் பக்த கோடிகளைப் பரவசப்படுத்தி வந்த நாராயண பட்டாச்சாரியின் சாக்ஷாத் சீமந்த புத்திரரும் தாங்களேயல்லவா?"

"ஆமாம் அப்பா; ஆமாம்!"

"ஸ்ரீ ரங்கநாதர் பள்ளிகொண்ட பொன்னரங்கக் கோயிலில் தினந்தினம் நுந்தா விளக்கு ஏற்றி வைத்தும் யாத்ரீகர்களுக்கு வெள்ளித் தட்டில் அன்னமிட்டும் கைங்கரியம் புரிந்து வந்த மங்கையர் திலகத்தின் புதல்வரும் தாங்களே அல்லவா?"

"சந்தேகம் இல்லை!"

"அப்படியானால், என் கண்கள் என்னை மோசம் செய்கின்றனவா? என் கண் முன்னே நான் பார்ப்பது பொய்யா? என் இரு செவிகளால் நான் கேட்டதும் பொய்யா?"

"எதைச் சொல்கிறாய், அப்பனே? உன் கண்களின் மேலும் காதுகளின் பேரிலும் சந்தேகம் கொள்ளும்படி என்ன நேர்ந்து விட்டது?"

"தாங்கள் இந்த ஊர்ச் சிவன் கோயிலுக்குச் சென்று அபிஷேகம் - அர்ச்சனை எல்லாம் நடத்திவைத்ததாக என் செவிகளால் கேட்டேன்."

"அது உண்மையேதான்; உன் செவிகள் உன்னை மோசம் செய்து விடவில்லை."

"தாங்கள் சிவன் கோவிலுக்குப் போய் வந்ததின் அடையாளங்கள் தங்கள் திருமேனியில் இருப்பதாக என் கண்கள் காண்பதும் உண்மைதான் போலும்!"

"அதுவும் உண்மையே!"

"இந்தக் கலியுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே தெய்வம் என்றும், ஆழ்வார்களின் பாசுரங்களே வேதம் என்றும், ஹரிநாம சங்கீர்த்தனமே மோட்சத்தை அடையும் மார்க்கம் என்றும் எனக்குக் கற்பித்த குருதேவர் தாங்களே அல்லவா?"

"ஆம்; அதனால் என்ன?"

"குருதேவராகிய தாங்களே சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருந்தால், சீடனாகிய நான் என்ன செய்யக் கிடக்கின்றது?"

"திருமலை! நான் சிவன் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்தது பற்றித்தானே சொல்லுகிறாய்?"

"குருதேவரே! அங்கே எந்தக் கடவுளைத் தரிசனம் செய்தீர்கள்?"

"சந்தேகம் என்ன? நாராயண மூர்த்தியைத்தான்!"

"இராமேஸ்வரக் கோயிலுக்குள் இலிங்க வடிவம் வைத்திருப்பதாக அல்லவோ கேள்விப்பட்டிருக்கிறேன்? அதனால் தானே இங்குள்ள வீர சைவ பட்டர்மார்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அவ்வளவு கொக்கரித்தார்கள்?"

"பிள்ளாய்! நீ திருநகரியில் திரு அவதாரம் செய்த நம் சடகோபரின் அடியார்க்கடியான் என்று நாம் பூண்டிருப்பது சத்தியந்தானே?"

"அதில் என்ன சந்தேகம்?"

"நம்மாழ்வாரின் அருள்வாக்கைச் சற்று ஞாபகப்படுத்திக்கொள். நீ மறந்திருந்தால் நானே நினைவூட்டுகிறேன்; கேள்;

'இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந்
தெய்வமுமாகி நின்றானே!....'

இவ்வாறு சடகோபரே சாதித்திருக்கும்போது சிவலிங்கத்தில் நான் நாராயணனைத் தரிசித்தது தவறா?"

"ஆகா! சடாகோபரின் அருள்வாக்கே! வாக்கு! இலிங்கத்தை வழிபடுவோரைச் சமணரோடும் சாக்கியரோடும் கொண்டு போய்த் தள்ளினார் பாருங்கள்!"

"அப்பனே! உன் குதர்க்க புத்தி உன்னை விட்டு எப்போது நீங்குமோ, தெரியவில்லை. நம் சடகோபர் மேலும் சொல்லியிருப்பதைக் கேள்:

'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய்
நெடுவானாய்ச்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய்
அயனாய்...'

உள்ளவன் ஸ்ரீ நாராயண மூர்த்தியே என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இன்னும் கேள், திருமலை! கேட்டு உன் மனமாசைத் துடைத்துக்கொள்!

'முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே
என் கள்வா!
தனியே ஆருயிரே என்தலை மிசையாய்
வந்திட்டு..."

கேட்டாயா, திருமலை 'முக்கண்ணப்பா!' என்று நம் சடகோபர் கூவி அழைத்துத் தம் தலைமீது வரும்படி பிரார்த்தித்திருக்கிறார்! நீயோ சிவன் கோயிலுக்கு நான் போனது பற்றி ஆட்சேபிக்கிறாய்!..."

"குருதேவரே! மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க வேண்டும்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால் வீண் சண்டைகளில் காலங்கழித்தேன். தங்களையும் சந்தேகித்தேன். இனி எனக்கு ஒரு வரம் கொடுத்து அருள வேண்டும்."

"என்ன வரம் வேண்டும் என்று சொன்னாயானால், கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம்."

"திருக்குருகூர் சென்று அங்கேயே தங்கிவிட ஆசைப்படுகிறேன். நம் சடகோபரின் ஆயிரம் பாடல்களையும் சேகரித்துக் கொண்டு பிறகு ஊர் ஊராகச் சென்று அந்தப் பாடல்களைக் கானம் செய்ய விரும்புகிறேன்..."

"இந்த ஆசை உனக்கு ஏன் வந்தது?"

"வடவேங்கடத்திலிருந்து வரும் வழியில் வீர நாராயணப் பெருமாள் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றைப் பாடினேன். அந்தச் சந்நிதியில் கைங்கரியம் செய்யும் ஈசுவரப்பட்டர் என்னும் பெரியவர் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்..."

"ஈசுவர பட்டர் மகா பக்திமான்; நல்ல சிஷ்டர்."

"அவருடைய இளம் புதல்வன் ஒருவனும் அவர் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான். அந்த இளம் பாலகனின் பால்வடியும் முகம் ஆழ்வார் பாசுரத்தை கேட்டுப் பூரண சந்திரனைப்போல் பிரகாசித்தது. 'மற்றப் பாடல்களும் தெரியுமா?' என்று அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை பால் மணம் மாறாத வாயினால் கேட்டான். 'தெரியாது' என்று சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது. ஆழ்வார்களின் தொண்டுக்கே ஏன் இந்த நாயேனை அர்ப்பணம் செய்து விடக்கூடாது என்று அப்போதே தோன்றியது. இன்றைக்கு அந்த எண்ணம் உறுதிப்பட்டுவிட்டது..."

"திருமலை; அவரவர்களும் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கீதாச்சாரியார் அருள்புரிந்திருக்கிறார் அல்லவா?"

"ஆம், குருவே!"

"ஆழ்வார்களின் பாசுரங்களைச் சேகரிப்பதற்கும் பரப்புவதற்கும் மகான்கள் அவதரிப்பார்கள். அதுபோலவே ஆழ்வார்களுடைய பாடல்களில் உள்ள வேத சாரமான தத்துவங்களை நிரூபணம் செய்து, வடமொழியின் மூலம் பரத கண்டமெங்கும் நிலை நாட்டக்கூடிய அவதார மூர்த்திகளும் இந்நாட்டில் ஜனிப்பார்கள். நீயும் நானும் இராஜ்ய சேவையை நமது ஸ்வதர்மமாகக் கொண்டவர்கள். சோழ சக்கரவர்த்தியின் சேவையில் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்வதாக நாம் சபதம் செய்திருப்பதை மறந்தனையோ?.."

"மறக்கவில்லை, குருவே! ஆனால் அது உசிதமா என்ற சந்தேகம் தோன்றி என் உள்ளத்தை அரித்து வருகிறது. முக்கியமாக, தங்களைப் பற்றிச் சில இடங்களில் பேசிக் கொள்வதைக் கேட்டால்..."

"என்ன பேசிக் கொள்கிறார்கள்?"

"தங்களுக்குச் சக்கரவர்த்தி பத்து வேலி நிலம் மானியம் விட்டு அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருப்பதால் தாங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை விட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஜாதி தர்மத்தைப் புறக்கணித்துக் கப்பல் பிரயாணம் செய்ததாகவும் கூறுகிறார்கள்..."

"அந்தப் பொறாமைக்காரர்கள் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம். நம்முடைய ஜாதி கிணற்றுத் தவளைகளாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். சக்கரவர்த்தி எனக்குப் பத்து வேலி நிலம் மானியம் கொடுத்திருப்பது உண்மைதான். அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு நாலு வருஷங்களுக்கு முன்பே சக்கரவர்த்திக்கு நான் மந்திரியானேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?"

ஆழ்வார்க்கடியான் மௌனமாயிருந்தான்.

"சக்கரவர்த்திக்கும் எனக்கும் எப்போது நட்பு ஏற்பட்டது என்றாவது உனக்குத் தெரியுமா? நாங்கள் இருவரும் இளம்பிராயத்தில் ஒரே ஆசிரியரிடம் பாடங்கற்றோம். செந்தமிழும் வடமொழியும் பயின்றோம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் எல்லாம் படித்தோம். அப்போதெல்லாம் சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறப் போகிறார் என்று யாரும் கனவிலும் எண்ணியதில்லை. அவராவது, நானாவது அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. இராஜாதித்தரும் கண்டராதித்தரும் காலமாகி அரிஞ்சய சோழர் பட்டத்துக்கு வருவார் என்று யார் நினைத்தது? அரிஞ்சயருக்கு அவ்வளவு விரைவில் துர்மரணம் சம்பவித்துச் சுந்தர சோழர் பட்டத்துக்கு வரும்படியிருக்கும் என்று தான் யார் நினைத்தார்கள்? சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறியபோது அதனால் பல சிக்கல்கள் விளையும் என்று எதிர்பார்த்தார். உடனிருந்து நான் உதவுவதாயிருந்தால் பட்டத்தை ஒப்புக்கொள்வதாகவும் இல்லாவிட்டால் மறுத்துவிடுவதாகவும் கூறினார். இராஜ்ய நிர்வாகத்தில் அவருக்கு உதவுவதாக அப்போது வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை இன்றளவும் நிறைவேற்றி வருகிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா, திருமலை?"

"எனக்குத் தெரியும், குருதேவா! என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்து என்ன பயன்? ஜனங்களுக்குத் தெரியாது தானே? நாட்டிலும் நகரத்திலும் வம்பு பேசுகிறவர்களுக்குத் தெரியாதுதானே"

"வம்பு பேசுகிறவர்களைப் பற்றி நீ சிறிதும் கவலைப்படவேண்டாம். பரம்பரையான ஆச்சாரியத் தொழிலை விட்டுவிட்டு நான் இராஜ சேவையில் இறங்கியது பற்றி இதற்கு முன்னால் நானே சில சமயம் குழப்பமடைந்ததுண்டு. ஆனால் சென்ற இரண்டு நாட்களாக அத்தகைய குழப்பம் எனக்குச் சிறிதும் இல்லை. திருமலை! நான் இராமேசுவர ஆலயத்தில் சுவாமி தரிசனத்துக்காக இங்கு வரவில்லை என்பதும் மாதோட்டம் போவதற்காகவே இங்கு வந்தேன் என்பதும் உனக்குத் தெரியும் அல்லவா?"

"அப்படித்தான் ஊகித்தேன், குருதேவரே!"

"நீ ஊகித்தது சரியே, அன்றைக்குச் சம்பந்தரும் சுந்தரமூர்த்தியும் பரவசமாக வர்ணித்தபடியேதான் இன்றைக்கும் பாலாவி நதிக்கரையில் மாதோட்டம் இருக்கிறது.

'வண்டுபண்செயும் மாமலர்ப் பொழில்
மஞ்ஞை நடமிடுமாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய
அருள்செய் கேதீச்சுர மதுதானே!'

என்று சம்பந்தர் பாடியிருக்கிறாரே, அந்த மாதோட்டத்தை நேரில் பார்க்காமல் எழுதியிருக்க முடியுமா? இந்த இராமேசுவரத் தீவிலிருந்தபடியே மாதோட்டத்தை எட்டிப் பார்த்து விட்டு எழுதியதாகச் சொல்லுகிறார்கள், கிணற்றுத் தவளைப் பண்டிதர்கள் சிலர். அத்தகையோர் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம்..."

"சுவாமி! மாதோட்டத்தின் இயற்கை வளங்களைக் கண்டு களிப்பதற்காகவா தாங்கள் அந்த க்ஷேத்திரத்துக்குச் சென்றிருந்தீர்கள்?"

"இல்லை; உன்னை அங்கே அனுப்ப எண்ணியிருப்பதால் அதைப் பற்றியும் சொன்னேன். நான் சென்றது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்ப்பதற்காக..."

"இளவரசரைப் பார்த்தீர்களா, குருதேவரே?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான். அவனுடைய பேச்சில் இப்போதுதான் சிறிது ஆர்வமும் பரபரப்பும் தொனித்தன.

"ஆகா! உனக்குக்கூட ஆவல் உண்டாகிவிட்டதல்லவா, இளவரசரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு? ஆம், திருமலை! இளவரசரைப் பார்த்தேன்; பேசினேன். இலங்கையிலிருந்து வந்து கொண்டிருந்த அதிசயமான செய்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை நேரில் தெரிந்து கொண்டேன். கேள், அப்பனே! இலங்கை அரசன் மகிந்தனிடம் ஒரு மாபெரும் சைன்யம் இருந்தது. அந்தச் சைன்யம் இப்போது இல்லவே இல்லை! அது என்ன ஆயிற்று தெரியுமா? சூரியனைக் கண்ட பனிபோல் கரைந்து, மறைந்து போய்விட்டது! மகிந்தனுடைய சைன்யத்திலே பாண்டிய நாட்டிலிருந்தும், சேர நாட்டிலிருந்தும் சென்ற வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நம் இளவரசர் படைத்தலைமை வகித்து வருகிறார் என்று அறிந்ததும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள். ஒருவரைப் போல் அனைவரும் நம்முடைய கட்சிக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்! மகிந்தன் எப்படிப் போர் புரிவான்? போயே போய் விட்டான். மலைகள் சூழ்ந்த ரோஹண நாட்டிற்குச் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆக, நமது சைன்யம் போர் செய்வதற்கு அங்கு இப்போது எதிரிகளே இல்லை!"

"அப்படியானால், குருதேவரே! இளவரசர் நம் சைனியத்துடன் திரும்பிவிட வேண்டியதுதானே? மேலும் அங்கே இருப்பானேன்? நம் வீரர்களுக்குத் தானியம் அனுப்புவது பற்றிய ரகளையெல்லாம் எதற்காக?"

"எதிரிகள் இல்லையென்று சொல்லி திரும்பிவந்து விடலாம். ஆனால் இளவரசருக்கு அதில் இஷ்டமில்லை. எனக்கும் அதில் சம்மதமில்லை. இளவரசரும், சைனியமும் இப்பால் வந்ததும், மகிந்தன் மலை நாட்டிலிருந்து வெளி வருவான். மறுபடியும் பழையபடி போர் தொடங்கும் அதில் என்ன பயன்? இலங்கை மன்னரும், மக்களும் ஒன்று நமக்குச் சிநேகிதர்களாக வேண்டும். அல்லது புலிக்கொடியின் ஆட்சியை அங்கே நிரந்தரமாக நிறுவுதல் வேண்டும். இந்த இரண்டு வகை முயற்சியிலும் இளவரசர் ஈடுபட்டிருக்கிறார். நமது போர் வீரர்கள் இப்போது இலங்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? பழைய போர்களில் அநுராதபுர நகரமே நாசமாகிவிட்டது. அங்கிருந்த பழமையான புத்த விஹாரங்கள், கோயில்கள், தாது கர்ப்ப கோபுரங்கள் எல்லாம் இடிந்து பாழாய்க் கிடக்கின்றன. இளவரசரின் கட்டளையின் பேரில் இப்போது நம்வீரர்கள் இடிந்த அக்கட்டிடங்களை யெல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.!"

"அழகாய்த்தானிருக்கிறது சைவம், வைஷ்ணவம் இரண்டையும் கைவிட்டு இளவரசர் சாக்கிய மதத்திலேயே ஒருவேளை சேர்ந்து விடுவாரோ, என்னமோ? அதையும் தாங்கள் ஆமோதிப்பீர்களோ?"

"நானும் நீயும் ஆமோதித்தாலும் ஒன்றுதான்! ஆமோதிக்காவிட்டாலும் ஒன்றுதான். நம்மைப் போன்றவர்கள் நம்முடைய மதமே பெரிது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை ஆளும் அரசர் தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும் சமயங்கள் எல்லாவற்றையும் ஆதரித்துப் பராமரிக்கவேண்டும். இந்த உண்மையை யாருடைய தூண்டுதலுமில்லாமல் இளவரசர் தாமே உணர்ந்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்ததும் காரியத்திலும் செய்து காட்டுகிறார். திருமலை, இதைக் கேள்! நம் இளவரசர் அருள்மொழிவர்மருடைய கரங்களில் சங்கு சக்கர ரேகை இருப்பதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன், நீயும் கேட்டிருப்பாய். ஆனால் அவருடைய கரங்களை நீட்டச் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் கையில் சங்கு சக்கர ரேகை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்று நிச்சயமாக சொல்கிறேன். இந்தப் பூமண்டலத்தை ஏக சக்ராதிபதியாக ஆளத்தகுந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் இளவரசர் அருள்மொழிவர்மர் தாம். பிறவியிலேயே அத்தகைய தெய்வ கடாட்சத்துடன் சிலர் பிறக்கிறார்கள். சற்றுமுன் சில வர்த்தகத் தலைவர்களும் கைக்கோளப் படைச் சேநாதிபதிகளும் வந்துபேசிக் கொண்டிருந்தார்களே, அது உன் காதில் விழுந்ததா? இளவரசருக்கு என்றால் நம் வர்த்தகர்கள், - காசிலேயே கருத்துள்ளவர்கள், - எவ்வளவு தாராளமாகி விடுகிறார்கள் பார்த்தாயா?"

"சில நாளைக்கு முன்னால் பொதிகைமலைச் சிகரத்தில் ஒரு தவயோகியைப் பார்த்தேன்; அவர் ஞானக்கண் படைத்த மகான். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும். இப்போது தென்னாடு மேம்பாடு அடையும் காலம் வந்திருக்கிறது. வெகுகாலமாக இப்புண்ணிய பாரத பூமியில் பெரிய பெரிய சக்கரவர்த்திகளும், வீராதி வீரர்களும், ஞானப் பெருஞ் செல்வர்களும், மகா கவிஞர்களும் வடநாட்டிலேயே அவதரித்து வந்தார்கள். ஆனால் வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம் பிடிக்கப் போகிறது. இமயமலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம் செய்வார்கள். கோயில்களையும், விக்கிரகங்களையும் உடைத்துப் போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கும் உள்ளாகும். அப்போது நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில், வழிபாடு - ஆகியவற்றையெல்லாம் தென்னாடுதான் காப்பாற்றித் தரப்போகிறது. வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள் இத்தென்னாட்டில் தோன்றி, நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகா ஞானிகளும், பண்டிதோத்தமர்களும், பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில் அவதரிப்பார்கள்!' என்று இவ்விதம் அந்தப் பொதிகை மலைச் சிவயோகி அருளினார். அந்த யோகியின் தீர்க்க தரிசனம் உண்மையாகும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது பிறந்திருக்கிறது, திருமலை!'

"சுவாமி! தாங்கள் ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அங்கே இராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறியப் பார்க்கிறார்கள் குரு தேவரே! நான் பார்த்ததையெல்லாம் தாங்கள் பார்த்து நான் கேட்டதையெல்லாம் தாங்களும் கேட்டிருந்தால் இவ்வளவு குதூகலமாயிருக்க மாட்டீர்கள். இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏற்படப்போகும் அபாயத்தை நினைத்துக் கதிகலங்குவீர்கள்..."

"திருமலை, ஆம், நான் மறந்துவிட்டேன். அதிக உற்சாகம் என் அறிவை மூடிவிட்டது. நீ உன் பிரயாணத்தில் தெரிந்து வந்த செய்திகளை இன்னும் நான் கேட்கவே இல்லை. சொல், கேட்கிறேன். எவ்வளவு பயங்கரமான செய்திகளாயிருந்தாலும் தயங்காமல் சொல்!"

"சுவாமி, இங்கேயே சொல்லும்படி ஆக்ஞாபிக்கிறீர்களா? நான் கொண்டுவந்த செய்திகளை வாயு பகவான் கேட்டால் நடுங்குவார்; சமுத்திர ராஜன் கேட்டால் ஸ்தம்பித்து நிற்பார்; பட்சிகள் கேட்டால் பறக்கும் சக்தியை இழந்து சுருண்டுவிடும்; ஆகாசவாணியும், பூமா தேவியுங்கூட அலறிவிடுவார்கள். அப்படிப்பட்ட செய்திகளை இங்கே பகிரங்கமாகச் சொல்லும்படியா பணிக்கிறீர்கள்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அப்படியானால் வா! காற்றும், கனலும் புகாத பாதாளக் குகை ஒன்று இந்தத் தீவிலே இருக்கிறது. அங்கே வந்து விவரமாகச் சொல்லு!" என்றார் அநிருத்தப் பிரமராயர்










Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. குருவும் சீடனும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 4. நள்ளிரவில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: