BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. துரோகத்தில் எது கொடியது?   Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. துரோகத்தில் எது கொடியது?

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. துரோகத்தில் எது கொடியது?   Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. துரோகத்தில் எது கொடியது?    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. துரோகத்தில் எது கொடியது?   Icon_minitimeTue May 10, 2011 4:17 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

18. துரோகத்தில் எது கொடியது?



பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண்மணிகள் பலர் சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள். மன்னர் குலத்தில் பிறந்த மாதரசிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டார்கள். சோழ குலத்தில் பிறந்த பெண்மணிகளும் வாழ்க்கைப்பட்ட பெண்மணிகளும் சொந்தமாகச் சொத்துரிமை பெற்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தரவாரியாகக் கிராமங்களும், நன்செய் புன்செய் நிலங்களும், கால்நடைச் செல்வமும் இருந்தன. இந்த உடைமைகளை அவர்கள் எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பலர் ஆலயங்களில் தங்கள் பெயரால் பலவிதத் திருப்பணிகள் நடைபெறுவதற்குச் சொத்துக்களை உபயோகப்படுத்தினார்கள். திருவிளக்கு ஏற்றுதல் திருமாலை புனைந்து சாற்றுதல், தேசாந்திரிகளுக்கும் சிவனடியார்களுக்கும் திரு அமுது செய்வித்தல் - ஆகியவற்றுக்குப் பல அரசகுல மாதர்கள் நிவந்தங்கள் ஏற்படுத்திச் சிலாசாஸனம் அல்லது செப்புப் பட்டயத்தில் அவற்றைப் பொறிக்கும்படி செய்தார்கள்.

அரண்மனைப் பெண்டிர் ஆலயத் திருப்பணி செய்தல் அந்த நாளில் பொது வழக்காயிருந்திருக்க, சுந்தர சோழரின் அருமைப் புதல்வி குந்தவைப் பிராட்டி மட்டும் வேறொரு வகை அறத்துக்குத் தம் உடைமைகளைப் பயன்படுத்தினார். நோய்ப்பட்டிருந்த தம் தந்தையின் நிலையைக் கண்டு இரங்கியதனால்தானோ, என்னமோ, அவருக்கு நாடெங்கும் தர்ம வைத்திய சாலைகளை நிறுவ வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாயிற்று. பழையாறையில் பராந்தக சக்கரவர்த்தியின் பெயரால் ஓர் ஆதுரசாலை ஏற்படுத்தியிருந்ததை முன்னமே பார்த்தோம். அது போலவே தஞ்சையில் தன் தந்தையின் பெயரால் ஆதுரசாலை அமைப்பதற்குக் குந்தவை தேவி ஏற்பாடு செய்திருந்தார். இந்த விஜயதசமி தினத்தில் அந்த ஆதுரசாலையை ஆரம்பிக்கவும் அதற்குரியதான சாஸனங்களை எழுதிக் கொடுக்கவும் ஏற்பாடாகியிருந்தது.

தஞ்சைக் கோட்டைக்கு வெளியேயுள்ள புறம்பாடியில், பெருமாள் கோயிலுக்கு எதிர்ப்பட்ட கருட மண்டபத்தில், சுந்தர சோழ ஆதுரசாலையின் ஆரம்ப வைபவம் நடந்தது. திருமால் காக்கும் தெய்வமாதலாலும், கருடாழ்வார் அமுதம் கொண்டு வந்தவராதலாலும், விஷ்ணு கோயிலையொட்டிய கருட மண்டபத்தில் குந்தவைப் பிராட்டி ஆதுரசாலையை ஏற்படுத்தி வந்தார். இந்த வைபவத்திற்காக, தஞ்சை நகர மாந்தரும் அக்கம் பக்கத்துக் கிராமவாசிகளும் கணக்கற்றவர்கள் கூடியிருந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அலங்கார ஆடை ஆபரணங்கள் பூண்டு கோலாகலமாகத் திரண்டு வந்தார்கள். சோழ சக்கரவர்த்தியின் உடன் கூட்டத்து அமைச்சர்களும், பெருந்தர, சிறுதர அதிகாரிகளும், சிலாசாஸனம் பொறிக்கும் கல் தச்சர்களும், செப்புப் பட்டயம் எழுதும் விசுவகர்மர்களும் அரண்மனைப் பணியாளர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்தார்கள். தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்களை எட்டுத் திசையும் நடுங்கும்படி முழங்கிக்கொண்டு வேளக்காரப் படையினர் வந்தார்கள். தஞ்சைக் கோட்டையின் காவல் படை வீரர்கள் வாள்களையும், வேல்களையும் சுழற்றி 'டணார், டணார்' என்று சத்தப்படுத்திக் கொண்டு வந்தார்கள். பழுவேட்டரையர்கள் இருவரும் யானை மீதேறிக் கம்பீரமாக வந்தார்கள். இளவரசர் மதுராந்தகத் தேவர் வெள்ளைப் புரவியின் மேல் ஏறி உட்காரத் தெரியாமல் உட்கார்ந்து தவித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். இளவரசி குந்தவைப் பிராட்டியும் அவருடைய தோழிகளும் முதிய அரண்மனை மாதர் சிலரும் பல்லக்கில் ஏறிப் பவனி வந்தார்கள். இன்னொரு பக்கமிருந்து பழுவூர் இளையராணி நந்தினியின் பனை இலச்சினை கொண்ட தந்தப் பல்லக்கும் வந்தது.

அரண்மனை மாதர்களுக்கென்று ஏற்படுத்தியிருந்த நீலப்பட்டு விதானமிட்ட இடத்தில் குந்தவை தேவியும், பழுவூர் ராணியும், மற்ற மாதர்களும் வந்து அமர்ந்தார்கள். பிறகு, பெரிய பழுவேட்டரையர் சமிக்ஞை செய்ததின் பேரில் வைபவம் ஆரம்பமாயிற்று. முதலில் ஓதுவாமூர்த்திகள் இருவர் "மந்திரமாவது நீறு" என்ற தேவாரப் பதிகத்தைப் பாடினார்கள். யாழ், மத்தளம் முதலிய இசைக் கருவிகளின் ஒத்துழைப்புடன் மிக இனிமையாகப் பாடப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டு மக்கள் மெய்மறந்திருந்தார்கள். அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் அப்போது நிசப்தம் நிலவியது.

ஆனால் அரண்மனைப் பெண்டிர் அமர்ந்திருந்த இடத்தில் மட்டும் மெல்லிய குரலில் இருவர் பேசும் சத்தம் எழுந்தது. பழுவூர் இளையராணி நந்தினி குந்தவையை நெருங்கி உட்கார்ந்து "தேவி! முன்னொரு காலத்தில் சம்பந்தப் பெருமான் இந்தப் பாடலைப் பாடித் திருநீறு இட்டுப் பாண்டிய மன்னரின் நோயைத் தீர்த்தாரல்லவா? இப்போது ஏன் இந்தப் பாடலுக்கு அந்தச் சக்தி இல்லை? பாடலுக்குச் சக்தியில்லா விட்டாலும் திருநீற்றுக்கும் சக்தி இல்லாமற் போய்விட்டதே? மருந்து, மூலிகை, மருத்துவர், மருத்துவசாலை, இவ்வளவும் இல்லாமல் இக்காலத்தில் முடியவில்லையே?" என்று கேட்டாள்.

"ஆம் ராணி! அந்த நாளில் உலகில் தர்மம் மேலோங்கியிருந்தது. அதனால் மந்திரத் திருநீற்றுக்கு அவ்வளவு சக்தியிருந்தது. இப்போது உலகில் பாவம் மலிந்துவிட்டது. அரசருக்கு விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் முன்னே நாம் கேட்டதுண்டா? ஆகையால்தான் மந்திரத்தின் சக்தி குறைந்து மருந்து தேவையாகி விட்டது!" என்று இளைய பிராட்டி கூறிப் பழுவூர் இளைய ராணியின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

நந்தினியின் முகத்தில் எவ்வித மாறுதலையும் காணவில்லை. "அப்படியா? அரசருக்கு விரோதமாகச் சதிசெய்யும் துரோகிகள் இந்த நாளில் இருக்கிறார்களா? அவர்கள் யார்?" என்று சாவதானமாகக் கேட்டாள்.

"அதுதான் எனக்கும் தெரியவில்லை. சிலர் ஒருவரைச் சொல்கிறார்கள்; சிலர் இன்னொருவரைச் சொல்கிறார்கள். எது உண்மை என்று கண்டுபிடிப்பதற்காக இன்னும் சில நாள் இங்கேயே இருக்கலாமென்று பார்க்கிறேன். பழையாறையில் இருந்தால் உலக நடப்பு என்ன தெரிகிறது?" என்றாள் குந்தவை.

"நல்ல தீர்மானம் செய்தீர்கள். என்னைக் கேட்டால் இங்கேயே நீங்கள் தங்கிவிடுவது நல்லது. இல்லாவிட்டால் இராஜ்யம் குட்டிச்சுவராய்ப் போய்விடும். நானும் உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வேன். எங்கள் வீட்டில் விருந்தாளி வந்திருக்கிறான். அவனும் தங்களுக்கு உதவி செய்யக்கூடும்!" என்றாள்.

"அது யார் விருந்தாளி?" என்று குந்தவை கேட்டாள்.

"கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தன்மாறன். தாங்கள் அவனைப் பார்த்திருக்கிறீர்களா? தென்னைமர உயரமாய் வாட்டசாட்டமாய் இருக்கிறான். 'ஒற்றன்' என்றும், 'துரோகி' என்றும் ஓயாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். இராஜத் துரோகத்தைப் பற்றிச் சற்று முன் சொன்னீர்களே? இராஜத் துரோகத்தைக் காட்டிலும் பெரிய துரோகம் இன்னதென்று தங்களால் சொல்ல முடியுமா?"

"நன்றாய் சொல்ல முடியும். கைப்பிடித்த கணவனுக்குப் பெண்ணாய்ப் பிறந்த ஒருத்தி துரோகம் செய்தால் அது இராஜத் துரோகத்தைக் காட்டிலும் கொடியதுதான்!"

இப்படிச் சொல்லிவிட்டுக் குந்தவை தேவி நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மாறுதல் ஒன்றும் நிகழவில்லை. நந்தினியின் முகத்தில் முன்போலவே மோகனப் புன்னகை தவழ்ந்தது.

"தாங்கள் சொல்வது ரொம்ப சரி; ஆனால் கந்தன்மாறன் ஒப்புக் கொள்ளமாட்டான். 'எல்லாவற்றிலும் கொடிய துரோகம் சிநேகிதத் துரோகம்' என்று சொல்வான். அவனுடைய அருமை நண்பன் என்று கருதிய ஒருவன் ஒற்றனாக மாறிப் போனதுமல்லாமல் இவனுடைய முதுகில் குத்திப் போட்டு விட்டு ஓடிப்போய்விட்டானாம். அதுமுதல் கந்தன்மாறன் இவ்விதம் பிதற்றிக் கொண்டிருக்கிறான்!"

"யார் அவன்? அவ்வளவு நீசத்தனமாகக் காரியத்தைச் செய்தவன்?"

"யாரோ வந்தியத்தேவனாம்! தொண்டை நாட்டில் திருவல்லம் என்னும் ஊரில் முன்னம் அரசு புரிந்த வாணர் குலத்தைச் சேர்ந்தவனாம்! தாங்கள் கேள்விப்பட்டதுண்டோ?"

குந்தவை தன் முத்துப் போன்ற பற்களினால் பவழச் செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள்.

"எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது... பிற்பாடு என்ன நடந்தது?"

"பிற்பாடு என்ன? கந்தன்மாறனை முதுகில் குத்திப் போட்டு அவனுடைய சிநேகிதன் ஓடிவிட்டான். அந்த ஒற்றனைப் பிடித்து வருவதற்கு என் மைத்துனர் ஆள்கள் அனுப்பியிருப்பதாகக் கேள்வி!"

"அவன் ஒற்றன் என்பது எப்படி நிச்சயமாய்த் தெரியும்?"

"அவன் ஒற்றனோ இல்லையோ, எனக்கு என்ன தெரியும்? சம்புவரையர் மகன் சொல்லுவதைத்தான் சொல்கிறேன். தாங்கள் வேண்டுமானால் நேரில் அவனிடமே கேட்டு எல்லா விவரமும் தெரிந்து கொள்ளலாம்."

"ஆமாம்; சம்புவரையர் மகனை நானும் பார்க்க வேண்டியதுதான். அவன் பிழைத்ததே புனர்ஜன்மம் என்று கேள்விப்பட்டேன். அப்போது முதல் பழுவூர் அரண்மனையிலே தான் அவன் இருக்கிறானா?"

"ஆம்; காயம்பட்ட மறுநாள் காலையில் நம் அரண்மனையில் கொண்டு வந்து போட்டார்கள். காயத்துக்கு வைத்திய சிகிச்சை செய்ய வேண்டிய பொறுப்பும் என் தலையில் விழுந்தது. மெதுவாக உயிர் பிழைத்துக் கொண்டான்; காயம் இன்னும் முழுவதும் ஆறியபாடில்லை!"

"நீங்கள் பக்கத்திலிருந்து பராமரித்து இன்னும் முழுதும் குணமாகவில்லை என்பது ஆச்சரியமான விஷயந்தான். ஆகட்டும், ராணி! நான் அவசியம் வந்து அவனைப் பார்க்கிறேன். சம்புவரையர் குலம் நேற்று முந்தாநாள் ஏற்பட்டதா? பராந்தக் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து வீரப்புகழ் பெற்ற குலம் அல்லவா?..."

"அதனாலேயே நானும் சொன்னேன். கந்தன் மாறனைப் பார்க்கும் வியாஜத்திலாவது எங்கள் ஏழை அரண்மனைக்கு எழுந்தருளுவீர்கள் அல்லவா?" என்றாள் நந்தினி.

இதற்குள் தேவாரப் பாடல் முடிந்தது தானசாஸன வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருமுகம் படிக்கப்பட்டது. "நமது திருமகளார் குந்தவைப் பிராட்டிக்கு நாம் சர்வமானியமாகக் கொடுத்திருந்த நல்லூர் மங்கலம் கிராமத்தின் வருமானம் முழுவதையும் இளைய பிராட்டியார் தஞ்சை புறம்பாடி ஆதுரசாலைக்கு அளிக்க உவந்திருப்பதால், அந்த ஊர் நன்செய் நிலங்கள் யாவற்றையும் 'இறையிலி' நிலமாகச் செய்திருக்கிறோம்" என்று அந்த ஓலையில் சக்கரவர்த்தி தெரியப்படுத்தியிருந்தார். திருமந்திர ஓலை நாயகர் அதைப் படித்தபின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரிடம் கொடுக்க, பழுவேட்டரையர் அதை இருகரங்களாலும் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டு கணக்காயரிடம் கொடுத்துக் கணக்கில் பதிய வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.

பிறகு குந்தவைப் பிராட்டியின் தான சிலா சாஸனம் படிக்கப்பட்டது. மேற்கூறிய கிராமத்து சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக் கொண்டு தஞ்சாவூர் சுந்தர சோழ ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு ஒன்றுக்கு இருநூறு கலம் நெல்லும் ஆதுர சாலையில் சிகிச்சை பெறும் நோயாளிக்காகத் தினந்தோறும் ஐம்பது படி பசும்பாலும், ஐந்து படி ஆட்டுப்பாலும், நூறு இளநீரும் அனுப்பவேண்டியது என்று கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்ததுடன், எழுதியவன் பெயரும் எழுதியதை மேற்பார்வை செய்த அதிகாரிகளின் பெயர்களும் அதில் விவரமாகப் பொறிக்கப்பட்டிருந்தன.

அந்தச் சிலாசாஸனத்தைப் படித்தபிறகு, அங்கு இந்த வைபவத்துக்காக வந்திருந்த நல்லூர் மங்கல கிராமத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமத் தலைவர்கள் சாஸனக் கல்லைப் பயபக்தியுடன் வாங்கிக்கொண்டு அருகில் நின்ற யானை மீது ஏற்றினார்கள். அப்போது "மதுரைகொண்ட கோஇராஜகேசரி சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க வாழ்க!" என்று ஆயிரமாயிரம் குரல்களில் எழுந்த ஒலி எட்டுத் திசையும் பரவியது. அந்தக் குரல் ஒலியுடன் போட்டியிட்டுக் கொண்டு நூறு அறப்பறைகளின் முழக்கம் எழுந்து வானை அளாவியது. பின்னர் வரிசைக்கிரமமாக "இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க!" "வீரபாண்டியன் தலைகொண்ட வீராதி வீரர் ஆதித்த கரிகாலர் வாழ்க!" "ஈழங்கொண்ட இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!" "சிவஞான கண்டராதித்தரின் தவப் புதல்வர் மதுராந்தகத் தேவர் வாழ்க!" என்றெல்லாம் கோஷங்களும் பிரதி கோஷங்களும் எழுந்தன. கடைசியில், "தனாதிகாரி, தானிய பண்டாரத் தலைவர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் வாழ்க!" "தஞ்சைக் கோட்டைத் தலைவர் சின்னப் பழுவேட்டரையர் காலாந்தகண்டர் வாழ்க!" என்ற கோஷங்கள் எழுந்தபோது, ஒலியின் அளவு பெரிதும் குறைந்து விட்டது. பழுவூர் வீரர்கள் மட்டும் அக்கோஷங்களைச் செய்தார்களே தவிரக் கூடியிருந்த பொதுமக்கள் அதிகமாக அதில் சேர்ந்து கொள்ளவில்லை. அப்போது பழுவூர் இளையராணியின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று குந்தவைப் பிராட்டி முயற்சி செய்தும் பலிக்கவில்லை. முக்கியமாக ஆதித்த கரிகாலரைப் பற்றி வாழ்த்தொலி எழுந்த சமயத்தில் நந்தினியின் முகத்தைப் பார்த்திருந்தால், இரும்பு நெஞ்சு படைத்த இளைய பிராட்டி கூடப் பெரிதும் திகில் கொண்டிருப்பாள் என்பதில் ஐயம் இல்லை.







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. துரோகத்தில் எது கொடியது?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 59. சகுனத் தடை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 28. இராஜபாட்டை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 23. வானதி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: