BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. இலங்கைச் சிங்காதனம்  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. இலங்கைச் சிங்காதனம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. இலங்கைச் சிங்காதனம்  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. இலங்கைச் சிங்காதனம்    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. இலங்கைச் சிங்காதனம்  Icon_minitimeWed May 11, 2011 5:25 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

35. இலங்கைச் சிங்காதனம்



பிக்ஷு கையில் பிடித்த தீபத்தின் வெளிச்சத்தில் சுற்று முற்றும் பார்த்தார். இளவரசரும் அவருடைய தோழர்களும் நிற்பதைக் கண்டு கொண்டார் போலும். மறுகணம் விளக்கும் வெளிச்சமும் மறைந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் பிக்ஷு தடாகத்தின் படிக்கட்டுகளின் வழியாக நடந்து வருவது தெரிந்தது. இளவரசர் நிற்குமிடத்துக்கு வந்தார். நிலா வெளிச்சத்தில் அவருடைய திருமுகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

"தேவப்ரியா! வருக! வருக! தங்களை எதிர்நோக்கி வைதுல்ய பிக்ஷு சங்கம் காத்திருக்கிறது. மகா தேரோ குருவும் விஜயம் செய்திருக்கிறார். குறிப்பிட்ட நேரம் தவறாது தாங்கள் வந்து சேர்ந்தது பற்றி என் உள்ளம் உவகை கொண்டு நன்றி செலுத்துகிறது!" என்றார்.

"அடிகளே! இந்தச் சிறுவனிடம் பல குறைகள் குடிகொண்டிருப்பதை அறிந்துள்ளேன். எனினும், வாக்குத் தவறுவதில்லை என்ற ஒரு நல்விரதத்தை அனுசரித்து வருகிறேன். அந்த விரதத்தில் என்றும் தவறியதில்லை!" என்றார் பொன்னியின் செல்வர்.

"இன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரையில் தாங்கள் வந்து சேரவில்லை என்று அறிந்தேன். அதனால் சிறிது கவலை ஏற்பட்டது."

"முன்னதாக வந்திருந்தால், ஒருவேளை வாக்கை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கலாம். அதனாலேயே சமயத்திற்கு வந்து சேர்ந்தேன்."

"ஆம், ஆம்! வானில் ஜோதி மயமாக ஒளிரும் கதிரவனை மறைத்து விடுவதற்குப் பல மேகத்திரள்கள் சுற்றி வருகின்றன; நாங்களும் அறிந்துள்ளோம். ஆனால் அந்த மேகத்திரள்கள் எல்லாம் புத்த பகவானுடைய கருணையென்னும் பெருங்காற்றினால் சின்னா பின்னமாகிக் கலைந்துவிடும். போகட்டும்! இதோ நிற்பவர்கள் யார்? தாங்கள் நன்கு அறிந்தவர்கள்தானா? தங்களின் பூரண நம்பிக்கைக்கு உரியவர்களா? கொடுத்த வாக்கைத் தவறாது நிறைவேற்றக் கூடியவர்களா?" என்று பிக்ஷு கேட்டார்.

"அடிகளே! என்னுடைய கரங்கள் இரண்டையும் எப்படி நான் நம்புகிறேனோ, அப்படியே இந்த நண்பர்களையும் நம்புகிறேன். எனினும் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் இவர்களை இங்கேயே விட்டுவிட்டுத் தங்களுடன் தனித்து வரச் சித்தமாயிருக்கிறேன்!" என்றார் இளவரசர்.

"இல்லை, இல்லை! அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் சித்தமாயில்லை. தங்களை நான் அழைத்துப் போகும் இடம் மிகப் பத்திரமானதுதான். ஆயினும், நீண்ட வழியில் போக வேண்டும். எந்தத் தூணுக்குப் பின்னால் என்ன அபாயம் மறைந்திருக்கும் என்று யார் சொல்ல முடியும்? இவர்கள் இருவரும் அவசியம் வரட்டும்!" என்றார் பிக்ஷு.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவனுடைய உள்ளம் கொந்தளித்தது. முன்பின் அறியாத தன்னிடம் இளவரசர் இவ்வளவு பரிபூரண நம்பிக்கை காட்டி மிக அந்தரங்கமான காரியத்துக்கு அழைத்து வந்ததை நினைத்து பூரிப்பு உண்டாயிற்று.

'இன்றிரவு ஏதோ முக்கியமான நிகழ்ச்சி நடைபெறப்போகிறது, எது என்னவாயிருக்கும்?' என்ற நினைவு மிக்க பரபரப்பை அளித்தது.

பிக்ஷு முன்னால் சென்று வழிகாட்ட, மற்றவர்கள் பின் தொடர்ந்து சென்றார்கள். தடாகத்தின் படிக்கட்டுகளின் வழியாகச் சென்று பின்புறத்துக் கல் சுவரில் குடைந்து அமைந்திருந்த அறையில் புகுந்தார்கள். அதன் ஒரு பக்கம் சென்று இருட்டில் பிக்ஷு ஏதோ செய்தார். உடனே ஒரு வழி ஏற்பட்டது. உள்ளே வெளிச்சம் காணப்பட்டது. பிக்ஷு அங்கு வைத்திருந்த தீபத்தைக் கையில் ஏந்திக் கொண்டார். மற்ற மூவரும் உள்ளே வந்ததும் வழியும் அடைப்பட்டது. வெளியே தடாகத்தில் சிங்க முகத்திலிருந்து விழுந்த அருவியின் ஓசை மிக இலேசாகக் கேட்டது. இல்லாவிட்டால் ஒரு கணத்துக்கு முன்னால் அப்படித் தடாகக் கரையில் நின்று கொண்டிருந்தோம் என்பதையே அவர்களால் நம்பமுடியாமல் போயிருக்கும்.

குறுகலான சுரங்கப் பாதை வழியாக அவர்கள் சென்றார்கள். பாதை வளைந்து வளைந்து சென்றது. முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவர்கள் காலடிச் சத்தமும், அதன் எதிரொலியும் பயங்கரத்தை உண்டாக்கின. வந்தியத்தேவனுக்கு நடு நடுவே இளவரசர் ஏமாந்து போய் ஏதோ ஒரு சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டாரோ என்ற ஐயம் உண்டாயிற்று.

பாதை அகன்று அகன்று வந்து கடைசியில் ஒரு மண்டபம் தெரிந்தது. எப்பேர்ப்பட்ட மண்டபம்? பிக்ஷு கையில் பிடித்து வந்த தீபத்தில் சிறிய பகுதிதான் மங்கலாகக் கண்ணுக்குப் புலனாயிற்று. ஆயினும் அதன் தூண்கள் பளிங்குக் கல்லினால் ஆன தூண்கள் என்பது தெரிந்தது. நாற்புறமும் புத்தர் சிலைகள் தரிசனம் தந்தன. நிற்கும் புத்தர்கள் படுத்திருக்கும் புத்தர்கள், போத நிலையில் அமர்ந்திருக்கும் புத்தர்கள், ஆசீர்வதிக்கும் புத்தர்கள், பிரார்த்தனை செய்யும் புத்தர்கள் இப்படிப் பல புத்தர் சிலைகள் தோன்றின.

பளிங்கு மண்டபத்தை தாண்டி அப்பால் சென்றார்கள். மறுபடி ஒரு குறுகிய பாதை, பின்னர் இன்னொரு மண்டபம் இதன் தூண்கள் தாமிரத் தகடுகளினால் ஆனவை. இரத்தினச் சிவப்பு நிறம் பெற்றுத் திகழ்ந்தன. இந்த மண்டபத்தின் மேற்கூரையிலும் செப்புத் தகடுகள். அவற்றில் பலவகைச் சித்திர வேலைப்பாடுகள். நாலாபுறமும் வித விதமான புத்தர் சிலைகள். இம்மாதிரியே அபூர்வமான மஞ்சள் நிற மரத்தூண்களை உடைய மண்டபம். யானைத் தந்தங்களால் இழைத்த தூண்களைக் கொண்ட மண்டபம் - இவற்றையெல்லாம் கடந்து சென்றார்கள். அதிவேகமாக நடந்து சென்ற போதிலும் வந்தியத்தேவன் அங்கங்கே தூண்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே போனான். இளவரசர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாது முன்னோக்கிய பார்வையுடன் சென்றது அவனுக்கு அளவிலா வியப்பை அளித்தது.

உலோக மண்டபங்களையெல்லாம் தாண்டிக் கடைசியில் சாதாரண கருங்கல் மண்டபம் ஒன்றுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் விசாலமான அம்மண்டபத்தில் அபூர்வமான காட்சி தென்பட்டது. முந்தைய மண்டபங்களில் புத்தர் பெருமானின் சிலைகளைத் தவிர மனிதர் யாருமில்லை. இந்தக் கருங்கல் மண்டபத்தில் புத்த பிக்ஷுக்கள் பலர் கூடியிருந்தார்கள். அவர்களுடைய முக மண்டலங்கள் தேஜஸ் நிறைந்து திகழ்ந்தன. அவர்களுக்கு மத்தியில் மகா தேரோ குரு நடுநாயகமாக ஒரு பீடத்தில் வீற்றிருந்தார். அவருக்கு எதிரே நவரத்தின கசிதமான ஒரு தங்கச் சிங்காதனம் காணப்பட்டது. அதன் அருகில் ஒரு பீடத்தின் மேல் மணிமகுடம் ஒன்றும் உடைவாளும், செங்கோலும் இருந்தன. மண்டபத்தில் நாலாபுறமும் தீபங்கள் எரிந்தன. தீபச்சுடரின் ஒளியில் தங்கச் சிங்காதனமும், மணிமகுடமும், உடைவாளும் ஜொலித்துத் திகழ்ந்தன.

இளவரசர் முதலியோர் அந்த மண்டபத்துக்குள் நுழைந்ததும் பிக்ஷுக்கள் அனைவரும் எழுந்து நின்று "புத்தர் வாழ்க" "தர்மம் வாழ்க", "சங்கம் வாழ்க" என்று கோஷித்தார்கள்.

இளவரசர் மகா தேரோ குருவின் சமீபம் வந்து வணங்கி நின்றார்.

பிக்ஷுக்களின் அத்தியட்சகர் சிங்காதனத்துக்கு அருகில் கிடந்த ஒரு சாதாரண பீடத்தைச் சுட்டிக்காட்டி, அதில் அமரும்படி இளவரசரை வேண்டினார்.

"மகா குருவே! இச்சிறுவனுக்கு முன்னால் பிராயத்திலும், தர்மத்திலும் மூத்தவர்களாகிய தாங்கள் அமர வேண்டும்" என்று வேண்டினார் இளவரசர்.

அத்தியட்சக மகா குரு தமது பீடத்தில் அமர்ந்ததும் இளவரசரும் தமக்கென்று குறிப்பிட்ட ஆசனத்தில் பணிவுடன் உட்கார்ந்தார்.

"தேவர்களின் அன்புக்குரிய இளவரசரே! தங்கள் வருகையினால் இந்த மகாபோதி சங்கம் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கின்றது. நாங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளையெல்லாம் ஒப்புக்கொண்டு பல சிரமங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறீர்கள். புத்த பகவானுடைய கருணை தங்களிடம் பூரணமாக இருப்பதற்கு வேறு அத்தாட்சி தேவையில்லை!" இவ்விதம் பாலி பாஷையில் பெரிய குரு கூற, இளவரசரை அழைத்து வந்த பிக்ஷு தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார். மற்ற பிக்ஷுக்கள், "சாது! சாது!" என்று கோஷித்துத் தங்கள் சந்தோஷத்தை வெளியிட்டார்கள்.

மகா தேரோ மேலும் கூறலுற்றார்!-" இலங்கைத் தீவுக்குப் புத்த தர்மத்தை அனுப்பிய பாரத வர்ஷத்துக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆதி நாளிலிருந்து உங்கள் நாட்டிலிருந்து படையெடுத்து வந்த சோழர்கள், பாண்டியர்கள், மலையாளத்தார், கலிங்கத்தார் எல்லாரும் இங்கே பல அட்டூழியங்களைச் செய்ததுண்டு. புத்தவிஹாரங்களையும் பிக்ஷுக்களின் மடாலயங்களையும், குருகுலங்களையும் அவர்கள் இடித்துத் தள்ளித் தேவர்களின் சாபத்துக்கு ஆளானார்கள். உங்கள் நாட்டவரைச் சொல்வானேன்? இந்த நாட்டின் மன்னர்களே அத்தகைய கோர கிருத்யங்களைச் செய்திருக்கிறார்கள். புத்த சங்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். தங்களுடைய தீய செயல்களை எதிர்த்த பிக்ஷுக்களின் விஹாரங்களை இடித்தார்கள்; அக்கினிக்கு இரையாக்கினார்கள். இரண்டு காத நீளமும் ஒரு காதம் அகலமும் உள்ள இந்த விசாலமான புண்ணிய நகரத்தில் ஒரு சமயம் பாதி விஸ்தீரணத்தில் புத்த விஹாரங்கள் இருந்தன. அவற்றில் பெரும் பகுதி இன்று இடிந்து பாழாய்க் கிடக்கின்றது. இடிந்த விஹாரங்களைப் பழுது பார்த்துச் செப்பனிட்டுக் கொடுக்க வேண்டும் என்று இதுவரை எந்த அரச குலத்தினரும் கட்டளையிட்டதில்லை. அத்தகைய ஆக்ஞை பிறப்பிக்கும் பாக்கியம் இளவரசர் அருள்மொழிவர்மருக்கே கிடைத்தது. தேவர்களுக்கு உகந்தவரே! தங்களுடைய இந்தச் செய்கையைப் புத்த மகா சங்கம் பெரிதும் பாராட்டுகிறது..."

இளவரசர் தலை வணங்கி மகா தேரோவின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டார். "இன்னும் இந்தப் புராதன புண்ணிய நகரத்தில் வெகுகாலமாகப் பெரஹரா உற்சவம் நடைபெறாமல் தடைப்பட்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர்கள் ஒரு சமயம் இந்த மாநகரத்தைப் பிடித்தார்கள். அப்போது இலங்கை அரச குலத்தார் புலஸ்திய நகரம் சென்றார்கள். அதுமுதல் இங்கே பெரஹாரத் திருவிழா நடைபெற்றதில்லை. இந்தப் புண்ணிய வருஷத்தில் தாங்கள் அவ்வுற்சவம் மீண்டும் நடைபெறலாம் என்று கட்டளையிட்டீர்கள். அதற்கு வேண்டிய வசதியும் அளித்தீர்கள். இது பற்றியும் புத்த சங்கத்தார் சந்தோஷமடைந்திருக்கிறார்கள்..."

இளவரசர் மீண்டும் சிரம் வணங்கி, "மகாகுருவே! அடியேன் புத்த சங்கத்தாருக்கு இன்னும் ஏதேனும் சேவை செய்யக்கூடியதாக இருந்தால் கருணைகூர்ந்து பணித்தருள்க!" என்றார்.

அத்தியட்சகர் புன்னகை புரிந்து, "ஆம், இளவரசே! புத்த சங்கம் மேலும் தங்களுடைய சேவையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. அதற்கு முன்னதாக இன்னும் சில வார்த்தைகள் கூறவேண்டும். புத்த பகவான் கடைசித் திரு அவதாரத்துக்கு முன்னால் வேறு பல அவதாரங்களில் தோன்றியதாக அறிந்திருப்பீர்கள். ஒரு சமயம் சிபிச் சக்கரவர்த்தியாக அவதரித்துக் கொடுமை நிறைந்த இந்த உலகத்தில் ஜீவகாருண்யத்தின் பெருமையை உணர்த்தினார். ஒரு சிறிய புறாவின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுத் தமது திருமேனியில் சதையைத் துண்டு துண்டாக அவர் அரிந்து துலாக்கோலில் இட்டார். அந்தச் சிபிச் சக்கரவர்த்தியின் வம்சத்திலே வந்தவர்கள் என்று சோழ குலத்தவராகிய நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். சிபியின் வம்சத்திலே வந்த காரணம் பற்றிச் 'செம்பியன்' என்ற பட்டப்பெயரும் சூடிக் கொள்கிறீர்கள். ஆனால் இதுவரையில் புத்த சங்கத்தார் அதை நம்பவில்லை. சோழ குலத்துப் புரோகிதர்கள் கட்டிய கதை என்று தான் எண்ணியிருந்தார்கள். இன்று - தங்களுடைய அரும் பெரும் செயல்களைப் பார்த்த பிறகு, - சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டி வருகிறது. புத்த பகவானுடைய பெருங் கருணையை மாயை காரணமாக இதுகாறும் சோழ குலம் மறந்திருந்தது. அந்தக் கருணை இன்றைய தினம் தங்கள் மீது ஆவிர்ப்பவித்திருக்கிறது. அதற்கான தேவ சூசகமும் கிடைத்திருக்கிறது. இதோ!..." என்று கூறி அத்தியட்சக தேரோ பின்னால் திரும்பிப்பார்த்ததும், பிக்ஷுக்கள் சிலர் பீடம் ஒன்றில் சாய்ந்து படுத்திருந்த மற்றொரு பிக்ஷுவைப் பீடத்துடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பிக்ஷுவின் உடம்பெல்லாம் இடைவிடாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. கைகள் வெடவெடவென்று நடுங்கின; கால்கள் நடுங்கின; உடம்பு நடுங்கிற்று; தலை ஆடிற்று; பற்கள் கிட்டின; உதடுகள் துடித்தன; சிவந்த கண்களுக்கு மேலே புருவங்களும் அசைத்தன.

"இந்தப் பிக்ஷுவின் பேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆவிர்ப்பவித்திருக்கிறார்கள். தேவர்கள் கருணை கூர்ந்து சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள்!" என்றார் மகாதேரோ.

ஆவேசங் கொண்டிருந்த புத்த பிக்ஷுவின் வாயிலிருந்து நடு நடுங்கிக் குளறிய குரலில் ஏதேதோ மொழிகள் அதிவிரைவில் வந்தன. அவர் பேசி நிறுத்தியதும் அத்தியட்சக குரு கூறினார். "முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்களை ஆசீர்வதிக்கிறார்கள். முற்காலத்தில் தேவானாம்பிரிய அசோகவர்த்தனர் பாரத பூமியை ஒரு குடையில் ஆண்டு, புத்த தர்மத்தை உலகமெல்லாம் பரப்பினார். அத்தகைய மகா சாம்ராஜ்யத்துக்குத் தாங்கள் அதிபதியாவீர்கள் என்று தேவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள். அசோகரைப் போல் தாங்களும் புத்த தர்மத்தை உலகில் பரப்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். அசோகர் பாடலிபுத்திரச் சிம்மாசனத்தில் வீற்றிருந்து செய்த தர்மப் பெரும் பணிகளைத் தாங்கள் இந்தத் தொன்மை மிக்க அநுராதபுரத்தில் ஆரம்பித்து நடத்த வேண்டுமென்று கட்டளையிடுகிறார்கள். இளவரசே! தேவர்களுடைய கட்டளைக்குத் தங்கள் மறுமொழி என்ன?"

இதைக் கேட்டதும் இளவரசர், "மகா குரு! தேவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் சித்தபடி நடத்திக் கொள்ளுவார்கள். ஆனால் அடியேனுக்கு இப்போது அவர்கள் இடும்பணி யாது என்று விளங்கவில்லையே?" என்றார்.

"அதை நானே தெரிவிக்கிறேன்" என்று அத்தியட்சக தேரோ கூறிச் சமிக்ஞை செய்ததும், ஆவேசம் வந்திருந்த பிக்ஷுவை அப்பால் எடுத்துச் சென்றார்கள். பின்னர் பிக்ஷுத்தலைவர் கூறினார்:- "இளவரசே, இதோ உங்கள் முன்னால் உள்ள சிங்காதனத்தைப் பாருங்கள், மணி மகுடத்தைப் பாருங்கள், செங்கோலையும் பாருங்கள். இலங்கை இராஜ வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் சிங்கானத்தில் அமர்ந்து, இந்த மணி மகுடத்தை அணிந்து, இந்தச் செங்கோலைக் கையில் தரித்த பிறகே, புத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களானார்கள். துஷ்டகமனு சக்கரவர்த்தியும், தேவானாம்பிய திஸ்ஸரும், மகாசேனரும் அமர்ந்து முடிசூடிய சிங்காதனம் இது! அவர்கள் சிரசில் தரித்த கிரீடம் இது. அவர்கள் கரத்தில் ஏந்திய செங்கோல் இது. இப்படிப்பட்ட புராதன சிங்காதனம் - ஆயிரம் ஆண்டுகளாக அரசர்களைச் சிருஷ்டித்த சிங்காதனம் - இதோ தங்களுக்காகக் காத்திருக்கிறது. இதில் அமரவும், இந்த மணி மகுடம் செங்கோலும் தரிக்கவும் தங்களுக்குச் சம்மதமா?"

இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவன் மிக்க பரபரப்பை அடைந்தான். இளவரசரைத் தூக்கி அந்தக் கணமே உட்கார வைத்து விட்டால் என்ன என்று எண்ணினான். ஆனால் இளவரசருடைய முக பாவத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை.

முன்போலவே அமைதியான குரலில், "அத்தியட்சகா! அது எப்படிச் சாத்தியம்? இந்தச் சிங்காதனத்தில் ஏறி முடிசூடிய மகிந்த மன்னர் இன்றும் ஜீவிய வந்தவராக இருக்கிறாரே? அவர் இருக்குமிடம் தெரியாவிட்டாலும்..." என்று கூறி நிறுத்தினார்.

"இளவரசே! இலங்கை இராஜ வம்சம் மாறவேண்டும் என்பது தேவர்களின் கட்டளை; அது நடந்தே தீரும். கங்கை பாயும் வங்க நாட்டிலிருந்து வந்த விஜயராஜன் ஸ்தாபித்த இந்த வம்சத்தில் எத்தனையோ மகா ராஜர்கள் தோன்றினார்கள்; தர்மத்தையும் பரிபாலித்தார்கள். ஆனால் பிற்காலத்தில் இந்த வம்சம் பல கொடிய கிருத்யங்களைச் செய்து தேவ சாபத்துக்கு ஆளாகி விட்டது. இந்த வம்சத்தில் பிறந்தவர்களிலே தகப்பன் மகனைக் கொன்றான்; மகனைத் தகப்பன் கொன்றான்; அண்ணனைத் தம்பி கொன்றான்; தம்பியை அண்ணன் கொன்றான்; தாய் மகளைக் கொன்றாள்; மருமகள் மாமியாரைக் கொன்றாள். இத்தகைய மகா பாதகங்களைச் செய்த வம்சத்தவர்கள் புத்த தர்மத்தைப் பரிபாலிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல என்று தேவர்கள் கட்டளையிடுகிறார்கள். கடைசியாக முடிசூடிய மகிந்தன் இலங்கைச் சிம்மாசனத்துக்கு உரிமையை இழந்து விட்டான். அப்படி இராஜ வம்சம் மாறும்போது புதிய வம்சத்தின் முதல்வனைத் தெரிந்தெடுக்கும் உரிமை இந்தச் சங்கத்துக்கு உண்டு. இந்தச் சங்கத்தாரும் தங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். தாங்கள் சம்மதம் கொடுத்தால் இன்று இரவே முடிசூட்டு விழா நடத்திவிடலாம்..."

அந்த மண்டபத்தில் சிறிது நேரம் பூகர்ப்பத்திலும், கடலின் ஆழத்திலும் குடிகொண்டிருப்பது போன்ற நிசப்தம் குடிகொண்டிருந்தது. வந்தியத்தேவனுடைய பரபரப்பு உச்சநிலையை அடைந்துவிட்டது. அச்சமயத்தில் பொன்னியின் செல்வர் தமது பீடத்திலிருந்து எழுந்து புத்த பிக்ஷுக்களின் சங்கத்துக்கு வணக்கம் செலுத்தினார். வந்தியத்தேவன் குதூகலத்தின் எல்லையை அடைந்தான். இளவரசர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் மணி மகுடத்தை எடுத்துத் தானே சூட்டி விடலாம் என்று ஆத்திரப்பட்டான்.

இளவரசர் கூறினார்:- "மகான்களே! உங்களை நமஸ்கரிக்கிறேன். இந்தச் சிறுவனிடம் எல்லையில்லா அன்பும், நம்பிக்கையும் வைத்து இந்தப் புராதன சிங்காதனத்தை அளிக்க முன்வந்த உங்கள் பெருந்தன்மையைப் போற்றி வணங்குகிறேன். ஆனால் தாங்கள் இப்போது இடும் பணி என் சக்திக்கு அப்பாற்பட்டது. நான் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவன். அந்த நாட்டு நிலங்கள் தந்த உணவு, நதிகள் அளித்த நீரும் இந்த உடலை ஆக்கின. என தந்தை சுந்தரசோழ சக்கரவர்த்தியின் கட்டளைக்கு உட்பட்டு இங்கே வந்தேன். அவருடைய விருப்பத்தை அறியாமல் எதுவும் என்னால் செய்ய இயலாது..."

பிக்ஷு குறுக்கிட்டுக் கூறினார்:- "இளவரசே! தங்கள் தந்தை சுந்தர சோழர் இன்று சுதந்திரமின்றிச் சிறையில் இருப்பதுபோல் இருப்பதை நீ அறியீரா?"

"ஆம்; என் தந்தை நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்கிறார். கால்களின் சுவாதீனத்தை இழந்திருக்கிறார். ஆயினும் அவருடைய பெயரால், - அவரிடம் அதிகாரம் பெற்று, - சோழ நாட்டை ஆளுவோரின் கட்டளைக்கு நான் உட்பட்டவன். அவர்களுடைய கட்டளையின்றி நான் இந்தச் சிங்காதனத்தை ஏற்றுக்கொண்டால் தேசத்துரோகியும், ராஜத்துரோகியும் ஆவேன்..."

"அவ்வாறு தாங்கள் கருதுவதாயிருந்தால் தஞ்சாவூருக்குத் தூது கோஷ்டி ஒன்று அனுப்பச் சித்தமாயிருக்கிறோம். தங்கள் தந்தையார் புத்த தர்மத்தில் மிகப் பற்றுக்கொண்டவர். எங்கள் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டார்."

"இந்த நாட்டின் பிரஜைகள் - இருக்கிறார்கள். அவர்களுடைய சம்மதமின்றி இராஜ்யத்தை விநியோகிக்க யாருக்கு உரிமை உண்டு?"

"தங்களை அரசராகப் பெறுவதைப் பெறற்கரிய பேறாக இந்நாட்டுப் பிரஜைகள் கருதுவார்கள்..."

"எல்லாரும் சம்மதிக்கலாம்; மகிழ்ச்சியும் அடையலாம். இந்த உலகில் வேறு யாருடைய விருப்பத்தையும் காட்டிலும் நான் அதிகமாக மதிப்பது என் தமக்கையாரின் விருப்பத்தையே. என் அன்னை என்னைப் பெற்றாள்; பொன்னி நதி என் உயிரைக் காப்பாற்றி அளித்தாள். ஆனால் என் தமக்கை என் அறிவை வளர்த்து, அகக் கண்களைத் திறந்தார். அப்படிப்பட்டவருடைய விருப்பதைக் காட்டிலும் என் உள்ளத்திலே உள்ள ஒரு குரலின் கட்டளையே எனக்கு மேலானது. மகா புருஷர்களே! தாங்கள் இச்சிறுவனுக்கு மனமுவந்து அளிக்கும் மகா பாக்கியத்தை ஏற்றுக் கொள்ளும்படி என் உள்ளக் குரல் எனக்குச் சொல்லவில்லை! தயவு செய்து இச்சிறுவனை மன்னித்து அருளுங்கள்!..." மறுபடியும் அந்த மகாசபையில் சிறிது நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது. வந்தியத்தேவனுடைய நாடி நரம்புகள் படபடவென்று துடித்த சத்தம் அவன் காதில் மட்டும் விழுந்தது.

சற்றுப்பொறுத்து, பிக்ஷு சங்கத்தின் அத்தியட்சகர் கூறினார்: "இளவரசே! தாங்கள் கூறிய மறுமொழி எனக்கு அதிக வியப்பை அளிக்கவில்லை ஒருவாறு எதிர்பார்த்தேன். இதனாலேயே இந்த இலங்கைச் சிங்காதனத்தில் ஏற எவரிலும் அதிகத் தகுதிவாய்த்தவர் தாங்கள் என்று ஏற்படுகின்றது. தர்ம சூக்ஷுமத்தை உணர்ந்த எங்களுக்கு இதைப் பற்றிச் சிறிதும் சந்தேகம் கிடையாது. ஆனால் தங்களை வற்புறுத்தவும் விரும்பவில்லை. யோசிப்பதற்கு அவகாசம் கொடுக்கிறோம். ஓராண்டுக்குப் பிறகு இதேமாதிரி ஒரு நாள் தங்களுக்குச் சொல்லி அனுப்புகிறோம். அப்போது வந்து தங்கள் முடிவான கருத்தைத் தெரிவிப்பீராக!... ஒரு விஷயம் மட்டும் நினைவிருக்கட்டும். இந்தப் புராதன அநுராதபுரத்தில் பல புத்த விஹாரங்கள் மூர்க்கமான யுத்தக் கொடுமையினால் பாழாய்ப் போயிருக்கின்றன. ஆனால் இந்த மகா போதி விஹாரத்துக்கு மட்டும் எவ்விதச் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ஏனெனில் இது பூமிக்குக் கீழே குடைந்து அமைத்த விஹாரம். இங்கே வரும் வழி இவ்விடத்தில் தற்சமயம் கூடியிருக்கும் புத்த சங்கத் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும். எங்களில் ஒருவர் வழி காட்டாமல் இங்கே யாரும் வரமுடியாது. இலங்கை மன்னர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவை, புத்த சங்கத்தாரால் முடிசூடிக் கொள்வதற்கு மட்டுமே, இங்கு அழைக்கப்படுவார்கள். அத்தகைய புனிதமான இரகசியப் பாதையுள்ள விஹாரம் இது. இங்கே தாங்கள் வந்தது, போனது, இங்கே நடந்தது எதையும் பற்றி வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது. தங்களுடைய நண்பர்களும் சொல்லக்கூடாது. சொன்னால் மிகக் கடுமையான தேவ சாபத்துக்கு உள்ளாகும்படி நேரிடும்!"

"அத்தியட்சக! சாபத்துக்குத் தேவையில்லை; வெளியில் யாருக்கும் சொல்வதில்லையென்று வாக்குக் கொடுத்து விட்டுத்தான் இங்கே என் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வந்தேன். கொடுத்த வாக்கை ஒரு நாளும் மீறமாட்டேன்." என்றார் பொன்னியின் செல்வர்.

அரைநாழிகை நேரத்துக்குப் பிறகு இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அநுராதபுரத்தின் வீதியில் நிலா வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். விஹாரத்துக்குள் இருந்தவரையில் வாயைக் கெட்டியாக மூடி வைத்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது அடக்கி வைத்திருந்த எண்ணங்களையெல்லாம் அவிழ்த்து விட்டான்.

"சோழ நாடு! நீர்வளம் நிலவளம் பொருந்தியதுதான். ஆனால் இந்த இலங்கைக்கு இணையாகாது. இப்படிப்பட்ட இரகசியத் தீவின் சிம்மாசனம் வலிய வந்ததை உதைத்துத் தள்ளிவிட்டீர்களே! இது என்ன பேதைமை? தங்களை அழைத்து மணிமகுடத்தை வழங்க வந்த பிக்ஷுக்களின் மதியை என்னவென்று சொல்ல? அடுத்தாற்போல், நானும் தூணோடு தூணாக நின்றுகொண்டிருந்தேனே? எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று இப்படியெல்லாம் பொருமிக் கொட்டிக் கொண்டிருந்தான்.

இளவரசர் அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். "துஷ்டகமனுவின் மகன் ஸாலி அசோகமாலா என்னும் பெண்ணின் காதலுக்காக இந்த இலங்கை ராஜ்யத்தைத் துறந்தானென்று சொன்னேனே? அது உமது காதில் ஏறவில்லையா?" என்றார்.

"எல்லாம் ஏறிற்று. அப்படித் தாங்கள் எந்தப் பெண்ணைக் காதலிக்கிறீர்கள்? அவ்விதம் தாங்கள் சிம்மாசனம் ஏறுவதற்குக் குறுக்கே நிற்கும் பெண் யார்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"ஒரு பெண் அல்ல; இரண்டு பெண்கள். சத்தியம், தர்மம் என்னும் இரு பெண்களை நான் காதலிக்கிறேன். அவர்களுக்காகவே இலங்கை மணி மகுடத்தை வேண்டாம் என்றேன்."

"இளவரசே; தங்களைப் பார்த்தால் இளம் பிராயத்தினராக காணப்படுகிறது. பேச்சோ, வயதான கிழவரைப் போல் பேசுகிறீர்கள்."

"நம்மில் யார் வயதானவர், யாருடைய பிராயம் முடியப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?"

இப்படி அவர்கள் பேசியபோது வீதியின் ஓரமாக ஒரு பழைய மாளிகையின் சமீபம் போய்க் கொண்டிருந்தார்கள்.

வீதிக்கு எதிர்ப் புறத்தில் யாரோ கையைத் தட்டும் சப்தம் கேட்டது. சப்தம் கேட்ட இடத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது.

"இப்படி வாருங்கள்!" என்று கூறி, இளவரசர் அந்த உருவத்தை நோக்கி வீதியைக் கடந்து போனார்.

மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள். அவர்கள் பாதி வீதியைக் கடந்து கொண்டிருந்தபோது பின்னால் பெரிய தடபுடல் சத்தம் கேட்டது; திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் எந்த வீட்டின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார்களோ அதன் மேல் மாடத்தின் முகப்பு இடிந்து விழுந்து கொண்டிருந்தது!

அவர்கள் அங்கே வீதியைக் கடக்கத் திரும்பியிராவிட்டால் அவர்கள் தலைமேலே விழுந்து கொன்றிருக்கும்!

ஒரு கண நேர வித்தியாசத்தில் மூன்று உயிர்கள் பிழைத்தன. அதுவும் எப்பேர்ப்பட்ட உயிர்கள்!

'நம்மில் யாருக்குப் பிராயம் முடியப் போகிறது என்று யாருக்குத் தெரியும்?' என்று பொன்னியின் செல்வர் கூறியது எவ்வளவு உண்மையான வார்த்தை?' இப்படி எண்ணி வந்தியத்தேவன் நடு வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்க, இருவரும் அப்பால் சென்றார்கள்.

வந்தியத்தேவன் அவர்களை மறுபடி அணுகியபோது அங்கே நின்ற உருவம் நிலா வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. கண் முன்னே காண்பதை நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் அச்சமயம் அவனுக்கு உண்டாயிற்று.

'இது என்ன பைத்தியக்காரத்தனம்? இது எப்படிச் சாத்தியமாகும்?'

'தஞ்சையில் பழுவேட்டரையர் அரண்மனையில் பார்த்த நந்தினி இங்கே இந்த அநுராதபுரத்து வீதிக்கு எப்படி வந்திருக்க முடியும்? நள்ளிரவில் இங்கே வந்து எதற்காக நிற்கவேண்டும்!' மறுகணம் அந்த உருவம் மாயமாய் மறைந்தது. மற்ற இருவர் மட்டும் நின்றார்கள்.






Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. இலங்கைச் சிங்காதனம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 43. பழையாறை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. குற்றச்சாட்டு
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. திடும்பிரவேசம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: