BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. சித்திரங்கள் பேசின! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. சித்திரங்கள் பேசின!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. சித்திரங்கள் பேசின! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. சித்திரங்கள் பேசின!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. சித்திரங்கள் பேசின! Icon_minitimeWed May 11, 2011 5:35 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

38. சித்திரங்கள் பேசின!



இளவரசர் சட்டென்று கதையை நிறுத்திவிட்டு, "உங்களுக்கு ஏதாவது காலடிச் சப்தம் காதில் விழுந்ததா?" என்று கேட்டார்.

கதையில் முழுக் கவனம் செலுத்தியிருந்த தோழர்கள் இருவரும் தங்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்றார்கள்.

ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு "நாம் உட்கார்ந்திருக்குமிடம் முன்னைவிட இப்போது உஷ்ணமாயிருக்கிறதே!" என்றான்.

"ஏதோ புகை நாற்றங்கூட வருகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

"ஐயா! இந்த இடத்தில் அபாயம் ஒன்றுமில்லையே?" என்று ஆழ்வார்க்கடியான் கவலையுடன் கேட்டான்.

"அபாயம் ஏதாவது இருந்தால் காவேரியம்மன் கட்டாயம் வந்து எச்சரிப்பாள். கவலை வேண்டாம்!" என்று இளவரசர் கூறி மேலும் தொடர்ந்து சொன்னார்.

"அந்த இடத்தைவிட்டு உடனே தாவடியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டோ ம். அப்படியும் நமது வீரர்களில் பத்துப் பேருக்குக் குளிர் காய்ச்சல் வந்துவிட்டது. அம்மம்மா! அந்தக் காய்ச்சல் மிகப் பொல்லாதது. எப்பேர்ப்பட்ட வீரனையும் கோழையாக்கிவிடும். உடம்பெல்லாம் போரில் காயம் பட்டும் கலங்காதவர்கள் மூன்று நாள் காய்ச்சலில் மனம் தளர்ந்து 'ஊருக்குப் போக வேண்டும்' என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். சோழர்களின் குலதெய்வமான துர்க்கா பரமேஸ்வரிதான் அந்த ஊமை ஸ்திரீயின் உருவத்தில் வந்து எங்களை அங்கிருந்து புறப்படச் செய்தாள் என்று கருதினேன். அதற்குப் பிறகும் தேவி என்னைக் கைவிட்டு விடவில்லை. நான் போகுமிடங்களுக்கெல்லாம் அவளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். வன விலங்குகள், மலைப் பாம்புகள், மறைந்திருந்த எதிரிகள் - இத்தகைய பல ஆபத்துக்களிலிருந்து என்னைக் காப்பாற்றினாள். திடீரென்று எப்படித் தோன்றுவாளோ, அப்படியே மறைந்து விடுவாள். சில நாளைக்குள் அந்தத் தேவியுடன் முகபாவத்தினாலும் சைகைகளினாலும் பேசும் சக்தியை நான் பெற்றுவிட்டேன். பெரும்பாலும் அவள் உள்ளத்தில் நினைப்பதெல்லாம் என் நெஞ்சம் தெரிந்து கொண்டு விடும். அது மட்டுமல்ல; அம்மாதரசியைக் கண்ணால் பார்க்காமலேயே அவள் பக்கத்தில் எங்கேயோ இருக்கிறாள் என்பதை நான் அறிந்து கொள்வேன். இப்போது கூட... நல்லது; நீங்கள் உடனே சென்று உங்கள் படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். தூக்கம் வாராவிட்டாலும் தூங்குவதுபோல் இருங்கள்! சீக்கிரம்!" என்றார் இளவரசர்.

அவ்விதமே இருவரும் சென்று படுத்துக் கொண்டார்கள். கண்களை மூடிக்கொள்ளவும் முயன்றார்கள். ஆனால் அவர்களை மீறிய ஆவலினால் கண்ணிமைகள் முடிக்கொள்ள மறுத்தன.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே நிலா வெளிச்சம் வந்த பலகணியின் அருகில் ஓர் உருவம் வந்து நின்றது. வீதியில் இடிந்து விழுந்த மாளிகைக்கு எதிரில் பார்த்த அதே ஸ்திரீயின் உருவந்தான். மிக மெல்லிய 'உஸ்' என்ற சத்தம் அங்கிருந்து வந்தது. அருள்மொழிவர்மர் எழுந்து பலகணி ஓரமாகச் சென்றார். வெளியில் நின்ற உருவம் ஏதோ சமிக்ஞை செய்தது.

இளவரசர் அந்த அறையில் படுத்திருந்த தன் தோழர்களைச் சுட்டிக் காட்டினார். சமிக்ஞை பாஷையில் அதற்கும் ஏதோ மறுமொழி கிடைத்தது.

உடனே அருள்மொழிவர்மர் தோழர்கள் இருவரையும் தன்னை தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அம்மாளிகையிலிருந்து வெளியேறினார். அந்த மூதாட்டி சென்ற வழியில் மூவரும் மௌனமாக நடந்தார்கள். இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருள் சூழ்ந்திருந்த பாதையில் அவர்கள் வெகுதூரம் சென்ற பிறகு திடீரென்று நிலா வெளிச்சத்தில் ஒரு அதிசயமான காட்சியைக் கண்டார்கள். கரிய பெரிய யானைகள் பலவரிசையாக நின்று, பிரமாண்டமான ஸ்தூபம் ஒன்றைக் காவல் புரிந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் வந்தியத்தேவனுடைய மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. அந்த மூதாட்டியோ சிறிது தயங்காமல் யானைக் கூட்டத்தை நோக்கி நடந்தாள். ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் காதோடு, "அந்த யானைச் சிலைகள் எவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன பார்த்தாயா?" என்று சொன்ன பிறகுதான், வந்தியத்தேவனுடைய திகைப்பு நீங்கியது. ஆயினும் அவனுடைய வியப்பு நீங்கியபாடில்லை.

ஒன்றோடொன்று நெருக்கி இடித்துக்கொண்டு நின்று, அந்த மலை போன்ற ஸ்தூபத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போல் அமைக்கப்பட்டிருந்த யானைச் சிலை ஒவ்வொன்றுக்கும் இரண்டு நீண்ட தந்தங்கள் இருந்தன. அவ்விதம் வரிசையாக நின்ற நூற்றுக்கணக்கான யானைகளில் ஒன்றேயொன்றுக்கு மட்டும் ஒரு தந்தம் ஓடிந்து போயிருந்தது. அந்த யானை அருகில் அவள் சென்றாள். அதன் காலடியில் கிடந்த பெரிய கருங்கல்லை அகற்றினாள். அகற்றிய இடத்தில் ஒரு படிக்கட்டு காணப்பட்டது. அதன் வழியாக அவள் இறங்கிச் செல்ல, மற்றவர்களும் பின் தொடர்ந்தார்கள். படிக்கட்டில் இறங்கிச் சிறிது தூரம் குறுகலான வழியில் சென்றதும் ஒரு மண்டபம் காணப்பட்டது. அதில் இரண்டு பெரிய அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

விளக்குகளில் ஒன்றைத் தூண்டிவிட்டு அந்த மூதாட்டி கையில் எடுத்துக் கொண்டாள். இளவரசரை மட்டும் தன்னுடன் வரும்படி சமிக்ஞையினால் தெரிவித்தாள். மற்ற இருவரும் இதைப்பற்றி முதலில் சிறிது கவலை கொண்டார்கள். ஆனால் அந்த மூதாட்டி விளக்கைத் தூக்கிப் பிடித்து அந்த மண்டபச் சுவர்களில் உள்ள சித்திரங்களைத்தான் இளவரசருக்குக் காட்டுகிறாள் என்று தெரிந்ததும் அவர்களுடைய கவலை ஓரளவு நீங்கியது.

இளவரசர் அம்மண்டபச் சுவரில் பார்த்த சித்திரங்கள் ஏதோ ஒரு கதையில் நிகழ்ந்த சம்பவங்களை வரிசைக் கிரமமாகக் கூறும் தொடர் சித்திரங்களாகத் தோன்றின. புத்த பகவானின் பூர்வ அவதாரக் கதைகளைப் புத்த விஹாரங்களில் சித்திரித்திருக்கும் முறைப்படி இச்சித்திரங்களும் அமைந்திருந்தன. ஆனால் இவை புத்தரின் அவதார நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. ஒரு மானிடப் பெண்ணின் கதையையே சித்திரித்திருந்தது அந்தச் சித்திரப் பெண்ணின் முகத்தோற்றம் ஏறக்குறைய இப்போது விளக்குப் பிடித்துக் காட்டிய மூதாட்டியின் முகத்தை ஒத்திருந்தது. ஆகவே இந்த ஊமை ஸ்திரீ தன்னுடைய வரலாற்றையே சித்திரங்களாக எழுதியிருக்கிறாள் என்று இளவரசர் இலகுவாகத் தெரிந்து கொண்டார்.

அவற்றில் முதல் சித்திரம் கடல் சூழ்ந்த தீவில் ஓர் இளம் பெண் தன்னந்தனியாக நிற்பதையும் அவளுடைய தகப்பனார் கட்டுமரம் ஏறி மீன் பிடித்துக்கொண்டு வருவதையும் காட்டியது. பின்னர், அந்தப் பெண் காட்டு வழியே சென்றாள். ஒரு மரத்தின் கிளைமீது ஓர் இளைஞன் உட்கார்ந்திருந்தான். அவன் இராஜ குமாரனைப் போலிருந்தான். அந்த மரத்தின்மீது ஒரு கரடி ஏறிக் கொண்டிருந்தது. இராஜகுமாரன் அதைக் கவனியாமல் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பெண் கூச்சலிட்டுவிட்டு ஓடினாள். கரடி அப்பெண்ணைத் துரத்தியது. மரத்தின் மேலிருந்த இளைஞன் குதித்து வந்து கரடியின் மேல் வேலை எறிந்தான். கரடிக்கும் அவனுக்கும் துவந்த யுத்தம் நடந்தது. அந்தப் பெண் தென்னை மரம் ஒன்றின்மீது சாய்ந்து கொண்டு கரடிக்கும் இளைஞனுக்கும் நடந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியில் கரடி இறந்து விழுந்தது. இளைஞன் அந்தப் பெண்ணை நெருங்கி வந்தான். அவளுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான். ஆனால் அவள் மறுமொழி சொல்லாமல் கண்ணீர் விட்டாள். பிறகு அவள் ஓடிப்போய்த் தன் தந்தையை அழைத்து வந்தாள். வந்த வலைஞன் தன் பெண் பேச முடியாத ஊமை என்பதைத் தெரிவித்தான். இராஜகுமாரன் முதலில் வருத்தப்பட்டான். பிறகு வருத்தம் நீங்கி அவளுடன் சிநேகம் செய்துகொண்டான். காட்டு மலர்களைக் கொய்து மாலை தொடுத்து அவள் கழுத்தில் போட்டான். இருவரும் கை கோத்துக்கொண்டு காட்டில் திரிந்தார்கள்.

ஒருநாள் பெரிய மரக்கலம் ஒன்று அந்தத் தீவின் சமீபம் வந்தது. அதிலிருந்து பல வீரர்கள் இறங்கி வந்தார்கள். இராஜ குமாரனைக் கண்டுபிடித்து அவனுக்கு வணக்கம் செலுத்தினார்கள். அவனை மரக்கலத்துக்கு வரும்படி வருந்தி அழைத்தார்கள். இராஜகுமாரன் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி விடை பெற்றுக்கொண்டான். கப்பலில் ஏறிச்சென்றான். அந்தப் பெண் அவன் போனபிறகு ரொம்பவும் வருத்தப்பட்டுக் கண்ணீர் பெருக்கினாள். அதை அவள் தகப்பன் பார்த்தான். ஒரு படகில் அவளை ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்றான். கலங்கரை விளக்கம் ஒன்றை அடைந்து கரையில் இறங்கினான். அங்கே ஒரு குடும்பத்தார் தகப்பனையும் மகளையும் வரவேற்றார்கள். எல்லாருமாக மாட்டு வண்டியில் ஏறிப் பிரயாணம் போனார்கள். கோட்டை மதில் உள்ள ஒரு பட்டணத்தை அடைந்தார்கள். அங்கே அரண்மனை மேன்மாடத்தில் இராஜகுமாரன் தலையில் கிரீடத்துடன் நின்றான். அவனைச் சூழ்ந்து ஆடை அலங்காரங்கள் புனைந்த பலர் நின்றார்கள். அதைப் பார்த்த இந்த இளம் பெண்ணின் மனம் கலங்கியது. அவள் ஒரே ஓட்டமாக ஓடினாள். கடற்கரையை அடைந்தாள். கலங்கரை விளக்கத்தின் மேலேறிக் கீழே குதித்தாள். அலைகள் அவளைத் தாங்கிக் கொண்டன. படகில் வந்த ஒருவன் அவளைத் தூக்கிப் படகில் ஏற்றிக் காப்பாற்றினான். அவளைப் பேய் பிடித்திருக்கிறதென்று எண்ணி ஒரு கோயிலில் கொண்டு போய் விட்டான். கோயில் பூசாரி அவளுக்கு விபூதி போட்டு வேப்பிலை அடித்தான்.

யாரோ ஒரு பெரிய ராணி சுவாமி தரிசனம் செய்ய அந்தக் கோயிலுக்கு வந்தாள். பூசாரி அந்தப் பெண்ணைப்பற்றி ராணியிடம் சொன்னான். ராணி கர்ப்பந் தரித்திருந்தாள். அந்தப் பெண்ணும் தன்னைப்போலவே கர்ப்பவதி என்று அறிந்தாள். பல்லக்கில் ஏற்றிக்கொண்டு அரண்மனைக்கு அழைத்துப் போனாள். அரண்மனைத் தோட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ராணி வந்து இரண்டு குழந்தைகளில் ஒன்றைத் தான் வளர்ப்பதாகச் சொன்னாள். முதலில் வலைஞர் பெண் அதை மறுத்தாள். பிறகு யோசித்துப் பார்த்தாள். இரண்டு குழந்தைகளுமே அரண்மனையில் வளரட்டும் என்று தீர்மானித்தாள். குழந்தைகளை விட்டுவிட்டு நள்ளிரவில் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டாள். வெகுகாலம் காட்டில் திரிந்து கொண்டிருந்தாள். ஆனால் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அடிக்கடி வந்துவிடும். ஆற்றங்கரை ஓரமாக வந்து மரங்களின் மறைவில் ஒளிந்திருப்பாள். படகில் ராஜாவும் ராணியும் குழந்தைகளும் வருவார்கள். தூரத்திலிருந்தபடியே பார்த்துவிட்டுப் போய்விடுவாள். ஒரு சமயம் ஒரு குழந்தை படகிலிருந்து தவறி விழுந்து விட்டது. அதை யாரும் கவனிக்கவில்லை. இவள் நீரில் மூழ்கிக் குழந்தையை எடுத்துக்கொடுத்தாள். உடனே மீண்டும் நதி வெள்ளத்தில் மூழ்கிச் சென்று அக்கரையை அடைந்து காட்டில் மறைந்து விட்டாள்.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் காவிக் கோட்டினால் தத்ரூப சித்திரங்களாக அச்சுவரில் வரையப்பட்டிருந்தன, இளவரசர் அருள்மொழிவர்மர் அளவில்லா ஆர்வத்துடனும் அதிசயத்துடனும் அச்சித்திரங்களைப் பார்த்துக்கொண்டு வந்தார். கடைசிச் சித்திரம் வந்ததும் இளவரசர், "நதியிலிருந்து காப்பாற்றப்பட்ட சிறுவன் நான்; காப்பாற்றியவள் நீ!" என்று சமிக்ஞையாகச் சுட்டிக்காட்டினார். அந்த மூதாட்டி இளவரசரைக்கட்டி அணைத்துக் கொண்டு உச்சி மோந்தாள்.

பின்னர் அந்த மண்டபத்தின் இன்னொரு மூலைக்கு இளவரசரை அழைத்துச் சென்றாள். அங்கே எழுதியிருந்த சில சித்திரங்களைக் காட்டினாள். அவை அவளுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் அல்ல. இளவரசருக்கு நேரக்கூடிய அபாயங்களைப் பற்றி அச்சித்திரங்களின் மூலமாகவும் சமிக்ஞைகளின் மூலமாகவும் எச்சரிக்கை செய்தாள்.

இவ்வளவையும் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் மண்டபத்தின் ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நந்தினியின் முகத்தையும் இந்த ஊமை ஸ்திரீயின் முகத்தையும் வந்தியத்தேவன் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்தான், அவன் மனத்தில் பற்பல எண்ணங்கள் உதித்தன; பற்பல சந்தேகங்கள் தோன்றின. அவற்றைக் குறித்துப் பேச அது சந்தர்ப்பம் அன்று எனப் பேசாதிருந்தான். யானைச் சிலைகள் பாதுகாத்த அந்தரங்க மண்டபத்திலிருந்து அவர்கள் வெளியேவந்தார்கள். மூதாட்டி அவர்களை அழைத்துக் கொண்டு அந்த ஸ்தூபத்தின் சிகரத்தை நோக்கி ஏறினாள். அவளுடைய தேக வலிமையைக் குறித்து மற்றவர்கள் அதிசயித்தார்கள். வந்தியத்தேவனுக்கு மிகவும் களைப்பாயிருந்தது. ஆயினும் வெளியில் சொல்லாமல் ஏறினான்.

பாதி ஸ்தூபம் ஏறியதும் நின்று பார்த்தார்கள். நகரத்தின் ஓரிடத்தில் தீயின் ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

"ஆகா! மகாஸேன சக்கரவர்த்தியின் புராதன மாளிகை தீப்பற்றி எரிகிறது!" என்றார் இளவரசர்.

"நாம் படுத்திருந்த இடமா?"

"அதுவேதான்!"

"அங்கே நாம் படுத்துத் தூங்கியிருந்தால்...?"

"நாமும் ஒரு வேளை அக்கினி பகவானுக்கு உணவாகியிருப்போம்!"

"அதுதான் நாம் படுத்திருந்த அரண்மனை என்று இத்தனை தூரத்திலிருந்தபடி எதனால் சொல்கிறீர்கள்?"

"மண்டபத்துக்குள்ளே நான் பார்த்த சித்திரங்கள் என்னுடன் பேசின."

"எங்களுக்குக் கேட்கவில்லையே?"

"அதில் ஒன்றும் அதிசயமில்லை சித்திரங்கள் ஒரு தனி பாஷையில் பேசும். அந்த பாஷை தெரிந்தவர்களுக்குத்தான் அவற்றின் பேச்சு விளங்கும்."

"அந்தச் சித்திரங்கள் தங்களுக்கு இன்னும் என்ன தெரிவித்தன?"

"என் குடும்ப சம்பந்தமான பல இரகசியங்களைச் சொல்லின. இந்த இலங்கைத் தீவை விட்டு உடனே போய் விடும்படியும் தெரிவித்தன!..."

"சித்திரங்களின் பாஷை வாழ்க! வைஷ்ணவரே! என் கட்சி ஜெயித்தது!" என்றான் வந்தியத்தேவன்.

"இளவரசே! சித்திரங்கள் அத்துடன் நிறுத்தவில்லை. 'இலங்கையில் உள்ளவரையில் கூரையின் கீழ்ப்படுக்க வேண்டாம். வீடுகளின் ஓரமாக நடக்க வேண்டாம். மரங்களின் அடியில் போகவேண்டாம்' என்றும் சொல்லவில்லையா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சரியாகச் சொன்னீர்! உமக்கு எப்படித் தெரிந்தது?"

"தங்களுக்குச் சித்திரங்களின் பாஷை தெரியும். அடியேனுக்கு அபிநய பாஷை தெரியும். தங்கள் குல தெய்வம் தங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அத்தெய்வத்தின் அபிநய முகபாவங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சந்தோஷம்; இரவு இன்னும் ஒரு ஜாமந்தான் மிச்சமிருக்கிறது. இந்த ஸ்தூபத்தின் உச்சியில் ஏறி சிறிது நேரமாவது படுத்துத் தூங்கிவிட்டுப் பொழுது விடிந்ததும் புறப்படுவோம்" என்றார் அருள்மொழிவர்மர்.

மறுநாள் உதயத்தில் சூரிய கிரணங்கள் சுளீர் என்று அடித்து வந்தியத்தேவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பின. முதல் நாளிரவு நடந்த உண்மையான நிகழ்ச்சிகள் போதாவென்று சதிகாரர்களும், தீ வைப்பவர்களும், ஊமைகளும், செவிடர்களும், மரத்தில் ஏறும் கரடிகளும், பேய் பிசாசுகளும், புத்த பிக்ஷுக்களும், மணி மகுடங்களும் ஒரே குழப்பமாக வந்தியத்தேவனுடைய கனவிலேயும் வந்து துன்புறுத்தினார்கள். சூரிய வெளிச்சத்தில் அவையெல்லாம் மாயக் கனவுகளாகி மறைந்தன. குழப்பமும் பீதியும் பறந்தன.

இளவரசரும், ஆழ்வார்க்கடியானும் முன்னதாக எழுந்து பிரயாணத்துக்கு ஆயத்தமாகியிருப்பதை வந்தியத்தேவன் கண்டான். அவனும் அவசரமாக ஆயத்தமானான். மூன்று பேரும் ஸ்தூப சிகரத்திலிருந்து இறங்கினார்கள். நடுவீதிகளின் வழியாகவே நடந்து சென்று மகாமேகவனத்தை நோக்கிச் சென்றார்கள். அந்த நந்தவனத்தின் மத்தியிலேதான் புராதனமாக ஆயிரத்தைந்நூறு வயதான, மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த போதி விருட்சம் இருந்தது.

பிக்ஷுக்களும், பிக்ஷுக்களல்லாத பக்தர்கள் பலரும் போதி விருட்சத்தை வலம் வந்தும், மலர்களைச் சொரிந்தும் வணங்கிக் கொண்டிருந்தார்கள். இளவரசர் அருள்மொழிவர்மரும் அந்தப் போதி விருட்சத்துக்கு வணக்கம் செலுத்தினார்.

"உலகத்தில் இராஜ்யங்களும், இராஜ்யங்களை ஆண்ட மன்னர்களும் மறைந்து போய் விடுவார்கள். ஆனால் தர்மம் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்தப் போதி விருட்சம் நிதர்சனமாயிருக்கிறது!" என்று இளவரசர் மற்ற இருவரையும் பார்த்துக் கூறினார்.

இப்படிச் சொல்லிக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரு மூலையில் மூன்று குதிரைகள் பிரயாணத்துக்கு ஆயத்தமாக நின்றன. மூன்று குதிரைகளையும் பிடித்துக்கொண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

இளவரசர் அங்கே சென்றதும் அவர்கள் மூவரும் முக மலர்ந்து மரியாதையுடன் வணங்கினார்கள். இளவரசர் அவர்களை ஏதோ கேட்டுத் தெரிந்துகொண்டார். வந்தியத்தேவனைப் பார்த்து "இராத்திரி எரிந்தது நாம் படுத்திருந்த மகாசேனரின் அரண்மனைதான்! நாமும் அதில் எரிந்து போய் விட்டோ மோ என்று இவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள். நம்மை உயிரோடு பார்த்ததும் இவர்களுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை!"

"ஆயிரத்தைந்நூறு வயதான அரசமரம் இன்னும் நிற்பது என்னமோ உண்மைதான். ஆனால் தர்மம் செத்துப்போய் எத்தனையோ நாளாகிவிட்டது!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

"இனி ஒரு தடவை அவ்விதம் சொல்லாதே! நான் ஒருவன் உயிரோடிருக்கும்போது தர்மம் எப்படிச் சாகும்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

மூன்றுபேரும் குதிரைகள் மீது ஏறிக்கொண்டு புறப்பட்டார்கள். அநுராதபுர நகரத்தின் வடக்கு வாசல் வழியாக வெளியேறினார்கள். திருவிழாக் கூட்டம் இன்னமும் நகரிலிருந்து நாலாபுறமும் 'ஜேஜே' என்று சென்று கொண்டிருந்தபடியால் இவர்களை யாரும் கவனிக்கவில்லை.

அநுராதபுரத்துக்கு வட கிழக்கில் ஒரு காத தூரத்தில் மகிந்தலை என்னும் சிறிய பட்டணம் இருந்தது. "அசோக சக்கரவர்த்தியின் குமாரர் மகிந்தர் முதன்முதலில் இந்த ஊரிலேதான் வந்திறங்கிப் புத்த மதத்தை உபதேசிக்கத் தொடங்கினார்! எப்படிப்பட்ட பாக்கியசாலி அவர்! ஆயுதந் தாங்கிப் படைகளை அழைத்துக்கொண்டு நாடு கவர்வதற்கு அவர் போகவில்லை. கொலைகாரர்களிடம் சிக்காமல் ஒளிந்து மறைந்து திரிய வேண்டிய அவசியமும் அவருக்கு ஏற்படவில்லை!" என்றார் அருள்மொழிவர்மர்.

"அவருக்குக் கொடுத்து வைத்திருந்தது அவ்வளவுதான்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

இளவரசர் நகைத்தார். "நீர் எப்போதும் என்னைவிட்டுப் பிரியவே கூடாது. நீர் பக்கத்தில் இருந்தால் எப்படிப்பட்ட கஷ்டமும் சந்தோஷமாகி விடும்!" என்றார் இளவரசர்.

"அதேமாதிரி எப்படிப்பட்ட சந்தோஷமும் கஷ்டமாகி விடும்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

இச்சமயத்தில் சாலையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு புழுதிப் படலம் தெரிந்தது. பல குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் வரும் சத்தமும் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் சிறிய குதிரைப் படை ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. குதிரை வீரர்கள் கையில் பிடித்திருந்த வேல் முனைகள் காலை வெய்யிலில் பளபளவென்று ஜொலித்தன.

"ஐயா! உறையிலிருந்து கத்தியை எடுங்கள்!" என்று எச்சரித்தான் வந்தியத்தேவன்.









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 38. சித்திரங்கள் பேசின!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 28. இராஜபாட்டை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 10. கண் திறந்தது!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 58. கருத்திருமன் கதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: