BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. யானை மிரண்டது! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. யானை மிரண்டது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. யானை மிரண்டது! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. யானை மிரண்டது!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. யானை மிரண்டது! Icon_minitimeWed May 11, 2011 12:01 pm

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

44. யானை மிரண்டது!



மேற்கண்டவாறு முடிவு ஏற்பட்டதும் சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி பார்த்திபேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் அந்தரங்கமாகப் பேசினார். பின்னர், தம்முடன் வந்த படைவீரர்களுக்குத் தனித்தனியே சில கட்டளைகளைப் பிறப்பித்தார்.

பார்த்திபேந்திரன் இளவரசரிடம் விடைபெற்றுக் கொண்டான். "ஐயா! நான் வந்த காரியம் நிறைவேறாமல் வெறுங்கையோடு திரும்புகிறேன். இதற்காகக் கரிகாலர் என்னை மிகவும் கோபித்துக்கொள்ளபோகிறார். ஆயினும் என்ன செய்வது? தாங்கள் பிடிவாதமாக இருக்கிறீர்கள்; என் பேரில் குற்றமில்லை. இதற்கு இங்குள்ளவர்கள் எல்லாரும் சாட்சி!" என்றான்.

இளவரசர், "அவ்வளவு அவசரமாகப் போகவேண்டுமா? தாங்களும் சேநாதிபதியோடு தொண்டைமானாறு வரை வந்து விட்டுப்போகக்கூடாதா?" என்று கேட்டார்.

"அந்தப்பாதகத்துக்கு நான் உடந்தையாயிருக்க மாட்டேன். நான் வந்த கப்பல் திரிகோணமலையில் நிற்கிறது. அங்கே போய்க் கப்பல் ஏறிக் கூடியசீக்கிரம் நான் காஞ்சிக்குப் போகவேண்டும். கரிகாலரிடம் நடந்ததைச் சொல்ல வேண்டும்!" என்றான் பார்த்திபேந்திரன்.

பின்னர் வந்தியத்தேவனைப் பார்த்து, "வல்லத்தரையனே! என்னுடன் நீ காஞ்சிக்கு வரவில்லையா?" என்று கேட்டான்.

வந்தியத்தேவன் சிறிது திடுக்கிட்டு நின்றுவிட்டு, "இல்லை; இளவரசருடன் போக விரும்புகிறேன்" என்றான்.

"நல்லது; என்னுடன் வராததற்காகப் பிறகு வருத்தப்படுவாய்!" என்று சொல்லிவிட்டுப் பார்த்திபேந்திரன் புறப்பட்டான். சேநாதிபதியின் கட்டளையின்படி அவனுடன் இன்னும் சில வீரர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம், "அந்தப் பல்லவன் கூறியதன் பொருள் என்ன? தன்னுடன் வராததற்காக நான் வருத்தப்படுவேன் என்று ஏன் கூறினான்? உமக்கு ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டான்.

"சேநாதிபதியும் அவனும் கலந்து பேசி ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்! அதன் விவரம் இன்னதென்று தானே சீக்கிரத்தில் தெரியும். உண்மையில், இப்போது ஏற்பட்டிருக்கும் சங்கடத்துக்கு மூலகாரணம் இந்தக் கொடும்பாளூர் கிழவர்தான்!" என்றான்.

"அது எப்படி? சேநாதிபதி என்ன செய்திருக்க முடியும்?"

"எல்லாம் அவருடைய வேலைதான். அவருடைய குடும்பப்பெண் ஒருத்தி பழையாறையில் வளர்கிறாள் என்பது உனக்குத் தெரியும் அல்லவா?"

"நன்றாய்த் தெரியும் வானதி தேவியைத்தானே சொல்கிறீர்?"

"ஆமாம்; அந்தப் பெண்ணை இளவரசருக்குக் கலியாணம் பண்ணிக் கொடுத்து இலங்கை அரசராக இவருக்கு முடிசூட்டி விட வேண்டும் என்று சேநாதிபதிக்கு ஆசை. பக்த குருக்களைக் கொண்டு இலங்கைக் கிரீடத்தை அளிக்கும்படி ஏவியவர் இவர்தான். இவருடைய முயற்சியை இரகசியமாக வைத்திருக்கவாவது தெரிந்ததா? அதுவும் இல்லை. செய்தி தஞ்சைக்கு எட்டிவிட்டது. அதனால்தான் முதன் மந்திரி அநிருத்தர் இலங்கைக்கு வந்தார்; என்னையும் இளவரசரிடம் அனுப்பி வைத்தார். வந்தியத்தேவா! எது எப்படியானாலும் நம்முடைய உயிரை நாம் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், இளவரசர் இலங்கைச் சிம்மாசனத்தை ஏற்க மறுத்தது பற்றி நீயும் நானும் தஞ்சையில் சாட்சி சொல்லும்படி நேரிடலாம்!"

இதற்குள் சேநாதிபதியின் காரியங்கள் முடிந்துவிட்டன. அவருடன் வந்திருந்த படை வீரர்களில் நாலுபேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் வெவ்வேறு திசையில் புறப்பட்டுச் சென்றார்கள்.

கடைசியாக இளவரசரின் கோஷ்டியும் புறப்பட்டது. இளவரசர், சேநாதிபதி, வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் இவர்களுடனே மேற்கூறிய நாலு வீரர்களும் உயர்ந்த சாதிக் குதிரைகள் மீதேறி வடதிசை நோக்கிப் புறப்பட்டார்கள். இவர்களைப் பின்தொடர்ந்து பூங்குழலி ஏறியிருந்த யானை, ஜாம் ஜாம் என்று கம்பீரமாக நடந்து வந்தது. பூங்குழலியைத் தவிர அதன் மீது யானைப் பாகன் ஒருவன் மட்டுமே ஏறிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச தூரம் இராஜபாட்டை வழியாக அவர்கள் சென்றார்கள். ஆனால் இராஜபாட்டையில் பிரயாணம் செய்வது சுலபமாக இல்லை, வழியெங்கும் ஜனக் கூட்டமாயிருந்தது. இளவரசர் அவ்வழியில் வருகிறார் என்பதும் எப்படியோ ஜனங்களுக்குத் தெரிந்து போயிருந்தது. இலங்கைத் தீவின் வடபகுதியில் அப்போதெல்லாம் தமிழர்களே அதிகமாக வசித்து வந்தார்கள். அங்கங்கே ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று, "இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!" "சேநாதிபதி கொடும்பாளூர் வேளார் வாழ்க!" என்று கோஷித்தார்கள். சில இடங்களில் ஜனங்கள் குதிரைகளைச் சூழ்ந்துகொண்டு பின் தொடர்ந்து வந்தார்கள். வரவரப் பின் தொடர்ந்து வரும் கூட்டம் அதிகமாகிக் கொண்டு வந்தது. குதிரைகள் வேகமாகப் போக முடியவில்லை.

இளவரசர் சேநாதிபதியுடன் இதைப் பற்றி விவாதித்ததின் பேரில் இராஜபட்டையிலிருந்து விலகிக் காட்டு வழியில் போவதென்று தீர்மானமாயிற்று. ஜனங்களை மெதுவாகக் கழித்துக்கட்டி விட்டு அவர்கள் காட்டு வழியில் பிரவேசித்தார்கள். காட்டு வழியில் இயற்கை இடையூறுகள் காரணமாக வேகமாகப் போக முடியவில்லை. கொஞ்ச தூரம் போனதும் தாமரைத் தடாகம் ஒன்று தென்பட்டது. அதன்கரைக்கு வந்ததும் எதிர்க்கரையில் ஒரு பெரிய ஜனக் கும்பல் நிற்பது தெரிந்தது. இவர்களைப் பார்த்தவுடனே அந்த ஜனக் கும்பலின் மத்தியிலிருந்து தாரை, தப்பட்டை, கொம்பு, பேரிகை முதலிய வாத்தியங்களின் பெருமுழக்கம் கிளம்பிற்று.

"கொஞ்சம் இருங்கள்; நான் போய் அவர்கள் யார் என்று பார்த்துவிட்டு வருகிறேன்!" என்று கூறிவிட்டுச் சேநாதிபதி குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டு முன்னதாகச் சென்றார். சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து, "இளவரசர் இந்த வழி வருவது எப்படியோ பக்கத்துக் கிராமவாசிகளுக்குத் தெரிந்து போயிருக்கிறது. இளவரசருக்கு மரியாதை செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்!" என்றார்.

ஜனங்கள் நெருங்கி வந்தார்கள். இளவரசரைச் சுற்றிச் சுற்றி வந்து அடங்காத ஆர்வத்துடன் பார்த்தார்கள். பல வகை ஜய கோஷங்களையும் வாழ்த்தொலிகளையும் கிளப்பினார்கள். அவற்றில் "ஈழத்தரசர் அருள்மொழிவர்மர் வாழ்க!" என்ற கோஷம் மட்டும் பிரதானமாயிருந்தது.

இளவரசர் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அந்த ஜனக்கூட்டத்திற்குத் தலைவன் என்று தோன்றிய ஒருவனை அருகில் அழைத்தார். "இவர்கள் எதற்காக எனக்கு ஈழத்து அரசுப்பட்டம் கட்டுகிறார்கள்?" என்று கேட்டார்.

அவன் மிகப் பணிவுடன், "அரசே பன்னெடுங் காலமாக இந்த ஈழநாடு நிலையான அரசு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வர் ஈழ நாட்டின் மன்னர் ஆக வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இந்நாட்டில் வாழும் எல்லா ஜனங்களுடைய விருப்பமும் அதுதான். தமிழர்கள், சிங்களவர்கள், சைவர்கள், பௌத்தர்கள், துறவிகள் இல்லறத்தார் எல்லாரும் அதையே விரும்புகிறார்கள்" என்று கூறினான்.

இளவரசருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் விருந்து அளிக்க அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்தை ஏற்றுக் கொள்ளாமல் போக முடியவில்லை. விருந்துண்ட பிறகு விடை பெற்றுப் புறப்படுவதற்கு வெகு நேரமாகிவிட்டது.

இளவரசருக்கு உபசாரங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் தனித்துப் பேசிக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது.

"தம்பி! பார்த்தாயா? இதெல்லாம் சேநாதிபதியின் சூழ்ச்சி என்று தெரியவில்லையா? முன்னாலேயே அவசரமாகச் செய்தி அனுப்பி இந்த உபசாரங்களையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சேநாதிபதியின் ஏற்பாடுதான் என்று ஒருவாறு தெரிகிறது. ஆனால் இந்தச் சூழ்ச்சியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லையே? இப்படியெல்லாம் இந்தத் தீவில் வாழும் ஜனங்கள் சொல்வதைக் கேட்டு இளவரசர் நேற்று வேண்டாம் என்று மறுத்த சிம்மாசனத்தின் பேரில் இன்றைக்கு ஆசை கொண்டு விடுவார் என்ற எண்ணமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அது ஒரு நோக்கமாயிருக்கலாம். அதைக் காட்டிலும் முக்கியமானது நம் பிரயாணத்தைத் தாமதப்படுத்துவதுதான்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"பிரயாணத்தைத் தாமதப்படுத்துவதினால் சேநாதிபதி என்ன பலனை எதிர்ப்பார்க்கிறார்?"

"அது எனக்கும் தெரியவில்லை; சீக்கிரத்தில் தெரிந்து தானே ஆகவேண்டும்? இளவரசருடைய முகத்தைப் பார்! அவருக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லையென்று தெரிகிறதல்லவா?"

வந்தியத்தேவன் இளவரசரின் முகத்தைப் பார்த்தான். ஆத்திரமான வார்த்தைகளைப் பேசும்போதுகூட மலர்ந்துவிளங்கிய அவருடைய முகத்தில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தன. புருவங்கள் நெறிந்திருந்தன. கண்கள் ஆழ்ந்த சிந்தனையைக் காட்டின.

அதே சமயத்தில் பூங்குழலி அத்தாமரைக் குளத்தின் இன்னொரு கரையில் தன்னந்தனியாக உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எதிர்பார்த்தபடி அவளுக்கு இந்தப் பிரயாணம் உற்சாகம் தருவதாக இல்லை. பிரயாணத்தின்போது இளவரசருடன் தனித்திருக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நினைத்தாள். அவர் தன்னுடனே அளவளாவிப் பேசுவார் என்று எண்ணினாள். தன் மனத்தில் பொங்கும் உணர்ச்சியில் ஒரு சிறிதேனும் வெளியிடலாம் என்று ஆசைப்பட்டாள். அதற்கெல்லாம் சமயமேகிட்டாது போலிருக்கிறது. இளவரசரைச் சுற்றி ஒரே கூட்டமாகவே இருக்கிறது.

'அவரை எதிரிகளிடம் கொண்டுபோய் ஒப்புவித்த பழி ஒன்றுதான் மிஞ்சும்போலும். அந்தப் பழி தனக்கு எதற்காக ஏற்படவேண்டும்? ஏன் இங்கிருந்தபடி ஒருவருக்கும் தெரியாமல் ஓடி விடக்கூடாது? சேநாதிபதியின் கோபத்திலிருந்தாவது தப்பியதாக ஆகும்!'

'சே! சேநாதிபதி கோபம் என்னை என்ன செய்துவிடும்? யாருடைய கோபந்தான் என்ன செய்துவிடும்? அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. ஆனால் என்னுடைய எண்ணமெல்லாம் ஏன் மண்ணோடு மண்ணாக வேண்டும்? இந்த நெஞ்சில் உள்ள தீ எத்தனை நாள் இப்படி என்னைத் தகித்துக்கொண்டிருக்கும்? இந்த உடம்பில் உயிர் எதற்காக இருக்கிறது? திடீரென்று ஒரு இடி விழுந்து என்னைக் கொன்று விடக்கூடாதா? இப்படி எத்தனையோ ஆயிரம் தடவை ஆசைப்பட்டாகி விட்டது; பயன் ஒன்றுமில்லை. இந்த உயிர் தானாகப் போகப் போவதில்லை. நானாக ஏதேனும் செய்து கொண்டால்தான் இந்த உயிர் போகும்!...'

'ஆ! இது என்ன? கனவு காண்கிறேனா? இல்லை, கனவு இல்லை! அங்கே அந்தப் பாழும் மண்டபத்துக்குப் பக்கத்தில் இளவரசருடைய சிநேகிதர் என்னிடமிருந்து பிடுங்கி எறிந்த கத்தி இதோ வந்து என்னருகில் விழுந்திருக்கிறதே? இதை யார் எறிந்திருப்பார்கள்? யாரோ இவருடைய பகைவர்தான் எறிந்திருப்பார்கள்! என்னைக் கொல்லுவதற்குத்தான் எறிந்திருப்பார்கள். என்ன துரதிஷ்டம்! என் மேலே விழாமல் சற்று நகர்ந்து விழுந்து விட்டதே? - இதுவும் நல்லதற்காகத்தான். கையில் இந்தக் கத்தி இருக்கட்டும். அவருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகு, அவரை அந்தப் பாதகர்களிடம் கொண்டுபோய் ஒப்புவித்த பிறகு, அவர் எதிரிலேயே இந்தக் கத்தியினால் குத்திக் கொண்டு இறந்து விடுகிறேன். சீச்சீ! எதற்காக அவர் மனத்தை அப்படிப் புண்படுத்த வேண்டும்? அவர் கப்பலில் ஏறிப்போன பிறகு படகில் ஏறி, நடுக்கடலில் சென்று அங்கே குத்திக்கொண்டு சாகலாம். என் அருமைக் கத்தியே நீ திரும்பி வந்தாயல்லவா? உன்னை அனுப்பியவர்களுக்கு வந்தனம்.'

'ஒருவேளை இளவரசர் மேலே எறிய எண்ணி இதை எறிந்திருப்பார்களோ? ஆம்; அவருக்கு வழியில் எத்தனையோ அபாயங்கள் நேரலாம் என்று சேநாதிபதி கூடச் சொன்னாரே?... அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கக் கூடாதா? அவர் பேரில் குறிபார்த்து எறிந்த கத்தி என் நெஞ்சில் விழக்கூடாதா? அப்படி விழுந்து அவருக்காக நான் உயிர் துறக்கும்படி நேரக் கூடாதா அவ்விதம் நேர்ந்தால், நான் இரத்தம் பெருக்கி உயிர்துறக்கும் சமயத்தில்...'

பூங்குழலியின் மனத்தில் ஒரு விசித்திரமான தோற்றம் ஏற்பட்டது. அவளுடைய மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. இளவரசர் ஓடி வந்தார். 'ஐயோ! எனக்காக உயிர் துறக்கிறாயா?' என்று கேட்டார். பூங்குழலியின் உள்ளம் பூரித்து நெஞ்சிலிருந்து இரத்தம் அதிகமாகப் பீறிட்டு வந்தது. இளவரசர் அவளை வாரி எடுத்துத் தம் மடியில் போட்டுக்கொண்டார். அவளுடைய நெஞ்சிலிருந்து பெருகிய இரத்தம் அவர் உடம்பையும் உடைகளையும் நனைத்தது. பூங்குழலி கலகல வென்று சிரித்தாள். 'இளவரசே! இப்போதாவது என் நெஞ்சில் உள்ளது என்னவென்று தெரிந்து கொண்டீர்களா?' என்று கேட்டாள். 'அடிப்பாவி! அது எனக்கு முன்னமே தெரியும்? இதற்காகவா உயிரை விடுகிறாய்?' என்று இளவரசர் அலறினார். பூங்குழலிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. உரத்த சத்தம் போட்டுச் சிரித்தாள்!...

"ஏ பைத்தியமே!" என்ற குரலைக் கேட்டுப் பூங்குழலி நிமிர்ந்து பார்த்தாள். எதிரில் வந்தியத்தேவன் நின்று கொண்டிருந்தான்.

"இளவரசர் ஏற்கெனவே கோபமாயிருக்கிறார்; பிரயாணம் தாமதப்படுகிறது என்று. உன்னால் வேறு தாமதம் வேண்டாம். சீக்கிரம் எழுந்து வா!" என்றான் வந்தியத்தேவன்.

பூங்குழலி சிரித்துக்கொண்டு எழுந்து ஓடிப்போய் யானையின் மீது ஏறிக்கொண்டாள். கத்தியை நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு கொஞ்சினாள்.

காட்டு வழியில் மேலும் கொஞ்ச தூரம் சென்ற பிறகு எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பிரயாணிகள் வலது பக்கமிருந்த அடர்ந்த காட்டிலிருந்து 'விர்' என்ற சத்தத்துடன் ஓர் அம்பு பாய்ந்து வந்தது. இளவரசரைக் குறி பார்த்து அது எய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த அம்பைவிட வேகமாக இளவரசர் குதிரையின் கயிற்றை இழுத்துத் திருப்பினார். அம்பு அவருக்கு வெகு சமீபமாக சென்று, அவருக்கு அப்பால் வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுடைய தலைப்பாகையில் பாய்ந்து அதைக் கொத்திக் கொண்டு சென்றது.

ஆழ்வார்க்கடியான் தலையைத் தடவிக்கொண்டு வியப்புடன் பார்த்தான்.

சேநாதிபதி பூதிவிக்கிரமகேசரி திடுக்கிட்டுப் போய் விட்டார். எல்லாருமே திகைத்து நின்றார்கள்.

பூங்குழலியோ அந்த அம்பு தன் பேரில் விழுந்து தன்னைக் கொன்று விடவில்லையே என்று வருத்தப்பட்டாள்.

சிறிது திகைப்பு நீங்கிய பிறகு சேநாதிபதி, "இளவரசே! பார்த்தீர்களா? தங்களைப் பாதுகாப்பின்றித் தனியே அனுப்பியிருந்தால் எவ்வளவு பிசகான காரியமாயிருக்கும்?" என்று சொல்லிவிட்டுக் காவலுக்கு வந்து வீரர்களைக் காட்டுக்குள் புகுந்து தேடச்சொன்னார். அவர்கள் சிறிது நேரம் தேடிவிட்டுத் திரும்பி வந்து, யாரும் அகப்படவில்லை" என்றார்கள்.

சேநாதிபதி மேலே பிரயாணத்தைப் பற்றி ஏற்பாடு செய்யத் தொடங்கினார். "இளவரசரை நடுவில் நிறுத்தி நாம் நாலு புறமும் சூழ்ந்து வரவேண்டும்" என்று கூறி, வியூகம் வகுக்க ஆரம்பித்தார்.

அப்போது இளவரசர், "சேநாதிபதி! ஒரு வேண்டுகோள்" என்றார்.

"இது என்ன வார்த்தை? கட்டளையிடுங்கள்!" என்றார் சேநாதிபதி.

"நான் உயிரோடு தஞ்சை செல்ல விரும்புகிறேன். நான் குற்றமற்றவன் என்பதை என் தந்தையிடம் மெய்ப்பிக்க விரும்புகிறேன்..."

"தங்கள் தந்தை ஒருநாளும் சந்தேகிக்கமாட்டார் இளவரசே?"

"தந்தை மட்டுமல்ல; மக்கள் எல்லாரும் ஒப்புக் கொள்ளும்படி நிரூபிக்க விரும்புகிறேன். அந்தக் காரியத்தை நிறைவேற்றிய பிறகு என் உயிரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். அதற்கு முன்னால் வழியிலேயே உயிர் துறக்க விரும்பவில்லை."

"ஐயா! தங்கள் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தால் அந்த க்ஷணமே இந்தக் கொடும்பாளூர் வாளை என் நெஞ்சிலே செலுத்திக் கொள்வேன்."

"அதில் ஒன்றும் பயனில்லை. சோழநாடு மகத்தான நஷ்டம் அடையும்."

"தங்களை இழப்பதைக் காட்டிலும் பெரிய நஷ்டம் சோழநாட்டுக்கு வேறு என்ன இருக்க முடியும்? தங்களுக்கு ஆபத்து வருவதற்குக் காரணமாயிருந்துவிட்டு அப்புறம் இந்தக் கொடும்பாளூர்க் கொடும்பாவி ஒரு கணமும் உயிரை வைத்துக் கொண்டிருப்பேனா?"

"அப்படியானால் என் உயிரை நான் காப்பாற்றிக் கொள்ளுவது இன்னும் முக்கியமாகிறது."

"அதைக்காட்டிலும் முக்கியமானது இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை."

"அதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது."

"சொல்லுங்கள் ஐயா!"

"குதிரை மேல் பிரயாணம் செய்யும் வரையில் சற்று முன் வந்த அம்பைப்போல் வேறு அபாயங்கள் ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கும்."

"நடந்து போகலாம் என்று சொல்லுகிறீர்கள்? அல்லது..."

"எனக்கு யானைகளின் பாஷை நன்றாய்த் தெரியும் யானைகள் நான் சொன்னபடி கேட்கும் என்று தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"

"ஆம், ஐயா! யானைப்பாகன் வேஷம் பூண்டு இந்த இலங்கைத் தீவின் பெரும்பகுதியைத் தாங்கள் சுற்றிப் பார்த்திருப்பதும் எனக்குத் தெரியும்."

"ஆகவே நான் சொல்லுகிறது என்னவென்றால், மறுபடியும் சிறிது நேரம் யானைப்பாகன் ஆகிறேன். இப்போது யானையை நடத்துகிறவன் கொஞ்சதூரம் என் குதிரை மேல் ஏறிக்கொண்டு வரட்டும்."

இதைக் கேட்ட சேநாதிபதி சிறிது மனத்தடுமாற்றமடைந்ததாகத் தோன்றியது. இளவரசருடைய யோசனைக்கு யாராவது ஆட்சேபம் சொல்ல மாட்டார்களா என்று ஆவலுடன் சுற்று முற்றும் பார்த்தார். ஆனால் எல்லாரும் 'கம்'மென்று இருந்தார்கள்.

"ஐயா! யானைப் பாகனுக்குக் குதிரை ஏறத் தெரியுமோ, என்னமோ?"

"தெரியாவிட்டால், நடந்து திரும்பிப் போகட்டும்."

"அந்தப் பெண் பெரிய சங்கோசியாயிருக்கிறாளே? அவள் தங்களுக்குச் சரி சமமாக யானை மீது உட்கார மாட்டேன் என்று சொன்னால்...?"

"கீழே குதித்து நடந்து வரட்டும்"

"தங்கள் சித்தம், இளவரசே!"

இளவரசர் உடனே குதிரை மீதிருந்து குதித்தார். யானையின் அருகில் சென்றார். பூங்குழலியின் கரிய கண்கள் ஆர்வத்தினால் நீண்டு வியப்பினால் அகன்று அவரை நோக்கின. யானைப் பாகனை இறக்கிவிட்டுத் தாம் யானைமீது பாய்ந்து அதன் கழுத்தில் உட்கார்ந்து கொண்டார். தடைப்பட்ட பிரயாணம் மறுபடியும் ஆரம்பமாகியது.

பூங்குழலி புளகாங்கிதம் அடைந்தாள். யானையின் முதுகின் மேலிருந்து மேகங்களின் மீது பாய்ந்தாள். வானவெளியில் உலவினாள். சொர்க்கத்தை எட்டிப்பார்த்து அதன் விவரிக்க முடியாத இன்ப சுகத்தின் இயல்பு இதுவென்பதை ஒருவாறு உணர்ந்து அறிந்தாள். 'ஆகா! இதுவென்ன தேவகானமா? இவ்வளவு இன்பமாயிருக்கிறதே! இல்லை, தேவகானத்துக்கு இவ்வளவு இனிமை ஏது? இளவரசர் அல்லவா பேசுகிறார்!'

"சமுத்திரகுமாரி! என்னுடன் இந்த யானை மீது தனியாக இருப்பது உனக்கு அருவருப்பாயிருக்கிறதா?"

"ஏழு ஜன்மங்களின் நான் செய்த தவத்தினால் இந்தப் பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது, பிரபு!"

"திடீரென்று இந்த யானைக்கு மதம் பிடித்து இது ஓட ஆரம்பித்தால், நீ பயப்படுவாயா?"

"தாங்கள் பக்கத்தில் இருக்கும்போது வானம் இடிந்து விழுந்தாலும் பயப்படமாட்டேன், ஐயா!"

"உன் படகை எங்கே விட்டுவிட்டு வந்திருக்கிறாய் பூங்குழலி?"

"யானை இறவுத் துறைக்குச் சமீபத்தில், ஐயா!"

"இக்கரையிலா, அக்கரையிலா?"

"அக்கரையிலே தான் படகை நிறுத்தத் தனி இடம் கிடைத்தது. அங்கேயே படகை நிறுத்திவிட்டு வந்தேன்."

"யானை இறவுத்துறையை எப்படி கடந்து வந்தாய்?"

"நான் வரும்போது கடல் நீர் மிகவும் குறைவாயிருந்தது. ஆகையால், பெரும்பாலும் நடந்து வந்தேன். கொஞ்சம் நீந்தியும் வந்தேன்."

"இப்போது இந்த யானை கடலில் இறங்கிச் சென்றால் பயப்படுவாயா?"

"கடலிலேயே என்னைத் தள்ளிவிட்டாலும் கவலையில்லை. நான்தான் சமுத்திரகுமாரி ஆயிற்றே? தாங்கள்தானே பெயர் கொடுத்தீர்கள்?"

"உன் படகு இருக்குமிடம் சென்றதும் அதில் நாம் ஏறிக்கொள்வோம். நீதான் படகு தள்ளிக்கொண்டு வரவேண்டும். இரண்டு பேரையும் வைத்துத் தள்ள முடியும் அல்லவா?"

"பத்து வயது முதல் துடுப்புப் பிடித்த கரங்கள் இவை. பிரபு! அரண்மனைப் பெண்களைப்போல் மலரினும் மிருதுவான கரங்கள் அல்ல. தங்கள் சிநேகிதர் வந்தியத்தேவரை வைத்துத் தள்ளி வந்ததை அவர் சொல்லவில்லையா?"

"சொன்னார்! ஆனால் இன்று அதைவிட வேகமாகத் தள்ள வேண்டும். தொண்டமான் ஆற்றின் முகத்துவாரத்துக்கு அதி சீக்கிரமாய்ப் போய்ச் சேரவேண்டும்?"

"இளவரசே! அவ்வளவு கொடூரமான காரியத்தை என்னை ஏன் செய்யப் பணிக்கிறீர்கள்? தங்களைச் சிறைப்படாமல் தப்புவிப்பதற்காக ஓடோ டியும் வந்தேன். சிறைப்படுத்த வந்திருப்பவர்களிடம் தங்களைக் கொண்டுபோய் ஒப்புவிக்கும்படி பணிக்கிறீர்கள். இந்த ஏழையின்பேரில் ஏன் இவ்வளவு கொடூரம்?"

"பூங்குழலி! என் தந்தை - சக்கரவர்த்தி - நோய்ப்பட்டிருப்பது உனக்குத் தெரியும் அல்லவா?"

"தெரியும், ஐயா! வானத்தில் சில நாளாக வால் நட்சத்திரம் தோன்றுவது பற்றி ஜனங்கள் பேசிக் கொள்ளுவதும் எனக்குத் தெரியும்."

"எந்த நொடிப் போதிலும் என் தந்தையின் வாணாள் முடிவுறக் கூடும் அல்லவா?"

பூங்குழலி மௌனமாயிருந்தாள்.

"அவர் ஒரு வேளை இவ்வுலகை நீத்துச் செல்ல நேரிட்டால், அவருக்கு எதிராக நான் சதி செய்து இராஜ்யத்தைக் கைப்பற்ற முயன்றேன் என்ற எண்ணத்துடன் அவர் போவது நல்லதா?"

"சக்கரவர்த்தி தங்களைப் பற்றி ஒரு நாளும் அப்படி நம்பமாட்டார். இது பழுவேட்டரையர்களின் சூழ்ச்சி!"

"அப்படிப்பட்ட பழுவேட்டரையர்களுக்கும் கூட நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்..."

"எதற்காக, ஐயா?"

"உண்மையிலேயே எனக்கு இராஜ்யம் ஆளுவதில் ஆசையில்லை, பூங்குழலி!"

"வேறு எதில் தங்களுக்கு ஆசை?"

"படகில் ஏறி முடிவில்லாத கடலில் என்றென்றும் போய்க் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசை! கடல்களுக்கு அப்பால் இழந்த ஈழ நாட்டைப் போல் எத்தனையோ நாடுகள் இருப்பதாகக் கேள்வி. அந்த நாடுகளுக்கெல்லாம் போக வேண்டும் என்று ஆசை. அந்தந்த நாட்டு மக்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆசை!"

"விந்தை! விந்தை!"

"எது விந்தை!"

"என் மனத்தில் குடிகொண்டுள்ள ஆசையே தங்கள் மனத்திலும் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுகிறேன். தாங்கள் அப்படிக் கடல் பிரயாணம் தொடங்கும் போது என்னையும் அழைத்துப் போவீர்களா?"

"முதலிலே, இப்போது நான் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றுகிறேன். அதற்கு நீ உதவி செய்வாய் அல்லவா?"

"தங்கள் சித்தம்!"

"நீ உட்கார்ந்திருக்கும் பீடத்திலிருந்து இரண்டு பக்கமும் கயிறுகள் தொங்குகின்றன அல்லவா? அவற்றை எடுத்து உன்னைக் கெட்டியாகக் கட்டிக்கொள்." எதற்காக இளவரசே!"

"யானை இப்போது மதங்கொண்டு ஓடப் போகிறது ஜாக்கிரதை, பூங்குழலி!"

இவ்விதம் கூறிவிட்டு இளவரசர் யானையின் மத்தகத்தைக் கையினால் தடவிக் கொடுத்த வண்ணம் அதன் காதண்டை ஏதோ சொன்னார். யானையின் நடைவேகம் திடீரென்று அதிகமாயிற்று. இளவரசர் யானையின் செவியண்டையில் குனிந்து மேலும் ஏதோ சொன்னார். அவ்வளவுதான், நடை ஓட்டமாயிற்று. துதிக்கையைத் தூக்கிக்கொண்டு ஒரு தடவை பயங்கரமான பிளிறல் சத்தம் போட்டுவிட்டு ஓடத் தொடங்கியது. சூறாவளி சுழன்று அடிக்கும் போது காடுகளின் மரங்கள் படும்பாடு அந்த யானையின் வேகத்தினால் பட்டன. சடசடவென்று மரங்களும் மரக்கிளைகளும் சரிந்து விழுந்தன. பூமி அதிர்ந்தது, எட்டுத் திக்குகளும் நடுநடுங்கின. மரங்களின் மீதிருந்த பறவை இனங்கள் சிறகுகளைச் சடசடவென்று அடித்துக்கொண்டும் பீதி கொண்ட குரலில் கூவிக்கொண்டும் பறந்தன. காட்டில் மறைந்து வாழ்ந்த மிருகங்கள் வெளிப் புறப்பட்டு நாலா புறமும் விழுந்தடித்து ஓடின.

"ஐயையோ! யானைக்கு மதம் பிடித்துவிட்டது போலிருக்கிறதே! இது என்ன விபரீதம்!" என்று சேநாதிபதி பூதிவிக்கிரமகேசரி கூவினார்.

இவ்வளவு தூரம் இளவரசர் சொல்லியிருந்ததும் பூங்குழலியின் உள்ளமும் திகில் அடைந்தது. அவள் முகத்தில் பயப்பிராந்தியின் அறிகுறி தோன்றியது.

பூங்குழலி ஒரு பெரிய பயங்கரமான பிரம்மாண்டமான கடல் சுழலில் அகப்பட்டுக்கொண்டாள். அதே சுழலில் அகப்பட்டுக் கொண்டு இளவரசரும் சுற்றிச் சுற்றி வந்தார். யானையும் அப்படியே சுழன்று சுழன்று வந்தது. பூங்குழலி கண்களை இறுக மூடிக் கொண்டாள். புயற்காற்றினால் தள்ளப்பட்டு ஓடும் கரிய மேகத்தைப் போல் யானை போய்க் கொண்டேயிருந்தது. கடைசியில் யானை இறவுத்துறையை அடைந்தது.

அங்கே இலங்கைத்தீவின் கீழ்ப்புறத்துக் கடலும் மேற்புறத்துக் கடலும் ஒன்றாய்ச் சேர்ந்தன. அந்த ஜலசந்தியின் மிகக் குறுகலாக இடத்துக்குதான் யானை இறவு என்று பெயர். இலங்கைத் தீவின் வடபகுதியையும் மத்தியப் பகுதியையும் ஒன்று சேர்ந்த அக்கடல் துறையில் யானை இறங்கியது. அனுமார் தூக்கி எரிந்த மலை கடலில் விழுந்தது போல விழுந்தது.









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. யானை மிரண்டது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. யானை எறிந்தது!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. கிள்ளி வளவன் யானை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 15. காலாமுகர்கள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: