BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. மதுராந்தகத் தேவர் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. மதுராந்தகத் தேவர்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. மதுராந்தகத் தேவர் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. மதுராந்தகத் தேவர்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. மதுராந்தகத் தேவர் Icon_minitimeMon May 16, 2011 3:32 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

16. மதுராந்தகத் தேவர்



இந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர் அரண்மனைக்குச் சென்றபோது பார்த்தோம். அப்பொழுதெல்லாம் அந்தப் பிரசித்திபெற்ற இளவரசரை, - பின்னால் பரகேசரி உத்தம சோழர் என்னும் பட்டப் பெயருடன் தஞ்சைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகிறவரை - நல்லமுறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்து வைக்க விரும்புகிறோம்.

மதுராந்தகரைப்பற்றிச் சொல்லுவதற்கு முன்னால் அவருடைய பரம்பரையைக் குறித்தும் வாசகர்களுக்குச் சிறிது ஞாபகப்படுத்த வேண்டும். சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் நீண்ட காலம் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள்.

தமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை. ஆயினும் சில பாடல்களைச் சேகரித்தார். தேவாரப் பதிகங்களின் முறையில் தாமும் சில பாடல்களைப் பாடினார். அவற்றில் சிதம்பரத்தைப் பற்றி அவர் பாடிய பதிகம் திருவிசைப்பா என்ற தொகுதியில் இன்றும் வழங்கி வருகிறது.

கண்டராதித்தர் தமது அரும் பெரும் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தது பற்றித் தாம் பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:-

"வெங்கோல் வேந்தன் தென்னன்நாடும்
ஈழமும் கொண்ட திறல்
செங்கோற்சோழன் கோழிவேந்தன்
செம்பியன் பொன்னணிந்த
அங்கோல்வளையார் பாடியாடும்
மணி தில்லையம்பலத்துள்
எங்கோல் ஈசன் எம்பிறையை என்று
கொல் எய்துவதே!"

என்ற பாடலில் தம் தந்தை பாண்டிய நாடும், ஈழமும் வென்றவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பதிகத்தின் கடைசிப் பாடலில் தமது பெயரை அவர் குறித்திருப்பதுடன், தம்முடைய காலத்தில் சோழரின் தலைநகரம் தஞ்சையானதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

"சீரான்மல்கு தில்லைச் செம்பொன்னம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொல் கண்டராதித்தன் அருந் தமிழ் மாலைவல்லார்
பேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே!"

கண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் சுருங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் மகளை மணந்து கொண்டார். அவர்களுடைய புதல்வன் மதுராந்தகன், கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியவன் என்று முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் என்றும் சொல்லி விட்டார்.

தமது குமாரன் மதுராந்தகனைச் சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. செம்பியன் மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி வளர்த்து வந்தாள்.

ஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள். சிறிய தீப்பொறி அதிவிரைவில் பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெருந்தர அதிகாரிகளும் மதுராந்தகனை ஆதரித்துச் சதிசெய்ய முற்பட்டதையும் பார்த்தோம். மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் எண்ணத் தொடங்கினான். அதிலும் இப்போது சுந்தர சோழர் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி இராஜ்யத்தைக் கவனிக்க முடியாத நிலைமையில் இருந்தார் அல்லவா? ஆதலின் ஏன் தான் உடனடியாகத் தஞ்சாவூர் சிங்காசனமேறி இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது?

இவ்விதம் மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது பழுவேட்டரையர்களின் பொறுப்பாயிருந்தது. அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் சிறிதளவு மாறிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் பிறகு இளவரசர் மதுராந்தகருக்குத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்லவேண்டும். அல்லது அவருடைய மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்?

ஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக விரும்பவில்லை.

இப்போது, செம்பியன் மாதேவியே தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார்





Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. மதுராந்தகத் தேவர்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 71. 'திருவயிறு உதித்த தேவர்'
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பரிசோதனை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. சக்கரவர்த்தியின் கோபம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: