BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  17. திருநாரையூர் நம்பி Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. திருநாரையூர் நம்பி

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  17. திருநாரையூர் நம்பி Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. திருநாரையூர் நம்பி   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  17. திருநாரையூர் நம்பி Icon_minitimeMon May 16, 2011 3:35 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

17. திருநாரையூர் நம்பி




மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். ஆரியப் படை வீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு முதலான, வீரர்கள் வாழும் பகுதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. பிறகு கடை வீதிகள், குடிமக்கள் வாழும் பகுதிகள், ஆலயங்கள், ஆலயங்களைச் சூழ்ந்திருந்த சந்நிதித் தெருக்கள் முதலியவற்றின் வழியாகச் சென்றது. ஆங்காங்கு ஒரு சிலர் வீட்டு வாசல்களில் நின்று பார்த்தார்கள். ஆனால் மக்களிடையே எவ்வித உற்சாகமும் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். முதன்முறை அவன் இந்நகருக்குள் வந்திருந்த போது நகரம் கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இப்போது வீதிகள் ஜன சூனியமாயிருந்தன. பழையாறை பாழடைந்த நகரமோ என்று சொல்லும்படி இருந்தது. மதுராந்தகத் தேவர் மீது பழையாறை மக்கள் அவ்வளவாக விசுவாசம் கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. வந்தியத்தேவனுக்கு இது ஒரு விதத்தில் சௌகரியமாயிருந்தது. தன் முகம் தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப் பார்க்கும்படி நேரவும் அதனால் தொல்லை ஏற்படவும் இடமில்லையல்லவா?

இவர்கள் சோழ மன்னர்களின் புராதன அரண்மனை வீதியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு பக்கமிருந்து பெரியதோர் ஊர்வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். அந்த ஊர்வலத்தின் மத்தியில் திறந்த பல்லக்கு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் இருந்தவர் யாரென்பது நன்கு தெரியவில்லையாயினும் யாரோ சிவனடியார் என்றும் இளம் பிராயத்தினர் என்றும் தோன்றியது. சிவிகைக்கு முன்னும் பின்னும் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தது. கையில் தாளங்களை வைத்து இனிய ஜங்கார ஓசையை எழுப்பிக் கொண்டு சிலர் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் பாடிக்கொண்டு வந்தார்கள்.

இடையிடையே "திருச்சிற்றம்பலம்" "ஹரஹரமகாதேவா!" என்ற கோஷங்களுடன் "திருநாரையூர் நம்பி வாழ்க!" "பொல்லாப் பிள்ளையாரின் அருட்செல்வர் வாழ்க!" என்ற கோஷங்களும் எழுந்து வானை அளாவின.

மதுராந்தகர் அந்த ஊர்வலத்தை அசூயை கொண்ட கண்களினாலேயே பார்த்தார். பக்கத்திலிருந்து வீரனைப் பார்த்து ஏதோ கேட்டார். "ஆம்; பல்லக்கிலே வருகிறவர்தான் திருநாரையூர் நம்பி!" என்று அவன் மறுமொழி கூறினான்.

"இருந்தாலும் என்ன தடபுடல்! இந்த ஊரில் நம்மை யாரும் கேட்பாரைக் காணோம்! இந்த நம்பியைச் சூழ்ந்து கொண்டு ஜனங்கள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே?" என்றார் மதுராந்தகத் தேவர்.

அந்த ஊர்வலம் இவர்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தூரத்திலேயே சென்றது. ஆயினும் பல்லக்கின் அருகில் வந்தவர்களில் ஒருவர், முன்னொரு சமயம் கொள்ளிட நதியைப் படகிலே தாண்டியபோது ஆழ்வார்க்கடியானோடு சண்டையிட்ட வீரசைவர் என்று வந்தியத்தேவனுக்குத் தோன்றியது.

மதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் அரண்மனை வீதியை அடைந்து, செம்பியன் மாதேவியின் மாளிகையை அடைந்தார்கள். அரண்மனை வாசலிலேயே பெரிய பிராட்டி நின்று கொண்டிருந்தார். யாரையோ வரவேற்பதற்கு ஆயத்தமாக அவர் காத்திருந்ததாய்த் தோன்றியது. மதுராந்தகர் ரதத்திலிருந்து இறங்கி அன்னையின் அருகில் சென்று வணங்கினார். வணங்கிய மதுராந்தகரை உச்சி முகந்து அன்னை ஆசி கூறினார். "மகனே! நல்ல தருணத்தில் வந்து விட்டாய்! திருநாரையூர் நம்பி வந்து கொண்டிருக்கிறார். அவசியமானால் சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விரைவில் சபாமண்டபத்துக்கு வந்து சேர்!" என்று கூறினார்.

மதுராந்தகரின் முகம் பொலிவு இழந்ததை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். பாவம்! தம்மை வரவேற்பதற்காகவே பெரிய பிராட்டி அரண்மனை வாசலில் காத்திருந்ததாக மதுராந்தகர் எண்ணியிருந்தார் போலும். என்ன ஏமாற்றம்? பல்லக்கிலே பின்னால் ஊர்வலமாக வரும் சிவனடியாரை வரவேற்பதற்குத்தான் அவர் காத்திருந்தார் என்று தெரிந்ததும் மதுராந்தகருக்கு, நாளைக்குச் சோழ சிம்மாசனத்தில் ஏறலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு, - மிக்க ஏமாற்றமாயிருப்பது இயல்புதானே?

அரண்மனையில் மதுராந்தகருக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்கு எல்லாம் சென்றார்கள். மதுராந்தகர் உடை மாற்றுதல் முதலிய காரியங்களைச் சாவகாசமாகவே செய்து கொண்டிருந்தார். சபாமண்டபத்துக்குப் போக அவ்வளவாக ஆர்வம் கொண்டிருந்ததாய்த் தெரியவில்லை. அன்னையிடமிருந்து ஆள் மேல் ஆள் வந்து கொண்டிருந்தனர். கடைசியாக மதுராந்தகர் புறப்பட்டார். புறப்பட்டபோது, "அந்த நிமித்தக்காரன் எங்கே?" என்று வினவினார். அவருடன் சபாமண்டபத்துக்குப் போகத் துடிதுடித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், "இதோ ஆயத்தமாயிருக்கிறேன்" என்றான். அவனையும் இன்னும் சிலரையும் அழைத்துக்கொண்டு மதுராந்தகர் சபாமண்டபம் போய்ச் சேர்ந்தார்.

மண்டபத்தில் ஏற்கனவே சபை கூடியிருந்தது. ஒரு பக்கத்தில் செம்பியன் மாதேவியும், குந்தவைப் பிராட்டியும், மற்றும் சில அரண்மனைப் பெண்களும் வீற்றிருந்தார்கள். சபையில் நடுநாயகமாகப் போட்டிருந்த பீடத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவர் இளம் பிராயத்தவர். விபூதி ருத்ராட்சதாரி, அவருடைய திருமுகம் களையுடன் பொலிந்தது. அவர் எதிரில் ஓலைச் சுவடிகள் சில கிடந்தன. கையிலும் ஓர் ஓலைச் சுவடியை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் விபூதி ருத்ராட்சதாரியான பெரியவர் ஒருவர் பரவசமாக நின்றார். இன்னும் சபாமண்டபத்தில் ஜனங்கள் நிறைந்திருந்தார்கள். இளைஞர் பல்லக்கில் வந்தவர்தான் என்பதையும், பக்கத்திலே நின்றவர் முன்னொரு தடவை தான் கொள்ளிடத்துப் படகில் பார்த்தவர் என்பதையும் வந்தியத்தேவன் கண்டு கொண்டான். அவனுடைய கண்கள் சபா மண்டபத்தில் அங்குமிங்கும் சுற்றிச் சுழன்றாலும், கடைசியில் பெரிய பிராட்டிக்கு அருகில் வீற்றிருந்த குந்தவையின் திருமுகத்திலேயே வந்து நின்றன. குந்தவை தேவியின் கண்களோ முதல் முறை அவனைப் பார்த்ததும் வியப்புக்கு அறிகுறியைக் காட்டின. பிறகு அவன் பக்கம் இளவரசியின் கண்கள் திரும்பியதாகவே தெரியவில்லை. தன்னை ஒரு வேளை தெரிந்து கொள்ளவில்லையோ என்று கூட அவனுக்கு ஐயம் உண்டாயிற்று.

மதுராந்தகர் சபா மண்டபத்தில் பிரவேசித்ததும் பெண்மணிகளை தவிர மற்றவர்கள் எழுந்து மரியாதை செய்தார்கள். மதுராந்தகர் தம் பீடத்தில் அமர்ந்ததும் மற்றவர்களும் அவரவர்களுடைய இடத்தில் உட்கார்ந்தார்கள். செம்பியன் மாதேவி மதுராந்தகரைப் பார்த்து, "குமாரா! இந்த இளம்நம்பி திருநாரையூரைச் சேர்ந்தவர். அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் பூரண அருளைப் பெற்றவர். இதுவரையில் யாருக்கும் கிடைக்காத தேவாரப் பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. முன்னொரு காலத்தில் நமது சோழ குலத்தில் உதித்த மங்கையர்க்கரசியர் பாண்டிமா நாட்டின் மகாராணியாக விளங்கினார். அவருடைய அழைப்புக்கிணங்கி ஆளுடைய பிள்ளையார் ஞானசம்பந்தர் மதுரைமா நகருக்குச் சென்றார். அங்கே சமணர்களை வாதப் போரில் வென்றார். அச்சமயம் மதுரைமாநகரில் சம்பந்த சுவாமி பாடிய பதிகங்கள் சில இவருக்குக் கிடைத்திருக்கின்றன. அந்தப் பதிகங்களில் நமது சோழகுலத்து மாதரசியைப் பற்றியும் சம்பந்தர் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களைக் கேட்கும் போது எனக்கு உடல் பூரித்துப் பரவசமாகிறது. உன் தந்தை இருந்து கேட்டிருந்தால் எவ்வளவோ மகிழ்ச்சியடைந்திருப்பார், நீயாவது கேள்!" என்று சொன்னார்.

மதுராந்தகர், "கேட்கிறேன், தாயே! பதிகத்தை ஆரம்பிக்கட்டும்" என்றார். ஆனால் அவருடைய முகம் அவ்வளவாக மலர்ந்திருக்கவில்லை. அவருடைய உள்ளம் வேறு எங்கேயோ இருந்தது. திருநீறு, ருத்ராட்சம் அணிந்த சாதாரணச் சிறுவன் ஒருவனைப் பெரியதொரு பீடத்தில் நடுநாயகமாக அமர்த்தித் தடபுடல் செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்னையைத் திருப்தி செய்வதற்காகப் பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார்.

பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற திருநாரையூர் நம்பியாண்டர் நம்பி தம் கையிலிருந்த ஓலைச் சுவடியிருந்து படிக்கத் தொடங்கினார். ஞானசம்பந்தர் மதுரை மாநகரைப் பார்த்ததும், "சிவபக்திச் செல்வத்திற் சிறந்த மங்கையர்க்கரசியார் வாழும் பதி அல்லவா இது?" என்று வியந்து பாடிய பதிகங்களை முதலில் அவர் பாடினார்.

"மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை
வரிவளைக் கைம் மடமானிப்
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொரும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயர்க்கண்ணி தண்ணொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே!"

"மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும்
மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி
பாங்கினாற் பணி செய்து பரவ
விண்ணுளோர் இருவர் கீழொடுமேலும்
அளப்பரிதாம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற
ஆலவாயாவதும் இதுவே!"

என்னும் பாடல்களைக் கேட்டபோது செம்பியன் மாதேவியின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. அத்தகைய மங்கையர்க்கரசியைப் பெற்ற குலத்தில் தாமும் வாழ்க்கைப்பட்டு, மகாராணியாக வாழ்ந்திருக்கக் கொடுத்து வைத்திருந்த பூர்வ ஜன்ம பாக்கியத்தை எண்ணி எண்ணி மனம் பூரித்து மகிழ்ந்தார்.

மதுராந்தகருக்கோ மேற்கூறிய பாடல்களில் 'மண்ணெலாம் நிகழ மன்னனால் மன்னும் மணி முடிச் சோழன்' என்னும் வரி மட்டுமே மனத்தில் பதிந்தது. அத்தகையப் புராதனப் பெருமை வாய்ந்த சோழர் குலத்து மணிமகுடம் தன் சிரசை அலங்கரிக்க வேண்டியதிருக்க, இன்னொருவர் அதை அபகரித்துக் கொண்டிருப்பதை நினைத்தபோது அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று.

சம்பந்தர் மங்கையர்க்கரசியாரைப் போய்ப் பார்க்கிறார். பாண்டிமாதேவி அந்தப் பாலகரைப் பார்த்து, "ஐயோ! இந்த இளம் பிள்ளை எங்கே? பிரம்ம ராட்சதர்கள் போன்ற சமணர்கள் எங்கே? இந்தப் பிள்ளை அவர்களுடன் எப்படி வாதப்போரிட்டு வெல்ல முடியும்?" என்று கவலையுறுகிறார். அதையறிந்த சம்பந்தர் பாண்டிமாதேவியைப் பார்த்துச் சொல்லுகிறார்.

"மானினேர் விழி மாதராய் வழுதிக்கு
மாபெருந்தேவி கேள்!
பானல்வாயொரு பாலன் ஈங்கிவன்
என்று நீ பரிவெய் திடேல்!
ஆனை மாமலை யாதியாய
இடங்களிற் பல அல்லல் சேர்
ஈனர்கட் கெளியேன் அலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே!"

என்ற பதிகத்தைத் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய போது செம்பியன் மாதேவி தம்மையே மங்கையர்க்கரசியாகவும், பதிகம் பாடிய நம்பியையே ஞான சம்பந்தராகவும் பாவனை செய்து கொண்டு இந்த உலக நினைவையே மறந்து மனம் பூரித்தார்.

மதுராந்தகத் தேவரோ, "ஆம் நான் இளம் பிராயத்துச் சிறுபிள்ளைதான்! ஆனால் திருக்கோவலூர் மலையமானுக்கும், கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரிக்கும், அவர்களுடைய ஆதரவைப் பெற்ற சுந்தர சோழரின் புதல்வர்களுக்கும் அஞ்சி விட மாட்டேன். சம்பந்தருக்கு ஆலவாயரன் அருள் இருந்தது போல் எனக்கும் பழுவேட்டரையர் உதவி இருந்தது!" என்று எண்ணிக் கொண்டார்.

வந்தியத்தேவனுடைய செவிகளில் பாடல் ஒன்றும் புகவேயில்லை. அவனுடைய கண்களும் கருத்தும் குந்தவை தேவியிடமே முழுவதும் ஈடுபட்டிருந்தன. இளைய பிராட்டி ஒருகால் தன்னைத் தெரிந்து கொள்ளவேயில்லையா, தெரிந்து கொண்டும் பாராமுகமா, அல்லது தன்னிடம் ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றி விட்டு வந்து உடனே சொல்லவில்லை என்ற கோபமா? என்று இப்படி அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அத்துடன் இளையபிராட்டியைத் தனிமையில் எப்படிச் சந்திப்பது, சந்தித்துச் செய்தியை எப்படிச் சொல்லுவது என்றும் அவன் யோசனை செய்து கொண்டிருந்தான்.

பாடல்கள் முடிவடைந்ததும் செம்பியன் மாதேவி நம்பியாண்டாருடன் வந்திருந்த பெரியவரைப் பார்த்து, "ஐயா இந்த இளம்பிள்ளையைப் பார்த்தால் ஞானசம்பந்தரே மீண்டும் வந்து அவதரித்திருப்பது போலத் தோன்றுகிறது. இவரை அழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் ஊர் ஊராகச் செல்லுங்கள். அங்கங்கே கிடைக்கும் தெய்வீகமான தேவாரப் பதிகங்களைச் சேகரித்துக் கொண்டு வாருங்கள். அப்பர் பதிகங்களையும், சம்பந்தர் பதிகங்களையும், சுந்தர மூர்த்தியின் பாடல்களையும் தனித்தனியாகத் தொகுக்க வேண்டும். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் தினந்தோறும் பாடச் செய்ய வேண்டும். இது என் கணவருடைய விருப்பம். அதை என் வாழ்நாளில் நிறைவேற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். நீங்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு வேண்டிய சிவிகைகள், ஆட்கள், பரிவார சாதனங்கள், எல்லாம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியின் அநுமதியைக் கோரி என் குமாரனிடமே செய்தி சொல்லி அனுப்புகிறேன்!" என்றார். அச்சபையில் அப்போது எழுந்த கோலாகலமான கோஷங்கள் மதுராந்தகரின் செவிகளுக்கு நாராசமாயிருந்தன






Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 17. திருநாரையூர் நம்பி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. ஆழ்வார்க்கடியான் நம்பி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 34. அநுராதபுரம்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 11. திடும்பிரவேசம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: