BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  18. நிமித்தக்காரன் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. நிமித்தக்காரன்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  18. நிமித்தக்காரன் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. நிமித்தக்காரன்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  18. நிமித்தக்காரன் Icon_minitimeMon May 16, 2011 3:38 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

18. நிமித்தக்காரன்




நம்பியாண்டார் நம்பியை வரவேற்பதற்காகக் கூடியிருந்த சபை கலையும் சமயத்தில் பெரிய மகாராணி தம் செல்வக் குமாரனிடம், "மகனே! நான் இவர்களை அரண்மனை வாசல் வரையில் சென்று வழியனுப்பி விட்டு வருகிறேன். அதற்குள் நீ உன் இருப்பிடம் சென்று சிரமபரிகாரம் செய்து கொண்டு திரும்பி வா! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!" என்றார்.

"ஆகட்டும், தாயே" என்று சொல்லிவிட்டு மதுராந்தகர் புறப்பட்டார். அரண்மனையில் அவர் தங்கியிருந்த பகுதிக்குப் போனார். அவருடைய உள்ளத்தில் ஆத்திரமும், அசூயையும் கொழுந்து விட்டு எரிந்தன. யாரோ வழியோடு போகிற ஆண்டிப் பண்டாரத்துக்கு எவ்வளவு தடபுடலான மரியாதைகள்! இராஜ குலத்தின் கௌரவத்துக்கே தம் தாயினால் பங்கம் நேர்ந்துவிடும் போலல்லவா இருக்கிறது! பழுவேட்டரையர்கள் தம் அன்னையைப் பற்றி அடிக்கடி குறை சொல்லுவதில் வியப்பு ஒன்றுமில்லை. உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு யார் வந்தாலும் பெரிய மகாராணிக்குப் போதும்! பதிகம் ஒன்றும், அவன் பாடிக்கொண்டு வந்துவிடவேண்டும்; அல்லது கோயில், குளம், திருப்பணி என்று சொல்லிக் கொண்டு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்து இராஜாங்க பொக்கிஷத்தையே இவர் சூனியமாக்கி விடுவார் போலிருக்கிறது! போதாதற்கு இளவரசி குந்தவை ஒருத்தி எப்போதும் அருகில் இருக்கிறாள். கோவில் திருப்பணி செய்து மிச்சம் ஏதேனும் இருந்தால், அதை மருத்துவச் சாலை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்டு விடுகிறாள். இப்படியெல்லாம் இவர்கள் செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும்? சோழ சிங்காதனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும்?

மறுபடியும் பெரிய மகாராணிக்கு மகனிடம் ஏதோ அந்தரங்கம் பேசவேண்டுமாம்! என்ன அந்தரங்கத்தைச் சொல்லப் போகிறாரோ, தெரியவில்லை! அஷ்டாங்க யோகம், இயம, நியம நிதித்தியாசனம் ஆகியவற்றைக் குறித்து ஒருவேளை பேச ஆரம்பித்து விடுவார். கண்களின் பார்வையை மூக்கு நுனியில் செலுத்திக் குண்டலினியை மேல் நோக்கிக் கொண்டு வருவதினால் அறுபத்து நாலு கலைகளையும் கல்லாமல் கற்கும் முறையைப் பற்றி ஒருவேளை உபதேசிக்க ஆரம்பித்து விடுவார்! அல்லது நடராஜருடைய ஆனந்தக் கூத்தின் உட்பொருளைக் குறித்தும் அவருடைய சடா மகுடம் எதைக் குறிக்கிறது, அவர் அணிந்திருக்கும் பிறை எதைக் குறிக்கிறது என்பவை குறித்தும் சொல்ல ஆரம்பித்துவிடுவார் இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லித்தான் நம்மை உலகம் அரைப்பைத்தியம் என்று பரிகசிக்கும்படியான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார். அம்மாதிரிப் பேச்சுகளுக்கு இனிமேல் இடம் கொடுக்கக்கூடாது. அவர் பேசித்தான் தீருவேன் என்றாலும், நாம் காதிலே வாங்கிக் கொள்ளக்கூடாது...

இருக்கட்டும்! அன்னை மீண்டும் கூப்பிட்டு அனுப்புவதற்குள் அந்த நிமித்தக்காரனிடம் பேசியாக வேண்டும். யாருமே அறிந்திருக்க முடியாத இரண்டு மர்மமான செய்திகளை அவன் எப்படி அறிந்து கொண்டான்? அதை நினைத்துப் பார்த்தால் ஒரே வியப்பாக அல்லவா இருக்கிறது! அதிசயமான சக்தி அவனிடம் ஏதோ இருக்கவேண்டும். சென்று போன நிகழ்ச்சிகளை அறிந்து கூறியது போல் வருங்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் அவனால் கூற முடியுமா? - அவனையே கேட்டுப் பார்த்து விடலாம்.

சபையிலிருந்து தாம் புறப்படும் சமயத்தில் நிமித்தக்காரன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தயங்கித் தயங்கி நிற்பதை மதுராந்தகர் கவனித்தார். அவனைத் தம்முடன் வரும்படி சமிக்ஞையினால் கட்டளையிட்டார். வந்தியத்தேவனுடைய கண்கள் இளவரசியின் முகத்தைப் பார்க்கவும், நயன பாஷையினால் செய்தி உணர்த்தவும் ஆர்வம் கொண்டிருந்தன. ஆனால், இளவரசி மீண்டும் அவனைத் திரும்பிக்கூடப் பாராமல் பெரிய மகாராணியுடன் போய்விட்டாள்.

இது என்ன? தன்னை இளவரசி அடியோடு மறந்து விட்டாரா? அப்படித்தான் இருக்க வேண்டும். எத்தனையோ ஆயிரமாயிரம் பேரை அவர் தினம் தினம் பார்த்து வருகிறார். ஒரு தடவை - இரண்டு தடவை பார்த்த தன்னுடைய முகம் அவர் மனத்தில் எவ்விதம் நினைவிருக்கும்? நான் பைத்தியக்காரன்; இரவும் பகலும் எத்தனை எத்தனையோ விபரீத சம்பவங்கள், அபாயங்களிடையிலும் இளவரசியின் திருமுகத்தையே நினைத்துக் கொண்டிருந்தேன். இளவரசி எதற்காக என்னை நினைத்திருக்க வேண்டும்? தேனீ தேனை விரும்பி மலரைச் சுற்றிச் சுற்றி வருகிறது. மலருக்குத் தேனீயைப் பற்றி என்ன கவலை? மலர் சூரியனைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருக்கிறது. குந்தவையின் முகமலரை விரியச்செய்யும் சூரியதேவன் யாரோ?

ஆயினும் தன்னை எதற்காக அனுப்பினாரோ, அந்தச் செய்தியைத் தெரிந்து கொள்வதிலேகூட அவருக்கு ஆர்வம் இல்லாமலா போய்விடும்? தனக்கு முன்னாலே யாராவது வந்து சொல்லியிருப்பார்களோ? அது எப்படி முடியும்? இல்லை, இல்லை! அவர் ஏதோ கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்பதையும் அவர் முகம் நன்றாகக் காட்டியது. தன்னை அடையாளம் கண்டு கொள்ளாததுதான் காரணமாயிருக்க வேண்டும். அந்தரங்க ஓலை எடுத்துக்கொண்டு இலங்கை சென்ற தூதன், மதுராந்தகத் தேவரின் பரிவாரங்களில் ஒருவனாகச் சபைக்கு வந்தால் எப்படி அடையாளம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ள முடியும்? ஆகா! இளவரசியைச் சந்தித்து அந்நகரில் நுழைவதற்குத் தான் கையாண்ட யுத்திகளைப்பற்றிச் சொல்லும் போது அவர் எவ்வளவு ஆச்சரியம் அடைவார்? ஆனால் சந்திப்பது எப்படி? செய்தி சொல்லி அனுப்புவது எப்படி?...

"நிமித்தக்காரா! என்ன யோசனையில் ஆழ்ந்திருக்கிறாய்?" என்ற மதுராந்தகரின் குரலைக் கேட்டு வந்தியத்தேவன் திடுக்கிட்டான். அதற்குள்ளே அவர்கள் அரண்மனையில் மதுராந்தகத் தேவருடைய தனி அறைக்கு வந்திருந்தார்கள்.

அந்த நாளில் சோதிடர்கள், ஆரூடக்காரர்கள், ரேகை பார்த்துக் குறி சொல்வோர், நிமித்தக்காரர் என்று வருங்காலத்தைப் பற்றிச் சொல்வோர், பலர் இருந்தனர். சோதிடர்கள் ஜாதகம் பார்த்ததும், கிரகங்கள் நட்சத்திரங்களின் சஞ்சாரத்தைக் கணித்தும், ஜோதிடம் சொல்வார்கள். ஆரூடக்காரர்கள் தங்களிடம் வருவோர் பேசும் சொற்களைக் கொண்டும், ஆரூடம் கேட்கும் வேளையைக் கொண்டும், நூற்றெட்டில் ஓர் இலக்கம் சொல்லும்படி கேட்டும் சுபா சுபங்களைப் பற்றிப் பொதுப்படையாகச் சொல்லுவார்கள். ரேகை சாஸ்திரமோ அன்றைக்கு இருந்தபடியே இன்றைக்கும் இருந்து வருகிறது.

நிமித்தக்காரர்கள் என்பவர்கள் ஞான திருஷ்டி படைத்த முனிபுங்கவர்களைப் போல் அகக் கண்ணினால் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள். அவர்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொண்டு, அகக் கண்ணின் உதவியினால் முக்கால நிகழ்ச்சிகளையும் நேரில் பார்ப்பது போல் பார்த்து உரைப்பார்கள். சிலர் புறக் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்து சொல்வார்கள்; இன்னும் சிலர் தீபப்பிழம்பை உற்று நோக்கிய வண்ணம் மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு, நடந்துபோன, நடக்கப்போகிற நிகழ்ச்சிகளை அந்தத் தீபப் பிழம்பில் பார்த்துச் சொல்வார்கள். இன்னும் சிலருக்கு எதிர்ப்பட்டவர்களின் முகத்தைப் பார்க்கும் போதே அவர்களுடைய சென்றகால வரலாறும், வருங்கால வரலாறும் மனத்தில் தோன்றிவிடும் இத்தகைய அதிசய சக்திகள் படைத்தவர்களைத் தவிர காக்கை இடம் போயிற்றா வலம் போயிற்றா, என்பது முதலான வெளி நிகழ்ச்சிகளைக் கொண்டு சகுன பலன்களை உரைக்கும் சாதாரண நிமித்தக்காரர்களும் உண்டு.

வந்தியத்தேவன் தன்னை "நிமித்தக்காரா!" என்று மதுராந்தகர் அழைத்ததும் திடுக்கிட்டான். இளவரசர் மேலும் தன்னை என்னென்ன கேள்விகள் கேட்பாரோ தெரியவில்லை. அவற்றுக்கெல்லாம் சாமர்த்தியமாகத் தக்க விடை கூறிச் சமாளித்துக் கொள்ளவேண்டும். கடவுளே! இங்கிருந்து, இவரிடமிருந்து தப்பித்துச் செல்வது எப்படி? இளவரசியைத் தனியாகச் சந்தித்துப் பேசுவது எப்படி?...

"வேறு யோசனை ஒன்றுமில்லை, ஐயா! நான் நிமித்தக்காரானாயிருப்பதைக் காட்டிலும் இப்போது சபையில் பார்த்த பிள்ளையைப்போல் நாலு பதிகங்களைக் கற்றிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! எனக்கும் எவ்வளவு உபசார மரியாதையெல்லாம் நடக்கும் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்!" என்றான்.

"யார் வேண்டாம் என்றார்கள்! நீயும் தேவாரத் திருப்பதிகம் கற்றுக் கொண்டு பாடுவது தானே!"

"இன்னாருக்கு இன்னபடி என்று எழுதியிருப்பது போலத் தானே நடக்கும் இளவரசே! வீண் ஆசைப்பட்டு என்ன பயன்?"

"பதிகம் பாடிய அந்தப் பிள்ளையைப்பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது? அவனுடைய யோகம்..."

"மிக உயர்ந்த யோகம். சிவ யோகமும், இராஜயோகமும் கலந்தது. மன்னர்களும், மகாராணிகளும் அந்தப் பிள்ளைக்கு மரியாதை செய்வார்கள். மகான்களுடைய பெயருடனே அவருடைய பெயரும் சேர்ந்து இப்பூவுலகத்தில் நெடுங்காலம் விளங்கும்".

வல்லவரையன் ஏதோ குருட்டாம் போக்காக இவ்விதம் கூறினான். ஆனால் மதுராந்தகருடைய மனத்தில் அவனுடைய வார்த்தைகள் பெருங்கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன.

"என்னுடைய யோகம் எப்படி என்று சொல், பார்க்கலாம்!"

"அவனுடைய யோகத்தைப் போலவே தங்கள் யோகமும் சிவயோகமும் இராஜ யோகமும் கலந்தது. ஆனால் இன்னும் மேன்மையானது!"

"அப்பனே! கொஞ்சம் விவரமாகச் சொல், பார்க்கலாம்."

வல்லவரையன் என்ன சொல்வது என்று யோசிக்க அவகாசம் வேண்டினான். ஆகையால், "இப்படியெல்லாம் அவசரப்பட்டால் முடியுமா? விவரமாகச் சொல்ல வேண்டுமானால், தீபம் ஏற்றி, வைத்து அகிற் புகை போடச் சொல்லவேணும், தாங்களும் தீபத்துக்குப் பின்னால் உட்கார்ந்து கொள்ளவேணும் அப்போது வருங்கால நிகழ்ச்சிகளை நடக்கப் போகிறபடியே பார்த்துச் சொல்வேன்."

மதுராந்தகர் பரபரப்பு அடைந்து தீபம் ஏற்றி வைக்கும்படியும் அகிற் புகை போடும்படியும் கட்டளையிட்டார். தீபத்துக்கு முன்னாலும் பின்னாலும் இரண்டு மணைகளும் போடப்பட்டன. மதுராந்தகர் ஒரு மணையில் உட்கார்ந்த பின்னர் அவருக்கெதிரே வந்தியத்தேவனும் உட்கார்ந்தான்.

கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பிறகு அவன் உடம்பை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டு ஆவேசம் வந்தவனைப் போல் நடித்தான். வெறியாட்டக்காரனைப் போல் அவன் உடல் நடுங்கிற்று.

பின்னர், கண்களை அகலத் திறந்தான். எதிரில் இருந்த தீபத்தின் பிழம்பை உற்றுப் பார்க்கலானான். சற்று நேரம் பார்த்துவிட்டு மதுராந்தகத் தேவரை நோக்கி, "ஐயா! தங்களைப்பற்றி அலட்சியமாக நான் ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவேண்டும். தங்களுடைய யோகம் சாதாரண யோகம் அல்ல. அங்கே சபையில் உட்கார்ந்து பாட்டுப் படித்த பிள்ளையின் யோகத்துக்கும், தங்கள் யோகத்துக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை. அந்தப் பிள்ளையின் யோகம் அரசர்களின் ஆதரவினால் ஏற்படும் ராஜயோகம்; தங்களுடைய யோகத்தைப் பற்றி இந்தத் தீபத்திலே நான் காண்பது - ஆகா என்னையே பிரமிக்கச் செய்கிறது!" என்றான்.

"அப்படி என்ன காண்கிறாய்? சொல்! சொல்!" என்றார் மதுராந்தகர்.

"ஆகா! எப்படிச் சொல்வேன்? சொல்வதற்கு வார்த்தைகள் எனக்குக் கிடைக்கவில்லை! கண்ணுக்கெட்டிய தூரம் மணிமுடி தரித்த மன்னர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள். மந்திரிகளும், சாமந்தர்களும், அதிகாரிகளும் வரிசை வரிசையாக நிற்கிறார்கள். அவர்களுக்கு அப்பால், முடிவில்லாத கடலைப்போல், சேனா வீரர்கள் அலைமோதிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்த வேல்களும், வாள்களும் மார்பில் தரித்த கவசங்களும் ஒளி வீசிக் கண்ணைப் பறிக்கின்றன. தூரத்திலுள்ள மாட மாளிகைகளின் மேல் ஜனங்கள் நின்று ஆர்ப்பரிக்கிறார்கள். கோட்டை கொத்தளங்கள் மீதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாய் நிற்கின்றனர். அவர்கள்...அவர்கள்...ஏதேதோ கோஷம் செய்கிறார்கள்!"

"சொல், சொல்! மக்கள் என்ன கோஷமிடுகிறார்கள்?"

"இளவரசே! பல்லாயிரம் மக்களின் கோஷமாகையால் நன்றாகக் கேட்கவில்லை. 'சோழக் குலத் தோன்றல் வாழ்க! திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க! மன்னாதி மன்னர் வாழ்க!' என்றெல்லாம் கோஷிப்பது போலத் தோன்றுகிறது."

"அப்புறம் என்ன?"

"மக்கள் திரண்டு கூட்டம் கூட்டமாக முன்னேறி வருகிறார்கள். வேலும் வாளும் பிடித்த வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். சிறிது நேரம் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது."

"சரி, சரி! கூட்டம் எதற்காகக் கூடியிருக்கிறது? அதைச் சொல்!"

"அதைத்தான் நானும் இப்போது பார்க்கப் போகிறேன். கூட்டத்தின் மத்தியில் புலிக்கொடி வானளாவிப் பறக்கிறது. அதற்குக் கீழே மீனக்கொடி, விற்கொடி, பனைக்கொடி சிங்கக்கொடி, ரிஷபக்கொடி, பன்றிக்கொடி ஆகியவை தாழ்வாகப் பறக்கின்றன. மயன் மாளிகையைப் போன்ற சபாமண்டபத்தின் நடுவிலே நவரத்தின கசிதமான தங்கச் சிங்காதனம் போட்டிருக்கிறது. அருகில் ஒரு பீடத்தில் கோடி சூரியப் பிரகாசமான வைர வைடூரியங்கள் பதித்த மணிமகுடம் ஒன்று வைத்திருக்கிறது. சிங்காதனத்துக்கு மேலே தண் மதியின் வெண்ணிலாவையொத்த குளிர்ச்சி பொருந்திய வெண் கொற்றக்குடை விரிந்து கவிந்திருக்கின்றன. தேவ கன்னியரைப் போன்ற பெண்கள் கைகளில் வெண்சாமரங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். பற்பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வந்த தண்ணீருடன் பொற்குடங்கள் வரிசையாக வைத்திருக்கின்றன. இளவரசே! பட்டாபிஷேகத்திற்கு எல்லாம் ஆயத்தமாகி விட்டன!..."

"யாருக்குப் பட்டாபிஷேகம்? அதைச் சொல், அப்பனே" என்றார் மதுராந்தகர்.

"இதோ அதுவும் தெரிந்துவிடும். சபாமண்டபத்தின் பிரதான வாசற்கதவு திறக்கிறது. பலவகைக் கட்டியம் கூறிக் கொண்டு சிலர் உள்ளே வருகிறார்கள். வீரகம்பீரத் தோற்றமுடைய கிழவர் ஒருவர் வருகிறார். அவருடைய சகோதரர் போலக் காணப்படும் இன்னொருவர் வருகிறார். அவர்களுக்குப் பின்னால் மன்மதனை யொத்த சுந்தர ரூபமுடைய இராஜ குமாரர் ஒருவர் இதோ வருகிறார்.

"அது யார்? யார்?"

வந்தியத்தேவன் மதுராந்தகரை மறுமுறை உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் தீபத்தை நோக்கினான்.

"ஐயா! தங்களைப் போலவே அவர் இருக்கிறார்! தங்களைப் போல என்ன? தாங்களே தான்! முன்னால் வந்த இருவரும் தங்களைச் சிம்மாசனத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். 'ஜய விஜயீபவா!' என்ற கோஷம் சமுத்திர கோஷத்தைப் போல் எழுகிறது. தங்கள் மீது நூறு நூறு கரங்கள் மலர்களையும், மணிகளையும், மஞ்சள் நிறத் தானியங்களையும் தூவுகின்றன. இதோ, தாங்கள் சிங்காதனத்தை நெருங்கி விட்டீர்கள்! அடாடா! இது என்ன? சகுனத் தடை போல் யார் குறுக்கே வருகிறது? தலைவிரி கோலமாக ஒரு ஸ்திரீ குறுக்கே வந்து, தங்களுக்கும் சிம்மாசனத்துக்கும் நடுவில் நிற்கிறாள். 'வேண்டாம்!' என்று தங்களைத் தடை செய்கிறாள் தாங்கள் அந்த ஸ்திரீயைத் தள்ளுகிறீர்கள்!... அடாடா! இது என்ன, நல்ல சமயத்தில் இப்படிப் புகை வந்து மூடிக்கொள்கிறது? ஒன்றும் தெரியவில்லையே?...."

"பார்! பார்! நன்றாக உற்றுப் பார்! அப்புறம் என்ன நடக்கிறது?"

"இளவரசே! மன்னிக்க வேண்டும்! பெரும் புகைப் படலம் வந்து எல்லாவற்றையும் மறைத்து விட்டது!..."

"பார், அப்பனே பார்! அந்த ஸ்திரீ யார் என்றாவது பார்! அவளை நீ முன்னம் பார்த்திருக்கிறாயா?"

"இளவரசே! அந்த மாதரசியும் மறைந்துவிட்டாள், தாங்களும் மறைந்து விட்டீர்கள். சபை, சிம்மாசனம், கிரீடம், எல்லாம் மறைந்து விட்டன. இந்த அரண்மனையில் மந்திர சக்தி உள்ளவர்கள் யாரோ இருக்கவேண்டும்! வேண்டுமென்றே மந்திரம் போட்டுத் தடுத்துவிட்டதாகக் காண்கிறது. ஐயோ! என் முகமெல்லாம் பற்றி எரிவது போல் தகிக்கிறது!..."

இவ்விதம் கூறி வந்தியத்தேவன் தன் கரங்களினால் முகத்தை மூடிக்கொண்டான். அப்படியே சிறிது நேரம் இருந்துவிட்டு கண்களைத் திறந்து பார்த்தான்.

மதுராந்தகத் தேவருடைய உடம்பின் நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டிருந்தன. அவருடைய முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. கண்கள், எரியும் தணல்களைப் போலப் பிரகாசித்தன. வந்தியத்தேவனுக்குச் சிறிது பயமாகவே போய்விட்டது. இளவரசருடைய ஆசை வெறியை அளவுக்கு அதிகமாகக் கிளப்பிவிட்டு விட்டோ மோ என்று பயந்து போனான்.

"மறுபடியும் பார்! நன்றாகப் பார்த்துச் சொல்!" என்றார் மதுராந்தகர்.

"இளவரசே! அதில் பயனில்லை! ஒரு தடவை மறைந்த காட்சி மறுபடியும் உடனே வராது. சில நாள் கழிந்த பிறகுதான் வரும். தீபத்தைப் பார்த்து, வேண்டுமானால் வேறு ஏதாவது காட்சி தெரிந்தால் சொல்லுகிறேன்."

"சொல், சொல்! என்ன காட்சி புலப்பட்டாலும் சொல்!"

"ஜனங்கள் ஒரே குழப்பமாயிருக்கிறார்கள். துக்கமாயும், கோபமாயும் இருக்கிறார்கள். தூதன் ஒருவன் வந்து அவர்களிடம் ஏதோ செய்தி சொல்கிறான். இராஜ குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் கடலில் முழுகிவிட்டதாகச் சொல்லுகிறான்."

"ஐயோ! பாவம்! அந்தத் தூதனை ஜனங்கள் அடிக்கப் போகிறார்கள். இளவரசே! அம்மாதிரி ஏதாவது நேர்ந்தால் தாங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் ஜனங்கள் மத்தியில் செல்ல வேண்டாம்! சென்றாலும் ஜாக்கிரதையாகச் செல்லுங்கள்!"

"கடலில் முழுகியது யார் என்று பெயர் சொல்லவில்லையா?"

"கூச்சலிலும் குழப்பத்திலும் பெயர் காதில் விழவில்லை. அந்தக் காட்சி மறைந்துவிட்டது."

"இப்போது, கழுத்தில் மண்டை ஓடு மாலைகளை அணிந்த ஒரு பயங்கரமான கூட்டம் என் கண்முன் தெரிகிறது. காபாலிகர்கள் காலாமுகர்கள் போல் தோன்றுகிறார்கள். அவர்களில் ஒருவன், கையில் ஒரு பயங்கரமான அரிவாளை வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரில் பலி பீடம் ஒன்று இருக்கிறது. இளவரசே! இங்கேயும் இராஜகுமாரர் ஒருவர் வருகிறார். காலாமுகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கும்மாளம் அடிக்கிறார்கள். ஐயோ! தப்பித் தவறிக்கூடத் தாங்கள் அப்படிப்பட்ட கூட்டத்தின் மத்தியில் போகவேண்டாம்!..."

இதைக் கேட்டதும் மதுராந்தகருடைய முகத்தில் வியர்வை துளித்தது; அவர் உடம்பு நடுங்கியது. வந்தியத்தேவன் அதைக் கவனித்துக் கொண்டான். பின்னர், 'இளவரசே! மேலே ஒன்றும் எனக்குத் தெரியவில்லை, மன்னிக்க வேண்டும். என் தலை சுற்றுகிறது; கண் இருளுகிறது. யாரோ மந்திரம் போட்டுத் தடை செய்கிறார்கள். இன்னொரு சமயம் இன்னொரு இடத்தில் பார்த்துச் சொல்கிறேன்!" என்று கூறித் தன் தலையைக் கையால் பிடித்துக் கொண்டான்.

அச்சமயத்தில் அரண்மனைச் சேவகன் ஒருவன் வந்து, பெரிய மகாராணி செம்பியன் மாதேவி இளவரசரை அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். மதுராந்தகர் தம் உள்ளத்தில் பொங்கிய ஆத்திரத்தையெல்லாம் அன்னையின்மீது கொட்டிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார்.

"ஐயா! தலைவலி பொறுக்க முடியவில்லை. அரண்மனைக்கு வெளியே சென்று இந்த நகரைக் கொஞ்சம் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன்!" என்று வந்தியத்தேவன் அவரிடம் கூறி அனுமதி பெற்றுக் கொண்டான்.

பழையாறை மருத்துவர் மகன், பினாகபாணி பண்டிதனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய ரஸம் ஏற்பட்டிருந்தது. சில நாளைக்கு முன்பு வரையில் அவன் தந்தையிடம் மருந்து சாஸ்திரம் கற்றுக் கொள்வதுடன் திருப்தியடைந்தான். கோடிக்கரைப் பிரயாணத்தின்போது, வந்தியத்தேவன் வெளி உலகத்தைப் பற்றிப் பல விஷயங்களை அவனுக்குக் கூறினான். அத்துடன் மட்டும் அவன் நிறுத்தவில்லை. புதிதாகக் காதல் வலையில் விழுந்தவர்களுக்கு அதைப் பற்றி யாரிடமாவது பேசத் தோன்றுவது இயல்பு. வைத்தியர் மகன் முதல் தர அசடு என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன் அவனிடம் பெண்களிடம் காதல் கொள்வதைப் பற்றிய அபாயங்களைப் பற்றிப் பேசலானான். நான், ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு, அதன் பயனாக அனுபவித்துவரும் இன்ப துன்பங்களைப் பற்றியும் கூறினான்.

வைத்தியர் மகன் பினாகபாணி இந்தப் பேச்சுக்களை முதலில் அவ்வளவாக ரஸிக்கவில்லை. சிறிது சிறிது சிறிதாக அவன் மனம் மாறியது. வந்தியத்தேவனிடம் விவரமில்லாத அசூயையும், ஆத்திரமும் ஏற்பட்டன. அவனுடைய மனத்தைக் கவர்ந்த மங்கையின் ஊர், பெயர் என்ன என்று கேட்டான். வந்தியத்தேவன் சொல்ல மறுத்து விட்டான். அதனால் பினாகபாணியின் கோபம் அதிகமாயிற்று. கோடிக்கரை போய்ச் சேருவதற்குள் வந்தியத்தேவனை வைத்தியரின் மகன் தன்னுடைய சத்துருவாகவே கருதத் தொடங்கிவிட்டான்.

அவன் மனத்திற்குள் புதைத்து கொண்டிருந்த தீ பூங்குழலியைப் பார்த்ததும் கொழுந்துவிடத் தொடங்கியது. பூங்குழலி அவனை மறுதளித்ததுடன் பரிகாசமும் செய்தாள். அவள் தன்னைக் காட்டிலும் வந்தியத்தேவனை அதிகம் மதிக்கிறாள் என்று தெரிய வந்ததும் பினாகபாணியின் பைத்தியம் முற்றி விட்டது. வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வீரர்களிடம் அவனைக் காட்டிக்கொடுக்கவும் துணிந்தான்.

பழுவேட்டரையரின் ஆட்கள் வந்தியத்தேவனைப் பிடிக்க முடியாமல் பினாகபாணியைப் பிடித்துக் கொண்டு தஞ்சை சென்றார்கள். சிறிது நேரம் அவன் பாதாளச் சிறையில் வசிக்கும்படி நேர்ந்தது. இதனாலெல்லாம் அவனுக்கு முன்னமே வந்தியத்தேவனிடம் உண்டாகியிருந்த கோபம் மேலும் வளர்ந்தது.

இளவரசி குந்தவை அவனைப் பார்த்துப் பேசி விடுதலை செய்வதற்காகப் பாதாளச் சிறைக்குப் போவதற்கு முன்னாலேயே அவன் விடுதலையாகியிருந்ததைக் கண்டோ ம். விடுதலை செய்தவள் பழுவூர் இளையராணி நந்தினிதான். தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் தஞ்சை அரண்மனையிலிருந்து தப்பிச் சென்றது பற்றி நந்தினி கோபமும், சந்தேகமும் கொண்டிருந்தாள். அவன் பழையாறை சென்று, பிறகு ஈழநாட்டுக்குத் தப்பிச் சென்றதை அறிந்த பிறகு அவளுடைய சந்தேகம் அதிகமாயிற்று. எப்படியும் ஒருநாள் பழையாறைக்குத் திரும்பி வந்து, இளவரசி குந்தவையைப் பார்க்க முயல்வான் என்று ஊகித்தாள். அப்போது அவனைக் கண்டுபிடித்துச் செய்தி அனுப்பப் பழையாறையில் தனக்கு நம்பகமான ஆள் ஒருவன் வேண்டும் என்று தீவிரமாக எண்ணினாள்.

வைத்தியர் மகன் பினாகபாணியைப் பார்த்துப் பேசிய பிறகு அவன் அந்த வேலைக்குச் சரியான ஆள் என்று முடிவு செய்தாள். அவனிடம் அந்தப் பெரிய பொறுப்பை ஒப்புவித்தாள்.

"உனக்குத் துரோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றவன் சீக்கிரத்தில் ஒருநாள் பழையாறைக்குத் திரும்பி வருவான். நீ கண்ணும் கருத்துமாகப் பார்த்திருந்து, அவன் எங்கெங்கே போகிறான், என்னென்ன செய்கிறான், என்பதைக் கவனித்து எனக்கு உடனே சொல்லி அனுப்ப வேண்டும். அவ்விதம் செய்தால் உனக்கு வேண்டிய வெகுமதிகளை அளிப்பேன்" என்றாள்.

பின்னர் சின்னப் பழுவேட்டரையரும் அவனை அழைத்து வந்தியத்தேவனைப் பற்றிக் கட்டளை இட்டார். "அந்த இராஜத்துரோகி திரும்பி வரும்போது, அவனைப் பிடித்துக் கொடுத்தால் உன்னை நமது ஒற்றர் படையில் சேர்த்துப் பெரிய அதிகாரியாக்கி விடுவேன்" என்று அவனுக்கு ஆசை காட்டியிருந்தார்.

அது முதல் பினாகபாணி மருத்துவத் தொழிலில் பற்றை இழந்துவிட்டான். ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டே பழையாறை நகரின் வீதிகளில் ஓயாமல் அலைந்து கொண்டிருந்தான். திடீர் திடீரென்று அவனுக்குச் சந்தேகம் உதித்துவிடும். வீதியில் போகிறவர்களின் அருகில் ஓடிச்சென்று முகத்தை உற்றுப் பார்ப்பான். "இவன் இல்லை!" என்று முணுமுணுத்துக் கொண்டே அப்பால் செல்வான். இதைப் பார்த்த பலரும் வைத்தியர் மகனுக்குச் சித்தப்பிரமை பிடித்து விட்டதென்று எண்ணத் தொடங்கினார்கள்.

ஆயினும், பினாகபாணி தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. மதுராந்தகத்தேவரும், அவருடைய பரிவாரங்களும் பழையாறைக்குள் பிரவேசித்தபோது பினாகபாணி அவர்களை அவ்வளவு நன்றாகக் கவனிக்கவில்லை. அவர்களில் வந்தியத்தேவன் இருக்கக்கூடுமென்று அவன் எதிர்பார்க்கவில்லை. திருநாரையூர் நம்பியின் பல்லக்கைச் சூழ்ந்திருந்த பெருங்கூட்டத்திலே அவன் சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, சற்றுத்தூரத்தில் மதுராந்தகருடைய பரிவாரம் போவது தெரிந்தது. மதுராந்தகருக்கு அருகில் குதிரை மேலிருந்தவன் ஒரு தடவை திரும்பிப் பார்த்தபோது பினாகபாணிக்கு ஐயம் உதித்தது. ஆனால் அவன் விரைவாகச் சென்று அரண்மனையில் புகுத்துவிட்டபடியால் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முடியவில்லை








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 18. நிமித்தக்காரன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. அருள்மொழிவர்மர்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பரிசோதனை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 39. "இதோ யுத்தம்!"

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: